Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_2’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_2’

அத்தியாயம் – 2

 

நாக்கைக் கடித்துக் கொண்டாள். “நேத்து காலைல கூட நினைவிருந்தது… சாய்ந்தரம் எப்படி மறந்தேன்னு தெரியலையே… ராத்திரி கொண்டைக் கடலையை வேற ஊற வைக்க மறந்துட்டேன்”

“எனக்குத் தெரியும், அதனாலதான் நா ஒரு கிலோ கொண்டக் கடலையை வாங்கி ஊறப்போட்டு எடுத்துட்டு வந்தேன். இந்தா பிடி”

பெரிய தூக்கு வாளியையும், அதன் பின் துணிப் பையையும் கொடுத்தான்.

“இதில் உருளக்கிளங்கு மூணு கிலோ, மூணு கிலோ தக்காளி, மூணு கிலோ வெங்காயம் வாங்கியாந்திருக்கேன். வெரசா சமைச்சுரு… “

குற்ற உணர்ச்சியுடன் “ஒரு போன் போட்டிருக்கலாம்ல… உனக்கு எதுக்கு இந்த ரெட்டை வேலை”

“போன் போட்டுட்டாலும். இந்தக் காட்டுல உடனே சிக்னல் கிடைச்சுடுதாக்கும். பாதி நாளு உன் போன் வேலை செய்யாது… “

“இவரு என்னமோ டவுனுல இருந்து வார மாதிரி… கிடாரிப்பட்டில இருந்துகிட்டு இம்புட்டு சீனைப் போடாதே”

“உன்னோட இந்த அத்துவானக் காட்டுக்கு, கிடாரிப்பட்டி டவுனுதான் புள்ள” என்று கேலி பேசினான்.

“யாருடா எங்க ஊரைக் கிண்டல் பண்ணுறது?” என்றபடி எழுந்து திண்ணைக்கு வந்தார் வெண்ணிலாவின் தந்தை பாக்கியநாதன்.

“நான்தான் மாமா…”

“எங்கூருக்கு என்னடா? தங்கம் விளையுற பூமி”

“உங்க ஊரை நீங்கதான் மெச்சிக்கணும்… ஆடு மாடு, அஞ்சாறு மரம், பத்து இருவது செடியைப் போட்டுட்டு தங்கம் விளையுதாமாம்”

“வீட்டுக்கு அஞ்சாறு ஆடு, அதுக்கு தீவனம் போட அகத்தி, கல்யாண முருங்கை, கொஞ்சம் புல்லு, ஒரு முருங்கை, தண்ணி போற இடத்தில் வாழை, வீட்டுக்கு தேவையான காய்கறி அம்புட்டும் கொல்லைலயே போட்டிருக்கேன். கிளங்கெல்லாம் இங்கேயே விளையுறது. இதுக்கெல்லாம் மேல என்ன வேணும்”

“உங்களுக்கு ஒண்ணும் வேணாம் மாமா… படிக்கிற பிள்ளைக இருக்குற இடத்தில் ஒரு கேபிள் இல்ல, நெட் இல்ல, பாதி நாள் போன் இல்ல… “

“படிக்கிற பிள்ளைங்களுக்கு அதெதுக்கு? புஸ்தகம் பென்சில் போதாது?” எதிர் கேள்வி கேட்டபடியே “வெண்ணிலா ஒரு டீ போடும்மா… “ என்றார்.

தாய் ஆட்டிடம் பாலைப் பருகிய ஆட்டுக்குட்டி வயிறு நிறைந்திருக்கும் என்று உறுதிப் படுத்திக் கொண்டு “இந்தா, பத்து நிமிசத்தில் பால் கறந்து டீ போட்டுடுறேன்”

“அட… காலைல உங்க வூட்ல ஆட்டுப் பால் டீதானே… கொஞ்சம் மெதுவா கிளம்பிருந்தா எங்க ஊருல பால் வாங்கிட்டு வந்திருப்பேன்”

“மாப்ள… ஆட்டுப் பால் டீயக் குடிச்சுப் பாருய்யா”

“சரிதான்… கொஞ்சம் தண்ணியத் தாராளமா ஊத்து”

அதற்குள் கறந்த பாலை சிறு சொம்பில் ஊற்றியவள். “ஒண்ணுக்கு ஒரு பங்கு தண்ணி ஊத்தித்தான் நாங்க குடிக்கிறது. அதே மாதிரி உனக்கும் போட்டுக் கொண்டு வர்றேன்” என்று எழுந்தாள்.

“சரி, சமையலை எப்ப ஆரம்பிக்கப் போற?”

“இதோ உங்களுக்கு டீ போட்டுட்டு தொடங்கீற வேண்டியதுதான். அப்பத்தானே மதியம் நீ சாப்பாட்டைக் கொண்டு போக சரியாயிருக்கும்”

“சரி, நீ டீயப் போடுறதுக்குள்ள நான் அடுப்பை ரெடி பண்ணி வைக்கிறேன்”

“சித்த உக்காரு கார்மேகம்… எல்லாரும் டீயக் குடிச்சுப்போட்டு வேலையை ஆரம்பிக்கலாம். அய்யா கொஞ்ச நேரம் செண்டு பிள்ளைகளை எழுப்பி விட்டு படிக்க வைக்கிறீங்களா” தந்தையிடம் கேட்டாள்.

