அத்தியாயம் – 23
அருண்யா மாறியது ஏன்?
கவின்யா சொல்லியிருந்த மாதிரியே வைத்தியர் விடுதிக்கு மதியம் ஒரு மணிக்கு சென்றவன் வரவேற்பறையில் காத்திருக்கத் தொடங்கினான். சிந்தனை முழுவதும் அருணிக்கு என்னாகியிருக்கும் என்பதிலேயே சுற்றிச் சுழன்றது.
“சொரி ஸாம்… ஒரு எமெஜெர்ன்ஸ்ஸி கேஸ்… கொஞ்சம் லேட் ஆகிட்டு…”
“பரவாயில்லை கவி… நான் இப்ப கொஞ்சம் முதல் தான் வந்தன்…”
சிறிது தண்ணீரை எடுத்து அருந்தி விட்டு ஸாமின் முன்னால் வந்து அமர்ந்தவள்,
“எப்பிடி தொடங்கிற என்றே தெரியல ஸாம்…. அருணை சீரழிச்சிட்டாங்க ஸாம்… ஏழெட்டுப் பேர் சேர்ந்து ரேப் பண்ணிட்டாங்க… அவ வாழ்க்கையையே நாசமாக்கிட்டாங்க.”
உச்சக்கட்ட வேதனை குரலிலே தொனிக்க விம்மிய இதயமும் அழுத கண்களுமாய் கவின்யா பட்டெனப் போட்டு உடைக்கவும் அதிர்ந்து போய் எழுந்தே விட்டான் ஸாம். நம்ப முடியாதவனாய் கவியையே பார்த்தவன் தான் கேட்டது நிஜம் தானா என நம்ப முடியாமல் கத்தினான்.
“நோ…. அப்பிடி இருக்காது…என்ர அருணுக்கு ஒண்டுமில்லை….”
“அப்பிடி இருந்திடக்கூடாதா என்று தான் என்ர மனசும் ஏங்குது… ஆனால் அப்பிடி நடந்திட்டுதே… என்ர வாழ்க்கையைத் தேடிப் போய்த் தன்ர வாழ்க்கையைத் துலைச்சிட்டு வந்து நிக்கிறாளே பாவி…. கடைசில பார்த்தால் ரெண்டு பேரும் வாழ்க்கைய இழந்து நிக்கிறமே….”
“கவி… என்ன கவி சொல்லுறீர்…? எப்பிடியாச்சு…? யார் அந்த ராஸ்கல்ஸ்…? ஐயோ… நான் எதுக்காக இப்பிடி தொடர்பே இல்லாம இருந்தன் என்று என்னிலேயே கோபமாக கிடக்கு… இவ்வளவு வருஷமா இத்தனை விசயம் நடந்திருக்கு… எதுவுமே தெரியாமல் இருந்திட்டனே கவி… அருணுக்கு எப்பிடி ஆச்சு…?”
“ரிலாக்ஸ் ஸாம்…. நடந்து முடிஞ்சதை மாத்த முடியாதே… போன பிறப்பில நிறைய பாவம் செய்திருப்பம் போல… அதுதான் எல்லாரும் இப்பிடி அனுபவிக்கிறம்…. அது பெரிய கதை ஸாம்…”
“சொல்லும் கவி… முழுசா என்ன நடந்தது என்று சொல்லும்… ப்ளீஸ்…”
உடைந்து போய் கேட்டவனை உருக்கமாக பார்த்தவள் நீண்ட பெருமூச்சோடு சொல்லத் தொடங்கினாள்.
“யாதவ் காணாமல் போய் நானும் அப்பாவும் இங்க வந்திட்டம்… அருணும் அம்மாவும் கொழும்பில இருந்தாங்க… அப்பதான் ஒருநாள் யாதவிட சிங்கள ப்ரண்ட் ஒராள் அருணிய கொழும்பில மீட் பண்ணிச் சொல்லியிருக்கிறார். யாதவ் முல்லைத்தீவில தப்பிப் போய் நிற்பதாகவும் வீட்டுக்கு போக முடியாது என்பதால கடல் வழியா ராமேஸ்வரம் போக ட்ரை பண்ணிட்டு இருக்கிறதாகவும். எங்கள் எல்லோரிட போனும் கண்காணிப்பில இருக்கிறதால யாருக்கும் போன் பண்ணேல என்றும் தன்னைப் பற்றிக் கவலைப்படாமலும் இருக்கச் சொல்லி.
