Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’

அத்தியாயம் – 24

மாறுவாளா அருண்யா

 

 

ஸாம் வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய போது அங்கே அருண்யா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

 

 

அவளைக் கண்டதும் கண்களில் முட்டிய நீரை சுண்டி விட்டபடி உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவள் உடனே சந்தோசமாக எழுந்து அவனை நோக்கி விரைந்தாள். 

 

 

ஸேர்… அப்பிடியே இருக்கிறீங்க… பத்து வருசமாச்சு பார்த்து… ஆனா ஒரு மாற்றத்தையும் காணேல்ல… என்ன ஸேர் எங்களை இப்பிடி ஏமாத்திட்டிங்களே… ஒரு வெள்ளைக்காரிய கூட்டிட்டு வருவியள் என்று பார்த்தால் இப்பிடி தனியாக வந்து நிக்கிறியளே…”

 

 

பழைய அருண்யாவாய் படபடத்தவளை வியப்புடன் பார்த்தான். உண்மையில் அவள் கதை கேட்ட பின் எப்படி அவளோடு சாதாரணமாக கதைக்க முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு பழைய அருணே முன்னால் தெரியவும் மனசுக்குள்ளே சிறிதே ஆறுதலடைந்தான்.

 

 

ஹா ஹா… என்ன மாறணும் அருண்…? வெள்ளைக்காரி எல்லாம் நமக்கு சரி வராது… அவளுகள் நாலு நாள்ல விட்டிட்டுப் போய்டுவாளுகள். பிறகு நான் என்ன செய்றதாம்…? இப்பிடி தனியாக இருக்கிற எவ்வளவு சுதந்திரம் தெரியுமா..?”

 

 

நான் சும்மா பம்பலுக்குச் சொன்னன். கையில என்ன நடந்த சேர்…? ஊருக்கு வந்த உடனேயே வீரத் தழும்பு வாங்கியாச்சா…?

 

 

ஹூம்…. மோட்ட சைக்கிளால விழுந்திட்டன். அதுதான்…

நீர் மாறவே இல்லை அருண்… தலைமுடி மட்டும் வளர்ந்து இருக்கு…. ஏன் இப்ப கறையான் அரிக்கிறேலையோ…?”

 

 

அவன் கேள்வியில் சிறிதே முகம் கறுத்தவள் பின்னர் தெளிந்து பழையபடி பதில் கூற ஆரம்பித்தாள். 

 

 

ஹி ஹி ஹி…. நோ சேர்… கொஞ்ச நாளைக்கு வேணாம் என்று கறையான் புத்தை அழிச்சிட்டன்… ஸோ இப்ப அரிக்கிறேல்ல…”

 

 

வந்து நிறைய நேரமா அருண்….? ஸொரி…. நான் மந்திகைக்கு மருந்து கட்டப் போயிருந்தன்… என்ன குடிக்கிறீர்…?”

 

 

வீட்டவனாய் மன்னிப்பு கேட்டு உபசரித்தான்.

 

 

அது பரவாயில்லை ஸேர். அப்பா கொண்டு வந்து விட்டிட்டுப் போறார். கொஞ்சத்தால வருவார். லண்டனால வந்திருக்கிறீங்க… ஒரு சொக்லேட்டைக் கண்ணில காட்டுறீங்க இல்லையே.

இதெல்லாம் அநியாயம்…”

 

 

ஹா ஹா… இன்னும் சொக்லேட் பைத்தியம் தானா? இரும்… கொண்டு வாறேன்…”

 

 

விதம் விதமாக சொக்லேட்சை கொண்டு வந்து அவள் முன்னால் கடை பரப்ப, மறுக்காது ஆசையோடு எடுத்து உண்டாள். அவளையே வாஞ்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி,

 

 

லண்டன் லைப் எப்பிடி ஸேர்? உங்களுக்கு பிடிச்சுதா…? என்ன வேலை செய்றீங்க…? அங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் எப்பிடி…? வெள்ளைக்காரங்க தானா? தமிழ் ஆக்கள் நிறைய பேர் இருக்கினமா? இங்க நிரோஜன் அண்ணாவையோட கதைக்கிறேல்லையா…?”

