Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’

அத்தியாயம் – 19

அதினன் வீட்டை சுத்தம் செய்து குடி வந்து ஒரு மாதமாகப் போகிறது. தினமும் காலை எழுந்து குளித்து பத்து மணிக்கு ரெடியாகி விடுவான். அதற்குள் வெண்ணிலாவும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு கிளம்பித் தயாராக இருப்பாள். அதினனின் ஆபீஸ் அறையிலோ இல்லை வெளியே குளுமையாக இருக்கும் வேப்ப மரத்தடியிலோ அமர்ந்து கதையின் போக்கினைக் கலந்து ஆலோசிப்பார்கள்.

கோடு போடாத பெரிய நோட்டு ஒன்றில் வெண்ணிலா திரைக்கதை வசனங்களை முத்து முத்தான கையெழுத்தில் எழுதுவாள். அதனை ஸ்கான் செய்து அவனது அலுவலகத்திற்கு மாலையே அனுப்பி விடுவான் அதினன். அவனது இயக்குனர் குழு அதனைப் படித்துப் பார்த்து அவர்களது விமர்சனத்தை அனுப்பி ஓகே செய்யும்.

காலை இவர்கள் வேலை செய்யும் சமயத்தில் மதுரையிலிருந்து ஆசிரியர்கள் வந்து மித்துவிற்கு ஒன்பதாம் வகுப்புப் பாடங்களைச்  சொல்லித் தருவார்கள். அடுத்த வருடம் பத்தாவது சேர்க்கப் போகிறார்களாம்.

மாலை ஆரம்பித்துவிட்டால் போதும் பிள்ளைகள் அனைவரும் தெருவில் விளையாடும் ஓசையில் காது ஜவ்வுகள் எப்போது கிழியப் போகிறதோ தெரியவில்லை.

அவர்களுடன் ஒருவனாக அதினனும், கார்மேகமும் கூட… கபடி, குழுக்கள்  பிரித்து சொல்லித் தந்தார்கள்.

“டேய் இப்படி விளையாடிட்டு வந்தா எங்கிருந்து படிப்ப? தூங்கி வழியிறதப் பாரு, டேய் வெற்றி எந்திரிடா”

“ஆத்தா புள்ள ஆடி ஓடி களைச்சு விளையாடணும். வியர்வை சிந்தணும். அப்பத்தானே உடம்பு நல்ல உரமா இருக்கும்” என்று பாக்யநாதன் சப்போர்ட்டுக்கு வருவார்.

அடிக்கடி மின்சாரம் தடை படுகிறது, அதனால் பிள்ளைகளின் படிப்பும் என்று அறிந்து கொண்டவுடன் கார்மேகத்துடன் பேசி இருவரும் ஒரு சிறிய ரக காற்றாலை ஒன்றினை வடிவமைக்கச் சொல்லி கார்மேகத்திடம் சொன்னான்.

“நீ எலக்டிரிக்கல்லதான பாலிடெக்னிக் முடிச்சிருக்க, இந்த மினி டர்பைன் கம்பனில ட்ரைனிங் தருவாங்க. படிச்சுட்டு வந்து எனக்கு செஞ்சுத்தா”

ஐம்பதாயிரம் ரூபாயை விழுங்கிய அந்த டர்பைன் மின் தடை நேரங்களில்  வீட்டிற்கு வெளிச்சம் தந்தது கண்டு அதையே தொழிலாகத் தொடங்கினால் என்ன என்று யோசிக்கத் தொடங்கினான்.

“இருபத்தி நாலுமணிநேரமும் இதை உபயோகிக்க முடியாது. ஒண்ணு சத்தம் இன்னொன்னு பிளேடில் மாட்டி பறவைகள் அடி பட வாய்ப்பிருக்கு. ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய்ல செலவில் தயாரிக்கும் இந்த மினி காற்றாலை நம்மோட மின் தேவைக்கு ஒரு பலமா இருக்கும்னு நினைக்கிறேன்”

அதினன் அந்தப் பகுதிக்குக் கதை எழுத வந்தது அங்கிருந்த அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி. அதுவும் குடும்பத்தோடு வந்தது அவர்களுக்கு மத்தியில் நன்மதிப்பையே பெற்றுத் தந்தது.

“வயசுக்கு வந்த பொன்னிருக்கு இதில் எப்படி இவன் தப்பானவனா இருக்க முடியும். பார்க்க பழக நல்ல மாதிரி இருக்காருப்பா… என்ன உசரம், நிறம்” என்று அவனைப் பார்த்து, அவனது அடக்கமான குணங்களைக் கண்டு வியந்தவர்களே அதிகம். கார்மேகத்தின் மனது கூட அதினனின் குடும்பப் பற்றைக் கண்டு மித்துவுடன் அவன் கொண்ட அன்பைக் கண்டு  மாறிவிட்டது.

“உங்களுக்கு எப்படி சார் வயசாகவே மாட்டிங்குது? நாங்கல்லாம் ஸ்கூல் படிக்குறதிலேருந்து பார்த்துட்டு வரோம் அப்படியே இருக்கிங்களே” பொன்னும் ஆச்சிரியம் தாங்காமல் கேட்டுவிட்டாள்.

“உடம்பும், அழகும் தானேம்மா எங்களுக்கு மூலதனம். சாப்பாட்டில் கவனமா இருப்போம். நிறைய பழம், காய்கறின்னு எடுத்துப்போம். நாங்கல்லாம் விழாவுக்கும், பார்ட்டிக்கும் போறதுதான் உங்களுக்குத் தெரியுது. கடுமையான உணவுக்கட்டுப்பாடு இருக்கும். ஏன்னா ஒரு படத்தில் உடம்பை ஏத்தணும், இன்னொரு படத்துக்கு உடம்பைக் குறைக்கணும். தினமும் உடற்பயிற்சி செய்வோம். ஃபைட், டான்ஸ் பயிற்சி இதில் ஏதாவது ஒண்ணு தினமும் இருக்கும். எல்லாத்துக்கும் மேல  சுத்தமான ஆரோக்கியமான உணவு. நல்ல தூக்கம்”

“இதெல்லாம் செஞ்சா நாங்களும் உங்களை மாதிரியே இளமையாயிடுவோமா?”

“நாங்களும் சாதாரண மனுஷங்கதானேம்மா. எங்களுக்கும் வயசாகும், தோல் சுருங்கும், எனெர்ஜி குறையும்.தோற்றப் பொலிவு குறைஞ்சதுன்னா செயற்கை வழில சரி பண்ணுவோம்”

“நானும் படிச்சிருக்கேன். பிளாஸ்டிக் சர்ஜெரி, மருந்து மாத்திரைன்னு எடுத்துக்குறவங்களும் இருக்காங்கல்ல. அவங்க உடம்பு என்னாகும்?”

“பின்விளைவுகள் கண்டிப்பா இருக்கும். அதை தெரிஞ்சுட்டுத்தான் ரிஸ்க் எடுக்குறாங்க. அழகும், புகழும் ஒரு போதைம்மா. பலருக்கு அது பழகினதுக்கு அப்பறம் விட முடியாது. அதுக்காக அவங்க என்ன வேணும்னாலும் செய்யத் தயார்”

“உங்களுக்கு எப்படி அதின்?” வெண்ணிலா அவர்கள் வேலை செய்யும் சமயத்தில் மனதில் உருத்திய கேள்வியைக் கேட்டுவிட

“நாளைக்கே கூட மித்துவை அறிமுகப்படுத்திடுவேன். ஆனால் அதுக்கு அடுத்து வரும் கேள்வி அவ அம்மா யார்?”

“அது அவ்வளவு கடினமான கேள்வியா? அவங்கம்மா புகழ் வெளிச்சம் தன் மேல படக்கூடாதுன்னு கவலைப்படுறாங்களா?”

விரக்தியாய் சிரித்தவன் “புகழ் வெளிச்சம் மறைஞ்சிடக் கூடாதுன்னு கவலைப்படுறா. ராட்சசி” என்று பல்லைக் கடித்தான். கைகளை அப்படியே இறுக்கமாக மூடிக் கொண்டு அப்படியே கண்களையும் மூடிக் கொண்டான். மூச்சினை இழுத்து விட்டு தனது மனதைச் சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றான்.  சில நிமிடங்களில் சற்று அவனது கோபம் குறைந்து முகத்தில் தெரிந்த கோப ரேகைகள் தணிந்தன.

 

என்னவோ அவனது கோபம் வெண்ணிலாவை வருத்தியது. “மித்துவுக்காக நீங்க உங்களது பிடிவாதத்தைத் தள்ளி வைக்கலாமே அதின்”

“ப்ளீஸ் இதைப் பத்திப் பேசாதே வெண்ணிலா” என்ற அதினனின் குரலில் ஒரு ஒதுக்கம். ஜன்னலின் வழியே வெறித்தான்.

மேலும் சில நிமிடங்கள் வருடங்கள் போலக் கழிந்தன.

 

வட்டக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ

கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க

கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத

அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

 

என்று அவன் முணுமுணுத்த பாடலில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்.

“அதின்… “ வெண்ணிலாவின் முகத்தில் கவலை ரேகைகள்.

“அம்மா அப்படின்னு சொல்றது இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு வெறும் சொல்தான். உன் மீனுக்குட்டியை வச்சு அம்மாவை கிளோரிஃபை பண்ணிருக்க நிலா. அதுக்குத் தகுதியான பொண்ணு ஒண்ணு கூட உன்னால காட்ட முடியாது. உன்னோட கதையில் வரும் முரணை நீ சரி செஞ்சே ஆகணும்” சற்று நேரத்துக்கு முன்பு பார்த்த அதினன் கனவோ என்று எண்ணும்படி அவனது முகமே ரத்தமென சிவந்திருந்தது.

இந்த சூழ்நிலையில் அவனை எதிர்த்துப் பேச முடியுமா?

“சரி சொல்லுங்க அதின்… மீனுக்குட்டி எப்படி இருந்திருக்கணும்”

“நீ காமிச்சிருக்குறதுலேயே ஏகப்பட்ட முரண். மீனுக்குட்டி பயங்கர துருதுருப்பா இருக்கா… ஆனால் அந்த பொண்ணு எப்படி ஒருத்தன் சொன்ன பொய்யை நம்புறா?”

“பயங்கர துருதுருப்பா இருப்பான்னு சொல்லி இருக்கேனே தவிர. அவ பயங்கர அறிவாளின்னு சொல்லலையே”

“குழப்பாதே… வீட்டில் அக்கா கல்யாணத்துக்கு என்ன நகை வாங்குறதுன்னு யோசனை சொல்லுறா? போஸ்ட் ஆபீஸ்ல மாதா மாதம் பணத்தை சேமிக்கிறா… ஆனால் எவனோ ஒருத்தன் காதல்ன்னு சொன்னதும் எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்குறா?”

“அஞ்சலக சிறு சேமிப்பு பத்தி பள்ளியிலும் கல்லூரியிலும் மாணவி கிட்ட சொல்றதை வச்சுத்தான் மீனுவும் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கிறா. நகை வாங்குறதும் அப்படித்தான். நாலு விளம்பரத்தைப் பார்த்தாலோ, நாலு பேரு கிட்ட கேட்டாலோ அவங்களுக்கு ஓரளவு விவரம் தெரியும்.

ஆனால் இத்தனையும் சொல்லித் தர இந்த சமுதாயம் வயசில் ஏற்படுற சலனத்தைப் பத்தியும் அதை எதிர்கொள்ளும் விதம் பத்தியும் சொல்லியே தர்றதில்லையே. இப்பத்தானே சில வருடங்களா பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அவசியம்னு வெளிப்படையே பேச ஆரம்பிச்சிருக்கோம்.”

“சரி அவ கோழைன்னு வச்சுக்கலாம். அப்படி கோழையா பயந்த பொண்ணா இருக்குற மீனுக்குட்டி எப்படி காதல் கல்யாணம் செஞ்சுக்குறா?”

“கோழைக்கு காதல் வராது இதுதான் உங்க கருத்தா?”

“கோழைக்கு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கும் தைரியம் வராது”

“சரி, மீனு கோழையில்லைன்னு வச்சுக்கலாம்”

“மீனு கோழை மாதிரி நடிக்கிறான்னு வச்சுக்கலாம்”

“எதுக்கு நடிக்கணும்?”

“ஆண்களைக் கவரும் வழி. நீதான் எனக்கு எல்லாம்னு அவனை நம்ப வைக்கிறது. என்னை மாதிரி ஆண்களுக்கு ஸ்கிரீன் முன்னாடி மட்டும்தான் நடிக்க வரும். ஆனால் பல பெண்களுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் நடிக்க முடியும். குடும்பத்தில் கூட”

ஓ இவன் இவனது கசப்பான வாழ்க்கையை ஏற்படுத்திய பெண்ணின் குணாதிசயங்களை மீனுக்குட்டியோடு பொருத்திப் பார்க்க முயல்கிறான். ஜிக்சா புதிரின் பொருந்தாத துண்டு போல தனியாக இருக்கும் அதனை வலுக்கட்டாயமாகப் பொருத்துவது வீண் முயற்சி. ஆனால் இதை யார் சொன்னாலும் இவன் கேட்பதாகத் தெரியவில்லையே.

“அதின் உங்க எண்ணம் சரியாவே இருக்கலாம். இந்தக் கதை மீனுக்குட்டியின் கதை. இதுதான் அவளோட இயல்பு. நீங்க அவளோட அடிப்படையான குணங்களையே மாற்ற சொல்றீங்க. அப்ப கதை எப்படி இந்த திசையில் பயணிக்கும்? என்கிட்ட மிளகாய்தூளைத் தந்து எப்படியாவது ஸ்வீட் செய்யச் சொல்ற மாதிரி இருக்கு”

அதினனின் முகத்தில் சிந்தனை ரேகை. “நான் கொஞ்சம் யோசிக்கணும் நிலா. நாளைக்குத் தொடரலாம்”

 

வீட்டிற்கு வந்த வெண்ணிலா காய வைத்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தாள்.

“அப்பாடி உன் கூட உக்காந்து பேசி எத்தனை நாளாச்சு. இப்பல்லாம் நீ ரொம்ப பிசியாயிட்ட புள்ள, ஏய் நிலா கண்ணு கலங்கிருக்கு. அழுகுறியா என்ன? ”

“ஒண்ணும் இல்ல பொண்ணு… “

“என்னடி ஆச்சு. அதினன் எதுவும் சொன்னாரா?”

“மீனுக்குட்டி கதையை அப்படியே மாத்தி எழுதச் சொல்றாருடி. அவளை… “ திக்கித் திணறி சொல்லி முடித்தாள்.

”மீனுக்குட்டி தைரியசாலிதான். ஆனால் அந்த தைரியம் எதுவரைக்கும் பொன்னு. குடும்ப மானம்னு வரும்போது தைரியம் எல்லாம் ஓடி ஒளிஞ்சுக்கும்னு ஒரு நடிகனுக்கு எப்படி புரியும்?”

“பணத்தை திருப்பிக் கொடுத்துடலாமா?”

“அவரு மனசு கஷ்டப்படுமே. ஏற்கனவே ஏதோ பெரிய சோகத்தில் இருக்கார்”

“வேண்டாண்டி ஆறு வருசத்துக்கு முன்னாடி இப்படித்தான் பரிதாபப்பட்டு இப்ப நடுதெருவில் நிக்கிற. இனிமே இழக்க உன்கிட்ட மானம் மரியாதை மட்டும்தான் இருக்கு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’

அத்தியாயம் – 20   “என்னடி ஓடுகாலி, அடிக்கடி வெளியூருக்குப் போயிட்டு வர்றியாம், விதவிதமா புடவை கட்டிக்கிறியாம். எவனேவனோ வீட்டுக்கு வேற வரானாம்? ஊருக்கு வெளிய வீட்டை வச்சுக்கிட்டு பிராத்தல் பண்ணிட்டு இருக்கியா?” சட்டை பட்டன் பிய்ந்து சட்டை கழண்டிருப்பது கூடத்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_17’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_17’

அத்தியாயம் – 17   “மலை வீட்டுல யாரோ குடிவரப் போறாங்களாம். சுத்தம் பண்ணி வெள்ளையடிச்சுட்டு இருக்காங்க” பாக்யநாதன் ஒரு தகவலாய் சொல்லிவிட்டுப் போனபோது கூட அந்த அளவுக்கு முக்கியத்துவம் தரவில்லை வெண்ணிலா. குளிர் காலமாதலால் அவளுக்கு டூரிஸ்ட் வரத்து இல்லை.

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’

அத்தியாயம் – 24   இது நிஜமா? ஒரு தாயால் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? பெற்ற குழந்தையே கொல்லத் துணியுமா மனம்? பெறாத பிள்ளைகளுக்கு  அன்னையாக வாழ்பவளின் மனதிற்கு  லஸ்யாவின் விஷகுணம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத