Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’

அத்தியாயம் – 20

அருண்யா எங்கே…?

காலையில் எழுந்ததுமே தந்தையிடம் இரவு ஸாம் அழுததைப் பற்றிக் கூறித் தான் சென்று பார்த்து வருவதாக ஸாம் வீட்டிற்கு சென்று விட்டாள் அருண்யா. ஸாமின் மனநிலையை புரிந்து கொண்டவர் மகளைத் தடுக்கவில்லை.  அந்த நல்ல பையனின் மனமுடைந்ததற்கு தனது குடும்பம் தானே காரணம் என்ற குற்றவுணர்வு அந்த பெரிய மனிதருக்கு. ஏதோ அருணியால் அவனுக்கு ஆறுதல் அளிக்க முடியும் என்றால் அதுவே பெரிய விசயமாய் அவருக்கு. அருண்யா எங்கே என்று கேட்ட அனைவரிடமும் அவள் தனது பல்கலைக்கழக நண்பியைச் சந்திக்க சென்றிருக்கிறாள் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார். 

அருணிக்கோ யாதவை கண்ணிலும் காட்டக் கூடாது. தாயோடு கதைப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டாள். தமக்கை சூழ்நிலை கைதியாக இருந்தாலும் கவி இன்னும் கொஞ்சம் துணிவாக தன் காதலுக்காய் போராடியிருக்கலாமோ என்ற ஆதங்கம் அவளுக்கு. இவன் இத்தனை அவசரமாக காதலித்து வந்து பெண் கேட்டதால் தானே இவ்வளவு குழப்பமும் என்று யாதவில் அத்தனை கடுப்பு. 

கவியும் யாதவும் சிரித்து கதைத்தாலே இவளுக்கு இங்கே பற்றும். என் ஸாம் ஸேரை அழ வைத்து விட்டு இங்கே நல்லா சிரியுங்கள் என்று குமைவாள். இருந்தாலும் தமக்கை யாதவோடு சந்தோசமாக வாழ்ந்தால் சரி, இதற்காகத்தானே ஸாம் இத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொள்வது என்று பின் மனசையும் தேற்றிக் கொள்வாள்.

ஸாமின் வீட்டிற்கு சென்ற போது அவன் எழுந்திருக்கவில்லை. அன்று இரவைக்குத் தான் அவன் கொழும்பு செல்வதாக இருந்தான். அந்தோணி காலைத் தேநீருடனும் பத்திரிகையுடனும் உட்கார்ந்திருந்தார். இவளைக் கண்டதும் மகிழ்வாக வரவேற்றவர் அவளுக்கும் ஒரு கப் தேநீர் கொண்டு வந்து கொடுக்க இருவரும் அருந்தியவாறே அளாவளாவத் தொடங்கினார்கள். 

ரொம்ப நன்றி கண்ணம்மா. நீ வந்து அவனோடு கதைக்கிறது அவனுக்கு ரொம்ப ஆறுதல். எனக்கு சொன்னால் நான் கவலைப் படுவனே என்று என்னட்ட ஒண்டும் சொல்றானில்லை.  தன்ர ஆறுதலுக்கு உன்னட்டயாவது மனம் விட்டுக் கதைக்கிறது பெரிய விசயம்… கொழும்பில நிக்கிற காலத்திலயும் அவனைக் கொஞ்சம் கவனிச்சுக் கொள்ளம்மா…”

கவலைப்படாதீங்கோ அங்கிள்.. நான் அவரைப் பார்த்து கொள்ளுறன்… லண்டன் போய் தனியாக கஸ்டப் படப் போறாரே எண்டு தான் கவலையாக் கிடக்கு… என்ன தான் போன்ல கதைச்சாலும் நேரில பாத்துக்கொள்ளுற மாதிரி வராது தானே…”

ஹூம்… அதுசரிதாம்மா… ஆனால் இப்போதைக்கு அவன் தனக்கு நிம்மதியாக ஏதாவது செய்யட்டும்…”

ரீ கப்பை தாங்கோ அங்கிள்… நான் கிச்சின்ல வைச்சிட்டு  ஸேரை போய் எழுப்பிறன்…” 

என்று அவரது கோப்பையையும் வாங்கிச் சென்று கழுவி வைத்து விட்டு ஸாமின் அறைக்கு சென்றாள்.

