Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’

அத்தியாயம் – 31

குழந்தை பெறுவாளா அருண்யா?

 

பூங்காவில் சுற்றியதில் கால் வலிக்க ஆயாசமாய் கட்டிலில் படுத்திருந்து பேசிக் கொண்டிருந்த போதே அருண்யா குழந்தை வளர்ப்போமா எனக் கேட்டது. ஸாம் எழுந்தே உட்கார்ந்து விட்டான். 

 

 

உண்மையாவா சொல்லுறாய் அருண்…?”

 

 

ஓமப்பா… இந்தச் சண்டையில எத்தினை குழந்தைகள் அனாதையாகி இப்ப அனாதை ஆச்சிரமங்களில இருக்குதுகள் தெரியுமா… இண்டைக்குப் பார்க்கில கண்ட மாதிரி ஒரு குட்டிக் குழந்தையாக எடுத்து வளர்ப்பமன்…”

 

 

உள்ளுக்குள் ஒரு ஏமாற்றம் தோன்றினாலும்அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவளைப் பார்த்தவன்,

 

 

அது நல்ல விசயம் தான் அருண்… ஆனால் நீ ஆசைப்படுற மாதிரி குட்டிக் குழந்தையாக எடுக்கிற கஷ்டம். சண்டை முடிஞ்சே இப்ப ஒன்பது வருசம் ஆச்சு… அந்த நேரம் அனாதையாகின பிள்ளைகளுக்கு கடைசி ஒன்பது வயசாவது ஆகியிருக்குமே…”

 

 

ஓம் என்ன…? நான் அதை யோசிக்கேல்ல… ஆனால் பரவாயில்லை… நானும் லண்டன் வந்து செட்டில் ஆகின பிறகு ஒரு கொஞ்ச காலம் போக ஒரு பிள்ளையோ, ரெண்டு பிள்ளையோ எங்கட வசதிக்கு ஏற்ற மாதிரி தத்தெடுத்து வளப்பம் என்ன?”

 

 

உங்கள் உத்தரவுப்படியே மகாராணி…. அடியேன் நிறைவேற்ற காத்திருக்கிறேன்…”

 

 

என்று கூறி நெற்றியில் கை வைத்து ஒரு சலூட் அடித்தவன்,

 

 

அருண்… ஒண்டு சொன்னால் அடிக்க மாட்டீரே…”

 

 

என்னப்பா… சொல்லுங்கோவன்… அடிக்கிறதைப் பற்றிப் பிறகு யோசிப்பம்…”

 

 

உனக்கு சின்னக் குழந்தையில இருந்து கொஞ்சி விளையாட ஒரு குழந்தை வேணும் என்றாலும் நான் தர ரெடியா இருக்கிறேன்…”

 

 

கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே ஸாம் கூறவும் தலையணையை எடுத்து அவனை மொத்து மொத்தென்று மொத்தினாள் அவன் கரம் பிடித்தவள். 

 

 

திடீரென்று ஏதோ யோசனை வந்தவளாக,

 

 

ஏனப்பா… உங்க லிவிங் டுகெதர் வெள்ளைக்காரிக்கும் உங்களுக்கும் பிள்ளை இல்லையா…?”

 

 

இப்போது இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் அந்த அப்பாவி முழிக்க,

 

 

சரி… சரி… ஓவரா முழிக்க வேணாம்… லிவிங் டுகெதர் கதையெல்லாம் என்ர மனசை மாத்த சொன்ன பொய் என்று எனக்குத் தெரியும்…”

 

 

எப்படி தெரியும் அருண்…?”

 

 

இந்த மூஞ்சிதான் வெள்ளைக்காரியோட போகப் போகுதாக்கும்…. கவியக்காவை லவ் பண்ணின திறத்திலயே உங்க வீரமெல்லாம் தெரியும் தானே எனக்கு…”

 

 

அவள் சொன்னதைக் கேட்டு அசடு வழிந்தவன்,

 

 

நான் ஒண்டு கேட்கவா அருண்…?”

