கிறுக்குசாமி கதை – ஆசை தோசை
ஊரில் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினர் கிராமமக்கள். கிறுக்குசாமி தங்கியிருந்த மடத்தில், திருவிழாவிற்காக வந்திருந்த மக்களை மகிழ்விப்பதற்காகவும் நன்னெறிப் படுத்துவதற்காகவும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொள்வதற்காக ஒரு சக்தி உபாசகரும், ஒரு சிவ பக்தரும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் பல புத்தகங்களை மெத்தப் படித்தவர்கள். தனது நம்பிக்கைதான் உலகில் தலை சிறந்தது என்ற எண்ணம் உடையவர்கள்.
கிறுக்குசாமிக்கு இவர்கள் இருவரையும் உபசரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் சொற்பொழிவு முடிந்து மூவரும் மடத்திற்கு வருவதற்குள் நள்ளிரவாகிவிட்டது. இரவு உணவு வேளை தாண்டி வெகு நேரமாகிவிட்டதால் சமையல் காரன் வேலையை முடித்துக் கொண்டு சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு சென்று விட்டான்.
மூவருக்கும் பயங்கர பசி. ஆனால் அங்கு உணவுப் பானைகள் கழுவி கவிழ்த்து வைக்கப் பட்டிருந்தன. அங்கேயும் இங்கேயும் உருட்டி கடைசியாக கொஞ்சம் பாலையும், ஒரு தட்டில் மூடி வைக்கப்பட்டிருந்த எஞ்சிய உணவையும் கண்டார் கிறுக்குசாமி.
அது ஒரு தோசை. ஆம் ஒரே ஒரு தோசை. அதை மூன்று பேருக்கும் எப்படி பங்கிடுவது? மூன்றாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றார் கிறுக்குசாமி. ஆனால் அதில் மற்றவர்களுக்கு விருப்பம் இல்லை. தனக்கே அந்த தோசை வேண்டும் என்று நினைத்தனர்.
“எனக்கு ஒரு குவளை பால் மட்டும் போதும். இந்த தோசையை சாப்பிடத் தகுதியானவரை இறைவனே தேர்ந்தெடுப்பார்” என்று இருவரும் சொல்லி விட்டனர். அதன் பின்னர் விருந்தினரை உபசரிக்கும் பண்பால் இருவருக்கும் அந்தப் பாலை ஆளுக்கு ஒரு குவளை ஊற்றிக் கொடுத்துவிட்டு, பச்சைத் தண்ணீரைப் பருகிவிட்டு படுத்துக் கொண்டார் கிறுக்கு சாமி.
அதன் பின்னர் மூவரும் திண்ணையில் பாயை விரித்து படுத்து கண்ணயர்ந்தனர். சிறிது நேரம் கழித்து சிவ பக்தர் எழுத்து “மிக்க நன்றி இறைவனே உன் கருணையே கருணை” என்றார்.
மற்றவர்கள் இருவரும் விழுந்தடித்துக் கொண்டு எழுந்தனர். அவர்களிடம் சிவ பக்தர் “இன்று எனக்கு ஒரு அற்புதக் காட்சி கிடைத்தது. சற்று நேரத்துக்கு முன்னர் சிவகணங்கள் சில என்னை கைலாசத்துக்கு அழைத்துச் சென்றன. அங்கே அம்பலவாணன் காலகண்டனை, என் அப்பனை தரிசித்தேன். அவர் இத்தனை நாளாக யாம் செய்த சிவத்தொண்டினைப் பாராட்டி நானே இந்த தோசையை உண்ணத் தகுதியானவன் என்று சான்றளித்தார்” என்றார் பெருமிதமாக.
“இருக்க முடியாதே. என்னை கொஞ்ச நேரத்துக்கு முன்னர் சக்தி லோகத்துக்கு புஷ்பப் பல்லக்கு ஒன்று அழைத்துச் சென்றது. என்னைப் பாராட்டிய அபிராமவல்லியாம் ஆதிபராசக்தி மகனே நீ இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். இன்னும் பலரை நீ நல்வழிப்படுத்த வேண்டி இருக்கிறது. அதனால் உன் நண்பர்களை விட சக்தி உனக்கு அதிகம் தேவைப்படுவதால் நீதான் தோசையை சாப்பிட வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்” என்றார்.
இருவரும் இப்போது கிறுக்குசாமி என்ன சொல்லப் போகிறார் என்று உற்று நோக்கினர்.
“என்னைப் பாக்க யாரும் வரல. பசி மயக்கத்தில் அப்படியே தூங்கிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொடும் பசில எந்திருச்சுப் பாத்தேன். இதுக்கு மேல தாங்காதுன்னு தோசையை எடுத்துத் தின்னுட்டேன்”
இதைக் கேட்டதும் மற்ற இருவருக்கும் சரியான கோபம். “அதெப்படி நீ மட்டும் அந்த தோசையை சாப்பிடலாம். எங்க சம்மதத்தை கேட்டிருக்க வேண்டுமல்லவா?”
“கேட்டிருக்கலாம் ஆனால் நீங்கதான் கைலாயத்துக்கும் சக்திலோகத்துக்கும் போயிருந்திங்களே?”