அத்தியாயம் – 28
என்ன முடிவெடுக்கப் போகிறாள் அருண்யா?
சமையல் முடித்ததும் தோட்டத்தில் நின்றவர்களை சாப்பிட அழைத்தாள் கவின்யா. அவர்களும் கைகால் முகம் கழுவிக் கொண்டு வர, அதற்கிடையே சாப்பாட்டு மேசையில் உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைத்தாள்.
இடியப்பத்திற்கு மஞ்சள் சம்பல், இஞ்சிச் சம்பல், பச்சை மிளகாய்ச் சம்பலோடு உருளைக் கிழங்கு குழம்பும் வைத்திருந்தாள். உணவுகளை மேசை மேல் வைத்து விட்டு அருணியைப் போய்ப் பார்க்க அவள் இன்னமும் விட்டத்தை வெறித்தவாறு அதே மோன நிலையில் இருந்தாள்.
அவளருகே போய் அமர்ந்த கவி மெதுவாய் அவள் கையைத் தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தாள்.
“ஸாம் ரொம்ப நல்லவன் அருண்… உன்னைப் புரிஞ்சு நடந்துப்பான். உனக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்… இத்தனை வருசமா நானோ அப்பாவோ வெளிய வரச் சொல்லி கேட்காத நீ ஸாமைக் கண்டதும் வீட்டுப் படி தாண்டினாயே எதனால? அவன் வரச் சொன்னான் என்று எல்லோரோடயும் சேர்ந்து பீச்சுக்கு கூடப் போனியே.. எதனால? ஏன்னா உனக்கும் ஸாமை ரொம்ப பிடிக்கும்… இந்த அன்பு சேர்ந்திருக்கும் போது நாளடைவில உன்னையறியாமலே காதலா மாறும் அருண்…
நானும் யாதுவை விரும்பியா கல்யாணம் செய்து கொண்டேன்… கொஞ்ச நாள் போக யாதுட அன்பில நான் மாறேல்லயா… அது மாதிரி காலம் போகப் போக நீயும் ஓகே ஆகிடுவாய் அருண்… எல்லாம் மனசு தான்… நாங்கள் பார்க்கிற பார்வையில் தான் இருக்கு…”
“இல்லைக்கா… உன்ர சிற்றுவேசன் வேற… ஆனால் என்னால இனிமேல் ஒரு ஆம்பிளைட விரல் பட்டாலே தாங்க முடியுமோ தெரியேல்லயேக்கா… கடைசி வரைக்கும் என்னால மாற முடியாமல் போனால் ஸேர் பாவமக்கா… என்னில பரிதாபப்பட்டு எனக்கு வாழ்க்கை தாறதுக்காக அவர் தன்ர வாழ்க்கைய அழிக்கணுமா… இது சரி வராதுக்கா…”
“முதல்ல இப்பிடி நெகட்டிவாவே யோசிக்கிறதை நிப்பாட்டு அருண்… ஸாம் ஒண்ணும் பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணேல்ல… உன்னைப் பிடிச்சுத் தான் கட்டக் கேட்கிறார்… ஏன் உனக்கு தெரியாதா…? அவருக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்று…
எனக்காக உன்ர வாழ்க்கைய அழிச்சிட்டாயே என்று நான் நித்தமும் கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கிறேன்… ஸாமைக் கல்யாணம் பண்ணினாலாவது நீயாச்சும் நல்லா இருக்கிறியே என்று கொஞ்சம் நிம்மதியாக இருப்பன்… அல்லது காலம் முழுவதும் இந்த குற்ற உணர்விலேயே நான் மறுகணும் என்று விதி இருக்கு என்றால் ஒண்டும் செய்யேலாதானே…
உன்னை யாரும் வற்புறுத்தேல்ல… நிதானமாக யோசித்து நீயே நல்ல முடிவாய் எடு… சரி இப்ப வா சாப்பிட…”
அனைவரும் மௌனமாய் சாப்பிட்டு கைகழுவி வர எல்லோரும் அருண்யாவையே பார்த்தனர். மற்றவர்கள் பார்வையின் அர்த்தம் புரிந்தும் அவள் வாய் திறவாதிருக்க,
ஸாமே நேரடியாக கேட்டான்.
“என்ன முடிவெடுத்து இருக்கிறீர் அருண்?”
