Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’

அத்தியாயம் – 1

 

சிட்டுக்குருவிகள் கதிரவன் வரும் வேளையை உணர்ந்து முத்தம் கொடுத்து தங்களது இணைகளையும் குஞ்சுகளையும் எழுப்பி விட்டன. “கீச் கீச்” என்று அந்த ஆலமரமெங்கும் குருவிகளின் நலவிசாரிப்புக் குரல்கள்தான். அவையே அலாரம் போல செயல்பட்டு ஆடு மாடுகள் எழும்ப ஆரம்பித்தன. விரைவில் குருவிகளின் பாட்டுக் கச்சேரியுடன் பக்க வாத்தியங்களாய் ஆடுமாடுகளின் “மா… மா… “ , “மே… மே… “ ஓசைகளும் சேர்ந்து கொண்டது.

 

இனிமேல் தூங்க முடியாது… கைகளை சோம்பல் முறித்துக் கொண்டே விழித்தாள் வெண்ணிலா. அவள் மேலே காலைப் போட்டபடி உறங்கிய தங்கரதியையும், வெற்றிவேலையும் மெதுவாக நகர்த்திவிட்டு எழுந்தாள்.

 

வெளியே ஆட்டுக் குட்டிகள் சத்தம் போட்டன. சூரியனுடன் சேர்ந்து அவற்றிற்கும் பசி வந்துவிடுமே? விருட்டென்று எழுத்தவள் வீட்டிற்குப் பின்னிருக்கும் கழிவறைக்குள் புகுந்தாள். அடுத்த சில நிமிடங்களில் தனது வேப்பங்குச்சி பிரஷ் ஒன்றைக் கடித்துப் பல் விளக்கியபடி கொல்லைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

 

வெளியே வந்த வெண்ணிலா பௌர்ணமி நிலவாய் ஒளிர்ந்தாள். தூய்மையான உணவும், மாசு படாத சுற்றுச் சூழலும் அவளுக்கு ஆரோக்கியத்தைப் பரிசாகத் தந்திருந்தது. அந்த ஆரோக்கியமே கட்டோடு ஆடும் குழலாக, கண்ணென்ற மீனாக, செழுமையான உடல்வாகாக அவளைச் செதுக்கி இருந்தது.

வெண்ணிலாவின் வீடு மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் எண்ணி இரண்டு மூன்று டஜன் குடும்பங்களே வசிக்கும் சின்னஞ்சிறு கிராமம். அரிட்டாபட்டிக்கு அருகிலிருக்கும் குன்றுகளுக்கு அவளது கிராமத்திலிருந்து ஒன்றிரண்டு எட்டு நடந்தே சென்றுவிடலாம்.

 

அக்கம் பக்கம் அவ்வளவாக வீடு இல்லாததால் தடைகள் எதுவும் இன்றி, சுத்தமான கலப்படமில்லாத ஆடிக் காற்று அவளது கன்னங்களைத் தட்டியது. இனிமேல் இன்னமும் அதிகமாகக் காத்து அடிக்குமே… பசுந்தீவனத்தை எங்க காய வைக்கிறது? பறந்துடாது? என்ற யோசனையுடன் முதல் நாள் மாலை மரத்திலிருந்து வெட்டி காய வைத்திருந்த கல்யாண முருங்கை இலைகளுடன் சிறிது புற்களையும் கலந்து ஆடுகளுக்குப் போட்டாள்.

 

“வெண்ணிலா பாடத்தை கவனிடி… ஒழுங்காப் படிக்கல, ஆடு மாடுதான் மேய்க்கணும்” என்று ஆங்கில வகுப்பில் அனிதா டீச்சர் சொன்னது என் விஷயத்தில் அப்படியே பலித்துவிட்டதே? வியந்த வண்ணம் கைப்பிடி தவிட்டை எடுத்து நீரில் கலக்கி தூரமாக வைத்தாள்.

 

என்னவோ அந்த கால்நடை வைத்தியர் பசுந்தீவனம் வைத்தால் ஆடு வேகமாக வளர்ச்சி அடையும் என்று சொன்னார் என சில மாதங்களுக்கு முன் கார்மேகம் வந்து சொன்னான். அவன் சொன்னபடியே செய்கிறாள்… பரவாயில்லை… இந்த முறை ஆடுகளின் வளர்ச்சி நன்றாகவே இருக்கிறது.

