அத்தியாயம் – 26
நல்ல முடிவாய் எடுப்பானா ஸாம்?
அடர்ந்து பரந்து நிழல் பரப்பியிருந்த பெரிய சவுக்கு மரத்தின் கீழே ஜமுக்காளம் பரப்பி உணவுப் பொருட்களைக் கடை பரப்பி சுதனின் கர்ப்பிணி மனைவி காவல் இருக்க மீதி அனைவரும் கடலில் இறங்கியிருக்க அருண்யாவும் போய் சுதனின் மனைவி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
“நீங்களும் போங்கோ அருணி… நான் இருக்கிறன்… பிரச்சினை இல்லை…”
“இல்லக்கா… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு இறங்கிறன். திரும்ப கடலுக்க மயங்கினால் பெரிய சீனாகிடும்…”
சிரித்துக்கொண்டே சொன்னவளை வாஞ்சையாகப் பார்த்தாள். கவி, ஸாம், அருணி பற்றி கணவன் கூறி அறிந்திருந்தவள் முதன்முதலாக இவளைப் பார்த்தாலும் ஏதோ பல காலம் பழகிய உணர்வு.
“கவி… எப்படி இருக்கிறா…? யாதவ் பற்றி ஏதும் தகவல் வந்ததா?”
“இல்லைக்கா… ஆனால் கவிக்கா அத்தான் திரும்ப வருவார் என்று ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறா.”
“ஹும்… காலம் தான் பதில் சொல்ல வேணும்… ஆனால் காணாமல் போன யாரும் திரும்ப வந்ததாக சரித்திரம் இல்லையே… எல்லாம் விதி… வேறு என்ன சொல்ல முடியும்…”
உண்மையாக வருந்தியபடி அவளுரைக்க இவள் மௌனமாய் கடலை வெறித்தாள்.
“அதுசரி… நீங்க எந்த நாடு அருணி? அக்காவை நினைச்சுக் கொண்டு நீங்களும் எவ்வளவு நாள் தான் இப்பிடியே தனியாக இருப்பது… கல்யாணம் பண்ணிற ஐடியாவே இல்லையா? முப்பது வயசாகுதே…”
அருண்யா வெளிநாட்டில் வசிப்பதாக சந்திரஹாசனும் கவின்யாவும் வெளியே பரப்பியிருந்த வதந்தியை நம்பித்தான் அவள் அவ்வாறு கேட்டது. இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைத்தவள் தட்டுத்தடுமாறி வாயில் வந்ததைக் கூறி சமாளித்தாள்.
“நான் இந்தியால அக்கா…”
“ஓ… என்ர அக்காவும் இந்தியாலதான்… … நீங்க எங்க…?”
“நான் திருச்சில…”
தெரிந்த பெயரைச் சொல்லி விட்டு அவளிடமிருந்து தப்பினால் போதும் என்ற மனநிலை தோன்றி விட,
“அக்கா… நானும் கடலடிக்கு போய்ட்டு வாறன்…”
சொல்லிக்கொண்டே கடலில் நின்று விளையாடிக் கொண்டிருந்த மற்ற பெண்கள் நின்ற இடத்தைச் சென்றடைந்தாள்.
ஆண்கள் கொஞ்சம் ஆழமான பகுதியில் நீந்திக் கொண்டிருக்க பெண்கள் இடுப்பளவு ஆழத்தில் குழந்தைகளை டயரில் மிதக்க விட்டு விட்டு தப்புத் தண்ணீரில் நின்று பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். நீச்சல் தெரிந்த ஸாமின் அண்ணி மட்டும் கொஞ்ச தூரம் அங்குமிங்குமாக நீந்திக் கொண்டிருந்தார்.
அவர் நீந்துவதை ஆசையாகப் பார்த்த அருண்யா பழைய குணம் தலை தூக்க அவரைத் தனக்கும் கற்றுத் தருமாறு கேட்டாள்.
