Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 3

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 3

அத்தியாயம்  – 3 

 

“இடியட் அறிவில்லை? கண்ணு என்ன பொடனிலையா இருக்கு?” என்ற கிரீச்சிட்ட குரலைக் கேட்டதும்தான் செம்பருத்திக்கு தான் இருந்த சூழ்நிலையே நினைவுக்கு வந்தது. ஏதோ தேவையற்ற வெட்டி யோசனையில் யார் மேலோ இடித்து, நடுரோட்டில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில் அப்படியே பப்பரப்பா என விழுந்து கிடந்தததை எண்ணி அவளுக்கு அவமானமாக இருந்தது. 

தன்னிடம் கத்திய குரல் வந்த திசையை பார்த்தாள். ஆலிவ் பச்சையில் சிகப்பு பூவேலை செய்யப்பட்டு கண்ணைப் பறிக்கும் சேலையை உடுத்தி இருந்த மிக அழகிய பெண் அவள். பளிங்கு மேனி, புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள், தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள். அந்த அழகியின் அழகைக் கெடுத்துக் கொண்டு கொடூரமாய் வளைந்த உதடுகள் சுருங்கிய புருவங்கள் 

‘ஏன்  இப்படிக்  காட்டுக் கூச்சல் போடுகிறாள்?’

ஓ அவளது கைகளில் என்ன? 

அவள் கையில் பிடித்திருந்த காப்பி கப் சற்றே நசுங்கி காப்பி அவளது கைகளில் சிதறி அப்படியே புள்ளிகள் ஏற்பட்டிருக்க, அருவருத்தபடி கையில் இருக்கும் பேப்பர் டிஸு வால்  துடைத்துக் கொண்டு அவ்வப்போது உடையில் கரை பட்டிருக்கிறதா என்று சோதித்துக் கொண்டிருந்தாள். 

செம்பருத்தி முயன்று எழுந்தாள் இல்லை இல்லை எழ முயற்சி செய்தாள். ஒரு புறமாகக் கைகளை ஊன்றி மடங்கி இருந்த வலது காலை நகர்த்தி, எழ முயன்றாலும் பிடிமானத்திற்கு பக்கத்தில் ஏதாவது இருந்தால் பிடித்துக் கொண்டு எழுந்திருக்கலாம் என்று கண்கள் தேடின. இந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு எழலாமா?

 இவளே சாப்பாட்டைக் கண்ணில் மட்டும்தான் பார்ப்பாள் போல, கொடி இடையாளாக இருக்கிறாள். இவளை பிடித்தால் பாரம் தாங்காமல் என் மேலேயே  விழுந்து விடுவாள். இப்போது எப்படி எந்திரிப்பது?

 

செம்பருத்தி யோசித்துக் கொண்டிருந்தபோதே அவளது கண்முன் ஒரு வலிமையான உறுதியான கரம் ஒன்று நீண்டது. 

 

“என் கையை பிடிச்சுக்கோம்மா. இப்ப எந்திரி” என்று சொன்ன அந்தக் குரல்தான் எவ்வளவு கணீரென்று இருக்கிறது.

 

அவளது கைகளை பற்றிய அந்தக் கரம் ஒன்றுதான் இப்போது பற்றுதல் என்று எண்ணி அந்தக் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டாள். ஒரு பக்கமாக சாய்ந்து மறுகையை ஊன்றி தம் கட்டி எழுந்து நின்றாள். சில வினாடிகளில் நடந்ததை அந்த அழகி ஒரு அருவருப்புடன் பார்த்தாள். 

“அய்யே! உங்க டிரஸ் எல்லாம் காஃபி கரை அவினாஷ்”

என்றதும்தான்  தனது கைகளைப் பிடித்துத் தூக்கி விட்ட இளைஞனை பார்த்தாள். முதலில் பார்த்தது அவனது கண்களைத்தான் சற்றே சிறிய கண்கள்தான் ஆனால் அதில் தான்  எத்தனை கூர்மை? 

 

அவனது குரலிலும், பார்வையிலும் வசீகரம் மட்டுமின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் ஒரு கம்பீரம் தெரிந்தது. 

 

“ஆர் யூ  ஒகே?” என்று அவன் கேட்டதும்தான் அவனும் தனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள்.

 

“அவளுக்கென்ன அவினாஷ்? நல்லா திம்முன்னு நிக்கிறா…  அவ கையைப் பிடிச்சு எந்திரிச்சதில் உங்களுக்கு பிராக்ச்சர் எதுவும் ஆகலையான்னு பாருங்க” என்று அவள் சொன்னது கேலிப்பேச்சுக்களை புறந்தள்ளிவிட்டு செல்லும் செம்பருத்திக்கு  இந்த முறை விலக்க முடியாது முள் போல நெஞ்சைத் தைத்தது. 

 

“ஷூ… காவ்யா… இதென்ன பேச்சு? நீ காருக்குப் போ… நான் வரேன்” தூரத்தில் தெரிந்த அந்த பென்ஸ் காரை சுட்டிக் காட்டினான். காரைக் கண்டதும் செம்பருத்திக்கு பயம் கொஞ்சம் வந்தது. ஐயோ பெரிய இடத்தில் மோதிட்டியேடி.. ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்களோ? காப்பி டம்பளரைத் தட்டி விட்டதுக்கெல்லாம் ஜெயிலுக்கு அனுப்பினா இந்தியாவை சுத்திலும் பார்டர் மாதிரி ஜெயில் கம்பி கட்டிற வேண்டியதுதான். 

 

“நான் ஏன் போகணும்? உங்க ஷர்ட் கூட கொஞ்சம் கரையாயிடுச்சு. ஏம்மா கண்ணு என்ன பொடனிலையா இருக்கு” என்று மறுபடி ஆரம்பித்தாள். 

 

தான் செய்தது தப்புத்தான். எந்த அவசரத்தில் இருவரும் இருந்தார்களோ… காப்பியைக் கொட்டிவிட்டு உடையினைப் பாழாக்கிவிட்டேன். இந்த உடையுடன் அலுவலகத்திற்கு செல்ல முடியுமா? எதையோ நினைத்துக் கொண்டு நடந்தது எனது தப்புத்தான். அவளது முட்டாள்தனம் உரைக்க கண்களில் நீர் கரை கட்டியது செம்பருத்திக்கு. 

 

“சாரிக்கா, வேணும்னே செய்யல… ஏதோ நினைவில் கவனிக்காம வந்துட்டேன்”

 

“அப்படி என்ன காலங்காத்தால நினைவு? இல்ல பகல் கனவு? இந்த கனவுக் கண்ணனை தேடுற  வேலை எல்லாம் சாய்ந்தர நேரத்தில் வச்சுக்க வேண்டியதுதானே.உன்னை மாதிரி பெண்கள் எல்லாம் அப்போதானே இந்த வேலையை ஆரம்பிப்பிங்க” அவளது குரலில் இருந்த மறைமுகக் குத்தல் செம்பருத்திக்குத் தெரியவில்லை. 

 

கூடஇருந்த இளைஞனின் முகத்தில் ஒரு இறுக்கம், கண்களில் சிவப்பு தோன்றி நொடியில் மறைந்தது.  கைகளை காவ்யாவை  நோக்கி நீட்டி நிறுத்தும்படி சொன்னான். 

 

“இல்லக்கா நிஜமாலேயே வேலைக்கு நேரமாச்சுன்னு நினைச்சுட்டே வந்தேன். பஸ் வேற தூரத்தில் வந்துச்சா, அதைப் பிடிக்கணும்னு முட்டாள்தனமா இந்தப் பக்கம் கவனிக்காம வந்துட்டேன்” என்றாள் அப்பாவியாக. 

