Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_11’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_11’

அத்தியாயம் – 11

 

“அறிவிருக்கா உனக்கு? அவனே ஊர்சுத்தி, பொம்பளைப் பிள்ளைங்களை மயக்கிப்புடுவான்னு சொல்றது சரியாத்தான் இருக்கு… “ கார்மேகம் வெண்ணிலா அதினனிடம் ஒப்புக்கொண்ட செய்தி அறிந்து கத்திக் கொண்டிருந்தான்.

பொன்னு தலையிட்டு கார்மேகத்தைக் கண்டித்தாள் “இதா பாரு, வெண்ணிலா அப்படி சீக்கிரம் மயங்குற பிள்ளையா? அவனை சட்டையே செஞ்சிருக்கமாட்டா… சரிதானே புள்ள?”

“ஏய்… இவ வேற உலக விவரம் புரியாம, மயக்குறதுன்னா அழகுல இல்லை. வெண்ணிலாவுக்கு இப்ப பணத்தேவை இருக்குல்ல, எப்படியோ அதைத் தெரிஞ்சுட்டு லட்சக்கணக்கில் பணம் தரதா ஆசை  காமிச்சு சம்மதிக்க வச்சிருக்கான்”

“நான் பெரிய கிளியோபாட்ரா பாரு, இந்த மலைக்காட்டிலேருந்து என்னைக் கூப்பிட்டு மயக்குறான். அவனோட ஆஃபிசே நம்ம வீட்டை விடப் பெருசு. பிரிட்ஜு, ஏசி, மார்பிள் தரைன்னு எங்க பாத்தாலும் பணம்தான். அப்ப வீடு எப்படி இருக்கும்?

அவன் வீட்டில் ஒரு ரூமு கூரை, சுவரு எல்லாம் கண்ணாடியாம். அதில் உக்காந்து அப்படியே கடலைப் பாக்கலாமாம். அந்தக் கண்ணாடியை துடைக்கவே ஒரு ஆள் போட்டிருக்கானாம். சிவகுரு அண்ணா சொன்னாங்க”

“ஒருவேளை நிஜம்மாவே உன் கதை அவனுக்குப் பிடிச்சிருக்குமோ.எனக்கென்னமோ ஒரே அழுவாச்சிதான் வந்துச்சு. பரணிலிருந்து மறுபடியும் எடுத்து இன்னைக்குப் படிச்சுப் பாக்குறேன்” என்றாள் பொன்னு.

“அப்ப நீ இன்னும் கதையே படிக்கல. நிலா இனிமே இவளுக்கு புஸ்தகம் தராத”

“வீட்டுல  வேதனை தாங்க முடியாமத்தான் படிக்கிறது இல்ல படம் பாக்குறது. கதைலயாவது ஒரு அழகான ஹீரோ ஹீரோயின் வெளிநாடு, மேக்அப்புன்னு பாத்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அங்கேயும் அழுதழுது ஒருத்தி மூக்கை சிந்துனா எனக்கு வேறென்ன வரும். அவனுக்கு ஏன் இந்தக் கதை பிடிச்சது?”

“தெரியல, ஏதோ கைக்கு வந்ததைக் கிறுக்கினேன். அவனுக்கு என்னமோ பிடிச்சுருச்சு”

“பொம்பளப் புள்ள எழுதினா அவனுக்குப் பிடிக்காம இருக்குமா?” கார்மேகத்திற்கு இன்னமும் அதினனின் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை.

“அய்யோ அவனுக்கு புஸ்தகம் இமெயில் பண்ணப்ப அக்கா என் பேரை அடிச்சுட்டுத்தான் அனுப்பினாங்களாம்”

“அப்படியும் எழுதுற பாணியை வச்சே பொண்ணுன்னு கண்டுபிடிச்சிருக்கான் பாரேன், திருட்டுப்பய” என்றான் கார்மேகம்.

“காரு, எழுதுறதை வச்சே ஆம்பளயா பொம்பளையான்னு கண்டுபிடிக்க முடியுமா?” பொன்னுக்கு ஒரே ஆச்சிரியம், மகனை மடியில் தட்டி உறங்க வைத்தபடி கேட்டாள்.

“சொல்லிக்கிறாங்க, பொண்ணுங்க கையெழுத்து முத்து முத்தா இருக்கும். கதை கூட மென்மையா இருக்கும்னு சொல்லுவாங்க” தான் கேள்விப்பட்டதைச் சொன்னான்.

நம்பாமல் சிரித்தாள் வெண்ணிலா “இதெல்லாம் பொதுவா சொல்றது. அழகான கையெழுத்து ஆம்பளைங்களும் இருக்கு, நம்ம பொன்னை விட நம்ம வீட்டு கோழியே நல்லா கிறுக்கும்”

“உண்மைதான் நம்ம பொன்னுக்கும் மென்மைக்கும் என்ன சம்பந்தம்? இப்ப புள்ளையைத் தட்டிக் கொடுக்குறது கூட பாரேன், அன்பா ஆசையா தட்டித் தூங்க வைக்கிற மாதிரியா இருக்கு. தூங்குடா, தூங்குடான்னு முதுகில் ரெண்டு மொத்து மொத்துற மாதிரிதான இருக்கு” என்றான் கார்மேகம்

“காரு உங்க சண்டைல என் மண்டையை ஏன் உருட்டுற?” கடுகடுத்தாள் பொன்னு.

