Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15

அன்புள்ள தோழமைகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

Pin on AllQuotesIcon

 

அன்புடன்,

தமிழ் மதுரா.

அத்தியாயம் – 15

 

வீட்டின் அந்த இரவுப் பொழுது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அபிராம் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்திருந்த பொழுதுதான் செம்பருத்திக்கு அவன் யார் கண் பார்வையில் படும்படி நடமாடியதே இல்லை என்ற உண்மை உரைத்தது. 

 

இவர்கள் அனைவரையும் ஏதோ வேலை சொல்லி அனுப்பி வைத்துவிட்டுத்தான் பாலன் அபிராமை உண்ண அழைத்து வருவது. யாராவது விருந்தினர் வரும்போது கூட ஏற்கனவே அவரை வரவேற்கும் வண்ணம் அமர்ந்திருப்பான். உணவருந்தும் முன்பு பட்லர் ஒருவர் அழைத்துச் செல்ல. விருந்தாளி கை கால் சுத்தம் செய்து வருவதற்குள் டின்னர் டேபிளில் இருப்பான். 

 

இப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும். தான் பிறந்து வளர்ந்த ஊரில் இப்படி நடமாடப் பிடிக்காமல் கூட்டுக்குள் அடைந்து கிடக்கும் அபிராம் இப்படியே தொடர்ந்தால் மனநலம் பாதிக்கப்படுவது உறுதி. 

 

தனது பிரச்சனைகளை மறக்க ஓடி வந்தவள் தன்னைப் பற்றிய நினைவே இல்லாமல் அந்த வீட்டின் பிரச்சனைகளில் அமிழ்ந்து தீர்வு கண்டுபிடிக்க முற்பட்டாள்.

 

ஓவியாவை அழைத்தான் அபிராம் “உனக்கு பாடம் கஷ்டமா இருக்குன்னு புரியுது. எந்த பாடம் கஷ்டமா இருக்கு?”

 

“எல்லா பாடமும்”

 

“எல்லா பாடமுமா. நீ வாங்கிருக்குறதிலேயே எந்த சப்ஜெக்ட்ல ரொம்ப கம்மி மார்க்?”

 

“இங்கிலிஷ்”

 

“இங்கிலிஷா? எத்தனை மார்க்னு இதில் எழுதி எனக்கு மாத்திரம் காமி”

 

ரகசியமாய் எழுதி அவனிடம் காண்பித்து வந்தாள். 

 

“இதில் இன்னும் எட்டு மாசத்தில் பரீட்சை. சோதனை!” என்றான் வாய்விட்டு. 

 

“செம்பருத்தி தினமும் நீ ஓவியாவுக்கு பாடம் சொல்லித் தா”

 

“சார். இங்கிலிஷ் மட்டும் என்கிட்டே கேக்காதிங்க. இங்க பதில் கடிதம் எழுதுறதே எப்படின்னு தெரியாம தினமும் ஒவ்வொரு பழைய பதில் லெட்டர மனப்பாடம் பண்ணி சமாளிச்சுட்டு இருக்கேன்”

 

“உனக்கும் இங்கிலிஷ் ததிங்கிணத்தோமா… சரி ஓவியா நான் சொல்லுற வார்த்தைகள் எல்லாத்துக்கும் கரெக்ட்டா ஸ்பெல்லிங் எழுதிட்டா உனக்கு அடிப்படை நல்லாருக்குன்னு அர்த்தம்”

 

“கார்ல பிரேக் போட்டேன், எனது ப்ரைஸ் இந்தக் கப், ஒட்டகம் டெஸெர்ட்டில் காணப்படும் எங்க இந்த மூணு வாக்கியத்தையும் எழுது பார்க்கலாம்”

 

ஓவியா எழுதியதும், “நீ எழுதின ஸ்பெல்லிங் எல்லாம் எப்படி தப்பான அர்த்தம் வரும் தெரியுமா? பிரேக் brake போட்டேன் இதுக்கு இந்த break ஸ்பெல்லிங் உடைச்சேன்னு வருது. ப்ரைஸ்னா prize பரிசு நீ அதை எனது price விலைன்னு எழுந்திருக்க. Desert பாலைவனம்னு அர்த்தம் வரதுக்கு பதில் டின்னர் முடிச்சுட்டு கடைசியா சாப்பிடுற இனிப்பு dessert ஸ்பெல்லிங் எழுந்திருக்க. உன்னை படிக்க வச்சு பாஸ் பண்ண வைக்கிறதுதான் வாத்தியாருக்கு உண்மையான சத்திய சோதனை”

 

“வேற வழியே இல்லையா சார்?” என்றாள் செம்பருத்தியும் கவலையுடன்.

