Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் தனி வழி 1 – ஆர். சண்முகசுந்தரம்

தனி வழி 1 – ஆர். சண்முகசுந்தரம்

1

 

     ‘கூத்தப் பனையோலை
குயிலணையும் பொன்னோலை! – இப்பக்
கூந்தப் பனை சாஞ்சா
குயில் போயி எங்கணையும்?’

வண்டிக்கார நாச்சப்பன் அவனனுக்கே சொந்தமான தனிப்பாணியில் ஆனந்தமாகப் பாடிக் கொண்டே தன்னுடைய ஒற்றை மாட்டு வண்டிச் செவலைக் காளையைத் தட்டி ஓட்டிக் கொண்டிருந்தான். கன்னபுரம் தேரில் ஏழு வருஷங்களுக்கு முன் வாங்கிய காளை அது. கை பட்டால் காற்றாகப் பறக்கும். சண்டி மாடாக இருந்தாலும் தார்க் குச்சியின்றியே ‘நேம்பா’கச் சாரத்தியம் பண்ணும் கலை அவனுக்குக் கை வந்திருந்தது. இன்று நேற்றா வண்டி ஓட்டுகிறான்? கடந்த நாற்பது வருஷங்களாக அதே தொழிலைச் செய்து வருகிறான். அவனுக்குத் தெரிந்த தொழிலும் அது ஒன்றுதான்!

நாச்சப்பன் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது சாட்டையைக் கையில் பிடித்தான். இன்று வரை சாட்டையைக் கீழே வைக்கவில்லை. அவனுடைய மகனுக்கும் இப்போது பத்து வயதாகிறது. பையன் கிட்டப்பனிடம் சாட்டையைக் கொடுக்கலாமா வேண்டாமா என்பதைப் பற்றிய ‘குமைச்ச’லே கொஞ்ச நாளாக நாச்சப்பனை அரித்துக் கொண்டிருக்கிறது. ‘சாட்டை மொனை துளுராட்ட இருக்கோணும் தம்பி’ என்று மைந்தனிடம் – அவனையும் தன்னுடன் கூட்டிச் செல்கையில் கூறுவான். அது அவனுடைய வழக்கம்!

இந்தச் ‘சாட்ட நிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம் போல் ஆட்டி வைக்கும்’ அண்ணல் கூட சாட்டைச் சமாச்சாரத்தில் நாச்சப்பனுக்கு ஒரு சரியான வழியைக் காட்டவில்லை! செல்லியம்மன் கோயிலில் பூ வைத்துக் கேட்டான். வெள்ளைப் பூ வந்தது! மாரியாத்தா அதற்கு மாறுபட்டாள். கீரனூர் செல்லியாத்தாளும் மாரியாத்தாளும் அவனுக்குக் கண்கண்ட தெய்வங்கள்! பையனையும் தன்னைப் போலவே வாடகை வண்டி ஓட்டிக் கொண்டே இருக்கச் சொல்வதா? அல்லது வேறு வேலையில் ஈடுபடுத்துவதா? அதை நினைக்க நினைக்கக் கலக்கம் தான் அதிகரித்ததே தவிர அவன் உள்ளத்தில் தெளிவு பிறக்கவில்லை.

வேட்கை! விண், மண் எங்கும் எதிலும் வேட்கை! சித்திரைச் சுடர்க் கொடுமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்ததா? இல்லை இல்லை! இயற்கைத் தாய்க்கே இதய தாகத்தைத் தாங்க முடியவில்லை. உதிரத்தையே உண்டு உடலை நாசமாக்குவது போல பாளம் பாளமாகப் பூமி வெடித்து பூமாதேவி பாதாளத்தின் அடியிலே நீர் ஊற்றைத் தேடிக் கொண்டிருந்தாள்! எல்லா மரங்களும் மொட்டையாக ஓட்டாண்டியாகிவிட்ட போதிலும் நெட்டைப் பனைமரங்களின் உச்சாணியில் பசுமை தோய்ந்திருந்தது. ஆனால் பனை ஓலையில் ‘சலசல’ப்பில்லை! வாயுவும் குருடாகி விட்டானோ? அல்லது ஒளிக் கற்றையின் வேகத்தைத் தாங்காது சுருண்டு கிடக்கிறானோ?

காகம் ஒன்று பறந்த பிரம்மை! கருகிச் செத்த மாயை! அந்தக் காணாத காட்சியைக் கண்டுதாஅன்ன் ‘கூந்தப் பனையோலை’ மெல்ல மெல்ல நாச்சப்பன் நாவில் மிதந்ததாக்கும்!

