Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2

அத்தியாயம் – 2 

 

வக்கீல் உறுதியாகச் சொல்லிவிட்டார் 

 

“இந்த வழக்கு கோர்ட்டிலேயே நிக்காதும்மா… “

 

“எப்படி சார்… முப்பது லட்சம் தந்திருக்கோம். பொன் விளையும் நிலம் எல்லாம் வித்துத்தான் கொடுத்தோம். ஊருக்கே அது தெரியும். வாங்கினவங்கதான் நன்றி மறந்தாங்கனா நியாயம் எப்படி சார் தோற்கும். இந்த உலகத்தில் உண்மைக்கு இடமே இல்லையா?” 

 

செம்பருத்தி  ஆவேசத்துடன் முகம் சிவக்கப் பேசியது எல்லாம் பலனளிக்கவில்லை. இதுபோல எத்தனை பேரை பார்த்திருப்பார். சபித்தவர்கள், மண்ணை வாரி இறைத்தவர்கள், ஆத்திரம் ஏமாற்றம் தாங்க முடியாது அரிவாளை தூக்கியவர்கள், இல்லை உலகத்தைப் பார்க்க முடியாமல் தவறான முடிவு எடுத்தவர்கள் என்று அவர் அனுபவத்தில் பார்த்தவர்கள் கொஞ்சமா நஞ்சமா?

 

இந்த சிறுபெண் இதில் ஒன்றைக் கூட தேர்ந்தெடுத்து விடக் கூடாது என்பதில் மாத்திரம் உறுதியாக இருந்தார். ஏதோ உண்மைக்கு ஏதோ அவரால் முடிந்த உபகாரம்.  நேக்காக ஏமாற்றி இருக்கிறார்கள்.  பணத்தை மீட்டுத் தர சுத்தமாக வாய்ப்பே இல்லை. ஆனால் விட்டதை எண்ணி கையில் இருக்கும் வாழ்க்கையை இந்தப் பெண் இழக்காது இருக்க வேண்டும். 

 

“ஊரில் இருக்கும் எல்லாருக்கும் நாங்கதான்  பணம் கொடுத்தோம்னு தெரியும் சார். காலேஜ்ல படிக்க நிலத்தை பதினைஞ்சு லட்சத்துக்கு  வித்து மேனேஜ்மேண்ட் கோட்டால சீட்டு, வருஷாவருஷம் காலேஜ் பீஸ், ஹாஸ்டல் பீஸ், கம்பியூட்டர் படிக்க லட்சக்கனக்கா பீஸ் இதெல்லாம் எங்கப்பாதான் கட்டுனதுன்னு எல்லாருக்கும் தெரியும் சார். சொல்லப்போனால் ரமேஷ் அத்தான் எங்க வீட்டில் தங்கித்தான் படிச்சார்”

 

“எல்லாருக்கும் தெரியலாம்மா ஆனால் அது அவரோட கூடப் அக்கா மகனுக்கு செஞ்சது. மகன் இல்லாததால பிள்ளை மாதிரி பாசம் அப்படின்னு ஈஸியா சொல்லிடலாம். 

எந்த காலத்திலையுமே பத்திரம் எழுதி, கையெழுத்து வாங்கி, கடனா தந்தால்தான் அது கோர்ட்டில் செல்லும். உனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணிவைக்க ஆசைப்பட்டு ஒவ்வொண்ணா செலவு செஞ்சிருக்கார். சரியா சொல்லப்போனால் இது கிட்டத்தட்ட வரதட்சணை மாதிரி. எல்லாம் நல்லா நடந்திருந்தால் இந்நேரம் ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது. 

 

எல்லாத்தையும் வாங்கிட்டு உங்க அத்தை இப்ப உங்க அப்பா போனதும் கொடுத்த வாக்கை காத்தில் பறக்க விட்டுட்டு வேற இடத்தில் கல்யாணம் செஞ்சு வைக்கிறா”

 

“அது தப்பில்லையா சார்” அப்பாவியாகக் கேட்ட பெண்ணைப் பரிதாபமாகப் பார்த்தார். 

 

“ஒரு வகைல தப்பும்மா. என்னைப் பொறுத்தவரையில் இன்னொரு வகையில் உனக்கு நல்லதுதான்”

 

“எப்படி சார்?”

 

“இப்பயே இப்படி பேச்சு மாறுறவங்க கல்யாணத்துக்கு அப்பறம் வரதட்சணை கேட்டு உன்னை ஏதாவது செஞ்சுட்டா. உன் உயிரும் வாழ்க்கையும் இதைவிட முக்கியம் இல்லையா?”

 

“கவர்ன்மென்ட் சும்மா விட்டுடுமா? ஒரு பெண்ணை கல்யாணம் முடிச்சு வரதட்சணை கேட்டு கொடுமை பண்ண கூடாதுன்னு சட்டம் சொல்லுதே”

 

“ஆமாம் சட்டம் சொல்லுதுதான். ஆனா அந்த தண்டனையை பாக்க நம்ம உயிரோட இருக்கணுமே அட்லீஸ்ட் மேலு காலு சுகமா இருக்க வேண்டாமா?

 

 தீ சுடும்னு தெரிஞ்சதும் தள்ளி நின்னுக்கலாமே? உனக்கு ஏதாவது ஆனதுக்கு அப்பறம் சட்டத்தை தொல்லை பண்றதை விட இப்பையே சட்டத்துக்கு எந்த வேலையும் வைக்காம உன்னை நீயே காப்பாத்திக்கோ”

 

“எப்படி சார்?”

 

“அந்த பச்சோந்தி குடும்பத்தைத் தலை முழுகு”

 

“அதெப்படி இவ்வளவு சுளுவா சொல்லிட்டிங்க?  முள்ளங்கி பத்தையாட்டம் முப்பது லட்சம்”

 

“ஏமாத்துனாங்கன்னு நினைச்சா கஷ்டம்தான். உங்க அத்தை யாரு? உங்கப்பாவுக்கு சொந்த அக்கா தானே. அவருக்கு ஒரு பங்கு கொடுத்ததா நினைச்சுக்கோ. இப்ப ஒரு வீடு இருக்கே அதை வாடகைக்கு விட்டுட்டு ஹாஸ்டெலில் தங்கிக்கோ. வேலையை பாரு. இல்லை படி. நல்ல மாப்பிள்ளை தன்னால வருவான்”

 

“கல்யாணமே வேண்டாம் சார்” இந்த ரமேஷால் கல்யாணம் என்ற வார்த்தையே அலர்ஜியாகிவிட்டது. 

 

“சரி நல்லது. கல்யாணம்தான் உன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள்னு பொண்ணுங்களை ஏமாத்துறதில் எனக்குக் கூட உடன்பாடு இல்லை. இருந்தாலும்,  நான் சொன்னதை வீட்டில் யோசிச்சுப் பாரு “

 

“ஏமாத்திட்டு என்னைய யாராலும் தொட முடியாதுன்னு எகத்தாளமா திரியுறவங்களை ஒண்ணுமே செய்ய முடியாத கையாலாகாத நிலைமையை  என்னால ஜீரணிக்கவே முடியல சார்” அவளது மனதின் வலி கதறியது.

 

இதற்கு என்ன செய்வது? வலியார் மெலியாரை அடித்து நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறார். சட்டத்தின் வழி முறையாக வாழ்பவருக்கு சட்டத்தை மதிக்காது முறையற்று வாழ்பவரை, நெஞ்சாரப் பொய் சொல்லி சட்டத்தை தனக்கு சாதகமாக வளைப்பவரை  எப்படி தண்டிக்க முடியும்? 

 

சட்டம், நியாயம், ஒழுக்கம் எல்லாம் கட்டுக்கோப்பாக மனசாட்சியுடன் வாழ்பவருக்குத் தான். மனசாட்சியை கூட விற்றுவிட்டு மிருகமாக வாழ்பவருக்கு?

 

கண்டிப்பாக குரலை வைத்துக் கொண்டார் “இங்க பாரும்மா… சில விஷயங்களை கஷ்டமா இருந்தாலும் செமிச்சேதான் ஆகணும். என்கிட்டே கேட்டால் உங்கப்பா செஞ்ச முட்டாள்தனம்மா இது. ஒருத்தன் கிட்ட ஒரு ரூபாய் தந்தா கூட பத்திரத்தில் பதிஞ்சு வச்சுக்குற இந்தக் காலத்துல சுளையா முப்பது  லட்சத்தை அவனுக்கு தாரைவாத்திருக்கிங்க. சோறு போட்ட நிலத்தை வித்து காசைத்  தூக்கித் தந்திருக்கிங்க. 

