Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 12’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 12’

அத்தியாயம் – 12

ஸாமின் வாழ்க்கையில் விளையாடுவது யார்?

 

அருண்யாவின் உயர் தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன. அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாவதாக வந்து தமக்கைக்கு தான் ஒன்றும் சளைத்தவளில்லை என்று நிருபித்து இருந்தாள். ஊரே விழாக்கோலம் பூண்டு அவளுக்கும் அவளது ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டு விழா நடாத்தி கௌரவித்தது. 

ஏதோ தானே முதலாவதாக வந்தது போல் ஸாம் தலைகால் புரியாமல் வானுக்கும் பூமிக்கும் நின்று குதித்து கொண்டிருந்தான். மற்றைய நண்பர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க சுதன் மட்டும் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

ஏன்டா… நாங்கள் அருணி ஐலண்ட் ஃபெஸ்ட் வந்ததில எவ்வளவு சந்தோசமா இருக்கிறம்… நீ ஏன் இப்பிடி இருக்கிறாய்…?”

நீங்கள் படிப்பிச்ச பாடம் எல்லாத்துக்கும் அவள் நல்ல மார்க்ஸ் எடுத்து இருக்கிறாள். நான் படிப்பிச்சது இங்கிலிஸ். அதுக்கு வெறும் சீ பாஸ்… எனக்கு பின்ன எப்பிடி இருக்கும்?”

அவனின் கவலையைக் கேட்டு வாய்விட்டு நகைத்தனர் நண்பர்கள். 

ஊரே கொண்டாடுது. நீயும் எங்களோடு சேர்ந்து ஹப்பியா இருடா” என்று அவன் மனசை தேற்றினார்கள்.

காலச்சக்கரம் உருண்டோடி சில மாதங்களை விழுங்கிக் கொண்டது. ஸாமும் நண்பர்களும் பல்கலைக்கழக பட்டப் படிப்பை நிறைவு செய்திருந்தனர். பட்டதாரிகளாகி விட்ட நால்வரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்.

நெல்லியடியில் அமைந்திருக்கும் கொமர்ஷல் வங்கியில் உதவி முகாமையாளராக ஸாமிற்கு பதவி கிடைத்தது. சுதர்சன் தான் படித்த ஹாட்லி கல்லூரியிலேயே ஆசிரியராகவும், சுதன் கரவெட்டி பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராகவும், நிரோஜன் கொழும்பில் தனியார் கம்பெனி ஒன்றில் கணக்காளராகவும் பணியாற்ற ஆரம்பித்திருந்தார்கள்.

அருண்யா கொழும்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தை தெரிவு செய்திருந்தாள். தெய்வநாயகியும் அவளுமாக கொள்ளுப்பிட்டியில் ஒரு வீடொன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள். வார நாட்களில் பல்கலைக்கழகமும் வார இறுதிகளில் பட்டய கணக்காளர் படிப்புமாக நிற்க நேரமில்லாமல் காலிலே சக்கரம் கட்டிப் பறந்து கொண்டிருந்தாள்.

இருந்தாலும் தினமும் தவறாது தந்தையோடும் தமக்கையோடும் வாரத்தில் ஒரு தடவை ஸாமோடும் தொலைபேசியில் பேசி சுகநலங்களை விசாரித்து கொள்வாள்.

கவின்யா மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் படித்து கொண்டிருந்தாள். முழு நேர பாடங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றன. நோயாளிகளில் நேரடி செயற்திறன் விளக்கங்களோடு கூடிய கற்கை காலம் அது. 

கவின்யாவின் வாழ்க்கையையே திசை மாற்றிய நிகழ்வு அந்த காலத்தில் தான் நடந்தது. 

அப்போது கவி சத்திரசிகிச்சைப் பிரிவில் இருந்தாள். யாழ் நகரின் பிரபல வர்த்தக நிறுவனமான ராசி சில்க்ஸ் புடவை நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் யாதவ்மித்ரன் விபத்தொன்றில் கைகால்களில் அடிபட்டு அனுமதிக்கப் பட்டிருந்தான். இடது காலில் எலும்பு வெடித்து தகடு வைத்துப் பொருத்தி மாவுக் கட்டுப் போட்டிருந்தார்கள். வலது கையிலும் மாவுக் கட்டு. இடது கை மொழிப் பகுதி, தலை, நெற்றி, உடம்பில் பல பாகங்களிலும் உரசல் காயங்களுக்கு மருந்து இடப்பட்டு கட்டுப் போடப்பட்டிருந்தது. 

