Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_17’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_17’

அத்தியாயம் – 17

 

“மலை வீட்டுல யாரோ குடிவரப் போறாங்களாம். சுத்தம் பண்ணி வெள்ளையடிச்சுட்டு இருக்காங்க” பாக்யநாதன் ஒரு தகவலாய் சொல்லிவிட்டுப் போனபோது கூட அந்த அளவுக்கு முக்கியத்துவம் தரவில்லை வெண்ணிலா.

குளிர் காலமாதலால் அவளுக்கு டூரிஸ்ட் வரத்து இல்லை. இந்த சீசனுக்கு செய்கிற வேலை மாதிரி இல்லாமல் நல்ல தொழிலாகப் பார்க்க வேண்டும்.

“ச்சே அந்த வீணாப் போனவன் மட்டும் எங்க வீட்டில் உக்காந்துகிட்டு எங்களைத் துரத்தலைன்னா, அப்பாவோட வருமானம் மட்டும் போதுமே. இப்ப, கோர்ட்டு எவ்வளவு உழைப்பைக் கொட்டினாலும் வாங்கிட்டு இன்னும் கொண்டாங்குது. அது எப்படி ஒண்ணுக்கு ரெண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டு, பொண்டாட்டியை வீட்டை விட்டுத் துரத்திட்டு வப்பாட்டியோட உக்கார்ந்துக்க முடியுது?”

அவளது இளமைப் பருவம் மதுரையில் படித்த பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும், தாயற்ற குழந்தைகளை அந்தக் குறையே தெரியாமல் வளர்த்த பாக்யநாதனின் பாதுகாப்பிலும், அப்பத்தாவின் அன்பிலும் கழிந்தது.

“அப்பா இங்கிலீஷ் எனக்குப் பிடிக்கல, கணக்கு வரல, நான் தமிழ் லிட்ரேச்சர் எடுத்துக்குறேன்பா… அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்று சொன்னதும் பாக்யநாதன் சம்மதம் தந்துவிட்டார்.

“மனசுக்குப் பட்டதை செஞ்சுட்டு அடுத்தடுத்து போய்ட்டே இருக்கணும் கண்ணு” என்பதுதான் அவரது கொள்கை. அதுதான் வெண்ணிலா விஷயத்தில் வினையாகப் போய்விட்டது.

தினமும் கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்வதும், விடுமுறைக் காலங்களில் சினிப்ரியா மினிப்ரியாவில் பார்த்த திரைப்படங்களும், ருசிப்ரியாவின் திம்பண்டங்களும் வசந்தகாலம்.

அந்த வசந்தகாலம் நீண்ட காலத்திருக்குத் தொடர்ந்திருக்கும் வெண்ணிலா மட்டும் தன்னை தினமும் தொடர்ந்து மனதைக் கரைத்த பாபுவை நம்பாமல் இருந்திருந்தால், பாபுவுடன் வீட்டிற்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் என்ற துர்சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால்.

பாக்யநாதனின் அறிவுரையான மனதிற்குப் பட்டதை செய்வது என்பதை அப்போது நியாயம் என்று காரணம் கற்பித்துக் கொண்டாள். ஆனால் அவள் செய்த அத்தனையும் மன்னித்து, மறந்து மகள் என்ற ஒரே காரணத்திற்காக அவளுக்குத் துணை நிற்கும் தகப்பனுக்கு அவள் அளித்தது என்ன? ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அவரது வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு அவர் என்றோ வாங்கிய காட்டில் தலைக்கு மேல் ஒரு கூரை ஒன்றைப் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

“அம்மா எத்தினி தடவ இதுக்குப் பொருள் விளக்கம் கேக்குறது. நாளைக்கு டீச்சர்ட்ட தரணும்” ரதி கத்த, மனதை மாற்றிக் கொண்டு அந்தப் பாடலை இன்னொரு முறை கவனமாகக் கேட்டுக் கொண்டு பொருள் சொன்னாள்.

“உன்னையும் என்னையும் பிரிக்கின்ற சக்தி இந்த உலகத்தில் யாருக்கும் இல்லையடி உன்னைப் பெற்ற தாய் யார் என்று எனக்குத் தெரியாது. தந்தை யார் என்று தெரியாது? உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் உறவு முறை என்று தெரியாது ஆனால் செம்மண் நிலத்தில் பொழிந்த மழை நீரானது அந்த நிலத்தின் தன்மையை ஏற்றுக் கொள்கிறது. பின்னர் யாராலும் அதைப் பிரிக்க இயலாது; அது போல் நமக்கும் பிரிவு என்றுமில்லை.

 

அதுதான் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவேன்னு சொல்வாங்க”

ஞே என்று விழித்தாள் ரதி. “செம்மண்ல மழை பெய்யுதுன்னு சொல்றாரா? சிவப்பு மழையாம்மா? அன்னைக்கு டிவில வந்ததே” என்று ரதி சந்தேகம் கேட்க தலையில் அடித்துக் கொண்டாள் வெண்ணிலா.

“ஆமாம் மழை பெய்யுது எல்லாரும் குடையை எடுத்துக்கோங்கான்னு சொல்றார். பேசாம நான் சொன்னதை எழுது” என்று எரிச்சலாய் சொல்ல

ஹா… ஹா… ஹா… என்று பயங்கரமான சிரிப்புச் சத்தம் வெளியே.

“என்ன எழுத்தாளரே, நீங்க அனுபவிச்சு சொன்னதை ரதி பொடிப் பொடியா ஒரே செகண்ட்ல நொறுக்கிட்டாங்களே” இது அதினனின் குரல் அல்லவா?

“அதினன்… நீங்க எப்படி? என் அட்ரெஸ்? அக்கா தந்தாங்களா?”

அதற்குள் காரிலிருந்து இறங்கிய மித்துவை நோக்கி “மித்துக்கா” என்றபடி ஓடினாள் ரதி.

“நான் வழில ரோட்டோரத்திலேயே அக்காவைப் பாத்துட்டேன். என்னை காரில் ஏறிக்க சொல்லிட்டு அங்கிள் நடந்தே குறுக்கால புகுந்து வீட்டுக்கு வந்துட்டார்” என்று வெற்றி பதில் சொன்னான்.

வெண்ணிலாவின் கேள்விகள் பெரும்பாலானவற்றிற்கு பதில் கிடைத்துவிட்டது.

“வாவ், வாவ், வாவ்… இதே இடம்தான்… எத்தனை வருஷமாச்சு” என்றபடி அந்த இடத்தை ரசித்துப் பார்த்தார் செஞ்சடைநாதன்.

“வாங்கம்மா, வாங்கப்பா…. “ என்று வீட்டிற்குள் அழைத்தாள் வெண்ணிலா.

திடீரென்று அவர்கள் அனைவரையும் பார்த்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவளுக்கு.

பாயினை எடுத்து ஒரு பக்கம் விரித்தவள், மறுபக்கம் மடக்கு நாற்காலிகளையும் பிளாஸ்டிக் நாற்காலிகளையும் எடுத்துப் போட்டாள்.

“விடும்மா, தரைலயே உக்காந்துக்குறோம்” என்று சொல்லிவிட்டு பெரியவர் அமர, மற்றவர்களும் அந்த எளிமையான வீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.

“இந்த இடமெல்லாம் எனக்கு ரொம்ப பழக்கமானது போல இருக்கும்மா. இதுதான் உங்க சொந்த ஊரா”

“மதுரைலதான் இருந்தோம். இப்ப கொஞ்ச காலமா இங்க இருக்கோம்ப்பா”

“இங்க பக்கத்தில் ஒரு சிவன் கோவில் இருக்குல்ல”

“ஆமாம், ஒரு அருமையான சுனை கூட இருக்கு”

“தெரியும் மா லகுலீசர். அந்தக் காலத்தில் சைவத்தில் பல பிரிவு இருந்தது. இவர் பாசுபத சைவம்ன்னு ஒரு பிரிவை கொண்டுவந்தார். வேத காலத்துக்கு முன்னாடின்னு கூட சொல்லுவாங்க. நான் மதுரைல தியாகராஜாலதான் வரலாறு படிச்சேன். அந்த சமயத்தில் மதுரையை சுத்தித் திருஞ்சிருக்கேன். எனக்கு ஹெல்ப்பா ஒரு சின்னப் பையன். அவனும் நானும் சைக்கிளை மிதிச்சுட்டு திருப்பரங்குன்றம், நாகமலை, இதோ இந்த அரிட்டாப்பட்டின்னு போகாத இடமில்லை. அவன் பேரு கூட..” செஞ்சடைநாதர் இழுக்க

“பாக்யநாதனா?” என்றார் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பாக்யநாதன்.

“ஆமாம், நீங்க?” என்றார் பெரியவர்.

“செஞ்சடைநாதன் சார் என்னை மறந்துட்டீங்களா.. எனக்கும் தலையெல்லாம் வெள்ளியாயிடுச்சே”

“அட பாக்யா! இது உன் வீடா?” வியப்போடு கேட்டார்.

“ஆமா சார். என் பொண்ணுதான் வெண்ணிலா”

“அட நெருங்கிட்டோம். என் மகன்தான் அதினன்”

“அதினனை இன்னும் நினைவு வச்சிருக்கிங்களா?” வியப்போடு கேட்டார் பாக்யநாதன்.

“அது யாருப்பா எனக்குத் தெரியாத இன்னொரு அதினன்?” என்று அதினும் கேட்க

“சங்ககால மன்னன் ஒருத்தனோட பேரு அதினன். இந்த அரிட்டாப்பட்டி கல்வெட்டில் படிச்சதிலிருந்து அவனைப் பத்தித் தெரிஞ்சுக்க ஒவ்வொரு லைப்ரரியா அலைஞ்சேன். செய்திகள் எதுவும் பெருசா அவனைப் பத்திக் கிடைக்கல ஆனால் என் மகனுக்கு அருமையான பேரு கிடைச்சது” என்றார்.

“நான் கூட அதினன் பேரைக் கேட்டு ஆச்சிரியப்பட்டேனே தவிர உங்க மகனா இருக்கும்னு நினைச்சுக் கூடப் பாக்கல”

இருவரும் பழைய கதைகளைப் பேச, ரூபவதி இடையில் கலந்து கொள்ள அங்கு அழகான சூழ்நிலை நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’

அத்தியாயம் – 12   நாட்கள் வேகமாய் உருண்டோடி மாதங்களாகியது. ஆனால் அதினனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. “விட்டுத் தொலை போ” என்று சுலபமாக சொல்லிவிட்டான் கார்மேகம். ஆனால் கை நீட்டி காசு வாங்கிவிட்டு வேலை செய்யாமலிருப்பது வெண்ணிலாவின் மனதை உறுத்தியது.

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’

அத்தியாயம் – 19 அதினன் வீட்டை சுத்தம் செய்து குடி வந்து ஒரு மாதமாகப் போகிறது. தினமும் காலை எழுந்து குளித்து பத்து மணிக்கு ரெடியாகி விடுவான். அதற்குள் வெண்ணிலாவும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’

அத்தியாயம் – 1   சிட்டுக்குருவிகள் கதிரவன் வரும் வேளையை உணர்ந்து முத்தம் கொடுத்து தங்களது இணைகளையும் குஞ்சுகளையும் எழுப்பி விட்டன. “கீச் கீச்” என்று அந்த ஆலமரமெங்கும் குருவிகளின் நலவிசாரிப்புக் குரல்கள்தான். அவையே அலாரம் போல செயல்பட்டு ஆடு மாடுகள்