Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 21’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 21’

அத்தியாயம் – 21

நடந்தது என்ன?

 

பத்து வருடங்கள் உருண்டோடியிருந்தது.

மந்திகையில் அமைந்திருக்கும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளியே தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து யாருக்கோ காத்துக் கொண்டிருந்தான் அவன்.

சிறிது நேரம் முதல் தான் வெளிதேசத்திலிருந்து வீடு திரும்பி இருந்தான். அங்கே பல வருடங்களாக வசித்தும் பெரிதாக மாற்றமில்லை அவனில். கொஞ்சமாக தாடி வைத்திருந்தான். 

கண்களில் சோகம் மின்ன மனதிலோ பல எண்ணங்கள் ஒன்றையொன்று போட்டி போட பெரும் அலைப்புறுதலுடன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை சுற்றி நடை பயின்று கொண்டிருந்தான். பொறுமையற்று அடிக்கொரு தரம் வைத்தியசாலை வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் அவள் வருவது தப்பவில்லை. 

விரைந்து அவளை நோக்கிச் சென்றவன்,

கொஞ்சம் நில்லும்… உம்மளோட நான் கொஞ்சம் கதைக்கோணும்…”

இத்தனை வருடங்களின் பின்பு எதிர்பாராமல் அவனைக் கண்டவள் இதயத் துடிப்பு பல மடங்காக அப்படியே விதிர்விதித்துப் போய் ஒரு கணம் அந்த இடத்திலேயே வேரோடினாள். பின்பு தன் சூழ்நிலை, தான் நிற்கும் இடம் உணர்ந்தவள் தனது ஸ்கூட்டிப்பெப் நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வேகமாக விரைந்தாள். அவள் பின்னேயே தொடர்ந்தவன் கொஞ்சம் கடினக் குரலில்,

ப்ளீஸ்… ஒருக்கால் என்னோட கதையும்… அதுக்குப் பிறகு உம்மளை டிஸ்டர்ப் பண்ண மாட்டன்…”

எனக்கு உங்களோட கதைக்க எதுவும் இல்லை…”

விறைப்பாய் சொன்னவளை தன் மனதின் சோகம் எல்லாம் திரட்டி ஒரு பார்வை பார்த்தான். 

ப்ளீஸ்…. நான் என்ன சொல்ல வாறன் என்றாவது ஒருக்கால் கேளுமன்….”

அவனின் அந்த சோகப் பார்வை இதயத்தின் ஆழம் வரை ஊடுருவி அவள் உறுதியை அசைத்துப் பார்க்க சற்றே கோபமானவள்,

ஏன்… நான் சொல்லுறது உங்களுக்கு கேட்கேலையா…? ப்ளீஸ்… இது நான் வேலை செய்யிற இடம்… இங்க நின்று சீன் போடாமல் போங்கோ… ப்ளீஸ்… எனக்கு உங்களோட கதைக்க எதுவும் இல்லை…”

கொஞ்சம் கோபமாகவே உரைத்து விட்டு அவள் தனது ஸ்கூட்டிப்பெப்பை கிளப்பிச் சென்றிருந்தாள். விக்கித்துப் போய் நின்றவன் பின் தனது மோட்டார் சைக்கிளில் ஏறி அவளைத் தொடர்ந்து சென்று அவள் நேராக அவள் வீடு செல்வதைப் பார்த்ததும் தன் வீடு சென்று கட்டிலில் விழுந்தான். 

அவன் அறிந்த சேதியின் வலியும் பயணக் களைப்பும் ஒருங்கே சேர அப்படியே தூங்கி விட்டான். 

மறுநாளும் அவள் வேலை முடிக்கும் நேரம் வைத்தியசாலை வாசலில் போய் நின்றவன் அவளைக் கண்டதும் மறுபடியும் ஆரம்பித்தான். 