அங்கே தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப மனமற்று அறையின் வாயிலில் நின்றே அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

எவ்வளவு நல்லவர் இவர்…? காதலுக்கு பிரச்சினைகள் வரும் என்று தெரிந்தும் அதனைத் தீர்ப்பதற்காய் வருடக்கணக்கில் காத்திருந்தும் கடைசியில் இப்படி தோற்று விட்டாரே… போன் செய்தால் கூட முதலில் கேட்பது சுகமாக இருக்கிறாயா? சாப்பிட்டியா? என்பது தான்… 

இப்போது கூட கவி, யாதவின் கண்களில் பட்டு அவர்களை தர்மசங்கட படுத்தக் கூடாது என்று தானே தன் உயிருக்குயிரான அப்பாவை, நண்பர்களை, பிடித்த வேலையை விட்டுக் கண்காணாத தேசத்திற்கு போய் அங்கே தனியாக இருந்து கஸ்டப் படப் போகிறேன் என்கிறார்…

சிறு வயதிலேயே தாயை இழந்தவர்… இப்போது உயிருக்குயிராய் காதலித்தவளோடு கூட ஒன்று சேர முடியாமல்… கடவுளே எதற்காக இவரை இப்படி சோதிக்கிறாய்…? வேற்று மதத்தில், வேற்று சாதியில் பிறந்தது இவர் குற்றமா? அல்லது சாதி, மதம் பார்க்காமல் பிடித்தவளைக் காதலித்தது இவர் குற்றமா?

கடவுளே…! இனிமேலாவது இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தா… கவியை மறந்து சந்தோசமாக வாழ வேண்டும்…”

என்று தூக்கத்திலே நிற்சிந்தையாக இருக்கும் ஸாம் அபிஷேக்கின் முகத்தைப் பார்த்தவாறே பலதும் நினைத்து முடித்தவள் அவனை எழுப்பும் நோக்காக,

ஸேர்… ஸேர்…”

என்று உரக்க விளித்தாள். அவளின் உரத்த சத்தத்தில் தூக்கம் கலைந்து

கண் விழித்தவன் எதிரே அருண்யாவைக் கண்டதும் மலர்வாய் எழுந்தான். 

குட் மோர்னிங் அருண்… என்ன விடிய வெள்ளனை இங்க இருக்கிறீர்…?”

பிள்ளையார் கோயிலுக்கு வந்தனான்… அதுதான் அப்பிடியே உங்களையும் பார்த்திட்டு போவம் என்று வந்தன். நைட் கொழும்பு போறீங்களா…?”

அவள் உரைப்பது பொய் என்று தெரிந்தாலும் தானும் தெரியாத மாதிரியே காட்டிக் கொண்டு,

ஓம் அருண்… பஸ் புக் பண்ண வேணும்… ட்ரவலிங் ஃபாக் அடுக்க வேணும்… நிறைய வேலை இருக்கு…”

ஓகே ஸேர்… நான் ஹெல்ப் பண்ணுறன்… நீங்க முதல்ல போய் ஃபேஸ் வோஸ் பண்ணிட்டு வாங்கோ…. நான் ரீ போடுறன்….”

அச்சச்சோ… நீர் ரீ போட்டு நான் என்ன மந்திகைல (ஒரு வைத்தியசாலை பெயர்) அட்மிட் ஆகவா…? வேண்டாம் தாயே… நான் நைட் முழுவதும் ட்ரவல் பண்ண வேற வேணும்… அப்பாவே போடட்டும்”

சும்மா போங்கோ ஸேர்… விளையாடதேங்கோ… நான் நல்லா சமைப்பன்… அம்மா இங்க கவியக்காக்கு சமைக்க என்று வர நான் தானே கொழும்பில சமைச்சு சாப்பிடுற…”

ஹூம்… அப்ப ஓகே… ரீ போட்டு வையும்… நான் குளிச்சிட்டு வாறேன்…”

என்றபடி கிணற்றடிக்குச் சென்று விட்டான். 

அங்கிள்… ஸேர் எழும்பிட்டார்… நான் ரீ போடுறன்… உங்களுக்கும் போடவே…” 

என்றபடி சமையலறைக்கு விரைந்தாள். அங்கே புட்டுக் கொத்திக் கொண்டிருந்தார் அந்தோணி. அடுப்பிலே நெத்தலித் தீயல்.

அங்கிள் தாங்கோ… நான் கொத்திறன்…” என்று வாங்கிக் கொத்தி புட்டுப்பானையில் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்ததும் நீத்துப் பெட்டியில் புட்டைப் போட்டு அவிய வைத்து விட்டு மூன்று பேருக்கும் தேநீரும் ஊற்றவும் ஸாம் குளித்து முடித்து வரவும் கணக்காக இருந்தது. 