“சண்டையா, நம்ம சண்டையா போட்டோம்?” வெண்ணிலாவைப் பார்த்து ஆச்சிரியமாகக் கேட்டான்.

“அதானே, கொஞ்சம் சத்தமா பேசுனா உடனே சண்டைன்னு சொல்லுவியா… “

“அய்யோடியம்மா நீங்க ரெண்டு பேரும் நடிப்பில் சிவாஜியையே தோக்கடிச்சுருவிங்களே” என்று நொடித்துக் கொண்டாள் பொன்னு.

“சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். கதைப் புத்தகத்தை மட்டும் தந்துட்டு வந்துடு. அவங்க கூட உக்காந்து கதை எழுதுறது எல்லாம் சரிபடாது” உறுதியாக சொன்னான்.

“கை நீட்டி பணம் வாங்கிட்டேனே” தயங்கினாள் வெண்ணிலா.

“திருப்பித் தந்துடலாம்” சுலபமாய் சொல்லிவிட்டான்.

பெருமூச்சு விட்டாள் வெண்ணிலா “அதினன் தந்த காசு மொத்தமும் காலி”

“அம்பதாயிரமுமா?”

“வக்கீல் பீஸு, பள்ளிக்கூடத்துக்கு பீஸு அப்பறம் மேல சமையல் ரூமு பக்கம் மழை பேஞ்சா கொஞ்சம் ஒழுகிட்டு இருந்தது. அதை மராமத்து பண்ணேன். காசெல்லாம் காலி”

மழைக்காலத்துல ஸ்டவ்வை வரவேற்பறையில் ஒரு மூலைல வைத்து சமைத்துக் கொண்டிருந்தாள். இதனால்தானோ?

“பரவால்ல என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு அவனுக்குத் திருப்பித் தந்துடலாம்” என்றான் கார்மேகமும் விடாமல்

“இன்னும் அஞ்சரை லட்சம்… வந்தா நீ சொன்ன மாதிரி ஒரு ஆட்டுப்பண்ணை வைக்கலாம். நிலத்தில் கொஞ்சம் பயிர் போடலாம். எத்தனை நாளு டூரிஸ்ட் வராத நேரம் காசு இல்லாம இருந்திருக்கோம். நம்ம நெனச்சே பாக்காத வாய்ப்பு வருது. பிடிச்சுக்கிட்டு ஏறலாமே”

“இவ்வளவு நாளும் அதே தானே செஞ்சோம். பிரச்சனை இல்லையே”

“ஆனா நம்ம வாழ்க்கையும் அப்படியேதான இருந்தது. கார்மேகம், நீ ஏதாவது இக்கன்னா சொல்லிக்கிட்டு இருக்காதே. இந்த வயசில் முயற்சி செய்யாம வேற எப்ப செய்யப் போறோம். இந்தா புள்ள வெண்ணிலா, நீ பாட்டுக்கு ஆரம்பி. பிரச்சனையா இருந்தா சரிதான் போடான்னு தூக்கிப் போட்டுட்டு வந்துடு. என்னாகுதுன்னு பாத்துடலாம்” என்று கார்மேகத்தின் பயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் பொன்னு.

அவர்கள் இருவரும் இருப்பது மனதிற்கு எவ்வளவோ தைரியம் தந்தது வெண்ணிலாவுக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’

அத்தியாயம் – 7   சிவகுரு மற்ற கம்பனிகளில் சில வேலைகளை முடித்துவிட்டு அதினனின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு வேலை செய்யும் ஒருவன் “சார் மீட்டிங்க்ல இருக்கார். நீங்க வந்த தகவலை சொல்றேன். உக்காருங்க சார். கூல் டிரிங்க்ஸ் கொண்டு வரட்டுமா?”

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’

அத்தியாயம் – 24   இது நிஜமா? ஒரு தாயால் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? பெற்ற குழந்தையே கொல்லத் துணியுமா மனம்? பெறாத பிள்ளைகளுக்கு  அன்னையாக வாழ்பவளின் மனதிற்கு  லஸ்யாவின் விஷகுணம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_8’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_8’

அத்தியாயம் – 8   சில வினாடிகளில் யோசித்து ஒரு முடிவெடுத்தான். “இதுவரைக்கும் யோசிக்கல, பட் இந்த எழுத்தாளர் எப்படி கதையை நகர்த்திட்டு போறாங்கன்னு பாக்கணும். கதை தலைப்பை சொல்லுங்க…” “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” மனைவியிடம் பேசியவர் மின்னஞ்சலில் கதையை