ப்ளீஸ்… ஒரு அஞ்சு நிமிசம் நான் என்ன சொல்ல வாறன் என்றாவது கேளுமன்…”

மௌனமாய் தனது ஸ்கூட்டியை எடுக்கச் சென்றவளைப் பார்த்து கொஞ்சம் கடினமுற்ற குரலில்,

நீர் என்னோட கதைக்கிற வரைக்கும் நான் இப்பிடியே டெய்லி வந்திட்டு இருப்பன்… என்னை பற்றி உமக்கு வடிவா தெரியும்… என்ன செய்ற என்று நீரே யோசித்து கொள்ளும்…”

அவனின் அந்த மிரட்டலில் இவள் சலிப்புற்றாள். ஏனெனில் அவனின் பொறுமை பற்றி, காத்திருக்கும் தன்மை பற்றி அவளை விட யார் தான் அதிகம் அறிந்து விட முடியும். இவனை ஒதுக்குவதால் எந்த பிரயோசனமும் இல்லை. இவனை எதிர் கொள்வது நலம். இந்த பிரச்சினைக்கு இதோடு முற்றுப் புள்ளி வைத்து விடலாம் என்று நினைத்தவள்,

ஓகே… ஆனால் இதுக்குப் பிறகு என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது…. சரியா…?”

கூறியவள் வாகன தரிப்பிடத்திற்கு மறுபக்கம் இருந்த வைத்தியர்கள் தங்குமிட வரவேற்பறைக்கு அவனைக் கூட்டிச் சென்று அவனையும் அமரச் சொல்லி அவனுக்கு எதிரே தானும் அமர்ந்து கொண்டாள். 

சொல்லுங்கோ…. என்ன கதைக்கோணும்…?”

என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் கவி….”

ஆம். அங்கே கல்யாண பேச்சு வார்த்தை நடத்தியது எங்கள் ஸாம் அபிஷேக்கே தான்.

எந்த வித அலட்டல்களும் இன்றி நேரடியாக அவன் இப்படிக் கேட்டதில் கொஞ்சம் அதிர்ந்தே போனாள் கவின்யா. 

உங்களுக்கு என்ன விசரா ஸாம்….? எனக்கு கல்யாணம் ஆகின மறந்து போச்சா உங்களுக்கு…? நான் இப்போ மிஸ்ஸிஸ் யாதவ்மித்ரன்…”

கோபமாய் படபடத்தவளை சற்றே கை உயர்த்தி அமைதிப்படுத்தினான்.

இங்க பாரும் கவி… எனக்கு நடந்த எல்லாம் தெரியும். நேற்று வீட்ட வந்தப்ப தான் அண்ணா நடந்த எல்லா விசயமும் சொன்னார். கேட்டதும் துடிச்சுப் போய்ட்டன் கவி… இதுக்காகவா நான் என்ர காதலைத் தியாகம் பண்ணி லண்டன் போய் இவ்வளவு வருசமா தனிய இருந்து கஸ்டப்பட்டன்.”

சொல்லொணா வேதனையோடு தொடர்ந்தவனை இப்போதும் அவன் தனக்காய் உருகுவதை எண்ணி மகிழ்வதா இல்லை வருந்துவதா என்று புரியாமல் அவன் பேச்சை தடை போட்டாள்.

அதெல்லாம் ஓகே ஸாம்… ஆனால் நான் இப்ப யாதவ்விட வைப்… அதை மறந்து கதைக்கிறியளே…”

அதுதான் அவன் இப்ப இல்லையே கவி…. இனியும் அவன்ர வைப் என்று சொல்லி இப்பிடியே தனி மரமா நிக்கப் போறிரா…?” 

நான் ஏன் தனிமரமா நிக்கிறன்… எனக்கு அம்மா, அப்பா இருக்கினம். அவை நல்லாத்தான் பார்த்துக் கொள்ளுகினம்…”

லூசு மாதிரி கதைக்காதையும். அப்பா, அம்மா இன்னும் எவ்வளவு காலம் இருக்கப் போகினம்? அவையிட காலம் முடிய என்ன செய்யப் போறீர்…?”

எனக்கு என்ர வேலை இருக்கு…. எங்கட சனத்துக்கு சேவை செய்தே என்ர காலம் ஓடிடும். கஸ்டப்பட்டு படிச்சு டொக்டரா வந்த இந்த சனங்களுக்கு உதவி செய்யத் தானே…” 

கவி…! உந்த தத்துவம் கதைக்கிறதை விட்டிட்டு கொஞ்சம் பிரக்டிக்கலா கதையும். ப்ளீஸ்… என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளும்.  நடந்த எல்லாம் மறந்திட்டு லண்டன் போய் புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம்….”