 

“பரவால்லமா… “ என்று அவினாஷ் எதோ சொல்வதற்குள் இடையிட்ட அந்தக் காவ்யா 

“முட்டாள்தனமா? எல்லா பக்கமும் கவனிச்சுட்டுத்தான் க்ராஸ் பண்ணனும் இந்த பேசிக் அறிவில்லாம உன்னையெல்லாம் பெத்துவிட்டிருக்காங்களே அவங்களைச் சொல்லணும். அவங்கதான் அடி முட்டாள்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு காவ்யா பேசியபொழுது அவளது அழகெல்லாம் அடியோடு மறைந்து போனது போலத் தோன்றியது செம்பருத்திக்கு. 

 

“ தப்பு செஞ்சது நான், என்னைப் பத்தி என்ன வேணும்னாலும் பேசுங்க. ஆனால் என் பெத்தவங்களைப் பத்தி பேசாதீங்க.”

 

“அட தப்பு செஞ்சதையும் செஞ்சுட்டுப் பேசுறதை பாரு. இப்படி ஒரு உதவாக்கரையை பெத்தவங்களைப் பத்தி அப்படித்தான் பேசுவேன்”

 

கோபத்தில் கண்கள் விடுங்க அவளை நோக்கிய செம்பருத்தி “நீங்க ரொம்ப தப்பா பேசுறிங்க… என்னைப் பார்த்தே ஒரு சில நிமிடங்கள்தான் ஆயிருக்கும் அதுக்குள்ள எங்கம்மா அப்பாவை எல்லாம் முட்டாள்னு சொல்ற தகுதி எப்படி உங்களுக்கு வந்தது? 

 

தப்பு செஞ்சதை உணர்ந்து மன்னிப்பு கேட்டுட்டு  நீங்க பேசுற மரியாதை குறைவான வார்த்தையைப் பொறுத்துகிட்டு, உங்ககிட்ட  மரியாதையோடு பதில் சொல்ற பண்பான பெண்ணை பெத்து வளத்திருக்காங்க. அவங்களைக்  குறை சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது. 

 

பதிலுக்கு ஒரு சின்ன விஷயத்துக்காக ஊரையே கூட்டி, கடுமையான வார்த்தைகளை பேசுற ஒரு பெண்ணைப் பெத்து வச்சிருக்கிற உங்க அம்மா அப்பாவை திருப்பித் திட்டமாட்டேன்.  ஏன்னா கனி இருக்க காய் கவர்ந்தற்றுன்னு எங்க அப்பா சொல்லித் தந்திருக்கார்.”

 

வாயடைத்து போய் பேச வாய் எழும்பாமல் நின்றுக் கொண்டிருந்த காவ்யாவை மேலும் விட மனமே இல்லை செம்பருத்திக்கு. காலையில் இருந்து அடுக்கடுக்காய் வந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் வடிகாலாய் அவளுக்கு இந்த சம்பவம் மாறிப் போனது. 

 

“நான் உங்களை மாதிரி சொகுசு காரில் பவனி வர முடியாதவளா இருக்கலாம். ஆனால் என்னோட பதினேழாம் வயதிலிருந்து இந்த நாலு வருஷமா நேர்மையான உழைப்பில் வாழ்ந்துகிட்டு இருக்குறவ. 

 

சரி நான்தான் பஸ்ஸைப் பாத்துகிட்டே ஏதோ நினைவில் வந்தேன். நீங்க ரெண்டு பேரும் எதிரில் வேகமா ஓடி வர்ற இவ்வளவு பெரிய மனுஷியைக் கூட கவனிக்காம எங்க பாத்துட்டு வந்திங்க? என் மேல பாதி தப்புன்னா உங்க மேல மீதி தப்பு இருக்குல்ல. அதுக்காக உங்க வீட்டில் இருக்கவங்களை நான் திட்டட்டுமா” என்று சீறிய அந்த சிறு பெண்ணை வியப்போடு பார்த்தான் அவினாஷ். 