கிட்டப்பன் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்? என்ன செய்வான்? விளையாடிக் கொண்டிருப்பான்? மழையும் வெயிலும் அவனை அணுவளவாவது அசைத்து விடுமா என்ன? அவன் அப்பன் அல்ல, இந்த நாச்சப்பனின் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் வந்து தடுத்து நிறுத்தினாலும் விளையாடப் போகாமல் அவன் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பானா?

‘கிட்டானுக்கு என்னப்பா போ!’ என்று பிறர் தன்னுடைய மகனைத் ‘தட்டிக்’ கொடுக்கையில், ‘சபாஷ்’ போடும்போது நாச்சப்பன் குளிர்ந்து நிற்பான். நெஞ்சத்துப் பாரம் அனைத்தும் அகன்று விட்டதாக மகிழ்வான். பையன் தன்னைப் போல ‘மந்தா மதுக்கு’ அல்ல. துள்ளிக் குதிக்கும் இளங்கன்று! அவனுடைய கண்களே அதைச் சொல்லுமே! பெண் முகம் போல் வட்ட வடிவமான முகத்தில் பால் வடிகிறதென்பார்களே அப்படி ஒரு களை! அயர்ச்சிக்கும் அவனுக்கும் நெடுந்தூரம்! அர்த்த ராத்திரியில் குரல் கொடுத்தாலும் ‘என்னப்பா கூப்பிட்டாயா?’ என்று ‘விசு’க்கென எழுந்து உட்காருவான். நாச்சப்பனுடைய மனைவியைப் போன்று ஒரு அமைதியும் அவனிடம் நிறைந்திருந்தது. சட்டென்று கோபம் வருவதில்லை. எதையும் மனசுக்குள்ளேயே போட்டு அடக்கிக் கொள்வான் என்றாலும் விருப்பமில்லாத ஒன்றைப் பலவந்தமாக அவன் தலையில் திணிக்க முடியாது. சுள்ளி வலசு மணியக்காரருக்குத் ‘துணையாளா’கக் கொஞ்ச நாள் தெற்கே வடக்கே போய்க் கொண்டிருந்தான். அதாவது சாளேசுரக்காரரான மணியக்காரர் கோயிலுக்குப் போகும்போது கைத்தடி ஒரு பக்கம், கிட்டான் ஒரு பக்கம். தட்டத்தில் திருநீறை எடுக்கத் தடுமாறாமல் மணியக்காரரை நிதானப்படுத்த வேண்டும். தூரத்தில் வரும் உருவத்தின் ஊரையும் பெயரையும் முன்கூட்டியே சொல்லிக் கொடுக்க வேண்டும் மணியக்காரருக்கு. வீட்டுக்கும் வாசலுக்கும் சதா அவர் நடந்த மணியம் தான். கல்லுக் கரடு காலில் படாமல் மணியக்காரரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், இரவு படுக்கப் போவது வரை. படுக்கைக்கு அருகே வைத்திருக்கும் படிக்கம் கைப்பட்டுக் கவிழ்ந்து விடாமல் இருப்பது முதற்கொண்டு ஒரு பத்து வயதுப் பாலகன் கண்காணித்துக் கொள்வதென்றால் சாமான்யக் காரியமா? வெற்றிலை எச்சிலைத் தம்முடைய மேல் துண்டின் மீதே துப்பிக் கொள்வார். மேலாடை காற்றில் பறந்து அலங்கோலத்தை அப்பிக் கொண்டால் அதற்குக் கிட்டானா பிணை? ‘ச்சீ! நாய் மகனே’ என்பார். மணியக்காரருக்கு நாய் மகன் என்ற வார்த்தையைத் தவிர வேறு சொல் அகப்படாது. பெற்ற பிள்ளையை – ஆளுக்கு ஆளான ஆறுமுகத்தையும் அவர் அப்படித்தான் திட்டுகிறார். ஆனால் பிள்ளை கேட்டுக் கொள்வான். கிட்டான் கேட்க வேண்டுமே!

‘மணியக்காரர் வளவுப் பக்கமே நான் போக மாட்டேன்’ என்றான் கிட்டன்.

நாச்சப்பன் ‘என்ன, ஏது?’ என்று கேட்கவில்லை. ‘செரிடா போ’ என்று ஒரே சொல்லில் மகனுடைய ராஜினாமாவை அங்கீகரித்து விட்டான்.

அடுத்த வாரம் அரிசிக்காரன் அங்கப்பனோடு ‘சந்தை சாரி’களுக்கு மகனை அனுப்பி வைத்தாஅன்ன். வேகாத வெயிலில் பல சந்தைகளிலும் அரிசி மூட்டைகளுக்குக் காவல் இருந்தான். ஒரு நாள் அரிசி மூட்டை ஒன்றில் – சாக்குப் பொத்தலாக இருந்ததால், நாலைந்து படிக்கும் மேல் அரிசி கொட்டி விட்டது. அதற்கு அவனா ஜவாப்தாரி! வியாபாரிக்குக் கடுங்கோபம்! ‘ஏண்டா உனக்குக் கண் எங்கே இருக்குது? முன்னாலா பின்னாலா?’ என்றான் ஆத்திரத்தோடு.