 

வழக்கமாக வெயில் காலங்களில் ஆட்டுக்கு எடை குறையும். கோடை விடுமுறை  முடிந்து பள்ளி ஆரம்பிக்கும் சமயத்தில்தான் அவளுக்கு பள்ளிக் கட்டணம், பஸ் கட்டணம், சீருடை, புத்தகம், மதிய உணவுக் கட்டணம், மற்ற பயிற்சி வகுப்புக்கான கட்டணங்கள் என்று அனுமார் சாமியின் வாலைப் போல முடிவில்லாத ஒரு அட்டவணை கண் முன் நிற்கும். ஓரளவு உபகாரப் பணம் என்று ஃபீஸில் கொஞ்சம் குறைந்தாலும் பாதிக்கு மேல் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறதே.

என்னதான் அவளும் மாத சீட்டு, சிறுவாடு, சம்பாத்தியம் என்று புரட்டிப் போட்டாலும் பெரிய துண்டு… இல்லை, இல்லை போர்வையே விழும். அப்போதெல்லாம் அவளுக்குக் கை கொடுப்பது ஆடு வளர்ப்புத்தான். இந்த முறையும் கூட அப்படியே…

ஆனால் வழக்கமாக கோடையின் விளைவால் ஆடுகள் எடை குறைவாக சோர்ந்தே இருக்கும். பசுந்தீவனத்தின் ஊட்டத்தால் இந்த முறை ஆரோக்கியமாகவே ஆடுகள் இருந்தது. நல்ல விலைக்கும் போயிற்று.

பிள்ளைகள் இருவருக்கும் பள்ளிக் கட்டணம், பேருந்துக் கட்டணம், புத்தகக் கட்டணம் கட்டிவிட்டாள். சீருடைகள் தைத்துவிட்டாள். இதுக்கெல்லாம் காரணம் கார்மேகம் தான்.

பேயை நினைக்கிறப்ப அதுவே முன்ன வந்து நின்னாப்பில கார்மேகத்தின் சைக்கிள் ஓசை கேட்டது. கிரீஸ் காணாது சத்தம் போட்டு திட்டிக் கொண்டே வந்த அதன் கிரிச் ஒலியில் “பேயை நினைக்கும்போதே முன்னாடி வந்து நிக்கிறியே… “ என்றாள் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே..

கார்மேகமும் சளைக்காமல் “காலைல முளிச்சதும் பிசாசைப் பாக்க வரணும்னு வேண்டுதல்”

“ஹக்கும்…. என்ன இவ்வளவு வெள்ளன இங்கிட்டு”

“ஏய், இன்னைக்கு டூரிஸ்டுக்கு சாப்பாடு செஞ்சுத் தரணும்… மறந்துட்டியா.. “

இந்த உணவை நம்பி ஒரு பேருந்தில் இருக்கும் மக்கள் அனைவரும் வருவார்களே. சொந்தப் பிரச்சனையில் சோறு போடும் தொழிலை எப்படி மறந்தேன்?

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’

அத்தியாயம் – 23   லஸ்யாவின் விரல்கள் மித்துவின் முகத்தை அளந்தன. “வாவ்.. ரொம்ப அழகு நீ. அந்தக் கண்கள் என்னை மாதிரி இருந்தாலும் அதில் இருக்கும் உணர்ச்சிகள் அப்படியே அதின் மாதிரி” “நான் உங்களோட மகள்தானேம்மா” அழகான லஸ்யாவின் முகம்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’

அத்தியாயம் – 10 கண்களை மூடியபடி அவனது பாடலை நேரலையில் ரசித்துக் கொண்டிருக்கும் மாது, அவளது இமைகள் மெதுவாக உயர்ந்து கண்கள் குவளைப் பூக்களைப் போன்று விரிந்தது. அவளது கண்கள் அப்படியே உயர்ந்து அவனது கண்களை சந்தித்தது. “யாரும்மா நீ ஏஞ்சல்?”

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_17’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_17’

அத்தியாயம் – 17   “மலை வீட்டுல யாரோ குடிவரப் போறாங்களாம். சுத்தம் பண்ணி வெள்ளையடிச்சுட்டு இருக்காங்க” பாக்யநாதன் ஒரு தகவலாய் சொல்லிவிட்டுப் போனபோது கூட அந்த அளவுக்கு முக்கியத்துவம் தரவில்லை வெண்ணிலா. குளிர் காலமாதலால் அவளுக்கு டூரிஸ்ட் வரத்து இல்லை.