 

“முதலில் ரெஸ்ட் ரூம்ல போயி இந்த காப்பி கரை எல்லாம் க்ளீன் பண்ணிட்டு வரேன்”

 

என்று அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிய காவ்யாவை கண்ணில் சிரிப்புடன் பார்த்த அவினாஷ் செம்பருத்தியிடம் 

 

“சரி, நீங்க ஓகேயா? ஒரு காப்பி குடிச்சுட்டு போலாமா? நானும் காலைலேருந்து சாப்பிடல. அதனால கண்ணு கூட சரியா தெரிய மாட்டிங்குது” என்றான். 

 

“சாரி சார், வாங்க நான்தானே உங்க காப்பியைத் தட்டி விட்டேன். அதனால நானே வாங்கித் தரேன்” என்று சொல்லி அழைத்தாள். 

 

அவள் பக்கத்தில் இருந்த சிறிய டீ கடையை நோக்கி நடக்க, அவனோ “இங்க இல்லை. அதோ அந்த ஷாப்பில்” என்று நவீன கபே ஒன்றை சுட்டிக் காட்டினான். 

 

“அங்கேயா… “ இழுத்தாள் செம்பருத்தி. 

 

“ஆமா, அங்க வாங்கின காப்பியைத்தானே நீ தட்டிவிட்ட.”

 

“ஹ்ம்ம்… சரி வாங்க” என்று முகத்தை சுளித்துக் கொண்டே நடந்தவளை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தவண்ணம் பின் தொடர்ந்தான். 

 

“தப்பா நினைச்சுக்காதிங்க. அங்க காப்பி எவ்வளவு இருக்கும்?”

 

“எவ்வளவா இருந்தாலும் அங்கதான் வாங்குறோம்” என்று அழுத்தமாகச் சொல்ல, வேறு வழியின்றி உள்ளே சென்றார்கள். 

 

ஓரத்தில் ஒரு டேபிளில் அவளை அமர வைத்தான். 

 

“பக்கத்தில் பெண்கள் உபயோகிக்கிற மாதிரி ரெஸ்ட்ரூம் எதுவும் இல்லை. வேலை பாக்குறேன்னு சொன்னேல்ல. இப்படி காப்பி அபிஷேகத்தோடவா போவ? இங்க காபி வாங்கினால் பாத்ரூமை உபயோகக்கலாம்.  நான் ஆர்டர் பண்ணுறதுக்குள்ள நீ ரிஃப்ரெஷ் ஆயிட்டு வா” என்று அனுப்பினான். 

 

அப்பாவையும், ஒரு சில நலம் விரும்பிகளையும் தவிர வெளி மனிதர்களிடமிருந்து இதைப் போல கரிசனை மிகுந்த வார்த்தைகளை சமீபத்திய சில வருடங்களாகக் கேட்டதே இல்லை எனலாம். இவனது வார்த்தைகளுக்குள் என்னவோ மந்திரம் இருக்கிறது. அவன் சொன்னதிற்கெல்லாம் தலையாட்டிவிட்டு மேலே பட்ட கறைகளைத் தண்ணீர் கொண்டு துடைத்துக் கொண்டிருக்கிறாளே இதுவே சாட்சி இல்லையா?

 

வாஷ்பேசினில் துடைத்துக் கொண்டிருந்தபொழுதே அருகில் இருந்த கழிவறைக் கதவு திறக்க, காவ்யாதான் வெளியே வந்தாள். 

 

“கடவுளே இன்னைக்கு காலைல யாரு மூஞ்சில முழிச்சேனோ தெரியலையே? எங்க பார்த்தாலும் ஏழரையா இருக்கே!” என்று சலித்துக் கொண்டாள். 

 

“இதுங்கெல்லாம் இங்க வந்து காப்பி  குடிக்குற அளவுக்கு வளந்துடுச்சுங்க” என்று முணுமுணுத்ததும் அவமானத்தால் முகமே சிவந்துவிட்டது செம்பருத்திக்கு. 