அந்த செய்தி உண்மையா பொய்யா என்று கூடச் சரியாகத் தெரியாது.இதைக் கேள்விப்பட்ட உடனே தன்ர அசட்டுத் துணிச்சலோட யாதவ தேடி முல்லைத்தீவுக்கு போய்ட்டா. அம்மாவுக்கு கம்பஸால கண்டி ட்ரிப் போறதா சொல்லியிருக்கா.
இவ முல்லைத்தீவு போன அண்டைக்கே ஏ9 பாதை (வடபகுதியை மற்றைய பகுதிகளோடு இணைக்கும் நெடுஞ்சாலை) பூட்டிட்டாங்க. திடீரென தானே எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாதை பூட்டினாங்கள். இவ அங்க மாட்டிட்டா… அங்க இருந்து ஒரு தடவை எனக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னா. நாங்க எல்லாரும் பதறிப் போய் என்ன செய்யிற என்று தெரியாமல் தவிச்சுப் போனம்…
அம்மா கொழும்பில… அருண் வன்னிக்க… நானும் அப்பாவும் இங்க… குடும்பமே சிதறிப் போச்சு…
ஆரம்பத்தில கொஞ்ச காலம் தொடர்பில இருந்தா. ஒரு குடும்பத்தோட தங்கியிருக்கிறதாகவும் அவங்க நல்லா பார்த்துக் கொள்ளுறதாகவும் எங்களை கவலைப் படாமலும் இருக்க சொன்ன…
எனக்கு மட்டும் ரகசியமாக தான் இன்னும் யாதவ தேடிட்டு இருக்கிறதாகவும் எப்பிடியும் கண்டு பிடிச்சிடுவன் என்று சொன்னா… எனக்கு அவளை என்ன சொல்லித் திட்டுற என்று கூடத் தெரியேல்ல…
பத்திரமா இருன்னு சொல்லிப் போனை வைச்சிட்டன். அம்மா அப்புறமாக ப்ளைட் ஓடத் தொடங்கினதும் இங்க வந்திட்டா…
கடைசிச் சண்டை ரொம்ப உக்கிரம் அடைஞ்சு எல்லாரும் இடம் பெயர்ந்த நேரம் கடைசியாக முள்ளி வாய்க்காலில நிக்கிறன் என்று அவ சொன்னதுதான் எங்களுக்கு கடைசியாக அவளப் பற்றிக் கிடைச்ச தகவல்.
அதுக்குப் பிறகு ரெண்டு, மூணு மாதமா எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் இங்க உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு ஒவ்வொரு நாளும் நியூஸ் பார்த்து கேட்டுக் கொண்டே காலத்தை ஓட்டிட்டு இருந்தம்.
மே 18, 2009 திடீரென போராட்டத்தின் ஆணி வேரையே அறுத்து எறிஞ்சாச்சு… யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப் பட்டுச்சு… எங்களுக்கோ எதை நினைச்சுக் கவலைப் படுற என்று தெரியேல்ல…
அடியோடு எங்கள் இனம் வேரறுக்கப் பட்டதற்காக அழுவதா…? எங்களை இத்தனை நாட்களாக கட்டிக்காத்த வீரம் மண்ணிலே புதைந்ததற்காக அழுவதா…? கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த எங்கட சொந்தங்களுக்காக அழுவதா..? தசாப்தம் தசாப்தமாக சொந்த மண்ணிற்காய் தங்கள் உயிர்களை உவந்தே தியாகம் செய்த வீர, வீராங்கனைகளுக்காக அழுவதா…? இல்லை உயிரோட இருக்கிறாளா இல்லையா என்றே தெரியாதா எங்கள் அருணிக்காக அழுவதா…?
எல்லார் வீட்டிலும் ஒப்பாரி… எங்கள் ஊர்ப் பெயரே இண்டைக்கு சர்வதேசம் முழுக்க தெரியிறதுக்கு காரணமானவரே உயிரோடு இல்லை என்றால் எந்த நெஞ்சம் தான் தாங்கும்…?
முள்ளிவாய்க்காலில் இருந்து மக்கள் எல்லோரும் வவுனியா செட்டிக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டு முகாம் அமைத்து தங்க வைக்கப் பட்டிருப்பதாகத் தகவல் கிடைச்சுது.
அப்பா பிளைட்ல ரெண்டு நாளிலேயே கொழும்பு போய் வவுனியா போய்ட்டார். ஆனால் முகாமுக்கு சென்று யாரையும் பார்க்க விடேல்ல… எந்த செய்தியும் கிடைக்காம தவிச்சிட்டு இருந்தப்ப தான் இந்தியாவில இருந்து போன் வந்திச்சு.