அவனைச் சுற்றி நின்று அவனது உடல் நிலை பற்றிய விளக்கங்களை எக்ஸ்ரே படங்களைக் காட்டி மருத்துவ நிபுணர் ரவிசங்கர் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க கருமமே கண்ணாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்த கவின்யா அவன் கண்ணில் பட்டாள்.

அத்தனை நேரமும் உடலின் வலி ஒரு புறமும் வைத்தியசாலையின் மருந்து நெடியில் இருப்பது ஏதோ நரகத்தில் உழல்வதைப் போல் வேதனையை தர  தனது மோட்டார் சைக்கிளிற்கு குறுக்கே வந்த அந்த நாயை தனக்கு தெரிந்த அனைத்து பாஷைகளிலும் திட்டிக் கொண்டிருந்தான் யாதவ்.

கவின்யாவைக் கண்டது தான் தாமதம். இவ்வளவு நேரமும் அனுபவித்த வேதனைகள் மறந்து தாகத்தில் ஒரு சொட்டுத் தண்ணீருக்கு தவித்தவனுக்கு பாலாறே கண் முன்னே வந்தது போல் மகிழ்ந்து போனான். கட்டிலில் வாகாக சாய்ந்தமர்ந்து சுவாரஸ்யமாக அவளையே கவனிக்கத் தொடங்கினான். 

மெல்லிய அப்பிள் பச்சை பருத்தி புடவைக்கு மேலே மருத்துவர்கள் அணியும் கோர்ட் அணிந்திருந்தவள் கழுத்திலே ஸ்டெதஸ்கோப்பை மாலையாக சுற்றிப் போட்டிருந்தாள். தன் நீண்ட தலைமுடியை ஒற்றை ஜடையாகப் பின்னி மடித்து கட்டியிருந்தாள். கழுத்திலே நூல் போல் மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்று. காதிலே சிறிய ஒற்றைக் குமிழ் தங்கத் தோடுகள். இடக்கையிலே கறுப்புப் பட்டியிட்ட ஒரு கைக் கடிகாரம்.

முகத்திலே எந்த வித ஒப்பனையுமின்றி எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்தவளைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை யாதவ்க்கு. அவளோ அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் கடமையே கண்ணாக ரவிசங்கர் சொல்பவற்றை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அவன் கால், கையென காயம் பட்ட இடங்களை நோக்கி அவள் பார்வை சென்றதே தவிர அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாளில்லை.

இவனோ அவள் விழி தன் விழி நோக்காதோ என்று தவமிருந்தான். பாவம் யாதவ். அவன் ஆசை நிராசையாக அவர்கள் படித்து முடித்து அவன் கட்டிலை விட்டு அடுத்த நோயாளியைப் பார்க்க அடுத்த கட்டிலுக்குச் சென்று விட்டார்கள். இவன் ஏக்கப் பெருமூச்சுடன் தனக்குத் தெரிந்த கவியின் பக்கவாட்டுத் தோற்றத்தையே பார்த்து கொண்டிருந்தான்.  

கவின்யா…. கவி…” மனதுக்குள் அவள் பெயரை உருப் போட்டுப் பார்த்து கொண்டான். கவி இவனருகே நின்றிருந்த போது அவள் அணிந்திருந்த பெயர்ப்பட்டி பார்த்து அவள் பெயரை மட்டும் அறிந்து கொண்டான்.

கவியும் பிற மாணவர்களும் அந்த இடத்தை விட்டு அகன்றதும் முதல் வேலையாக தன் பெரியப்பா மகளுக்கு அழைப்பெடுத்தான்.

ஹலோ… சொல்லுண்ணா… நானே ஹோல் பண்ணுவம் என்று இருந்தன். இப்ப காயங்கள் எப்பிடியிருக்கு? நான் பின்னேரம் டியூட்டி முடிய வாறன் அண்ணா. உனக்கு தெரியும் தானே. இன்டேர்ன்ஸிப் டைம்ல சாகடிக்கிறாங்க… இங்கால அங்கால அசைய விடமாட்டாங்க…”

சகோதரன் தான் வேலை பார்க்கும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தும் உடனே சென்று பார்க்க முடியாத மனவருத்தமும் குற்றவுணர்வும் ஒருங்கே சேர சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதை விடு அனு. நீ நேரம் கிடைக்கேக்க வந்து பார்… இப்ப எனக்கொரு விசயம் சொல்லு..”

என்னண்ணா… கேளு சொல்லுறன்” பாவம் அனுஷியா ஏதோ அவன் தன் நோய் சம்பந்தமாகத்தான் ஏதோ சந்தேகம் கேட்கப் போகிறான் என்று நினைத்து கேட்டாள். 

