Tamil Madhura சிறுகதைகள் நடுத்தெரு நமஸ்காரம்!

நடுத்தெரு நமஸ்காரம்!

எழுத்தாளர் G. A. பிரபா மேம் அவர்களின் பொற்றாமரை தீபாவளி 2020 இதழில் வெளிவந்த எனது சிறுகதையை இங்கு பதிவிடுகிறேன். 

இதற்கு தலைப்பு தந்த கணேஷ் பாலா சாருக்கு எனது நன்றிகள்.

கௌசல்யாவுக்கு  படபடவென வியர்த்து வந்தது. சுற்றிலும் எல்லாரும் அவளையே வெறித்துப் பார்ப்பது போல ஒரு உணர்வு. ‘கடாமாடு மாதிரி வளர்ந்திருக்கான் இப்படியா பொது இடத்தில் நடக்குறது? ‘
மாதம் ஒரு நாளோ இல்லை ரெண்டு நாளோ செக்காலையில் இருந்து கொப்புடையம்மன் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டுவிட்டு,  கடைத்தெருவில் வீட்டுக்கு வேண்டிய பலசரக்கு சாமான்கள், சோப்பு சீப்பு கண்ணாடி ஹேர்பின்களை  வாங்கிச் செல்வாள். அதற்கு இப்படி ஒரு சோதனையா?
 அன்று வழக்கம்போல கோவிலுக்கு நடந்து வந்துக்  கொண்டிருந்தாள். சுட்டெரிக்கும் சூரியன் கூட அவளது இந்த சுதந்திர நாளை கெடுக்க விடாமல் குடை ஒன்றைப் பிடித்துக் கொண்டாள் . அந்த சமயத்தில்தான் கடைத்தெருவில் ஊரே பார்க்கும் இடத்தில் அவளது நாத்தனார் மகன் சுந்தரராஜன் அவள் காலில் நெடுஞ்சாண்கட்டையாக விழுந்தான். தெருவே அதனை வேடிக்கை பார்க்க பதறிவிட்டாள்.
“அத்தை, எங்க குடும்பத்து மேல என்ன கோவம் வேணும்னாலும் இருக்கலாம் அதுக்காக என் வாழ்க்கையைக் கெடுத்துடாதிங்க . ராதாவை எனக்குக் கல்யாணம் செஞ்சுக் கொடுத்துடுங்க…” என்று கண்ணீர் வழிய கும்பிட்டுக் கேட்டவனிடம் பதில் பேச முடியாது திகைத்தாள்.
“அந்தப் புள்ள கால்ல விழுந்து கும்பிடுது. இந்த காலத்தில் இப்படி ஒரு மருமகன் கிடைப்பானா? சரின்னு சொல்லும்மா” பிக் பாசாய் மாறி அங்கிருந்தவர் தீர்ப்பு சொல்ல…
‘உனக்கென்னமா எங்க வீட்டு விஷயம் தெரியும்?’ என்று நொந்து கொண்டவளாய் அங்கிருந்த சர்பத் கடையின் நிழலில் ஒதுங்கினாள்  சுந்தராஜனும் பின் தொடர்ந்தான்.
“ரெண்டு சர்பத் கொடு தம்பி” என்று கடைக்காரரிடம் சொன்னாள் .
“ஒன்னில் டபுள் சுகர் போட்டுத் தா” என்றான் அவனும்,
“ஐஸ் கொஞ்சமா போடுப்பா ” என்று அவளும் சொல்லி முடித்து, ஓரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்.
“அப்பறம் சொல்லுங்கத்த… கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்?”
சர்பத்தை  ஒன்றிரண்டு வாய் பருகியதும்தான் கௌசல்யாவின் படபடப்பு அடங்கியது. இருந்தும் கோபம் அடங்குவேனா என்றது.
“சுந்தரம் இதெல்லாம் தெருவுல பேசி முடிக்கிற விஷயமில்ல ” கோபத்தை  அடக்கிக் கொண்டு சொன்னாள்.
“எனக்குத் தெரியும் அத்தை. உங்களுக்கும் பாட்டிக்கும் இருக்குற சாதாரண மனத்தாங்கல்தான் எங்க கல்யாணத்துக்குத் தடையா இருக்கு… எங்க கல்யாணம் முடிஞ்சதும் பாட்டியும் அம்மாவும் சரியாயிடுவாங்க. நம்ம குடும்பம் ஒத்துமையா இருக்கும்.
நான் ஒரு மகனா இருந்து உங்களையும் மாமாவையும் பாத்துக்குவேன். ராதாவை ராணி மாதிரி பாத்துக்குவேன். கீதாவுக்கும்  நல்ல பையனா பாத்து முன்னிருந்து கல்யாணம் செஞ்சுத் தருவேன் ” என்று கட கடவென ஒப்புவித்தான்.
