Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 16’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 16’

அத்தியாயம் – 16

காதல் கை கூடுமோ?

 

அந்த நாள் காலை வழக்கம்போல அழகாகவே விடிந்தது. அதிகாலை நான்கரை மணி போல வீடு வந்திருந்த சந்திரஹாசனும் அருண்யாவும் இன்னும் போர்வைக்குள் புரண்டு கொண்டிருந்தனர். காலையிலேயே எழுந்து விட்ட கவின்யா தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. சிந்தனை உருக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

 

திடீரென்று அவள் இதயம் படபடக்கென அடித்துக் கொள்ள உள்ளுணர்வு உந்தித் தள்ள அறையை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அவள் எண்ணமே சரிபோல அங்கே புன்னகை மன்னனாக யாதவ்மித்ரன் அமர்ந்திருந்தான். அவன் முன்னால் இருந்த சிறிய முக்காலியில் ஒரு கட்டு திருமணப் பத்திரிகை. அதில் ஒன்றைத்தான் தெய்வநாயகி திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். 

 

 

அதேநேரம் அந்தோனியும் ஸாமும் வெளிவாயிலில் நின்று அழைத்து கொண்டிருந்தார்கள். வெளியே சென்று யார் என்று பார்த்த தெய்வநாயகிக்கு இவர்களை எவ்வாறு திருப்பி அனுப்புவது என்பது புரியாமல் விழிக்க,

 

 

வணக்கம் அம்மா! ஐயா நிக்கிறாரா? உங்கள் எல்லோரோடயும் கொஞ்சம் கதைக்க வேணும்.”

 

 

உள்ள வாங்கோ அந்தோனி…. எதுக்கு அங்கேயே நின்று கதைச்சுக் கொண்டு…”

 

 

அவர்களை அவ்வளவு அவசரமாக உள்ளே அழைத்தது தெய்வநாயகி அல்ல அவர் கணவர். பேச்சு சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்தவர் வரவேற்பறையில் யாதவ்வை யாரென யோசனையோடு நோக்கவே வெளியே பேச்சுக்குரல் கேட்க வெளியே எட்டிப் பார்த்து இவர்களை கண்டு விட்டார். 

 

 

அவரின் அழைப்பை ஏற்று இவர்களும் உள்ளே சென்று அமர்ந்தார்கள். ஸாமின் பார்வையும் யாதவ்வின் பார்வையும் ஒரு கணம் ஆளாளுக்கு அளவெடுத்துக் கொண்டது.  

 

 

தமிழர் பண்பாய் விருந்தோம்ப கேக்கும் பருத்தித்துறை வடை கொஞ்சமும் ஒரு தட்டில் கொண்டு வந்து அனைவருக்கும் உபசரித்தார் தெய்வநாயகி. ஆனால் அவர் மனமோ உள்ளே அனலாய் கனன்று கொண்டிருந்தது.

 

 

மாப்பிள்ளை இருக்கிற நேரமாக பார்த்து இந்த வேத்து சாதி நாய்கள் வந்திருக்குதுகளே…. என்ன கதைக்கப் போகுதுகளோ தெரியலயே… யாதவ் தம்பி இருக்கிறதால இதுகளுக்கும் நாங்க புழங்கிற கப்பிலயே ரீ குடுக்க வேண்டியதா இருக்கு. இதுகள் போய் முடிய அந்த ரெண்டு கப்பையும் தலையைச் சுத்தி தூக்கி எறியோணும்…”

 

 

மனதில் பலவகை சிந்தனைகள் அலைக்கழிக்க அவரும் சந்திரஹாசன் பக்கத்தில் சென்றமர்ந்து சம்பாசனைக்கு தன்னை தயார் படுத்தி கொண்டார். 

 

 

நாட்டு நடப்புகளை சுற்றி வந்த பேச்சு ஒரு வழியாக விஷயத்திற்கு வந்தது. 

 

 

சந்திரஹாசன் ஸேர்… தப்பாக நினைக்கக் கூடாது… உங்கட மூத்த பிள்ளை கவியை என்ர மகன் ஸாமுக்கு சம்பந்தம் பேசத் தான் வந்தனான்…”

 

 

அந்தோனி மென்று முழுங்கவும் சந்திரஹாசன் அவசரமாக தடுத்தார்.

