Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் தனி வழி 7 – ஆர். சண்முகசுந்தரம்

தனி வழி 7 – ஆர். சண்முகசுந்தரம்

7

மாஸ்டருக்கு அவளைக் கண்டதும் சிரிப்பு, கோபம், சந்தோஷம் எல்லாமே வந்துவிட்டது. உணர்ச்சிகள் புயலடித்தன அவர் பேச்சில். “எனக்குத் தெரியுமே, எங்கிட்ட கருப்பண்ணன் எங்கேன்னு கேக்க வருவேன்னு எதிர்பார்த்துக்கிட்டுத்தா இருந்தே. என்ன இருந்தாலும் உன் சின்ன மாப்பிள்ளையை – அந்தப் பொடிப்பயலை ஏவி இவ்வளவு தூரத்துக்கு மேஸ்திரியை ‘லேவிடி’ பண்ணப்படாது! அட சும்மா இரு! கிட்டான் அதுக்குள்ளேயே மாப்பிள்ளையா வந்தாச்சான்னு கேப்பே! எங்கிட்டே யாரும் எதையும் ஒளிச்சு மறைச்சு மூடிவைக்க முடியாது! சங்கத்துக்காரரு – ரெண்டு சங்கத்து ஆளுகளையும் சொல்றேன். அவுங்க தலைவர்க, காரியதரிசிக, மில்லு மொதலாளிதா ஆகட்டுமே! எப்படி நடந்துக்கறாங்க? நீயும்தா பாக்கறயே! இத்தனை ஆளுகளையும் கட்டி மேய்க்கவாண்டாமா?” என்று சொல்லி நிறுத்தினார் மாஸ்டர் சிங்காரம்பிள்ளை, வெற்றி வீரனைப் போல.

அவள் தலையை அசைத்தாள். ‘ஆம்’ என்பதில் அணுவளவும் சந்தேகமே கிடையாது. புதிதாக வேலைக்குச் சேர்ந்து, ஆள் சம்பளம் வாங்கியவுடன் தனியாக மாஸ்டரை சந்தித்தே ஆகவேண்டும்! தீபாவளிக்கு கூட்டு அபராதம் மாதிரி மொத்தமாக ஒரு கணிசமான தொகை அவரை வந்தடைந்துவிடும். அது மாமூல்! அன்புடன் அளிக்கும் பரிசு அல்லவா அது!

மாஸ்டர் தொடர்ந்தார். “என்ன மாரக்கா! உம் மொகத்துக்காக அந்த ‘வாண்டு’ கிட்டானை நான் ஒண்ணுமே சொல்றதில்லை. கருப்பண்ணன் அவனுக்காக என்னென்ன செஞ்சிருக்கான் என்பதை கிட்டான் ஊட்டிலே சொன்னானோ என்னமோ! அவுங்க அப்பனுக்குக் கூட அதெல்லாம் தெரிஞ்சிருக்காது. இங்கே அறியாப் பையனாக வந்தான். இப்போ ஆளாகிட்டான்! வயசிலும் தான், வேலையிலும் தான்! பஞ்சு எடைப் போடறதிலே கொஞ்சநாள் இருந்தான். ‘தறி உடறேன்’ என்றான். ‘சரிடா ராஜா’ன்னு அதிலேயும் போட்டேன். கிட்டானும் சூட்டிப்பு. துடிப்பயல்! மணிமணியா வேலையுஞ் செய்வான். ‘ஸ்டோர்லே போடுங்க’ன்னு கேட்டான். மறுபடி என்ன ஆச்சு? இப்ப நீயே சொல்லு மாரக்க? டைம்கீப்பர்! அவனுக்கு டைம் ஆபீசிலே வேலைங்கறது தெரியுமல்லோ?” என்று நிறுத்தி நெஞ்சையும் நிமிர்த்தி உட்கார்ந்தார். அவருக்குப் ‘பரந்த’ நெஞ்சு! அப்பப்பா! கடப்பைக் கல் தோற்றுவிடும்!

மாரக்காள் மௌனமாக நின்று கொண்டிருந்தாள். ‘கருப்பண்ணன் போயிருக்கும் இடம் மாஸ்டருக்குத் தெரிந்திருக்கிறது’ என்ற நம்பிக்கை ஊர்ஜிதமாகிவிட்டது.

“வருவாம் போ! வெள்ளியங்கிரிக்குப் போயிருக்கிறான்’ என்றார் மாஸ்டர்.

“மலைக்கா, கருப்பண்ணன் போயிருக்குது?”