 

 

ஒண்டென்ன பத்தே கேளுங்க… அதுக்கு முதல் மூஞ்சியத் துடையுங்க… நல்லா வழியுது… சகிக்கேல…”

 

 

ஹி ஹி ஹி… லிவிங் டுகெதர் எல்லாம் பொய் தான் அருண்… கவியை நினைச்சுக் கொண்டு இருக்கேல்ல… ஆனால் நீ கடைசியாக சொன்னியே… லவ் மட்டும் வாழ்க்கை இல்லை என்று. சாதிக்க எவ்வளவோ இருக்கு என்று… அதே மனசில ஆழமாக பதிஞ்சு வேலை வேலை என்று அதைத் தவிர வேற சிந்தனை இல்லாமல் போய்ட்டுது…

 

 

நான் கேட்க வந்தது என்னென்றால்…. அக்காவை லவ் பண்ணினவனோட எப்படி சேர்ந்து வாழுற என்று கஸ்டமா இல்லையா அருண்…?”

 

 

நிறைய நாளாக மனதை அரித்த சந்தேகத்தைக் கடைசியில் கேட்டே விட்டான்.

 

 

இல்லைங்க… நிச்சயமாக இல்லை…. நீங்க அக்காவை எவ்வளவு காதலிச்சிங்க என்றது முழுசாகத் தெரிஞ்சது நான் தானே… இப்போ அந்த அன்பு எனக்கு மட்டும் தான் சொந்தம் என்கிற போது அது எனக்கு சந்தோசமே… அக்காட லைப்ல உங்களால சின்னக் குழப்பம் கூட வரக் கூடாது என்று நாட்டை விட்டே போனவர் நீங்க…

 

 

அக்காவும் இப்ப யாதவ் அத்தான் தான் உலகம் என்று இருக்கிறா… இது எல்லாத்தையும் விட என்னட்ட இருக்கிற பெரிய குறையையே ஏற்றுக் கொள்ள நீங்க ரெடியா இருக்கேக்க அக்காவைக் காதலிச்சவன் என்ற கடந்த காலத்தை எதுக்குங்க நான் பெருசு படுத்தணும்…? இது எல்லாத்துக்கும் மேல சின்ன வயசில இருந்தே உங்களை எனக்குப் பிடிக்கும்… பிறகு எதுக்குங்க தேவேலாத குழப்பம் எல்லாம்…”

 

 

அவளின் தெளிந்த விளக்கத்தைக் கேட்டு விளையாட்டுப் பெண் அருண்யாவா இது என்று வியந்து பார்த்தான். என்னவென விழிகளாய் கேட்டவளுக்கு ‘இனிமேல் தங்கள் எதிர்காலம் சிறப்பே’ என  விழிகளாலேயே பதிலிறுத்தான்.

 

 

ஏதோ அந்த சம்பாசனையின் பின்னர் இருவருக்குள்ளும் கூடுதல் புரிந்துணர்வு. அன்னியோன்யம் அதிகரித்த உணர்வு.

 

 

அடுத்த நாள் அந்த விடுதியைக் காலி செய்து கொண்டு நுவரெலியாவுக்குப் போய் அங்கே நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்துக் கொண்டார்கள்.

 

 

சீதாஎலியக்குச் சென்று அங்கே இராவணன் சீதையை சிறை பிடித்து வைத்த காலத்தில் அனுமன் தூது வந்த நேரத்தில் பதித்து விட்டுச் சென்ற பாத அடையாளத்தை வணங்கினார்கள். அப்படியே அங்கிருந்து றம்பொடை ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வணங்கி விட்டு, றம்பொட நீர்வீழ்ச்சியையும் பார்த்து விட்டு, ஹட்டன் சமவெளிக்கு உலக முடிவைப் பார்க்கச் சென்றார்கள். 

 

 

கையைப் பிடித்துக் கொண்டும் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டும் அந்த ஒன்பது கிலோமீட்டர்களை கடந்தது இருவருக்கும் பிடித்த அனுபவமாகவே இருந்தது. 

 

 

வழியிலே சிறு நீர்வீழ்ச்சிகளையும் மான், மரை போன்ற மிருகங்களையும் இயற்கை அன்னையின் பிடியில் செழித்திருந்த புற் செடி கொடிகளினூடே நடந்து செல்வதே இனிய அனுபவமாய்.

