ஹலோ பங்காரம்ஸ்,
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா
அத்தியாயம் – 13
துள்ளிக் குதிக்க வேண்டும் போல மகிழ்ச்சியில் மிதந்தாள் செம்பருத்தி.
பழைய கடிதங்களை ஆராய்ந்து தானே அய்யாவின் பெயர் அபிராம் என்று கண்டுபிடித்ததில் தான் எத்தனை ஆனந்தம்.
இது என்ன பெரிய கஷ்டமா? இந்த வீட்டில் யாரையாவது கேட்டா சொல்லிட்டுப் போறாங்க என்று அவளை மண்டையில் தட்டி உட்கார வைக்கும் விதமாக சொல்லிவிட்டுப் போகலாம். நமக்கு சின்னஞ்சிறு விஷயமாகவே நினைத்து சிரிக்கலாம்.
ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு சிறு புதிர்களையும் சவால்களையும் அவை எத்தனை சிறியதாக இருந்தாலும் சுயமாய் சிந்தித்துத் தீர்வு காண்பதுதான் இன்பம். இந்த சிறு சிறு இன்பங்கள்தான் ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குகிறது. அனுதினமும் ஒவ்வொரு துளியாக நாம் சேர்த்து வைக்கும் இந்த இனிப்புதான் வாழ்க்கையை சுவையாக மாற்றுகிறது. எனவே இனிமேல் நாம் செய்யும் ஒவ்வொரு சிறு வெற்றிகளைக் கூட நாமே கொண்டாடி மகிழ்வோம்.
மதிய உணவை சாப்பிடவே தோன்றவில்லை அவளுக்கு . இருந்தாலும் நேரத்திற்கு உண்ண வேண்டுமே. நேரம் தவறி உண்ணும்போது அளவு அதிகமாகும். இடையே நொறுக்குத் தீனியை உண்ண ஆசை வரும். மாரியம்மா அக்கா வேறு சாதத்தை குறைக்க சொன்னார்களே. இங்கு எப்படி அதைக் குறைப்பது?
“சேச்சி, சாலட் சாப்பிட்டது பசிக்கவே இல்லை. மோர் மட்டும் குடிக்கிறேன்”
“பசிக்கலையா? சாலட் இன்னும் ஒரு மணி நேரத்தில் செரிச்சுரும். கொஞ்சமா சோறும் காயும் வச்சு சாப்பிட்டுட்டு போ” என்று அன்போடு ஒருவர் சொல்லும்போது எப்படி மறுக்க முடியும்.
அந்த சாதம்தான் பழுப்பு நிறத்தில் இருந்தது. பூக்களின் அரும்புகளைப் போல உதிரி உதிரியாக இருந்ததால் இரண்டு கரண்டி போட்டதும் தட்டே நிறைந்து விட்டதைப் போல ஒரு தோற்றம்.
“போதும் போதும் ஏற்கனவே ரெண்டு கரண்டி வச்சுட்டிங்க”
“குக்கர் சாதத்தோட ரெண்டு கரண்டி வடிச்ச சாதத்தோட மூணு கரண்டிக்கு மேல வரும். அதெல்லாம் சாப்பிடலாம்” என்றபடி அதனுடன் தாராளமாக அவியலும், பொரியலும் வைத்தார்.
“அது எப்படி சேச்சி அளவு மாறும்?”
“குக்கர்ல வைக்கிறது அப்படியே அழுத்தம் தர்றதால சாதம் வேகும் ஆனால் முழுசா மலர்ந்து வேகாது. அதே அரிசியை ஒரு மணி நேரம் ஊற வச்சுட்டு பானைல வடிக்கும்போது முழுசா தண்ணியை உறிஞ்சி மலர்ந்து வெந்திருக்கும் இது மாதிரி. வடிச்ச கஞ்சியைக் கூட வீணாக்காம இங்க எல்லாரும் குடிச்சிருவோம்” என்றார் சேச்சி.
“நாளைலேர்ந்து எனக்கும் ஒரு கப் எடுத்து வைக்கிறிங்களா?”
