அத்தியாயம் – 13
தங்கரதிக்கும், வெற்றிவேலுக்கும் அரைப்பரீட்சை ஆரம்பித்திருந்த சமயம்தான் உலகம்மை மறுபடியும் வெண்ணிலாவை அழைத்தார்.
“அதினன் படம் ஆரம்பிக்கத் தயாராயிட்டான். காண்ட்ராக்ட் காப்பி ஒண்ணை அண்ணனுக்கு அனுப்பிருக்கான். அண்ணனும் அதை நம்ம வக்கீல்கிட்ட காமிச்சு ஓகே பண்ணிட்டாங்க. உனக்கு ஒரு காப்பி அனுப்பிருக்கேன். நல்லா படிச்சுப் பாத்து, வீட்டில் கலந்து ஆலோசிச்சுட்டு உன்னோட விருப்பத்தை சொல்லு. உனக்கு சம்மதம்னா இந்த மாசக் கடைசியில் அக்ரிமெண்ட் போட்டுடலாம்”
அக்ரிமெண்ட் போட சென்னை செல்ல முடிவு செய்தபொழுது அரையாண்டு லீவு ஆரம்பமாகியிருந்தது. நானும் வருகிறேன் என்று குழந்தைகள் அடம் பிடிக்க, அவர்களையும் அழைத்து வா என்று உலகம்மையும் அழுத்தம் கொடுத்தார்.
“சைன் போடுற அன்னைக்கு அதினன் வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கான். எல்லாருக்கும் மத்தியானம் அவன் வீட்டில் விருந்தாம். இனிமேல் அடிக்கடி அவனை சந்திக்க வேண்டி இருக்கும். நீ வேற சின்னபொண்ணா இருக்க, ரெண்டு குழந்தைகளுக்கு அம்மான்னு தெரிஞ்சா மரியாதையா நடத்துவாங்க”
“சரிக்கா, அப்ப கூட்டிட்டு வரேன்”
ரதியும், வெற்றியும் குதித்துக் கொண்டு கிளம்பினார்கள். அதினனின் வீட்டிற்கு வேறு போக வேண்டி இருக்கும் என்பதால் புதிதாக சில காட்டன் சேலைகளை வாங்கிக் கொண்டாள்.
இந்தக் காட்டன் புடவைகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. மொடமொடப்புடன் இஸ்திரி போட்ட சாதாரண காட்டன் புடவையை மடிப்பு கலையாமல் அழகாக உடுத்தி, சிம்பிளாக ஒரு கையில் ஒரு ஜோடி வளையல்கள், மறுகை மணிக்கட்டில் வாட்ச், காதுகளில் சிறிய தோடுகள், கழுத்தில் மெல்லிய சங்கிலி என்று நின்றாலும் தோற்றத்தில் கம்பீரத்தைக் கூட்டி, எதிரில் நிற்பவர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். ஆண்களுக்கு வெண்ணிற காட்டன் வேஷ்டி சட்டை கூட அப்படித்தான்.
உலகம்மைக்கும் சில புடவைகள் வாங்கினாள். இதுவரைக்கும் அவருக்கு எதுவும் வாங்கித் தந்ததில்லை. அவர் இருக்கும் வசதிக்கு இவளிடம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அவளது அன்பைக் காண்பிக்க ஏதாவது வழி வேண்டுமே… ரதிக்கும் வெற்றிக்கும் அழகான உடைகள்.
டிசம்பர் குளிருக்கு டூரிஸ்ட்கள் வரத்து கம்மிதான் அதனால் இரண்டு நாட்கள் தங்கி மெட்ராஸை சுற்றிப் பார்த்துவிட்டே வா என்று சொல்லி அனுப்பினாள் பொன்னு.
நாமே அடுத்தவர் வீட்டில் தங்கும்போது ஆற அமர அங்கே டேரா போட முடியுமா? வேலைகளை சுருக்க முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் வைகை எக்ஸ்ப்ரஸ் சென்னையில் நின்றதும் உலகம்மை ஸ்டேஷனுக்கே வந்து நின்றது அவளுக்கு முதல் ஆச்சிரியம்.
“உன்னை வீட்டில் தங்க வைக்கலாம்னு சொன்னேன். ஆனால் குழந்தைகளும் கூட வராங்கன்னு தெரிஞ்சதும் அதின் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிட்டாரு” உலகம்மையின் பேச்சில் அதினன் அதினாக சுருங்கிவிட்டிருந்தான். அவன் இவன் மறைந்து அவராகியிருந்தது.
“ஹோட்டலா? தனியா எப்படிக்கா அங்க தங்குறது. ரதிக்கு வேற ரெண்டும் கெட்டான் வயசு”
“எனக்குத் தெரியாதா என்ன? அண்ணனுக்கு நல்லா தெரிஞ்ச விடுதி. நீ வீட்டில் இருக்குற மாதிரி பாதுகாப்பா இருக்கலாம். ரெண்டு தெரு தள்ளித்தான் எங்க வீடு ஒரு குரல் கொடுத்ததும் ஓடி வந்துருவேன்” என்றபடி ரயில் நிலையத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றார். அங்கு கார் ஒன்று ஓட்டுனருடன் நின்றது.
“புது டிரைவராக்கா?”