 

 

மூச்சு விடாமல் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தவளை,

 

 

ஐயோ… அருண்… ஒவ்வொன்றாக கேளும்… இப்பிடி மூச்சு விடாமல் கேட்டால் நான் எதுக்கென்று பதில் சொல்லுறது?”

 

 

ஹி…. ஹி…. ஹி…. சரி ஒவ்வொன்றாக சொல்லுங்கோ ஸேர்.”

 

 

போன புதுசில வெள்ளைக்காரன்ட இங்கிலிஷ் புரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டன்…  ஸ்ரூடன்ற் விசாவில தானே போனது.

படிப்பும் பார்ட் டைம் வேலையுமாக நித்திரை கொள்ளவே நேரம் கிடைக்கல… 

 

 

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து சொந்தமாக ஒரு டக்ஸ் பேர்ம் ஒண்டு ஆரம்பிச்சிட்டன். அப்புறம் அதை கவனமாக கொண்டு நடத்திறதிலேயே என் கவனம் எல்லாம்… 

 

 

அப்பா இருக்கிற வரைக்கும் அவரோட கதைப்பன்… பிறகு இங்க யாரோடயும் கதைக்கிறதில்லை… லண்டனிலயும் பெருசா தமிழ் ஆக்களோட பழகிறேல்ல….

 

 

அப்பாட்ட கூட கவியைப் பற்றியோ உங்களை பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று சொல்லிட்டன். நிரோஜன், சுதன், சுதர்சன் ஒருத்தரோடயும் கதைக்கிறதில்லை… 

 

 

பேஸ்புக், டிவிட்டர் எதுவும் யூஸ் பண்ணுறேல்ல… எங்க நான் இந்த சோசல் மீடியாவில இருந்தால்  கவி எதையாவது பார்த்து அவளுக்கு என் ஞாபகம் வரக்கூடாது, எனக்கும் அவள் ஞாபகம் வரக்கூடாது என்று நினைச்சன்… அதுதான் உம்மோட கதைக்கிறதையும் விட்டன்….”

 

 

ஆனால் ஸாம் அருண்யாவோடு பேசுவதை நிறுத்தியதற்கு காரணமே வேறு. வாரந்தோறும் தவறாமல் அருணி ஸ்கைப்பில் அழைத்து வளவளப்பாள். அவளின் அன்பிலும் உரிமை மிகுந்த பேச்சும் முற்போக்கு சிந்தனை உடைய ஸாமை கொஞ்சம் பயம் கொள்ளச் செய்தது. 

 

 

தமக்கையால் ஏமாற்றப் பட்டு விட்டானே என்ற பரிதாபாத்தில் இவள் பிறகு காதல், கண்ராவி என்று தொடங்கி விட்டால் ஏற்கனவே அனுபவப் பட்டும் திரும்ப அதே குடும்பத்துப் பெண் வாழ்க்கையோடு விளையாடலாமா என்று தான் சூடுகண்ட பூனையாக ஸாம் அருணியை விட்டு ஒதுங்கியது. 

 

 

தந்தை எத்தனையோ தரம் கவி, யாதவ் பற்றியும் அருணி வன்னிக்குள் மாட்டுப்பட்டது பற்றியும் சொல்ல வாயெடுத்தும் இவன் எதையும் காதில் விழுத்தாது தொலைபேசியை அணைத்து விடுவான். அந்தோணியும் சிறிது காலத்தில் மாரடைப்பால் படுக்கையிலேயே உயிர் பிரிந்திருந்தார். தந்தையை இறந்த கோலத்தில் பார்க்க மனமற்று இவன் இறுதிக் கிரியைக்குக் கூட ஊருக்கு வரவில்லை. அனைத்தையும் மனசுக்குள் எண்ணி நொந்தபடி அருணியிடம் தொடர்ந்தான்.

 

 

ஆனால் நான் இப்பிடி ஒதுங்கி இருந்த எவ்வளவு பெரிய பிழை என்று இப்பதானே புரியுது… நான் இப்ப ஊருக்கு வாறது அண்ணாவைக்குக் கூடத் தெரியாது.. வந்து இறங்கியதும் அண்ணா கவியைப் பற்றிச் சொன்னதைக் கேட்டதும் அப்பிடியே நொறுங்கி போய்ட்டன்.

