Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12

 

நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள். 

 

வீட்டுக்குக் கொண்டு சென்றதும் அவனை ஒரு அறையில் படுக்க வைத்து அந்த ஊரின் வைத்தியரும் வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். அவன் காயத்தைச் சுத்தம் செய்து இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த உரிய பச்சிலைகளை அரைத்து அதன் சாற்றை விட்டவர், சில நிமிடங்கள் கழித்து சில மூலிகைகளை அரைத்துப் பூசி கட்டுப் போட்டார். ஈஸ்வரோ முழு மயக்கத்தில் இருந்தான். நாகன்யா அவன் கையைப் பிடித்தபடி அவனருகிலேயே இருந்தாள். 

 

“மன்னிச்சிடு நாகன்யா..”

 

அவன் மயக்கத்தில் ஆழ முன்னர் கூறிய கடைசி வார்த்தைகளே அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. 

 

“காய்ச்சல் இருக்கும். அது கூடி ஜன்னி வராமல் பார்த்துக் கொள்ளுங்கோ..”

 

வைத்தியர் கூறி விட்டுச் சென்று விட்டார். மந்திரவாதிகளிடமிருந்து நாகன்யாவைக் காப்பாற்றும் போது ஈஸ்வருக்குக் காயம் பட்டதாகவே தேவியிடமும் ஊர் மக்களிடமும் கூறப்பட்டது. தன்னுயிரைக் கொடுத்து நாகம்மா உயிரைக் காப்பாற்ற முயன்றவனே அவளுக்கேற்ற மணவாளன் என்று ஊரே மெச்சியது. ஆளாளுக்கு வந்து சுகம் விசாரித்துச் சென்றார்கள். 

 

தேவி தானே விழித்திருந்து பார்த்துக் கொள்வதாகக் கூறினாலும் கூட நாகன்யா அவரைத் தூங்கச் சொல்லி விட்டு இரவிரவாக அவளே அவனுக்கு உடலில் வெப்பம் அதிகமாகமல் ஈரத் துணியால் துடைத்து எடுப்பது, நேரத்துக்கு நேரம் மருந்து புகட்டுவது என்று கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள். 

 

அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தி விட்டு அடுத்த நாள் மதியமளவில் கண் விழித்தான் ஈஸ்வர். அவனையே பார்த்திருந்த நாகன்யாவைக் கண்டதும் அவன் விழிகளில் ஈரக் கசிவு. அதைவிட அவனுக்கு அதிர்ச்சி தந்த விடயம் நாகன்யாவின் கழுத்தைச் சுற்றி வாகாய் தோளில் அமர்ந்திருந்த நாகராஜன் தான்.

 

ஒருபுறம் குற்றவுணர்ச்சியும் மறுபுறம் திகைப்புமாக நாகன்யாவை ஏறிட்டான் ஈஸ்வர்.

 

“உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை ஈஸ்வர். இன்னும் கொஞ்ச நாள்ல இந்தக் காயம் ஆறிடும். இண்டைக்கு மட்டும் படுக்கையில ஓய்வெடுத்திட்டு நாளைக்கே எழும்பி நடக்கலாம்..”

 

“அதில்ல நாகன்யா.. அது வந்து.. எதுக்கு என்னைக் காப்பாற்றினாய்? நான் உன்ர முகத்தில முழிக்கிற தகுதியை இழந்திட்டன்..”

 

“நடந்ததை மறந்திட வேணும் ஈஸ்வர்..”

 

“எப்பிடி மறக்கச் சொல்லுறாய் நாகன்யா? இதோ.. இவனைக் கூட நான்தான் கொன்னேன். உன்னையும் பலியிடக் கூட்டிட்டுப் போனேன்..”

 

“அதுதான் நாங்க ரெண்டு பேருமே உயிரோட இருக்கிறோமே.. அப்புறம் என்ன?” 