 

 

உலக முடிவை அடைந்து அந்த இருண்ட சூனியத்தை எட்டிப் பார்த்து வியந்து விட்டு ஸாமின் பிபி சுகர் எல்லாம் உச்சத்துக்கு ஏற்றி அவன் கத்தக் கத்த அங்கிருந்து கீழே குதிப்பது போல் ஒரு போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்த பிறகே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அருண்யா. எட்டிப் பார்க்கவே பயந்த ஸாமை வேறு போஸ் கொடுக்கச் சொல்லி அதுக்கு வேறு அவனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

 

 

உன்னைப் பெத்தாங்களா… செஞ்சாங்களாடி…? இப்பிடி ஒரு வானரமாய் இருக்கிறியே…”

 

 

தலையில் அடித்துக் கொண்டவனைப் பார்த்து நகைத்தவாறே,

 

 

நான்தான் சொன்னேனே…. இதெல்லாம் நீங்க உங்கட மாமனாரை கேட்க வேண்டிய கேள்வி மை டியர் புருஷா….”

 

 

என்பவளுக்கு அந்த அப்பாவிப் புருசனாலும் என்ன பதிலைத்தான் கூற முடியும். 

 

 

ஒரு நாள் நுவரெலியாவில் தங்கி விட்டு அடுத்த நாளே புறப்பட்டு கொழும்பிற்கு சென்றார்கள். ஹில்டன் ஹோட்டலில் தங்கிக் கொண்டவர்கள் அருண்யாவின் ஸ்பொன்சர் வேலைகளைக் கவனித்து விட்டு அன்று மாலை காலிமுகத்திடலுக்கு சென்று அந்தக் கடற்கரையில் பொழுதைக் கழித்தார்கள்.

 

 

பல்கலைக்கழக காலங்களில் அடிக்கடி இங்கே குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வந்தது ஞாபகத்துக்கு வர அருண்யா சிறிதே கண் கலங்கினாள். அவள் மனநிலையை மாற்ற 

 

 

அருண்… இந்தா… உனக்கு பிடிச்ச இறால் வடை…”

 

 

வடையைக் கண்டதும் ஆசையாக வாங்கி உண்டவள் தன் கவலைகள் மறந்து பழையபடி குதூகலித்தாள்.

 

 

ஸாமுக்கோ உள்ளே வலித்தது. எவ்வளவு குழந்தைத் தனமாக இருக்கிறாள் இவளுக்குப் போய் ஏன் ஆண்டவா இந்த நிலைமையை தந்தாய் என்று மனசுக்குள் புலம்பினான். பாவம். அவனாலும் வேறு என்ன தான் செய்ய முடியும்..

 

 

அடுத்த நாள் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு சென்றார்கள். குதித்துக் கொண்டு ஓடியவளை பார்த்தவர்கள் யாரும் அவளுக்கு முப்பது வயதென்றால் நம்ப மாட்டார்கள். 

 

 

சிங்கம், புலி, கரடி என்று அனைத்து மிருகங்கள், பறவைகளையும் பார்வையிட்டு குரங்குகள் பக்கம் சென்ற போது,

 

 

அருண்… உன்ர சகோதரங்கள் ஏதோ சொல்லுதுகள்… என்ன என்று கேளுமன்?”

 

 

ஓ… அதுக்கென்ன…. தாராளமாக கேட்டுச் சொல்லுறன்… 

அவை என்ன சொல்லுகினம் என்டால் தங்கட மச்சான் குரங்கு நல்ல ஹான்ட்சமா இருக்கிறாராம்…”

 

 

அவளின் குணம் அறிந்தும் வாயைக் கொடுத்தது ஸாமின் பிழை தானே. நன்றாக மூக்குடைபட்டு விட்டு அதன்பிறகு வாயை மூடிக் கொண்டு நடந்தான்.

 

 

யானை நடனத்திற்கு ரிக்கட் வாங்கிக் கொண்டு முன்பக்கமாகவே அனைத்தையும் தெளிவாக பார்க்க கூடியவாறு அமர்ந்து கொண்டார்கள். ஐந்து யானைகள் வந்து மாறி மாறி பல வித்தைகள் புரிந்தன. 

 

 

பாகனின் சொற்கேட்டு ஒன்றையொன்று வாலைத் தும்பிக்கையால் பிடித்துக் கொண்டு வட்டமாகச் சுற்றி வந்தன. சிறிய முக்காலியில் அந்தப் பெரிய உருவத்தை தூக்கிக் கொண்டு ஒற்றைக் காலில் நின்றன. போத்தலைத் தூக்கிப் போட்டுப் பிடித்தன. ஒன்றையொன்று பந்தை எறிந்து பிடித்தன. 