உனக்கு கீழ அடுத்த ஃபச்சில படிக்கிற கவின்யாவை உனக்கு தெரியுமா? இப்ப பைனல் இயர் படிக்கிறாள்…”

ஃபச் டொப்பாக வரும் கவியை அவள் குரல் வளத்தாலும் கூடுதலாக அனைவருக்கும் தெரிந்திருந்தது. 

ஓமண்ணா… வடிவா தெரியும். எனக்கு அவளை பழக்கமும். நல்ல பிள்ளை. எல்லாரோடயும் அன்பாக பழகுவாள். நல்ல கெட்டிட்காரி. நானே நிறைய தரம் அவளிடம் டவுட்ஸ் கேட்டிருக்கிறேன்…”

அதெல்லாம் விடு… அவள் யாரையும் லவ் பண்ணிறாளா…?”

அனுவின் பதிலில் தான் அவன் எதிர்காலமே தங்கியிருப்பது போல் மூச்சை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு கேட்டான்.

என்ன ஐயா… கண்டதும் காதலா…? கை, கால் முறிஞ்சு கிடக்கேக்கையும் உனக்கு லவ் கேட்குதோ?”

ப்ளீஸ்டி முதல்ல நான் கேட்டதைச் சொல்லு… உனக்கு நல்லூர் திருவிழாக்கு இருபத்தைஞ்சு நாளும் கட்ட சாறி தாறன்…”

ஐ… நல்லாருக்குடா உன்ர கதை… அப்பாட கடையில எடுத்து ஏதோ உன்ர செலவில தாற மாதிரி தரப் போறியோ…. அதெல்லாம் சரி வராது…. நீ வெள்ளவத்தையில கட்டுற பிளாட்ஸ்ல வேணுமென்டால் ஒண்டு தாவன்டா…”

அடியே இதெல்லாம் பகல் கொள்ளை. உனக்கே ஓவராத் தெரியேல்லையா… என்னவென்றாலும் தந்து துலைக்கிறன்… முதல் கேட்டதுக்குப் பதில சொல்லுடி…” 

ஓகே ஓகே கடுப்பாகதை… நான் அறிஞ்சு அவள் யாரையும் லவ் பண்ணேல்ல. யாரோடயும் சேர்ந்து திரிஞ்சு கண்டதில்லை. கம்பஸ் இல்லாமல் வெளில யாரையும் விரும்பி இருக்கிறாளோ தெரியேல்ல. எப்பவும் படிப்பும் தானுமாக இருக்கிற பிள்ளை. பொறுடா… நான் வேணுமென்றா அவளைக் கேட்டுப் பார்த்து சொல்லுறன்…”

தாங்ஸ்டி தங்கமே… அவளைக் கேட்டு அவள் யாரையும் லவ் பண்ணேல என்று மட்டும் சொல்லு… உனக்கு ஒண்டில்ல ரெண்டா தெஹிவளை பிளட்ஸ்லயும் ஒரு வீடு தாறன்…”

என்னடா… எப்ப பார்த்தாலும் படிப்பு, பிறகு வேலை வேலை என்று திரிஞ்சாய்…. இப்ப என்னடா என்றால் ஏதோ கவி இல்லாட்டில் உயிரை விட்டிடுவன் கணக்கில கதைக்கிறாய்…”

உண்மையா அப்பிடித்தான் தோணுது அனு…. ஏதோ அவள பார்த்த நிமிஷம் இருந்து உடம்பில வலி கூட தெரியேல்ல. உலகமே வேற மாதிரி தெரியுது… உடம்பெல்லாம் லேசாகி வானத்தில பறந்திட்டிருக்கிற ஃபீல்….”

போதும்டா… நிப்பாட்டு… நிப்பாட்டு… உனக்கு நல்லா முத்திப் போச்சு… விட்டால் வைரமுத்துட காதலித்துப் பார் கவிதை வாசிக்க ஆரம்பிச்சிடுவாய்… நீ படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் ஈவினிங் குட் நியூஸோட வாறன்…”

ஓகேடி… தாங்ஸ்… ஃபை…” என்று கைபேசியை அணைத்து படுக்கையில் சாய்ந்தவன் மனமோ பரீட்சை எழுதிய மாணவன் பெறுபேற்றிற்கு காத்திருக்கும் மனநிலையில் தவித்தது. 

யாதவ் மித்ரன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று விட்டு இரண்டு வருடங்கள் கொழும்பில் ஒரு கன்ட்ராக்ஸ்ஷன் கம்பனியில் வேலை பார்த்தான். அனுபவம் கிடைத்ததும் பணப் பிரச்சினை இருக்காதபடியால் தானே ‘ராசி கோட் பிறைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் சொந்தமாக ஒரு கட்டுமான கம்பெனி ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகிறான். கொழும்பில் வெள்ளவத்தையில் பன்னிரு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றை கட்டி முடித்து லாபகரமாக விற்பனை செய்திருந்தான். இப்போது வெள்ளவத்தயிலும் தெஹிவளையிலும் கட்டிக் கொண்டிருக்கிறான். 

நல்லூர் தேர்த் திருவிழாவுக்காக மூன்று நாட்கள் வேலையில் விடுப்பு எடுத்து கொண்டு வந்தவன் நண்பன் ஒருவனைச் சந்தித்து விட்டு வந்த வேளை ஆனைப்பந்தி சந்திக்கருகில் ஒரு தெருநாய் குறுக்கே வரவும் அதற்கு அடித்து விடக் கூடாது என்று வண்டியை திருப்பியவன் அருகிலிருந்த மதில் சுவரிலேயே வண்டியை மோதி நிறுத்தியவன் கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி எறியப் பட்டிருந்தான். வீதியில் சென்றோர் அவனை வைத்தியசாலையில் சேர்த்திருந்தனர். 

ஆனால் இந்த விபத்து நடந்ததே அவன் பிறவிப் பயன் போல இப்போது அந்த நாய்க்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாம் காதல் மயக்கம் செய்யும் வேலை. வேறென்ன?

முப்பது வயதாகியும் படிப்பு, வேலை என்று காதலில் விழாமல் இருந்தவன் கவின்யாவின் எளிமையான அழகில் மனதை பறி கொடுத்தான். கடந்த சில மாதங்களாக அவன் தாயார் கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்துவதாலோ தெரியவில்லை. கல்யாண கனவுகள் இன்றி இருந்தவன் தன் மனைவி என்றால் அது கவி மட்டும் தான் என்று முடிவெடுத்தான். 

தன் வேலை நேரம் முடித்து ஒரு தேநீரை அருந்தி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு கவியைச் சென்று பார்ப்போம் என நினைத்த அனுஷியா வைத்தியசாலைச் சிற்றுண்டிச்சாலையை சென்றடைந்தாள். போனவளின் பார்வை அங்கே ஒரு மூலையில் மருத்துவ புத்தகமொன்றை புரட்டிக் கொண்டு வடையைக் கடித்துக் கொண்டிருந்த கவின்யாவைக் கண்டு மலர்ந்தது. 

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று இதைத்தான் சொல்லுவாங்க போல என்று எண்ணியபடி தனக்கும் இரு வடைகளும் தேநீரும் வாங்கிக் கொண்டு கவியின் முன்னால் போய் அமர்ந்தாள். 

யாரோ முன்னால் அமரும் அரவமுணர்ந்து புத்தகத்தை விட்டு கண்களை விலத்திப் பார்த்தவள் அனு அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்வாய் புன்னகைத்தாள்.

ஹலோ அனுவக்கா… எப்பிடி இருக்கிறீங்க? ஒரே இடத்தில இருந்தும் பார்த்து நிறைய நாளாச்சு என்ன…”

ம்.. எங்க கவி… இன்ரேன்னில நிக்க நேரமில்லை. இன்னும் ஆறு மாசம் சமாளிக்கணும்… அதை விடும்… வாற மாசம் எக்ஸ்ஸாம் எல்லே… ஐலண்ட் வைஸா டொப் பண்ணுறதுதானே…”

முடிஞ்ச வரைக்கும் படிக்கிறன் அக்கா… பார்ப்பம்… வாற கிழமை ஸ்டடி லீவ் தொடங்குது… இனித்தான் கொஞ்சம் கூடப் படிக்கோணும்…”

நீர் வழக்கம் போல ஃபெஸ்ட்டா வருவீர்… எனக்கு நம்பிக்கை இருக்கு… அதுசரி எம்பிபிஎஸ் முடிய என்ன பிளான்? கல்யாணம் தானே…? யாரையும் பார்த்து வைச்சிருக்கிறீரோ…?

அனுஷியா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கதையோடு கதையாக தனக்கு வேண்டிய தகவலைக் கேட்டாள். தான் சொல்லப்போகும் பதில் தன்னுடைய வாழ்க்கையையே மாற்றிறமைக்கப் போவது தெரியாமல் இந்த அப்பாவியும் பதிலிறுத்தாள்.