 

“இந்த சத்திய சோதனையை நம்ம காலேஜ் வாத்தியாருக்கே தரலாம். போன தடவை இங்கிலிஷ் டிபார்ட்மென்ட் நம்ம காலேஜில் சரியில்லைன்னு ஒரு லெட்சரர் லெட்டர் போட்டிருந்தாங்க. அவங்களுக்கே இந்த சத்திய சோதனையை பார்சல் பண்ணி விடுவோம்”

 

ஆக ஒரே கல்லில் ரெண்டு மாங்கா. அவரை சோதித்த மாதிரியும் ஆயிற்று. அவர் வெற்றி பெற்றால் அவருக்கு பெயர் கிடைத்த மாதிரியும் ஆயிற்று. 

 

கடைசியில் தினமும் ஒரு பாடம் டியூஷன்  சொல்லித்தர ஏற்பாடு செய்தான். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பக்கத்து ஊரில் இருக்கும் அவர்களது கல்லூரிக்கு செல்ல வேண்டும். அங்கு வாத்தியார்கள் படிக்க வைக்க வேண்டும். 

 

“செம்பருத்தி நீயும் போயிட்டு வா”

 

“சார்… நானே  மேற்படிப்பு படிக்கலாம்னு இருக்கேன்”

 

“நினைவிருக்கு. அங்கேயே ஈவ்னிங் காலேஜ் இருக்கு. அதில் சேர்ந்துக்கோ. என்ன சப்ஜெக்ட் படிக்கப் போற?”

 

“சில வாரத்துக்கு முன்னாடி வரை எம்.காம் படிக்கலாம்னு இருந்தேன். இப்ப இங்கிலிஷ் படிக்கலாம்னு ஐடியா இருக்கு. ஆனால் லிட்டரேச்சர் எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குமேனு யோசிச்சுட்டு இருக்கேன்”

 

“என்ன எடுத்தாலும் இங்கிலிஷ்ல பக்கம் பக்கமா எழுதுற ஹிஸ்டரி, சைக்காலஜி இந்த மாதிரி இல்லைன்னா பிசினஸ் ஸ்டடிஸ் எடுத்துக்கோ. ஆட்டோமேடிக்கா மொழி பழகிடும். இப்ப தட்டுத் தடுமாறி மலையாளம் பேசுறியே அந்த மாதிரி”

 

“சரி சார்…“ என்று சொன்னாலும் இவன் கண்களுக்கு எதுவுமே தப்புவதில்லை என்று உணர்ந்தாள். இதே போல இன்னொருவனிடமும் உணர்ந்தாளே. அவன் எங்கிருக்கிறானோ தெரியவில்லை. 

 

“என்ன சரி சார்? என்ன சப்ஜெக்ட்தான் உனக்கு இண்டெர்ஸ்ட்”

 

“இது வரைக்கும் என் சம்பந்தப்பட்ட முடிவுகள் எல்லாம் எங்கப்பாதான் எடுத்தார். என் படிப்பு கூட தேவை தான் தீர்மானிச்சதே தவிர என்னோட விருப்பம்னு எந்த காலத்திலும் யோசிச்சதில்லை. இந்த வேலைக்கு வந்ததுதான் நானே எனக்காக எடுத்து வச்ச முதல் அடி. இந்த அடுத்த அடி கூட யோசிச்சுத்தான் எடுத்து வைக்கணும்” என்றாள் அவனைக் காயப்படுத்தாதவாறு. 

 

“உண்மைதான். நானும் எங்கம்மா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன். நான் என்ன படிக்கணும், எங்க படிக்கணும் எல்லாம் தீர்மானிச்சது அவங்கதான். நான்தான் அவங்க உலகம். இப்பக் கூட அவங்க இருந்திருந்தா எனக்கு ஒரு தூணா இருந்திருப்பாங்க” அதன்பின் ஏதோ நினைவில் ஆழ்ந்தவாறு மெதுவாக பழரசத்தைப் பருகினான். 

 

“அய்யா… காலேஜு ஆரம்பிச்சு நாளாகுதே… நான் வேணும்னா ப்ரின்சிபாலை கூப்பிட்டு ஒரு சீட்டு சொல்லி வைக்கட்டுமா?”

 

“ஈவினிங் காலேஜ்ல ஒரு இடம் உறுதி செய். செம்பருத்தி உனக்கு ரொம்ப நாள் டைம் கிடையாது. அடுத்த வாரத்துல இருந்து காலேஜ் போக வேண்டி இருக்கும்” என்று சொல்லிவிட்டான்.