“ஆமாமாம், வெள்ளிங்கிரியிலிருந்து வாரபோது எல்லாத்தையும் போல கையிலே ரெண்டு பச்சை மூங்கில் குச்சியும் கொண்டாருவான். அந்தத் ‘தடி’யைப் புடுங்கிட்டு நாலு சாத்துச் சாத்து! அப்புறம் சொல்லாமே கொள்ளாமே எங்கியும் போகவே மாட்டான்!”

அப்பாடி! அவளுக்கு உயிர் வந்தது! வீடு திரும்புகையில் கலக்கமும் குழப்பமும் அவளிடமிருந்து பறந்துவிட்டது! ஆயினும் அப்பாவி நாச்சப்பனின் ஏக்கப் பெருமூச்சை அவளால் நீக்கக் கூடாமல் இருந்தாள். ஏன்? வெள்ளிங்கிரிக்குச் செல்லும் ‘சீசன்’ அது. பங்குனி சித்திரையில் தான் கையில் பச்சை மூங்கில் கம்புடன் போய்வருகிறவர்களைத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நாச்சப்பனும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். மற்றவர்கள் இரண்டு நாளில் திரும்பி விடுகிறார்கள். அந்த மலையில், மலைக்காட்டில் ஏறி இறங்குவதே ஒரு ஆனந்த அனுபவம். சில டாக்டர்கள் கூட ஒரு பத்து நாளைக்குக் ‘கூடாரம்’ போட்டுக் கொண்டு முகாம் இடுவதுண்டு. கருப்பண்ணனும் தோழர்களுடன் ஏழெட்டு நாள் அலைந்து திரிந்து விட்டு வரலாம். ஆனால், நேராக வீட்டிற்கே அவன் வந்து சேருவான் என்கிற நம்பிக்கை இல்லை அவளுக்கு. கடந்த நாலைந்து மாதங்களாகவே ‘நம்பிக்கைத் தளர்வு’ அவளை ‘நமச்சல்’ எடுக்கச் செய்து கொண்டிருந்தது.

சென்ற மாதம் மில் முதலாளியின் மகளுக்குக் கல்யாணம் நடைபெற்றது. அன்றைக்கு மாரக்காளின் சந்தேகம் வலுவடையும் படியான சம்பவமும் அவள் வீட்டிலேயே வாதம் – எதிர்வாதம் என்ற ரூபத்தில் நடந்து முடிந்தது.

கருப்பண்ணன் கல்யாணக் காரியங்களில் கட்டாயமாக ஈடுபட நேர்ந்தது. பேரூர் தோப்பிலிருந்து வாழை, தென்னை, கமுகு முதலிய மங்கல பொருட்கள் சேகரித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுபு அவனுடையது. தோரணங்கள் கட்டுவது, பந்தல் போடுவது – ஏன் ‘பந்தி விசாரணை’ வரை அவன் முன்நின்று பார்க்க வேண்டியதாயிற்று. முதலாளி வீட்டில் ஒரு விசேஷம் என்றால் முக்கியமான மேஸ்திரி கலந்து கொள்வதில் பிழை ஏதும் இல்லை. மாஸ்டரிடம் முதலாளியே ‘நம்ம கருப்பண்ண மேஸ்திரியை வரச்சொல்லுங்க’ என்று அன்புக் கட்டளை இட்ட பிறகு அதை ஏற்பதில் தவறு கிடையாதுதான். ஆனால் சங்கத்திலும் பொறுப்பாக இருக்கிற ஆள் அப்படியெல்லாம் கலந்து கொண்டால் அது வதந்தியைப் பரப்பும். இல்லாத பொல்லாத பேச்சுக்களைக் கிளப்பிவிடும். முதலாளியின் கையாள், கைக்கூலி, கங்காணி அப்படி இப்படி என்று சொல்லம்புகள் துளைக்கும். அவைகளைத் தூக்கி எறியும் துணிவு பூண்டவன் தான் அவன். சங்கத்திலேயே சென்ற எம்.எல்.ஏ. தேர்தலில் தலைவரும் காரியதரிசியும் எந்த இடத்தில் நிற்பது என்பது மண்டையை உடைக்கும் ‘பிரச்சினை’யாக வளர்ந்து விட்டது! கருப்பண்ணன் ‘கை’யே ஓங்கி நின்றது. காரியதரிசி தம்முடைய சொண்ட்த ஊரிலும் தலைவர் சிங்கநல்லூரிலும் – தொழிலாளிகள் நிறைந்த பகுதி – தேர்தலுக்கு நின்றார்கள். காரியதரிசியின் சந்தேகம் பொய்த்து விட்டது. ஏனென்றால் வெற்றி கிட்டியது அவருக்கு! ஆனால் தலைவர் தோற்றுவிட்டார்! தொழிலாளர் மேல் குற்றம் இல்லை. ஓட்டுப் போட்டார்கள்; இன்னொரு சங்கத்தின் தலைவர் எப்படியோ வெற்றி பெற்றுவிட்டார்! வெற்றி வாய்ப்பு அவருக்குக் கிடையாது என்றார்கள் ஆதியில்! இந்தத் தேர்தல் ஆரூடத்தில் எவன் கணக்கும் மெய்யாவதில்லை. பொய்த்துத்தான் போகிறது. ஆயினும் கருப்பண்ண மேஸ்திரி பேச்சை நம்பி தலைவர் தோற்றார் என்கிற பெயர் மட்டும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

