Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’

அத்தியாயம் – 30

மனம் மாறுவாளா அருண்யா?

 

 

அடுத்த நாள் காலை. அதிகாலையிலேயே விழிப்பு தட்டி விட கண் விழித்தவன் கட்டிலை விட்டு எழ எத்தனிக்க அவனை அணைத்தவாறு தன்னை மறந்து துயின்று கொண்டிருந்தாள் அருண்யா. 

 

 

சிறிது நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் தூக்கத்திலும் சிரித்து கொண்டிருந்த அவள் வதனம் பார்த்து அதை எப்போதும் இதே போல் சிரித்த முகமாகவே வைத்து கொள்ள வேண்டுமென்று மனதிற்குள் முடிவெடுத்து கொண்டவன் மெதுவாய் அவள் கரம் விலக்கி கட்டிலை விட்டு எழுந்தான். 

 

 

காலைக்கடன் முடித்து குளித்து விட்டு வந்து கைப்பேசியை எடுத்து பார்த்தவன் கவி வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியதைப் பார்த்து விட்டு தேநீர் ஒன்று அறைக்கே வரவழைத்து அதை எடுத்துக்கொண்டு பல்கனியில் போய் நின்று கவிக்கு அழைப்பை ஏற்படுத்தினான். 

 

 

அருண்யா சுமூகமாக பழகுகிறாளா என்று கவலையாகக் கேட்டவளை அருண் தன்னுடன் முன்னர் மாதிரியே கலகலப்பாக பழகுவதை எடுத்துக் கூறி அவளை ஆசுவாசப் படுத்தினான். அவளை நிச்சயமாக மாற்ற முடியும் என்று அவளுக்கு உறுதி அளித்து தொலைபேசியை அணைத்தவனுக்கு பொழுது போக மாட்டேன் என்றது. 

 

 

கும்பகர்ணியாக தூங்குபவளைப் பார்க்கவும் எரிச்சல் வந்தது. அவள் பெயர் சொல்லி அழைத்துப் பார்த்தான். அவளோ எழும்பினால் தானே. அந்த மலையக குளிருக்கு பஞ்சு மெத்தையை விட்டு எழ யாருக்கு தான் மனம் வரும்?

 

 

தாங்க முடியாதவனாய் அவளை உலுக்கி எழுப்பினான். பதறி அடித்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவளைப் பார்த்து சிரித்தான். அவன் சிரிப்பு கண்டதும் தான் யாருக்கும் எந்த ஆபத்துமில்லை என்பது புரிந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அவனை முறைத்தாள்.

 

 

ஏன் ஸேர் இப்ப இவ்வளவு அவசரமாக என்னை எழுப்பினீங்க…? எவ்வளவு சூப்பர் கனவு கண்டு கொண்டிருந்தன் தெரியுமா?”

 

 

மகாராணி அப்படி என்ன கனவு கண்டிங்களாம்…?”

 

 

நாங்க எல்லாரும் கட்டுநாயக்க எயாபோட்ல நிக்கிறம்… அப்ப ஒராள் எங்களை நோக்கி அதுவும் கவியக்காவை நோக்கி வருது…. எனக்கு அப்படியே அவரைப் பார்க்க யாது அத்தான் மாதிரியே இருந்துச்சு…. கிட்ட வர வடிவா பாப்பம் என்றதுக்கிடையில நீங்க எழுப்பிட்டிங்க போங்க…”

 

 

அவள் கனவு கேட்டு அவன் கண்களும் சிறிதே கலங்கியது. அதை மறைத்துக் கொண்டு,

 

 

காலமை கண்ட கனவு பலிக்குமாம்… நீர் ஓடிப் போய் முகம் கழுவிட்டு வாரும்…. வெளில நல்லா இருக்கு கிளைமேட்… சூரியன் உதிக்கிற பார்க்கலாம்… சும்மாகொஞ்ச தூரம் நடந்திட்டு வருவம்…”

 

 

சம்மதமாய் தலையசைத்தவள் தயாராகி வரவும் முன்னைய தினம் வாங்கியிருந்த ஸ்வெட்டர் ஒன்றையும் போட்டபடி இருவரும் பேசியபடி வெளியே நடந்தனர்.

 

 

சூரியன் தன் கதிர்களை மெல்ல விரிக்கத் தொடங்கியிருந்த நேரம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று பரந்திருந்த தேயிலைத் தோட்டங்கள்  சூரியக்கதிர் பட்டு பொன்னிறமாக மினுங்கின. ஆங்காங்கே காரட், கோவா, லீக்ஸ் மரக்கறி தோட்டங்களும். 