 

இரவு உணவு அவன் முடித்து எழுவதற்குள் செம்பருத்திக்கு கல்லூரியில் இடமும்  ஓவியாவுக்கு பாடம் சொல்லித் தர ஆசிரியரும் தயார். 

 

அவன் சென்றதும் சுத்தம் செய்துவிட்டு வேலையாட்கள் சாப்பிடும் உணவறைக்குள் நுழைந்தார்கள். 

 

அன்று இவர்களுக்காகவே சில உணவுப் பதார்த்தங்களை சமைத்திருந்தார் சேச்சி. பதார்த்தம் என்றால் பெரிய கஷ்டமான உணவு வகை இல்லை. கருவாடு, ரசம், கொத்தவரங்காய் வற்றல் இவற்றுடன் சூடான அரிசிக் கஞ்சி. 

 

“ரொம்ப தாங்க்ஸ் சேச்சி. இந்த சீனி அவரை வத்தல் இருக்கே… இதுதான் எங்க வீட்ல பாதி நேரம் வயத்தை நிரப்ப… “

 

“இன்னைக்கு தரைலயே உக்காந்து சாப்பிடலாம்” நாற்காலிகளைத் தள்ளி வைத்துவிட்டு அனைவரும் ஒரு கிண்ணத்தில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு  வட்டமாக தரையில் அமர்ந்து விட்டார்கள். 

 

“அதனால்தான் தினமும் இதை சாப்பிடுறிங்களாக்கா?” துவர்ப்பான அந்த கொத்தவரைங்காய் வற்றலைக் கடித்துக் கொண்டே கேட்டாள் செம்பருத்தி. 

 

“ஆட்டக் கரகமா இருந்தா சீசன் இருக்கும். வருமானமும் இருக்கும். நாங்க சக்திக் கரகம் ஆடுறவங்க. திருவிழா சீசனப்ப மட்டும்தான் வேலை. அதுவும் ஒவ்வொரு சீசனுக்கும் ஒண்ணு ரெண்டு கோவில்ல மட்டும்தான் வேலை செய்ய முடியும். அதில் என்ன பெரிய வருமானம் இருந்துடப் போகுது? வீட்டில் இருக்குற வறுமைல பாதி நாள் தினத்துக்கும் ஒரு வேளை அரிசிக் கஞ்சிதான். அதுக்கு தொட்டுக்க இந்த சீனி அவரைக்காய் வத்தல், ஒரு ஊறுகாய் பாக்கெட், அத்திப் பூத்தாப்புல கருவாடு. இதுதான் எங்க விருந்து சாப்பாடு”

 

“உங்க கூட சேர்ந்து எனக்கும் இந்த வத்தல் பழக்கம் தொத்திக்கிச்சு”

 

“சரி விடு காளியம்மா, நீ பட்ட பாட்டுக்கு இவ பாஸானா விடிவுதான் போ” என்றார் சேச்சி. 

 

“அக்கா… நீங்க கரகாட்ட டான்ஸரா?” 

 

“ஆமாம்மா… “ என்ற காளியம்மா . “இந்த கரகம் இருக்கே… அது மாரியம்மனுக்கு உகந்ததும்மா… அந்த காலத்துல பெரியவீட்டில் இருக்குற மாரியம்மனுக்கு சக்திக் கரகம் எடுத்துட்டு போறவரு எங்க தாத்தா… எங்க வீட்டு பிள்ளைங்க எல்லாரும்  நடக்கத் தெரிஞ்சதும் காலுல சலங்கை கட்டி ஆட ஆரம்பிச்சுருவோம்”

 

“சக்திக்  கரகமா? குடத்தில் வேப்பிலையை திணிச்சு அம்மன் முகத்தை அலங்காரம் செஞ்சு சாமி கும்மிட வைச்சிருப்பாங்களே அதுவா?”

 

“எல். ஆர். ஈஸ்வரியம்மா பாட்டு கேட்டிருக்கியா… பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்…  அப்படி ஆரம்பிச்சதுதா சக்திக் கரகம். மஞ்சள்தண்ணி, வேப்பிலை, மாவிலை எல்லாம் போட்டு மல்லிகை, சாமந்தி, கனகாம்பரம் எல்லாம் விரதம் இருந்து, தொடுத்து அலங்காரம் செஞ்சு, அம்மன் முகத்தை பூவாலேயே செஞ்சு பெரிய கரகம் காட்டுவார் எங்க தாத்தா….