எனக்குப் பசிக்குது… நான் சாப்பிடப் போறேன்… தேவையான ஆக்கள் வாங்கோ…” 

என்றபடி மூன்று தட்டில் புட்டையும் நெத்தலித் தீயலையும் போட்டு எடுத்துக் கொண்டு போய் சாப்பாட்டு மேசையில் வைத்து விட்டு தேநீரையும் மூன்று பேருக்கும் ஊற்றிக் கொண்டு போய் வைத்து விட்டு சாப்பிட தயாராக அமர்ந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து அந்தோணியும் ஸாமும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

அங்கிள்… தீயல் ரொம்ப டேஸ்ட்… உங்களிட்ட தான் பழக வேணும்…”

சொல்லியபடி ருசித்துச் சாப்பிடுபவளைக் கண் கலங்கப் பார்த்தனர். அதே வீட்டில்தான் இவளும் பிறந்தாளா? எப்படி இவளால் இவர்களோடு இவ்வளவு அந்நியோன்யமாக பழக முடிகிறது என்ற ஆச்சரியம் இவர்களுக்கு. 

அங்கிள்… ஒராள் ரெண்டு வருசத்தில ஒரு வெள்ளைக்காரிய கூட்டிக் கொண்டு வந்து நிக்கும்… நீங்க இப்பவே இங்கிலீஷ் கதைச்சுப் பழகுங்கோ அங்கிள்…”

என்று அருண்யாவின் கலகலப்போடு சிரித்தபடியே சாப்பிட்டு முடித்தார்கள். 

அதன்பிறகு பேசிச் சிரித்தபடி ஸாமின் பயணத்திற்குரிய ஒழுங்குகளிற்கு உதவி செய்தவள் கொழும்பில் சந்திப்பதாகக் கூறி வீடு திரும்ப மதியம் ஆகி விட்டது. 

அங்கே சந்திரஹாசன் இவளுக்காய் காத்துக் கொண்டிருந்தார். கவியும் யாதவும் தெய்வநாயகியும் யாதவ் வீட்டிற்கு சென்றிருந்தனர். அருண்யா வரத் தான் அழைத்து வருவதாகக் கூறி இவர் காத்திருந்தவர்,

ஸாம் இப்ப எப்பிடி இருக்கானம்மா?”

ஓகேப்பா… நைட் கொழும்பு போறாராம்… அம்மா, அக்காவை போய்ட்டினமா? நான் டூ மினிட்ஸ்ல ட்ரெஸ் மாத்திட்டு வந்திடுறனப்பா…”

என்றபடி விரைந்து சென்று ஒரு குட்டிக் குளியலைப் போட்டு விட்டு ஒரு நீளமான கருநீல டொப்ஐயும் கறுப்பு லெகின்ஸ்ஸும் அணிந்து கொஞ்சம் வளர்ந்திருந்த தனது முடியை உச்சியில் ஒரு கொண்டையும் போட்டுக்கொண்டு சொன்ன மாதிரியே சொற்ப நேரத்தில் தயாராகி வந்தாள். 

இருவருமாக யாதவ் வீட்டை அடைந்தனர். அங்கே யாதவ்வின் நெருங்கிய உறவினர்கள் வருகை தந்திருக்க மதிய உணவு கலகலப்பாக நடந்து கொண்டிருந்தது. யாதவ்வோடு இணைந்து சிரித்து கொண்டு இருந்த கவியைப் பார்த்து மனம் குளிர்ந்தாள் அவள் தங்கை. இவள் இப்படியே காலம் முழுவதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று மனதால் வாழ்த்தியபடி தன்னையும் அந்த விருந்தில் இணைத்துக் கொண்டாள். 

சந்திரஹாசன் தம்பதியும் அன்றிரவே கொழும்பு சென்றனர். ஒவ்வொரு குடும்பமும் தனித் தனிக் காரில் புறப்பட்டுச் சென்றவர்கள் கொழும்பில் தங்கள் தங்கள் வீடுகளில் தங்கிக் கொண்டனர். யாதவின் வீட்டில் அவனின் பெற்றோர்கள் தங்க கவியும் யாதவும் ஹில்டன் ஹோட்டலில் தங்கிக் கொண்டனர். அன்றிரவு அங்கே தான் ரிஷப்சன் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. 

இரவு முழுவதும் பயணித்ததின் விளைவு எல்லோரும் அடித்துப் போட்டது போல் தூங்கி எழும்பி மாலை ரிஷப்சனுக்குத் தயாராக தான் சரியாக இருந்தது.