 

 

அந்தோனி இதில சங்கடப்பட என்ன இருக்கு? நீங்கள் வீடு தேடி வந்ததில எனக்கு ரொம்ப சந்தோசம். எனக்கு எப்பவும் என்ர பிள்ளையளிட விருப்பம் தான் முக்கியம். அதுகளைப் படிப்பிச்சு ஆளாக்கி விட்டது சுதந்திரமாக முடிவெடுக்க தானே. நான் கவிய கூப்பிடுறன். அவளிட்ட கேட்டிட்டு மிச்ச விசயங்களை பேசுவம்…” 

 

 

என்றவர் உள்ளே திருப்பிக் கவின்யாவை அழைத்தார். 

 

 

அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது. 

 

 

யாதவ் மண்டையை பிய்த்து கொள்ளும் நிலையில் இருந்தான். தானோ கல்யாணப் பத்திரிகையோடு வந்தமர்ந்து இருக்கிறேன். இவர் என்னடா என்றால் இத்தனை மகிழ்ச்சியாக கல்யாணப்பேச்சு பேசுகிறார்… இப்போது கவி வந்து என்ன சொல்வாளோ…

 

 

தெய்வநாயகியோ இருதலைக் கொல்லி எறும்பாக தவித்தார். எங்கே யாதவ்வின் முன்னால் கவி ஸாமைப் பிடிக்குதென்று சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விடுவாளோ என்று.

 

 

சந்திரஹாசன் மகிழ்ச்சியாக இருந்தார். மகளின் இத்தனை வருட காத்திருப்பு ஈடேறப் போகின்றதே என்று. 

 

 

ஸாமோ பரீட்சை பெறுபேற்றை அடுத்த நிமிடத்தில் அறிந்து விடப் போகும் மாணவனின் படபடப்போடு காத்திருந்தான்.

 

 

அந்தோனியோ மகனின் ஆசை நிறைவேற வேண்டும் என மனதிற்குள்ளேயே ஜெபித்துக் கொண்டிருந்தார். 

 

 

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகத் தவிக்க வைத்து விட்டு அனைவரையும் பொதுவாக பார்த்து ஒரு சினேக முறுவலை வழங்கி விட்டு கவின்யாவும் வந்தமர்ந்து கொண்டாள்.

 

 

கவி…. இவங்கட மகன் ஸாமிற்கு உன்னை பொண்ணு கேட்கிறாங்கம்மா. உன்ர விருப்பம் என்ன என்று சொன்னால் நாங்க மேற்கொண்டு கதைக்கலாம்..”

 

 

அப்போது தான் எழுந்திருந்த அருண்யா வெளியே எட்டிப் பார்த்து விட்டு ஸாமைக் கண்டதும் மகிழ்ச்சியோடு முகம் கழுவி அவசர அவசரமாக உடை மாற்றி ஓடி வந்து கவின்யாவின் அருகில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு கவி சம்மதம் சொல்லும் போது ஸாமின் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அப்போது தானே பிறகு அதை வைத்து அவர்களைக் கேலி செய்யலாம். அங்கே இருந்த யாதவ்வை யார் என்று தெரியாததால் ஸாமின் அண்ணாவாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டாள்.

 

 

அனைவரும் ஆவலாய் கவியின் முகத்தையே பார்த்திருக்க கவியும் தனது மென் குரலில் தனது முடிவை வெளியிட்டாள்.