பாவம், கருப்பண்ணன் இந்த விஷயத்தில் ஒரு பாவமும் செய்யவில்லை. உள்ளுக்குள்ளேயே ‘ரகளை’ எதற்கு என்று அவன் அதைத் தவிர்க்கவே தலைவரை இங்கே நிற்கச் சொன்னான். அப்படியே செய்தான். பலன் என்னவோ பூஜ்யம்!

இதிலே இன்னொரு ‘பழி’ பலமாக கருப்பண்ணனைச் சாடிற்று. அது மறைமுகமாக மாற்றுச் சங்கத்தார் வெற்றி பெற கிட்டப்பனைத் தூண்டிவிட்டு காரியத்தைச் சாதித்துக் கொண்டார்கள் என்பதுதான். இப்போது, கிட்டப்பன் இன்னொரு சங்கத்தில் கிளைக் கமிட்டிக்குத் தலைவன். இந்த ஏழெட்டு வருஷங்களில் அவன் வளர்ந்து விட்டான்! மகத்தான வளர்ச்சி! கருப்பண்ணனோடு வாதம் செய்து அடக்குகிற அளவுக்கு மகோன்னத வளர்ச்சி அது. அன்றைக்கு அவர்கள் இரண்டு பேரும் பெரிய வாக்குவாதத்தில் இறங்கி விட்டார்கள். நாச்சப்பன் வெளியேயிருந்து வருகையில் உச்சக்கட்டத்தை இருவரும் அடைந்திருந்தார்கள். “ஏண்டா நீங்க சண்டை போடறீங்களா? சும்மாதா பேசிக்கிறீங்களா? சீ! கழுதை! போடா எந்திருச்சு!” என்று தன் மகனைக் கடிந்து கொண்டான். என்ன, ஏது என்று பாகுபாடு செய்து பார்க்கின்ற பக்குவம் பெற்றிராவிட்டாலும் நாச்சப்பனுக்கு மொத்தத்தில் அது பிடிக்கவில்லை. மாரக்காள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் யார் பக்கமும் சேரவில்லை. சேருவதற்கு என்ன இருக்கிறது?

“அண்ணா! நீங்க ஒரே நெலையா நிக்கறதில்லே! இது நல்லது இல்லீங்க அண்ணா. மொதலாளி ஊட்டு கலியாணத்தை நடத்தி வெக்கறீங்க! சங்கத் தலைவர் காரியதரிசி ‘பிரச்சனை’களில் தலையிடறீங்க! எங்க சங்கத்துக்குப் புத்தி சொல்ல வாரீங்களே, எங்கிட்டே, ‘அடே, லகானை இழுத்துப் புடி’ங்கறீங்க. உங்க கட்சி தொழிலாளிகளே என்ன சொல்றாங்க தெரியுமா? கருப்பண்ண மேஸ்திரிக்குக் காலம் அடுத்துக்கிட்டுதுண்ணு பேசிக்கறாங்க.” கிட்டப்பன் பேசிக் கொண்டிருந்தான்.

கருப்பண்ணனும் மெதுவாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

குஞ்சாளும் நாலுந் தெரிந்தவள் போல, “கத்தி முனையிலே நடக்கறது மாதிரிதானுங்களே! தொழிலாளிகளுக்குப் பாடுபடறதின்னா வெளையாட்டு விசயமுங்களா?” என்றாள்.

“அடே, குஞ்சாளுக்கும் ‘உலகம்’ தெரிந்து விட்டதே! என்று தனக்குள் கருப்பண்ணன் தீவிரமாக யோசிக்கிறான். அவன் முகம் கருமை கொள்வதைக் காண மாரக்காளுக்கு வருத்தமாக இருக்கிறது? அவள் என்ன செய்வாள்? யாருக்காகப் பரிந்து பேசுவாள்?

