கிறுக்குசாமி கதை
‘கிறுக்குசாமி’ இப்படி ஒரு பெயரா என்று உங்களில் பலர் எண்ணக்கூடும். என்ன செய்வது அதுதான் அவரது காரணப்பெயர்.
கிறுக்குசாமி பழனிக்கு அருகில் இருக்கும் நெய்க்காரப்பட்டியில் திவ்யமாய் சொந்த வீடு, கடை, தோப்பு துரவுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. பிரம்மச்சாரி என்பதால் நெருங்கிய உறவினர் யாருமில்லை. முருக பக்தர், ஷஷ்டி, கிருத்திகை என்றால் அறுபடை வீடுகளில் ஒன்றில் அவரைக் காணலாம்.
ஒரு நாள் என்ன நினைத்தாரோ என்னவோ பழனியிலிருந்து திரும்பி வந்தவர் தன்னிடமிருந்த சொத்து சுகத்தையெல்லாம் துறந்துவிட்டு ஆண்டிப்பண்டாரமாக மடத்தில் சேர்ந்து விட்டார். அதன் காரணமாக கிறுக்குசாமி என்று ஊராரால் நாமகரணம் சூட்டப்பட்டார்.
குடும்பம் இருப்பவனுக்கு பிள்ளை குட்டிகளின் நன்மை பற்றியே கவலை. ஆனால் இவரோ ஆத்மார்த்தமாக மக்களை எல்லாம் சுவீகரித்துக் கொண்டாரே… அதனால் அவர் மனம் முழுக்க அவர்களின் நன்மை பற்றியே எண்ணம்.
உண்மையான துறவியாக இருப்பதால் மக்களிடம் பணம் வசூல் செய்ய மாட்டார். பக்தர்களின் கவனத்தைக் கவர முயலாமல் தானுண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார்.
ஒரு மனநல மருத்துவரைப் போல மக்கள் அவரிடம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார். அதிலேயே அவர்கள் மனம் லேசாகி விடும். மண்டபத்தில் அமர்ந்து அவ்வப்போது நன்னெறிக் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளில் ஒன்றைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.
துன்ப மூட்டை
கிறுக்குசாமி ஒரு நாள் தன்னைக் காண வந்த பக்தர்களைப் பார்த்து
“மக்களே தினமும் என்கிட்ட வந்து உங்க கஷ்டங்களைப் பத்திப் புலம்பிட்டுப் போறீங்க. உங்களோட துன்பம்தான் தாங்க முடியாததுன்னு சொல்றீங்க. முருகனுக்கு கண்ணுன்னு ஒண்ணு இருந்தா உங்களைப் பாத்திருப்பான். பன்னிரெண்டு கண்ணு இருந்து என்ன பிரோஜனம் ஒரு கண்ணு கூட என்னைப் பாக்க மாட்டிங்குதுன்னு திட்டுறிங்க. இன்னைக்கு உங்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லப் போறேன்.
நம்ம ஊரு மாதிரியே மாஞ்சோலைன்னு ஒரு கிராமம் இருந்தது. அதில் மாரியப்பன் அப்படின்னு ஒருத்தன் வாழ்ந்தான்.
அவனுக்கு ஒரு நாள் கூட நிம்மதியா பொழுது விடிஞ்சு பொழுது முடிஞ்சதில்லை.
காலைல எந்திரிச்சதில் இருந்து பொண்டாட்டி சண்டை, அம்மா அப்பா பிடுங்கல், குழந்தை குட்டிகள் நச்சரிப்பு, கடன்காரங்க தொல்லைன்னு துன்பம் எல்லாம் வரிசைல நிக்கும். அதைப் பஞ்சாயத்து செஞ்சு சரி செய்றதுக்குள்ள அன்னைய பொழுதே முடிஞ்சுடும்.
அவங்க ஊரு மத்தியில் ஒரு முருகன் கோவில் இருந்துச்சு. தினமும் சாய்ந்தரம் வேலை முடிஞ்சதும் சந்தைக்கு போயி வேண்டிய பலசரக்கை வாங்கிட்டு அப்படியே கோவிலுக்குப் போயி முருகனைக் கும்பிட்டுட்டு வீட்டுக்கு வருவான்.
நித்தமும் தவறாமல் அந்த ஆண்டியைப் பார்த்து “முருகா, பலசரக்குக் கடை பரந்தாமன் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கான். அவனோட பொண்டாட்டி எத்தனை அமைதி. கொடுத்து வச்சவன். துணி வியாபாரி பீதாம்பரம் எவ்வளவு செல்வச் செழிப்போடு இருக்கான். புண்ணியம் செஞ்சவன்.