“நீ வேலையப் பாரும்மா… நான் பிள்ளைகளை கவனிச்சுக்குறேன். வெங்காயம் தக்காளி அரிஞ்சுத் தரட்டுமா”

கார்மேகம் இடையிட்டான் “அதுதான் நான் இருக்கேன்ல, இன்னைக்கு ஒத்தாசைக்கு பொன்னுமணி வேற வாரேன்னு சொல்லிருக்கு”

அங்கே இங்கே மே என்று கத்திக் கொண்டு ஓடிய ஆடுகளைப் பார்த்தவண்ணம் வெண்ணிலா டீ போட்டு கொண்டுவரும் வரைக்கும் ஊர் விசயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

“ஆமா ஆடெல்லாம் நல்ல ஊட்டமா வளந்திருக்கு”

“எல்லாம் நீ சொன்னமாதிரி தீவனம் போட்டேன். நல்லாருக்கு… இந்த வருசம் எடை கூட குறையல… “கார்மேகத்திடம் சொன்னாள்

“அப்பயே சொன்னேன்ல… காரக்குடி பக்கம் ஆடு வளர்ப்புக்கு அரசாங்க உதவியோட கிளாஸ் எடுக்குறாங்கலாம் போயி கலந்துட்டு வரலாம்” அவளை அரசாங்க வகுப்பில் கலந்துக்கொள்ள மீண்டும் வற்புறுத்தினான் கார்மேகம்

அவர்களது பேச்சினை கவனித்த வண்ணம் அமர்ந்திருந்த பாக்யநாதனுக்கு ஒரே வியப்பு

“ஆடு மாடு வளக்கவெல்லாம் ஒரு வகுப்பா… அதெல்லாம் நம்ம ரத்தத்திலேயே ஊறுனதுல்ல… பட்டினத்திலதான் தீப்பெட்டி வீட்டில் ஆடு  வளக்க இடமில்ல. அவங்களால முடியாது. இங்கன என்ன வந்தது? கிராமத்தில வீட்டுக்கு ரெண்டு ஆடு வளர்த்தா தினத்துக்கும் சத்தான ஆட்டுப் பாலு, தோட்டத்துக்கு இயற்கை உரம் எல்லாம் சல்லிசா கிடைக்கும். ஒரு வீட்டில் ஆரம்பிச்சா அதைப் பாத்தே இன்னொருத்தர் கத்துக்குவாங்க”

“மாமா இப்ப சமையலுக்குக் கூட தனி வகுப்பெல்லாம் வந்துடுச்சு. கல்யாணத்துக்கு மின்னாடி பொம்பளப் பிள்ளைக கத்துக்குறாங்க”

தற்போதைய உலக நிலவரத்தை பெரியவரிடம் விளக்கினான் கார்மேகம். டவுன் பக்கம் தேவைக்கு மட்டுமே சென்று வரும் அவருக்கு அந்த செய்தியும் ஆச்சிரியத்தையே தந்தது.

“சமையலுக்கு தனி வகுப்பா? அதப்படி எல்லாருக்கும் பொதுவா சொல்லித்தருவாக? மதியம் சோத்துக்கு எங்காத்தா பச்சை துவரம்பயிறை வேகப் போட்டு, கடஞ்சு தண்ணிக் கொழம்பா வைக்கும். உங்கம்மா கடைல காஞ்ச துவரம்பருப்பு வாங்கி கெட்டி சாம்பாரா வைக்கும்.

இப்படி ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வொரு ருசி, ஒவ்வொரு பக்குவமப்பா… உப்பு, புளி, காரம் எல்லாம் வீட்டுல இருக்குற மக்களுக்குத் தக்கன ஆத்தா சமைக்கும். அதை அப்படியே கவனிச்சு பிள்ளை கத்துக்கும். அது கல்யாணம் பண்ணிப் போற இடத்தில் கொஞ்சம் உப்பு, காரம் கூட்டியோ குறைச்சோ சமாளிச்சுக்கும். இதெல்லாம் ஒண்ணு ரெண்டு நாளில் வாரதில்லை.

நம்மூரு பக்கமெல்லாம் பொம்பளப் பிள்ளைக மட்டுமில்லாம ஆம்பளப் பிள்ளைகளும் கூட மாட ஒத்தாசை செய்வாங்க. சமைக்க மிளகா புடுங்கிட்டு வாறது, கோழிக் குழம்பு வைக்குறப்ப கோழியை வாட்டித் தறது, குளத்தில் மீனைப் பிடிச்சு சுத்தம் பண்ணி கல்லுப்பு மஞ்சதூள் மொளகா தடவி ஊற வைக்கிறது, பிள்ள பொறந்த வீட்டில் பொண்டாட்டிக்கு கருவாட்டுக் கொளம்பு வச்சுத் தறது இப்படி அடுக்கிட்டே போலாம். ஏன் நீ உன் கூட்டாளிங்களோட ஆத்துல மீன் பிடிச்சு சுட்டுத் தின்னதில்ல?”