நாலைந்து தரம் நீரில் மூழ்கி நன்றாக தண்ணீர் குடித்து கையைக் காலை அடித்துக் கொண்டு நீந்துகிறேன் பேர்வழி என்று அண்ணியாரை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தாள்.
நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அருணியில் ஒரு கண் வைத்திருந்த ஸாம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தானிருந்தான். இவள் வேண்டுமென்றே தான் தனக்குள் ஒடுங்குகிறாள். தன்னை மறந்து இயல்பாய் பழகுகிறாள் இங்கே. அதனால் சூழல் மாறினால் இவளை முற்றாகவே பழைய அருண்யாவாக மாற்றி விடலாம் என்ற இவன் நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது.
பெண்கள், குழந்தைகள் கொஞ்ச நேரம் கடலில் விளையாடி விட்டுப் பின்னர் கரையேறி அங்கிருந்த நல்ல தண்ணீர் குழாயில் மீள ஒரு தரம் குளித்து உடை மாற்றும் இடத்திற்குச் சென்று ஒருவர் மாறி ஒருவர் பிள்ளைகளை கவனிக்க உடை மாற்றி விட்டு வந்தார்கள்.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி பனங்கூடலின் நடுவே மூன்று பெரிய கல்லு வைத்து அடுப்பு மூட்டி கொண்டுவந்திருந்த பெரிய பானையை அடுப்பிலே வைத்து வருகின்ற வழியில் நவாந்துறை மீன் சந்தையில் சுத்தம் செய்து வாங்கி வந்திருந்த நண்டு, கணவாய், இறால், நெத்தலி அனைத்தையும் ஆயத்தமாக எடுத்து வைத்து ஒடியல் கூழ் காய்ச்ச ஆரம்பித்தார்கள்.
சுதர்சனின் மனைவி தலைமை வகிக்க மீதிப் பேர் சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்தே மரவள்ளி கிழங்கு, பயிற்றங்காய் போன்ற மரக்கறிகளை கழுவி வெட்டிக் கொண்டு வந்திருந்த படியால் அங்கு வேலை இலகுவாக இருந்தது.
இடையில் கரையொதுங்கிய ஸாமின் அண்ணா அங்கே கள்ளிறக்க பனையேறிக் கொண்டிருந்தவனை கண்டு விட்டு அவனிடம் பனங் குருத்தோலை கொஞ்சம் வெட்டித் தரச் சொல்லி சிறிது பணம் கொடுத்தார். அவன் வெட்டிக் கீழே தள்ளிய பனையோலைகளைக் கொண்டு வந்து பெண்களிடம் கொடுத்து தொன்னை செய்யுமாறு கூறி விட்டு அவர் திரும்ப கடலுக்குப் போய் விட்டார்.
இந்தக் காலத்துப் பெண்களுக்கு எங்கே தொன்னை பற்றித் தெரிகிறது. ஒரு மாதிரி யூடியுப்பிலும் கூகிளிலும் தேடிப் பிடித்து தொன்னை செய்து வைத்தார்கள்.
கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் தட்டுகளில் சிறுவர்களுக்கென்று வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவைப் பரிமாறி பசியாற்றி விட்டு தூங்கி வழிந்தவர்களை ஜமுக்காளத்தில் படுக்க வைத்தார்கள். இங்கே கூழும் கொதித்து இறக்கும் பருவம் வரப் போவதை அறிந்ததும் ஆண்களை கரையேறச் சொல்லி சாப்பிட வரச் சொல்லி சைகை செய்தார்கள்.
ஸாமின் அண்ணா, சுதர்சன், சுதன் மூவரும் கரைக்குச் செல்ல,
“எல்லாரும் ஒரேயடியாக போய்க் குளிக்கேலாது மச்சான்… நீங்கள் முதல் போங்கோ… நானும் ஸாமும் கொஞ்சத்தில வாறம்…”
என்று கூறி ஸாமைத் தன்னோடு நிறுத்திக் கொண்டான் நிரோஜன். மற்றவர்களும் சரியென்று கிளம்பி விட நண்பனைக் கேள்வியாய் ஏறிட்டான் ஸாம்.