இன்றைக்கும் அப்படித்தான். தன் உள்ளக்கிடக்கைகளை உரைக்க அவள் தவித்தாள். அந்தத் தவிப்பு நெஞ்சுக்குள்ளேயே குமைவதும் அடங்குவதுமாக அவளைப் படாதபாடு படுத்தி வைத்தது.

வருஷத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்குப் போய்வரா விட்டால் நாச்சப்பன் தலை வெடித்துவிடும்! என்னவோபோல் இருக்கும் சோற்றைப் பிசைந்து மெள்ள எடுத்து தொண்டைக்குள் போடுமுன் – வாய் அருகே ‘கவளத்தை’ வைத்துக் கொண்டே யோசிப்பான். மாரக்காள் கண்டு கொள்வாள். ‘பெரிய மாமனுக்கு – அடக் கெரகமே, அண்ணன் அவிங்களுக்கு ஊர் ஆசை எடுத்திட்டாப்பலே இருக்குது! பத்து நாளைக்குப் போய்த்தான் இருந்திட்டு வாங்களே’ என்பாள்.

நாச்சப்பனுக்குக் கீரனூரில் பத்து நாட்கள் பார்க்க வேண்டிய காரியம் என்ன இருக்கிறது? அங்கே யாராவது இவன் வரவில்லையே என்று காத்திருக்கிறார்களா? தடம் பார்த்திருக்கிறார்களா?

யாராவது சிங்கநல்லூரிலே நேரடியாகக் கேள்வி கேட்டால் அந்தக் கேள்விக்கு நேரடியான பதிலை அவனால் சொல்ல இயலாது. ‘ஊருசேரிக்குப் போகாமே கட்டிப் போட்டாப்பலே ஒரே எடத்திலே உக்காந்திட்டு இருப்பாங்களா?’ என்று வேண்டுமானால் சொல்லலாம். அது மொக்கை அடி. இன்ன இடம் என்று காயத்தைத் தொட்டுக் காட்டுகிற மாதிரி இருக்காது!

நாச்சப்பனை ஏதோ ஒரு சக்தி ‘வா வா’ என்று இழுத்தது உண்மை. அதிலே அவனுடைய ஆனந்தம் இருந்தது. அப்படி இருப்பதாக மனசுக்குத் தோன்றிற்று.

இந்தத் தடவை நிஜமாகவே பதினைந்து நாள் கீரனூரில் தங்கிவிட்டான். எல்லா வீடும் சொந்த வீடாக இருக்கும் போது ‘இன்னார்’ வீட்டில் தங்கினான் என்றில்லை! சாமத் தோட்டத்து ராக்கப்பன் கூட, “என்ன நாச்சு, நீ போனதிலிருந்து எனக்கு கை ஒடிஞ்சாப்பலே போச்சப்பா! ‘விசு’க்கிணு ஊத்துக்குளிச் சந்தைக்கு வண்டிகட்டுன்னு சொல்லலாம். ராவிக் குக்கலாம், ரண்டு சாக்குப்பை கத்திரிக்காயைப் பறிச்சுப் போட்டாலும் பயணம் கட்டிடுவேன். இப்ப என்ன சாமி பண்ணட்டும்? வாடகை வண்டி நம் பக்கத்திலே சட்டுப் புட்டுன்னு சிக்கிருமா? சிம்மாடு கூட்டி தலையிலே வெச்சுகிட்டுப் போக வேண்டியதுதான்” என்று அழமாட்டாக் குறையாகச் சொல்லிவிட்டு, “ராத்திரிப் படுக்கறதுக்கு சாளைக்கு வந்தர்ரதுதானப்பா. ‘குளுகுளு’ன்னு புது ஓலைத் தடுக்குப் பின்னிப் போட்டிருக்கறேன். வெடியவெடியப் பேசிக்கிட்டு இருக்கலாம், வாப்பா” என்று பிரியமுடன் கூட்டிப் போனான். ராக்கப்பனுக்குத் தன் தோழனைக் கண்டதில் அத்தனை திருப்தி.