 

ஆத்துல இருந்து கரகத்தைக் கட்டி தலைல சுமந்துகிட்டு அஞ்சு மைல் தொலைவு நடந்து கோவிலுக்கு வரணும். அங்கிருந்த பூக்குழில இறங்கி திருவிழாவைத் தொடங்கி வைப்பாரு. சக்திக் கரகம் நல்லபடியா எந்த வித கோளாறும் இல்லாம  நடந்தால்தான் அந்த வருடம் ஊரு நல்லாருக்கும்னு நம்பிக்கை. இதெல்லாம் சங்க காலத்துலே இருந்து தொடர்ந்து வந்ததா ஒரு எங்க வீட்டில் சொல்லுவாங்க”

 

“ஆனால் இதெல்லாம் எப்படி மாறுச்சு?இப்ப கரகாட்டம் ராத்திரி பூரா நடக்குது. அதுவும் எங்களைப் பாக்கவே விடுறதில்லையே”

 

“சக்திக் கரகம் தவிர ஆட்டக் கரகம்னு ஒன்னு இருக்கு. அது பொழுது போக்குக்காக பண்ணுறது. பகலெல்லாம் சக்தி கரகத்துல மீனாட்சி வேஷம், காளி வேஷம் எல்லாம் போட்டுட்டு பக்தியை வளர்ப்போம். 

 

அந்த காலத்தில் திருவிழாவுக்கு சனம் முழுசும் பல ஊரிலிருந்து கூடி இருக்கும். அவங்களுக்கு பொழுது போகணும் இல்லையா. உழைக்கும் தொழிலாளி உற்சாகப் படுத்திக்க ஆட்டக் கரகத்தில் பொழுதுபோக்கா கிராமியப் பாடல்கள் நையாண்டி மேளத்துக்கு ஆடுவோம். நாட்டு நடப்பு, மாமியார் மருமக சண்டை, புருஷன் பொண்டாட்டி தகராறு எல்லாம் வச்சு பகடி செய்வோம்.  ராப்பொழுது முழுசும் நடக்கும். கொஞ்ச கொஞ்சமா அந்த நையாண்டியில்  கவர்ச்சி புகுந்திருச்சு. 

 

ராத்திரி முழுசும் சேலை கட்டி ஆடிட்டு இருந்தவங்க, வசதிக்காக பாவாடை சட்டை போட்டுக்க ஆரம்பிச்சாங்க. அது அப்படியே சிறுசாயிட்டே போயிருச்சு. 

 

எங்க குடும்பத்தில் சொந்தக்காரங்க குள்ளதான் கல்யாணம் நடக்கும். எல்லாரும் ஒரே குடும்பமா வேலை செய்வோம். அதனால சம்பாரிச்சா எல்லாரும் ஒரே சமயத்தில் சம்பாரிப்போம். இல்லைன்னா ஒரேடியா பட்டினி கிடப்போம். 

 

இதெல்லாம் பொறுக்க முடியாம  வருமானத்துக்காக பக்கத்து ஊரில் எல்லாம் சாமி வேஷம் போட்டுட்டு ஆடுவேன். அதில் வேற ட்ரூப் ஆளு ஒருத்தன் என்னை சுத்தி சுத்தி வந்தான். எனக்கும் வயசுக்கோளாறு. 

 

ஆடப் போன இடத்தில் எனக்குக் காதல். பிரிக்க நெனச்ச அம்மா வீடு வெறுப்பா இருந்துச்சு. வீட்டை விட்டு அவனை நம்பி ஓடி வந்தேன். எங்க வீட்டில் என்னைத் தலை முழுகிட்டாங்க. நாங்க கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நல்லா ஊரு சுத்தினோம். கொஞ்ச நாள் கழிச்சதும்தான் தெரிஞ்சது நான் அவனுக்கு நாலாவது பொண்டாட்டின்னு. வெளியவே வர முடியாம அவன்கிட்ட சிக்கிட்டேன். அந்தாளு என்னை மறுபடியும் ஆடச் சொன்னான். ஆனால் கரகாட்டம் இல்லை கவர்ச்சி ஆட்டம். 

 

முதல்ல பேரை மாத்துனாங்க. அப்போதைக்கு பேமசா இருக்குற நடிகை பேரா வச்சாங்க.. ஒரு காலத்தில் கணுக்கால் தெரிய கண்டாங்கி சேலையைக் கட்டிட்டு கரகத்தை சுமந்த என்னை தொடை தெரிய குட்டைப் பாவாடை கட்டிட்டு ஆடச் சொன்னாங்க. ஏன் எங்காத்தா அப்பத்தா எல்லாம் புடவையை இழுத்து சுத்திட்டுத்தானே கரகம் ஆடினா? 

