அத்தியாயம் – 18
உண்மைக் காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்என்றால்
காதலைத் தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
எப்படி பாரி எனக்குள் நுழைந்து, என் உயிரை உருக்கும் இந்தக் காதல், உன்னிடம் இல்லாது போயிற்று. என்னை நீ விரும்புவது உண்மை. அதை நெஞ்சார மறுத்து இப்போது பொய் உரைப்பதும் உண்மை. நான் என்ன தப்பு செய்தேன். தவறு எதுவென்று தெரிந்தால் சரி செய்து கொள்ளலாம். ஆனால் தவறு என்னவென்றே தெரியாதபோது திருத்திக் கொள்வது எப்படி. இதை விதி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பாரி அந்த மழை இரவன்று நாம் வாழ்ந்த வாழ்க்கையை காலம் முழுவதும் தொடர வழியில்லையா? மூடிய கண்களிலிருந்து நீர் வழிந்தது லலிதாவிற்கு. தனது டைரியை எடுத்துக் கொண்டாள். ‘பாரியே என் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் ’ என்று எழுத ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் கழித்த பொழுதுகளில் ஆழ்ந்தாள்.
“லல்லி… மணி மூணாச்சுடி… சாப்பிட வா” என்று ஐந்தாவது முறையாக சாப்பிட அழைத்த தெய்வானை, பொறுமை இழந்து மகளது அறைக்குள் நுழைந்தாள்.
“எத்தனை தடவை கூப்பிடுறது” என்றவாறே நுழைந்தவள், அங்கு சுவரை வெறித்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த லல்லியைக் கண்டு கவலை முகத்துடன்.
“என்னடி ஆச்சு… ஏன் இப்படி உக்காந்திருக்க… மாப்பிள்ளை போன் பண்ணி ஏதாவது சொன்னாரா”
“ஆமாம், ஏதாவது கேக்குறதுக்கு லிஸ்ட் இருந்தாத்தானே போன் பண்ணுவாரு… நீ வேறக் எரிச்சலைக் கிளப்பாதம்மா” என்றாள் லல்லி பதிலாக.
“மனசை ரொம்ப குழப்பிக்காதடி. இந்த மாதிரி கொடுக்கல் வாங்கல் எல்லாம் அந்தக் காலத்திலிருந்து நடக்குறதுதான். பொண்ணு நல்லாருக்கணும்னு அம்மா அப்பாவே முன்வந்து செய்றதுதான் கல்யாண செலவு. உங்களை மாதிரி பொண்ணுங்க கண்டதைப் படிச்சுபுட்டு வரதட்சணை அடிமைத்தனம், கொடுக்காதிங்கன்னு விவரம் புரியாம பேசுறிங்க.
உன் பேச்சுக்கே வர்றேனே. பெரியவங்க யோசிக்காம எதையும் செய்ய மாட்டாங்கன்னு சொல்லுவியே. அதே மாதிரி யோசிச்சு பெரியவங்க வச்சதுதான் இந்த டௌரி. பிள்ளைங்க நம்ம காலத்துக்குப் பிறகும் கஷ்டப்படக்கூடாதுன்னு பொண்ணுங்களுக்கு பொன்னும், பசங்களுக்கு மண்ணும் பிரிச்சுக் கொடுக்குறது வழக்கம்”
“நீ சொல்றது எல்லாம் சரிதான்மா. அந்த காலத்தில் பொம்பளைப் பிள்ளைகளுக்குப் படிப்பில்லை… அதனால நகையை வித்தாவது பொழைச்சுக்கட்டும்னு நினைச்சு ஏற்பாடு செஞ்சாங்கன்னு வச்சுக்கோயேன்.
ஆனால் அந்த நகையும் பணமும் கூட அந்தப் பெண் தனக்கு என்ன வேணும்னு வேண்டியதைக் கேக்குறாளா… அவ சார்பா வேற யாரோ ஒருத்தர், இனிமே காலம் முழுக்கக் காப்பாத்தப் போறவர்னு நம்பும் ஒரு ஆள், அவளோட பெற்றோர் கிட்டக் கேக்கறதுதான் தப்பு.
