Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_9’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_9’

அத்தியாயம் – 9

 

வெண்ணிலாவுக்கு மனதில் உதறல் எடுத்தது. இந்தத் திட்டத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கவே கூடாதோ? உலகம்மை அக்கா திடுதிப்பென்று ஒரு நாள் அழைத்து டிவி நிறுவனத்தில் உனது கதையைக் கேட்கிறார்கள். நீ என்ன சொல்கிறாய் என்றுதான் கேட்டார்.

“தெரியலைக்கா இது எனக்கு நல்லதா?” என்று மறுகேள்வி கேட்டாள் வெண்ணிலா.

“பணவரவில் உனக்கு நல்லதுதான். ஆனால் இது பத்தின அறிவெல்லாம் எனக்கு இல்லை” என்று சொல்லவும் ரொம்பவும் குழம்பித்தான் போனாள்.

“சரிக்கா, இப்ப வக்கீலுக்குப் பணம் தரணும், பிள்ளைகளுக்கு அடுத்த தவணை பீஸ் கட்டணும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் வந்தா நல்லாருக்கும்”

“அப்ப சரி இன்னும் ரெண்டு நாளில் சென்னைக்குக் கிளம்பி வா… “

“வைகைல கிளம்பி வரேன்கா, ராத்திரி டிரைன் ஏத்தி விட்டுடுறீங்களா”

“ஒரு ரெண்டு நாள் தங்கிட்டுப் போற மாதிரிதான் வாயேன்”

“அய்யோ வெற்றி என்னை விட்டுட்டு இருக்க மாட்டான். கத்தி ஊரைக் கூட்டிடுவான்”

“அவங்களையும் கூட்டிட்டு வாயேன்”

“ஸ்கூல் இருக்கு. ஒரே ஒரு நாள் பொன்னுமணியை பாத்துக்க சொல்லிட்டு வரேன்கா”

இதோ கிளம்பி வந்துவிட்டாள். ஆனால் நிறுவனம் பற்றி தெரியவில்லை. அந்த நிறுவனம் யாருக்கு சொந்தமானது என்று தெரிந்ததும் அவளுக்கு உதறல் விட்டபாடில்லை.

“ஆத்தி… அதினன் கம்பனியா. அக்கா இப்படியே டிரைன் ஏத்தி விட்டுடுங்க நான் ஊருக்குப் போறேன்”

“அதென்ன ஆத்தி அதினன்” என்று அவனுக்கு வக்காலத்து வாங்கினார் சிவகுரு.

“இல்ல, பத்திரிக்கைல அவுகளைப் பத்தி நிறையா படிச்சிருக்கேன். கூட நடிக்கிற நடிகையை அடிச்சு, அந்தப் பொண்ணு கன்னத்துல அப்படியே சிவப்பா கை பதிஞ்சிருந்தது. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே டிவில பேட்டி தந்ததே”

“ஏம்மா அது அடிக்கிற சீன், கையைக் கிட்டக்க கொண்டு போற சமயத்தில் அந்தப் பொண்ணு முகத்தை சரியா திருப்பிருக்கணும், டைமிங் மிஸ் ஆனதில் அறை கன்னத்தில் விழுந்துடுச்சு. அதுதான் நிஜம்”

“இருந்தாலும் அவரு ஏதோ உள்நோக்கத்தோடதான் அறைஞ்சிருக்கார். அந்தப் பொன்னை லவ் பண்ணாறாமே, அது மாட்டேன்னு சொல்லவும் இதை சான்சா வச்சு செமையா அடிச்சுட்டார்னு போட்டிருக்கு”

“கடவுளே, இதை எல்லாம் நீங்க இன்னமுமா நம்புறீங்க? எனக்குத் தெரிஞ்சு அவன் ரொம்ப நல்லவன்மா”

“இருந்தாலும் அக்காவையும் துணைக்குக் கூட்டிட்டு போலாம்” என்றாள் மிரண்ட பார்வையுடன்.

“நானும் வரேன். கதை வேணும்னு சொன்னதும் பணம் பத்தி பேசுறோம். எல்லாத்தையும் முடிவெடுத்துட்டு கிளம்புறோம். அப்பறம் அவங்க யாரோ நம்ம யாரோ… சரியா?” பொதுவாக சொன்னார் உலகம்மை

“ரொம்ப சரி” என்றாள் வெண்ணிலா.

“அதின் உங்களுக்குத் தெரிஞ்சவர்தானே பேசாம நம்ம வீட்டுக்கே வரச் சொல்லிடுங்களேன்”

“நோ, இது பிஸினஸ். முதல் சந்திப்பு அவனோட ஆஃபிஸ்லயே இருக்கட்டும்”

கிளம்பும் முன் வெண்ணிலாவிடம் தனது சில்க் காட்டன் சேலையைத் தந்து உடுத்தி வரச் சொன்னார்.