 

 

அவை நிகழ்த்திய பல சாகசங்களை கை தட்டி ரசித்து விட்டு மகிழ்ச்சியாய் அறைக்குத் திரும்பினார்கள். 

 

 

அன்று மாலையில் ஹவுஸ் ஒப் ஃபஷனில் கவிக்கு, சந்திரஹாசனுக்கு, ஸாமின் குடும்பத்தினருக்கு, ஸாமின் நண்பர்கள் குடும்பத்தினருக்கு உடைகளை வாங்கிக் குவித்தவர்கள் அடுத்த நாளே திரும்பவும் வல்வெட்டித்துறைக்கு பயணமானார்கள். 

 

 

முகமெல்லாம் மகிழ்ச்சி ததும்ப வாயெல்லாம் பல்லாகக் கலகலத்துக் கொண்டு வந்தவளைக் கண்டு கவிக்கு சந்தோசத்தில் கண்கள் கலங்கியது. கண்டவுடன் காரிலிருந்து ஓடி வந்து தமக்கையைக் கட்டியணைத்தவள்,

 

 

தாங்ஸ் அக்கா… நீ மட்டும் போஸ் பண்ணி ஸேரை மரி பண்ணச் சொல்லி இருக்காட்டில் நான் பழையபடி இவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கவே மாட்டேன்… தாங்ஸ்க்கா…”

 

 

என்ன அருண் இதெல்லாம்… நீ சந்தோசமா இருந்தால் அதுவே போதும் எனக்கு…”

 

 

தெய்வநாயகி தனது இயலக்கூடிய ஒற்றைக் கையால் ஸாமின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தார். அந்த மௌனமான ஸ்பரிசமே அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ஸாம் அவர் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் படுத்தினான். சாதி, மதத்தை காட்டி அவரால் துவேசிக்கப்பட்டவனே இன்று அவர் வீட்டில் ஒளியேற்றும் விதியின் வேடிக்கையை என்னவென்பது. 

 

 

அதன்பிறகு இரு கிழமைகளும் நண்பர்கள் வீடுகளில் விருந்துகளும் கொண்டாட்டங்களுமாக நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தன. 

 

 

இறுதியில் ஸாம் லண்டனுக்கு புறப்பட வேண்டிய நாளும் வந்தது. ஸாமுடனேயே அந்த இரு கிழமைகளும் ஒட்டிக் கொண்டு திரிந்தவளுக்கு அவனைப் பிரிந்து எப்படி வாழப் போகிறோம் என்ற கவலையே மனதை அரிக்க மூஞ்சியை மூன்று முழத்துக்கு நீட்டிக் கொண்டு திரிந்தாள்.

 

 

ஸாம் அவளுக்கென்று வாங்கிக் கொடுத்திருந்த கைப்பேசியில் வாட்ஸ்அப், வைபரில் தினமும் வீடியோ ஹோலில் பார்த்து கதைக்கலாம் என்று கூறியது அவள் மண்டையில் ஏறினால் தானே. தாயைப் பிரியும் சேயாய் மற்றவர் காணாமல் அழுது வடித்தாள். ஆனால் இவள் சிவந்த கண்களே அவளின் பிரிவுத் துயரை காட்டிக் கொடுக்க குடும்பத்தினரோ அவளைத் தேற்றும் வகையறியாது தவித்தனர்.

 

 

கொழும்பு செல்வதற்கு முதல் நாளிரவு ஸாமின் பயணத்திற்குத் தேவையான துணிமணிகளை அவன் பயணப் பையில் அடுக்கிக் கொண்டிருந்தவளை மிருதுவாய் அழைத்தான்.

 

 

அருண்….”

 

 

ம்ம்…”

 

 

நான் போறேன் என்று கவலையாக இருக்கா…?”