 

 

தலைக்குப் பின்னால் கூடையுடன் கொழுந்து கொய்யும் பெண்கள் கூட்டம் கூட்டமாக தங்களுக்குள் கதை பேசிக் கொண்டு தோட்டங்களை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். பிரதான வீதியில் காலை நகருக்கே உரிய சனசந்தடியும் வாகன நெரிசலும். 

 

 

மலையக அழகைக் காண இரு கண்கள் பத்தாது. இவர்களும் நடந்தது போதும் என ஹோட்டலுக்குத் திரும்பி நடந்தார்கள்.

 

 

அருண்… உன்னட்ட ஒரு விசயம் சொல்ல வேணும்…”

 

 

என்ன ஸேர்…? சொல்லுங்கோ…”

 

 

இப்ப நான் உன்ர ரீச்சரும் இல்லை…. நீ என்னட்ட படிக்கிற ஸ்ரூடன்றும் இல்லை… சரியோ பிழையோ நாங்க இப்ப புருஷன் பொண்டாட்டி… நீ இப்பிடி ஸேர்… மோர்… என்று கூப்பிடுற நல்லாவா இருக்கு… பாக்கிறவங்க என்ன நினைப்பாங்கள்…

 

 

அதுவும் லண்டன்ல படிப்பிக்கிற புரபஷரையே அதுகள் பேர் சொல்லித் தான் கூப்பிடுங்கள். அம்மா, அப்பாவ கூட அப்பிடி தான். நீ அங்க வந்து இப்பிடி ஸேர்… என்றால் நல்லாவா இருக்கும்…?”

 

 

சில நாட்களாக தனக்கு ஏற்பட்டிருந்த மாபெரும் கவலையை பெரிதாய் ரொம்பவும் சீரியசான முகபாவத்தோடு கூறி முடித்தான் ஸாம்.

 

 

எதுவும் கூறாமல் பெரிதாய் சிரித்து விட்டு தலையைத் தட்டி யோசித்துக் கொண்டு நடந்தவளை கேள்வியாய் நோக்கினான். 

 

 

திடீரென நடையை நிறுத்தியவள் அவனை நோக்கி மிகவும் பதவிசாக,

 

 

சுவாமி….”

 

 

என்றழைத்தாள். வேறு யாரும் சுவாமிநாதனைக் கூப்பிடுகிறாளோ என்று சுற்றும் முற்றும் பார்த்தவன்

 

 

யாரைக் கூப்பிடுறாய் அருண்…?”

 

 

உங்களைத் தான் பிராணநாதா…”

 

 

அப்போது தான் அவள் கேலி புரிந்தவன் சிரித்து கொண்டே அவளை அடிக்கப் போக அவனிடமிருந்து தப்பி ஓடத் தொடங்கினாள். இவனும் நில்லு என்று கத்திக்கொண்டே பின் தொடர எதிரே வந்த ஒரு பெண்ணில் மோதி இவள் ஓட்டம் தடைப்பட்டது. 

 

 

அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டவாறே இருவரும் தொடர்ந்து நடந்தனர்.

 

 

ஹேய் அருண்… நான் உன்னட்ட என்ன சொன்னனான்? என்னை பேர் சொல்லிக் கூப்பிடு என்று சொல்ல நீ என்ன அரச காலத்துக்கே போய்ட்டா…”

 

 

எங்க தமிழ் வழக்கப்படி புருஷனை பேர் சொல்லிக் கூப்பிடுற தப்பு என்று தெரியாதா… சரி… சரி… உங்களுக்கு அது பிடிக்கேல்லை என்றால் வேற பேர் யோசிப்பம் என்று திரும்ப தலையை தட்டி யோசித்தவள்,

 

 

ஆ…. பேர் கிடைச்சிட்டுது…. 

 

 

அத்தான் என்னத்தான் அவர் என்னைத் தான் 

எப்படி சொல்வேனடி

அவர் கையைத் தான் கொண்டு மெல்லத்தான் வந்து

கண்ணைத் தான் 

எப்படி சொல்வேனடி”

 

 

பாட ஆரம்பித்தாள். 

 

 

அருண்…. உன்னை …. என்ன சொல்லுறது என்றே தெரியேல்ல…”

 

 

இப்போது ஸாம் தானே தன் தலையில் அடித்துக்கொண்டான். அவன் செய்கையைப் பார்த்து சிரித்தவள்,

 

 

சரி… சரி… உங்களுக்கு அதுவும் பிடிக்காட்டில் வேற பேர் வைப்பம்..

ஆ….