கவின்யா மெல்லிய ஒரேஞ்ச்சும் பிங்க்கும் கலந்த ஒரு வண்ணத்தில்  சேலையும் யாதவ் கோட் சூட்டும் அணிந்து மிதமான ஒப்பனையில் அழகாகத் தயாராகி இருந்தனர். 

பெரும்பாலான விருந்தினர்கள் யாதவின் நண்பர்கள், சிங்களவர்கள். கவிக்கு சிங்களம் தெரியாதபடியால் ஆங்கிலத்தில் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான். பாட்டும் கூத்தும் கொண்டாட்டமுமாக அந்த வரவேற்பு இனிதே நிறைவு பெற்றது.

நாட்கள் கடந்தன. கவிக்கு இன்டேர்ன்ஷிப் ஆரம்பிக்க சில மாதங்கள் இருந்த படியால் அவள் கொழும்பில் யாதவோடு தங்கியிருந்து சிங்கள வகுப்புகளிற்கு சென்று கொண்டிருந்தாள். அருண்யா நிற்கும் நேரங்களில் இருவருமாய் கொழும்பை சுற்றுவார்கள். சில நேரங்களில் யாதவ் இணைந்து கொள்ளுவான். 

ஸாம் லண்டன் சென்றிருந்தான். விமான நிலையம் வரை சென்று கண்ணீரோடு விடை கொடுத்து இருந்தாள் அருண்யா. ஒவ்வொரு ஞாயிறும் ஸ்கைப் வர வேண்டும் என்று அவள் போட்ட கட்டளையை சந்தோசமாகவே ஏற்றிருந்தான். சொன்னது மாதிரியே கதைக்கவும் செய்தான்.

யாதவோடும் இப்போது கொஞ்சம் இலகுவாக கதைக்க ஆரம்பித்து இருந்தாள் அருண்யா. சில வேளைகளில் அவர்கள் இருவரும் போடும் சண்டைகளை சின்னச் சிரிப்போடு பார்த்திருப்பாள் கவி. 

கவிக்கும் யாதவிற்கும் இடையில் கூட கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. ஒரு குடும்ப தலைவியாக அழகாக வீட்டைப் பராமரித்தாள். எள் என்னும் முன்னர் எண்ணெயாக யாதவ் குறிப்பறிந்து அவன் தேவைகளை நிறைவேற்றினாள். 

காலையில் அவன் குளிக்க செல்லும் போது தயாராக துவாலை குளியலறையில் வைத்து விடுவாள். அவன் குளித்து முடித்து வெளியே வந்தால் அவன் படுக்கையில் போர்வை அழகாக மடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். கட்டிலில் அன்று அவன் வேலைக்கு அணிய வேண்டிய உடை அயர்ன் பண்ணி வைக்கப்பட்டிருக்கும். அவன் உடையணிந்து வெளியே வரவும் தேநீர், காலை உணவு சகிதம் சாப்பாட்டு மேசையில் அவன் ஆருயிர் மனைவி காத்துக் கொண்டிருப்பாள்.

நாட்டு நடப்பிலிருந்து சினிமா, விளையாட்டு என அனைத்தையும் அலசி ஆராய்ந்தவாறே காலை உணவை முடித்து யாதவ் புறப்பட்டு செல்வான். கார் பார்க்கிங் வரை சென்று இவள் வழியனுப்ப அவள் உச்சி வகிட்டில் ஒரு முத்தத்துடன் மனைவியின் செம்மை பூத்த வெட்கச் சிரிப்பையும் கையசைப்பையும் ஏற்றுக்கொண்டு இவன் புறப்படுவான். 

வீட்டிற்கு திரும்பும் கவி சிறிது நேரம் வீட்டை சுத்தம் செய்வது, பின் தொலைக்காட்சி பார்ப்பது, இணையத்தில் எதையாவது நோண்டுவது என்று நேரம் செலவளித்து விட்டு மதிய சமையலைச் செய்வாள். யாதவிற்கு வெளியில் ஏதும் தொழில் முறை மதிய விருந்துகள் இல்லை என்றால் அவன் கட்டட வேலை நடக்கும் சைட்டுக்கோ அல்லது அவனது அலுவலகத்திற்கோ தனக்கும் சேர்த்து மதிய உணவை எடுத்துச் செல்வாள். 