அருண்யா சந்திரஹாசன் நலமாக வலயம் நாலில் இருக்கிறதாக தகவல் தெரிவிக்கச் சொன்னதாக ஹிந்து பேப்பரில் போட்டிருப்பதாக யாரோ புண்ணியவான் சொல்லவும் தான் எங்களுக்கு உயிரே வந்திச்சு. அதைத் தொடர்ந்து பத்துப் பதினைந்து பேர் ஹோல் பண்ணிச்சினம். எங்கட இழப்பை தங்கடயா எண்ணி பரிதவிச்ச அந்த தமிழ்நாட்டுச் சனங்களையும் இப்பிடி ஹோல் பண்ணி பேருதவி செய்த அந்த சொந்தங்களையும் என்றைக்குமே மறக்கேலாது.
முகாம் நிலைமையை பார்க்கப் போன த ஹிந்து ரிப்போர்ட்டர் ஒராளைப் பிடிச்சு வீட்டு நம்பர் குடுத்து இவ தகவல் சொல்லி விட்டிருக்கிறா அந்தாளும் தனக்கென்ன வந்திச்சு என்று போகாமல் அதை அந்த நியூஸ் பேப்பரில போட உடன அதைப் பார்த்த கொஞ்ச சனம் எங்களுக்கு தகவல் தெரிவிச்சிட்டுதுகள். அந்த ரிப்போர்ட்டரும் எங்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அதுக்கு பிறகு அப்பா வலயம் நாலில போய் அருணிய பார்த்தும் விட்டார். நல்லா மெலிஞ்சு கறுத்து, தலைமுடி வளர்ந்து எண்ணை தண்ணி இல்லாம பரட்டை பத்திப் போய் இருந்தாளாம்…
முள்ளுக்கம்பி வேலிக்கால டெய்லி போய் அப்பா பார்த்திட்டு வந்து எங்களுக்கு சொல்லுவார். அம்மா தானும் அவளைப் பார்த்தே ஆகணும் என்று சொல்ல நானும் அம்மாவும் ப்ளைட்டால கொழும்பு போய் அங்க இருந்து ட்ரெயினில வவுனியா போய் தெரிஞ்சவங்க வீடொன்றில தங்கினம்.
அப்பா அருணியை வெளில எடுக்கிறதுக்குரிய முயற்சில இருந்தார். எங்களிட்ட காசு கொஞ்சம் இருக்கு என்று தெரிஞ்சதும் ஒரு கோடி ரெண்டு கோடின்னு பேரம் பேசினாங்க. இருக்கிற காசெல்லாம் குடுத்து வெளில எடுக்கத் தான் நாங்க ரெடியே… கடைசில அவங்க கேட்ட தொகையை ஃபாங்கில இருந்த காசு, என்ர அம்மாட நகையெல்லாம் வித்துக் குடுத்தம்.
அடுத்த நாள் அருணை விட்டிடுறாகச் சொல்லவும் கூட்டிட்டு வரலாம் என்று நாங்கள் மூன்று பேரும் சந்தோசமாக போகவும் அருணியை வவுனியா ஹொஸ்பிடலில அட்மிட் பண்ணியிருக்கு… அங்க இருந்து கூட்டிட்டு போங்க என்று தகவல் வந்திச்சு.
காசு வாங்கிக் கொண்டு முகாமில இருந்து அவளைத் தப்ப வைக்கிற வெளில தெரியக் கூடாது என்று தான் ஹொஸ்பிடல்ல விட்டிருக்காங்க என்று நினைச்சுக் கொண்டு ஹொஸ்பிடல்ல போய் அருணிய தேடினால் அவ ஐசியூ வில என்று சொன்னாங்கள்.
அஞ்சலி அந்த ஹொஸ்பிடல்ல தான் வேலை செய்தாள். அவளைப் பிடிச்சு உள்ள போய்ப் பார்த்தா அதை நான் எப்படி சொல்லுவன் ஸாம்… என்ர அருணி அங்க தன்ர கற்பை இழந்து உயிருக்கு போராடிட்டு இருந்தா…”
அதுவரை கவி சொல்வதை குறுக்கிடாமல் கண்களில் நீர் வழிய கேட்டுக் கொண்டிருந்தவன் இறுதியாக விம்மி வெடித்து அழுதபடி கவி சொன்னதைக் கேட்டு
“ஐயோ அருண்….”