“உன்னோட ஒரு விசயம் கதைக்கோணும் மச்சான்…”
“புரியுது… சொல்லுடா…”
“கவியப் போய் பாத்தியாடா?”
“ஓமடா… எனக்கு வீட்ட வந்ததும் சின்னண்ணா சொல்லித் தான் யாதவ் விசயம் தெரியும்… வந்ததும் வராததுமா உங்களை கூடப் பார்க்க வராமல் கவியைப் பார்க்கத் தானடா ஓடினான்…
என்னை கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டனான்… மாட்டனே என்டிட்டாள். உயிருள்ள வரைக்கும் யாதவுக்காகக் காத்திருப்பாளாம்… அதுக்கு மேல நான் எப்பிடிடா வற்புறுத்திக் கேட்கேலும்…”
“ஹூம்… விளங்குதுடா… எப்பிடி வாழ்ந்த குடும்பம் இண்டைக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளையளும் இப்பிடி தனிமரமாக நிக்குதுகள்… காணாமல் போன யார் திரும்ப வந்திருக்கிறார்கள்… அவங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று உண்மை தெரிஞ்சும் காலம் பூரா இப்பிடியே இலவு காத்த கிளியாய் காத்திருக்க வேண்டியதுதான்.
சண்டை நேரம் வன்னிக்க போய் மாட்டுப் பட்ட பிறகு அருணியும் இந்தியா போய்ட்டாளாம். நேரில அந்த யுத்தக் கொடுமைகளை பார்த்தவள், தமக்கையிட வாழ்வும் இப்பிடி ஆச்சே என்று அவளும் கலியாணம் காட்சி இல்லாமல் இப்பிடியே இருக்கிறாள். இப்பதான் திரும்ப வந்திருக்கிறாள் போல.
இதுகளை இப்பிடி பார்த்த கவலையிலயே தாய் மனுசிக்கு கைகால் இழுத்து படுத்த படுக்கையில கிடக்கிறா. தகப்பன்ட காலமும் முடிய தனியாக இருந்து இதுகள் ரெண்டும் என்ன செய்யுங்களடா…”
“ஹூம்… எல்லாம் தலை விதிடா… எனக்கும் அதே கவலை தான்…”
“மச்சான்… ஒண்டு சொன்னால் தப்பாக நினைக்கக் கூடாதுடா… பேசாமல் நீயேன் அருண்யாவைக் கட்டக் கூடாது…?”
நிரோஜன் பட்டென்று கேட்க பொட்டில் அறைந்தது போல் உறைத்தது ஸாமிற்கு. ‘அருண்யாவின் நிலை தெரிந்தும் நான் ஏன் இதை யோசிக்காமல் போய் விட்டேன்? என்னை விடக் கவனமாக யாரால் அவளைப் பார்த்துக் கொள்ள முடியும்?’ என யோசித்து தனக்குள்ளேயே மறுகினான் ஸாம்.
“குறை நினைக்காதை மச்சான்… மனசில பட்டதைச் சொன்னன். அந்த காலமிருந்தே ‘ஸேர் ஸேர்’ என்று உன்னில அவளுக்கு நல்ல பாசம் இருக்குடா… அந்த பாசம் காதலா மாற எவ்வளவு நாள் எடுக்கும்? கல்யாணம் பண்ணிக் கொண்டால் எல்லாம் சரியாகிடும். நாங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளையள் ரெண்டும் இப்படி ஆதரவில்லாமல் தனிச்சு நிக்கிறதைப் பார்க்க சகிக்கலடா… யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு மச்சான். சரி.. சரி… வாடா பசில சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குது… கெதியா கூழ் குடிக்கப் போவம்…”
நிரோஜன் சொன்னதையே அசை போட்டபடி அவனோடு சேர்ந்து கரையேறிக் குளித்து விட்டு சாப்பிட சென்று அமர்ந்தார்கள். ஆனால் மனசோ நண்பன் சொன்ன விசயத்தையே சுற்றிச் சுற்றி வந்தது.