“தாராளமா… அந்த போணில எடுத்து வச்சிருவேன். வேணும்னுறவங்க பச்சைமிளகாயோ இல்லை வெங்காயமோ தொட்டு சாப்பிட்டுக்குவாங்க. அதே மாதிரி ராத்திரி சாதத்தில் தண்ணி ஊத்தி எடுத்து வைச்சுட்டா அந்த நீராகாரத்தைத் தான் காளியம்மா குடிப்பா”
“இன்னைக்கு பாட்டிலில் ஊத்தி எடுத்துட்டு வந்தாங்களே”
“அதேதான். அவளுக்கு அல்சர் வந்தப்ப காப்பி டீயை நிறுத்திட்டு மோர் கலந்து பழைய சோறு நீராகாரத்தை குடிக்க சொல்லி டாக்டர் சொன்னாங்களாம். நிறைய பெருங்காயம், அரைச்ச இஞ்சி போட்டு அவ காலைல செய்யுற அந்த நீர்மோருக்கு இங்க ஏக கிராக்கி”
அஜீரண உபாதைகளுக்கு எளிமையான இந்த உணவு போதுமா? தான் வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் என்று டஜன் கணக்கில் வாங்கி விழுங்கிய ஆண்டாசிட் மாத்திரைகள் குவியலாய் அவள் மனக்கண்ணில் விழுந்தது.
“பருப்பு கறி இருக்கு எடுத்துக்கோ” அவளை மேலும் சிந்திக்க விடாமல் சேச்சி
“மோர் போதும் சேச்சி”
“நீ என்ன மோரா குடிச்சு உயிர் வாழப் போறியா? இந்த வீட்டில் நீ ஓடுறதுக்கே நிறைய சக்தி தேவை மோளே. நேரம் கிடைக்கும்போது நல்லா சாப்பிட்டுக்கோ” என்று அன்பு கலந்த கண்டிப்புடன் சொன்னார்.
மதிய உணவிற்குப் பிறகு அலுவலக அறைக்கு சென்று அபிராம் என்ற பெயரில் வந்த கடிதங்களை பெர்சனல் என்ற தலைப்பிட்டு அடுக்கி வைத்தாள். மற்றவற்றை படித்து நிகழ்ச்சிகளுக்கு வந்த அழைப்புகளைத் தனியாகவும், நன்கொடை கடிதங்கள், தனிப்பட்ட முறையில் உதவி கேட்டு வந்த கடிதங்களைத் தனியாகவும், தொழில் முறை சம்பந்தப்பட்ட கடிதங்களைத் தனியாகவும் பிரித்து வைத்ததும்தான் இது எவ்வளவு பெரிய வேலை என்று புரிந்தது செம்பருத்திக்கு.
இந்தக் கடிதங்களைத் தொடர்ந்து படித்து குறிப்பெடுத்துக் கொண்டால் ஒரு வருடத்திற்குள் இவர்களது வாழ்க்கையே அத்துப்படியாகிவிடும். அதுமட்டுமில்லை எங்கு எவ்வளவு பணம் இருக்கிறது? எந்த இடத்தில் சொத்து இருக்கிறது என்பது பற்றிய விவரங்கள் எல்லாம் சுலபமாகக் கணித்து விடலாம். அதனால்தான் இங்கு வேலை செய்ய நம்பிக்கையான ஆள் மிக மிக முக்கியம். அதனாலேயே இவளைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார் வக்கீல் என்பது அவளது புத்திக்கு உறைத்தது.
“பரவால்லையே! என் பெயரைக் கண்டுபிடிச்சுட்ட போலிருக்கு!” என்று அபிராம் மெச்சுதலாக சொன்ன வார்த்தையே அவளுக்கு அந்த வேலையைத் தொடர உந்து சக்தியாக இருந்தது.