 

அதுவும் அந்த குட்டைப் பாவாடையை மாத்தக்கூட பாதிநேரம் மறைவிடம் கிடைக்காது. ஒரு மூலைல இடத்தைப்  சேலையை நாலு பக்கமும் ட்ரூப் ஆளுங்க பிடிச்சுக்க உடை மாத்திக்கணும், மேக் அப் போட்டுக்கணும். வீட்டு திண்ணைல கூட எங்களை உக்கார விடமாட்டாங்க. பாத்ரூம் போக கூட சரியான வசதி கிடையாது. இதுதான் எங்க நிலமை.

 

கரகாட்டம்னு பேரு ஆனா பாதி நேரம் கரகம் தலைல இருக்காது. சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடுவோம். அதுவும் ஒரு ரெஸ்டே இல்லாம ராத்திரி முழுசும் டான்ஸ் ஆடனும். 

 

ரெட்டை அர்த்த வசனம் பேசினாத்தான் சம்பளம். அதில் எவனெவனோ ரூபா நோட்டை ஜாக்கெட்டில் குத்த வருவான். அதை சிரிச்சுக்கிட்டே ஏத்துக்கணும். 

 

அப்பல்லாம் குடும்பங்க பாக்கத்தான் நாட்டுப்புறக் கலை. இப்ப குறிப்பிட்ட ஆளுங்களை சந்தோஷப் படுத்தத்தானே எங்களைக் கூப்பிடுறாங்க. கோவில் மண்டபத்தில் ஆடிட்டு இருந்த சதிராட்டம் சீரமைக்கப்பட்டு, ஆடுறவங்க கவுரவப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தால் வளர்க்கப் பட்டு உலகமெல்லாம் அரங்கம் ஏறுது. ஆனால் அம்மனுக்காக அவ திருவிழாவில்  ஆடப்பட்ட கரகாட்டம் இப்ப ரெக்கார்டு டான்ஸ் அளவுக்கு மோசமா நடத்தப்படுது. மக்கள் எங்களையும் மரியாதையோட நடத்துற காலம் சீக்கிரம் வரணும்னு அந்த ஆத்தாகிட்ட தினமும் வேண்டிட்டு இருக்கேன். 

 

இப்படித்தான் கரகத்தைக் கண்ணீரில் நனைச்சே என்னோட இளமைக் காலமும் போச்சு. ஏன் பிடிக்காம செஞ்சேன்னு கேக்கலாம். முட்டாள்த்தனத்தால சொந்தத்தை இழந்த என்னை என்னோட மூத்தாள் என்னை சொந்தத் தங்கச்சி மாதிரி பாத்துக்கிட்டா. நான் இதை விட்டு வேற எங்க போயி வாழுறது? நான் போயிட்டா அவளும் அவ குழந்தைங்களும் சாப்பாடு இல்லாம கஷ்டப்படுமே? இதெல்லாம்தான் என்னை அந்த வாழ்க்கைக்கு பழக்கப் படுத்திருச்சு. 

 

நானே என் விதியை நொந்து நடைபிணமா இருக்கேன். இதில் நான் ஆடின  டான்ஸை அசிங்கமான கோணத்தில் எடுத்து யாரோ ஒரு எச்சக்கலை வீடியோ போட்டிருக்கான். இதை எங்கப்பாரு கிட்ட ஊரு ஜனங்க காமிக்க அன்னைக்கே நெஞ்சுவலி வந்து செத்துட்டாரும்மா… “

 

புடவைத் தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு கேவினாள் காளியம்மா. “எங்கப்பாவை என் பொழைப்பே கொன்னுடுச்சேன்னு ஏற்பட்ட குற்ற உணர்வை என்னால தாங்க முடியல, ஒத்துகிட்ட டான்ஸ் எதுக்கும் வர முடியாதுன்னு என் வீட்டுக்காரனைத் திட்டிட்டு எங்க ஊருக்குப் போயிட்டேன். இனிமே இந்தத் தொழிலை செய்யக்கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டேன்”

 

சிறிது நேரம் ஜன்னலின் வழியே நிலவை வெறித்துப் பார்த்தாள் காளியம்மா. ஓவியா அவளது மடியில் படுத்து நிம்மத்தியாகத் தூங்கினாள். மகளின் நெற்றியில் மெதுவாக முத்தம் கொடுத்தாள்.