‘முன்னால் தானய்யா இருக்குது! கண்ணைத் தொறந்து பாரு. நல்லாத் தெரியுமே!’ என்று பதிலடி – சொல்லடி தந்துவிட்டு நேராக வீடு வந்து சேர்ந்தான்.

பல தோட்டங்காடுகளுக்கு ‘வெளச்சல் வெள்ளாமை’க் காலங்களில் காவலுக்குப் போய்ச் சேர்ந்தான். அந்தச் சின்னஞ்சிறு வயதுக்கு விடியுமளவும் கண்விழித்துக் காவல் காப்பது ஒருவிதத்தில் ‘கடுங்காவல்’ தான்! என்னதான் உண்மையாகச் சக்தியானுசாரம் பாடுபட்டாலும் நாலு ‘செரகு’ பச்சைமிளகாயோ பத்துப் ‘பாத்தி’ வெங்காயமோ களவு போயிருந்தால்… அத்தனையுமா போயிருக்கும்? ‘கொஞ்சநஞ்சம்’ போயிருந்தாலும், ஏன் ‘பாதம்’ பட்டிருந்தாலே – அந்தத் ‘திருட்டு’ப் பகலில் கூட நடந்திருக்கலாம் – ‘ஏண்டா கழுதை! குடிசைக்குள்ளே தூங்கீட்டா இருந்தே!’ என்று உடையவன் ஒப்பாரி வைக்கத்தான் செய்வான். அந்த ஓங்கார நாதம் பையனுடைய வேலைக்குச் ‘சீட்டு’ கிழித்துவிடும். மறுபடி எட்டிப் பார்க்க மாட்டான். அப்பனும் ஏனென்று கேட்க மாட்டான். நாச்சப்பன் வாழ்க்கைப் பாதையில் நன்றாக அடிபட்டவன். அவனுடைய ஒற்றை மாட்டு வண்டியின் சக்கரப் ‘பட்டா’க்கள் எவ்வளவோ தேய்ந்திருக்கின்றனவே! ஆனால் பையனுக்கு ஒரு விஷயம் துலாம்பரமாகத் தெரிந்தது. ‘எவங் கிட்டேயும் வேலைக்குச் சேரக் கூடாது! சேர்ந்தால் தொந்தரவு! அவனுக்கே நேர்ந்த அனுபவங்கள்! பிறகு, ‘வைத்து’க் கொண்டாலும் சிரமம்தானே? தானும் எவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை என்ற விசித்திர எண்ணமும் அவனுள் உதித்தது. கற்பனையில் அவன் பெரியவன் ஆகிவிட்டான்! சொத்துச் சுகங்கள் நிறைந்து விட்டன! அப்போது பணிவிடை புரிய ‘ஆள் அம்புகள்’ வேண்டாமா? ‘வண்டிக்காரான் மகன் வண்டிக்காரனாகத்தான் இருக்க வேண்டுமா?’ என அப்பன் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறான். ‘மொளச்சு’ மூணு இலை குருத்து விடுவதற்குள் பிள்ளையின் புத்தியில் ‘கனி’யுன்னும் சாயைகள் மின்னத் தொடங்குகிறதே!

கீரனூரிலிருந்து ஊத்துக்குளிக்குப் பத்து மைல்கள். பாலதுளுவு வழிதான். வழியில் ரங்கம்பாளையம், சாவடிப்பாளையம் சற்றுப் பெரிய ஊர்கள். சின்ன வியாபாரிகளும் ‘ஊர்ச்சேரி’க்குப் போகிற வசதிக்காரர்களும் அங்கெல்லாம் அதிகம். நாச்சப்பனுடைய வண்டிக்கூட்டைக் கண்டாலே ‘அவங் கிடுகிடு’ன்னு வந்திருவானப்பா!’ என்று வாடிக்கைக்காரர்களின் முகங்கள் மலர்ந்துவிடும். அந்த ‘மலர்ச்சி’க்குப் பன்னெடுங்காலமாக எந்தவித நலிவையும் நாச்சப்பன் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