அதன் பிறகும் மௌன விரதம் பூண முடியாமல் வாய் திறந்தவள்,
“காலம் முழுக்க இப்ப மாதிரியே இருக்கலாம் என்றால் லண்டன் வாறன்… இல்ல பொண்டாட்டியாத் தான் வர வேணும் என்றால் நான் வரேல்ல…”
மெல்லிய குரலில் ஆனால் உறுதியாகக் கூறியவளை என்ன சொல்வது என்று புரியாமல் கவியும் சந்திரஹாசனும் ஸாமைப் பார்த்தனர்.
“நானும் தெளிவாக சொல்லுறன்… இங்க பரிதாபப்பட்டு வாழ்க்கை குடுக்கிற அளவுக்கு எல்லாம் நான் நல்லவன் இல்லை… எனக்கு பொண்டாட்டி தான் வேணும். நீர் மாறுறதுக்கு கொஞ்சம் டைம் வேணும் என்றால் தரலாம்”
ஸாமும் உறுதியாக கூறி விட்டு அனைவரிடமும் விடைபெற்று சென்றான்.
ஒரு வாரம் கடந்தது. அருண்யா இவ்வளவு நாளும் தான் தன் வாழ்வு சூனியமாக இருந்தது என்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் ஸாம் கதைக்காமல் விட்டதற்கு பின் இந்த ஒரு கிழமையில் இனிமேல் ஏன் உயிர் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். பத்து வருடங்களாக தன் குடும்பத்திற்காக அவர்கள் நிம்மதிக்காக என்று உயிரை உடலில் பேணி கடமைக்குச் சாப்பிட்டு ஏதோ தானும் ஒரு ஜீவனாய் உலாவிக் கொண்டிருந்தவள் இப்போது அதிகமாய் ஒடுங்கினாள்.
எல்லாவற்றிலும் வெறுப்பு, சாப்பிட பிடிக்கவில்லை, தூங்கப் பிடிக்கவில்லை, தந்தை தமக்கை முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை. தாயாருக்குரிய உதவிகளைச் செய்யும் போது கூட அதில் ஒரு ஒட்டுதலின்றி கடைமைக்காகச் செய்தாள் என்றே சொல்லலாம். தனது அறையிலேயே அடைந்து கிடந்தாள்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கவி முடியாதவளாக அன்று மாலை அருணியின் அறைக்குச் சென்றாள் பேசி ஒரு முடிவு காணுவோம் என்ற மனநிலையில். இருண்ட அறையில் கட்டிலில் கவின்டிருந்தவள் லைட்டை போட்டதும் கண்ணைச் சுருக்கிக் கொண்டே எழுந்தாள்.
“என்னக்கா…?”
அலுப்பாய் கேட்டவளிடம் சீறினாள் கவி.
“உன்ர மனசில என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறாய்… இப்பிடியே காலம் பூராவும் நாங்கள் உன்னை நினைச்சு நிம்மதி இல்லாமலே தான் சாகோணுமா..? வாழ வேண்டிய இளமைக் காலம் அரைவாசியையும் இந்த அறைக்கேயே வாழ்ந்து முடிச்சிட்டாய்… கடவுளாப் பார்த்து ஒரு வழியைக் காட்டேக்க வீண் பிடிவாதமும் விதண்டாவாதமும் கதைச்சுக் கொண்டிருக்கிறாய்…?”
“ஏனக்கா…. உனக்கும் அப்பாக்கும் நான் பாரமா இருக்கிறனா…?”
ஒரு நாளும் கடிந்து பேசியறியாத தமக்கை கொதித்ததில் ஏற்கனவே ஸாமின் விலகல் தந்திருந்த ஏக்கமும் சேர்ந்து இவளை விம்ம வைத்தது.
“இப்ப நீ ஸாமைக் கல்யாணம் பண்ணாட்டில் பாரமாத் தானிருப்பாய். எங்களில கொஞ்சமாவது பாசம், அக்கறை இருந்திருந்தால் தான் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டிருப்பியே…. உனக்கு உன்ர பிடிவாதம் தான் பெருசா தெரியுது… நீ சரியான செல்பிஷ் அருண்…”
கோபமாய் மொழிந்தவள் கதவை அறைந்து சாத்தி விட்டு வெளியேறினாள். வரவேற்பறையில் பத்திரிகையுடன் இருந்த சந்திரஹாசன் கேள்வியாய் பார்க்கவும்,
“நல்லா பேசிட்டனப்பா… கவலைப் படாதீங்கோ… ஓகே சொல்லிடுவாள்…”
நம்பிக்கையோடு பகர்ந்து விட்டு தன்னறை நோக்கி சென்றாள். ஒரு மகள் வாழ்வாவது விடியாதா சந்நிதியானே என்று மனதார வேண்டிக் கொண்டு மறுபடியும் பத்திரிகைகளில் மூழ்கினார் அவர்.