உன்னைக் கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பிடி ஏற்படுத்தித் தந்துட்டு அதுக்கப்பறம் செலவு செஞ்சிருந்தால் கூடப் பரவால்ல. எந்த நம்பிக்கையில் உங்கப்பா பணத்தை தந்தார்?”

 

உங்கப்பா செஞ்ச முட்டாள்தனம் என்று சொன்னது செம்பருத்தியை ஆழமாகக் காயப்படுத்தி இருந்தது. ஏன்  இதே போல எல்லாரும் சொல்கின்றனர்? சொந்த தமக்கை குடிகாரக் கணவனுடன் போராடுவதைக் கண்டு அவர்களது குடும்பத்தையும் சேர்த்து பராமரித்த தந்தையின் குணமா முட்டாள்தனம்? ரத்தபந்தத்தை நம்பி, இருப்பதை எல்லாம் விற்று அக்காவின் மகன் படித்தால் அவனது குடும்பமே முன்னேறிவிடும் என்று பெரும் நம்பிக்கை வைத்திருந்த தந்தையின் தங்க குணம் எப்படி ஏமாளித்தனமானது?

 

அவளது அத்தையும் நல்ல பசப்பு வார்த்தைகளுக்கு சொந்தக்காரி. “தம்பி, என் மகன்  ரமேஷ் எப்படியும் விவசாயம் பண்ணப் போறதில்லை. அந்த நிலத்தை வித்து சீட்டு வாங்கித் தந்தேன்னா படிச்சுடுவான். என் பொண்ணுங்க ரெண்டையும் கரை ஏத்திடுவேன்”

 

“அக்கா அது தானக்கா நமக்கு சோறு போடுற பூமி. அதை வித்துட்டு என்ன பண்ணுறது. ரமேஷ் மார்க்குக்கு எங்க சீட்டு கிடைக்குதோ அங்க சேர சொல்லு. நானே பீஸ் காட்டுறேன்”

 

“அந்த பூமியை நம்ம மணியக்காரர் குடும்பத்துக்கு வித்தா நமக்கே குத்தகைக்கு விடுறேன்னு சொல்லி இருக்கார். நீயும் வழக்கம் போல விவசாயம் பண்ணலாம்”

 

“அதெல்லாம் சரி பட்டு வராதுக்கா. செம்பருத்திக்கு படிப்புக்கு பணம் வேணும், அப்பறம் அவளுக்கு  கல்யாணம் பண்ணனும்”

 

“அதெல்லாம் நான் யோசிச்சுட்டேன். அவ எப்படியும் எங்க வீட்டு மருமக. உனக்கு சம்மதம்னா நம்ம சொந்தக் காரங்களுக்கு  முன்னாடி தட்டு மாத்திடலாம். கல்யாணத்துக்கு அப்பறம் தர வேண்டியதை கொஞ்சம் முன்னாடியே செய்ற அவ்வளவுதானே. இதில் என்ன இருக்கு?”

 

செம்பருத்தி பதினெட்டு வயதினைத் தொடாத  சிறிய பெண் என்பதால் வீட்டாரின் முன்னிலையில் அவள்தான் எனது மருமகள் என்று பிரகடனம் செய்தார் அத்தை. தனது மகள்களையும் மதனி என்று கூப்பிடச்  சொன்னார். 

 

பள்ளிப் பருவத்தில் இதெல்லாம் செம்பருத்திக்கு வெட்கமாகவே இருந்தது. “உன் வீட்டுக்காரன் போன் பண்ணான் செம்பருத்தி. உன்னை நல்லா பரீட்சை எழுத சொன்னான்” என்று அத்தை சொல்லும்போது அவளுக்கு முகமே சிவந்துவிடும். 

 

அவள் பன்னிரெண்டாவது பாஸ் ஆனபோது. கல்லூரிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆட்சோபித்தாள்  அத்தை. 

 

“பேசாம ஏதாவது கோர்ஸ் படிச்சுட்டு கொஞ்ச நாள் வேலைக்குப் போ. ரமேஷ் உன்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டான். இப்ப ஒரு கம்பியூட்டர்  படிப்பு படிச்சா வெளிநாட்டில் வேலை கிடைக்குமாம். கிடைச்சதும் கல்யாணம்தான். படிப்பை பாதிலேயே விட முடியாதுல்ல… “ என்று காரணம் சொன்னது அந்த நேரத்தில் சரியாகவே தோன்றியது. 

 

“ஆமாம் செம்பருத்தி. அத்தை சொல்றதும் சரிதான். அந்த நிறுவனத்தில் ரமேஷுக்கு பயிற்சி முடிஞ்சதும்  வேலைக்கு ஏற்பாடு பண்ணுறாங்களாம். வேலை கிடைச்சதும் கல்யாணம்தான்” என்று அப்பாவும் சொன்னதும் வேறு வழியில்லாமல் போனது செம்பருத்திக்கு. 

 

சும்மா இருக்கப்பிடிக்காமல் தபால் வழியில் பி.காம் படிக்க ஆரம்பித்தாள். பட்டப்படிப்பும், முதுகலையும் படித்தவர்களே வேலை இல்லாமல் இருக்க, பன்னிரெண்டாவது மட்டுமே அப்போது முடித்த அவளுக்கு என்ன வேலை கிடைக்கும்?

 

மங்கிலால் கடையில் நம்பிக்கையான ஆள் கணக்கு வழக்கு பார்க்க வேண்டும் செம்பருத்தியால் முடியுமா? என்று கேட்டபொழுது மறுக்க முடியவில்லை அவரால். பணத்தேவை அந்த அளவுக்கு கடுமையாக இருந்தது. 

 

அப்படி செம்பருத்தியும் அவளது தந்தையும் வருந்தி வருந்தி உழைத்த பணம் அவர்களது நன்மைக்கா செலவழித்தார்கள் என்று கேட்டால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். பெரும்பகுதி  ரமேஷின் விடுதிக்கு பணம் கட்டவும் அவனது படிப்பு செலவுக்கும் என்றே செலவானது. 

 

“இந்நேரத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா உன் பணம் என் பணம்னு பிரிச்சு செலவு பண்ணிருப்போமா?” என்று அத்தை சொல்லியது அவளது அப்பாவுக்கு அப்போது நியாயமாகத் தெரிந்தது. இப்போது அடுத்தவருக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது. 

 

ஒவ்வொரு பருக்கையிலும் அவற்றை உண்ணுபவரின் பெயர் எழுதி இருக்கும் என்று சொல்வார்கள். ஒவ்வொரு பருக்கையிலும் அவற்றை உழைத்து சம்பாதித்தவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று இருந்தால் அத்தையின் குடும்பத்தினர் அனைவரின் உணவிலும் இவளது பெயரும் தந்தையின் பெயரும் அல்லவா இருக்கும்.

 

மாமா மதுப்பிரியர், அத்தை காரியவாதி, அப்படி  என்றால் ரமேஷ்… ஒவ்வொரு முறையும் கூசாமல் பணம் கேட்பானே? உரிமையோடு பணத்தை பெற்றுச் செல்வானே? அதை எல்லாம் எப்படி அவன் மறந்தான். ஓ… அவன் ஒரு ஊதாரிக்கும் காரியாவதிக்கும் பிறந்த சுயநலவாதி. 

 

யோசித்துக் கொண்டே சென்றவள் “ஐயோ பஸ் போகுதே. இப்ப ஏறினா சரியான நேரத்துக்கு வேலைக்குப் போயிடலாம்” என்றபடி அந்தப் பேருந்தினைப் பார்த்தபடியே ஓடினாள். அந்த பரபரப்பில் சுற்றுப்புறத்தை கவனிக்காமல் யார் மேலோ மோதி, அப்படியே தரையில் விழுந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38

அத்தியாயம் – 38 சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது.  “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம்  கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினாலேயே கொஞ்சம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 30தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 30

அத்தியாயம் – 30   கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள்  வழுக்கிச் செல்ல வாகாக  விரிந்திருந்த தார்சாலை.    பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் திறன் படைத்த சிறந்த தோட்டக்காரர்கள்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40

அத்தியாயம் – 40 மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும்.  “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி பேரை வச்சிருக்கியா நீ?” என்று சிரித்தார்.  மனம் அமைதியைத் தேடும்போதெல்லாம் ஆண்டியப்பனின் கோபம்