அடுத்து பாலாவை மாடியில் இருந்த சிறிய அலுவலக அறையில் சந்தித்தாள். “மூணு விருந்து இருக்குன்னு அய்யா சொல்லிருக்கார் அண்ணா. அதுக்கு மெனு தயாரிச்சு அய்யாகிட்ட அப்ரூவல் வாங்கிட்டு சேச்சி கிட்டத் தரணும்”
அவள் தந்த லிஸ்டைப் மேலோட்டமாகப் பார்த்தபடி “நம்ம பாதர் வாறாரா? அவருக்குப் பிடிச்சது பிடிக்காததெல்லாம் சேச்சிக்கு நல்லா தெரியும். அடுத்து இவரு பிசினெஸ் சம்பந்தமா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருக்காரு. போன தடவை மெனுவை செக் பண்ணிங்கன்னா தெரியும்”
“இங்க விருந்து மெனுவெல்லாமா எழுதி வச்சிருப்பிங்க?” வியந்தபடியே கேட்டாள். இதையெல்லாமா எழுதி வச்சிருப்பிங்க என்று அவள் கேட்டதை வேறு விதமாகப் புரிந்து கொண்டான் பாலா.
“உங்க சந்தேகம் சரிதான். அரண்மனையிலதான் ஒவ்வொரு வேளை சமைச்சது, விருந்து கொடுத்த மெனு, அதுக்கான செலவுக்கணக்கு எல்லாம் எழுதி கோப்பில் போட்டு வச்சிருப்பாங்க. இங்க விருந்தாளிகள் கம்மின்னுறதால அந்த அளவுக்கு ரெக்கார்டு பண்ண முடியாது. அதனால விருந்து மெனு விவரத்தை மட்டும் கம்ப்யூட்டர்ல சேமிச்சு வச்சிருப்பாங்க. விவரங்களைப் பராமரிக்க சரியா ஆள் இல்லாததால முழு தகவல்களும் கிடைக்கிறது கஷ்டம்தான்”
“ஏதாவது சந்தேகம்னா யாரை கேக்குறது. இதெல்லாம் அய்யாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை”
“உண்மைதான். நம்ம சேச்சிக்கே அரண்மனைல பல வருடங்கள் வேலை பார்த்த அனுபவம் இருக்கே. அவங்களே நிறைய விவரங்கள் சொல்லுவாங்க. அதைத் தவிர ஏதாவது தேவைன்னா என்கிட்டே சொல்லுங்கம்மா”
பாதர்தான் முதல் விருந்தாளி. அவரைப் பற்றி சேச்சியிடமே கேட்டுவிடலாம். மறுபடியும் சமையலறையில் சென்று நின்றாள்.
“ஓ இவருன்னா சரி. எனக்கு ஏற்கனவே சமைச்சு பழக்கம் இருக்கு”
“எனக்கு மெனு போட ஹெல்ப் பண்றிங்களா சேச்சி”
“ஓ… இவருக்கு நம்ம ஊரு சமையல்தான் பிடிக்கும். கேரளா சதயம் செஞ்சுடலாம்”
“கேரளா சதயம்னா?”
“விருந்து சாப்பாடு”
“பருப்பு, நெய், சாம்பார், ரசம், அப்பளம் வடை, கூட்டு, பொரியல், வறுவல், ஒரு சுவீட்டு, பாயசம்… “
“சைவம் நீ போட்டது மாதிரி சிம்பிள் மெனுவே இருக்கட்டும். பாதருக்கு கப்பக்கிழங்குன்னா ரொம்ப இஷ்டம். போன தடவை கப்பா அவிச்சதும் சிக்கன் கறியும் விரும்பி சாப்பிட்டார். இந்த முறை கப்பக்கிழங்கு பிரியாணி சேர்த்துக்கோ”
“கப்பக்கிழங்கு பிரியாணியா?”
“ஆமாம். மலபார் பக்கம் ரொம்ப பேமஸ். கல்யாண விருந்தில் கூட பார்க்கலாம். அது கூடவே செம்மீன் தீயலும் சேர்த்துடு”
“செம்மீன் தீயலா?”
“பிரான் கறின்னு வேணும்னா உனக்குப் புரியுறதுக்காக எழுதிக்கோ”
“சரி சேச்சி. இதை நான் அய்யாகிட்ட காமிச்சு அனுமதி வாங்கிடுறேன்”
“ஏன்? ஏதாவது உணவுக் கட்டுப்பாடு இருக்கா”
“அப்படின்னா?”