சுப்புரத்தினத்தைச் சும்மா சொல்லக் கூடாது. பழைய வண்டிக்காரன் என்று இளக்காரமோ, கையில் கொஞ்சம் ‘பசை’ சேர்ந்திருக்கிறதென்பதற்கு போலி உபசாரமோ செய்யாமல், ‘ஒரம்பரைக்காரன், என்ன இருந்தாலும் உள்ளூர்க்காரன், இங்கே நெருக்கமான சொந்தம் இல்லையே’ என்று அங்கலாய்ப்பு அவனுக்கு வரக்கூடாதென்றெ அப்படி இங்கிதம் சொரிந்தான். பாய் விரிப்பதற்குப் பதில் மெத்தை எடுத்து விரித்தான். ஆட்டங்கண்ட பல்லுக்கு மேலும் அவஸ்தை தராமல், “நாச்சப்பண்ணா! வெத்தலையை நல்லாத்தான் கொட்டீருக்கறேன். கிட்டத்திலே கொட்டானும் வெச்சிருக்கறேன். நம்ம காட்டுத் தளைப் பொய்யிலை வறண்டதா இருக்குதண்ணே” என்று அன்பைக் குழைந்தான்.

அந்தக் கணத்தில் – அப்படி ஊர்க்காரர்கள் இன்பத் தாலாட்டில் நாச்சப்பனைக் கண்ணுறங்க வைத்த காலை அவன் மனத்திற்குள்ளே சிறு குரல் தேம்பும் : ‘நீதான் ஊரைவிட்டே போயிட்டயே! போனதோடு பையனையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டயே! என்ன கல்நெஞ்சுக்காரனப்பா நீ!’

நாச்சப்பன் சவுக்கடி பட்ட மாதிரி திடுக்கிட்டு சுற்றிலும் பார்க்கிறான். தனாத்தா – தூரத்து உறவுக்காரி பக்கத்தில் அமர்ந்து அவனுடைய முழங்காலைத் தொட்டுப் பார்க்கிறாள். கெண்டைக் காலைப் பிடித்து, “எலும்பு முறிவு இங்கியா மாமா? அட பகவானே? தழும்பு கூடப் பெரிசாத் தெரியுது மாமா?” என்று தடவி விட்டுக் கொண்டிருக்கிறாள். பேச்சோடு பேச்சாக, “நம்ம கிட்டுச்சாமிக்குப் பொண்ணுக்கின்னு பாத்திருக்கீங்களா மாமா?” என்று வினவுகிறாள். அவளுடைய கூரிய விழிகள் நாச்சப்பன் முகத்தை அளக்கின்றன – அளந்தபடி இருக்கின்றன.

“உங்கிட்டே எல்லாம் சொல்லாமே நா எங்கிருந்து பாக்கப் போறேன்?” நாச்சப்பன் இதமாக, கனிவாகப் பேசுகிறான். அப்படித் தானே அந்தச் சமயத்தில் அவனால் பேச முடியும்.

“எங்கிட்டே என்ன தோட்டமா காடா? என்னமோ தேங்காய் வேவாரம். பத்து பவுன் நகை போடலாம். அதுக்கு மேலே கேட்டா, அங்கியே மில்லு மொதலாளியோ, என்னங்க மாமா எனக்கு வாயிலே கூட நொழய மாட்டீங்குது! எந்தெந்த மொதலாளிகளோ இருக்கறாங்களாம். அண்ணைக்கு கருப்பண்ணங் கூட வந்திருந்தது. உம் – மாமங்கிட்டேப் பேசறாப்பலே எல்லாருகிட்டேய்ம் பேச முடியறதா? மாமா! நீங்க என்ன சொன்னாலும் செரி. சமிஞ்ச கொமுரியை ஊட்டிலே வெச்சிக்கிட்டு இருக்கறது மடியிலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கறாப்பலே இருக்குதுங்க. நம் கையிலே என்ன இருக்குதுங்க! கெடக்குது போ மாமா! அப்பவும் இல்லாததுக்கும் எங்கியோ ஒரு இல்லாதது பொறந்திருக்காமயா போகுது? எங்க செம்பாளுக்கு எங்கியோ மாப்பிளே மிந்தியே பொறந்துதானே இருப்பானுங்க? இனிமேலா பொறக்கப் போறான்?”

தனாத்தா பேசிக் கொண்டிருக்கிறான். நாச்சப்பனின் எண்ணப் பறவை வேகமாகப் பறந்தோடு சிங்கநல்லூர் வீட்டை அடைகிறது இருட்டா? பரவாயில்லை. மாரக்காள் தூங்குகிறாளா? நல்லது. கிட்டப்பன்? கிட்டப்பன் எங்கே? குஞ்சாள்? குஞ்சாளையும் காணோமே! கருப்பண்ணன் தான் வெள்ளிங்கிரியை வலம் வந்து கொண்டிருக்கிறான். ‘கிட்டப்பன் எங்கேப்பா?’ இந்தக் கேள்விக்கு மனப்பறவை என்ன பதில் கூறும்?