வாடகை பேசி இன்றுவரை அவனுடைய வண்டியில் யாரும் ஏறியதில்லை. ‘பட்டினத்தார்கள்’ என்றால் முதலிலேயே ‘வண்டிச் சத்தம் எவ்வளவு?’ என்று கறாராகக் கேட்டுவிடுவார்கள். அங்கேயுள்ள வண்டிக்காரர்களின் போக்கும் அப்படித்தான். ஆனால், கிராமப்புறங்களில் அந்த வண்டிக்கார நாச்சப்பனைத் தெரியாதவர்களே அங்கே கிடையாதென்றே கூறிவிடலாம். குழந்தை முதல் கிழங்கள் வரை எல்லோருக்கும் ‘நம்ம நாச்சப்பன்’ என்ற செல்லப் பெயரே நுனி நாவில் கொஞ்சிக் கொண்டு உச்சரிப்பாக அமைந்துவிட்டது. என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான். அது ‘ஏறுமாறாக’ இருக்காது. அவானுக்கு எகத்தாளமாகப் பேசத் தெரியாது! பேசவும் வராது!

முப்பது வருஷங்களுக்கு முன்னர் அவன் சந்தித்த மனப்பாங்குகளுக்கும் இன்றைய மனோநிலைக்கும் ஒரு ‘தொடர்பு’ இருந்த போதிலும் – அந்த இழையில் ‘முட்டு முடிச்சு’கள் நிறைய விழுந்துவிட்டன என்பதைக் கண்ணாரக் கண்டான். இருப்பினும் அவன் ‘கண்மூடி’ ஞானிதான்! ‘இமுக்குப் பொடு’க்கென்று ஏதும் சொல்லாமல் தன்னுள்ளே அடக்கிக் கொண்டான்.

‘யார்ரா வண்டிக்காரன்?’ என்று அதிகாரம் படிப்படியாக மறைந்து ‘வண்டியை நிறுத்திண்ணா நிறுத்துவயா, சும்மா ஓட்டிக்கிட்டே போனா என்ன அருத்தம்?’ என்கிற சூடும் தணிந்து, ‘நம்ம நாச்சப்பனா?’ என்ற இறக்கத்தை அவன் சில வேளைகளில் நினைத்துக் கொண்டு தனக்குள்ளேயே சிரித்துக் கொள்வான்.

சுதந்திர இந்தியா உதயமாகி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. எங்கும் பணப் புழக்கம். நோட்டுக்கள் ‘முறி’படுவது சர்வ சாதாரணம். தலைக்கு ஒரு துண்டு. உருமாலாகவும், மேல் துண்டாகவும் அதுவே உதவும். இடுப்பு வேட்டியை தொடைக்கு மேல் கோவணம் போல் செருகிக் கட்டிக் கொண்டு சென்ற கவுண்டர்கள், ஏன் ‘பலபட்டரை’களும் கூட இப்போது ‘பாதமளவு’ வேஷ்டியும், ‘முண்டாசு’ப் பனியன்களும், வெள்ளை – வெள்ளையிலும், பல தினுசு – கலர்களிலும். அப்படித்தான் தந்தார்கள். குடுமி வைத்த ஆட்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். நெற்றிக்கு இட்டுக் கொள்வார் யாரையும் காணோம்! முன்பு அடிமடியில் சுறுக்குப் பையிலிருந்தோ அல்லது வேட்டித் தலைப்பிலிருந்தோ ஒன்றுக்கு மூன்று தரம் எண்ணிப் பார்த்துக் கொடுத்தவர்கள், நோட்டுக்களை நீட்டி, ‘உம், மிச்சத்தைச் சீக்கிரம் குடு நாச்சப்பா’ என்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை எந்தவித அவசரமும் கிடையாது. மற்றவர்களுக்கோ சதா அவசரம் தான். நிற்க நேரமில்லை. வெகு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள்?

ரங்காம்பாளையத்திலிருந்து குறுக்குத் தடத்திலே ஊத்துக்குளிச் சந்தைக்கு வருகிற பொங்கியாக் கவுண்டன் தன்னுடைய தோட்டத்து இளநீர்க் காய்களை வண்டி நிறைய ‘பாரம்’ ஏற்றி இருந்தான்.

“பொங்கிணா நீயுந்தா இப்படி மின்னுக்கு வந்து ஒண்டிக்கறது தானே?” என்று நாச்சப்பன் கூப்பிட்டுப் பார்த்தான்.

“நா ரண்டு எட்டிலே போயர்ரேஞ் சாமி. நீ கத்தாம் கண்ணி முக்குத் திரும்பறதுக்குள்ளே நா சந்தையிலே நிப்பன் பாத்துக்கோ” என்றான்.

பொங்கிணன் முரட்டு ஆள். ராட்சச நடை. நாலு எட்டிலே ஊத்துக்குளியை எட்டிப் பிடித்து விடுவான். ஊர்வலத்தில் போவது போல் பார வண்டியில் உட்கார்ந்து கொண்டு வரச் சொன்னால் அவன் கேட்பானா?