இருவருக்கும் பரிமாறி உண்டு முடிய சிறிது நேரம் கணவனோடு கழித்து விட்டு தனது சிங்கள வகுப்பிற்குச் செல்வாள். வகுப்பு முடிய கார்கில்ஸ் பூட் சிட்டிக்குச் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்புபவள் தொலைக்காட்சியோடு ஒரு தேநீரை அருந்தி விட்டு இரவுச் சமையலை முடித்து வைக்கவும் யாதவ் அலுத்துக் களைத்து வந்து சேருவான்.

அவன் குளித்து இரவுடையோடு வரவும் இவள் இருவருக்கும் தேநீரோடு காத்திருப்பாள். அன்றைய நாளின் நிகழ்வுகளை இருவரும் பரிமாறிக் கொண்டே தேநீரை அருந்தி விட்டு யாதவ் தனது அலுவலக வேலைகளை சிறிது நேரம் செய்ய கவி தாயோடும் மாமியாரோடும் தொலைபேசியில் பேசிக் கொள்வாள். அதன் பின் யாதவ் வர இருவரும் இரவுணவை முடித்து இருவருமாக சேர்ந்து தொலைக்காட்சி பார்ப்பார்கள். முதல் நாளிரவின் வழக்கத்தை மாற்றாமல் இருவரும் இன்று வரைக்கும் ஒரே கட்டிலில் தான் படுத்து உறங்கினாலும் கவியின் சிறிது விலகல் தன்மை இன்னும் யாதவை நெருங்க விடாமல் செய்கிறது. 

சில நேரங்களில் இரவு உணவிற்கு அருண்யா வருவதுண்டு. பின் யாதவ் அவளை வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு வருவான். தங்கள் வீட்டில் தங்கச் சொல்லிக் கேட்டும் அவள் மறுத்து விட்டாள். அக்காவோடு இருந்தால் கதைத்துக் கொண்டிருப்பேன், படிக்க மாட்டேன் என்ற அவள் காரணம் அவள் குணமறிந்த எல்லோராலும் ஏக மனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் கவியின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருந்து தாயாரோடு பேசுவதை நிறுத்தி இருந்தாள் அருண்யா. கொழும்புக்கும் அவரை வர வேண்டாம்.  தான் தனியாக சமாளித்துக் கொள்வேன் என்று தனியாக தான் இருக்கிறாள்.

கணவனிடம் கண்ணீர் வடித்த தெய்வநாயகிக்கு இது நீயே தேடிக்கொண்டது. நீயே பார்த்துக் கொள் என்று தான் ஒதுங்கி தன் கோபத்தையும் தீர்த்துக் கொண்டார் சந்திரஹாசன். 

இப்படி தெளிந்த நீரோடையாக ஒரு ஒழுங்கில் சென்று கொண்டிருந்த அனைவரது வாழ்க்கையும் யாருமே எதிர்பாராதவாறு திருப்பிப் போடப் பட்டது. இந்த வேதனையை விட மரணமே சிறந்தது என்று எண்ணும் வண்ணம் அந்த குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்தது. தெய்வநாயகி மாரடைப்போடு பாரிசவாதம் வந்து இடக்கையும் காலும் செயலிழந்து படுத்த படுக்கையானார்.

அப்படி அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட அந்த நிகழ்வு தான் என்ன

1 thought on “யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’

அத்தியாயம் – 26 நல்ல முடிவாய் எடுப்பானா ஸாம்?     அடர்ந்து பரந்து நிழல் பரப்பியிருந்த பெரிய சவுக்கு மரத்தின் கீழே ஜமுக்காளம் பரப்பி உணவுப் பொருட்களைக் கடை பரப்பி சுதனின் கர்ப்பிணி மனைவி காவல் இருக்க மீதி அனைவரும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’

அத்தியாயம் – 08 ராக்கிங்கில் இருந்து தப்புவாளா கவி?     காலை ஆறு மணி. வழக்கம்போல அடித்த அலாரத்தை நிறுத்தி விட்டு திரும்பவும் போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு தன்னவளோடு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கம் அருகே இருந்த பெரிய மரத்தை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’

அத்தியாயம் – 15 யாருக்கு மாலை?   பரீட்சைகள் முடிந்த அன்றைக்கே கவின்யா வல்வெட்டித்துறையிலுள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டாள். வந்த நேரமிருந்து ஓய்வெடுக்காது வரவேற்பறையையே சுத்தப்படுத்தி அழகுபடுத்தி கொண்டிருந்த மகளைப் புரியாமல் பார்த்தார் தெய்வநாயகி.      “இவ்வளவு நாளும்