தனாத்தாள் மேலும் பேசுகிறாள். அவள் சொல்வதொன்றும் நாச்சப்பன் நெஞ்சில் தைப்பதாயில்லை. அவன் இதயத்தை வாட்டும் ‘பிரச்சினை’கள் வேறு!

தனாத்தாளிடம் சொல்லிக்கொண்டோ சொல்லாமலோ மொட்டரப்பாளையம் பாப்பண மச்சான் தோட்டத்துப் புங்கமர நிழலுக்கு நாச்சப்பன் எப்போது வந்து சேர்ந்தான். பாப்பண மச்சான் பேச்சுக்கு ஆள் கிடைத்தால் லேசில் விடமாட்டாரே! எல்லாரிடமும் பேசிக் கொண்டிருபப்வரும் அல்ல அவர். மெதுவாகவும் பேசி அறியார். அவர் தொண்டை அப்படி! எட்டுக்காட்டுத் தூரத்திற்கு கேட்கும் அவரது அடித் தொண்டை, அந்தக் கட்டைத் தொண்டை ஒரே விஷயத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கும். பணம் சேர்க்காத ஆள் உதவாக்கரை என்பது அவருடைய திடமான அபிப்ராயம். “என்னுங்க மாமா, மொகமே இப்ப வேறே ‘களை’ காட்டுதே! ரொக்கம் பெரிய பச்சை நோட்டிலே பத்துக்கும் காடுகளை வாங்குவீங்களா? கண் காணாத எடத்திலே ‘கலசம்’ வெச்சு பொளச்சாலும் அதிலே என்ன இருக்குங்க மாமா?”

பாப்பண மச்சான் மத்தியானம் ‘கை நனைக்காமல்’ விட மாட்டார். எப்போதுமே சாப்பாடு அவர் வீட்டில் தரமாகத்தான் இருக்கும். வெறும் புளியைக் கரைத்து தாளிக்காமல் அவர் சம்சாரம் ‘மொளகுசாறு’ காய்ச்சினது கை மணக்கும்! வாயும் கூடத்தான்!

‘அங்கே என்னுங்க இருக்குது – சிங்கநல்லூரிலே என்னப்பா இருக்குது?’ என்று கேள்வி அங்கே போன நாள்தொட்டு நாச்சப்பனை வாட்டி வளவெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவனுடைய மகனிடம் கேட்டிருந்தால் ஆணித்தரமாகக் கூறி வாயடைக்கச் செய்திருப்பான். ‘என்ன இருக்குதா? மொதல்லே – கீரனூருக்கும் ஊத்துக்குளிக்கும் ரோட்டை அளக்க வேண்டியதில்லை? நாப்பது வருஷம் ஒரு மனுஷன் வண்டி ஓட்டிக்கிட்டே இருந்திட்டு இன்னும் அந்த உத்தியோகத்தைக் கைவிட மாட்டேன்னு சொல்ற ஆளுக – அவுங்க வேரும் வேரடி மண்ணுமே சிங்கநல்லூர் வட்டாரத்திலே கெடையாது. பஞ்சாலைக இருக்குது, தொழில் இருக்குது, பணம் வருதய்யா! பணம்னா கொஞ்ச நஞ்சமா? கடை கண்ணிக, சினிமாக் கொட்டகை, வெளக்கு வெளிச்சமும் – அடேயப்பா – அந்த வெளிச்சத்திலே சிரிப்பும் சந்தோஷமும் கொட்டிக் கிடக்குதே! இதெல்லாம் இருக்கறது தெரியலியா அப்பா!’ மேலும் கிட்டப்பன் தன்னைப் பற்றிக் கூறி இருப்பான். அவைகளை மகன் சொல்லியா அப்பன் தெரிந்து கொள்ள வேண்டும்? அவன் திரும்பி வரும் வரை இருட்டு, காற்று, மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் சின்னஞ்சிறு வீட்டின் ஒதுக்கில் எங்கோ ஒதுங்கிக் கிடப்பான் கிட்டப்பன். இல்லா விட்டால் மாரியாத்தா கோயில் திண்ணையிலோ அருணாசலம் சில்லரைக்கடை வாசலிலோ ‘தேமேன்னு’ நின்று கொண்டு பேசுகிற பேச்சுகளை – ஒரே ரீதியான பேச்சுகளை கேட்டுக் கேட்டு புளித்துச் சலித்துப் போன பேச்சுக்களைக் கேட்டபடி நிற்பான். சில சமயம் சிரிப்பான். மௌனமாக வழி பார்த்திருப்பான். கிழக்கே ராசிபாளையம் மேட்டில் வண்டிச் சத்தம் கேட்டபோதும் அது மேற்கே ஈஸ்வரன் கோயில் முனையிலிருந்து வருவதாகத் திடுக்கிட்டு – ஒரு ஆர்வம் உந்தித்தள்ள அத்திசையில் பார்வையை ஓட்டுவான் – இப்போது கிட்டப்பன் பத்திரிகைகள் படிக்கிறான். மேஜை மேல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு படிக்கிறான். கட்சிப் பத்திரிகைகள் தான். அவன் கட்சியைப் பற்றி நாச்சப்பனுக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் ‘சேதி’களைக் காதாரக் கேட்கிறான். முதலில் பத்து இருபது பேர்களுக்கு மத்தியில் அமர்ந்து மர நிழலில் மகனும் செய்திகளைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். ஆசை இருந்தால் எழுத்தைக் கற்றுக் கொள்ள எத்தனை நாள் ஆகும்? அந்த அசையே – மில்களுக்கு எதிரிலே சிறுசிறு கூட்டம் போட்டு பிரச்சினைகளை அலசி ஆராய்வதை உன்னிப்பாகக் கவனிக்கும் போது – தன்னுள் மண்டிக்கிடக்கும் பேச்சாற்றலை வளர்க்கிறது. ‘மளமள’வென்று பேசிப் பழகியவன். அவனுக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் உரிமையை நிலைநாட்டுவது பற்றித்தான். தன் கட்சியைத் தவிர இதரக் கட்சிகளை கர்ண கடூரமாகத் தாக்க வேண்டியது – திட்ட வேண்டியது – உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர அழைக்க வேண்டியது – அதே சமயம் மறக்காமல் ஆலை முதலாளியின் அட்டூழியத்தை அக்கு அக்காகப் பிட்டு வைக்க வேண்டியது – எல்லாமே கை வந்து விட்டது கிட்டப்பனுக்கு! அவன் கருப்பண்ணனைப் போல் சொன்னதைச் செய்பவன் அல்ல! சொல்லாததையும் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தானே சுதாவாக இயங்கவும் நினைப்பவன். இவ்வளவு தூரத்திற்குக் கிட்டப்பன் வருவான் என்று யார் தான் கற்பனை பண்ணியிருக்க முடியும்.