ஸாம்… ப்ளீஸ் நீங்க என்றபடியால் தான் நான் இவ்வளவு பொறுமையாக கதைக்கிறது. அதுக்காக என்ன வேணுமென்டாலும் சொல்லலாமோ…? நான் கல்யாணம் ஆனவ என்று சொல்லுற உங்களுக்கு ஏன் புரியல ஸாம்…?” 

கோபமாய் தொடங்கி வருத்தமாய் முடித்தவளை வேதனையோடு பார்த்தான் ஸாம்.

அதுதான் யாதவ் இல்லையே கவி… பிறகு என்ன பிரச்சினை உமக்கு என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளுறதில…?”

ஸாம்… ப்ளீஸ்…. அவர் இல்லையென்று சொல்லாதீங்கோ… எனக்கு பக்கத்தில இல்லையே தவிர இந்த உலகத்தின்ட ஏதோ ஒரு மூலைல அவர் உயிரோட தான் இருக்கிறார்…”

நெஞ்சு விம்ம கலங்கிய கண்களோடு உணர்ச்சிவசப்பட்டவளை ஆற்றும் வழி தெரியாது கலங்கியவன் அங்கே ஒரு ஓரத்தில்  வைக்கப்பட்டிருந்த மண் பானையிலிருந்து ஒரு குவளை தண்ணீர் வார்த்து கவியிடம் கொடுத்தான். மறுக்காது வாங்கி அருந்தியவள் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள்.

இங்க பாருங்கோ ஸாம்… இண்டைக்கு வரைக்கும் என்னால யாது இல்லை என்று நினைக்கவே முடியல்ல…. அவர் உயிரோட தான் இருக்கிறார்… என்ர உள்ளுணர்வு எனக்கு சொல்லிட்டே இருக்கு… என்ர யாது இருக்கிறார்… எப்பிடியும் திரும்ப வருவார்… கட்டாயம் வருவார்…”

பிரமை பிடித்தவள் போல விட்டத்தை விழிகள் வெறிக்க சொல்லிக் கொண்டிருந்தவளை இடைமறித்தான் ஸாம்.

கவி… நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுமன்… பிரக்டிக்கலா யோசியும்… இப்பவே யாதவ் உம்மை விட்டுப் போய் பத்து வருசத்துக்கு கிட்ட ஆகிட்டு என்று நினைக்கிறன். இப்ப வராதவன் எப்ப வரப் போறான் என்று வெய்ட் பண்ணுறீர்…? இன்னும் எத்தனை வருசமா காத்திருப்பீர்…?” 

எத்தனை வருசமாகினாலும் யாது வரும் வரைக்கும் நான் காத்திருப்பன்… இந்த உடம்பில உயிர் இருக்கிற வரைக்கும் காத்திருப்பன்… எவ்வளவோ பிரச்சினையை பார்த்த பிறகும் நான் இப்ப உயிரோட இருக்கிறன் என்றால் என்ர யாது என்னைத் தேடி வரேக்க நான் உயிரோடு இருக்கோணும் என்றுதான்… என்னைக் காணாமல் அவர் ஏமாந்திடக் கூடாது என்று தான்…”

ஏன் கவி யதார்த்தத்தைப் புரிஞ்சுக்க மாட்டன் என்டுறீர்…? யாதவ் திரும்ப வாறது இனி நடக்காத விசயம் கவி. அதையேன் விளங்கிக் கொள்ளுறீர் இல்லை…? ப்ளீஸ்…  என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும். இரண்டாம் கல்யாணம் செய்யாதவங்களே இல்லையா…? யாதவோட என்ன முழுசா ஒரு வருசமாவது வாழ்ந்திருப்பீரா? பேசாமல் என்னோட வாரும்… எல்லாம் மறந்து லண்டன்ல புதுவாழ்க்கையை ஆரம்பிக்கலாம்…”

ப்ளீஸ் ஸாம்… நீங்க தான் புரியாமல் கதைக்கிறீங்க… என்னால யாதுவை மறக்க முடியாது ஸாம்… ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட் திஸ்… ப்ளீஸ்…”

அதுதான் ஏன் என்று கேட்கிறன் கவி? நீர் என்னைக் காதலிச்சது நிஜம் தானே… என்னை மறந்திட்டு யாதவோட வாழேலயா…? அதுபோல இப்ப யாதவ்வ மறந்திட்டு என்னோட வாழுறதில என்ன பிரச்சினை உமக்கு?”

