Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 25’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 25’

அத்தியாயம் – 25

ஸாமின் புது முடிவு என்ன?

 

அந்த ஞாயிற்றுக்கிழமையும் அழகாக விடிந்தது. அதிகாலையில் எழுந்தே பரபரப்பாக தயாரான அருண்யாவை சந்திரஹாசனும் கவின்யாவும் மகிழ்ச்சியாகப் பார்த்தனர்.

 

 

ஒன்பது வருடங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தவள் இப்போது தன் அஞ்ஞாதவாசம் கழித்து வெளியே வர சம்மதித்து இருப்பது என்பது சும்மாவா

 

 

முதல் நாள் இரவே தன் கையாலேயே தட்ட வடையும், முறுக்கும், மில்க் டொபியும் செய்து உரியவாறு பார்சல் செய்து வைத்து விட்டாள். அதோடு சர்பத்தும் செய்து குளிர்பதன பெட்டியில் பதப்படுத்தியிருந்தவள் ஸாமிடம் குளிர் போகாமல் காக்கும் ஐஸ் பெட்டிகள் கொண்டு வரச் சொல்லி இருந்தாள்.

 

 

காலை ஒன்பது மணியளவில் வான் வந்து கோர்ன் அடிக்க உணவுப் பொருட்களை ஏற்றி விட்டு தாய், தகப்பனிடம் விடைபெற்றுக் கொண்டு இவளும் ஏறி அமர்ந்து கொண்டாள். 

 

 

எல்லோரது மனைவி, பிள்ளைகளும் வந்திருக்க அங்கே கலகலப்புக்கு பஞ்சமில்லை. பாட்டும் கூத்தும் கேலியுமாய் அந்த ஒன்றரை மணி நேரப் பிரயாணம் மிக அற்புதமாய் சென்றது. 

 

 

யன்னல் கரையோரமாக அமர்ந்து கொண்ட அருண்யாவோ இவர்கள் கேலிகளுக்குக் காது கொடுத்துக் கொண்டிருந்தாலும் வெளியே பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தாள்.

 

 

பத்து வருட மாற்றம் என்பது இலேசானது இல்லையே. அதுவும் நீண்ட கொடிய யுத்தத்தின் பின்னர் வந்த மாற்றம். புது இடத்திற்கு பிரயாணிக்கும் சிறு குழந்தையாய் யன்னல் கண்ணாடியை ஒதுக்கி விட்டு மெல்லிய இளங்காற்று முகத்திலே மோதி முடியைக் கலைக்க ஆனந்தமாய் அதை ரசித்துக் கொண்டு வெளியே வாய் பார்த்துக்கொண்டு வந்தாள். 

 

 

மினிபஸ்ஸின் வாயிலால் ஏறியவுடன் இருந்த முன்னிருக்கையில் சுதர்சனின் மனைவி பக்கத்தில் அருண்யா அமர்ந்திருக்க ஓட்டுனரின் பக்கத்து இருக்கையில் உள் புறம் எல்லோரையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ஸாம். ஸாமின் பக்கத்தில் நிரோஜன் இருக்க, சுதனும் சுதர்சனும் நின்று கொண்டிருந்தார்கள். பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தாங்கள் விரும்பியபடி பிடித்தவர்கள் பக்கத்தில் இருந்து அரட்டையில் ஈடுபட்டிருந்தார்கள். 

 

 

ஸாம் அருண்யாவைக் கண்காணிக்க என்றே அந்த இருக்கையில் இருந்தவன் அடிக்கொரு தரம் அவள் முகபாவனைகளை கவனிக்கத் தவறவில்லை. 

 

 

சந்திரஹாசன் மகள் இந்தியாவில் படிப்பதாகவும் பின்னர் அங்கேயே வேலை பார்ப்பதாகவும் வெளியே சொல்லி வைத்திருந்தார். எந்த தகப்பனால் தான் தன் மகள் மானபங்கப் படுத்தப்பட்டு விட்டதையும் அதன் பாதிப்பாய் வீட்டிலே ஒடுங்கி விட்டதையும் வெளியே சொல்ல முடியும். 