வண்டி மெதுவாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எங்கே வேகமாகப் போகவேண்டும் என்பது காளைக்குத் தெரியும். அந்தக் காளை என்ன? எந்தக் காளையானாலும் பத்து நாள் பழகி விட்டால் போதும், பிறகு வாய் திறந்து பேசாததுதான் குறை! மாட்டோடு அவன் பேசுவான். அவைகளுக்கு அவன் ‘பாஷை’ எளிதில் புரிந்து விடும்!

கிட்டப்பன் மூத்த பையன். தன் கைக்கு வந்து சேரும் காளைகளை ‘இளைய பிள்ளை’யாகவே கருதி வந்தான். இளையது கைக் குழந்தை! இடுப்பை விட்டு இறக்கினால் கண்டதை எல்லாம் எடுத்து வாய்க்குள் போட்டுக் கொள்ளும் அல்லவா? கவனமெல்லாம் அதன் மேலேயே இருக்க வேண்டும். அப்புறம் காளைக்குக் குளிப்பாட்டுவது என்ன? ‘கொம்பு சீவு’வது என்ன? உடம்பைத் தட்டிக் கொடுப்பது என்ன? வால், முதுகு, அதன் கீழ்ப்பாகங்களையும் ‘சாணி கீணி’ அசிங்கியமாகப் படிந்திராமல் சுத்தம் செய்து விட்டுக் கொண்டே இருப்பான். ‘வாயில்லாச் சீவனுக்கு வயிறு நிறையக் குடுக்கோணுமிங்க! இல்லாட்டி அது என்ன வாய் தெறந்தா நம்மளைக் கேக்கப் போவுது!” என்று பையனைக் காட்டிலும் ஒரு மடங்கு மேலாகவே வண்டிக் காளையை நாச்சப்பன் ‘சீராட்டி’ வந்தான்.

‘எப்பவும் மொடா நெறயக் கழுநீரு வேணும்’ என்பான். பருத்திக் கொட்டையும் சவாரிக் காளைக்கு வைப்பது மாதிரி ஆட்டி ஊத்துவான். கட்டுத் தரையில் நடுச்சாமத்திலும் சிறு சத்தம் கேட்டால் எழுந்தோடிச் சென்று பார்ப்பான். மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசத்தைத் காணவில்லை அவன். அதனால் தான் நொய்யல் ஆற்றருகே வறண்ட அந்தச் ‘செறை’யில் மொட்டை மரங்களில் உட்காரக் கூட இடமின்றி ஓடி ஓடிக் களைத்த பறக்க மாட்டாத பறவை ஒன்றின் சிறகோசையைக் கேட்டதும் ‘கூந்தப் பனையோலை’ப் பாட்டு அவனையறியாமல் அவனிடமிருந்து பிறந்து விட்டது. கிட்டப்பன் உருவம் லேசாக அவன் கண்களுக்குத் தெரிந்தது. ‘நா கண்ணை மூடினா அந்தப் பையனை யாரு பாத்துக்கு வாங்க?’ என்கின்ற வினா சுற்றிச் சுற்றி அவனை வதைத்து, மிரட்டி மெதுவாக உறக்கத்திலும் ஆழ்த்தி விட்டது.

நாச்சப்பன் தூங்கிப் போனால் அந்தக் காளையும் அவனுடன் சேர்ந்து தூங்கி விடுமா என்ன? அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஊத்துக்குளிச் சந்தைக்குப் போனதும் எந்த மரத்தின் அடியே நிற்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு மனப்பாடம்!

*****

கிட்டப்பனும் சிங்கநல்லூர் கருப்பண்ணனும் கை கோர்த்துக் கொண்டு கீரனூரை வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

“யார்ரா கருப்பனா?” என்றார் மாரியாத்தா கோயில் திண்ணையில் உட்கார்ந்திருந்த முத்துக்கவுண்டர்.

சுப்ப பண்டாரம் முந்திக்கொண்டு, “ஆமாம்க!” என்றான்.

“நீ சும்மார்ரா” அதட்டினார் கவுண்டர்.

சுப்பன் ஒடுக்கமாக படிக்கட்டிலேயே காலைக் குறுக்கிக் கொண்டு தலையையும் தொங்கப் போட்டுக் கொண்டான். ஏனென்றால் சிரிப்பை சுப்பப் பண்டாரத்தால் எப்போதுமே அடக்க முடியாது. முத்துக்கவுண்டர் அறுபதைத் தாண்டியும் கோபத்தை அடக்கிப் பழக்கப் படாதவர். கையிலிருக்கும் கைத்தடியில் ‘பொட்’டென்று ஒரு போடு போட்டு விட்டாரானால் அடிபட்ட இடம் வீங்கிப் போகுமே! இரும்புப் ‘பூண்’ போட்ட தடி அல்லவா அது?

