சமையலறையில் மரங்களின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதில் மசாலா பொருட்கள் வைக்கும் அஞ்சறைப் பெட்டி முக்கியமானது. இதனை கொடுக்காப்புளி, பலா மரங்களில் செய்வதுதான் நல்லது. ஏனெனில் இவற்றில் செய்யும் போது ஒரு அறையில் வைக்கப்படும் மசாலா பொருளின் வாசனை மற்றொரு அறையில் வைக்கப்படும் வேறொரு பொருளில் கலக்காது. அந்த அளவுக்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் அந்தந்த மசாலா பொருட்களின் தன்மை அப்படியே பாதுகாக்கப்படும்.
உப்பு வைக்கும் மரப்பெட்டியை அக்னிபலா மரத்தில் செய்ய வேண்டும். அது உப்பை நைந்து போகவிடாமல் வைத்திருக்கும்.
மத்தை எடுத்துக் கொண்டால் இரண்டு வகை உள்ளது. 1. மோர் மத்து, 2, பருப்பு மத்து. மோர் கடையும் மத்துவை நெல்லி மரத்தால் செய்ய வேண்டும். அப்போது அதன் சுவை நன்றாக இருக்கும்.
பருப்பு கடையும் மத்துவை வேப்ப மரத்தில் செய்ய வேண்டும். அதன் கசப்பு சுவை நுண்மையாக பருப்பில் சேரும் போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
அகப்பைகள் தேங்காய் சிரட்டையில் செய்யப்படும். அதன் கைப்பிடி மூங்கிலாகும். சிரட்டை மருத்துவக் குணம் கொண்டது. அந்த காலத்தில் குழந்தைக்கு வயிற்றுவலி என்றால் சிரட்டையை தேய்த்து நாக்கில் தடவுவார்கள்.
இப்போது உரல் உலக்கை பயன்பாடு குறைந்து விட்டது. எனினும் மருந்து, மசாலா இடிப்பதற்கு கழுந்து உலக்கை எனப்படும் சிறு உலக்கையை பயன்படுத்துகிறார்கள். இதனை கருங்காலி மரத்தில் செய்வது நல்லது. செம்மரத்திலும் செய்யலாம்.