ஆனால் எனக்கு மட்டும் இத்தனை கஷ்டத்தை கொடுத்து துரதிர்ஷ்டசாலியா வச்சிருக்கியே இது உனக்கே நல்லா இருக்கா? உலகத்திலேயே பரிதாபமான மனிதன் நான்தான். இத்தனை வருஷமா என் துன்பத்தை எல்லாம் போக்குன்னு கேட்டுக் கேட்டு சலிச்சு போயிட்டேன். கர்மாவை அனுபவிச்சுத் தான் கழிக்கணும்னு வேற பெரியவங்க சொல்றாங்க. இவ்வளவு நாளா உன்னையே கும்பிட்டு இருக்குற என் மேல நீ இரக்கபட்டா ஒண்ணே ஒண்ணு செய் என்னோட துன்பங்களை எல்லாம் வேற யாருக்காவது தூக்கிக் கொடுத்துடு. இது ஒண்ணு தான் நீ எனக்கு செய்யும் ஒரே நன்மை”
இப்படி பல வருடங்களாக வேண்டிக்கிட்டான். ஒரு நாள் அப்படி வேண்டும்போது அந்த வானத்தில் இருந்து அசரீரி ஒண்ணு கேட்டது.
“என் குழந்தைகளே! இந்த மாஞ்சோலை கிராமத்து மக்கள் நீங்க எல்லாரும் பல விதமான துன்பத்தில் இருக்குறதா என்கிட்ட தினமும் பிரார்த்தனை செய்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்யத் தீர்மானித்து விட்டேன். நாளை மாலை உங்களோட துன்பங்களை எல்லாம் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு கோவில் மண்டபத்துக்கு வாருங்கள்”
அவ்வளவுதான் மாரியப்பன் விழுந்தடிச்சுட்டு வீட்டுக்கு ஓடினான். ராத்திரி முழுசும் முழிச்சிருந்து அவனோட துன்பங்களை எல்லாம் ஒவ்வொண்ணா எடுத்தி மூட்டை கட்டினான். மறுநாள் சாய்ந்தரத்துக்குள்ள கட்டனுமே ஏதாவது விட்டு போயிருச்சுன்னா…
மறுநாள் மாலை முதுகில் துன்ப மூட்டையைத் தூக்க முடியாம தூக்கி கிட்டு மெதுவா நடந்து கோவில் மண்டபத்துக்குப் போனான். அங்க போனா அந்த கிராமத்து மக்கள் எல்லாரும் அவனை விடப் பெரிய மூட்டையை வச்சுக்கிட்டு தட்டுத் தடுமாறி மண்டபதுக்கு நடந்து வந்துகிட்டு இருந்தாங்க. பலசரக்குக் கடை பரந்தாமனும், துணிக்கடை பீதாம்பரமும் ஒற்றை ஆளா நகர்த்தக் கூட முடியாத பெரிய மூட்டை ஒண்ணை குதிரை வண்டியிலும் மாட்டு வண்டியிலும் எடுத்துட்டு வந்ததைப் பாத்து மாரியப்பன் திகைச்சுப் போனான்.
எல்லாரும் துன்ப மூட்டை மேல அவங்க பெயரை எழுதி மண்டபத்தில் வச்சுட்டு அப்பாடான்னு ஓய்வெடுத்தபடியே வெளிய உக்காந்திருந்தாங்க. மறுபடியும் அந்த அசரீரி ஒலித்தது.
“உங்க துன்ப மூட்டை எல்லாம் நல்லா சோதிச்சுப் பாத்துட்டேன். நீங்க எல்லாரும் நான் உங்களுக்கு மட்டும் தாங்க முடியாத பிரச்சனையைத் தந்துட்டாதாவும் அடுத்தவனுக்கு சுலபத்தில் தீர்க்கும் சிறிய பிரச்சனையைத் தந்துட்டதாவும் சொல்லிட்டிங்க. அதனால நீங்க கேட்டுக்கிட்டபடி பிரச்சனைகளை மாத்திக்க ஒரு சந்தர்ப்பம் தர்றேன். இப்ப மண்டபத்தில் இருக்குற மூட்டைகளில் எது உங்களுக்குப் பிடிக்குதோ, எந்தப் பிரச்சனை சுலபமா தீர்க்க முடியும்னு நம்புறிங்களோ அதை எடுத்துக்கோங்க”
அதைக் கேட்டதும் மக்கள் எல்லாரும் முண்டி அடித்துக் கொண்டு வேகமாய் ஓடிச் சென்று அவர்களது மூட்டையைத் தேடி எடுத்துக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
என்று கதையை முடித்தார் கிறுக்குசாமி.
“ஏஞ்சாமி அதுதான் முருகன் பிடிச்ச மூட்டையை எடுத்துக்க சொல்லிட்டாரே. சின்ன மூட்டையா பாத்து எடுத்துக்கலாமே” என்று கூட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்க
அதைத்தான் நானும் மாரியப்பன் கிட்டக் கேட்டேன் அதுக்கு அவன் சொன்னதை அப்படியே சொல்றேன்.
“சாமி முருகன் வாய்ப்பு தந்தாருதான். இல்லைங்கல ஆனால் என் மூட்டைல என்ன பிரச்சனை இருக்குனு எனக்குத் தெரியும். எப்படியோ இத்தனை நாள் சமாளிச்சும் பழகிட்டேன். ஆனால் மத்தவன் மூட்டைல என்ன பிரச்சனையோ யாருக்குத் தெரியும்? நல்லா பழகின என் துன்ப மூட்டையே போதும் சாமி”