 

 

அதுதான் கவிட்ட என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி விசயம் தெரிஞ்ச உடனேயே போய்க் கேட்டன்… ஆனால் அவ யாதவ்வ ரொம்ப லவ் பண்ணுறா… அவனை மறந்து என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவே மாட்டன் என்று சொல்லிட்டா….

 

 

அவ யாதவை அவ்வளவு லவ் பண்ணுறதை நினைச்சு ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனால் அவனோட சேர்ந்து வாழ அவளுக்குக் குடுத்து வைக்கேலையே என்றதை நினைக்க தாங்க முடியாத வேதனையா இருக்கு… ஆண்டவர் ஏன் தான் இப்பிடி எல்லாரையும் சோதிக்கிறாரோ தெரியேல்ல…”

 

 

நீண்ட பெருமூச்சோடு வேதனையாய் சொல்லி முடித்தான்.

 

 

என்ன செய்றது சேர்… எல்லாம் எங்கட தலைவிதி…” 

 

 

கண்களில் துளிர்த்த நீரை இமைகளைக் கொட்டி அடக்கிய படி சோகமாய் பதிலுரைத்தாள் அருண்யா.

 

 

அப்போது 

 

 

டேய் மச்சான்….”

 

 

அழைப்போடு உள்ளே வந்தார்கள் ஸாமின் ஆருயிர் தோழர்கள் மூவரும்.

 

 

வாவ் அருண்யா… வட் ஏ சர்ப்ரைஸ்… நீரும் இந்த ஊரில தான் இருக்கிறீரா…? ஆளைக் கண்ணில காணக் கிடைக்குதில்லேயே…”

 

 

கவி ஓகேவா இருக்கிறாளா அருணி…? யாதவ் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதா..?”

 

 

வந்த மூவரும் ஆளாளுக்கு அருண்யாவை கேள்விகளால் வறுத்தெடுக்க இங்கே கடுப்பாகினான் ஸாம்.

 

 

ஏன்டா பக்கிகளா… ஏதோ நானும் நீங்கள் எல்லாம் என்னைத் தான் பார்க்க வந்தீங்க என்று நினைச்சுக் கொண்டிருக்க நீங்கள் என்னடா என்றால் அவளோட மல்லுக் கட்டுறியள்…”

 

 

ஸாமின் பேச்சுக் கேட்டு கடுப்பானான் சுதர்சன். 

 

 

போய் ஒரு கொஞ்ச காலம் கதைச்சாய்… அதுக்குப் பிறகு எந்த தொடர்பும்  இல்லாமல் இருந்திட்டு இப்ப வந்து என்ன கனக்க கதைக்கிறாய்…?”

 

 

அவனைத் தொடர்ந்து சுதனும் ஸாமை விட்டு வைக்கவில்லை. 

 

 

வந்து மூண்டு நாளாச்சு… இப்பவாச்சும் சொன்னியா வந்து நிக்கிறன் என்று…”

 

 

அதுதானே… இண்டைக்கு காலமை ஃபாங்கில உன்ர அண்ணாவைக் கண்டிருக்காட்டில் எங்களுக்கு நீ வந்திருக்கிறதே தெரிஞ்சிராதே மச்சான்..”

 

 

தொடர்ந்து கோபமாக முடித்தான் நிரோஜன்.

 

 

எப்போதும் மற்ற நண்பர்கள் இருவரிடமும் ஸாமிற்கு வக்காலத்து வாங்குபவன் நிரோஜன். இப்போது அவனே கோபமாகக் கத்தவும் நண்பர்கள் தன் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பைக் கண்டு நெகிழ்ந்தான் ஸாம். 

 

 

நண்பர்களின் சண்டையை பார்த்து ரசித்தவாறே சொக்லேட் ஒன்றை எடுத்து வாயில் போட்டவள்,

 

 

என்ன சுதன் அண்ணா…. அதுக்கிடையில மண்டை பிளேக்ரவுண்ட் ஆகிட்டு… வெளில போகேக்க தொப்பி போட்டிட்டு போங்கோ… அடிக்கிற உச்சி வெயில் மண்டேல பட்டுத் தெறிச்சு பிளாஸாகி எதிரே வாறவை கண் தெரியாமல் எங்கேயாச்சும் போய் மோதிடப் போறாங்க…”

 

 

சிரிக்காமல் சர்வ சாதாரணமாகக் கூறவும் நடு மண்டையில் வழுக்கை விழுந்த தன் தலையை சுதன் பாவமாய் தடவவும் மற்ற மூவரும் கொல்லென்று சிரித்தனர்.