தொன்னையிலே அல்லது பிலாவிலே யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ். தண்ணீரில் அவ்வளவு நேரமும் விளையாடிட்டு வந்த அந்த மதிய நேரத்து பசிக்கு அமிர்தமாய் இருந்தது. கொண்டு போயிருந்த பிளாஸ்டிக் கரண்டிகளால் ஆசையாய் அள்ளிப் பருகினார்கள். நடுவிலே பானையை வைத்து அந்த வெண் மணல் மிருதுவாய் பாதங்களில் உறுத்த சுற்றியமர்ந்திருந்து கதை பேசிச் சிரித்துக்கொண்டே கூழ் குடிக்கும் சுகம்….ஆஹா.. அனுபவித்துப் பார்த்தவர்களுக்கே அதன் பேரின்பம் புரியும்.
அனைவரும் உண்டு முடித்ததும் அந்த இடத்தைச் சுத்தம் பண்ணி எறிய வேண்டிய பொருட்களை பெரிய பை ஒன்றில் போட்டுக் கட்டி அங்கே ஓரமாய் வைத்தார்கள். கொண்டு வந்திருந்த மீதிப் பொருட்களைச் சரி பார்த்து வண்டியில் ஏற்றி விட்டு கொஞ்ச நேரம் அந்த வெண் மணல் பூமியில் பெரியவர், சிறியவர், ஆண், பெண் பேதமின்றி பந்தடித்து விளையாடினார்கள்.
உண்ட மயக்கம், நீந்திய களைப்பு தூக்கம் கண்களைச் சொருக அனைவரும் பேருந்தில் ஏறி அந்த நீலக் கடலையும் வெண் மணற் கடற்கரையையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
காலையில் வந்த ஆட்டபாட்டங்கள் எதுவுமின்றி அனைவரும் இருக்கைகளில் சுருண்டிருக்க வண்டியில் இதமாய் ஒலித்த இளையராஜாவுடன் யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினார்கள்.
இடையில் கண் முழித்த வால் ஒன்று “அம்மா ரியோல ஐஸ்கிரீம்…”
ஞாபகப்படுத்தவும் நல்லூர் வரவும் சரியாக இருந்தது. எல்லோரும் உற்சாகமாக வண்டியை விட்டு இறங்கி வெளியில் நின்றே நல்லூர்க் கந்தனுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு கோயிலின் பின் வீதியில் இருந்த ரியோ ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றார்கள்.
ஆளாளுக்கு விரும்பியதை கேட்டு வாங்கி ரசித்து உண்டு திரும்ப வண்டியில் ஏறியவர்களுக்கு பழைய உற்சாகம் திரும்பியிருந்தது. ரேடியோவில் இலங்கைப் பாடல்கள் சிலவற்றை சத்தமாக ஒலிக்க விட்டார்கள்.
“சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்குத் தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை இன்னும் படிக்க என்று கெடாதே (2)
ஊர் சுழலும் பொடியள் எல்லாம் கன்னியரைக்
கண்டதும் கண்ணடிக்கும் காலமெல்லவோ
சின்ன மாமியே….
ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே (2)
அடக்கமில்லாப் பெண்ணு என்றா நினைத்து விட்டாய் என் மகளை
இடுப்பொடிய தந்திடுவேனே (2)
சின்ன மாமியே….
ஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே
பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே (2)
ஏனணை மாமி அவளெனக்கு தெவிட்டாதவள் எனக்கு
பாரணை மாமி கட்டுறன் தாலியை
சின்ன மாமியே….”
அடுத்து இன்னொரு இலங்கைப் பாடல்.