ஸாம்… ப்ளீஸ் நிப்பாட்டுங்கோ… உங்களில ரொம்ப மரியாதை வைச்சிருக்கன்… அதை நீங்களே உங்கட வாயால கெடுத்துக் கொள்ளாதீங்க… 

மாத்தி மாத்தி கட்டுற சீலை மாதிரி புருஷனையும் மாத்திக் கொண்டு இருக்கேலாது ஸாம்… இது வாழ்க்கை… மனசு சம்பந்தப்பட்ட விசயம்… 

நான் உங்களை காதலிச்சது நிஜம் தான்… பொய்யென்று சொல்லேல்ல… ஆனால் அந்தக் காதல் ஒரு மாயை… கனவில, கற்பனைல மட்டும் தான் உங்களைக் காதலிச்சன். உங்க கூட அப்படி வாழ்வேன். இப்படி வாழ்வேன்னு கற்பனை நிறைய பண்ணியிருக்கிறன்தான்…

ஆனால் பத்து மாசமேயானாலும் என்ர யாதுவோட அந்த கற்பனைகள், கனவுகள் எல்லாத்தையும் நிஜமாகவே நான் வாழ்ந்திருக்கேன் ஸாம்…

அம்மா சாகப் போகிறன் என்று சொன்னதால தான் யாதவ்வ கல்யாணம் பண்ணிக் கொண்டன்… ஆனால் யாதவ் என் மேல வைச்சிருந்த அன்பு, பாசம், காதல், அக்கறை எல்லாம் சேர்த்து என்னையும் அவர் பக்கம் ஈர்த்திட்டு… 

எனக்கு சின்னதாய் தலையிடி காய்ச்சல் என்றால் கூட துடிச்சுப் போற அவரிட பாசத்தில நான் என்னையே அவரில துலைச்சிட்டன்… என்னால யாதுவை மறக்க முடியாது ஸாம்… நான் அவரோட ரொம்ப சந்தோசமா வாழ்ந்தன்… எப்பிடி என்னால அவரை மறந்து உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியும்…?”

உம்மட வேதனை, உணர்ச்சிகள், தவிப்பு எல்லாம் எனக்கு புரியுது கவி… ஆனால் நீர் வாழ வேண்டிய காலம் இன்னும் எவ்வளவோ இருக்கு… உடம்பில இளமை இருக்கிற வரை பிரச்சினை இல்லைம்மா… ஆனால் அதுக்குப் பிறகு அம்மா, அப்பாட காலம் எல்லாம் முடிய தனியாக வாழுற ரொம்ப கஷ்டம் கவி… குருட்டு நம்பிக்கையில வாழ்ந்து பயனில்லை… வடிவா யோசிச்சுப் பாரும் கவி…”

இல்லை ஸாம் என்னால முடியாது…”

கல்யாணம் என்பது ஒரு பேருக்கு தான் கவி… நாம ப்ரண்ட்ஸ் ஆகவே ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையாக வாழலாம் கவி… உமக்கு லண்டன் வர விருப்பம் இல்லை என்றால் நான் இங்க வந்து செட்டில் ஆகிறன்…”

ஸாம் நான் என்ன சொல்லுறன் என்றதையே நீங்க புரிஞ்சு கொள்ளுறீங்க இல்லை… யாது திரும்பி வருவார்… அவர் திரும்ப வரேக்க நான் அவரோட மனைவியாகவே இருக்கோணும் ஸாம்… நான் பேருக்காக என்றாலும் உங்களை கல்யாணம் பண்ணினால் அதை அவரால தாங்கிக் கொள்ள முடியாது..