 

 

சும்மா போ அருணி… உன்னைக் குற்றம் சொன்ன பாவத்துக்கு நான் பெத்தது உனக்கும் மேலால இருக்குது. சந்தேகம் கேட்கிறன் என்று கேட்டு கேட்டே என் மண்டையில இருக்கிற முடியெல்லாம் பிய்ச்சுக்க வைச்சிட்டா….”

 

 

சுதனிட மூத்த பொண்ணிற்கு இப்போது ஐந்து வயது, மனைவி இரண்டாவது மகன் எட்டு மாதக் கர்ப்பம்… சுதனின் சோகத்தை கேட்ட சுதர்சன் சலித்து கொண்டே,

 

 

அப்பிடி என்ன கேக்கிறாடா…? நான் பெத்த அறுந்த வாலை விடவா உன்ர பிள்ளை கேட்டிட்டாள்…”

 

 

அதை எப்பிடிடா சொல்லுவன்… உதாரணத்திற்கு நேற்றுக் கேட்டாளே ஒரு கேள்வி… ஸ்ஸ்….ஸப்ப்பா…அம்மாட வயித்துக்க தம்பிப் பாப்பா எப்பிடிப் போனான்னு கேட்கிறாடா… நான் சொன்னன்… அப்புச்சாமி வைச்சுவிட்டவர்னு… அதுக்கு சொல்லுறா… அது பொய் அவ ப்ரண்டு சொன்னாளாம்… அப்பாமார் தான் அம்மாட வயித்துக்க பாப்பா வைப்பாங்களாம்… நீங்களும் வைச்சுக் காட்டுங்கோ என்று…”

 

 

சுதன் சோகமாக சொல்லவும் அருண்யா உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். 

 

 

என்ர சோகத்தை ஏன்டா கேட்கிறியள்..… இப்போ மூத்த மகளுக்கு எட்டு வயசாகுது… போனகிழமை ஒருநாள் பள்ளிக்கூடத்தால வரேக்கயே விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாளாம்… என்ர பொண்டாட்டி ஏனென்று கேட்டதுக்கு தனக்கு பாப்பா வரப் போகுது என்று சொல்லி இருக்கிறா… இதைக் கேட்டு என்ர மனுசியும் குழறிக் கொண்டு எனக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி நானும் துடிச்சுப் பதைச்சு வீட்ட ஓடிப் போய் மகளைச் சமாதானப் படுத்தி பொறுமையாக என்ன நடந்தது என்று கேட்டால்…

 

 

என் அறிவுக் கொழுந்து பொண்டாட்டி ஒழுங்காக விளக்கம் சொல்லிக் குடுக்காமல் ‘அப்பா, தம்பியை தவிர வேற யாரும் ஆம்பிளையள் பிள்ளையைத் தொட்டால் பாப்பா வந்திடும்… யாரையும் தொட விடாமல் கவனமாக இருக்கோணும் என்று சொல்லிக் குடுத்திருக்கிறா…

 

 

அன்றைக்கு ஸ்கூல் முடிச்சு பஸ்ல வரேக்க ரிக்கட் குடுக்கேக்க கண்டக்டரிட கை லேசாக பட்டிட்டுது போல… அதுக்குத்தான் பயபுள்ள அவ்வளவு சீனைப் போட்டு உயிரை எடுத்திட்டு….”

 

 

நண்பர்கள் முதலில் சிரித்தாலும் பிறகு இன்றைய குழந்தைகளின் புத்திசாலித்தனம் பற்றி ஒரு அலசல் போட்டார்கள். 

 

 

ஸாமோ பழையபடி நண்பர்களோடு வாயடித்துக் கொண்டிருந்த அருண்யாவையே அடிக்கடி கவனித்து கொண்டான். அவன் மனசுக்குள்ளே ஒரு நம்பிக்கை. அவளை பழைய அருண்யாவாக மாற்ற முடியும் என்று.