“இது அதின் நீ மெட்ராஸ்ல இருக்குற வரைக்கும் யூஸ் பண்ணிக்க சொல்லி அனுப்பிருக்கார்”
“அக்கா, இதெல்லாம் ஓவரா இருக்கு. எனக்கு பயமா இருக்குக்கா”
“ஊரில் சொல்ற மாதிரி அவன் கிடையாதும்மா. நான் புரிஞ்சுகிட்ட மாதிரி போகப் போக நீயும் புரிஞ்சுக்குவ” என்றார் உலகம்மை.
கார் பயணத்தில் சாளரம் வழியே வேடிக்கை பார்த்தபடி, “அம்மா இங்க பாரேன், எவ்வளவு பெரிய கட்டடம்? பிரிட்ஜ் பாரேன் எங்க ஆரம்பிக்குது எங்க முடியுதுன்னே தெரியல…” என்று குதித்து சந்தோஷத்தில் மகிழ்ந்த குழந்தைகளின் குதூகலச் சிரிப்பினைக் கண்டு புன்னகைத்துக் கொண்டாள்.
அந்த ஹோட்டல் வரவேற்பறையை கண்களை விரித்துப் பார்த்தார்கள். அதன் பின் அறையினைக் கண்டதும் மயக்கம் வராத குறை. அவளது வீடு கூட அத்தனை வசதி இல்லை. வெண்ணிற படுக்கை விரிப்புகளைக் கொண்ட படுக்கைகள். விதவிதமான டிசைனுடன் கூடிய விளக்குகள். படுத்துக்கொண்டே படிக்க படுக்கைக்கு மேலேயே ஒரு விளக்கு. மேஜைகள், டிவி… ஒவ்வொன்றையும் பிள்ளைகள் அனைவரும் ஆராய்ந்து பார்த்து உற்சாகமாய் அவளிடம் காட்டினார்கள்.
“அம்மா பாத்ரூமைப் பாருங்கம்மா குளியல் தொட்டி எல்லாம் இருக்கு” கத்திய குழந்தைகளை
“சத்தம் போடாதிங்கடா பக்கத்து ரூமில் ஆள் இருக்காங்கள்ள”
“குழந்தைகள் தானே வெண்ணிலா… சரி இங்க மெனு கார்ட் இருக்கு. போனில் இந்த நம்பரை அழைச்சு உனக்கு என்ன சாப்பாடு வேணும்னு சொன்னா அறையில் கொண்டு வந்து தருவாங்க. நல்லா சாப்பிட்டுட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுங்க சாய்ந்தரம் வந்து பாக்குறேன்”
“நீங்க சாப்பிடலையாக்கா?”
“இன்னைக்கு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கும்மா, இப்பக் கிளம்பனும். இல்லைன்னா வீட்டுக்கே சாப்பிடக் கூட்டிட்டுப் போயிருப்பேனே”
“லேட் ஆகப்போகுதுக்கா நீங்க கிளம்புங்க”
வாசல் வரை சென்றவர் அவளிடம் திரும்பி “சாப்பாட்டு பில் ரூம் பில்லோட சேர்த்தி. காசு எதுவும் நீ தந்துடாதே” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இதெல்லாம் எங்கு செல்லுமோ என்ற பயம் வெண்ணிலாவின் மனதில் தோன்றினாலும் இப்போதைக்கு குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதைக் கண்டு ரசிக்க வேண்டியதுதான் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டாள்.
விடுதியின் ஒவ்வொரு ஆச்சிரியங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்த பிள்ளைகளை அழைத்து சாப்பிட வைப்பதற்குள் வெண்ணிலாவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
மாலை உலகம்மை வந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்றார். அதினனின் வீட்டிற்கு இதுவரை யாரையும் அவன் அழைத்ததில்லை. அவர்கள்தான் முதல் நபர் என்று அறிந்ததும் மரியாதை நிமித்தமாக ஏதாவது வாங்கிச் செல்ல எண்ணினாள். பின்னர் உலகம்மையின் உதவியோடு வேலைப்பாடு நிறைந்த அழகான பிள்ளையார் சிலை ஒன்றை வாங்கி கிஃப்ட் பாக் செய்து எடுத்துக் கொண்டாள். இரவு உலகம்மையின் வீட்டில் உணவு.
மறுநாள் காலை பக்கத்திலிருக்கும் கடைத் தெருவில் பிள்ளைகளோடு சுற்றினாள். ஒவ்வொரு முறை பொருள் வாங்கும்போதும் விலை பில்லைப் பார்த்து எடுக்கும் குழந்தைகள் பெற்றோருக்கு ஒரு வரம்தான். இவர்களை எப்படி ஒரு தகப்பனால் ஒதுக்கி, மற்றொரு பெண்ணின் மடியில் சுகம் தேட முடிகிறது? வழக்கம்போல முட்டிக் கொண்டு வந்த எண்ணங்களை புறம் தள்ளினாள்.
“அம்மா இந்த டிரெஸ் எடுத்துக்கட்டா… “கேட்ட ரதிக்கு அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்.
“காசு இருந்தா எனக்கு அந்த ரேஸ் கார் வாங்கித் தறிங்களா” தயக்கத்துடன் கேட்ட வெற்றியிடம்
“உனக்கு இல்லாமலா தங்கம்” என்று சொல்லி கன்னத்தில் ஒரு முத்தத்தோடு அவன் கேட்டதையும் வாங்கிக் கொடுத்தாள்.
Nice post
Thank you
Nice
Thanks KPN