 

 

இல்லை… ரொம்ப சந்தோசமா இருக்கு… எப்ப போவியள் என்று பார்த்திட்டு இருக்கிறன்”

 

 

அட… இது தெரிஞ்சிருந்தால் ரிக்கட்டை முன்னுக்குப் போட்டுப் போயிருப்பனே…”

 

 

என்ன ஜோக்கடிக்கிற என்று நினைப்பா… எனக்கு வாற கோவத்துக்கு வாயில நல்லா நாலு வருது…”

 

 

சொல்லு அருண்…. என்ன வருது… எதையும் அடக்கி வைக்கக் கூடாது… கக்கிடு வெளில…”

 

 

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை…? எதுக்கு இப்ப என்னோட கொழுவிறியள்…? மனுசர் ஏற்கனவே கடுப்பில இருக்கிறாங்களாம்”

 

 

எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல… உனக்குத் தான் என்ன கடுப்பென்று சொல்லன்…” 

 

 

ஏன் ஐயாக்குத் தெரியாதோ… சும்மா ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்க வேணாம் சரியோ…”

 

 

தெரிஞ்சால் ஏனாம் நான் கேட்கிறன்”

 

 

அதுவரை குனிந்து வாயடித்துக் கொண்டே அவன் பயணப் பெட்டியை கட்டிலில் வைத்து அடுக்கி முடித்து நிமிர்ந்தவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. 

 

 

கட்டிலின் மறுபக்க ஓரத்தில் இருந்து அவளை சீண்டிக் கொண்டிருந்தவன் அவள் கண்ணீர் கண்டதும் துடித்துப் போனான். எழுந்து அவள் புறம் போனவன் அவள் நாடியை நிமிர்த்தி அவள் விழிகளுக்குள் பார்த்தவன்,

 

 

ஏன்டா கண்ணம்மா என்ர மகாராணிக்கு என்னைப் பிரிஞ்சு (பிரிந்து) ஆறு மாசத்துக்கு இருக்க வேணும் என்று கஷ்டமாக இருக்கோ…?”

 

 

கேட்கவும் அவளும் அவன் விழிகளை ஊடுருவியள் மௌனமாய் ஆம் என்று தலையசைத்தாள்.

 

 

ஏன் கஷ்டமாக இருக்கு என்று என்ர செல்லக்குட்டிக்கு இப்பவாச்சும் புரியுதோ…?”

 

 

அவன் விழிகளில் ஆசை பொங்கக் கேட்கவும் அதற்கு மேலே தாங்க மாட்டாதவளாய் அவன் நெஞ்சில் முகம் புதைத்து விம்மினாள். அவளை இறுக அணைத்து தலையைத் தடவி ஆசுவாசப் படுத்தியவன் அவள் விம்மல் தணிந்ததும் மீண்டும் அவள் முகத்தை நிமிர்த்தி,

 

 

நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லேலையே என்ர மகாராணி…”

 

 

கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவன் விழிகளையே பார்த்தவள் மீண்டும் விம்மியபடி,

 

 

ஏனென்றால்…. ஏனென்றால்…. ஐ லவ்யூ ஸேர்…. ஐ லவ்யூ ஸோ மச்..

சின்சியர்ளி ஐ லவ்யூ வெரி மச் ஸேர்… நீங்க இல்லாத ஒரு வாழ்க்கைய இனி ஒரு கணம் கூட என்னால நினைச்சுப் பார்க்க முடியாது…. ஐ லவ்யூ ஸேர்…”

 

 

அவள் சொன்னது தான் தாமதம் இவனும் விழிகள் கலங்க அப்படியே அவளை அள்ளி அணைத்து அவள் ஈரம் தோய்ந்த இமைகள், நெற்றி, உச்சந்தலை, இரு கன்னங்கள் என்று மாறி மாறி முத்த மழை பொழிய ஆரம்பித்தான். அவளும் எந்தவித எதிர்ப்புமின்றி அவன் காதலை ஏற்று தன் அனைத்து துன்பங்களும் மறந்து அவன் ஒருவனே உலகமாய் மெய் மறந்து நின்றாள். 