 

“நாகராஜனை நான் என்ர கையாலேயே தான் பிடித்துக் கழுத்தை நெரிச்சுக் கொன்னேன். அப்புறம் எப்பிடி உயிரோட வந்தான்? அல்லது இது வேற நாகமா?”

 

அதற்கு மேல் தாங்க முடியாமல் வாய் விட்டே கேட்டு விட்டான் ஈஸ்வர். கோபமே இல்லாமல் சிரித்த நாகன்யா,

 

“இது நாகராஜனே தான் ஈஸ்வர். இறந்ததுதான் பாவம் வேறொரு நாகம். நீங்கள் யார் என்ற ஒரு சந்தேகம் இருந்தாலும் எனக்கு அதை ஊர்ஜிதப்படுத்தியது நாகராஜன் மரணம் தான்..”

 

“எப்படி?”

 

“நாகராஜன் இறந்த செய்தி கேட்டு புற்றுக்கு ஓடிச் சென்று பார்த்த போது எனக்கு உடனேயே தெரிந்து விட்டது இது நாகராஜன் இல்லை என்று. இறந்து கிடந்த நாகமோ கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருந்தது. பிறந்ததிலிருந்து நாகராஜனோடு வளர்ந்த எனக்கு இலகுவாகப் புரிந்து விட்டது அது அவனே அல்ல என்று. யார் வேலையாக இருக்கும் என்று அந்த இடம் முழுவதையும் ஆராய்ந்தேன். அப்போதுதான் புற்றுக்குள்ளே ஒரு தாயத்து விழுந்து கிடந்தது. 

 

எடுத்துப் பார்த்தால் அது நீங்கள் எப்போதும் கையில் கட்டியிருக்கும் தாயத்து. அப்போதும் நம்புவதற்கு மனம் மறுத்தது. ஆனால் நீங்கள் என்னோடு ஆற்றங்கரைக்கு வந்த போது உங்கள் கையில் தாயத்து இல்லாததைக் கண்டதும் நீங்கள்தான் என்று நிச்சயப்பட்டு விட்டது. 

 

நன்றாக யோசித்துப் பார்த்த போது இத்தனை நாட்களில் ஒரு தடவை கூட நீங்கள் கோவிலுக்குள்ளே வந்ததில்லை. அதேபோல நாகராஜன் புற்றையும் நெருங்கியதில்லை. அப்படியிருக்க புற்றுக்குள்ளேயே தாயத்து விழுந்திருக்கிறது என்றால் அது உங்கள் வேலை தானே..”

 

“நாகராஜன் இறக்கவில்லை என்று தெரிந்தும் ஏன் நீ அவ்வளவு அழுது கலங்கினாய்?”

 

“அவனைக் காணவில்லை என்று தான். இறந்தது அவனில்லை. ஆனால் புற்றில் அவன் இல்லை. இப்போதெல்லாம் அவன் புற்றை விட்டு வேறெங்கும் போவதில்லை. எங்கு போய் தேடுவது என்று தெரியாமல் கலங்கி விட்டேன். ஆனால் அவனோ உங்களை யார் என்று அறிந்ததும் உங்களை பின்தொடர்ந்து காட்டுக்கு வந்து சரியான சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்திருக்கிறான். அன்றைக்கு நல்ல காலம் நீங்கள் தப்பிவிட்டீர்கள், வேறொருவரில் தன் கோபத்தைக் காட்டி விட்டான்..”

 

நாகன்யா கூறிய விளக்கத்தைக் கேட்டதும் நாகராஜனை நோக்கி இரு கரங்களையும் கூப்பினான் ஈஸ்வர். 

 

“தயவுசெய்து என்னை மன்னிச்சிடு நாகராஜா.. உன் நண்பனை கொன்றதுக்கு நான் என்ன பிராயச்சித்தம் வேணுமானாலும் செய்கிறேன். மன்னிப்புக் கேட்கும் தகுதியில்லைத்தான். இருந்தாலும் மன்னித்து விடு ராஜா..”

