
அத்யாயம் – 1
விடியற்பொழுதில் மிதமான வெப்பத்தால் மனதுக்கு இதமூட்டிய சூரியன் கொஞ்சம் உக்கிரமாய் மாற ஆரம்பித்திருந்தான். திருவண்ணாமலையில் நகரத்தை விட்டு சற்றுத் தள்ளி ஒரு அழகான இளம் பச்சை நிற பெயிண்ட் அடித்த வீடு. புதுக்கருக்குக் கலையாமல் அதனை பராமரிக்கும் பொறுப்பு இல்லத்தலைவி தெய்வானையையே சேரும். என்றாவது கார் வாங்கிவிடுவோம் அப்போது நிறுத்த வேண்டுமே என்று முன்யோசனையுடன் போர்டிக்கோ கட்டியிருந்தனர். தற்போது அதில் ஒரு பைக்கும், பெண்கள் சைக்கிள் ஒன்றும் மட்டுமே நிற்கிறது. அந்த சைக்கிளுக்கு சொந்தக்காரி ப்ரீதாவைத் திட்டியபடி தெய்வானை தலை பின்னிக் கொண்டிருந்தார்.
“தலைக்கு எண்ணை வைன்னு சொன்னா கேக்குறியாடி. முடியைப்பாரு… வெயிலில் காஞ்சு, தேங்கா நாரு மாதிரி வறவறன்னு” திட்டியபடி ரெண்டு ஸ்பூன் மூலிகை எண்ணையை உச்சந்தலையில் தடவி விட்டார்.
“அம்மா… இந்த எண்ணையா தடவிவிட்ட, நாத்தம் அடிக்கும்மா… சைக்கிள்ல போறதுக்குள்ள முகமெல்லாம் வழிஞ்சுடும். எம்மேல எண்ணை நாத்தம் அடிக்கப் போகுது”
“ப்ரீதா இன்னைக்கு கிளாசில் உன் பக்கத்தில் யாரும் உக்கார மாட்டாங்க. நீ பெஞ்சில் படுத்தே தூங்கலாம்டி”
தங்கையைக் கிண்டல் செய்தபடி வந்தாள் அவளது அக்கா லலிதா. நம் நாயகி. உயரம் ஐந்தடி நான்கு அங்குலம். நிறம் சராசரியை விட கொஞ்சம் பளிச். பேசும்போது பளிச்சிடும் கண்கள், குறும்புப் புன்னகை, சிரிக்கும்போது அழகாகத் தெரியும் பல்வரிசை, குண்டு கன்னம், வட்ட முகம், பூசினாற்போல் உடல்வாகு என்று இளைஞர்கள் பார்த்தவுடனே அவர்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொள்வாள்.
“கொழுப்பா…. அம்மா பாரும்மா இவளை” என்று ப்ரீதா புகார் கூற.
“லல்லி, உன்னை அடுப்பில் வச்சிருக்குற சேனைக்கிழங்கை அடி பிடிக்காம கிண்ட சொன்னேனே… செஞ்சியா” என்றார் மிரட்டலாக.
லலிதா மறந்துவிட்டத்தின் அடையாளமாக நாக்கைக் கடித்துக் கொண்டு “இதோ போறேம்மா” சமையலறைக்கு ஓடுவதற்குள் சேனைக் கிழங்கு கருகி புகை வரத் துவங்கியது.
“கருக்கிட்டியா… உன்னை… நாளைக்கு உன் மாமியார் வீட்டில் வாயாடிட்டு நில்லுடி.. அந்தம்மா என்னைத் திட்டப் போகுது”
கூடத்தில் செய்திகளைப் பார்த்தவாறே இட்டிலி உண்டுக் கொண்டிருந்த அவர்கள் தந்தை குணசீலன் குரல் கொடுத்தார்.
“கருகினா பரவால்ல… லல்லியைத் திட்டாதே”
“வந்துட்டாருப்பா… வாத்தியாரு, பொண்ணுங்களை ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே. இதுவே வீட்டு செய்தி எதையாவது சொல்லு கடுகளவு கூடக் காதில் விழாது” என்று முணுமுணுத்தார் தெய்வானை.
“ஏண்டி, இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை?” என்றபடி மனைவி மக்கள் இருக்குமிடதிற்கே வந்து விட்டார்.
“பிரச்சனை உங்களுக்குத்தான். எலுமிச்சை சாதம் கட்டிட்டேன். தொட்டுக்க சேனைக்கிழங்கு வறுவல் கொடுக்கலாம்னு காயை கடாயில் போட்டுக் கிண்டிவிடச் சொன்னா உங்க பொண்ணு கருக்கிட்டா”
“அவ்வளவுதானே… லல்லி இன்னைக்கு ஊறுகாய் வச்சு சாப்பாடு கட்டும்மா” மகளை அனுப்பி வைத்தவர் மனைவியைக் கடிந்து கொண்டார்
“சுலபமா தீரும் பிரச்சனை…. இதுக்கு ஏன் அவ எதிர்கால மாமியார இழுக்குற”
“நீங்க வேற, அந்தம்மா சும்மாவே ஆயிரம் குறை சொல்றவங்க. வீட்டுக்கு வந்தா நான் பலகாரம் வைக்கிற தட்டு, டம்ளர் எல்லாத்தையும் அவங்க ஒரு தடவைக் கழுவிட்டுத்தான் பலகாரத்தை எடுத்து வச்சுக்கிறாங்க. அவ்வளவு சுத்தமாம்… இவ கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாம சுத்திட்டு இருக்கா.. கல்யாணமானதும் அந்த வீட்டில் சமாளிச்சுடுவாளாங்க ” மனைவி குரலில் தெரிந்த கவலையைக் கண்டு சிரித்தபடி,
“கல்யாணமான புதுசில் நீ எப்படி இருந்த. துவரம்பருப்புக்கும் கடலைப்பருப்புக்கும் வித்யாசம் தெரியாம கடலைப்பருப்பு சாம்பார் வச்சவதானே… இப்ப ரெண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கலையா. அதே மாதிரி லல்லியும் கத்துக்குவா.
எல்லாரும் நமக்குப் பிடிச்சாப்பில இருக்க முடியுமா? அந்தம்மா சுத்தக்காரியா இருந்தால் ஒண்ணு இவ மாறப்போறா இல்லை அவங்க மாறப் போறாங்க. அவ்வளவுதானே…
பெண் பிள்ளைகள் நம்ம வீட்டில் இருக்கும் வரைதான் இந்த மாதிரி கவலையில்லாம சுத்த முடியும். இப்பயே கல்யாணத்தைப் பத்தி நெகட்டிவா பேசி அவளை பயப்படுத்திடாதே” என்று அடக்கினார்.
தெய்வானையும் சற்று சமாதனமடைந்தவராக “இன்னைக்கு லல்லி காஞ்சிவரத்தில் புடவையைப் பாத்துட்டு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடுவா. அவங்க நெய்துத் தர எப்படியும் ஒரு மாசம் ஆகும். நீங்க அதுக்குள்ளே பணத்தை ரெடி பண்ணிக்கோங்க”
“ம்ம்… ம்ம்… அவளை பத்திரமா போயிட்டு வர சொல்லு. அவ பிரெண்ட் பரிமளா கூடத்தானே போறா”
“ஆமாம் பரிமளா இப்ப வந்துடுவா. ரெண்டு பேரும் பரிமளாவோட அக்கா கல்யாணத்துக்கு புடவை நெஞ்ச இடத்துக்கே போறாங்க. டிஸைன் பாத்து ஆர்டர் பண்ணவுடனே பரிமளா மெட்ராஸ் போறா இவ பஸ் ஏறி வீட்டுக்கு வந்துடுவா”
“நீ சொல்றதைப் பார்த்தா வீட்டுக்கு வரதுக்குள்ள இருட்டிடும் போல இருக்கு”
“பஸ் ஏறினதும் போன் பண்ணுவா நம்ம பஸ்ஸ்டாண்டில் போயி கூப்பிட்டுக்கலாம்.”
மனைவியின் ஏற்பாட்டில் திருப்தி அடைந்தவராக எழுந்து சென்று பீரோவிலிருந்த பணத்தை எண்ணி எடுத்து வந்தார்.
“மொத்தம் எத்தனை புடவை எடுக்கணும்”
“நம்ம பங்குக்காக நிச்சயதார்த்ததுக்கு ஒண்ணு, கல்யாணத்துக்கு ஒண்ணு , ரிசப்ஷனுக்கு ஒண்ணு மூணு புடவை கூடுதல் விலையில் மத்தபடி தாலி பிரிச்சுப் போட அது இதுன்னு மொத்தம் ஏழு புடவை வாங்கணும்”
“இப்ப ஏழு புடவையும் அவளே எடுக்கப் போறாளா? நம்ம கூடப் போக வேண்டாமா?” திகைப்போடு கேட்டார் தகப்பன்.
“நம்ம இல்லாம எப்படி. இன்னைக்கு ஒரு புடவை மட்டும் எடுத்துட்டு டிஸைன்ஸ் பாத்துட்டு பிடிச்சிருந்தா ஆர்டர் கொடுத்துட்டு வந்துடுவா.. அடுத்து இன்னொரு நாள் நம்ம எல்லாரும் சேர்ந்து போயிட்டு வரலாம்”
“அதுக்கு எல்லாரும் சேர்ந்தே போய்ட்டு வரலாமே”
“எனக்கு அது தெரியாதா… இன்னைக்கு நல்ல முஹுர்த்த நாளாம். அதனால் பிள்ளையார் சுழி போட்டுடலாம். உங்களுக்கும் ப்ரீதாவுக்கும் பரீட்சை எல்லாம் முடிஞ்சதும் ஆற அமர புடவையை எடுத்துட்டு வரலாம்”
“சரி, அப்படியே உனக்கு ரெண்டு புடவையும், ப்ரீதாவுக்கு ரெண்டு பட்டுப் பாவாடையும் சேர்த்துக்கோ. ப்ரீதா இப்பயே நல்ல டைலர் கிட்ட கொடுத்து மார்டனா தச்சு வச்சுக்கோங்க. கடைசி நேரத்தில் என்னை அலையவிடாதே”
எஹ்டிர்பாராத பரிசு கிடைத்த சந்தோஷத்தில் “அப்பான்னா அப்பாதான்… தாங்க்ஸ்ப்பா… “ என்று குதித்தபடி வந்தாள் ப்ரீதா. ஒரு பாவாடை ஒரு பட்டு சுடிதார்ன்னு தீர்ப்ப மாத்தி சொல்லுங்கப்பா”
“சரி, லல்லி தங்கச்சிக்கு ரெண்டு பட்டுப் பாவாடை ஒரு பட்டு சுடிதார் வாங்கிக்கோம்மா”
“கையோட வாங்கிட்டு வந்துடுக்கா… தைக்கத் தரணும்”
“ஏய் ப்ரீதா… தலை ஏண்டி இவ்வளவு ஈரமா இருக்கு. தலைக்கு ஊத்துனியா?”
“அவ தலை பூரா வழிய வழிய எண்ணை வச்சா எப்படி இந்த வெயிலில் சைக்கிளில் போவா. அதனால நாந்தாம்மா ஊத்திவிட்டேன்” என்றாள் லலிதா.
“அப்பா… சாரிப்பா சேனைக்கிழங்கை பொறுப்பில்லாம கருக்கிட்டேன்ல்ல அதனால உங்களுக்கும் ப்ரீதாவுக்கும் எலுமிச்சை சாதத்துக்குத் தேங்காய்த் துவையல் அரைச்சு டிபன் பாக்ஸ் கட்டி வச்சிருக்கேன்”
“தேங்கா துவையலா கெட்டுப் போயிடும்டி”
“தேங்காயை வதக்கிட்டுத்தான் அரைச்சேன். மத்தியானம் நல்லாவே இருக்கும்”
குணசீலன் ‘பார்த்தாயா என் பெண்ணின் சாமர்த்தியத்தை’ என்று மனைவியைப் பெருமைப் பார்வை பார்த்தார்.
குணசீலனும், ப்ரீதாவும் வெளியே கிளம்பி சென்றபின், தனது தோழி பரிமளாவுடன் காஞ்சீபுரத்துக்குக் கிளம்பினாள் லலிதா. அனைவரும் சென்றபின் ஊற வைத்த துணிகளைத் துவைத்து, பின் துவைத்த துணியைக் காயப்போட மாடிக்கு வந்த தெய்வானை மழை சிறு தூறலாகப் பொழிவதைக் கண்டு அதிசியத்தபடி ‘என்னடா காலைல வெயில் சுள்ளுன்னு காஞ்சது. மத்தியானம் இப்படி தூறல் போடுது. வானத்தைப் பார்த்தா மழை வர்ற மாதிரி இருக்கே.. லல்லி பத்திரமா ஊருக்குப் போயிருப்பாளா’ என்ற கலக்கத்தோடு கீழிறங்கி வீட்டிற்குள் சென்றார்.
Thanks Amu. Wish you the same
Super start mathura welcome back.happy new year.quiet ana family antge athisutha mammiyara parkanume.namma duppa wala enna anaru.
வணக்கம் தமிழ் மதுராக்கா,
புதுவருட வாழ்த்துக்கள்.
உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த விடயம் சமையல் குறிப்புகளை மிக இயல்பாகச் சொல்லிச் சென்றிருப்பீர்கள்.
திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கும் நாயகி, தேங்காய் சட்னி வைத்த விதத்தில் அப்படியொன்றும் விளையாட்டுப் பிள்ளையாகத் தெரியவில்லை.
நாயகன் எப்படி என்று பார்ப்போம். காஞ்சிபுரத்திற்கே சென்று அவர்கள் நெய்வது பார்த்து ஒரு பட்டுப் புடவையாவது வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை.
அதை அடுத்த அத்தியாயத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியுமா பார்ப்போம்?
புதுவருட நாளில் அழகான ஒரு ஆரம்பத்தைப் பரிசாய் தந்திருப்பதற்கு எனது வாழ்த்துக்கள் அக்கா.
என்றும் அன்புடன்
யாழ் சத்யா.
Opening super, samaiyal tips, all d best. Happy New year sister.🌟🎊🎂😂💥💐
Thanks a lot Sheela. Wish you the same
Nice start… welcome back… happy new year sis