“சுந்தரம் மனுஷங்கன்னு இருந்தா மனத்தாங்கல் சண்டை சச்சரவுன்னு வரத்தான் செய்யும். இந்த உப்பு புளி சண்டையை மனசில் வச்சுட்டு என் பொண்ணு கல்யாணத்தை முடிவு செய்ய முடியாது”
“உங்களுக்கும் தடைன்னு எதுவும் இல்லை. நீங்க சொல்றதைத்தான் மாமா கேப்பாருன்னு எங்கம்மா ஏற்கனவே சொல்லிருக்காங்க. அப்பறம் என்னத்த கல்யாணத்தை முடிவு செய்யலாமே”
“என் பொண்ணோட கல்யாண விஷயம் இது. அவதான் முடிவெடுக்கணும்”
“நீங்க சொல்லி அவ வேணாம்ன்னு சொல்லவா  போறா”
“அவ என்ன சின்ன பிள்ளையா…  வேலைக்கு போறா… சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மாதிரி ஊருக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கா… என்னையும் உன்னையும்  மாதிரி காரைக்குடியும், தேவக்கோட்டையும் தான் உலகம்னு வாழுறவளா… “
“அங்கதான் தப்பு பண்றிங்க … பெண்களை இப்படி நினைச்ச இடத்துக்கெல்லாம் போக விடக்கூடாது. அப்படியே போனாலும் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு ஒரு வேலி போட்டுட்டுத்தான் வீட்டை விட்டு வெளியே அனுப்பனும். இல்லைன்னா அதுக்கான பலன் சீக்கிரம் தெரியும் “
“இதுதான் உனக்கும் அவளுக்கும் இருக்குற பெரிய வித்யாசம். உங்க ரெண்டு பேருக்கும் மனப் பொருத்தமோ குணப் பொருத்தமோ சுத்தமா இல்லை. அதைப்  புரிஞ்சுக்கோ”
“எனக்குத் தெரியும் அத்தை உங்க மனசு கல்லு, பாறை. ஆனால் ஒரு நாள் உங்க மக எவனையாவது இழுத்துட்டு வந்து நிக்கப் போறா… அப்ப நீங்களும் மாமாவும் என் காலில் விழுந்து ராதாவைக் கட்டிக்க சொல்லுவிங்க பாருங்க” என்று சொல்லிவிட்டு கோபமாய் அவன் எழுந்து சென்றுவிட, பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டை வந்தடைந்தாள்  கௌசல்யா.
வீட்டில் காலடி எடுத்து வைத்ததுமே “இப்படி ஒரு கல்லு மனசுக்காரி இருப்பாளா… என் பேரனுக்கு என்ன குறைச்சல். நாலு பேருக்கு முன்னால ஒரு ஆம்பள  காலில் விழுந்திருக்கான் அப்படியும் மனசு இரங்கல பாரேன்” என்று ஒரு பாட்டம் அழுதார்.
‘எப்படி அதற்குள் விஷயம் வந்திருக்கும்’ என்று நினைத்தாலும் எல்லாம் இவர்கள் மேற்பார்வையில் நடக்கும் நாடகமே என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை.
“என்னங்க படிக்காம ஊர் சுத்திட்டு இருக்குற இவனுக்கு எஞ்சினியரிங் படிச்சுட்டு மெட்றாஸ்ல வேலை பாக்குற நம்ம பொண்ணைக்  கட்டிக் கொடுக்கணும்னு எப்படி எதிர்பார்க்குறாங்க. வீட்லயே பொண்ணை உக்கார வைக்கணும்னு நினைக்கிற சுந்தரத்தோட எண்ணமும் வாழ்க்கைல ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிற ராதாவோட ஆசையும் எப்படி ஒத்துப் போகும்? அவன் காலில் விழுந்த ஒரே காரணத்துக்காகக் கட்டித் தரணும்னு கட்டாயப் படுத்தப் போறிங்களா”
“ராதா உனக்கு மட்டும்தான் பொண்ணா. அதுவுமில்லாம கல்யாணம் என் பொண்ணோட விருப்பப் படிதான் நடக்கும். உனக்கே பிடிக்கலைன்னாலும் அவளுக்குப் பிடிச்ச தகுதியான மாப்பிள்ளைன்னா நான் ஒகே சொல்லிடுவேன்” என்று மகாலிங்கம்  எந்த வாய் முகுர்த்தத்தில் சொன்னாரோ இரண்டு மாதங்கள் கழித்து பலித்தே விடும் போலிருக்கிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சில பல சண்டைகளுக்குப் பிறகு சுந்தரம் வேலை தேடி மெட்றாஸ்  சென்றான்.