“யாழ்ப்பாணம் போக ரெடியா
மாம்பழம் தின்ன ஆசையா
வானத்திலும் பறந்திடலாம்
வாகனத்தில் சென்றிடலாம்
யாழ்ப்பாணம் போக ரெடியா
வல்வெட்டித்துறை, முல்லைத்தீவு, சங்கானை
நாவாந்துறை, பாசையூர், குருநகரிலும்
சுவையான மீன் உண்டு
திராட்சை, நெல்லி ரசம் உண்டு
தோடை கட்டி வசவிளானில்
ஒடியல் புட்டு, குட்டான், கூழ்
உருப்படிகள் உடன் வருமே
யாழ்ப்பாணம் போக ரெடியா
பருத்தித்துறை வடை தானே கடித்துச்
சுவைக்க ருசியாமே
ஒட்டு மா, விளாங்காய் நன்று மோதகம், பொரிவிளாங்காய்
அரியதரம், பனம் பழமும் பயத்தம் பணியாரங்களும்
நெல்லியடியும் தெல்லிப்பளையும் நெல்லுக்குத் தானே பெயர் பெற்றது
யாழ்ப்பாணம் போக ரெடியா
அறிந்தவன் அறிவானையா அரியாலை பினாட்டையும்
கூடப் பிடிக்கும் சுருட்டிலைக்கும் சிறுப்பிட்டி, கோண்டாவில்
கைக்குத்தல் அரிசிக்கு மிளகாய்க்கு உடுப்பிட்டி
குதிரை பார்க்க நெடுந்தீவு, தவில் முழங்குவது இணுவிலில்
யாழ்ப்பாணம் போக ரெடியா”
எழுபது, எண்பதுகளில் பட்டி தொட்டியெங்கும் சக்கை போட்ட பொப் இசை புகழ் சிலோன் மனோகரின் அந்தக் காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய கந்தப்பு ஜெயந்தனின் “வேம்படியில் என் குருவி ஏ/எல் படிச்சது…” வரை எதையும் விட்டு வைக்காமல் கைதட்டி ஆடிக் கொண்டே பயணத்தை இனிதே தொடர்ந்தார்கள்.
இங்கே சந்திரஹாசன் வீட்டில் மாலை வேலை முடித்து வந்த கவி, வீட்டுக்கு வந்தவுடனேயே ஓடிச் சென்று தாயைக் கவனித்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தாள்.
“அருணி எங்கே?”
என்று குழறலாய்க் கேட்டவருக்கு, அவள் ஸாமுடன் சுற்றுலா சென்றிருப்பதைச் சொல்லவும் அவர் குழறலாய் மறுபடியும் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
அப்போது அங்கே வந்த சந்திரஹாஸன், “இங்கே பாரும் தெய்வம்…! இனிமேலாவது உம்மட இன மத வெறியைத் தூக்கி தூரப் போடும். இப்ப எங்களுக்கு முக்கியம் அருண் கொஞ்சமாவது பழையபடி மாறுவது தான் சரியா? அதனால அருண் திரும்பி வந்ததும் அவளிட்ட ஏதாவது இல்லாதது பொல்லாததைச் சொல்லி அவளிட கொஞ்ச நஞ்ச சந்தோசத்தையும் பறிச்சிடாதையும்.”
கூறி விட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தார். பாவம் தெய்வநாயகி. தெளிவாகப் பேச முடியாமல் தான் எண்ணுவதையும் சொல்ல முடியாமல் மௌனமாய் கண்ணீர் வடித்தார்.
அவரின் குழறல் பேச்சுகளை அருணி மட்டும்தான் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு எப்போதும் சொல்வாள். இப்போது அருணி வெளியே போனது தனக்கு சந்தோசம் என்று தான் அவர் சொல்ல வந்ததே. இன்னமுமே மனைவியின் மீது சிறு கோபத்தில் இருக்கும் சந்திரஹாஸன் அதைப் புரிந்து கொள்ளாமல் பேசி விட்டுச் சென்று விட்டார்.
கவி குளித்து உடை மாற்றி தனக்கும் தந்தைக்குமாய் தேநீர் ஊற்றி எடுத்துக் கொண்டு போய் அவருக்கும் கொடுத்து விட்டு தானும் எதிரில் அமர்ந்தாள்.