“போற இடம் பெரிய இடம். நம்ம உடைதான் பாதி மரியாதையை வாங்கித் தரும் வெண்ணிலா”

“காட்டன் சேலை எடுத்துட்டு வந்திருக்கேன்கா. அதையே கட்டிக்கிறேனே… “

அடர் நீல நிறத்தில் இரண்டு புறமும் கிரீம் கரை கொண்ட சின்னாளப்பட்டி பாந்தினி காட்டன் புடவையில் வந்து நின்ற வெண்ணிலாவின் பாந்தமான தோற்றத்தால் திருப்தி அடைந்தார் உலகம்மை.

நீல நிறத்தில் கண்ணாடி வளையல்களும் அதே நிறத்தில் காதணி கழுத்தணிகளும் அணிந்திருந்தாள்.

மூவரும் போக்குவரத்துக்கிடையில் மாட்டிக் கொண்டு சற்று தாமதமாகவே வரமுடியும் என்று தகவல் தந்திருந்தனர்.

“அங்க என்னவோ பொதுக்கூட்டம் நடக்குது. நானும் டிராபிக்ல மாட்டிட்டு தான் வந்தேன். நீங்க வாங்க சிவகுரு நான் காத்திருக்கேன்” என்று அவன் பதில் சொன்னது வெண்ணிலாவுக்கு ஆச்சிரியமாக இருந்தது. படத்தின் இயக்குனர் படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்ததால் நாற்காலியை அவர் மேல் தூக்கி எறிந்தான் என்று கேள்விப் பட்டிருக்கிறாள்.

“நான்தான் சொன்னேனே, அவன் வெளிய சொல்ற அளவுக்கு மோசமானவன் இல்லைன்னு” பெண்களிடம் மறுபடியும் அழுத்திச் சொன்னார். உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் முதல் முறையாக வெண்ணிலாவின் மனதில் தோன்றியது.

அவர்கள் அனைவரும் அதினனின் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது வரவேற்பறையில் டி‌வியில் ஓடிய பாட்டின் ஒலியைக் குறைத்துவிட்டு அவனும் கூட சேர்ந்து உருகி உருகிப் பாடிக் கொண்டிருந்தான். மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்த வெண்ணிலாவின் ரசிக மனம் அவனது காந்தக் குரலால் அப்படியே ஈர்க்கப் பட்டது. அப்படியே கண்களை மூடி ரசிக்க ஆரம்பித்தாள்.

 

அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள்தான் ஆனது

கிளியே பசும் பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது

நிலவே பகல் நேரம் போல நெருப்பாகக் காயுது

நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாற்றியே

வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்

 

அவன் பாடலுடன் சேர்ந்து ஒரு மிக மெலிதான கொலுசொலி ஜல் ஜல் தாளம் போட, பாடியபடியே கண்களை மெதுவாகத் திறந்த அதினனின் கண்களில் பட்டதென்னவோ அந்த நீலநிற தேவதைதான்.

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_9’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’

அத்தியாயம் – 4   சில வருடங்களுக்கு முன்னர் வாழ்க்கையின் சூறாவளியால் சின்னாபின்னப்பட்டு திகைத்திருந்தனர் மூவரும். உடல் நிலை சரியில்லாத பெற்றோரை கவனிக்க வேண்டும் என்ற காரணத்தாலேயே உள்ளூரை விட்டு செல்ல விரும்பாததால் சரியான வேலை அமையாத கார்மேகம், பொறுப்பற்ற கணவனால்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_5’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_5’

அத்தியாயம் – 5   காலை முழுவதும் வேலை செய்த களைப்பினால் ஒரு குட்டித் தூக்கம் போட்டாள் வெண்ணிலா. உழைப்பு மன வேதனையைக் குறைத்தது என்னவோ உண்மை. அலைப்பேசி அழைப்பு வர அதில் தெரிந்த உலகம்மை என்ற பெயரைப் பார்த்தவள் முகத்தில்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’

அத்தியாயம் – 21   அவர்களை வற்புற்தி அதினனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் வீட்டில் அதினன், மித்து, அவன் பெற்றோர், வெண்ணிலா, குழந்தைகள், பாக்யநாதன், கார்மேகம், பொன்னுமணி அனைவரும் இருந்தும் ஒரு விரும்பத்தகாத அமைதி நிறைந்திருந்தது. பிள்ளைகளுக்கு உணவைத் தந்து