 

“அதுக்கப்பறம் அம்மாவும் பொண்ணும் வேலை தேடி இங்க வந்துட்டீங்களாக்கும். ஓ… பெரிய குடும்பத்து அம்மன் கோவிலுக்கு நீங்கதான் சக்திக் கரகம் எடுக்குறவங்கன்னு சொன்னிங்கல்ல? அவங்கதான் உங்களை இங்க அனுப்பினாங்களா?”

 

“அவ்வளவு சுலபமா எல்லாம் நடக்கல”

 

“அப்பறம்”

 

“எங்க ஊருக்குப் போனப்பத்தான் சின்னத்தம்பியைப் பார்த்தேன். அவரு அப்பாவுக்கு பெரிய வீட்டு சார்பா இறுதி மரியாதை செஞ்சுட்டுப் போக வந்திருந்தாரு.

 

அப்பத்தான் மூத்தாள் போன் போட்டு எனக்கு பதிலா எங்க பொண்ணு கண்ணாத்தாளை கூத்து கட்ட கூட்டிட்டு போயிட்டான்னு சொல்லி அழுதா. கேள்விப்பட்ட உடனே தம்பி என்னை கூத்து கட்டுற கூட்டிட்டு போயிருச்சு. 

 

அங்க நடந்ததை இப்ப நினைச்சாலும் என் வயிரே பத்திக்கிட்டு எரியுது. தான் பெத்த பொண்ணுக்கு ஓவியான்னு பேரை மாத்தி குட்டை பாவாடை போட்டு ஆட விட்டிருக்கான்மா அந்தப் பரதேசி. இந்த புத்தி கெட்டவளும் அவனுங்க சொல்லித் தந்த விரசமான வசனத்தை எல்லாம் அர்த்தமே தெரியாம ஒப்பிச்சுட்டு இருக்கா… “

 

“தம்பின்னா யாருக்கா?”

 

“ஓ உனக்குத் தெரியாதுல்ல, பெரிய வீட்டு மேனேஜர்”

 

“அவரு பேரு என்ன?” ஏனோ நெஞ்சம்  படபடத்தது செம்பருத்திக்கு.

 

“அவினாஷ்” ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் தலையில் ஒருசேர கொட்டியதைப் போன்றதொரு குளிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். 

 

அவினாஷ் காளியம்மாவின் கூற்றுப்படி அடித்து துவம்சம் செய்திருந்தான் அங்கிருந்தவர்களை. 

 

“தம்பி இனி அங்க போக எனக்கு விருப்பமில்லை. வேற எங்கேயாவது கூலி வேலை வாங்கித் தாங்க பொழைச்சுக்குறோம்”

 

“நீங்க சரி, இந்தப் பொண்ணு கண்ணாத்தா… “

 

“நானும் அம்மா கூட வரேண்ணா. தினமும் அப்பா நிறைய இடத்துல டான்சுக்கு கூட்டிட்டுப் போறாங்க. அங்க மாமா எல்லாம் கண்ட இடத்தில் தொடுறாங்க. எனக்கு பிடிக்கல” என்றாள் அந்தக் குழந்தை. 

 

“இடியட்…  பிள்ளைக்கறி தின்கிற பேய்ங்க” என்ற அவினாஷின் கைகள் ஸிடியரிங்கை இறுக்கின. 

 

“வீடியோ எல்லாம் பிடிச்சு போட்டிருக்காங்க தம்பி. எங்கப்பாவைக் கொன்ன இதெல்லாம் என் புள்ளையை என்ன செய்யுமோ. எங்களை உயிரோட கொல்லுறாங்க தம்பி”

 

“உங்களுக்கு இப்ப என்ன வேணும்?”

 

“மாடு மாதிரி நான் உழைக்கத் தயார். ஆனா ராத்திரியானா எவன் கை எங்க படுமோன்னு பயம் இல்லாம தூங்கி எந்திரிக்கணும். எவன் இந்த வீடியோ பார்த்தானோன்னு வெலவெலத்து போகாம நிமிர்ந்து நடக்கணும்”

 

யோசித்தவன் “உங்களை ஒரு இடத்துக்கு அனுப்புறேன். இந்த  வீடியோ கவலை எல்லாம் படாதீங்க. உங்களுக்கு நிக்க நிழல் மட்டும் போதும்னு தோணலாம். ஆனா உங்க பொண்ணுக்கு இதுக்கு மேல கண்டிப்பா படிப்புன்னு ஒண்ணு வேணும்.கண்ணாத்தா படிச்சு முடிக்கிற வரை அங்கேயே இருங்க”

 

“கண்ணாத்தா இல்லைண்ணே ஓவியா. எனக்கு அந்த பேருதான் பிடிச்சிருக்கு”என்றாள் அவர்கள் சூழ்நிலை புரியாமல்.