நாச்சப்பன் கூத்தாண்டிப் பண்டிகைக்கு விருந்ஹ்டாளியாகப் பையனுடன் மாரக்காள் இல்லம் மிதித்த காலை அவன் மனதில் என்ன உணர்ச்சி நிறைந்திருந்தது? கருப்பண்ணன் கூறிய யோசனைகள் சரியாகவே பட்டன. ஒண்டிக்குடித்தனத்தைக் கலைத்துவிட்டு மாரக்காள் குடும்பத்தோடு ஐக்கியமானதுதான். பேதம் என்பது அப்போது துளிர்க்கவில்லை. இரு குடும்பத்திற்கும் தலைவன் நாச்சப்பனே. அட, சாறு சோறு ஆக்குவதைக் கூட, ‘என்னண்ணா இண்ணைக்குப் பண்ணலாம்?’ என்று கேட்டுவிட்டுத் தான் மாரக்காள் செய்கிறாள். ஏன்? பெட்டித் ‘தொரப்புக்குச்சி’ கூட அவன் இடுப்பில் தான் ‘அரணாக்கவுத்தில்’செருகி இருக்கிறான். ஆத்தாள் சம்பாதிப்பது, மகள் சம்பாதிப்பது, தன் பையன் சம்பாதிப்பது அத்துடன் கருப்பண்ணன் சம்பாத்தியமும் நாச்சப்பன் வசம் தானே இருக்கிறது! கருப்பண்ணன் முப்பதுக்கு மேலா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான்? சங்கத் தலைவரைப் போல் அவனுக்கும் மணம் நடக்கப் போவதில்லை. விருப்பமே கிடையாது. அவனுக்கு ஒரே வெறி! பாடுபடுவது – சங்கத்திற்குப் பாடுபடுவது – மாரக்காள் என்ன எதிர்பார்த்தாள்? ‘புள்ளையை நல்ல எடமாகப் பாத்து நாச்சப்பன் கட்டிக் குடுத்திடுவான். அப்பறம் அவளுக்குக் கவலையே கெடையாது.’ ஆம், நாச்சப்பன் முதலில் எண்ணியது அப்படித்தான். ஆனால் இந்த ஆறு ஏழு வருஷங்கள் நாச்சப்பன் எவ்வளவு மாறிவிட்டான்!