 

 

இவர் யாதவ். ஒரு பில்டிங் கன்ரக்ஷன் கொம்பனி வைச்சு நடத்திறார். ராசி சில்க்ஸ் இவரிட அப்பாட கடை தான். இவர் ஒரு தரம் அக்ஸிடென்ற் ஆகி ஹொஸ்பிடலில அட்மிட் ஆகியிருந்த நேரம் எங்களுக்க பழக்கம் ஆகிச்சு. நாங்கள் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப விரும்பிறம்… வர்ற பத்தாம் திகதி எங்கள் ரெண்டு பேருக்கும் கல்யாணம். நீங்கள் வந்து வாழ்த்தினால் ரொம்ப சந்தோசம்…” 

 

 

மூச்சு விடாமல் கோர்வையாக இயம்பி முடித்து அங்கிருந்த கல்யாணப் பத்திரிகை கட்டிலிருந்து ஒரு பத்திரிகையை உருவி அந்தோனியின் கையில் கொடுத்தாள்.

 

 

ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. ஆனால் எல்லோர் மனங்களும் வேறு வேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. 

 

 

கவியின் வார்த்தைகளால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற யாதவ் கவியின் உணர்ச்சி துடைத்த ஒப்பித்தது போன்ற பேச்சில் கொஞ்சம் மனம் குழம்பி நின்றான். இதில் ஏதோ விடயம் இருக்கிறது என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. 

 

 

தெய்வநாயகியின் மகிழ்ச்சிக்கு அளவேது…? வாயெல்லாம் பல்லாகப் பூரித்துப் போய் அமர்ந்திருந்தார். அவர் திட்டம் வென்று விட்ட திருப்தி அவருக்கு. 

 

 

சந்திரஹாசனுக்குத் தெளிவாக புரிந்தது. இது மனைவியின் திருவிளையாடல் தான் என்று. ஆனாலும் இவள் ஏன் என் துணை இருக்கு என்று தெரிந்தும் தாயின் வார்த்தைக்கு மதிப்பளித்து தன் காதலைத் துறக்கிறாள் என்று புரியாமல் குழம்பினார். பாவம். அவருக்கு எங்கே தெரியப் போகிறது… அவர் மகள் மதிப்பளித்தது தாயின் வார்த்தைக்கல்ல.. அவரின் உயிருக்கென்று…

 

 

அந்தோனியோ குற்ற உணர்வால் குறுகிப் போய் அமர்ந்திருந்தார். அவரின் மனதின் வேதனை முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. தன் பேச்சிற்கு மதிப்பளித்து இத்தனை வருடங்களாக காத்திருந்த மகனின் ஆசையைத் தன்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்ற இயலாமை அவரிடம். 

 

 

ஸாமோ இன்னமும் கவியின் முகத்தையே பார்த்தவாறு அவள் சொன்னதை நம்பமுடியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். ‘

 

 

இவள் என்ன சொல்கிறாள்… வாய் விட்டு பேசினால் மட்டும் தான் காதலா..? இத்தனை நாட்களாக காணும் நேரமெல்லாம் எங்கள் இருவருக்கும் மட்டுமே புரியத்தக்க வகையில் நயனபாஷயில் பேசிக் கொண்ட அந்த காதல் தருணங்கள் இவளுக்கு மறந்து விட்டதா என்ன? எப்படி இவனைக் காதலிக்கிறேன் கல்யாணம் என்று பத்திரிகை எடுத்து நீட்டுகிறாள்… அருணி கூட சொல்லவில்லையே… அப்படி என்றால் அவளுக்கு கூடத் தெரியாமல் இங்கே ஏதோ நடந்திருக்கிறது. கவியின் முகத்தில் கூட காதலித்து திருமணம் செய்யப் போகும் மலர்ச்சி இல்லை…’

 

 

மனசுக்குள்ளே மாறி மாறி பல எண்ணங்கள் தோன்ற கவியின் முகத்தில் இருந்து பார்வையை அருணியை நோக்கித் திருப்பினான். அவளோ தனக்கு எதுவும் தெரியாது என்று தலையை மெதுவாக அசைத்தாள். அதைப் பார்த்து விட்டு இனியும் மௌனித்து பலன் இல்லை என்று வாயைத் திறந்தான் ஸாம்.

 

 

இங்க பாரும் கவி… ஆறு வருடங்களாக நானும் நீரும் வாய் விட்டு ஏதும் பேசிக் கொள்ளேல என்றாலும் உமக்காக நான் காத்திட்டு இருக்கிற உமக்கு வடிவாத் தெரியும் தானே… பிறகேன் இவ்வளவு அவசரமா இந்த திடீர் முடிவு..?

 

 

சாதி, மதம் வேற என்று பயப்பிடுறீரா? அல்லது அதைச் சொல்லி யாரும் உம்மை இந்த கலியாணத்திற்கு உம்மைக் கட்டாயப் படுத்துகினமா…?

 

 

அல்லது வேறு ஏதாவது விதத்தில யாராவது உம்மை வற்புறுத்துகினமா? என்ன என்றாலும் தயங்காம பயப்பிடாம சொல்லும் கவி… இது எங்கட வாழ்க்கை பிரச்சினை… நீர் படிச்ச பிள்ளை தானே… பிறகும் ஏன் இந்த சாதி, சமயம் என்று ஆசைப்பட்ட வாழ்க்கையை இழக்கப் பாக்கிறீர்

 

 

நான் உம்மில எவ்வளவு அன்பு வைச்சிருக்கிறேன் என்று நான் சொல்லி உமக்கு தெரிய வேண்டியதில்லை. பிறகேன் இப்படி ஒரு முடிவெடுத்தீர்…?” 

 

 

கொஞ்சம் கோபம்,  கொஞ்சம் காதல், கொஞ்சம் ஆதங்கமாய் கேட்டு முடித்தான் ஸாம்.

 

 

அவன் கேட்ட அனைத்தும் இதயத்தை பிசைய மனசுக்குள்ளே கதறினாள் கவி.

 

 

அபி… எனக்கு தெரியும் அபி… நீங்கள் எவ்வளவு என்னைக் காதலிக்கிறீங்க என்று எனக்கு தெரியும் அபி… நான் உங்களை கல்யாணம் செய்யப் போறேன் என்று சொல்லி அம்மா உயிரை விட்டிட்டால் அதுக்குப் பிறகு ஒரு நாளாவது எங்களால சந்தோசமா வாழ முடியுமா..? அதால தான் இந்த முடிவை எடுத்தேன். உங்கட நல்ல மனசுக்கு நீங்கள் சந்தோசமா வாழ்விங்க ஸாம். என்னை விட நல்ல பொண்ணா உங்களுக்கு கிடைப்பா அபி…’

 

 

மனதிற்குள் கதறி அழுது அதை வெளியே காட்டாமல் நடுங்க ஆரம்பித்த குரலை கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்டு பதிலிறுத்தாள் கவின்யா. 

 

 

நீங்கள் சொல்லுற மாதிரி நான் சுதந்திரமாக முடிவெடுக்கிற ஆள்… என்னைக் கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைக்க நான் ஒண்டும் சின்னப் பிள்ளை இல்லை. என்னட்ட யாதவ் புரபோஸ் பண்ணேக்க அவரை எனக்குப் பிடிச்சிருந்தது. அதனாலதான் இந்த கலியாணத்துக்கு சம்மதிச்சன். 

 

 

உங்களில எனக்கு காதல், கத்தரிக்காய் எதுவும் இல்லை எண்டுறபோது இதில சாதி, சமயம் எங்க வந்திச்சு…? நான் என்ர முடிவை இறுதியாக சொல்லிட்டன். இனியும் என்னை ஆக்கினைப் படுத்தாமல் வெடிங்குக்கு வந்தால் சந்தோசம்… உங்கட மனசைக் காயப் படுத்துற மாதிரி நான் நடந்திருந்தாலோ பேசி இருந்தாலோ என்னை மன்னிச்சிடுங்கோ”

 

 

அவள் கூறி முடித்ததும் இனியும் அங்கிருப்பது தமக்கு அழகில்லை என உணர்ந்து கொண்ட அந்தோனி ஸாமின் கையைப் பிடித்து எழுப்பியவாறு சந்திரஹாசனைப் பார்த்து,

 

 

உங்கள் வீட்டு கல்யாண விசயம் தெரியாமல் வந்து தொந்தரவு பண்ணினதுக்கு எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஸேர். இப்படி என்று தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டம்… இனி எங்களால எந்த பிரச்சினையும் வராது… நாங்க போய்ட்டு வாறம்…” நைந்த குரலில் கூறவும்,