 

 

மாமோய்….. நீங்க எங்க இருக்கிறீங்க….?”

 

 

இப்போது ஸாம் கையெடுத்துக் கும்பிட்டான்.

 

 

போதும் அருண்… நீ ஸேர் என்றே கூப்பிடு… நான் ஒண்டுமே சொல்லேல… ஆணியே புடுங்க வேணாம்… போ…”

 

 

அவனின் அவஸ்தையைப் பார்த்து வாய் விட்டு நகைத்தவள் அத்தோடு விட்டு விட்டால் அவள் தான் அருணி இல்லையே.

 

 

இஞ்சருங்கோ… இஞ்சருங்கோ

சேதி கேட்டு நாளாச்சுங்கோ…”

 

 

மறுபடியும் பாட ஆரம்பித்தவள் சற்றே நிறுத்தி விட்டு

 

 

என்னங்க…”

 

 

என்றாள். ஸாமும் இயல்பாய் நிமிர்ந்து அவளைப் பார்த்து என்ன என்றவும்

 

 

இந்த ‘ங்க’ வே நல்லாருக்குப் போல இருக்கே… எங்கட அம்மா அப்பாவை இஞ்சருங்கோ என்று தான் கூப்பிடுவா. நானும் அப்பிடியே கூப்பிடவே…”

 

 

தாயின் நினைவில் சிறிது கண் கலங்கியவளை கவனிக்காதது போல் பேச்சை மாற்ற முனைந்தவன்

 

 

சூப்பர் அருண்…. அப்படியே கூப்பிடு” என்று அனுமதி வழங்கியவன்

 

 

அருண் உன்னட்ட இன்னொரு விசயம் கேட்கோணும்…?

 

 

என்னங்க… கேளுங்கோ…”

 

 

நீ ஏன் அருண் லூசு மாதிரி இருக்கிறாய்…? எப்பவுமே இப்படித்தானா… இல்லை என்னோட மட்டுமா…?”

 

 

கொஞ்சமும் சிரிக்காமல் கன அக்கறையாய் கேட்டவனுக்கு அவளும் வலு சீரியசாகவே பதில் சொன்னாள்.

 

 

அதெல்லாம் எப்பவுமே எல்லோரோடயும் இப்படித்தாங்க… மனுபக்டரிங் புரொப்ளம்… மாத்த முடியாது… நீங்க இந்த கேள்வியை உங்கட மாமனார், மாமியாரிடம் கேட்டால் தான் பொருத்தமா இருக்கும்…”

 

 

கன அக்கறையாய் கூறியவள் 

 

 

என்னைப் பார்க்க என்ன உங்களுக்கு லூசு மாதிரியா கிடக்கு…? அப்புறமேன் இந்த லூசைக் கட்டினியளாம்…?” 

 

 

கூறியபடி அவனை அடிக்கத் துரத்த இருவர் ஓட்டமும் ஹோட்டல் அறையில் வந்து தான் நின்றது. 

 

 

அருண் முதலில் குளித்து தயாராகி வர ஸாமும் அடுத்ததாக வந்தான். ஹோட்டலிலேயே காலை உணவை முடித்து விட்டு இருவரும் அன்று பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு சென்றார்கள். 

 

 

அந்த பெரிய நிலப் பரப்பில் வளர்ந்திருந்த வளக்கப்பட்டிருந்த அனைத்து மரம் செடி கொடிகளுக்கும் பெயர் பலகை வழங்கப்பட்டு ரம்மியமாக காட்சியளித்தது. 

 

 

வரைபடத்தை பார்த்து ஒரு புறத்தில் இருந்து சுற்றிப் பார்க்க ஆரம்பித்தவர்கள் மகாவலி ஆற்றைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பூங்காவினை ஊடறுத்து ஓடும் அந்த நதியின் குறுக்கே அங்கே தொங்குபாலம் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. 

 

 

அதன் மீது ஏறி நின்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அருண்யா ஆசைப்படத்தான் இப்போது அதைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அழகான மலர்கள் வளர்க்கப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் நின்று போட்டோ எடுத்துக்கொண்டாள். இவனும் ஆசையாக அப்படி நில் இப்படி நில் என்று கூறியபடி விதம் விதமாக கிளிக்கித் தள்ளினான். 

 

 

ஒரு வழியாக தொங்குபாலத்தை கண்டுபிடித்து அது அங்குமிங்கும் ஆட ஆட சின்னக் குழந்தையாய் அதை ரசித்தபடி தடுமாறி நடந்தவளை வீடியோ எடுத்தான் ஸாம். பாதி தூரம் சென்றவள் சலசலத்தபடி வெண் நுரை எழும்ப ஓடிய கங்கையை ஆசையாய் பார்த்தாள்.