 

“சரி ஓவியா… புது ஊர்ல நல்ல பிள்ளையா படிப்பியாம். உன் அம்மா நிஜம்மாவே தலை நிமிர்ந்து நடக்கணும்”

 

அவினாஷ் சொன்னதும் கண்கள் கலங்கிவிட்டது காளியம்மாவுக்கு.. கண்ணாத்தாவின் அம்மா தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். ஆனால் அவள்?

 

“கண்ணாத்தா, உங்கம்மா வேணும்னு கேக்க மாட்டியே தங்கம்” என்றாள் மகளிடம். 

 

“நீதானே என் அம்மா. அப்படித்தான் நெனச்சுட்டு இருந்தேன். நீ என் அம்மா இல்லையாம்மா?” என்று கேட்ட கண்ணாத்தா என்ற ஓவியாவைக் கட்டி உச்சி முகர்ந்தாள். 

 

“ஆமாண்டி… நான்தான் கண்ணு உன் அம்மா”

 

பிள்ளை பெற்றுக் கொண்டால் ஆடி சம்பாரிக்க முடியாது என்று வலுக்கட்டாயமாக தடுத்திருந்தது இந்தக் குழந்தைக்கு எப்படி தெரியப் போகிறது.

 

மூத்தாளிடம் தொலைபேசியில் அழைத்து “அக்கா… நம்ம பொண்ணை இவன் கிட்ட வளக்க முடியாது. நான் காப்பாத்தி வளக்குறேன்கா. என்னை நம்பி விடுறியா?”

 

“இங்க பாருடி காளி… அவளை நான் பெத்ததோட சரி. நீதான் பத்து வருஷமா என் குடும்பத்துக்கே சோறு போட்டிருக்க. இனிமே அவ உன் மகள்” 

 

“நீ… “

 

“மத்த மூணும் ஆம்பளப் புள்ளைங்கடி. அவனுங்க வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டானுங்கனா நான் சமாளிச்சுடுவேன். இந்த கண்ணாத்தாவைத்தான் என்னால பாதுகாக்க முடியல. என்னை விட நீ நல்லாவே வளப்ப”

 

வண்டியை அப்படியே ராப்பகலாக ஓட்டிக் கொண்டு கொச்சியில் வந்து இறக்கிவிட்டான். மறுநாள் என்ன செய்தானோ தெரியவில்லை பெரிய வீட்டிலிருந்து காரில் வந்து அழைத்து சென்றார்கள். அங்கு சென்றதும் அபிராமின் பெண்கள் பழக்கம் தெரிய வர, அவனை அழைத்து தனது கவலையைப் பகிர்ந்தார். 

 

“அபிராம் வயசுக்கோளாறு காரணமா தப்பு செஞ்சிருக்கலாம். ஆனா பிள்ளைக்கறி கேக்குறவனில்லை. நீங்க அந்த வீட்டில் பாதுகாப்பா இருக்கலாம்” என்று உறுதியளித்தான். 

“தம்பி சொன்னது சரிதான். அய்யாகிட்ட இந்த வீட்டில் இருக்கும்போது இருக்குற நிம்மதியும் பாதுகாப்பும் எனக்கு வேற எங்கேயும் கிடைச்சதில்லை பாப்பா. அதுக்காகவே தினமும் அவினாஷ் தம்பிக்கு நன்றி சொல்லிக்கிறேன்”

என்னவோ தெரியவில்லை காளியம்மா கதையினை முடித்தபொழுது செம்பருத்திக்கு ராஜாவின் சிம்பொனி இசையில் இதயம் பாடியது. 

 

“இப்ப அவினாஷ் எங்க?”

 

“தம்பி ஊரு சுத்திக்கிட்டே இருப்பாரு. ரெண்டு வீட்டுக்கும் அவருதான் பாலம். ஆனால் நம்ம அய்யாவுக்கு அவினாஷ் தம்பியைப் பிடிக்கவே பிடிக்காது. அதனால இந்த வீட்டுக்கு வரமாட்டார்”

 

“இந்த வீட்டுக்கு வந்ததே இல்லையா”

 

“அப்படி சொல்ல முடியாது. ஒரு நாள் இக்கட்டான சமயத்துல அவரைத்தான் கூப்பிட்டோம். அதை பத்தி இன்னொரு நாள் பேசலாம்”

 

“சரி, கொச்சிக்கு வருவாரா?”