என்று தன்னை மீறி ஒரு தரம் வெடித்துக் கதறியவன் வலது கையை முஸ்டியாக்கி சுவரில் ஓங்கிக் குத்தினான் பலமுறை. முட்டி தேய்ந்து தோல் வழன்று இரத்தம் வடிந்தது. ஆனால் அந்த வேதனை இதயத்தின் வேதனையை விட பெரிதாக ஒன்றும் இல்லை என்பதால் தொடர்ந்து ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தான். அவன் மனதோ அந்த நேரத்தில் அருணியை அந்த நிலைக்குள்ளாக்கியவர்களையே துவம்சம் செய்வதாக எண்ணம் கொண்டது.
தனது அழுகையை அடக்கி சேலை முந்தானையால் முகத்தை துடைத்தவள் ஸாமின் கோலத்தைக் கண்டு பதறி விட்டாள். கையால் இரத்தம் வழிய வழிய அதைப் பற்றிய சிந்தனை இன்றி வெறி பிடித்தவனைப் போலத் தொடர்ந்து குத்திக் கொண்டிருந்தவனைப் போல கதறிக் கொண்டிருந்தவனைப் பிடித்து அமர வைத்து விட்டு உள்ளே சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து அவனது கையைச் சுற்றி மருந்திட்டு கட்டுப் போட்டாள்.
“என்ன ஸாம் இது… நீங்களே இப்பிடி எமோஸன் ஆகினால் என்ன செய்யிற…? எங்கட குடும்பத்தையும் அஞ்சலியையும் தவிர யாருக்கும் தெரியாத இந்த விசயத்தை நான் ஏன் உங்களிட்ட சொல்லுறன் என்றால் அருண் எந்தளவு தூரம் மனசால பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிஞ்சால் நீங்க அதுக்கேற்ற மாதிரி அவளோட பழகி அவளை மாத்த முயற்சி செய்வீங்களே என்று தான்…”
“புரியுது கவி… ஆனா என்னால இந்த வேதனையைத் தாங்க முடியலேயே… எங்கட அருணுக்கு இந்த நிலமை வரணுமா கவி…? அந்த நேரம் ரீவில இப்பிடி எத்தினையோ நியூஸ் பார்த்தன். ஆனால் அருணும் அதில ஒருத்தியாக இருப்பாள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே…கடவுளுக்கு கண்ணில்லையா… ? வெளில அடுத்த நாள் விடுற என்று தானே சொன்னாங்கள் அந்த பரதேசியள்… அந்த ஒரு நாளில எப்பிடி கவி இப்பிடி நடந்த..?”
“அதைத் தான் விதி என்று சொல்லுவாங்க போல…. அன்றைக்கு பின்னேரம் அடுத்த நாள் வெளில வாற சந்தோசத்தோட சிரிச்சு விளையாடிட்டு இருந்திருக்கிறாள்… அந்த நேரம் ஒரு வெறிநாய் ஒரு
பன்ரெண்டு, பதின்மூன்று வயசு சின்னப் பொம்பிளைப் பிள்ளையை விசாரிக்க என்று கூப்பிட அவன் நோக்கமறிஞ்சு இவ தடுத்திருக்கா.
அவன் உடன இவளை விசாரிக்கிறன் என்று கூட்டிப்போய் ஏழெட்டுப் பேர் சேர்ந்து தங்கட வேட்கையை தீர்த்து இவளை நாசமாக்கியிருக்காங்க. அவள் ரொம்ப எதிர்த்துப் போராடியிருப்பாள் போல… அடிச்சுத் துன்புறுத்தி அவளைக் குற்றுயிரும் குலையுயிருமாகிற வரை விட்டு வைக்கேல்ல…
அவங்க அந்த இடத்தை விட்டுப் போனதும் அங்க போன ஒரு புண்ணியவான் இவள் உயிர் ஊசலாடிட்டு இருந்ததை அறிஞ்சு உடனடியாக ஹொஸ்பிடல்ல சேர்த்திருக்கிறான். அந்த வெறி பிடிச்ச ஓநாய்க் கூட்டத்திலயும் ஒரு நல்ல ஜீவன் இருந்ததால தான் அருண் உயிரோடயாவது எங்களுக்கு கிடைச்சா…
பதினொரு நாளா சுய நினைவில்லாமலே இருந்து கண் முழிச்சு எங்களைப் பார்த்ததும் அவ கதறினது இருக்கே… இன்றைக்கும் காதில கேட்டிட்டு இருக்கு…
எனக்கு ஆறுதல் தர, யாதவைக் கண்டு அவன் உயிரோட தான் இருக்கிறானா என்று அறிஞ்சு எங்கள் கவலையைப் போக்கிறதுக்காகப் போய் இண்டைக்கு தன்ர வாழ்க்கையையே என்ர வாழ்க்கைக்காக இழந்து இப்பிடி வந்து நிக்கிறாளே…. ஸாம் நான் என்ன செய்வன்..? அவளிட அசட்டுத் துணிச்சலும் முன்பின் யோசிக்காமல் செயல்படுவதும் கடைசில இப்படி அவள் வாழ்க்கையையே பலியெடுத்திட்டுதே…
நான் கடவுளிட்ட கேட்கிற எல்லாம் ஒண்டே ஒண்ணு தான்… இவ்வளவு காலமும் எங்களைப் படுத்தின பாடெல்லாம் போதும்… அருண் பட்ட கஸ்டம் வீணாகிடக் கூடாது எண்டுறதுக்காகவாச்சும் யாதவ் திரும்ப வரணும். அருணிக்கும் நல்ல ஒரு வாழ்க்கை அமைய வேணும்….”