“ஆமாம் மாமா… அம்மா அப்பா காட்டுல வேலை செஞ்சுட்டு வரப்ப எல்லாரும் சேந்துத் தான் சோறு பொங்குறது. அவரக்காயை கைல பிச்சு வேகப் போட்டு, செடில இருந்து தக்காளியைப் பிழிஞ்சு ரசத்தை வச்சு ஏதோ அவசர அவசரமா சமைப்போம்”

“அம்மா அப்பா படிக்கிற பிள்ளைக்கு இது எதுக்குன்னு ஒதுக்காம ஒவ்வொரு இடத்துக்கும் கூட்டிட்டு போகணும். தான் செய்ற வேலை எல்லாத்திலயும் பயிற்சி தரணும். இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு ஒவ்வொண்ணும் கத்து தர வேண்டியிருக்கு. நெல்லு எந்த மரத்தில் மொளைக்கும்னு கேக்குதுங்க” என்று வருத்தப்பட்டார் பாக்யநாதன்.

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் மாமா… நம்ம வீட்டு விஷயத்துக்கு வருவோம். இந்த ஆடு வளர்ப்பு பயிற்சி அரசாங்கமே  நடத்துறது.

எந்த ஆடு வகை நம்ம தட்பவெப்பத்துக்கு ஆரோக்கியமா மாதிரி வளரும். நோய் தாக்குதல் ஏற்படாம முன்னேற்பாடுகள் செய்றது எப்படி, பசுந்தீவனம் எந்தக் கலவைல வைக்கணும்னு தகவல்கள் சொல்றாங்க.

நம்ம அனுபவ அறிவா கத்துக்கிடுறதை ஏற்கனவே அனுபவ அறிவு இருக்கவங்ககிட்ட கேட்டு படிச்சிக்கிறது. அத்தோட நோய் தொற்று தடுக்க, ஆரோக்கியமா கால்நடைகள் வளரன்னு ஒரு வழிகாட்டி மாதிரி. நமக்கு தோதா இருக்குறதை எடுத்துக்கிடலாம். வேண்டாம்னு தோணுறத விட்டுடலாம். அம்புட்டுத்தான்”

“சரிதாண்டா… தோதா இல்லைன்னா அப்படியே விட்டுறலாம்னு சொல்றியா” அவர் கேட்ட கேள்வி ஆட்டு வளர்ப்பைப் பற்றியது மட்டுமல்ல என்பதை கார்மேகமும் அறிவான்.

“அப்படியேதான்… காலைக் கடிக்கிற செருப்பைக் கட்டிக்கிட்டு அழவா முடியும்“ என்றபடி  எழுந்தான்.

“காலுல கடிக்கிற செருப்பு இல்லடா, அது கால்ல சுத்தின பாம்பு. கொல்ல முடியாது. எப்படியாவது தூரத்துக்குப் பத்தி விட்டுரணும். அப்பத்தான் நிம்மதி”

“எங்கயாவது அடிபட்டே சாகும். அதுதான் விஷப்பாம்புகளோட விதி” என்று அவன் சொன்னது மிகவும் ஆறுதலாகவே இருந்தது பாக்யநாதனுக்கு.

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_2’”

  1. மண் மணக்கும் அடுத்த எபியும் படிச்சிட்டேன். அருமை. இனி ஸ்பீட் எடுக்கும்னு நினைக்கறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’

அத்தியாயம் – 6   வளசரவாக்கத்தின் பிரதான சாலையிலே இருந்த அந்த நான்கு மாடி அலுவலகம் முழுவதும் கிரானைட் கற்களால் பளபளத்தது. அந்தக் கட்டடத்தின் வாயிலில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளர் தெரிந்தவர்களை மட்டுமே உள்ளே அடி எடுத்து வைக்க விட்டார். அங்கு வருபவர்கள்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’

அத்தியாயம் – 21   அவர்களை வற்புற்தி அதினனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் வீட்டில் அதினன், மித்து, அவன் பெற்றோர், வெண்ணிலா, குழந்தைகள், பாக்யநாதன், கார்மேகம், பொன்னுமணி அனைவரும் இருந்தும் ஒரு விரும்பத்தகாத அமைதி நிறைந்திருந்தது. பிள்ளைகளுக்கு உணவைத் தந்து

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’

அத்தியாயம் – 20   “என்னடி ஓடுகாலி, அடிக்கடி வெளியூருக்குப் போயிட்டு வர்றியாம், விதவிதமா புடவை கட்டிக்கிறியாம். எவனேவனோ வீட்டுக்கு வேற வரானாம்? ஊருக்கு வெளிய வீட்டை வச்சுக்கிட்டு பிராத்தல் பண்ணிட்டு இருக்கியா?” சட்டை பட்டன் பிய்ந்து சட்டை கழண்டிருப்பது கூடத்