மறுநாள் காலையில் எழும்பி இந்த ஒரு வாரத்திற்கு முன்பு போல தானே காலையுணவைச் செய்தவள் கவி எழுந்து வரவும் மெதுவாக புன்னகைத்தாள். ஆனால் அவளோ இன்னமும் கோபமாய் இருக்க,
“சிரியுங்கோக்கா… உங்கட முகத்துக்கு இந்த கோபம் எல்லாம் செற்றே ஆகல…”
“அப்பா… ஆரையும் இங்க என்னோட தேவேல்லாமல் கதைக்க வேணாம் என்று சொல்லுங்கோ…”
அருண்யா ஊற்றி வைத்திருந்த தேநீரை எடுத்து அருந்தியவாறே தந்தையிடம் முறையிட்டாள்.
“அப்பா… என்ர கலியாணத்திலயும் இந்த சிடுமூஞ்சியோடயோ வந்து நிக்கப் போறாவோ என்று கேளுங்கோ…”
அருணியும் திரும்ப தந்தையிடம் முறையிட கவியும் சந்திரஹாசனும் மகிழ்ச்சியாய் அவளை ஏறிட்டனர்.
“இனிமேல் நான் உங்கள் ரெண்டு பேருக்கும் பாரமா இருக்கேல்ல… ஸேருக்கே பாரமாய் இருக்கிறேன்… அவரிட்ட சொல்லுங்கோப்பா… இனி அவரிட குடுமி என்னட்டயாம் என்று…”
தமக்கை தன்னை வேண்டாத சுமை என்று விட்டாளே என்ற கோபமோ வருத்தமோ இன்றி சிரித்த முகமாகவே பதிலிறுத்தாள் அருண்யா.
“உண்மையாவா அருண் சொல்லுறாய்… ரொம்ப சந்தோசம்… அப்பா இப்பவே ஸாம் வீட்ட போய்க் கதைப்பம் வாங்கோ…”
மகிழ்ச்சியில் கண்கள் கலங்க உதட்டில் புன்னகை மிளிர சிறுமியாய் துள்ளிக் குதித்த தமக்கையைப் பார்த்து திருப்தியடைந்தாள் அருணி.
‘கவி சொன்னதும் நியாயம் தானே… முயன்றே பாராமால் இவர்கள் எல்லோரையும் வருடக்கணக்கில் வருத்துவதில் தான் என்ன லாபம்? யாதவ் தான் திரும்ப வருவது கேள்விக்குறி… நான் நல்லா வாழ்கிறேன் என்ற சந்தோசமாவது கிடைக்கட்டும்…’
தனது முடிவைத் தானே மெச்சியவாறு மனதிலே பெரிய ஒரு பாரமகன்று லேசாகி விட்ட உணர்வோடு வீட்டு வேலைகளைக் கவனிக்கலானாள்.
அருண்யா மனம் மாற முதல் திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் அன்றே ஸாமின் வீட்டிற்கு சென்று ஸாமோடும் அவன் அண்ணாவோடும் கலந்தாலோசித்தார்கள்.
அந்த ஞாயிற்றுக்கிழமையே சந்திரஹாசன் வீட்டில் வைத்து விவாகப் பதிவாளர் முன்னிலையில் மோதிரம் மாற்றித் தாலி கட்டி விவாகத்தைப் பதிவும் செய்து விடுவது என்று முடிவுக்கு வந்தார்கள்.
ஸாமின் குடும்பத்தவரும் மூன்று நண்பர்கள் குடும்பங்களும் சந்திரஹாசன் தரப்பில் யாதவின் பெற்றோர்களும் மட்டும் போதும் என்று முடிவு செய்யப்பட்டது.
நிரோஜனுக்கு விடயத்தைச் சொன்னதும் அவன் திருமணத்திற்குரிய அனைத்து ஒழுங்குகளையும் தான் பார்த்து கொள்வதாகச் சொன்னான்.