“மனுஷ உடல்தானே மோளே. இன்னைக்கு இருக்குற மாதிரி எப்போதும் இருக்குமா? வயசாகும்போது உணவுப் பழக்கம் உடல் நிலையைப் பொறுத்து மாறும். அதனால அவரோட ஆபிசுக்கோ இல்லை பெர்சனல் நம்பருக்கோ போன் பண்ணி அவருக்கு ஏதாவது அலர்ஜி இருக்கா? ஏதாவது காய்கறி விலக்கணுமான்னு கேட்டு தெளிவு படுத்திக்கோ. அப்பறம் அந்த குறிப்போட அய்யாவுக்குத் தா… “
இதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயம் போலிருக்கே. என்றெண்ணியபடி மெனுவைப் பற்றிய கேள்விகளை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உறுதி செய்துக் கொண்டு, அதன்பின் அபிராமிடம் காட்டி அப்ரூவல் வாங்கி சேச்சியிடம் தந்தபொழுது பொழுது சாய்ந்து இருட்டியே விட்டது.
செம்பருத்தியைக் கிளம்பச் சொன்னதும் அப்படியே காளியம்மாவின் அறைக்கு ஓடி வந்துவிட்டாள். காலும், முட்டியும் வலியில் முனகியது.
ஓவியாவும் “செம்பருத்தி அக்கா” என்று குதித்து ஓடியபடி வந்துவிட
“காலு வலிக்குது” என்றாள் அவளிடம்.
“நெனச்சேன்கா… இந்த வீட்டில் மாடி ஏறி இறங்கியே காலு வலி வந்துடும். இன்னைக்கு எத்தனை தடவை மேலயும் கீழயும் ஏறி இறங்குனிங்க? ஒரு 10-15 வாட்டி?”
“இருக்கும்”
“இந்தாங்க” என்றபடி கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையின் கால் வலியை முறிக்கும் எண்ணையை நீட்டினாள்.
இருவரையும் சாப்பிட அழைக்க வந்த காளியம்மா “காலு வலிக்குதா பாப்பா?” என்றாள்.
“ஆமாக்கா”
“இந்த எண்ணையைத் தடவி நல்லா நீவி விட்டுட்டு சுடுதண்ணில குளிச்சா வலி குறையும். நீ குளிச்சுட்டு சாப்பிட வா. நான் சேச்சிகிட்ட உனக்கு சாப்பாட்டை எடுத்து வைக்கச் சொல்றேன் ”
காளியம்மா சொல்லியபடி நன்றாக எண்ணையைக் காலில் தடவி நீவி விட்டு அதன் பின் சுடுநீரில் குளித்து முடித்தபொழுது உடலே லேசாக இருந்தது”
இரவு உணவு சாப்பிட சென்றபொழுது அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க சேச்சி, காளியம்மா, ஓவியா மூவரும் ஸ்டாஃப் உணவு அருந்தும் அறையில் சாப்பாட்டு மேஜையை சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“காளியம்மாக்கா உங்க ரூமுக்கு பக்கத்தில் இருக்குற ரூம்ல என் பெட்டியை வச்சுடுறிங்களா”
“ஹய்யா… நீங்களும் எங்க ரூமுக்கு பக்கத்திலேயே வரப் போறிங்களா?”
“அய்யாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு” இழுத்தார் சேச்சி.
“கேட்டுட்டேன் சேச்சி. ராத்திரி ஆபிஸ் வேலை எதுவும் இருக்காதாம். எனக்கு வசதியான இடத்தில் தங்கிக்க சொன்னார். அவருக்கு உதவின்னா பக்கத்தில் பாலாவையாவது கோபனையாவது அழைச்சுக்குறேன்னு சொல்லிட்டார்”
“அப்ப சரி. நாளைக்கு அந்த ரூமை சுத்தம் செஞ்சுட்டு உன் பொருளை எல்லாம் எடுத்து வைக்க சொல்றேன்”
“அப்ப இன்னைக்கும் எங்க ரூமில் ரெண்டு பேரும் கதை பேசுறோம்” என்று குதித்தாள் ஓவியா.