கிட்டப்பனுக்கு முத்துக்கவுண்டர் தாத்தாவைப் போல், சரியாகச் சொல்வதானால் தாயும் தந்தையும் மாதிரி என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். நீண்ட நெடுநாட்களுக்கு முன்பே ‘சுற்றமும் நட்பும்’ அற்றுப் போனவன் கிட்டப்பன். நினைவு தெரிந்ததிலிருந்து எவரையாவது அண்டிப் பிழைத்தே உடம்பை வளர்த்து வந்திருக்கிறான். அவன் சும்மா ஊரைச் சுற்றிக் கொண்டு திரிந்த சமயங்களில் சிலவேளை ‘சிவனே’ என்று கோயில் குறட்டு வாசலில் தலை சாய்த்துப் படுத்துக் கிடப்பான். நடுச்சாமத்திற்குத் தன்னைத் தட்டி எழுப்புவது அறிந்து திடுக்கிட்டு எழுவான். எங்கோ இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பாலிருக்கும் காடுகரைகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு ‘எல்லாம் ஒழுங்காத்தான் இருக்குது’ என்ற நிம்மதியில் வீடு திரும்பும் முத்துக்கவுண்டர் இந்தப் பட்டினிச் ‘சிவனை’க் கண்டு கொள்வார். அவருக்கு இவனுடைய ‘கதை’ அத்தனையும் தெரியும். ‘ஏண்டா நாயே! கஞ்சித் தண்ணி குடிச்சயா?’ என்பார். இவன் என்ன பதில் சொல்வான்.

‘எந்திரிச்சு வாடா’ என்பார் பரிவோடு. இரவுச் சாப்பாட்டை வெகுகாலத்திற்கு முன்பே அவர் நிறுத்தி விட்டார். பலகாரம் தான். பலகாரம் என்றால் எண்ணெய்ப் பண்டங்கள் முத்துக்கவுண்டருக்கு ஒத்துக் கொள்ளாது. அநேகமாக இட்டிலியும் சக்கரைவள்ளிக் கிழங்கும் இருக்கும். பழத்திற்குப் பஞ்சமில்லை. அவர் தோட்டத்து ‘மொந்தை வாழை’ப்பழம் இரண்டு தின்றாலே வயிறு நிறைந்து விடும்.

மற்றொரு சமயமாக இருந்தால் கருப்பண்ணன் கவுண்டர், ‘சரியப்பா, போ’ என்று சொல்லும் வரை ‘தொணதொண’த்துக் கொண்டிருப்பான். அந்தத் தொணதொணப்பில் மற்றவர்களுக்கு எத்தனையோ புதுமைகள் மண்டிக்கிடப்பதாகத் தோன்றும். ஆனால் கருப்பண்ணனுக்கு ஒரே சமாச்சாரத்தை நூறு தரம் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதால் ‘தொணதொண’ப்பாகவே பட்டது.

கருப்பண்ணன் கீரனூருக்கு வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்து விட்டு பத்துப் பனிரண்டு வருஷங்களுக்கு முன்பே சிங்கநல்லூர் சென்று விட்டான். உள்ளூரில் எந்த விதமான வேலையும் கிடையாது. வேலை கொடுக்கக்கூடிய இடமிருந்தால் தானே வேலைக்கு முயற்சித்துப் பார்க்கலாம்? அவன் ஒன்றுக்கும் சளைக்காதவன். ஆனால் வேலையற்று ஊருக்குள்ளே திரிந்து கொண்டிருந்ததால் அவனுடைய கால்கள் சளைத்து விட்டன!