 

“மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்துடுவார். அதுவும் சின்னையா கணக்கு வழக்கு பாக்க வரும்போது கண்டிப்பா அவினாஷ் தம்பியும் வந்துடுவார்”

 

“சின்னையாவா? அது யாரு?”

 

“ஆதவன் அய்யா… நம்ம அய்யாவோட தம்பி”

 

“நம்ம அபிராம் அய்யா தம்பிங்களா? அப்பறம் ஏன் இங்க வர்றதில்லை” 

 

“பெரியய்யாவுக்கு அடுத்து  யாருக்கு பட்டம் கட்டுறதுன்னு பிரச்சனையாம். தனக்குத்தான் பட்டம் கட்டணும்னு நம்ம அய்யா பிடிவாதமா நிக்கிறார் ”

 

“இதில் என்ன பிரச்சனை? மூத்தவருக்குத்தானே பட்டம்”

 

“அட மூத்தவரா இருந்தாலும் ரெண்டு பேரும் வேற வேற மனைவிக்குப் பிறந்தவங்கள்ல. அதுவும் இளையவர் முறைப்படி கல்யாணம் செஞ்சு வச்ச பொண்ணுக்குப் பிறந்தவர். நம்ம அய்யாவோட அம்மா மந்தாகினியம்மா உயிரோட இருந்த வரைக்கும் இவருக்குத்தான் அடுத்து வாரிசுப் பட்டம் கட்டணும்னு போராடிட்டு இருந்தாங்க. பெரிய இடம் இல்லையா ஏகப்பட்ட சிக்கல் இருக்கும். நமக்கு தெரிஞ்சது ஒன்னு ரெண்டு இருந்தால் அதிகம்”

 

ஓ இப்போது கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைத்துவிட்டது செம்பருத்திக்கு. ஆனால் அவளுக்கு வெகு முக்கியமான விடை ஒன்று அவினாஷ் பற்றி தெரிய வேண்டுமே!

 

“சின்னையா கணக்கு பாப்பாங்களா? அது எப்பக்கா?” 

 

“தெரியலையே… அது எதுக்கு உனக்கு?”

 

“அவரு கிட்ட காமிக்கிறதுக்கு முன்னாடி கணக்கெல்லாம் நானும் எழுதணும், ஏற்கனவே இருக்கிறதை சரி பார்க்கணும்”

 

“ஆமாமில்லே… பாலனுக்கு தான் அந்த விவரமெல்லாம் தெரியும்”

 

“நான் அவருகிட்டயே கேட்டுக்குறேன்க்கா” 

 

மறுபடியும் ஒரு தரமாவது பார்க்க மாட்டோமா என்று எண்ணி ஏங்கிய அவினாஷ் இங்குதான் இருக்கிறானா? அதுவும் கைக்கெட்டும் தொலைவிலா?

 

அனைவரும் அன்று நன்றாக உறங்க செம்பருத்தியின் கண் மலர் மூட முடியாமல் தவித்தது. அவளது கை விரல்களில் நகங்கள் எல்லாம் பற்களாலேயே கடித்து சீராக்கப்பட்டன. 

3 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15”

  1. தெளிவா குழப்பறீங்க ஆத்தரே… தெளிவா குழப்பறீங்க… அபிராமா? அவிநாஷா? யார் செம்பருத்தியின் ஹீரோ? அடுத்த எபி ps! Overall nice episode.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27

அத்தியாயம் – 27 அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும்  பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அவனின் பயம், அச்சம் எல்லாம் ஓட ஓட

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 16தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 16

அத்தியாயம் – 16   விடியலில் எழுந்த செம்பருத்தி அவளது டைரியில் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் அவற்றை கடந்த விதம் எல்லாம் அதில் பதிக்கப் பட்டிருந்தன.    பின் ஒரு காலத்தில் நான் சுயசரிதை எழுதினா

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 17தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 17

அத்தியாயம் – 17   “பேரே தெரியாம வேலைக்கு சேர்ந்தவளே! இன்னைக்கு நான் பிரீ, உனக்கு நேரமிருந்தா உங்கய்யா கதையை, பெரிய வீட்டு ஹிஸ்டரியைச் சொல்லேன் கேட்போம்” ஜலப்பிரியா அன்று பெரிய குடும்பத்தைப் பற்றிக் கேட்டதும்    “நம்ம செய்யுற தப்பெல்லாம்