அத்தியாயம் – 5
அந்தக் குர்த்தியிடமிருந்து சற்றும் பார்வையை விலக்க முடியாது “சூப்பர்டி” என்றாள் ஜலப்பிரியா.
“என்ன கலர், துணி தரம் கூட ஏ 1. கண்டிப்பா கூடுதல் விலையாத்தான் இருக்கும். காப்பி கொட்டினத்துக்காகவா இவ்வளவு விலைல எடுத்துக் கொடுத்தான். பெரிய துட்டுக்காரன்தான் போல” என்று அவள் சொன்னது இன்னமும் மகிழ்ச்சியைத் தான் தந்தது செம்பருத்திக்கு.
“என்ன இருந்து என்ன உனக்கு பத்தாம எடுத்துத் தந்திருக்கானே… பெருசா இருந்தால் கூட டைலர்ட்ட தந்து பிடிச்சுக்கலாம். அளவு சின்னதான ட்ரெஸ்ஸை என்ன செய்றது?” என்றது என்னவோ உவப்பாகவே இல்லை.
“ஒருவேளை அவரே எடுத்துட்டு வந்திருந்தா கரெக்ட்டா இருந்திருக்கும். அந்த காவ்யா எடுத்துட்டு வந்தது வேணுக்குனே பத்தாம எடுத்துட்டு வந்திருப்பா” என்று வெறுப்போடு சொன்னாள்.
“அதென்னடி அவரை, துவரைன்னு மரியாதை பலம்மா இருக்கு”
“நிஜம்தான் ப்ரியா. அந்த காவ்யாவுக்கு இந்த பாக்கெட்டை கைல கொடுக்கக் கூடப் பிடிக்கல. மூஞ்சில தூக்கி எறிஞ்சா பாருடி. எனக்கு வாயே அடைச்சு போயிடுச்சு. அடுத்து என்ன செய்றதுன்னே தெரியல. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு தெரியுமா? அப்பறம் அந்த அவினாஷ் அவளை கண்டிச்சு, பார்சலை எடுத்து என் கைல கொடுக்க சொன்னார். அதனால அவர் எடுத்துட்டு வந்திருந்தா எனக்கு பொருத்தமா எடுத்துட்டு வந்திருப்பார்”
“வந்திருக்கலாம்… எடுத்துத் தந்திருக்கலாம்… ஆனால் இதெல்லாம்தான் இப்ப நடக்கலையே! சரி அடுத்து என்ன செய்யப்போறதா உத்தேசம்?”
“ம்… ம்… “ கண்ணில் கனவுடன் அந்த டாப்ஸையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு நிச்சயம் இந்த டாப்ஸ் பத்தாது. அதனால வழக்கம் போல எனக்குத் தந்துடுறியா?” என்று அவளது ஊடே வந்து கனவினைக் கலைத்தாள் ஜலப்பிரியா. சில வருடங்களாக உடல் பெருத்து விட்டதால் தனது உடைகள் அனைத்தையும் அவளுக்குத்தான் தந்திருந்தாள் செம்பருத்தி.
“மாட்டவே மாட்டேன்” என்றாள் பிடிவாதத்தோடு.
“வச்சு பூஜை பண்ணப் போறியா” என்றாள் ஜலப்பிரியா நக்கலாக.
“இந்த சுடி எனக்குத்தான். இந்த சுடி அளவுக்கு உடம்பை இளைக்கப் போறேன்” என்றாள் பிடிவாதம் குறையாமல்.
வியப்பாக பார்த்தாள் ஜலப்பிரியா. அட இது மாதிரி எத்தனை தடவை சபதம் செய்திருப்பாய் என்று அப்படியே செம்பருத்தியின் அப்போதைய சபதத்தையும் ஒதுக்கினாள்.
அதன்பின் அந்தப் பையில் ஆடையுடன் ஓர் ஓரமாக இருந்த செய்தித் தாளைப் பார்த்து.