காங்கயத்துச் சைக்கிள் கடைக்காரன் தான் சிங்கநல்லூருக்குப் போகும்படி முதலில் ஆலோசனை கூறினான். சைக்கில் கடைக்காரனுடைய தம்பி பேரூருக்குப் போனவன், ஆற்றில் குளிக்கும் போது மடியிலிருந்த இரண்டு ரூபாய் நோட்டையும் தண்ணீருக்குத் தத்தம் பண்ணிவிட்டான். கோயமுத்தூரிலிருந்து நாற்பத்தி ஐந்து மைல் ஆச்சே காங்கயம்? நடந்து போனால் கால் தூணாக வீங்கிவிடும். தெரிந்தவர்கள் யாராவது கண்ணில் படமாட்டார்களா என்று தெருத்தெருவாகச் சுற்றினான். பட்டேல் ரோட்டுப் பக்கம் படியூர் ஆண்டிப் பையன் கண்டு கொண்டான். ‘அண்ணா வாங்க! அண்ணா வாங்க!’ என்று ராஜோபசாரம் செய்தான். அது மாத்திரமா? தான் வேலை செய்யும் ‘போரிங் மிஷின்’ பவுண்டருக்கும் கூட்டிச் சென்று காட்டினான். ‘பத்து நாள்ளே வேலை பழகிக்கலாம். ஆனா இதை விட, மில்லிலே சேந்திட்டா பஞ்சமே வெடிஞ்சு போயிரும். அங்கே சைக்கிள் கடையிலே என்னண்ணா காத்து அடிச்சிக்கிட்டும், ‘பஞ்சர்’ போட்டுக்கிட்டும்… இங்கே வந்திருங்க.” ஏதாச்சும் கிடைத்தால் மேற்கே கிளம்பிடக் கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தவன் தான். அதற்குத் தகுந்தாற் போல் சிங்கநல்லூர் புது மில் ஒன்றில் வேலையும் கிடைத்து விட்டது. இரண்டு வருஷத்திற்குள் ரொக்கமாக ஐநூறு சேர்த்து விட்டான்.

சைக்கிள் கடைக்காரன் கை இப்போது ஓங்கிவிட்டது. பழைய வண்டிகளை மாற்றிவிட்டு புது வண்டிகள் கொண்டு வந்தான். அத்துடன் எதிர்ப்படுகிற இளைஞர்களிடம் தனக்கு வேண்டியவர்களுக்கு ‘அட, சிங்கநல்லூருக்குப் போப்பா’ என்ற யோசனையும் கூறத் தவறுவதில்லை.

‘ஊரைச் சுத்தி பத்துப் பதினைஞ்சு மில் இருக்குது. உனக்கும் எதிலாச்சும் வேலை கெடைக்காமலா போகும்? எதுக்கும் என் தம்பியை மொதல்லே பார். அவன் இருக்கறப்போ உனக்கு என்னடா கொறை?’ என்று ஊக்கம் தந்து பேசினான்.

சைக்கிள் கடைக்காரனுடைய பேச்சு உந்திற்று. கருப்பண்ணனின் உள் உணர்வுகளைத் தட்டி எழுப்பிற்று. ஊதிய பின் தணல் செவ்வொளி பரப்புவது போன்ற அவன் நெஞ்சுக்குள்ளும் ஏதோ கனன்றது. ஆனால் சிங்கநல்லூருக்கு அந்தச் சைக்கிள் கடைக்காரனிடமே ஒன்றரை ரூபாய் கைமாத்து வாங்கிக் கொண்டு புறப்பட்ட போது – இந்தப் பணத்தை இனி எந்த நாள் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்ற ‘அவநம்பிக்கை’ தன் இதழ்களைக் கட்டுக் கட்டாக அவிழ்த்து வைத்தது. இருப்பினும் கீரனூருக்குச் சிங்கநல்லூர் ஆயிரம் மடங்கு மேல் தான் என்ற குருட்டுத் தைரியம்! உள்ளூரில் கிடக்கும் ‘பட்டினி’யை வெளியூரில் அப்பியசிப்பதில் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை. தவிர, எந்தப் பிள்ளையும் குட்டியும் அவன் போய்விட்டானே என்று கண்ணீர் விட்டுக் கலங்கப் போகிறது? ‘நின்றால் நெடுஞ்சுவர்! விழுந்தால் குட்டிச் சுவர்!’ என்று முத்துக்கவுண்டர் அடிக்கடி சொல்லும் ‘அமுத வாக்கை’ எண்ணி ஆறுதல் அடைந்து கொண்டான்.

சிங்கநல்லூரிலுள்ள காவிரி மில்லில் அவனுக்குச் சுலபமாகவே ஒரு வேலை கிடைத்தது. தார்க்குச்சிக் கூடைகளைத் தூக்கும் வேலை. ‘காலி’க் குச்சிகளை நூல் சுற்றும் கட்டிடத்தில் கொண்டு போய் கொட்டி விட வேண்டியது. அவ்வளவு தான். இரும்புக் கூடைகளைத் தூக்கவும் அவன் தயார். தார்க் கூடை தூக்கல் மல்லிப்பூ கோர்ப்பது போல ரொம்ப எளிதாக இருந்தது அவனுக்கு. இன்றைக்கு, இந்தப் பத்து வருஷத்தில் அவன் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு மேஸ்திரி ஆகிவிட்டான். ‘கருப்பண மேஸ்திரியா? அடேயப்பா! கண்டிப்பான ஆள்!’ என்ற பெயருகும் எடுத்துவிட்டான்.