 

 

டேய் மச்சான்ஸ்…. எல்லாரிட பமிலியும் ஒண்ணா சேர்ந்து எங்கையாவது ட்ரிப் போய் வருவமா?”

 

 

சூப்பர் மச்சான்… ஆனால் வன் டே தான்… என்ர ஆள் வண்டிய தள்ளிட்டு இருக்கிற படியால எங்களால அவுட்சைட் வரேல்லாது… எட்டு மாசம் வேற ஆச்சு… இனி எப்ப என்றாலும் டெலிவரிக்கு ரெடியா இருக்க வேணும்டா…”

 

 

சுதன் உடனே சம்மதம் தெரிவிக்க மற்றவர்களும் ஒத்துக் கொண்டார்கள். 

 

 

ஹேய் அருணி… நீரும் வாமன். .. சும்மா பம்பலாப் போய்ட்டு வருவம்…”

 

 

தனது பழைய நட்புகளைக் கண்டு தன் சோகம் மறந்து சகஜ நிலையில் இருந்தவள் முதலில் தயங்கினாலும் அனைவரும் வற்புறுத்தவே சம்மதித்தாள்.

 

 

அடுத்து வரும் ஞாயிறு அன்று ஹசூரினா கடற்கரைக்குப் போவது என்று முடிவெடுத்தார்கள். நிரோஜன் மினிபஸ் ஒன்றை தான் ஒழுங்கு செய்வதாகப் பொறுப்பெடுத்துக் கொண்டான். அவர்கள் மூவர் மனைவிமார்களும் ஒருவருக்கொருவர் நட்பாகவே இருப்பதால் அவர்கள் தங்களுக்குள் கதைத்து உணவுகள் செய்து எடுத்து வருவதாக முடிவு செய்யப்பட்டது.

 

 

கவியையும் தொலைபேசியில் அழைத்து சுற்றுலா விவரம் சொல்லி வரச் சொல்லி கேட்டார்கள். அவள் அன்று தனக்கு வேலை நேரம் என்பதால் வர முடியாது அருண்யாவை அழைத்து செல்லுமாறு கூறினாள். 

 

 

நண்பர்கள் மூவரும் மனைவி குழந்தைகள் சகிதமும் ஸாமின் இரண்டாவது அண்ணா குடும்பமும் ஸாமும் அருண்யாவுமாக அந்த ஞாயிறன்று ஹசூரினா பீச்சுக்கு சென்றார்கள். அங்கே தான் ஸாம் தனது வாழ்க்கையே மாற்றப் போகும் ஒரு புதிய முடிவுக்கு அத்திவாரம் இட்டான். 

 

 

ஸாமின் வாழ்க்கையில் வரப் போகும் திருப்பம் என்ன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’

அத்தியாயம் – 17 யாரோ யாரோடி உன்னோட புருஷன்?   தந்தையை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தாள் கவின்யா. தாயின் தற்கொலை மிரட்டலை தந்தையிடம் சொன்னாலும் தந்தை தாயைத் திட்ட அவமானம், ஆவேசப் படும் தாய் இறுதியில் எடுக்கப் போகும் முடிவு தற்கொலையே.

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’

அத்தியாயம் – 13 யாதவ் காதல் நிறைவேறுமா?   யாதவ்மித்ரனின் வார்டை அடைந்த அனுஷியா,  “டேய் அண்ணா…! சுகமாகி வீட்டுக்கு போனதும் ரெண்டு வீட்டை எனக்கு எழுதி வைக்கிற வேலையைப் பார். சரியா?” “உண்மையாவா சொல்லுறாய் அனு…? என்ர வயித்தில பாலை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 5’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 5’

அத்தியாயம் – 05 காதலிக்கிறாளா கவி?     “யார்டி அவன் ஸாம் அபிஷேக்?  அன்றைக்கு வீட்ட வந்தவங்களில ஒருத்தன் தானே…      நானும் நல்ல பொடியள் என்று பாத்தால் ஐயாக்கு காதல் கேட்குதாம்… காதல்… அதுவும் கிறிஸ்டியன் நாய்…