“இதென்ன பேப்பர்? இந்த துணி கவரில் இருந்தது”
யோசித்துக் கொண்டே “தெரியலடி… அந்தக் காவ்யா கையில் ஒரு நியூஸ் பேப்பரை வச்சிருந்தாள். மறந்தாப்ல இதில் போட்டுட்டா போலிருக்கு”
அதை வாங்கிப் புரட்டிப் பார்த்தாள் ஜலப்பிரியா.
“இதில் எதோ ஒரு அட்வெர்டைஸ்மென்ட்டை பேனாவால கட்டம் கட்டி இருக்காங்க பாரு”
“எங்க, படி கேட்கலாம்”
கண்ணில் பார்த்துவிட்டு “எங்கேயோ ஒரு பணக்கார வீட்டில் இருக்கும் நபருக்கு அசிஸ்டண்ட் வேணுமாம். அவரை கவனிச்சுக்கணும். ஆங்கிலம் தெரியணும் அக்கவுண்ட்ஸ் அதாவது கணக்கு வழக்கு பாக்குற அளவுக்கு விவரம் தெரியணும். நல்ல சம்பளத்தோடு தங்குமிடம் சாப்பாடு இலவசம்”
“சூப்பர்டி”
“இன்னும் சில விஷயங்கள் இருக்கு. படிக்கவே ஜோக்கா இருக்குடி. மிக பொறுமைசாலியா இருக்கணுமாம். அப்ப என்ன அர்த்தம்?”
“அந்த நபர் மகா கோபக்கார ஆசாமி. ‘ஹைனஸ்’ கோபத்தை குறைக்க முடியாது. கூட இருக்குறவங்க அடஜஸ்ட் பண்ணிக்கணும்னு அர்த்தம்”
“ஆசாமின்னா ஆம்பளைன்னு அர்த்தம் வருதே. ஹைனஸ் ஒரு பெண்ணா கூட இருக்கலாம் இல்ல. ஏன் காவ்யா இதை கட்டம் கட்டி வச்சிருக்கா. ஒரு வேளை அவளா இருக்கலாமோ?”
“இருக்கலாம். கணக்கு வழக்கெல்லாம் பாக்கணும்னு கேக்குறாங்க. அதென்னவா இருக்கும்? வழக்கமா வீட்டை பராமரிக்கணும்னு சொல்லுவாங்க இல்லைன்னா சமையல் ஆள், நோயாளியை கவனிச்சுக்க ஒரு நர்ஸ் இப்படி எல்லாம் தானே கேப்பாங்க. இது வித்யாசமா இருக்கே”
“இது கூட பெர்சனல் அசிஸ்டண்ட் மாதிரிதான் இருக்கு. விளம்பரத்தில் இருக்கும் இன்னொரு வித்தியாசத்தையும் சொல்றேன். வேலைக்கு வரும் நபருக்கு அலங்காரத்தில் நாட்டம் இருக்கக் கூடாதாம். துளி கூட மேக் அப் செய்துக்கக் கூடாது. இதுதான் செம ஜோக். மேக்கப் போடாத நான் கூட கண் மை போடுவேன், செண்ட்டு , லிப்ஸ்டிக் பவுடர் போடுவேன். மேக்கப்பே போடாத ஆள்னா நீ வேணும்னா ட்ரை பண்ணலாம்” என்றாள் ஜலப்பிரியா என்னவோ கண்மை, லிப்ஸ்டிக் எல்லாம் மேக்கப் வகையறாக்களில் இருந்து ஒதுக்கி வைத்து அத்தியாவசிய பொருட்கள் லிஸ்டில் காலடி எடுத்து வைத்து விட்டதைப் போன்றதொரு தொனியில்.
“நானா. ஒருவேளை அவங்க எதிர்பார்க்கும் நபர் ஆம்பளையா இருக்கக் கூடாதா? ஆம்பளைங்கதான் மேக்கப் போட மாட்டோம் . நாங்க எல்லாம் இயற்கையிலேயே அழகு சுந்தரம்னு சொல்றாங்களே”
“அது 80ஸ் கிட்ஸ் காலம். முரட்டு சிங்கிள் 90ஸ் கிட்ஸ் இப்பல்லாம் மாசம் ஒரு தடவை பேஷியல், தாடி ட்ரிம்மிங் இல்லைன்னா வாரம் ஒரு தடவை ஷேவிங், ஹெட் மசாஜ்னு நம்மை விட அதிகமா செலவு செய்றாங்கப்பா. வீட்ல எங்கண்ணன் சம்பாரிக்கிற அஞ்சு பத்தும் அவன் அலங்காரத்துக்கே செலவாயிடுது. என் சம்பளத்தில்தான் மூணு வேளை சாப்பாடு ”
“இந்த விளம்பர விஷயத்துக்கு வா. பொண்ணுதான் வேணும்னு கேட்டிருக்காங்க. வயசானவங்களா இருந்தால் இன்னும் பெட்டர்னு சொல்லிருக்காங்க”
“பயங்கர வேடிக்கை தான். எங்க அட்வெர்டைஸ்மெண்டை காமி”
ஜலப்பிரியா அந்த இடத்தைக் காட்ட, அதில் காணப்பட்ட தொடர்பு எண்ணைக் கண்டதும் “ஹே இவங்க தந்திருக்கிற நம்பர் நான் போன வக்கில் நம்பர்தான். ஒரு வேளை அவர்தான் ஆளை தேர்ந்தெடுப்பாரோ ?”
“இருக்கலாம்…”
அத்துடன் வாடிக்கையாளர்கள் வருகையால் பில் போட , இனிப்புகளை டப்பாவில் அடுக்க என்று இருவரும் தத்தம் வேலைகளில் ஆழ்ந்து விட்டனர்.
அது முடிந்துவிட்டது என்றுதான் ஜலப்பிரியா நினைத்திருந்தாள் இரண்டு நாட்கள் கழித்து உணவு இடைவேளையின் போது வக்கிலை தொடர்பு கொண்டு வேலை விஷயமாகப் பேசப் போவதாக செம்பருத்தி சொல்லும் வரை.
“ஏய் லூசு என்ன சொல்ற, அந்த வேலைக்கு ட்ரை பண்ணப் போறியா?”
“ஆமா ப்ரியா. எனக்கு இந்த ஊரில் என்னை ஏமாத்தினவங்களைப் பாக்கும் போது ஆத்திரம் ஆத்திரமா வருதுடி. பைத்தியமே பிடிச்சுரும் போலிருக்கு. என்னையும் மறந்து உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செஞ்சுக்குவேனோன்னு என்னை நினைச்சே எனக்கு பயம்மா இருக்குடி”
“என்னடி சொல்ற?”
“நேத்து என் அத்தை மகனுக்கு ஊரே கூட்டி நிச்சயம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே”
“ஊருக்கே தெரியுமே. நாங்கல்லாம் காறி முகத்துக்கு நேர துப்பல அவ்வளவுதான். நில்லு, அவனை இன்னமுமா நீ மறக்கலையா?”
“அந்த குடும்பம் செஞ்ச துரோகத்தை இன்னமும் மறக்கல. ஊரே அவங்க செஞ்சது நம்பிக்கை துரோகம்னு சொன்னுச்சு. ஆனால் ஒரு துரோகத்தின் மேல நடக்குற கல்யாணத்தில் கோலாகலமா நடக்குது. எங்களுக்கு நியாயம் சொல்வாங்கன்னு நினைச்ச அதே உறவுக்காரங்க தானே சந்தோஷமா கலந்துக்கிட்டாங்க”
அவளது கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டாள் ஜலப்பிரியா “உலகம் அப்படித்தான். அது பேச்சை நின்னு கேக்குற மக்களை உக்கார வச்சு காதே பொசுங்குற அளவுக்கு அறிவுரை சொல்லும். மரியாதை தந்து கேக்குறவங்களை நீ தான் விட்டுக் கொடுக்கணும்னு சொல்லி, நம்மை கம்பெல் பண்ணும்”
“பழமொழியை விட்டுட்டியேடி… விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” புன்னகைத்த செம்பருத்தியின் பெரிய கண்களில் குளம் கட்டி நின்றது கண்ணீர்.
“நீ அந்த அளவுக்கு உன் அத்தை மகனை காதலிச்சியா?” ஜலப்பிரியாவின் குரலில் ஏகப்பட்ட பச்சாதாபம்.
“ஏண்டி அது பேரு காதலா? நல்ல வேளை அந்தப் பச்சோந்தியை கல்யாணம் பண்ணிக்கலைன்னு நிம்மதியா இருக்கேன்”
“அப்பறம் என்னதான் பிரச்சனை? எதுக்கு வேற வேலைக்குப் போற?”
“என்னவோ ஒரு இடமாற்றம் தேவை படுது. கொஞ்சம் தைரியம் வேணும். இந்த ஊரில் என்னை பலவீனப்படுத்த நிறைய விஷயங்கள் இருக்கு. முக்கியமா இந்த கோபமும் ஆத்திரமும் என்னோட உடம்புக்குத் தான் கெடுதல் பண்ணுது.
நேத்து ராத்திரி அவ்வளவு கோபம்டி அந்தக் கோபத்தில் சாப்பாடுதான் ஒரே ஆறுதல். நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேல எந்திரிச்சு கத்திரிக்காய் காரக் குழம்பு வச்சு சோறு வடிச்சு சாப்பிட்டேன்”
இதைக் கேட்டதும் ஜலப்பிரியாவிற்கே கவலையாகிவிட்டது. அவளது குடும்பமே அப்பாவின் குடிப்பழக்கம் காரணமாக கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து பஞ்சம் பிழைக்க இங்கு வந்திருக்கிறது.
அவளுக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. அவளது அம்மா, அண்ணன்கள், இவள் என எல்லாரும் சிறு சிறு வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அதில் ஓரளவு மாதாமாதம் சம்பளம் என்று வருவது இவளுக்குத்தான்.
அம்மா சம்பாத்தியத்தை அப்பா பிடிங்கிக் கொள்வார். தந்தையின் வழியில் தமையன்களும் ஆரம்பித்து விட்டனர் என்று செம்பருத்தியிடம் வருத்தப்படுவாள். சரியாக வாடகை கூட தர முடியாத நிலையில் ஆறு மாதத்திற்கு ஒரு வீடு என்று குடும்பமே இடம் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் அவளால் எப்படி செம்பருத்திக்கு உதவ முடியும்?
“பேசாம காலேஜில் சேர்ந்து படியேன். ஹாஸ்டலில் சேர்ந்துக்கோ. உன் செலவுக்கு வேணும்னா வீட்டை வாடகைக்கு விடு. அதுவும் கூட இடமாற்றம் தானே”
“அந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு… எனக்கு லீவு விட்டால் எங்க போவேன்?”
ஜலப்பிரியாவிற்கு கண்களில் நீர் வந்தது “என்னடி இப்படி சொல்ற… உன்னை என் வீட்டில் வச்சுக்க முடியாது. என் சூழ்நிலை அப்படி. ஆனால் நீ வீட்டுக்கு வந்தா ஒரு நாலு நாள் பாத்துக்க மாட்டேனா?”
“ஏய், நிலைமை புரியாம பேசாதே ப்ரியா. எனக்கு துணை இல்லைன்னு தெரிஞ்சு வாடகை சரியா தரலைன்னா எப்படி போய் கேட்க முடியும்? லீவுன்னா ஒரு வாரத்தில் முடிஞ்சு போற விஷயமா வருஷாவருஷம் பண்டிகை, பரீட்சை லீவுன்னு ஏகப்பட்டது இருக்கே. அதுக்கெல்லாம் உங்க வீட்டுக்கு வர்றது சரி பட்டு வராதுடி. அதெல்லாம் யோசிச்சுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்”
“சரிடி, விளம்பரத்தில் பார்த்த வேலை எப்படி உனக்கு பொருத்தமா இருக்கும்னு நினைக்கிற?”
“அதில் கேட்டிருக்குற தகுதிகள் எல்லாம் எனக்கு இருக்கே”
“இருக்குதான் வயசானவங்க வேணும்னு இல்ல கேட்டிருக்காங்க”
“அதையும் பார்த்தேன். வயசானவங்களா இருந்தால் நலம்னு தான் சொல்லிருக்காங்களே தவிர அவங்கதான் விண்ணப்பிக்கனும்னு போடலையே”
ஜலப்பிரியா சற்று சமாதானமடைந்து விட்டதைப் போலத் தோன்றினாலும் உடனே மாட்டினியா என்பது போல
“ஆனால் அந்த வேலை இங்க பக்கத்தில் எங்கேயும் இல்லையே…”
“வேற எங்க?” திகைத்தாள் செம்பருத்தி.
“அன்னைக்கு நம்ம பார்த்த அந்த பேப்பர் கேரளா எடிஷன். கேரளாவில்தான் எங்கயாவது இருக்கும்”
கேரளமா? யோசித்தாள்.
“எங்க இருந்தாலும் நான் போறேன். என்னை எவனும் எதுவும் செய்ய மாட்டான்”
“இது அசட்டுத் துணிச்சல். தப்பு செய்றவனுக்கு ஒரு தூணுக்கு புடவை சுத்தினாலே போதும். ஒரு மனுஷனுக்கு அழகைத் தவிர கண்ணு, கிட்னி, இதயம்னு எத்தனையோ உறுப்புகள் இருக்கே. எல்லாத்துக்கும் மேல உயிர். அதுக்கு சேதாரம் வந்துறாம இருக்கணும். ”
“இல்ல ப்ரியா. இது வக்கீலுக்குத் தெரிஞ்ச இடமாத்தான் இருக்கும். அதனாலதான் அவரோட நம்பரைத் தொடர்பு எண்ணா தந்திருக்காங்க. அவருக்கு தெரிஞ்ச இடம்னா எனக்கும் பாதுகாப்பா இருக்கும்னு நம்புறேன்”
“அப்ப அவர்கிட்ட முதல்ல பேசு. மத்ததை பிறகு முடிவு செய்யலாம்”
அதானே விபிஆர் அப்படியெல்லாம் காஆஆ… வீஈஈ… யாஆஆ க்கு மனசு வருமா என்ன? அத்தோட விடாது கருப்புன்னு ஆறாவது எபிசோட்ல வேற மறுபடியும் வர்றா. என்ன செய்யப் போறாளோ?
ஏதுடா இந்த காஆஆ… வீஈஈ… யாஆஆ… இத்தனை அழகான குர்த்தி வாங்கி கொடுத்துட்டாளான்னு போன அப்டேட் படிச்சு ஒரே feelings of India ஆகிட்டேன்….
சோழியன் குடுமி (Pony tail?!?!?) சும்மா ஆடுமா?
பத்தாத sizeஇல் வாங்கி குடுத்துருக்கா…. என்னா கல்மிஷம்!
ஆனாலும் advt கட்அவுட்டை. பைக்குள்ள மறந்து வெச்சு புண்ணியத்தை வாங்கி கட்டிக்கிட்டா…. So, ரொம்ப திட்டவில்லை… பிழைச்சு போகட்டும்…
இந்தா எங்க Hibiscus வந்துட்டே இருக்கா… பட்டைய கிளப்பப்போறா பாரு