 

 

ஊரவரும் அதை நம்பி ஏற்றிருக்க ஸாமின் நண்பர்களும் அப்படியே தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

 

ஹேய்… அருணி… ஏழெட்டு வருசத்துக்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறீரென்ன… யாழ்ப்பாணம் எப்பிடி இருக்குது…? டேய் ஸாம்… நீயும் சொல்லடா… நீயும் பத்து வருசம் கழிச்சுப் பாக்கிறாய் நம்ம ஊரை…”

 

 

சுதன் இவ்வாறு கேட்டதும் சுதர்சன் தன் மகளின் வட்டத் தொப்பியை உருட்டிக் குழல் போலே செய்து அதை மைக் மாதிரி பிடித்துக் கொண்டு ஒரு தொகுப்பாளரின் பாவனையுடன் தனது கலாட்டாவை ஆரம்பித்தான்.

 

 

வணக்கம் ரசிகப் பெருமக்களே…! இது உங்கள் சக்தி ரீவியின் போவோமா ஊர்கோலம்… நாங்கள் இப்போது பருத்தித்துறையிலிருந்து நெல்லியடி, குஞ்சர் கடை, கரணவாய் தாண்டி வல்லைப் பாலத்தை அடைந்துள்ளோம். 

 

 

இரு புறமும் கடல் நடுவிலே வாகனம் போகுமளவு அகலத்தில் ஒரு பாலம். தசாப்தங்களின் முன்னர் தகர்க்கப்பட்டாலும் பின் மீண்டும் புணரமைக்கப் பட்டு வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் அற்புதப் பாலம் இது. 

 

 

மேலே வானம், அதிலே ஊர்வலம் போகும் மேகக் கூட்டங்கள், கீழே நீலக் கடல் அதிலே மீன் பிடிக்கும் வெள்ளைக் கொக்குகள்… ஆஹா என்ன ஒரு அற்புதமான காட்சி… நூற்றுக்கணக்கான நீர்க்காகங்கள் தாங்களாகவே ஒரு கோலம் அமைத்து பறக்கும் இந்தக் காட்சியை என்னவென்று சொல்வது… 

 

 

ஒரே நேரத்தில் கடலிலிருந்து வானை நோக்கிச் சிறகடித்துப் பறக்கும் இந்த வெள்ளைக் கொக்குகளைப் பாருங்கள் மக்களே… என்ன அழகு… இறைவனின் படைப்பின் விந்தையை வியக்க வார்த்தைகள் போதவில்லையே….”

 

 

ஒரு தொலைக்காட்சி வர்ணனையாளரின் தொனியில் ஒரு நேரடி வர்ணனையை உரிய முக பாவங்களோடு வழங்க அனைவரும் கை தட்டி ரசித்தனர். 

 

 

இப்போது சுதர்சனின் கையிலிருந்த மைக்கை நிரோஜனின் மனைவி வாங்கிக் கொண்டாள். 

 

 

சக்தியின் சொந்தங்களே இப்போது போவோமா ஊர்கோலத்தில் சில சுற்றுலாப் பயணிகளைச் சந்திக்கும் நேரம்… பத்து வருடங்களுக்கு முன்பு தாய் மண்ணைப் பிரிந்து சென்ற திரு ஸாம் அபிஷேக் இப்போது எங்களோடு இணைந்து உள்ளார்… யாழ்ப்பாணத்தின் மாற்றங்கள் பற்றி இப்போது அவர் தனது அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுவார்….” 

 

 

ஸாம் இருந்த இருக்கைக்கு நேராகச் சென்று அவனிடம் மைக்கை நீட்டினாள். பிகு இன்றி மைக்கை வாங்கிக் கொண்ட ஸாம் தொண்டையைக் கனைத்துக் கொண்டே ஆரம்பித்தான்.

 

 

எல்லோருக்கும் வணக்கம். நான் வீடு வந்த போது எங்கள் ஊரா இது என்று வியந்து விட்டேன். குண்டும் குழியுமாக இருந்த வீதிகள் எல்லாம் கார்ப்பெட் ரோடாக மாற்றமடைந்திருக்கின்றன. எங்கும் பல புதிய கட்டிடங்கள். பருத்தித்துறை, நெல்லியடி போன்ற சிறு நகரங்களில் கூட பல புதிய கடைகளும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் திறக்கப்பட்டு உள்ளன.

 

 

யாழ் நகரம் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தியேட்டர்கள், கேஎப்சியுடன் கூடிய வணிக வளாகம். நிறைய கட்டிடங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலை…கால் வைக்க இடமில்லாமல் தெருவோரம் எங்கும் நடைபாதைக் கடைகள், வீதியெங்கும் திருவிழா மாதிரி சனநடமாட்டம், தமிழுக்கு சரிசமனாக காதில் விழும் சிங்கள குரல்கள்…

 

 

இது நம்ம யாழ்ப்பாணம் தானா என்று நம்பவே முடியவில்லையே…”

 

 

ஸாம் பேசி முடித்ததும் எல்லோரும் படபடவென்று கை தட்டினார்கள். 