 

 

நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறியள் அந்தோனி? இதில உங்கட பிழை ஒண்டும் இல்லை. என் மகள் விருப்பத்தை மீறி என்னால எதுவும் செய்ய முடியேல்ல… உங்க மனசு காயம் பட்டிருக்கிற எனக்கு தெரியும். நீங்கள்தான் எங்களை மன்னிக்க வேணும்…”

 

 

அந்தோணியின் கையைப் பிடித்தவாறு தளுதளுத்த குரலில் சந்திரஹாசன் கூறவும்,

 

 

என்ன ஸேர் இது… நீங்கள் என்னட்ட மன்னிப்பு கேட்டுக் கொண்டு… யாருக்கு யார் என்று எழுதி வைச்சபடிதானே நடக்கும். இவனுக்கு அதிர்ஷ்டமில்லை என்ன செய்யிறது… விடுங்கோ ஸேர்…”

 

 

ஆளாளுக்கு மன்னிப்பு கேட்டவாறே வெளி வாயிலுக்கு வந்தவர்கள் விடைபெற்று செல்லவும் உள்ளே வந்த சந்திரஹாசன் மௌனமாய் திருமணப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தார்.

 

 

தெய்வநாயகி சமையலறைக்கு நழுவியிருந்தார். அருண்யா கல்லாய் சமைந்து இருந்த இடத்திலேயே வேரோடிப் போயிருந்தாள். கவியும் அங்கேயே சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருக்க யாதவ் நிகழ்ந்த அனைத்து சம்பாஷனைகளையும் ஜீரணிக்க பெரும் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான். 

 

 

அங்கிள்… நான் கொஞ்சம் கவி கூட தனியாக கதைக்கலாமா?” யாதவ் சந்திரஹாசனிடம் கேட்க தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் இருவரும் பேசிப் புரிந்து கொள்வதன் அவசியத்தை உணர்ந்து சம்மதமாய் தலையசைத்தார். 

 

 

தந்தையின் சம்மதம் அறிந்து வீட்டின் பின்புறம் மாமர நிழலில் இருந்த மணல்கும்பிக்கு அழைத்துச் சென்று அந்த வெண் மணலில் சப்பணமிட்டு  அமர்ந்து கொண்டாள் கவின்யா. அவள் எதிரே அமர்ந்து கொண்ட யாதவ் மெதுவாக தொண்டையை செருமிக் கொண்டு பேச்சை ஆரம்பித்தான்.

 

 

முதலில என்னை மன்னிச்சிடும் கவின்யா.  என்னால உம்மட லைப்ல இவ்வளவு குழப்பம் வரும் என்று நான் எதிர்பாக்கேல.  அனுட்ட சொல்லி உம்மளிட்ட கேப்பிச்சனான். நீர் ஆரையும் லவ் பண்ணுறீரோ என்று…. இல்லை எண்டவும் தான் என்ர அம்மா அப்பாவை வந்து உங்கட வீட்ட கதைக்க சொன்னான். உமக்கு அந்த ஃபோயத்தான் பிடிச்சிருக்கு என்றால்  நான் இப்பவே உங்கட வீட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டச் சொல்லுறன்…”

 

 

நீங்க நிப்பாட்டினாலும் எனக்கு வேற யாரோடயும் தான் வெடிங் நடக்குமே தவிர ஸாமோட நடக்காது…”

வருத்தமாக உரைத்தவளை கேள்வியாய் நோக்கினான். 

 

 

ஸாம் ஆறு வருஷமாக எனக்காக காத்திருக்கிற எனக்கும் தெரியும். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். சாதி, மதப் பிரச்சினை வரும் என்று தெரிந்தாலும் அப்பா ஓகே சொல்லுவார் என்று நானும் மனசு முழுக்க ஸாமிட நினைப்பிலேயே வாழ்ந்திட்டு இருந்தன்.