 

கண்கள் கலங்க கூறியவனை வாஞ்சையோடு பார்த்தாள் நாகன்யா. 

 

“நீங்கள் என்னைக் காப்பாற்றியதைப் பார்த்ததும் அவன் மனம் மாறி விட்டான் ஈஸ்வர். இனி உங்களை எதுவும் செய்ய மாட்டான். அதுசரி அது ஏன் அடிக்கடி வீட்டுக் கூரையிலிருந்து என்னைப் பார்ப்பது?”

 

“இதுவும் தெரியுமா உனக்கு? என்னதான் மந்திரங்களை ஜெபித்தாலும் என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை நாகன்யா. தலைவன் சொன்ன வழிப்படி நீயாகவே பலி கொடுக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்றால் அதற்கு என் கண் முன்னால் தெரிந்த ஒரே வழி காதல் தான். ஆனால் அந்தக் காதலே என் இலட்சியம், குறிக்கோள் எல்லாவற்றையும் மறக்கடித்து  உனக்காக உயிரை விடும் அளவுக்குக் கொண்டு செல்லும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. 

 

அநாதையாக வளர்ந்தேன். கேட்பார் யாரும் இல்லை. கட்டுரை ஒன்று எழுதுவதற்காகத்தான் மந்திரவாதிகளை தேடிச் சென்ற போது இந்த மந்திரவாதியின் அறிமுகம் கிடைத்தது. உன்னை பலி கொடுக்க அழைத்து வந்தால் பல வித்தைகளையும் கற்றுத் தருவதாகக் கூறினான். சில மூலிகை வைத்தியங்கள், சில மூச்சுப் பயிற்சிகள் என்று கற்றும் தந்தான். ஏதோ என் கெட்ட நேரம் அவற்றில் ஆர்வம் ஏற்பட்டு உன்னை அவனிடம் அழைத்துச் செல்வதை ஒரு சவாலாக எடுத்துச் செய்தேன். ஆனால் உன் நீலக் கண்கள் என்னை மாற்றி விட்டன கண்மணி..”

 

“எல்லாம் நன்மைக்கே ஈஸ்வர். இல்லை என்றால் என்னை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருக்காதே..”

 

“ஹூம்.. உண்மை தெரிந்தும் ஏன் நாகன்யா என்னோடு பழகினாய்?”

 

“ஏனென்றால் என்னை சாதாரண பெண்ணாகப் பார்த்த முதல் ஆண் மகன் நீங்கள்தான் ஈஸ்வர். என் மூளை எவ்வளவு தடுத்தாலும் என் இதயம் உங்கள் அருகாமையைத்தான் நாடியது. என் காதல் உண்மையாக இருந்தால் உங்களை நல்லவனாக என்னிடம் அந்த நாகம்மா கொண்டு வந்து சேர்ப்பா என்று நம்பினேன். அதேபோல நீங்கள் உங்கள் உயிரைக் கொடுத்தே என்னைக் காப்பாற்ற துணிந்து வி்ட்டீர்கள்.. இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு? நீங்கள் அந்த மந்திரவாதியோடு பழகிய நாட்களை மறந்து விட்டு என்னோடு சேர்ந்து இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காக ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் ஈஸ்வர். சம்மதமா?”

 

“என்னை இந்தளவு தூரம் நீ மன்னித்து ஏற்றுக் கொண்டதே நான் போன ஜென்மத்துல செய்த புண்ணியம் போலும். அப்படியிருக்க நான் என்ன மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன்..”

 

நாகன்யா மகிழ்ச்சி பொங்க ஈஸ்வர் கைகளை தனது கைகளில் ஏந்திக் கொண்டாள். அப்போது அங்கு வந்த நாகேஸ்வரன்,

 

“என்ன மாப்பிள்ளை நாகபஞ்சமி முடிந்து விட்டது. வேறொரு முகூர்த்த நாள் பார்க்கட்டுமா?”

 

என்று சிரிப்போடு வினாவினார்.

 

“உங்களுக்கு உண்மை தெரியுமா மாமா?”

 

“அன்றைக்கு உங்களோடு பேசிவிட்டு அடுத்த நாள் நாகம்மாவிடம் சம்மதம் கேட்டபோது நாகம்மா என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிட்டா. அதனால்தான் நாகம்மாவையும் உங்களையும் பின்தொடர்ந்து உடனே காட்டுக்கு வந்தோம். எங்களால எவ்வளவு தேடியும் அந்த மந்திரவாதிக இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியேல்ல. எப்படியும் நீங்க நாகம்மாவைத் தொடர்பு கொள்ளுவீங்க என்றிட்டுக் காத்திருந்தோம். நாகம்மன் அருளால எல்லாம் நல்லபடியாக முடிஞ்சுது..”

 

“என்னை மன்னிச்சிடுங்கோ மாமா.. இனிமேல் இந்த ஊரின் நன்மைக்காக மட்டும் தான் எதையும் செய்வேன்.. வேற்றான் என்ற பாரபட்சம் இன்றி என்னிடம் அன்பு காட்டிய இந்த ஊர் மக்களுக்கு நான் செய்யக்கூடிய பிரதிபலன் அது ஒன்றுதான்..”

 

“நீங்கள் மனம் மாறியதே போதும் தம்பி. மன்னிப்பெல்லாம் தேவையில்லை.. நாகம்மாவைக் கண்கலங்க விடாமல் பார்த்துக் கொண்டால் அதுவே போதும். நாளைக்கு அந்த நாகம்மன் சந்நிதிக்குப் போய் முழுதாக ஒரு முழுக்குப் போட்டு பழசையெல்லாம் மறந்துடுங்கோ தம்பி..”

 

பெரிய மனிதராய் நாகேஸ்வரன் கூறவும்,

 

“நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இதே இப்போதே போகிறேன்..”

 

என்று கூறியவன் நாகம்மன் ஆலயத்துக்குச் செல்ல சந்தோசமாக நாகன்யாவும் அவனோடு கூடச் சென்றாள். அந்த நாகம்மனின் பாதத்தில் தன் மன அழுக்குகளை கரைத்தவன் முழுமனதாய் நாகன்யாவின் இதயத்தில் சரண் புகுந்தான். 

 

அவர்கள் நல்வாழ்வுக்கு நாமும் வாழ்த்துவோமாக. 

 

~ சுபம் ~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 6யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 6

அத்தியாயம் – 06   ஈஸ்வரோடு எப்படியாவது பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழ, அதற்கு நாகன்யா கண்டுபிடித்த வழி தான் ஓவியம் வரைந்து பழகுவது. நாகன்யா சிறு வயதிலிருந்தே தனக்கு எதுவும் வேண்டும் என்று கேட்டதில்லை. அவள்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8

நாகன்யா – 08   நாகேஸ்வரன் மனது அமைதியற்றுத் தவித்தது. வீட்டுக்குச் சென்றவர் நேராகக் கிணற்றடிக்குச் சென்று தலைக்குத் தண்ணீர் வார்த்தார். கைபாட்டுக்கு கப்பியில் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினாலும் சிந்தனை முழுவதிலும் இறந்தவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் தான்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9

நாகன்யா – 09   அன்று காலையும் வழக்கம்போலவே விடிந்தது. பறவைகளின் கீச்கீச்சும் சேவல்களின் கொக்கரிப்பும் ஆலய காண்டாமணி ஓசையின் கணீரென்ற நாதமும் தினம் தினம் நாகன்யா ரசிக்கும் விடயங்கள். மரங்களின் மறைவிலிருந்து மெதுவாய் எழும் சூரியக் கதிர்கள் அந்தக் காலை