நான் தினம் தினம் அவரோட மனசுக்க வாழ்ந்திட்டுத்தான் இருக்கிறன்… அவரோட கதைச்சிட்டு இருக்கிறன்… எனக்கு அவர் இல்லை என்றே தோணேல்ல ஸாம்… என்னோடயே எனக்குள்ள வாழ்ந்திட்டு இருக்கிறார்…

என்னை மன்னிச்சிடுங்க ஸாம்… உங்க நல்ல மனசு எனக்கு புரியுது… ஆனால் என்னால யாதுவை மறந்து வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியாது. இதுதான் கதைக்க வந்தனீங்க என்றால் நான் என்ர பதிலை முடிவாகச் சொல்லிட்டன். நான் போகோணும்… லேட் ஆக வீட்ட தேடப் போகினம்…”

கூறியவாறே எழுந்தவள் தலைக் கவசத்தை அணிந்தவாறு தனது ஸ்கூட்டியை நோக்கி விரைய என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் விக்கித்த உணர்வோடு கனத்த மனத்தோடு தானும் அந்த இடத்தை விட்டகன்றான்.

வீட்டுக்கு விரைந்த கவி நேராகச் சென்று கட்டிலில் விழுந்தவள் தலையணையில் முகம் புதைத்து விம்மினாள். வெளியிலே சாதாரணமாக வளைய வந்தாலும் அவள் மனதோ சுக்குநூறாக உடைந்திருந்தது. அந்த மெல்லியவள் இதயமும் எத்தனை வேதனைகளைத் தான் தாங்குவது…

யாது எங்க இருக்கிறீங்க…? சுகமா இருக்கிறீங்களாப்பா..? ஒழுங்காக சாப்பிடுறியளா…? எப்ப யாது என்னட்ட வருவீங்க…? ஸாம் பாவம் யாது… நான் கொஞ்சம் கோபமாக கதைச்சிட்டன்… என்னில இரக்கப்பட்டு, பரிதாபப்பட்டு வந்து கேட்டிருக்கிறார்… இப்ப தான் இந்த விசயம் தெரியும் போல… நான் காத்திருப்பன் யாதவ்…. எனக்கு நம்பிக்கை இருக்கு என்றைக்காவது ஒருநாள் நீங்க திரும்ப வருவீங்க என்று… வருவீங்களா யாது…?” 

அழுதுகொண்டே உறங்கியவளை வந்து பார்த்த அருண்யா அலுத்துக் களைத்து உறங்குபவளை எழுப்ப மனமற்று தானாகவே எழுகிற நேரம் எழுந்து சாப்பிடட்டும் என்று தனது வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

இங்கே ஸாமும் மிகுந்த மன வேதனையோடு படுக்கையில் சாய்ந்தவன் அப்போது தான் அருண்யாவைப் பற்றிக் கேட்க மறந்து விட்டோமே என்று மருகினான்.

யாதவ்மித்ரன் கவியைப் பிரிந்து எங்கே சென்றான்? 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’

அத்தியாயம் – 15 யாருக்கு மாலை?   பரீட்சைகள் முடிந்த அன்றைக்கே கவின்யா வல்வெட்டித்துறையிலுள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டாள். வந்த நேரமிருந்து ஓய்வெடுக்காது வரவேற்பறையையே சுத்தப்படுத்தி அழகுபடுத்தி கொண்டிருந்த மகளைப் புரியாமல் பார்த்தார் தெய்வநாயகி.      “இவ்வளவு நாளும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 14’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 14’

அத்தியாயம் – 14 யாதவின் காதல் கைகூடுமா? பெற்றோர் என்ன பதிலோடு வரப் போகிறார்களோ தெரியவில்லை என்று மிகுந்த பதட்டத்தில் இருந்தான் யாதவ். ஒவ்வொரு நிமிடங்களும் ஒவ்வொரு யுகங்களாய் எப்போது கவியை திரும்ப காண்பேன் என்று தவித்தான். மனமெங்கும் காதல் பட்டாம்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’

அத்தியாயம் – 30 மனம் மாறுவாளா அருண்யா?     அடுத்த நாள் காலை. அதிகாலையிலேயே விழிப்பு தட்டி விட கண் விழித்தவன் கட்டிலை விட்டு எழ எத்தனிக்க அவனை அணைத்தவாறு தன்னை மறந்து துயின்று கொண்டிருந்தாள் அருண்யா.