முப்பதைத் தாண்டிய கருப்பண்ணனிடம் மில்லிலுள்ள சகபாடிகள், ‘என்னய்யா! கல்யாணச் சோறு எங்களுக்கெல்லாம் எப்போ போடப் போறே?’ என்று கிளறுவார்கள். ‘அதெல்லாம் பெரியவங்க பாத்துச் செய்யறது?’ என்று பூசி மெழுகி விடுவான். நண்பர்கள் தொல்லை தாளமாட்டாமல் – அந்த அன்புத் தொல்லையினின்றும் விடுபடற்காவது வேண்டி ஆடிக்கொருதரம் அமாவாசைக் கொருதரம் ஊர்ப்பக்கம் தலை காட்டுவான். என்ன இருந்தாலும் சொந்த ஊர் அதைக் கண்ணால் பார்ப்பதிலே தனி ஆனந்தம்!

இந்தத் தடவை ஏழெட்டு நாட்கள் ஆகியும் கருப்பண்ணனுக்கு சிங்கநல்லூர் திரும்ப வேண்டுமே என்கிற வேகம் அடங்கிக் கிடந்தது. அந்த வேகத்தை அணை போட்டுத் தடுத்துக் கொண்டிருந்தான் கிட்டப்பன்.

பையனை அவனுக்குப் பிடித்திருந்தது. பையனுக்கும் அவனிடம் ஒரு வாஞ்சை. எந்நேரமும் நிழல் போல் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறான். கருப்பண்ணன் பேச்சுக்களை வியப்போடு கேட்கிறான். சிங்கநல்லூரை ஏதோ வரலாற்றுப் புகழ்பெற்ற இடத்தைச் சரித்திர மாணவன் தன்னுடைய ஆசிரியரிடம் ஆர்வத்தோடு கேட்டுத் தெரிந்து கொள்வது போல் துருவித் துருவி விரும்பி விசாரிக்கிறான். உல்லாசப் பயணம் சென்று வந்தவர் ‘ஒப்பற்ற இடங்களை’ வீட்டிலுள்ளோர்க்கு வர்ணிப்பது மாதரி கருப்பண்ணனும் அலுப்புச் சலிப்பின்றி விவரிக்கிறான். ராட்டையிலிருந்து பஞ்சு நூலாவது கிட்டப்பன் கண்களுக்குச் சூரியன் உதிப்பது போல! அதில் என்ன விந்தை! ஆனால் பஞ்சாலைப் பெரிய பெரிய யந்திரங்கள் – என்னென்ன விநோதங்களைப் புரிந்து பஞ்சை நூலாக்குகிறது! அந்தப் பஞ்சு மலையைக் குளிரச் செய்யும் அதிசயமே அதிசயம்! வீணாகானம் மாதிரி யந்திரகானம் சிறுவன் இதயத்தில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

“ஏய் கிட்டப்பா! நீயும் எங்கூட வர்றயாடா?” சிரித்துக் கொண்டே கருப்பண்ணன் கேட்டான்.

“எங்க அப்பன்?” என்று கிட்டப்பனும் ஒரு கேள்வியைக் கேட்டான்.

“அப்பனும் தான். குட்டி போகையிலே ஆடு வராமையா இருக்கும்?” என்றான்.

“செத்தாலும் எங்கப்பன் வரவே வராது!” உறுதியாகச் சொன்னான் பையன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 31சாவியின் ஆப்பிள் பசி – 31

சற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். “என்ன சொல்றே சிங்காரம்?” என்றான். “அவங்க அந்த்கோஷ் கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப் பொட்டு. “சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு”

கல்கியின் பார்த்திபன் கனவு – 75கல்கியின் பார்த்திபன் கனவு – 75

அத்தியாயம் 75 என்ன தண்டனை? அமாவாசையன்றைக்கு மறுநாள் பொழுது புலர்ந்ததிலிருந்து மாமல்லபுரத்து அரண்மனையில் குந்தவி தேவிக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. அடிக்கடி அரண்மனை உப்பரிகை மாடத்தின் மேல் ஏறுவதும், நாலாபுறமும் பார்ப்பதும், மறுபடி அவசரமாகக் கீழிறங்குவதும், பணியாட்களுக்கு

சாவியின் ஆப்பிள் பசி – 6சாவியின் ஆப்பிள் பசி – 6

பூவேலி கிராமத்தில் பாரதத் திருநாளை முன்னிட்டு பதினெட்டு நாள் உற்சவம். எல்லைக்கோடியிலுள்ள தர்மராஜா கோயிலில் தாரையும் தப்பட்டையும் அதிர்வேட்டுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. “ஊர்ல என்ன விசேஷம்?” என்று பாப்பாவிடம் கேட்டான் சாமண்ணா. “தர்மராஜா திருநாள். கோவிலுக்குப் பக்கத்துலே பந்தல் போட்டு, பாரதம்