 

 

இப்போது மைக் அருண்யாவிடம் கொடுக்கப் பட்டது. என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தவள்,

 

 

ஸாம் சேர் சொன்னவை தான் என் கருத்தும்.. நிறைய மாற்றங்கள்… எல்லா இடங்களும் மாறி விட்டன… வீதியில் இருந்து கட்டிடங்கள் வரை எல்லாம் புதிதாய் இருக்கிறது…”

 

 

சொல்லி விட்டு மைக்கை யாரிடம் கொடுப்பது என்று பார்க்க சுதர்சன் சொன்னான். 

 

 

என்ன அருணி… உன் ஸ்டைலில் ஏதாவது சொல்லுவாய் என்று பார்க்க இப்பிடி முடிச்சிட்டியே….”

 

 

மெல்லிய புன்னகையுடன் மைக்கை அருகிருந்தவளிடம் கொடுத்தவள் ஏதோ நினைவு வந்தவளாக திரும்ப வாங்கினாள்.

 

 

கட்டிடங்கள் மட்டுமல்ல மனிதர்களும் நிறைய மாறி விட்டார்கள்…. பத்து வருடங்கள் முன்பு பார்த்த போது ஆணழகன் போட்டிக்குப் போவது போல் இருந்தவர்கள் எல்லோரும் இப்போது முன்னால் ஒரு பானையை சுமந்து கொண்டிருக்கிறார்கள்… அவரது பிரக்னென்ட் மனைவியின் ஏழு மாத வயிறு பெரிதா? அல்லது அவரது தொப்பை பெரிதா என்று பட்டிமன்றமே நடத்தலாம் போலுள்ளது.  

 

 

சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக தலை கோதித் திரிந்தவர்கள் எல்லோரும் இப்போது அவரது உண்மையான தலைமுடியோடு வலம் வருகிறார்கள். அவர்கள் தலையில் முகம் பார்க்கலாம் போல் அவ்வளவு மாற்றம்….

 

 

பச்சைப்புள்ள மாதிரி கிளீன் சேவ்வுடன் திரிந்த பால்குடிப் பாலகன்கள் எல்லாம் இப்போது தாடியுடன் தங்களையும் பெரிய மனிதராக காட்ட முயல்கிறார்கள். 

 

 

திருமணமே செய்ய மாட்டேன் என்று சபதம் செய்தவர், எல்லோருக்கும் முதலில் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளும் பெற்று விட்டார்…

 

 

இப்படிப் பல மாற்றங்கள் மனிதர்களில்…”

 

 

கொஞ்சமும் சிரிக்காமல் நண்பர்கள் நால்வரையும் ஒரு வாங்கு வாங்கியதைப் பார்த்து பெண்கள் அனைவரும் ஹோ என்று கை தட்டி ஆர்ப்பரித்தார்கள். சிறுவர்களும் ஏதும் புரியாவிட்டாலும் பெற்றவர் சிரிப்பதைப் பார்த்து தாங்களும் மகிழ்ச்சி குரல் எழுப்பினார்கள். 

 

 

இதை இதை இதைத்தான் அருணி உம்மட்ட எதிர்பார்த்தம்”  

 

 

என்று ரசித்துச் சிரித்தவாறே இப்போது மைக்கை வாங்கிக் கொண்ட சுதர்சன்,

 

 

நாங்கள் இப்போது யாழ் நகர் தாண்டி வண்ணைப் பாலத்தில் காரை நகர் நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் முதலில் போகப் போவது ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் காரைநகர் சிவன் கோவிலுக்கு. 

 

 

சிதம்பரத்தில் நடைபெறுவது போன்றே உற்சவங்கள் இங்கு நடைபெறுவதால் இச்சிவாலயம் இந்தக் காரணப் பெயரைப் பெற்றது.

 

 

திருவாசகத்தின் ஐம்பத்தொரு பதிகங்களை நினைவூட்டும் விதமாக இங்குள்ள நடராஜர் சிலையில் ஐம்பத்தொரு சுடர்கள் உள்ளன.

 

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கட்டப்பட்ட இச்சிவாலயத்தில் சுந்தரேஸ்வரரும் சௌந்தராம்பிகையும் வீற்றிருக்கிறார்கள். 