“என்ன சொன்னிங்க? ஏன் நாங்கல்லாம் இங்க வரக்கூடாதோ? இந்தக் கடையை உங்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்திருக்கங்களோ?”

“பட்டா எல்லாம் போடல, இங்க ஒரு காப்பி விலை முன்னூறு ரூபா. காசில்லைன்னா மாவாட்ட எல்லாம் சொல்ல மாட்டாங்க. ஆனால் தரையை குனிஞ்சு நிமிந்து பெருக்கித் துடைக்கணும். அதெல்லாம் உன்னால முடியுமா?” இளக்காரமாகக் கேட்டபடியே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள். 

ஒரு காப்பி முன்னூறு ரூபாயா? இவன் மூன்று காப்பிகள் வாங்கி இருந்தால் டிப்ஸ் கூட சேர்ந்து அதுவே ஆயிரம் ரூபாயாகி விடுமே. பஸ்ஸை பிடிக்கும் அவசரத்தில் கவனக்குறைவாக எதிரில் வந்தவரை இடித்ததற்கு ஆயிரம் ரூபாய் அபராதமா? முருகா இது உனக்கே நியாயமா இருக்கா?

இந்த ரமேஷ் தடிமாட்டோட பேரை நினைச்சு திட்டினா கூட எப்படியாவது பணம் தண்டம் கட்ட வேண்டி வந்துடுதுப்பா…’ மனதுக்குள் நான் ஸ்டாப்பாய் திட்டத் தொடங்கினாள்.

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 3”

  1. காவ்யா – கொஞ்சம் கூல் யா!

    அவினாஷ் – வாப்பா வா! லாலா கடையில கணக்குப்பிள்ளையா வேலை பார்க்கிறவளை கணக்கு போட்டு கணக்கு பண்ணிடுப்பா!

    செம்பருத்தி – இனிமேல் உனக்கு சுக்கிர தசை தான். ஏழரையெல்லாம் ரமேஷ் குடும்பத்துக்கும் காவ்யாவுக்கும் தான். நீ பட்டைய கிளப்புமா👍🤠

    ரமேஷ் – உனக்கு நோ கமெண்ட்ஸ். கெட் லாஸ்ட்

    1. வாங்க விபிஆர். உங்களோட வழக்கமான நகைச்சுவை கலந்த கமெண்ட்ஸ ரசிக்கவே சீக்கிரம் சீக்கிரம் அப்டேட்ஸ் தரணும்னு ஆசையா இருக்கு. அவினாஷ் கணக்கு பண்ணுவானா இல்லை வேற யாராவது கணக்கு போடுவாங்கலான்னு தெரியலையே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 13தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 13

ஹலோ பங்காரம்ஸ்,   அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்புடன், தமிழ் மதுரா   அத்தியாயம் – 13   துள்ளிக் குதிக்க வேண்டும் போல மகிழ்ச்சியில் மிதந்தாள் செம்பருத்தி.  பழைய கடிதங்களை ஆராய்ந்து தானே அய்யாவின் பெயர் அபிராம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 25தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 25

அத்தியாயம் – 25    அந்த விடுதியே புதிதாகத் தெரிந்தது செம்பருத்திக்கு. ஒரு வேளை புதிய நபர்களுடன் இருப்பதாலோ, இல்லை அவர்களுக்காக புதிய விதமாக அலங்கரிக்கப் பட்டிருப்பதாலோ என்பது தெரியவில்லை.    “வாங்கம்மா என்று எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்கள்” அவர்களைப் பார்த்தால்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 23தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 23

அத்தியாயம் – 23   “நீ உறுதியா சொல்றியா செம்பருத்தி” அவினாஷ் கூர்மைப் பார்வையுடன் கேட்டான்.    “இந்த கூல்ட்ரின்க்சை நான்தான் அபிராம் சாருக்கு வாங்கிட்டு வந்தேன்”   “அதெப்படி எங்ககிட்ட முன் அனுமதி பெறாம வாங்கிட்டு வரலாம்?” பாய்ந்தாள் காவ்யா.