 

 

அன்று முழுவதுமே பயணம் சொல்லி விடை பெற வந்த நண்பர்களையோ, கவியையோ, தந்தையையோ யாரையும் கணக்கெடுக்காது, அவர்கள் எல்லோரும் கேலி செய்ததையும் பொருட்படுத்தாது ஸாமின் அணைப்பை விட்டு விலகவில்லை அவள். அவன் கையைப் பிடித்துக் கொண்டோ, அவனை ஒட்டி அமர்ந்து கொண்டோ குட்டி போட்ட பூனையாய் அவனையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

 

 

அடுத்த நாள் நள்ளிரவில் தான் விமானம் ஸாமுக்கு. அதிகாலையிலேயே புறப்பட்டு மாலையில் கொழும்பை அடைந்தவர்கள் விடுதி ஒன்றில் தங்கி சிறிது ஓய்வெடுத்துக் கொண்டார்கள். அருணியோ ஸாமை விட்டகலாது அவனின் மார்பே தன் வீடாய் தஞ்சம் அடைந்திருந்தாள். 

 

 

ஸாமுக்குள்ளும் அவளின் இந்த அதீத அன்பைப் பார்த்து உணர்ச்சிப் போராட்டம். தமக்கையை விரும்பியவன் என்றும் அவள் பட்ட வேதனையாலும் காலம் பூராக அவள் தன்னிடம் பாராமுகமாகவே இருக்கப் போகிறாள் என்று எண்ணியவனுக்கு இந்தளவு விரைவாக அவள் அவன் மேல் கொண்ட காதல் அறிந்து பலத்த நிம்மதி.

 

 

பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் இயல்பாகவே விருப்பம் கொண்டிருந்தவர்கள் காதலில் வீழ எத்தனை மணித்துளிகள் தான் தேவைப்படப் போகிறது

 

 

ஆனாலும் அவர்கள் ஒன்றை அறிந்து கொள்ளவில்லை. அருணிக்குத் தேவையான பாதுகாப்புணர்வை வழங்கிய ஸாம் மீது அருணிக்கும், தன் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அருண்யா கொண்ட உறுதியும், அருணி நிலையெண்ணி அவள் மீது ஸாமுக்கு ஏற்பட்ட பரிதாப உணர்வும், அவளைச் சந்தோசமாக இனியென்றாலும் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக ஸாம் எடுக்கும் முயற்சிகளும், சேர்ந்து தான் இயல்பாய் அவர்களிடமிருந்த அன்பைக் காதலாக்கியது என்று. 

 

 

எல்லாமே மனசுதானே… மாற்றம் ஒன்று தானே மாற்ற முடியாதது. மாற வேண்டும் என்று முடிவு கொண்ட அவர்கள் இருவரும் தமக்கையைக் காதலித்தவன் என்ற எதிர்மறை எண்ணத்தை இவள் மறந்து, கற்பை இழந்தவள் என்பதை அவன் மறந்து, இணைந்த தங்கள் வாழ்க்கையை நேராக்க முனைவதில் தப்பேதும் இல்லைத் தானே.

 

 

ஸாம் கட்டிலில் அமர்ந்து போனில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க அவன் மடியில் படுத்திருந்தவள்,

 

 

என்னங்க…” 

 

 

என்றாள். போனை வைத்து விட்டு அவள் முகம் நோக்கி விழிகளாலேயே என்ன என்று கேள்வியாக நோக்கியவனை, சராசரி காதலியாக கேட்டாள்

 

 

லண்டன் போனதும் என்னை மறந்திட மாட்டியளே…”

 

 

ஒரு விசயம் சொல்லவா அருண்…?”

 

 

ம்… சொல்லுங்கோ.”

 

 

இந்த பதினைஞ்சு வருசத்தில ஒருநாள் கூட உன்னை நான் மறக்கேல. எந்தளவு பிஸியா இருந்தாலும் ஒரு தரம் என்றாலும் உன்னை நினைப்பன் தெரியுமா…?”

 

 

அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாய் அவனை நோக்கினாள்.

 

 

என்னங்க சொல்லுறீங்க…? உண்மையாவா…? எப்பிடிங்க…?”

 

 

உன்னை மறக்கிற மாதிரி வேலையாடி செய்து வைச்சிருக்கிறாய்…?”

 

 

என்னப்பா சொல்லுறியள்…? எனக்கு ஒண்டும் விளங்கேல்ல… நான் என்ன செய்தனானாம்…?” 