 

 

ஏதோ அந்தக் கணத்தில் ஸாமின் பால் பேரன்பு பெருகியது அவளுக்கு. இவன் மட்டும் என்னை வற்புறுத்தி மணக்கவில்லை என்றால் இந்த சின்ன சின்னச் சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க முடியாமல் வீட்டின் நாலு சுவருக்குள்ளேயே என் காலத்தை முடித்திருப்பேனோ…? நானும் முயன்றால் பழசையெல்லாம் மறந்து எல்லோரும் போல சாதாரணமாக வாழ முடியுமோ…

 

 

எண்ண ஓட்டங்கள் போன பாதையில் கண்கள் கனிய ஸாமைப் பார்த்தாள். கைப்பேசி கமெரா மூலம் இவளின் முக பாவங்களையே பார்த்துக் கொண்டிருந்தவன் வீடியோ எடுப்பதை நிறுத்தி அவளை நோக்கி என்னம்மா என்றான் கனிவாய்.

 

 

ரொம்ப நன்றிங்க…. என்ர வாழ்க்கைய எனக்குத் திரும்ப தந்திருக்கிறீங்க… எல்லோரையும் போல வாழலாம் என்று எனக்கே இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு…”

 

 

என்ன அருண்… எனக்கு போய் நன்றி சொல்லிக் கொண்டு… நான் வேற நீ வேற இல்லை கண்ணம்மா… நீ சந்தோசமா இருந்தால் அதுவே எனக்குப் போதும்….”

 

 

உள்ளார்ந்தமாய் கூறியவனைக் கண்கள் பனிக்க பார்த்தவள் பேச்சு ரொம்ப உணர்ச்சிபூர்வமாக செல்வதைப் பார்த்து அதை மாற்ற எண்ணியவள் மறுபுறம் திரும்பி கண்களைத் துடைத்து விட்டு டைட்டானிக் போஸில் அந்தப் பாலத்தில் நின்று கைகளை இரு பக்கமும் நீட்டியபடி போஸ் கொடுத்தாள். 

 

 

இவர்கள் பின்னால் நின்றிருந்த இன்னொரு ஜோடி ஸாமையும் அவளோடு போய் நிற்கச் சொல்லி விட்டு மேலே நீல வானம், கீழே சலசலத்து ஓடும் நதி, சுற்றிலும்   ஓங்கி உயர்ந்த நெடிய மூங்கில்கள் காட்சிப் பிண்ணனி அபாரமாய் இருக்க அனைத்தையும் உள்ளடக்கி ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுத்து ஸாமைக் கொண்டு தாங்களும் ஒன்று எடுத்துக் கொண்டார்கள்.

 

 

புகைப்படத்திற்காகவென மிக நெருக்கமாக அவன் மூச்சுக் காற்று அவள் பின்னங் கழுத்தில் சூடாக மோத நிற்கும் போது சில நிமிடங்கள் முன் பேசியிருந்த பேச்சின் தாக்கமோ அனைத்தும் சேர்ந்து இருவருள்ளும் ஒரு ரசாயன மாற்றம் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

 

 

பாலத்திலிருந்து இறங்கி இடையிடையே அங்கே விற்ற உப்பும் மிளகாய் தூளுமிட்டு விற்ற அன்னாசி, மாங்காய், ஐஸ்கிரீம், அவித்த சோளம் என்று வாங்கிக் கொறித்துக் கொண்டே சென்றார்கள்.

 

 

அருண்யாவை சங்கடத்தில் ஆழ்த்திய விடயம் ஆங்காங்கே புற் தரைகளிலும் விசிறி வாழை மறைவுகளுக்குப் பின்னாலும் மர நிழல்களிலும் போட்டிருந்த இருக்கைகளிலும் கட்டிப் பிடித்தபடியோ, கொஞ்சிக் கொண்டோ இருந்த காதலர்கள் தான். சிங்களவர்கள் கொஞ்சம் மேலைத்தேய மக்கள் போல் உடைகளிலும், பொது இடத்தில் பழகுவதிலும் ரொம்பவே தாராளம்.

 

 

லண்டனில் இருந்து வந்த ஸாமிற்கு எதுவுமே பெரிதாகத் தோன்றவில்லை. இதை விட அதிகமாக அவன் அங்கே நித்தமும் காண்பது தானே. ஆனால் அருண்யாக்குத் தான் எல்லாம் புதுமையாக வெட்கிச் சிவந்து போனாள். 