*****

சிங்கநல்லூர் பஞ்சாலைப் பகுதிகளில் போலீஸ் வேன்கள் பறந்து கொண்டிருந்தன. நிறுத்தப்பட்டிருந்த ஜீப்களில் பெரிய பெரிய அதிகாரிகள், இரும்புத்தொப்பி, துப்பாக்கி, குண்டாந்தடி, ஜவான்கள் – இவை கண்ணில் பட்டாலே, ‘மில்கள் இழுத்து மூடியாகிவிட்டது’ என்று சொல்லத் தேவையில்லை. போராட்டம்தான். கதவடைப்பைத் தகர்க்க தொழிற்சங்கங்கள் கங்கணம் கட்டிக் கொள்ளும். அதுதானே அவற்றின் வேலைகள்! சமரசப் பேச்சு முறிந்து, சங்கத் தலைவர், காரியதரிசிகள், ஆலை முதலாளிகள், மானேஜர்கள் எல்லோரும் தொழில் அதிகாரியின் தீர்ப்பை நாடியிருந்தார்கள். ஒரு மில்லிலா ஸ்டிரைக்? ஏழெட்டு மில்களில். குனியமுத்தூர், குறிச்சி, கணபதி, துடியலூர் வரை வட்டம் போட்டாற் போல் ஆலைகளில் வேலை நடைபெறவில்லை. எத்தனை எத்தனையோ பிரச்சினைகள், கோரிக்கைகள் – முதலில் சிறு நெருப்பு கருப்பண்ணன் மில்லில்தான் பிடித்தது. சிறிதாகப் பற்றியது பெரு நெருப்பாக மூண்டுவிட்டது!

கிட்டப்பன் சங்கத்தார் இந்தத் தடவை இம்மியளவும் விட்டுக் கொடுப்பதில்லை என்று உறுதி பூண்டுவிட்டனர்.

கருப்பண்ணன் சங்கத்தார் அதற்கு அணுவளவும் சளைத்தவர்கள் அல்ல. ‘பார்த்துவிடுவது ஒரு கை!’ என்பது அவர்களுடைய பதில் சவால். இதில் விசித்திரம் என்னவென்றால் சங்கங்களுக்கிடையே வளர்ந்து வந்த போட்டியும் பொறாமையுந்தான். தொழிலாளர்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்று முதலாளிகளின் அட்டூழியத்தை எதிர்த்து நிற்கும் அவர்கள், தங்களுக்குள்ளேயே கைவரிசையைக் காட்டிக் கொள்வார்கள். அப்பாவித் தொழிலாளிகள் எடுப்பார் கைப்பிள்ளைகள்தான். அவர்கள் சார்ந்திருக்கும் கொள்கைகள், லட்சியங்கள், ‘இஸ’ங்கள் இதில் ஆயிரத்தில் ஒன்றையும் அறியார்கள். சங்கங்களும் ஒன்றுடன் ஒன்று ஏன் மோதிக் கொள்ள வேண்டும்? மூன்றாவது சங்கம் ஒன்றும் இருந்தது. அது ஆளுங்கட்சியை அண்டி நிற்பது. இந்த இரண்டு சங்கங்களும் என்ன செய்தாலும் அதற்கு நேர் எதிர்ப்பாகச் செய்வது – அல்லது ‘கூடா’மல் ஒதுங்கி நிற்பது. இப்படி ஒரு நூதன முறையைக் கையாண்டது அது!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 76கல்கியின் பார்த்திபன் கனவு – 76

அத்தியாயம் 76 சிரசாக்கினை “ஆகா இது உறையூர்தானா?” என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதமாகச் சோழ நாட்டின் தலைநகரம் அன்று அலங்கரிக்கப்பட்டு விளங்கிற்று. பார்த்திப மகாராஜா போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது அவருடன் புடை பெயர்ந்து சென்ற லக்ஷ்மி தேவி மீண்டும் இன்றுதான் உறையூருக்குத்

சாவியின் ஆப்பிள் பசி – 10சாவியின் ஆப்பிள் பசி – 10

பன்னீர் மலை, பூவேலிக்கு வடமேற்கில் மூன்று மைல் தள்ளி உள்ள முருகன் ஸ்தலம். பன்னிருகை வேலன் கோயில் பிரசித்தமானது. வேலனின் ஒவ்வொரு கையிலும் சம்ஹாரக் கருவிக்குப் பதிலாக யாழ், குழல் போன்ற இசைக் கருவிகள் இருந்தன. இதனால் தானோ என்னவோ அங்கே