இன்று ஒரு தகவல் -9
எத்தனையோ விதமான சமைக்கும் முறைகளும் பாண்டங்களும் இன்று பயன்பாட்டிற்கு வந்து விட்ட போதிலும் நம்மிடையே மண்பாண்டம் வழக்கொழிந்து போகாததற்குக் காரணம் இருக்கும்தானே. ஆம் இருக்கிறது.
உலோகங்கள் யாவும் அவற்றின் குறிப்பிட்ட பண்புடைய கதிர் வீச்சினை வீர்யமாக வெளிப்படுத்துவன. ஆனால் மண்பாண்டமானது அனைத்துத் உலோகக் கூறுகளையும் மனித உடலுக்கு ஊறு விளைவிக்காத வண்ணம் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு தனித்துவமான சுவையில் இருக்கிறது.
மண்பாண்டத்தில் சமைத்த உணவில் தனித்த சுவை என்று சொல்வதே அதன் சிறப்பம்சத்தை உணராமல் சொல்வதாகும். உணவுப் பொருட்கள் அனைத்திலும் சுவைகள் உண்டு. பிற உலோகப் பாத்திரத்தில் இட்டு சமைக்கும் பொழுது சமைப்பதற்குரிய வெப்பமும் பாத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சும் வேதி வினைக்கு உள்ளாகி சமைக்கிற பொருளின் சுவையைச் சிதைத்து விடுகின்றன.
ஆனால் மண்பாண்டத்தில் சமைக்கிற பொழுது பாண்டங்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்திய மண்ணில் உள்ள தனித்துவமான கூறும் இந்நிலத்தில் உள்ள அத்தனை விதமான தனிமக் கூறுகளும் சீராக வெளிப்பட்டு சமைக்கிற உணவுப் பொருளின் சுவையைக் கெடுக்காமல் அப்படியே தருவதால் நமக்குக் கூடுதல் சுவைக் கிடைப்பதாகத் தோன்றுகிறது.
உண்மையில் அது உணவின் மூலக்கூறு சுவையே ஆகும். மண்ணானது அனைத்துத் உலோகக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதோடு சூரிய ஆற்றலை ஈர்த்துக் கொண்டே இருப்பதால் அது உயிர்ப்பின் வடிவமாகவும் இருக்கிறது.
எடுத்துக் காட்டாக மண்பாண்டத்தில் வடிக்கிற சோறு மெலிதான இனிப்புச் சுவையில் இருக்கும். இந்த இனிப்புச் சுவைதான் அரிசியின் அடிப்படைப் பண்பாகும். அரிசிக்கு உரிய சுவையுடன் சாப்பிடுகிற பொழுது நமக்கு அப்படியே சாப்பிடலாம் என்று தோன்றும். எனவே துணை உணவாகிய கூட்டு, பொரியல், சாம்பார் போன்றவை அதிகமாகத் தேவைப்படாது.
அப்படியே எடுத்துக் கொண்டாலும் சோற்றின் இனிப்புச் சுவை அவற்றை எளிதாகச் செரித்து விடும். குறிப்பாக சாப்பிட்டவுடன் வயிறு உப்பலாகத் தோன்றும். வாயுப் பிரச்சனை உள்ளவர்கள் மண்பாண்டத்தில் உண்கிற பொழுது இந்த உப்பல் பிரச்சனை எழாது என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
குறிப்பாக பயிறு வகைகள், கிழங்கு வகைகள் போன்றவற்றையும் சாம்பார் சமையலையும் மண்பாண்டத்தில் சமைப்பதே உடலுக்கு நல்லது. அரிசியை மண்பாண்டத்தில் சமைத்தால் சோறு கெட்டுப்போகாது. இரவில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் உண்டால் பழைய சோறு மிகவும் சுவையாகவும், வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும்.