ஞாயிறு மதியத்துக்கு பதிவாளரை வரச் சொன்னவர்கள் அனுசியா மணப் பந்தலிடம் ஆடம்பரங்களற்ற ஒரு பூ மணவறையை வீட்டு வரவேற்பறையில் அமைக்க சொல்லி விட்டு மதிய உணவை நெல்லியடி டைட்டானிக் உணவகத்திலிருந்து எடுத்தார்கள்.
மணப்பெண் அலங்காரம் பயின்றிருந்த சுதனின் மனைவி அருண்யாவின் ஒப்பனை, திருமணக் கேக் என்பவற்றைப் பொறுப்பெடுத்துக் கொள்ள, மற்ற இருவரின் மனைவியரும் ஸாமின் அண்ணியோடு சேர்ந்து பலகாரங்களைச் செய்தார்கள்.
மோதிரம், தாலி எல்லாம் தன் பொறுப்பாய் எடுத்திருந்தான் ஸாம். உடைகள் எல்லாம் ராசியில் கவி தேர்ந்தெடுத்திருக்க அந்த திருமண நாளும் அழகாய் விடிந்தது.
முதல் நாளிரவே வீடு அலங்கரிக்கப் பட்டிருக்க அன்று காலையிலேயே எல்லோரும் வந்து குழுமி விட களை கட்டியது திருமண வீடு.
சுதன் மனைவியின் மிதமான ஒப்பனையில் சேலையில் தேவதையாகத் தான் தெரிந்தாள் அருண்யா. ஸாம் கோட்சூட்டோடு மாப்பிள்ளை களையில் இருந்தவனை நண்பர்கள் கேலி பேசிக் கொண்டிருந்தனர்.
பதிவாளர் வந்ததும் அவர் முன்னிலையில் மாலை மாற்றி மோதிரம் அணிவித்து இரு பக்கத்திலும் சாட்சிக் கையெழுத்து போட்டு வாழ்த்த அந்த திருமணமும் இனிதே பதியப்பட்டது.
அதன் பின்னர் சந்திரஹாசன், அந்தோனி இருவர் தம்பதி படங்களும் பொறிக்கப்பட்ட ஒரு டாலர் பொருத்தப்பட்ட மூன்று பவுன் மதிக்கத்தக்க ஒரு மெல்லிய நீளச் சங்கிலியை எடுத்து அருணியின் கழுத்தில் அணிவித்தவன்,
“தாலி எப்படி செய்யிற என்று தெரியேல்ல… இந்து முறைப்படியா அல்லது கிறிஸ்டியன் முறைப்படியா என்று… அருணுக்கும் கடவுள் நம்பிக்கை பெருசா இல்ல… மெல்லிசா இருந்தால் டெய்லி போட்டிருக்கலாம் என்டிட்டுத் தான் இப்பிடிச் செய்தன்…”
தான் செய்ததை ஏற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை என்ற குறுகுறுப்பில் மெல்லிய குரலில் தன்னிலை விளக்கம் வழங்க அவன் நண்பர்கள் படபடவென்று முதலில் கை தட்டினார்கள்.
“சூப்பர்டா மச்சான்… உன்ர ஐடியா எனக்கு வராமல் போச்சே… அநியாயமாக பதினைஞ்சு பவுன்ல தாலியை கட்டிட்டன்…”
சுதர்சன் வருத்தமாய் சொல்ல அவனை விட வருத்தமாய் தொடர்ந்தான் சுதன்.
“நீயென்டாலும் பரவாயில்லை மச்சான் பதினைஞ்சு தான்… நான் வாங்கின சீதனமெல்லாம் தாலிக்கே போய்ட்டுதே…”
“ஏன்டா மச்சான்… எத்தினை பவுன்ல கட்டினனி…?”
கன அக்கறையாய் சுதர்சன் விசாரிக்க சுதனும் வலு சோகமாய்,
“இருபத்தைஞ்சுடா… எப்பிடித்தான் கழுத்து நோகாமல் போட்டிருக்காளுகளோ…”
தன்னை மறந்து சொல்லிக்கொண்டு மனைவியைப் பார்த்தவன் அங்கே எள்ளும் கொள்ளும் வெடிக்க மெதுவாக நண்பர்களின் பின்னால் தன்னை மறைத்து கொண்டான்.