“கதை பேசுறதா… விட்டா இங்கேயே தூங்கிருவேன். அவ்வளவு டயர்ட்டா இருக்கேன்”
“அக்கா, வெற்றிகரமான முதல் நாள் போலிருக்கு. மெனு போட்டுட்டிங்களாமே… “
“ஒரு வழியா… சேச்சி ஹெல்ப்போட “
“நம்ம சேச்சிக்குத் தெரியாதது இந்த வீட்டில் எதுவுமே இல்லை. எங்க மெனுவைக் கொண்டு வாங்க” என்றாள் ஓவியா.
மெனுவில் இருக்கும் ஐட்டங்களை எண்ணினார்கள். “அம்மாடியோ… மொத்தம் இருபத்தி அஞ்சு வெரைட்டி. இது எல்லாத்தையும் யாரு சாப்பிடுவா? பாதி நேரம் நம்ம அய்யா பழம், பச்சை காய்கறி, பிரட் இப்படித்தான் சாப்பிடுறார். அப்பறம் எதுக்கு இத்தனை வெரைட்டி சேச்சி?” செம்பருத்தி மனதில் இருந்ததை ஓவியா கேட்டே விட்டாள்.
“அது அப்படித்தான் மா. இந்த மாதிரி பெரிய குடும்பத்தில், தலைவருக்கு சாப்பாடு பிடிக்குதோ இல்லையோ அவங்களைப் பாக்க வர்றவங்களுக்கு நல்ல விருந்தா தரணும். அது கட்டாயம். ராஜவிருந்தை எதிர்பார்த்து வர்றவங்களுக்கு தினமும் பண்டிகை மாதிரி சமைச்சு வைக்கணும். ராஜா கூட சாப்பிடுறதே விருந்தினருக்கு ஒரு பண்டிகைதானே. அதே மாதிரி யாரு எந்த நேரத்துக்கு வந்தாலும் சாப்பிட ஏதாவது கண்டிப்பா தரணும்”
“எப்படி இத்தனை வெரைட்டி செய்விங்க? நாங்க வேணும்னா தெரிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணுறோம்”
அவளது கன்னத்தைக் கிள்ளியவர் “எனக்கு சமையலில் இருக்கும் அனுபவம் உன் வயசை விட அதிகம். எனக்கு இங்க வேலை அதிகமில்லை மோளே. எனக்கு முடியலைன்னு தெரிஞ்சாலே போதும் பெரிய வீட்டிலிருந்து சாப்பாடு இங்க மூணு நேரமும் இறங்கிடும்”
“அப்ப பேசாம சொல்லிடலாம்ல”
“ஆனால் இதெல்லாம் எனக்கு கஷ்டமா தெரியலையே. சமையல் எனக்கு வேலை இல்லை. என் வாழ்க்கை. நான் சமைச்சு உங்களுக்குப் பரிமாறி நீங்க ரசிச்சு சாப்பிடும்போது கிடைக்கும் சந்தோசம் இருக்கே…”
தொழிலை இஷ்டப்பட்டு செய்பவர்களுக்கு அது வாழ்க்கையாகவே மாறிவிடுகிறது. அப்படியே மோன நிலைக்கு சென்று விட்டார் சேச்சி லீலம்மா.
இரவு உணவு முடிந்ததும் அமைதியாக சேச்சியின் பிரார்த்தனையில் கலந்து கொண்டாள்.
சேச்சி கண்களை மூடிக் கொண்டு ஆண்டவனுக்கு நன்றி சொன்னார்.
நன்னியோடு நான் ஸ்துதி பாடிடும் எண்டே யேசு நா..தா…
எனக்காய் நீ செய்த நன்மைக்கும் இன்னி நன்னி சொல்லணும் நான்…
அர்ஹிக்காத நன்மகளும் எனக்கேகிடும் க்ருபாநிதே..
யாஜிக்காத நன்மைகள் போலுமே எனிகேக்கியோன் ஸ்துதி….
அப்படியே செம்பருத்தியின் மனம் முருகனை சரணடைந்தது.
நான் யோசிக்காத யாசிக்காத நன்மைகளையும் எனக்கு அருளும் முருகப் பெருமானே நன்றி!
Nice epi.. hope Chembaruthi will wear that kurti soon. Waiting for the next epi❤️❤️
பேர கண்டு பிடிச்சிட்டா, முதல் மெனு சக்ஸஸ்