“அப்பா… உங்களிட்ட ஒரு விசயம் கதைக்க வேணும்…”
“என்னம்மா… சொல்லு…”
“அருணைக் கவனிச்சிங்களாப்பா…? ஸாம் வந்ததிலிருந்து ஆளே மாறிட்டா… வாய் ஓயாமல் ஸேர்… ஸேர்… என்று ஒரே ஸாம் புராணம் தான்… இவ்வளவு வருசத்துக்குப் பிறகு இப்ப தானப்பா அவ சிரிச்சுப் பாக்கிறன்…. ஸாம் கேட்ட என்றவுடன இப்ப ட்ரிப்க்கு வேற போய்ட்டாளேப்பா…”
“ஓமம்மா… நானும் கவனிச்சுக் கொண்டு தானிருக்கிறன்… பார்க்கவே மனசுக்கு பெரிய சந்தோசமாவும் நிம்மதியாவும் கிடக்கு… ஸாம் திரும்ப போனதும் என்ன செய்யப் போறாளோ என்று யோசினையாவும் கிடக்கும்மா…”
“அதுதான்பா என்ர கவலையும்.
அதுதான் நான் ஒரு விசயம் யோசிச்சன்…”
“என்னம்மா.. சொல்லு…”
“ஸாமை அருணியைக் கட்டச் சொல்லி கேட்டுப் பார்ப்பமா…? ஸாமுக்கு அருணிட விசயம் தெரியும்… எனக்கென்டா ஸாம் ஒராளால தான் அவளைப் புரிஞ்சு நடந்து அவளைப் பழையபடி மாத்தேலும் என்று தோணுதுப்பா…”
“நீ சொல்லுறது சரி தான்மா… ஆனால் ஸாம் ஒத்துக் கொள்ள வேணுமே… அதை விட அருணி ஓமெண்டோணுமே…”
“ஸாமோட முதல்ல கதைச்சுப் பார்ப்பம் அப்பா… அவர் ஓகே என்றால் அருணிட்ட சொல்லி புரிய வைப்பம்… இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தானப்பா இப்பிடியே இருப்பாள்…”
“அதுதான் என்ர கவலையும்… உன்ர வாழ்க்கை தான் இப்பிடி ஆச்சு என்று பார்த்தால் உன்ர வாழ்க்கையைத் தேடிப் போய் தன்ர வாழ்க்கையையும் இழந்து போய் வந்து நிக்கிறாள்… எல்லாம் விதி… கடவுள் இனியெண்டாலும் ஒரு வழியைக் காட்டினார் என்றால் புண்ணியம்…”
“நான் நாளைக்கே ஸாமோட கதைச்சுப் பார்க்கிறனப்பா… மிச்சம் கடவுள் விட்ட வழி…”
சொல்லி விட்டு குடித்து முடித்த இருவரது தேநீர் கோப்பைகளையும் கொண்டு போய்க் கழுவி வைத்தவள் முதல் வேலையாக ஸாமிற்கு நாளை மதிய இடைவேளையின் போது தன்னை வந்த சந்திக்குமாறு முக்கிய விடயமொன்று சம்பந்தமாக கதைக்க வேண்டும் என்று ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள்.
அன்றிரவு திரும்பிய அருண்யா முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க உற்சாகமாக இருந்தாள். சுற்றுலாவில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வளவளத்துக் கொண்டே இரவுணவை முடித்தவள் அன்று தான் பத்து வருடங்களுக்கு பிறகு கொஞ்சமேனும் மகிழ்வாய் உறங்கினாள் எனலாம். அவள் ஸாம் புராணம் பாடத் தவறவில்லை என்பதையும் தமக்கையும் தந்தையும் குறித்துக் கொண்டனர். தாங்கள் மாலையில் எடுத்த முடிவு சரி தான் என்று விழிகளாலேயே சொல்லிக் கொண்டவர்கள், அவர்களும் அன்றைக்குத் தான் நீண்ட காலத்தின் பின்னர் ஒரு நம்பிக்கையோடு உறங்கச் சென்றார்கள்.
அருண்யா வாழ்வில் ஸாம் ஒளியேற்றுவானா?