தாங்ஸ் அக்கா. படிக்கவே நேரம் காணாதாம்… இதில எங்க அக்கா லவ் பண்ணுற…. கல்யாணத்தைப் பற்றி எதுவும் யோசிக்கேலக்கா… அது அம்மா, அப்பாட டிப்பாட்மென்ற்”

கவி வேண்டுமென்றே ஸாமைக் காதலிப்பதை மறைக்கவில்லை. ஆறு வருடங்களாக ஸாமிடமிருந்து அந்த கடிதத்தை தவிர எந்த பதிலும் இல்லாமல் வெறும் பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்க இவள் என்ன துணிவில் கேட்பவர்க்கெல்லாம் தன் காதலைப் பற்றி சொல்ல முடியும். அதனால் தான் மனக்கண்ணின் முன்னால் ஸாம் வந்து நின்ற போதும் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் தான் என்று சொல்லி விட்டாள். 

இப்ப எந்த செக்ஸன் படிக்கிறிங்க கவி?”

ரவிசங்கர் சேரிட… இந்த கிழமையோட எல்லாம் முடியுதக்கா..”

ஓ… ஓகே ஓகே… ரவிசங்கர் ஸேரிட வாட்லதான் என்ர ஒண்டவிட்ட தம்பி யாதவ்மித்ரன் மோட்ட சைக்கிள் அக்சிடெண்ட் ஆகி அட்மிட் ஆகி இருக்கிறான். காலிலயும் கைலயும் பிராக்ஷர் ஆகிருக்கு…”

அவர் உங்கட தம்பியா….? இண்டைக்குதான் ஸேர் அவரிட கேஸ் பற்றி விளங்கப்படுத்தினவர்…”

ஓ… இனிப் போகேக்க எனக்காக கொஞ்சம் கவனிச்சுக் கொள்ளும் கவி… அவன் செல்லமா வளர்ந்தது… ஹொஸ்பிடல் என்வொய்மெண்ட்ல கொஞ்சம் ஃபாடா ஃபீல் பண்ணுறான்…”

நீங்கள் யோசிக்காதிங்க அக்கா… நான் போற நேரங்களில அவரோட கதைக்கிறன்…”

ஓகே கவி… ரொம்ப தாங்ஸ்… தம்பிய பார்க்க தான் இப்ப போறன்… போய்ட்டு வாறேன்…”

ஓகேக்கா… ஃபை..”

தன்னால் முடிந்த உதவிகளை தம்பியின் காதலுக்கு நல்கி விட்டு அவனை நோக்கி சென்றாள் அனுஷியா. 

கவி ஆறிப் போன தேநீருடன் மீளவும் புத்தகத்திற்குள் தன் தலையைக் கவிழ்த்தாள். பாவம் அந்த பேதை வைத்தியச்சி… படிப்பே கவனமாக தன் காதலை கோட்டை விட்டுக் கொண்டிருப்பதை அறியவில்லை. அவள் இறுதிப் பரீட்சை முடிந்ததும் மறு தினமே அவள் வாழ்வில் அந்த இடி சொல்லாமல் கொள்ளாமல் மின்னாமல் முழங்காமல் வெகு இலகுவாக வந்து இறங்கியது.

கவின்யாவின் வாழ்வில் விழப்போகும் இடி என்ன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’

அத்தியாயம் – 31 குழந்தை பெறுவாளா அருண்யா?   பூங்காவில் சுற்றியதில் கால் வலிக்க ஆயாசமாய் கட்டிலில் படுத்திருந்து பேசிக் கொண்டிருந்த போதே அருண்யா குழந்தை வளர்ப்போமா எனக் கேட்டது. ஸாம் எழுந்தே உட்கார்ந்து விட்டான்.      “உண்மையாவா சொல்லுறாய்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’

அத்தியாயம் – 29 ஸாம்அபிஷேக் – அருண்யா    அதிகாலை ஐந்து மணிக்கே அந்த நட்சத்திர விடுதியை அடைந்து விட்டார்கள். காரிலேயே இருவரும் நன்கு தூங்கியிருக்க மலையகத்தின் கூதல் காற்று சிறு குளிரோடு உடம்பை ஊடுருவிச் செல்ல காரை விட்டு இறங்கி

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’

அத்தியாயம் – 06 கவி சந்தித்தாளா ஸாமை?    கவின்யாவுக்கு பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பமாகியது. பல்கலைக் கழக வாழ்விலே முதலாவது நாள்.      வெண்ணிற பருத்தி ஷல்வாரில் இடப் பக்கத் தோளில் ஷோலை நீள வாக்கில் போட்டிருந்தாள். இடது கையில்