 

 

ஆண்டி கேணி ஐயனார் கோவில் என்றழைக்கப்பட்ட ஆலயம் அம்பலவி முருகர் என்ற பக்கதரால் பின்பு சிவாலயமாகவும் கட்டப்பெற்றது.

 

 

இங்கே சிவனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஐயனாருக்கும் அளிக்கப்படுகிறது. இரு ராஜகோபுரங்களைக் கொண்ட ஆலயத்தில் ஒன்று சிவனுக்கும் மற்றையது ஐயனாருக்கும். இருவருக்குமே தனித்தனி சித்திரத்தேர் உண்டு. இருவருக்கும் தனித்தனி மகோற்சவம்…

 

 

ஓகே மக்களே… இப்போது நாங்கள் கோவிலை வந்தடைந்து விட்டோம். இறங்கி வணங்கி விட்டு மறுபடியும் உங்களைக் கடற்கரையில் சந்திக்கிறோம்…”

 

 

அழகான வர்ணனை, விளக்கங்களுடன் பேச்சை முடிக்க அனைவரும் வண்டியை விட்டு இறங்கி அய்யனாரையும் சிவனையும் தரிசித்து மீளவும் கடற்கரையை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்தார்கள்.

 

 

ஆனால் அருண்யா ஆலயத்திற்குள் செல்லாமல் வாகனத்திலேயே இருந்து விட்டாள். அனைவரும் தங்கள் பாட்டில் இறங்கிச் செல்ல மாதவிடாயோ தெரியாது என்று நினைத்து யாரும் அவளை வரச் சொல்லி கேட்கவில்லை.

 

 

கிறிஸ்துவனான ஸாம் விரைவிலேயே கோயிலை வலம் வந்து வாகனத்தில் அமர்ந்தவன்,

 

 

ஏன் அருணி… கோயிலுக்க போகேல்ல… கும்பிட விருப்பம் இல்லையா? முந்தி நீர் தானே படிக்கிற காலத்தில நவராத்திரி, கந்த சஷ்டி, கௌரி விரதம் எதையும் விட்டு வைக்க மாட்டீர்… இப்ப என்னாச்சு…?”

 

 

எல்லாம் தெரிந்து கொண்டே எதுவும் தெரியாதவனாய் பேச்சுக் கொடுத்தான் ஸாம். அவளும் சலித்தவாறே,

 

 

எங்கட குடும்பத்தில நடந்த எல்லாத்தையும் பார்த்தப்ப இந்த சாமி, பூதம் மேல இருந்த நம்பிக்கை எல்லாம் விட்டுப் போச்சு… முந்தியெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் விரதம் பிடிப்பேன்… ஆனால் அது எதுக்கும் பலனில்லாமல் போச்சே… எந்த சாமியும் நாங்க ஆபத்தில இருக்கேக்க வந்து எங்களைக் காப்பாத்தேலயே…”

 

 

கோபமாகச் சொல்லி கடைசியில் கண் கலங்கியவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் மௌனமானான் ஸாம்.

 

 

நல்லகாலத்திற்கு அனைவரும் சாமி கும்பிட்டு முடித்து வண்டியில் ஏறியிருக்கப் பயணம் தொடர்ந்தது.

 

 

கடற்கரையை நெருங்கவும் அங்கே அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமையும் அங்கு சீருடையில் உலாவியவர்களையும் கண்டு ஒரு கணம் நடுங்கி விட்டாள் அருண்யா. 

 

 

அந்த கொடிய சம்பவத்தின் பின்னர் முதன்முதலாக சீருடையை இப்போது தான் கண்டவள் பத்து வருடங்களாக மறக்க முயன்றும் சிறிது வெற்றி  பெற்று வெளியுலகைக் காண வந்தவள் பழைய சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவு வர உடல் நடுங்க தன்னிலை மறந்து “அம்மா” என்ற கேவலுடன் மயங்கிச் சரிந்தாள். 

 

 

இதற்கிடையில் கடற்கரையை அடைந்திருக்க அருண்யாவின் முக பாவங்களை பார்த்து நிலையை ஊகித்திருந்த ஸாம் நிலைமையைக் கையிலெடுத்து அனைவரையும் இறங்கிப் போகுமாறு பணித்து விட்டு மருத்துவ தாதியான நிரோஜனின் மனைவியின் உதவியோடு அருணியின் முகத்தில் நீர் தெளித்து அவளை சுயநினைவுக்குக் கொண்டு வர முனைந்தான். 