“அம்மா என்ன நினைச்சுட்டு இருக்கான் இந்த சுந்தரம். நேத்து என் ஹாஸ்டலுக்கே பாக்க வந்துட்டான். வந்து  எதுக்கு ரெண்டு இடத்தில் வாடகை தந்துட்டு, பேசாம  நம்ம ரெண்டு பேரும்  ஒரு அப்பார்ட்மெண்ட் பாத்துத் தங்கிக்கலாமான்னு கேக்குறான். அடுத்த தடவை இப்படி பினாத்தினான் போலீஸ்ல சொல்லிடுவேன்னு பாட்டிகிட்ட சொல்லிவை”
அடுத்து சில நாட்களில் “அம்மா நான் தீபாவளிக்கு வீட்டுக்கு வரும்போது ஒரு பிரெண்டைக் கூட்டிட்டு வரேன். அவங்க வீட்டில் நோ தீபாவளி. அதனால நம்மவீட்டில் தான் கொண்டாடுறதா பிளான். உனக்கு ஒகேதானே” என்று கெஞ்சும்போது கூட அவளுக்கு சந்தேகம் தோன்றவில்லை.
ராதா கிளம்பி  வந்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டே பாத்திரங்களைக் கழுவப்  போட்டாள் கௌசல்யா. அன்று வீட்டிற்கு அவளது நாத்தனாரும் வந்திருந்தார்.  “ஐயோ…. என் குடியைக் கெடுத்துட்டாளே..  டேய் மகாலிங்கம்  உன் பொண்ணு நம்ம தலைல கல்லைத்  தூக்கிப் போட்டுட்டா… யாரோ வேற மதத்து  பையனை லவ் பன்றாளாம்” என்று அலற…
“என்னம்மா சொல்ற…”
“சுந்தரம் அவளை போட்டோ எடுத்து அனுப்பிருக்கான் பாரு” என்று காட்டிய புகைப்படத்தில் ராதாவும் மற்றொரு பையனும் காஃபி ஷாப்பில் அருகருகே அமர்ந்து கொண்டு கண்கள் முழுவதும் காதலுடன் காப்பியைப் பருகிக் கொண்டிருந்தனர். இருவரின் கைகளும் கோர்த்திருந்தது.
“அந்த பய்யன் பேரு  ஹேரிஸ்” என்று அடுத்த அதிர்ச்சியைத் தந்தார்.
அன்று தூக்கமில்லா இரவானது குடும்பத்தில். “நம்ம மதம்னா பரவால்ல… ஏன் நம்ம பரம எதிரி புதுக்கோட்டை வைகுண்டம் வீட்டில் கூட ராதவைத் தா. நான் கேள்வியே கேக்காம தலையாட்டுறேன். ஆனா வேத்து மதம் இந்தக் குடும்பத்தில் புகுந்தது நான் உயிரோட இருக்க மாட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வர்றவ காலை உடைச்சு சுந்தரத்தைத் தாலி கட்டச் சொல்லு”
“கொஞ்சம் பேசாம இரேம்மா” கத்தி அடக்கினார் மகன்.
மறுநாள் காலை. வீட்டின் முன் கார் வந்து நிற்க, அதிலிருந்து ராதா இறங்கினாள்  ஓட்டுநர் இருக்கையிலிருந்து அவனும். அவன்தான் அந்த ஹேரிசும்.
முகம் கடுகடுத்தது மகாலிங்கத்திற்கு “சாரிப்பா பிரெண்டுன்னு சொன்னேன். அது யாருனு சொல்லல. நேரில் சொன்னா நல்லாருக்கும்னு நினைச்சோம்”
“ஜோடியா வந்தப்பவே தெரியுது” என்றார் மகாலிங்கம் கோபத்துடன்.
நிலமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் “அங்கிள் முதலில் அறிமுகப் படுத்திக்கலாம். உங்க எல்லாரைப் பத்தியும் எனக்கு நல்லா தெரியும். என் பெயர் ஹரிஷ். எங்க தாத்தா வைகுண்டம் அவருக்கும் உங்க அப்பாவுக்கும் எதோ பணத் தகறாராம். போக்குவரத்தே இல்லைன்னு சொன்னாங்க. போன வருஷம் அவரும் தவறிட்டார். இந்த பகையை இன்னமும் தொடரணுமா?” என்று ஹரிஷ் கேட்டு முடித்ததும்
‘ஹரீஷா? ஹேரிஸ்ன்னு சுந்தரம் எழுதியிருந்தான்…. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?’
 நாலு வார்த்தை தப்பில்லாம எழுத வராது இவனுக்கு நம்ம பொண்ணைக் கல்யாணம் செஞ்சு வைக்க சொல்லி கேக்குறதுக்கு எப்படி உங்கம்மாவுக்கு மனசு வருது? என்று மனைவி இரண்டு நாட்கள் முன்னர் கூட முணுமுணுத்தது நினைவுக்கு வர, மகாலிங்கத்தின் முகம் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கதவருகே ஓரமாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.
“பகை என்ன தம்பி பகை… அதைப் பத்தி நினைக்கவே நேரமில்லை. எங்கம்மாவே கூட மறந்திருப்பாங்க. வெளிலயே நிக்கிறிங்களே, முதல்ல  வீட்டுக்குள்ள வாங்க” என்று வரவேற்றார்.
கௌசல்யா “ஏண்டி ராதா, மாப்பிள்ளை விவரத்தை முன்னாடியே சொல்லிருந்தா விருந்து சாப்பாடே சமைச்சிருப்பேனே… புது டிகாஷன் போடுறேன் ” என்று மகளைக் குட்டிவிட்டு  காப்பி கலக்க சென்றார்.
அம்மா அப்பா இருவரும் ஹரிஷை உபசரிக்க, அவர்கள் வீட்டினரிடம் போனிலேயே பேசி முடிக்க, இருவீட்டினரும் மனமொத்து சம்மதிக்க இவ்வளவு விரைவில் திருமணம் நிச்சயமானதைக்  கண்டு சந்தோஷத்தில் மிதந்தாள் ராதா. இவ்வளவு ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் சத்தம் கூடப் போடாமல் ரூமில் முடங்கி விட்ட பாட்டியையும் அத்தையையும் கண்டு நம்ப முடியாமல்.
“கீதா என்னடி நடக்குது… நான் ஒரு பெரிய ஆட்டம்பாம் போடப் போற பயத்தில் வீட்டுக்கு வந்தா புஸ்வானமா போயிருச்சு”
“இதுக்கெல்லாம் நீ சுந்தரத்துக்குத் தான் தாங்க்ஸ் சொல்லணும் அவன்தான் ஹரிஷ்  ஸ்பெல்லிங்கை ஹேரிஸ்ன்னு எழுதித் தொலைக்க, ராத்திரி முழுசும் ஆயிரம் வாலா சரமே வெடிச்சாச்சு. அப்பறம் காலைல நீ தந்த அதிர்ச்சி எல்லாம் ரொம்ப சாதாரணமா போச்சு”
“நிறையா கதை நடந்திருக்கும் போலிருக்கே… என்ன நடந்ததுன்னு சொல்லேன்” என்று ராதா கேட்க
“எவ்வளவு கதை இருக்கு தெரியுமா கொப்புடையம்மன் கோவிலுக்கு அம்மா போனதிலிருந்து, சுந்தரம் அவங்க காலில் விழுந்ததில் இருந்து  ஆரம்பிக்கிறேன்… ” என்று கீதா ஆரம்பித்தாள்.

1 thought on “நடுத்தெரு நமஸ்காரம்!”

  1. இரு கோடுகள் தத்துவம் தான். மதம் என்கிற பெரிய கோட்டுக்கு பக்கத்தில் பகை என்பது சிறிய கோடு ஆகிவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

குற்றவாளி யார்?குற்றவாளி யார்?

குற்றவாளி யார்? – புதுமைப்பித்தன் சிறுகதைகள் கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி செய்துவிட்டு உட்கார்ந்தார். அவர் சில வக்கீல்கள் மாதிரி கோர்ட்டின் பச்சாதாபத்தையும், இளகிய ஹ்ருதயத்தையும்

அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’

1        அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,      “மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…” என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின்

சிலிகான் மனது – Audio novelசிலிகான் மனது – Audio novel

Follow my anchor channel: https://anchor.fm/tamilmadhura/episodes/Silicon-Manathu—Tamil-short-story-eb9d8r Thanks to Writer Hasha Sri for the beautiful narration தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி .