Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_15’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_15’

அத்தியாயம் – 15

“அம்மா படிக்க வாங்க” அவள் பிள்ளைகளைச் சொன்னது போய் இன்று பிள்ளைகள் அவளை அதட்டலாக அழைத்தனர்.

சென்னையில் அதினன் வீட்டை விட்டுக் கிளம்பும்போது பெரிய பைல்கள் நாலைந்தை எடுத்து வைத்தான்.

“குட்டீஸ் நீங்க ரெண்டு பேரும் ஹோம் வொர்க் செய்யும்போது  அம்மாவை இந்த நோட்டு புல்லா படிக்க வைக்கிறிங்க, என்ன?”

“சரி அங்கிள்”

வீட்டிற்கு வந்ததிலிருந்து தொடங்கியதுதான் இது. தினமும் மாலை படிக்கும்போது அவளையும் அமர்ந்து படிக்கச் சொல்கிறார்கள். அதினன் பலே ஆள்தான். நேரமில்லை என்று வெண்ணிலா சாக்கு போக்கு சொல்ல முடியாதவாறு ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறான்.

வீட்டில் ஒரு மூலையில் குவித்து வைக்கப் பட்டிருந்த ஃபைல்களைப்  பார்த்து மலைத்துதான் போனாள் வெண்ணிலா. அவளது கதைகள்  அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேயப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக அலசி இருந்தார்கள். எங்கெங்கு இடைவெளிகள், எங்கெங்கு விளக்கங்கள் தவறுகின்றன என்று முத்து முத்தான கையெழுத்தால் சிவப்பு நிற மையால் எழுதி இருந்தார்கள்.

நான் எழுதிய கதைகளை மறுமுறை படித்துப் பார்க்கவே இப்படி அலுப்பாக உணர்கிறேனே. இதனை ஒவ்வொரு வரியாகப் படித்து குறிப்புகள் எழுதிய அந்த கதைக்குழு எப்படி உழைத்திருக்க வேண்டும். அதுவும் இவளுடையதைப் போல இன்னும் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் கதைகளாம். அடேயப்பா! சினிமா ராட்சச உழைப்பைக் கேட்கும் போலும்.

இவ்வளவு உழைப்பையும் வாங்கிக் கொண்டு சில மின்மினிகளை நட்சத்திரங்களாகவும், தாரகையாகவும் மின்ன வைக்கிறது. உழைப்பும் ஈடுபாடும் குறையும்பொழுது மீண்டும் மின்மினியாக்கி மறைந்து போகச் செய்கிறது. தனது கதைகளில் ஒன்றை எடுத்து அதில் ஆழ்ந்து போனாள் வெண்ணிலா.

அதில் எழுதி இருந்த குறிப்புக்களைப் படித்தவள் அவளுக்கு சரி என்று பட்டதை குறித்துக் கொண்டாள். இல்லை என்று பட்டதிற்கு விளக்கத்தை எழுதினாள். அனைத்தையும் ஒரே நாளில் முடிக்க முடியாது என்பதால் ஒவ்வொரு கதையாகப் படிக்கலாம் என்று முடிவு செய்தாள். எனினும் ஒவ்வொரு கதையையும் அலசுவதற்கு ஒரு வாரமாவது பிடிக்கும் என்பது அவளது கணக்கீடு.

நல்லவேளை தேவை இல்லாத டூயட், வசனம் என்றெல்லாம் சேர்த்து கதையைக் கெடுக்காமல் கண்ணியமாகவே திரைக்கதை முயற்சி இருந்தது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.

 

சில நாட்களுக்குப் பிறகு அவள் எதிர்பாராத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.

“அதினன் நீங்களா?”

“ஆமாம் வெண்ணிலா. கதை குறிப்பெல்லாம் படிச்சிங்களா?”

“இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன் அதினன். ஒரு குழுவே உக்கார்ந்து அலசிருப்பிங்க போல இருக்கே”

“தொழில் இல்லையா… குறுகிய நேரத்தில் செய்றதுதானே எனக்கு லாபம்”

“உண்மைதான். நானும் ஒரு கதையை எடுத்து வச்சு ஆழ்ந்து படிச்சுட்டு இருக்கேன். விளக்கங்களை எழுதுறதுக்கே ஒரு வாரம் ஆகும் போலிருக்கு. கதை வசனம் வேற இன்னும் எழுதணும். எனக்கு எத்தனை நாளாகும்னு தெரியல”

“ம்ம்ம்… ஒண்ணு செய்யலாம். நீங்க சென்னைக்கு வார இறுதி நாளில் வர முடியுமா?”

“கஷ்டம்… “ தனது உணவு தொழிலைப் பற்றி சொன்னாள்.

“அதை கொஞ்ச நாளுக்கு நிறுத்த முடியாதா?”

“அதினன், கதை மட்டும் எழுதி என்னால அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியுமா? இத்தனை நாள் எங்களை காப்பாத்தினது இந்த உணவுத் தொழிலும், ஆடு மாடு வளர்ப்பும்தான். கதைக்கு லட்சக்கணக்கா உங்க கிட்டேருந்து பணம் வாங்கினது கூட எனக்கு இன்னும் நம்ப முடியாத விஷயம்தான். என்னைக் காப்பாத்தின தொழிலை என்னால நிறுத்த முடியாது. வேணும்னா கதையை மட்டும் உங்களுக்குத் தரேன்”

“உனக்கு பிடிவாதம் அதிகம் போலிருக்கே”

“உங்களுக்கும் நானே எழுதணும்னு என்ன பிடிவாதம்”

“அதை நீ போகப் போகப் புரிஞ்சுக்குவ. நான் எப்படியாவது உன்னை எழுத வைப்பேன். எந்த நேரமும் வேலை செய்யத் தயாரா இரு”

அவன் அழுத்தி சொன்னதின் காரணம் சில நாட்களில் விளங்கிற்று வெண்ணிலாவுக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’

அத்தியாயம் – 6   வளசரவாக்கத்தின் பிரதான சாலையிலே இருந்த அந்த நான்கு மாடி அலுவலகம் முழுவதும் கிரானைட் கற்களால் பளபளத்தது. அந்தக் கட்டடத்தின் வாயிலில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளர் தெரிந்தவர்களை மட்டுமே உள்ளே அடி எடுத்து வைக்க விட்டார். அங்கு வருபவர்கள்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’

அத்தியாயம் – 3 டீ குடித்து முடித்த கையோடு “கார்மேகம் பத்து நிமிசத்தில் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன். டூரிஸ்ட் எல்லாம் கோவிலுக்கு போறவங்கல்ல, நாமளும் அதுக்குத் தக்கன குளிச்சுட்டு சுத்த பத்தமா சமைக்கலாம். நீ குளிச்சுட்டியா?” “நீ இப்படி சொல்லுவேன்னு

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_14’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_14’

அத்தியாயம் – 14   மாலை புதிதாக வாங்கிய மாம்பழ நிற காட்டன் சேலையை மடிப்பு கலையாமல் நேர்த்தியாகக் கட்டிக் கொண்டு, குழந்தைகளுக்கு நல்ல ஆடைகளை அணிவித்தாள். உலகம்மை வீட்டிற்கு சென்றபோதே அவருக்கென வாங்கி வந்திருந்த பரிசுகளைத் தந்திருந்தாள். அவளது அன்பளிப்பான