ஒரு தாய் தகப்பனோட கடமை என்ன… குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், துணிவும், ஆரோக்கியமான உடம்பும், நல்ல அன்பான சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொடுக்குறதுதான். இது எல்லாம் இருந்தால் இந்த உலகத்தில் அந்தக் குழந்தையே எதிர்நீச்சல் போட்டுத் தனக்குத் தேவையானதை வாங்கிக்கும். நீங்க தர்ற பணத்தையும், நிலத்தையும் காப்பாத்த அவனுக்குத் தெம்பு வேண்டாமா… “
“சரிடி மத்தவங்களை என்னால் திருத்த முடியாது. உனக்கு என்ன வேணும்னு சொல்லு வாங்கித்தர்றோம்”
எனக்குப் பாரிதான் வேணும் என்று சொல்லிவிடலாமா… என் பெற்றோர் சம்மதித்தாலும் எண்ணுடன் வர பாரி சம்மதிப்பானா… “எனக்கு… எனக்கு… பா..”
தெய்வானை பொறுமையிழந்து “அதுதான் பாரின் போறியே… “
“அதில்லம்மா…”
“எதுவானாலும் வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு சொல்லு”
“சாப்பாடு வேண்டாம்மா”
“ஏன் வேண்டாம், நீ சரியாவே சாப்பிடுறதில்லை லல்லி. முந்திக்கு உடம்பு இளைச்சுடுச்சு. கன்னம் எல்லாம் ஒட்டி, கண்ணு எல்லாம் உள்ள போயிருக்கு. உடம்பு கிடம்பு எதுவும் செய்யுதா”
“வயிறு வலிக்குதும்மா”
அவளது வயிறை பரிசோதித்துப் பார்த்தார்.
“அம்மா, அங்க தொடாதே வலிக்குது” என்று முகம் சுருக்கினாள் லல்லி.
“சூட்டு வலியா இருக்கும். விளக்கெண்ணை தடவுறேன். வெந்தயக் களி சாப்பிட்டா சூடெல்லாம் பறந்துடும்” லலிதாவிடம் பேசியபடியே அவளது வயிற்றில் விளக்கெண்ணையைத் தடவினார்.
“அம்மா…” பள்ளியிலிருந்து நுழைந்த ப்ரீதா புத்தகப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு தெய்வானை முதுகில் தொப்பென விழுந்து கட்டிக் கொண்டாள்.
“மெதுவாடி… என் முதுகு உடைஞ்சுடப் போகுது”
“என்னக்கா… விளக்கெண்ணை தடுவுறாங்க, வயிறு வலியா…”
ஆமாம் என்று சொன்ன லலிதாவின் முகத்தில் வலியின் வேதனை. அவளது மனமும் பாரியின் நினைவில் வாடியதால் உடல் வேதனை பல மடங்காகத் தெரிந்தது.
“போதும்மா… நீ வயத்தை அமுக்குறதே இன்னும் வலி அதிகமாகுது” என்று அன்னையிடம் புகார் சொன்னாள் லலிதா.
“அப்பா வர்ற வெள்ளிக் கிழமை ‘வராக சித்தேஸ்வரி’ கோவிலுக்குப் போகணும்னு சொல்லிருக்கார். போயிட்டு வரலாம்”
கண்கள் பளிச்சிட ப்ரீதா “ஹை நான் ஸ்கூலுக்கு லீவ் போட்டுடவா” என்றாள்.
“ஆமாம்… நாளைக்கே டீச்சர்கிட்ட சொல்லிடு” என்றபடி எழுந்தார் தெய்வானை.
“இப்ப எதுக்கும்மா லீவு போட்டுட்டுப் போகணும்” தனது சந்தேகத்தைக் கேட்டாள் ப்ரீதா.
“உங்கக்கா வெள்ளத்தில் மாட்டினப்ப, பத்திரமா திரும்பி வந்தவுடனே கோவிலுக்குப் போறதா உங்கப்பா வேண்டிருக்காராம்” எண்ணைக் கிண்ணத்தை ஏந்தியபடி சமயலறைக்கு சென்றார் தெய்வானை.
‘வராக சித்தேஸ்வரி’ ஆலயத்திற்கு லலிதாவின் தாத்தா இருந்தவரை அடிக்கடி சென்று வருவார். வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்று வருவார்கள். இப்போது குறைந்துவிட்டது.
“லலிதா வயிறு வலி எப்படி இருக்கு”
“கொஞ்சம் குறைஞ்சிருக்கு”
“வந்து ரெண்டு வாய் சாப்பிடு” என்று அழைத்தார் தெய்வானை. அதற்கு மேலும் தாமதித்தால் அன்னை கோபம் கொள்வார் என்று எண்ணி எழுந்தாள் லலிதா.
“மோர் சாதம் போதும்”
‘ஏன்கா… நீ சாப்பிடல” என்று கேட்டபடி சீருடையைக் கழற்றி துவைக்கப் போட்டுவிட்டு மாற்றுடை அணிந்து வந்தாள் ப்ரீதா.
“வயிறு வலிச்சது”
“சாப்பிடக் கூட முடியலையா இல்லை சாப்பாட்டை அவாய்ட் பண்றதுக்காக சொன்னியா… ஆமாம், கல்யாணம் ஆனதும் வயிறு வலிச்சா என்ன செய்வ? உன் மாமியார் எண்ணை தடவி விடுவாங்களா” என்ற ப்ரீதாவின் தலையில் ஒரு குட்டு வைத்தார் தெய்வானை.
ப்ரீதாவின் டிபன்பாக்ஸை திறந்து காட்டி “மத்யானம் ஒரு இட்டிலிதான் சாப்பிட்டியா. டிபன்பாக்ஸ்ல வச்ச இட்டிலி எல்லாம் அப்படியே இருக்கு”
“இந்த இட்டிலியை எல்லாம் நீ மத்யானதுக்குக் கட்டித் தந்ததே தப்பு. இதுல வேற சாப்பிடலன்னு அடிக்கிற. இப்படியெல்லாம் குழந்தையைக் கொடுமை படுத்துறதே தப்பும்மா… ” என்றாள் ப்ரீதா
“ஏண்டி சாப்பிடாம பட்டினியா வருவ, ஒரு அம்மாக்காரி கண்டிக்க லேசா குட்டினா அதுக்குப் பேரு கொடுமையா”
“குட்டினது கொடுமை இல்லம்மா. சாப்பாடு கட்டித்தறேன்னு உப்புமா, இட்டிலி, பக்கத்து கிளாஸ் வரைக்கும் புளிச்ச வாடை வீசுற மோர் சாதம் இப்படிக் கட்டித் தர்றியே அதுதான் கொடுமையோ கொடுமை” என்ற ப்ரீதாவின் ஜோக்குக்கு வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் லலிதா.
“உனக்கு எங்கிருந்துடி இத்தனை வாய் வந்தது… உனக்கெல்லாம் சாப்பாடு தரேனே என்னை சொல்லணும். தட்டை எடுத்துட்டு சாப்பிட வாங்கடி…” என்று திட்ட, இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.
“அம்மா வெள்ளிக்கிழமை தானே கோவிலுக்குப் போறோம்…” ப்ரீதா கேட்க
“ஆமாம் …” என்றார் தெய்வானை அழுத்தி.
“அன்னைக்குத்தான் பாரி வீட்ல கோவிலுக்கு பூஜை போடப் போறாங்களாம். நேத்து அந்த ஆன்ட்டி போன் பண்ணி நம்ம எல்லாரையும் கூப்பிட்டாங்க. நீங்க யாரும் வீட்ல இல்லையே அதனால என்கிட்டே சொல்ல சொன்னாங்க” என்றாள் ப்ரீதா
எந்த பாரி… என்று யோசிப்பது போல முகத்தை சுருக்கிய தெய்வானை பின்னர் புரிந்து கொண்டார்.
“நம்ம போக முடியாது. வேணும்னா அந்தப் பையன் கல்யாணத்துக்குப் போகலாம். ஏய் ப்ரீதா… உனக்கும் அந்தப் பையனுக்கும் எத்தனை வயசு வித்யாசம்… என்னமோ நீ பேரு வச்சது மாதிரி ‘பாரி’ங்குற… “
“அவரு பேரு பாரிதானே அக்கா” என்று லலிதாவிடம் கேட்டாள். ஆமாமென்று லலிதா சொல்லிவிட்டு “முழு பேரு வேள்பாரி” என்றாள்
“தகவலுக்கு நன்றி தமக்கையே. இனிமே வேள்பாரி என்றே குறிப்பிடுகிறேன்” என்றாள்.
“உதை விழும்… ஒழுங்கா அண்ணன்னு சொல்லு” என்று கண்டித்தார் தெய்வானை.
“ஐய்யே… அண்ணனா” என்று ப்ரீதா வெளியே உரக்கவும்,
“ஐயோ… அண்ணனா” என்று லலிதா மனதில் உரக்கவும் ஒருசேரக் கத்தினார்கள்.
“என்னால அண்ணன்னு எல்லாம் கூப்பிட முடியாது. நீ என் மண்டைல இன்னைக்குக் குட்டினதால கண்டிப்பா அண்ணன்னு கூப்பிட மாட்டேன். வேணும்னா மாமான்னு கூப்பிடுறேன்” என்றாள் ப்ரீதா.
“எதெதுக்கு வம்பு பண்றதுன்னு ஒரு அளவே இல்லாம போச்சு இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு. அந்தத் தம்பி பாரி கூட கூடப் பொறந்த பொறப்புன்னு சொன்னதுக்கு ஒரு வார்த்தை மறுத்து சொல்லல. என் வீட்ல இருக்குற வானரம் அண்ணன்னு கூப்பிட சொன்னா மாமாங்குது” தெய்வானை தனது அர்ச்சனையை ஆரம்பிக்க
“அம்மா என்னோட கலருக்கு அந்தப் பாரியை அண்ணன்னு சொன்னா உலகம் நம்புமா? முதலில் நீ நம்புவியா” என்று ப்ரீதா அங்கலாய்க்க
“நீ எப்பம்மா அப்படி சொன்ன…” முகம் இருள, கண்களில் வேதனையுடன் கேட்டாள் லலிதா
“எப்பன்னா… அந்தப் பையனும் நீயும் ஊருக்கு வந்திங்களே அன்னைக்குக் காலைல கேட்டேன். மத்தபடி அந்தத் தம்பி பேசக் கூலி கேக்கும் போல” என்றார் அவரும்.
அதுதான் காரணமா… பாரி என்னை நீ தவிர்க்க இதுதான் காரணமா… இதுவரை விடை தெரியாத ஒரு கேள்விக்கு விடை தெரிந்தது நிம்மதியாக இருந்தாலும், அனிச்ச மலரைப் போல இருப்பது பாரிக்கும் தனக்கும் பிற்காலத்தில் ஒத்துவருமா என்று நினைத்துக் கொண்டாள்.
“அக்கா, நாளைக்கு வெந்தயக் கீரையை அறுவடை பண்ணிடலாம். இளசா இருந்தால்தான் நல்லது. அதனால காலைல நேரத்தோட எல்லாரும் கீரைப்பாத்திக்கு வந்திருங்க” என்று பாரி அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருந்தபோது க்ளிக் என்று அலைப்பேசியில் தகவல் ஒன்று காத்திருப்பதாக ஓசை ஒன்று வந்தது.
அசுவாரஸ்யமாக செல்லை எடுத்து மேலோட்டமாகப் பார்த்தவன் அது லலிதாவின் எண் என்று கண்டு கொண்டபின் வேகமாய் படித்தான்.
‘பாரி நீங்க எங்கம்மாவுக்கு வேணும்னா கூடப் பொறக்காத உடன்பிறப்பா இருந்துக்கோங்க. எனக்கு நீங்க மாமாதான். என் தங்கை கூட உங்களை மாமான்னு தான் கூப்பிடுவேன்னு எங்கம்மாட்ட சொல்லும்போது, நான் எப்படி ஒத்துக்க முடியும். நீங்களே சொல்லுங்க பாரி மாமா’ என்று இருக்க, அவனது இதழ்கள் புன்னகையில் விரிய முகம் மலர்ந்தது.
“பாரி தம்பி, உங்க பொண்டாட்டிகிட்ட நேர்ல போயி பேசாம எங்க காலத்து ஸ்டைலில் ‘நலம் நலமறிய ஆவல்’ன்னு லெட்டர் போட்டு பேசுறது எனக்கே கோவம் வருது” என்று போகிற போக்கில் ஒரு பெண் சொல்லிவிட்டுப் போக, மேலும் முகம் சிவந்தான் பாரி.
“பாரி… பூஜைக்குத் தேங்காய், மாலை ரெண்டும் எடுத்து வச்சுட்டியா” என்றார் பார்வதி.
“எடுத்து வச்சுட்டேன்மா”
“பாலு… “
“நேரடியா கோவிலுக்கு வந்துடும்”
“அரிசி எடுத்து வச்சிருந்தேனே… “
“ஒரு மூட்டையை வண்டில ஏத்திட்டேன்மா”
“அந்த அரிசி இல்லைடா. வெறும் அரிசில பொங்கல் வைக்கக் கூடாதுன்னு பச்சரிசியோட ஒரு கைப்பிடி சிறுபருப்பைக் கலந்து வச்சிருந்தேனே… எங்க போச்சு… இங்கிருக்கு பாரு… இதை எடுத்துட்டுப் போ…” என்று யோசித்து யோசித்து வேலை செய்தார் பார்வதி.
அமுதா வீட்டில் வேறு பூஜையில் கலந்து கொள்வதாக சொல்லியிருந்தனர். இன்று அமுதா கையாலேயே பொங்கல் பொங்கிப் படைக்க வேண்டும் என்ற ஒரு ரகசிய ஆசை அவர் மனதில். அமுதாவிடம் சொல்ல முடியாது. மீறிச் சொன்னால் வீம்புக்கென்றே மறுக்கும் பிடிவாதக்காரி அவள். ‘சிறு பெண் தானே, பொறுப்புகள் கூடும்போது சிறுபிள்ளைத்தனம் ஓடி ஒளிந்து கொள்ளும்’ என்று தன்னைத் தானே சமாதனம் செய்து கொண்டார்.
அந்தக் காலைவேளையில் ஊரை விட்டு தள்ளி ஒரு காட்டிலிருந்த கோவிலுக்கு சென்ற பொழுது பூசாரி மட்டும் கதவைத் திறந்து கோவிலைத் துப்புரப்படுத்திவிட்டுக் காத்திருந்தார்.
பூஜை சாமான்களை எல்லாம் எடுத்து ஒவ்வொன்றாக அடுக்கினார்கள் பாரியின் குடும்பத்தினர்.
“மத்தவங்க எல்லாம் வர நேரமாகும், நம்ம அடுப்பு கூட்டி, கோலம் போட்டு, பானையை மஞ்சள் பூசி தயார் பண்ணி வைக்கலாம்” என்று அன்னை சொன்னதைக் கேட்டுக் கொண்டான்.
“வேற யாரும் பூஜை போட வர்றாங்களா… இன்னொரு ஜோடி பூஜை சாமான் எல்லாம் ஏற்கனவே இருக்கு” பூசாரியிடம் விசாரித்தார் கபிலர்.
“ஆமாங்கய்யா, இன்னொருத்தங்களும் பூஜைக்கு வரேன்னு சொல்லிருக்காங்க. பொங்கல் எல்லாம் படைக்கல” என்றார் பூசாரி
“அப்படியா… வந்தால் நம்ம வீட்டுப் பொங்கல் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னு சொல்லிடுங்க” என்றார் கபிலர்.
கணவர் பேசியதைக் காதில் வாங்கியபடி வந்த பார்வதி, “ஏங்க… அவங்க யாரோ எவரோ… நம்ம கூப்பிட்டதும் கலந்துக்குவாங்களா” என்றார்.
“இங்க வரவங்க பெரும்பாலும் பங்காளிங்க உறவுமுறைதான் … அதனால கலந்துக்குறதில் என்ன தப்பு… நேரில் பழக்கமில்லைன்னாலும் இந்த சாமிதானே நமக்கு இணைப்பு… ‘ என்று கபிலர் சொன்னதைக் காதில் வாங்கியபடி வேலையைத் தொடர்ந்தான் பாரி.
கோவிலின் ஒரு பகுதியிலிருக்கும் இடத்தில் பொங்கல் வைக்க கட்டிருந்த மண் அடுப்புக்கு ஏற்றபடி விறகினை சிறு துண்டுகளாக பாரி வெட்டித் தர, கோலமிட்டு, சந்தானம் குங்குமம் கொண்டு அடுப்பை அலங்கரித்தார் அவன் அன்னை.
வேலையை முடித்தபின், “பாரி, இந்த சந்தனத்தையும், குங்குமத்தையும் அம்மன் சந்நதிகிட்ட வச்சுட்டு வா… “ என்று பார்வதி தர அதை வாங்கி சென்று அம்மன் முன் வைத்துவிட்டு நிமிர்ந்த பாரி அதிர்ந்தான்.
‘வராஹ சித்தேஸ்வரி’ சந்நிதி முன்பு அம்மனை மனம் உருகி வேண்டியபடி பச்சை பட்டுடுத்தி லலிதாவும் அவர்கள் குடும்பமும் நின்றிருந்தது.
‘லலிதாவுக்கும் இந்த அம்மன்தான் குலதெய்வமா… ‘ மனம் அதிர அவளைப் பார்த்தான் பாரி.
Super….lalli neye pongal vachidu…
நன்றி சமீரா
இப்போ தான் மாமா nu message பண்ணினாள் அதுக்குள்ள பங்காளி முறைன்னு பீதி யை கிளப்புகிறாரே கபிலர் .. interesting epi sis
நன்றி ஸ்ரீதேவி.
Ayyo pangali muraina brother sister relatives agida poranga. Lalli ku iruka thelivu inthe pari ku EPO varum.
நன்றி செல்வா
Wow!! Thiruppi paarka chance kidaithu vittadhu. Ivargal nilaiyil aethenum munnetram varuma? Amman varam koduppaargalaa?
நன்றி உமா. கபிலர் வேறு பங்காளி முறையினர் கோவில்னு சொல்லிருக்கார். அதில் ஏதாவது குழப்பம் வருமோ?