 

 

குழப்பமாய் நோக்கியவளுக்கு இன்னும் அழியாமல் இருக்கும் தன் நெற்றி வடுவைக் காட்டினான். புரிந்து கொண்டதும் அசடு வழிந்தவள்

 

 

ஹி…ஹி… நான் கல்லால அடிச்சது… இன்னும் மாறேல்ல.. என்னங்க… உங்களை யாராம் கல்லுக்கு நேரா மூஞ்சியக் காட்டச் சொன்னது… நான் எறியிறதுக்கு குறி பார்க்கேக்கயே தலையைக் குனியத் தெரியாதா…?”

 

 

அவள் செயலுக்கும் அவனிலேயே தப்புக் கண்டுபிடித்தவள் இப்போது எழுந்து அவன் முன்னால் அமர்ந்து அந்த நெற்றி வடுவை மிருதுவாய் வருடி அதிலேயே தன் பட்டு இதழ்களை ஒற்றியெடுத்தாள். அதன் பிறகு கேட்கவும் வேண்டுமா..? ஸாமின் முத்த மழையை தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். 

 

 

முத்தத்திற்கு அவள் தந்த ஒத்துழைப்பின் உத்வேகத்தில் மெதுவாய் முன்னேற ஆரம்பிக்க அவள் திமிறி அவனைத் தள்ளி விடக் கேள்வியாய் நோக்கினான். 

 

 

கொஞ்சம் தயக்கமாய் நலிந்து விட்ட குரலில்,

 

 

ப்ளீஸ்ப்பா… எனக்கு… எனக்குப் பயமாக் கிடக்கு… இண்டைக்கு வேற நீங்க போய்டுவீங்க… மிச்சமெல்லாம் நான் லண்டன் வந்த பிறகு பார்ப்பமே…”

 

 

அவளை தன் மார்பில் அள்ளிப் போட்டுக் கொண்டவன் அவள் முதுகை தடவி அமைதிப் படுத்தினான். 

 

 

அதுக்கேன் கண்ணம்மா… ப்ளீஸ் எல்லாம் போடுறாய்… உன்ர விருப்பம் இல்லாமல் நான் எதுவும் செய்ய மாட்டன்டா… டேக் யுவர் டைம்… நாங்க ஆறுதலா எல்லாம் பாத்துக்கலாம்… என்ன…”

 

 

அவன் வார்த்தைக்கு “ம்” கொட்டியவள் விமான நிலையத்துக்குச் செல்வதற்கு நேரமாகவே எழுந்து தயாரானாள். ஸாமும் ஆயத்தமாகி வர கவி, சந்திரஹாசன் எல்லோருமாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை அடைந்தார்கள். 

 

 

பாவம் அவர்கள். அப்போது யாரும் விதியின் விளையாட்டை அறிந்திருக்கவில்லை. கனவா, நிஜமா என்று புரிந்து கொள்ளவே முடியாத, நடக்கும் நிகழ்வை ஜீரணிக்க முடியாத பேரதிர்ச்சியை இந்த அழகான குடும்பம் மீளவும் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று பார்ப்போம். 

 

 

அந்தப் பேரதிர்ச்சி என்ன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’

அத்தியாயம் – 29 ஸாம்அபிஷேக் – அருண்யா    அதிகாலை ஐந்து மணிக்கே அந்த நட்சத்திர விடுதியை அடைந்து விட்டார்கள். காரிலேயே இருவரும் நன்கு தூங்கியிருக்க மலையகத்தின் கூதல் காற்று சிறு குளிரோடு உடம்பை ஊடுருவிச் செல்ல காரை விட்டு இறங்கி

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 32 என்ன அதிர்ச்சி?   எல்லோரும் விமான நிலையத்தை அடைந்து பிரிவுத் துயரோடு நின்றிருந்தார்கள். அருண்யா ஸாமின் கைப்பிடி விடவில்லை. அவனும் அவளை அணைத்தவாறே மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.      இவர்கள் பேச்சுக்கு காது கொடுத்தவளாக நள்ளிரவிலும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 11’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 11’

அத்தியாயம் – 11 பொங்கு தமிழ்  27.06.2003. சர்வதேச சமூகத்தையே அந்த சிறிய நிலப் பரப்பை நோக்கி பார்வையை திருப்ப வைத்த தினம். ஆம். யாழ் மருத்துவ பீட மைதானத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் அரங்கே அது. அண்ணளவாக இரண்டு லட்சங்களிற்கும்