விம்மியபடி மூக்கடைக்க கண்ணீரை வழித்து விட்டபடி புடவைத் தலைப்பால் முகத்தை துடைத்தபடி அனைத்தையும் சொல்லி முடித்தாள் கவின்யா.
கனத்த இதயத்தோடு இறுகிய முகத்தோடு சோர்ந்து போய் சாய்ந்திருந்தான் ஸாம். கவி சொன்ன நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
“அந்த சம்பவத்துக்கு பிறகு அருண் அப்படியே மாறிட்டாள். பழைய குறும்புத் தனம், கலகலப்பு எதுவும் இல்லை… என்னோட மட்டும் கதைப்பாள். அதுவும் தேவைக்கு மட்டும். வீட்ட விட்டு வெளில எங்கயும் போறேல்ல. தன்ர அறைக்கேயே தான் அடைஞ்சு கிடப்பா…
எங்கட ரெண்டு பேரிட வாழ்க்கையும் இப்பிடி ஆகினதைத் தாங்க முடியாமல் அம்மாக்கு ஸ்ரோக் வந்து படுத்த படுக்கையாகிட்டா. ஒரு கையும் காலும் விளங்காது. சரியாக பேசவும் முடியாது. அருண்தான் அவவைப் பார்த்துக் கொள்ளுறாள்.
இத்தனை வருசத்துக்குப் பிறகு அவள் வீடு தாண்டி உங்களைப் பார்க்க வாறாள் என்றால் அவளுக்கு உங்களில அவ்வளவு பாசமும் மரியாதையும் இருக்கு…
நீங்க முயன்றா அவளை பழைய அருண்யாவாக மாத்தலாம் ஸாம்…. பழைய படி அவ முகத்தில சிரிப்பைப் பார்க்கணும் ப்ளீஸ் ஸாம்… நீங்க இங்க நிக்கிற வரைக்கும் ஏதாவது முயற்சி பண்ணுங்க ப்ளீஸ்…”
“ஏன் ப்ளீஸ் பண்ணிறீர் கவி… இது என்ர கடமை… அவளுக்கு நடந்த எல்லாமே அக்சிடென்ற் தான்… அதை ஒதுக்கி அவளைப் பழைய அருணா வாழ வைக்க வேண்டியது இனி என்ர பொறுப்பு….”
“என்ன சொல்லுற என்றே தெரியேல்ல ஸாம்… ரொம்ப தாங்ஸ்….”
“ப்ளீஸ் கவி… தாங்ஸ் சொல்லி என்னை அசிங்கப் படுத்தாதையும்… நான் போறன்… அருண் வீட்ட வந்திட்டாலும்… போய்ட்டு வாறன்… உம்மட கஷ்டத்தில தோள் குடுக்க எப்பவும் இந்த ப்ரெண்ட் இருக்கிறான் என்றதை மறந்திடாதையும்… ஒண்டையும் யோசிக்காமல் சாப்பிட்டிட்டுப் போய் டியூட்டியப் பாரும்… நான் போய்ட்டு வாறன்”
கூறி விட்டு விடைபெற்று செல்பவனையே பெரிய சுமையொன்று மனதிலிருந்து இறங்கிய உணர்வோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கவின்யா.
அங்கே ஸாமின் வீட்டில் அவனுக்காய் காத்திருந்தாள் அருண்யா.
அருண்யாவை மாற்றுவானா ஸாம் அபிஷேக்?