 

 

பட் அம்மா இப்பிடி ஸாமைக் கட்டினால் உயிரையே விட்டிடுவன் என்று சொல்லுவா என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல… அப்பா எப்படியும் சமாளிப்பார் என்று நினைச்சன். ஆனால் உங்களோட இந்த கலியாணம் நடக்காட்டில் நிச்சயம் தான் உயிரோட இருக்க மாட்டன் என்று  அம்மா தெளிவாக சொல்லுறா… 

 

 

நான் அம்மாவை எதிர்த்து ஸாமை மரி பண்ணி அம்மா ஏதும் செய்திட்டா என்றால் காலம் முழுக்க என்னால ஸாமோட நிம்மதியாக வாழ ஏலாது. அதனால தான் ஸாமிட்ட மறுத்திட்டன். பாவம் ஸாம்… ஆனால் எனக்கு வேற வழி தெரியேல்ல. அம்மா ரொம்ப பிடிவாதம். தான் நினைச்சது நடக்க என்ன வேணுமெண்டாலும் செய்வா. 

 

 

என்னைப் பெத்து வளர்த்து ஆளாக்கினவக்கு நான் மரணத்தை பரிசாக கொடுக்க விரும்பல யாதவ். அம்மா வழக்கம் போல சும்மா பிடிக்கலை என்று கத்துவா என்று தான் நினைச்சு இருந்தனே தவிர 

இப்படி உயிரையே விட்டிடுவன் என்றுசொல்லுவா என்று கனவில கூட நினைக்காம போய்ட்டனே…

 

 

இப்ப முடிவு உங்கட கைல யாதவ். உங்களில எந்தப் பிழையும் இல்ல. நானே சொல்லாத காதலை எப்படி அனுவக்காட்ட சொல்ல முடியும்?  அதாலதான் அம்மா அப்பாட முடிவு என்று சொன்னனான். 

 

 

என்ர மனசில இருந்த எதையும் மறைக்காமல் சொல்லிட்டன். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்… வடிவா யோசிச்சு முடிவு எடுங்கோ…”

 

 

சொல்லிவிட்டு கவின்யா எழுந்து உள்ளே செல்ல சிந்தனை முடிச்சுகள் நெற்றியில் விழ அவள் பின்னே உள்ளே போனான் யாதவ்.

 

 

யாரிடமும் எதுவும் கூறாமல் அனைவரிடமும் விடைபெற்று தனது வீட்டிற்கு சென்றவன் தனது கட்டிலில் தொப்பென விழுந்தான். அவன் உள்ளமோ தன் வாழ்க்கையின் விடை தெரியாமல் தவித்தது.

 

 

இங்கே கவி வீட்டிலோ பெரும் பிரளயமே ஆரம்பித்தது. 

 

 

அக்கா… உனக்கென்ன விசர் முத்திப் போச்சே…. ஸாம் ஸேர் ஆறு வருஷமா லூசு மாதிரி உனக்காக காத்திருக்க நீ எவனோ ஒருத்தனைப் பிடிச்சிருக்கு எண்டுறாய்… எல்லா விசயமும் எனக்கு சொல்லுற நீ ஏன் இதை மட்டும் சொல்லேல…

 

 

உனக்கு காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை. இந்த மனுசி தான் சாதி, சமயம் எண்டு உன்னை குழப்பி இருக்கு… நீ அதுக்கெல்லாம் பயப்பிடாதை அக்கா…. அம்மாவா வாழப்போறா? உன்ர வாழ்க்கை நீ வாழுறது… ஸாம் ஸேர் மாதிரி ஒராள் கிடைக்க குடுத்து வைச்சிருக்கோணும்…

 

 

உன்ர காதலுக்காக நீ தான் போராடோணும் அக்கா… ஸாம் ஸேர் இப்ப எவ்வளவு தெளிவாக தன்ர மனசில உள்ளதைச் சொன்னார்…? அதுக்கு பிறகும் ஏன் அம்மாட கதையைக் கேட்டு லூசு மாதிரி முடிவெடுக்கிறாய்?