“இருபத்தைஞ்சு கூடிப் போச்சு… குறைச்சு செய்யுங்கோ என்று சொல்ல… ஆராம் நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஐம்பதில போடோணும் நீ தாங்க மாட்டாய் என்ற படியால இவ்வளத்தில நிப்பாட்டுறன் என்று சொன்ன என்று கேளுங்கோ அண்ணா…”
சுதனின் மனைவி வெடிக்க சுதனின் ஸ்டேட்டஸ் பார்க்கும் குணம் தெரிந்த அனைவரும் வாய் விட்டு நகைத்தனர். சுதனும் அசடு வழிந்தவாறே அதை மறைக்க நிரோஜனிடம் திரும்பினான்.
“நீ எத்தினை பவுன் என்று சொல்லவே இல்லயே மச்சான்…”
“அதை நான் சொல்லுறன் அண்ணா… ஒரு சதம் செலவில்லாமல் சந்நிதி மரத்தில கட்டியிருந்த மஞ்சள் கயிற்றை தானே ஐயா கட்டினவர்…”
தங்கள் காதலை வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லச் சொல்ல அசட்டையாக இருந்து விட்டு அவளுக்கு இன்னொருத்தன் தாலி கட்டப் போகும் கடைசி நிமிசத்தில் ஒரு மஞ்சள் கயிற்றில் மூன்று முடிச்சைப் போட்டுத் தன்னவளாக்கிக் கொண்ட கணவனின் வீரதீரத்தைப் போட்டுடைத்தாள் அவள். பின்னர் பதினொரு பவுனில் தாலிக்கொடி செய்து கொடுத்தது வேறு கதை.
இப்படி பேச்சும் சிரிப்புமாய் அந்த நாளும் இனிதே கழிந்தது. அருணியும் மகிழ்ச்சியாய் அவர்கள் குதூகலத்தில் பங்கெடுக்கத் தவறவில்லை.
அன்றிரவே புதுமணத் தம்பதியை கண்டிக்கு அனுப்பி வைத்தார்கள் தேனிலவு என்ற பெயரில். அருணியின் உண்மை நிலையும் இந்த திருமணத்திற்கு அவள் வற்புறுத்தப் பட்டிருந்த எதையும் அறிந்திராத இதையும் ஒரு சாதாரண திருமணமாக எண்ணியிருந்த நண்பர்களின் ஏற்பாடு அது.
ஒரு நாளிரவு பிரயாணம் என்பதால் சந்திரஹாசன் காரிலேயே ட்ரைவர் வைத்துப் புறப்பட்டவர்கள் காரில் ஏறியதிலிருந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
திருமணத்திற்கு இவள் சம்மதித்த பின்னரும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அளந்தே பேசினான் ஸாம். தன்னை மணப்பதற்குக் கூட இவள் விரும்பவில்லையே… அவள் மனம் புரிந்து நடந்து கொள்ளத் தெரியாத காமுகன் என்று என்னை எண்ணி விட்டாளா… என்ற கோபம் அவனுக்கு.
அவன் கேட்டதும் மறுத்து விட்டோமே… அக்கா சொல்லி அவளுக்காகத் தான் தன்னை மணப்பதாக எண்ணியிருப்பாரோ… அவர் கதைக்காமல் நானாக எப்படிக் கதைப்பது என்று தயக்கம் அவளுக்கு…
சாதாரண பருத்தி சல்வார் ஒன்றில் புகுந்து காரின் மிதமான ஏசிக்கு இதமாக ஷோலை உடலைச் சுற்றிப் போட்டவள் வெளியேயும் இருண்டு விட்ட படியால் வாகன வெளிச்சங்களைப் பார்க்க மனமற்று அப்படியே பின்னுக்கு தலை சாய்த்து கண்களை மூடினாள்.
ஒரு டெனிம் காற்சட்டை முழுக்கை ரீசேர்ட்டுக்கு மாறியிருந்தவனுக்கும் பெரிதாய் ஏதோ சாதித்த அசதி… இவளை இனி எப்படி என் பக்கம் திருப்பப் போகிறேனோ என்று வந்த யோசனையும் சேர்ந்து கொள்ள அவனும் கண்களை மூடி இருக்கையில் வாகாய் சாய்ந்து கொண்டான்.
இலங்கைத் தீவின் சொர்க்கபுரியாம் மலையகத்தை நோக்கி அந்தக் காரும் இவர்களை சுமந்து கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தது.
பேசக்கூட தோன்றாமல் இருக்கும் இந்த புதுமணத்தம்பதிகள் இணைவார்களா?