 

 

ஒரு சிறிய இடத்தில் விதம் விதமாக வளர்க்கப் பட்டிருந்த ஓர்கிட் மலர்களை பார்த்து விட்டு வரும் போது அங்கிருந்த படியொன்றைக் கவனிக்காமல் அருண்யா விழப் பார்க்க எட்டிப் பிடித்து தாங்கிக் கொண்டான் ஸாம். 

 

 

அதன் பிறகு ஹோட்டலுக்குத் திரும்பும் வரை அவன் அவள் கையை விடவே இல்லை. அவளும் விடுவித்துக் கொள்ளவும் இல்லை. அங்கே ஜோடியாக திரிந்தவர்கள் பெரும்பாலும் கைகள் கோர்த்தபடியோ, அணைத்தபடியோ திரிந்ததைப் பார்த்தவளுக்கு அதுவே சாதாரணம் போல் விலக்கத் தோன்றவில்லை. அதே நேரம் அவன் தாங்கிப் பிடித்த கணத்தில் இருந்து இவன் எப்போதும் என்னைக் காப்பாற்றுவான் என்று ஆழ்மனசு அடித்துக் கூற அவன் ஸ்பரிசமும் தெம்பூட்டுவதாய் இதமாய் பாதுகாப்பாய் உணர்ந்தாள். 

 

 

காலமுழுதும் இதே பாதுகாப்பில் வாழ்ந்திட வேண்டும்… இதுவரை நாளும் அவள் அனுபவித்துக் கொண்டிருந்த அந்த பாதுகாப்பின்மை உணர்வு அவன் கைப்பிடித்த அந்த ஒரு நொடியில் நீங்கி விட்டதை உணர்ந்தாள். 

 

 

இதுதான் கல்யாணம் எனும் வார்த்தையின் மகிமையா….

 

 

நடந்து களைத்தவர்கள் புற்தரையில் அமர அருகிலே ஒரு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை ஒன்று தத்தக்க பித்தக்க நடை பயின்று இவளிடம் ஓடி வந்தது. அள்ளி அணைத்துக் கொண்டவளின் மடியில் வாகாய் அமர்ந்து விட இந்த அழகிய காட்சியையும் ஸாம் படம் பிடித்துக் கொண்டான். 

 

 

இவள் எழுந்து அந்தக் குழந்தையோடு அதன் வயதுக்கேற்றாற் போல சிறிது நேரம் விளையாடினாள். அவள் அலுத்துக் களைத்த பின்னர் ஹோட்டல் அறைக்குத் திரும்பினார்கள். வழி நெடுகிலும் வாய் ஓயாமல் அந்தக் குழந்தை பற்றிய பேச்சுத்தான் அருணியிடம். ஸாம் அவளையும் அந்தக் குழந்தையையும் எடுத்திருந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் திரும்ப திரும்ப பார்த்தவள்,

 

 

இஞ்சருங்கோப்பா… எனக்கும் ஒரு குழந்தை வேணும்?”

 

 

இவள் என்ன அர்த்தத்தில் தான் கேட்கிறாள் என அதிர்ந்தவாறே கேட்டவளைத் திகைப்புடன் பார்த்தான் அவளின் கணவன். 

 

 

குழந்தை பெறுவாளா அருண்யா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 12’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 12’

அத்தியாயம் – 12 ஸாமின் வாழ்க்கையில் விளையாடுவது யார்?   அருண்யாவின் உயர் தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன. அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாவதாக வந்து தமக்கைக்கு தான் ஒன்றும் சளைத்தவளில்லை என்று நிருபித்து இருந்தாள். ஊரே

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 27’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 27’

அத்தியாயம் – 27 ஒளியேற்றுவானா ஸாம்?   அடுத்த நாள் மதிய இடைவேளையின் போது வைத்தியர் விடுதி வரவேற்பறையில் கவிக்காகக் காத்திருந்தான் ஸாம். எதற்காக வரச் சொன்னாள், என்ன விசயமாக இருக்கும் என்று மனதிற்குள் பலத்த யோசனை. இருந்தாலும் எதையும் இது

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’

அத்தியாயம் – 26 நல்ல முடிவாய் எடுப்பானா ஸாம்?     அடர்ந்து பரந்து நிழல் பரப்பியிருந்த பெரிய சவுக்கு மரத்தின் கீழே ஜமுக்காளம் பரப்பி உணவுப் பொருட்களைக் கடை பரப்பி சுதனின் கர்ப்பிணி மனைவி காவல் இருக்க மீதி அனைவரும்