 

 

உண்மையில் உனக்கு ஸாம் ஸேர் மேல காதல் இல்லை. அவர் உனக்காக காத்திருக்கிறது உனக்கு பெருமையாக இருந்துச்சு… அவரில இருந்தது உனக்கு வெறும் அட்ராக்ஷன் மட்டும் தான்… உண்மையான காதல் இருந்திருந்தால் இப்பிடி அம்மா சொன்னாங்க, ஆட்டுக்குட்டி சொன்னாங்க என்று இப்படி ஸாம் ஸேரை ஏமாத்தி இருக்க மாட்டாய் அக்கா…

 

 

இந்த காலத்தில எவனாவது படிப்பைக் குழப்பக் கூடாது என்று இவ்வளவு பொறுமையாக வெய்ட் பண்ணுவானா? அப்படி அவர் வெய்ட் பண்ணியதுக்கு நல்ல பரிசு கொடுத்திட்டாய். மூளையை அடகு வைச்சது போல, அறிவில்லாம கதைச்சுக் கொண்டிருக்கிறாய் அக்கா…”

 

 

உச்சஸ்தாயியில் தன் கோபம் எல்லாம் கொட்டித் தீர்த்தாள் அருண்யா. 

 

 

முகம் கறுக்க நின்ற தெய்வநாயகியை முறைத்து விட்டு கவியிடம் வந்தார் சந்திரஹாசன்.

 

 

இங்க பாரு கவி… அம்மா தங்கச்சிட  வாழ்க்கை அது இதெண்டு சொல்லியிருந்தால் அதைப் பற்றி கவலைப் படாதை. அருணிக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் குடுக்க வேண்டியது அப்பாட பொறுப்பு. நீ ஸாமைக் கட்டுறதால அப்பாவுக்கு எந்த கௌரவ குறைச்சலும் வராது..

 

 

அப்பா எப்பவும் உனக்கு சப்போர்ட் பண்ணுவன். நீ யாருக்கும் பயப்பிடாம முடிவெடு. அப்பா இருக்கன்டா உனக்கு…”

 

 

சந்திரஹாசன் சொல்ல சொல்ல மனதிற்குள் புழுங்கினாள் கவி.

நீங்கள் இருப்பிங்க அப்பா… ஆனால் அம்மா இருக்க மாட்டாங்களே…” உள்ளத்தை பிளந்து வெடித்து வந்த அழுகையை அடக்கிய படி தாயை நிமிர்ந்து பார்த்தாள்.

 

 

கறுத்த முகத்தோடு வாய் திறக்காமல் நின்றிருந்த தெய்வநாயகியைப் பார்க்க கவிக்கு தான் சொல்ல வேண்டிய பதில் தெளிவாக விளங்கியது.

 

 

கவின்யா சொல்லப் போகும் பதில் என்ன? யார் கழுத்தில் மாலை இடப் போகிறாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’

அத்தியாயம் – 17 யாரோ யாரோடி உன்னோட புருஷன்?   தந்தையை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தாள் கவின்யா. தாயின் தற்கொலை மிரட்டலை தந்தையிடம் சொன்னாலும் தந்தை தாயைத் திட்ட அவமானம், ஆவேசப் படும் தாய் இறுதியில் எடுக்கப் போகும் முடிவு தற்கொலையே.

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’

அத்தியாயம் – 10 சொல்லாயோ சோலைக்கிளி     வருஷங்கள் இரண்டு உருண்டோடியது. கவின்யா மூன்றாம் ஆண்டிலும் ஸாம் அபிஷேக் இறுதி ஆண்டில் பல்கலைக்கழகத்திலும், அருண்யா வர்த்தக பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கும் (+2) படித்துக் கொண்டிருந்தார்கள்.     கல்விப் பொதுத்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’

அத்தியாயம் – 31 குழந்தை பெறுவாளா அருண்யா?   பூங்காவில் சுற்றியதில் கால் வலிக்க ஆயாசமாய் கட்டிலில் படுத்திருந்து பேசிக் கொண்டிருந்த போதே அருண்யா குழந்தை வளர்ப்போமா எனக் கேட்டது. ஸாம் எழுந்தே உட்கார்ந்து விட்டான்.      “உண்மையாவா சொல்லுறாய்