 

 

நிரோஜனின் மனைவி நாடி பிடித்துப் பார்த்து அவள் சுவாசம் சீராக இருப்பதால் பயப்பிட வேணாம் என்று ஸாமிற்கு ஆறுதல் கூறி விட்டு அவளின் கன்னத்தை தட்டி மெதுவாக கூப்பிட்டு எழுப்பினாள்.

 

 

சில நிமிடங்கள் பறக்க கண் விழித்தவள் தான் நிரோஜன் மனைவி மடியில் இருப்பதை பார்த்து,

 

 

ஸொரிக்கா… ஏதோ திடீரென்று கண்ணெல்லாம் இருட்டிக் கொண்டு வந்திட்டு… காலமை சாப்பிடேல்ல.. அதுதான் போல…”

 

 

வாய்க்கு வந்ததைக் கூறி நிலைமையைச் சமாளித்தவள் சுற்றுலா வந்த இடத்தில் இப்படி அனைவரையும் அமைதியிழக்க வைப்பதை எண்ணி வெக்கிக் கொண்டு இறங்கி நடக்க முற்பட்டாள்.

 

 

களைப்பாக இருந்தால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு பிறகு கீழே  வாரும் அருண்… அல்லது வீட்ட போற என்றாலும் நான் கொண்டு போய் விட்டிட்டு வாறன்…”

 

 

ஸாம் கவலையும் அனுசரணையுமாய் கேட்கவும் தன்னால் அவர்கள் சந்தோஷத்தில் தடை வரக் கூடாது என்று முடிவெடுத்தவள் அவனை அவசரமாகத் தடுத்தவள்,

 

 

இப்ப ஓகே ஸேர்… இவ்வளவு தூரம் வந்தது உடன திரும்பவா கடல்ல இறங்காமல் நான் திரும்ப மாட்டேன்”

 

 

என்றபடி நிரோஜனின் மனைவியையும் அழைத்துக் கொண்டு கொஞ்சம் உற்சாகமாகவே கடலை நோக்கிச் சென்றாள்.

 

 

அவள் போவதையே பெருமூச்சோடு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் மயக்கத்தின் காரணம் புரிந்து உள்ளே வலித்தது. 

 

 

இந்த சீருடைகள் கண்ணில் படக்கூடாது என்று தானே அவள் அஞ்ஞாத வாசம் செய்தது… இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த சீருடை மனிதர்கள் ஆங்காங்கே கண்ணில் படத்தான் செய்வார்கள். அதற்காக சாகும் வரை இவள் இப்படி நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்கலமா?’

 

 

அப்போது தான் அவனுக்கு அந்த எண்ணம் உதித்தது. அருண்யா இலங்கையில் இருந்தால் தானே இவர்களைக் காணும் போது பழையதை எண்ணி கலங்குவாள். மறக்க முடியாமல் தன்னைத்தானே வருத்தி ஒடுங்குவாள். 

 

 

பொறி பட்டதும் பெரு மகிழ்வோடு அந்த எண்ணத்தை வளர்த்தவன் இவள் லண்டன் வந்தால் எப்படியும் மாறி விடுவாள். இது பற்றிக் கவியோடு கதைக்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டு தானும் கடலை நோக்கி நண்பர்கள் இருந்த இடத்திற்கு விரைந்தான். அவன் மகிழ்ச்சி அவன் துள்ளல் நடையில் வெளிப்பட சீட்டியடித்துக் கொண்டே ஓடிச் சென்று கடலில் குதித்தான்.

 

 

ஸாமின் எண்ணம் வெற்றி பெறுமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’

அத்தியாயம் – 08 ராக்கிங்கில் இருந்து தப்புவாளா கவி?     காலை ஆறு மணி. வழக்கம்போல அடித்த அலாரத்தை நிறுத்தி விட்டு திரும்பவும் போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு தன்னவளோடு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கம் அருகே இருந்த பெரிய மரத்தை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’

அத்தியாயம் – 30 மனம் மாறுவாளா அருண்யா?     அடுத்த நாள் காலை. அதிகாலையிலேயே விழிப்பு தட்டி விட கண் விழித்தவன் கட்டிலை விட்டு எழ எத்தனிக்க அவனை அணைத்தவாறு தன்னை மறந்து துயின்று கொண்டிருந்தாள் அருண்யா.     

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 3’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 3’

அத்தியாயம் – 03 தப்புவாளா கவி?   காலை நேரம். வீடே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெய்வநாயகி சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார். சந்திரஹாசன் வரவேற்பறையில் உதயன் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். கவி தனது அறையில் வழக்கம்போல படித்து கொண்டிருந்தாள். வானொலியை