Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11

நாகன்யா – 11

 

வீட்டை அடைந்த நாகேஸ்வரனை தவிப்புடன் வரவேற்றார் தேவி. 

 

“ஈஸ்வர் தம்பி என்ன சொல்லிச்சுங்க?”

 

“அவன் யார் எவன்னே தெரியாதவன்னு நேற்று அந்தக் கத்துக் கத்தினாய்.. இப்ப என்னடா என்றால் தூங்காம காத்திருந்து விசாரிக்கிறாய்.. ஏன் இந்த மாற்றம்?”

 

தோளிலிருந்த துண்டைக் கதிரையில் போட்டு விட்டு சிரித்தவாறே கேட்டுக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார் நாகேஸ்வரன். 

 

“அது எல்லாம் நாகம்மாவை அந்த தம்பியின் அணைப்பில பார்க்கிற வரைக்கும்தாங்க. நம்ம பொண்ணு தெய்வக் குழந்தை. அவ ஒருத்தன் தோளில சாயிறா என்றா அவன் நல்லவனாகத் தானே இருக்க வேணும். ஊரையே காக்கிற எம் பொண்ணுக்கு தன்னைக் காத்துக்க தெரியாதா?”

 

“அப்புறம் ஏன்மா நேத்து என்னை திட்டினாய்?”

 

“அது அவ தெய்வப் பொண்ணா இருந்தாலும் நான் சாதாரண அம்மா தானேங்க. என் மனசு துடிக்கும் தானே..”

 

தேவியின் பதிலைக் கேட்டுச் சிரித்த நாகேஸ்வரனுக்கு அவர் மகள் மீது கொண்ட அன்பின் அளவும் புரிந்தது. அடுத்த நாள் காலையில் நாகன்யாவோடு திருமணம் விடயமாகப் பேசுவோம் என்று முடிவெடுத்து விட்டு இருவரும் தூங்கச் சென்றார்கள். 

 

இரவு நேரம் கருமேகங்கள் இன்னமும் இரவுக்கு கருமை சேர்த்துக் கொண்டிருந்தன. நாகர்கோவில் ஊரின் ஒரு எல்லையிலிருந்தது அந்த அடர்ந்த காடு. விறகு பொறுக்கப் போபவர்கள், தேன் எடுக்கப் செல்பவர்களுக்காக ஒரு ஒற்றையடிப் பாதை காட்டினுள்ளே சென்றது.

 

அந்த நடுநிசி நேரத்தில் கரிய உருவம் ஒன்று வேகமாக அந்தப் பாதையில் அடர்ந்த வனப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. குறிப்பிட்ட தூரம் போனதும் ஒற்றையடிப் பாதையை விட்டு விலகிக் கல்லிலும் முள்ளிலும் சாதாரணமாக நடக்க ஆரம்பித்தது அந்த உருவம். சிறிது தூரம் போனதும் அங்கே இன்னொரு உருவம் காத்துக் கொண்டிருந்தது. 

 

சிறிய தீப்பந்தத்தை மரம் ஒன்றில் சொருகியிருந்தான் அங்கிருந்தவன். அதன் வெளிச்சத்தில் மை பூசியிருந்த அவர்கள் முகங்கள் அவர்கள் யார் என்பதைத் தெளிவாகக் காட்டியது. 

 

“மயானத்துக்குப் போகாமல் இங்கே எதுக்கு வரச் சொன்னாய்?”

 

கொஞ்சம் கோபத்தோடு தான் கேட்டான் காத்திருந்தவனிடம் புதிதாய் வந்தவன்.

 

“எங்கள் நடவடிக்கைகளை அறிந்து கொண்டார்களோ, என்னவென்று தெரியவில்லை.. மயனாத்துக்குக் காவல் போட்டிருக்கிறார்கள். அதுதான் இங்கு வரச் சொன்னேன்.”

 

“சரி.. சரி.. இப்போது அவசரமாக பார்க்க வேண்டிய காரணம் என்ன?”

 

“நாகன்யாவுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறார்களாம். ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடிப் பேசியிருக்கிறார்கள். மாப்பிள்ளை யாரோ வெளியூர்க்காரன் ஈஸ்வரனாம். நாகபஞ்சமி அன்றைக்குத்தான் திருமணம் வைப்பார்கள் போல..

 

நாகபஞ்சமி இரவு தான் நாங்கள் அவளை பலி கொடுக்க வேண்டும். கன்னியாக அல்லவோ பலி கொடுக்க வேண்டும். அவள் திருமணம் முடித்து விட்டால் என்ன செய்வது? அந்த மாப்பிள்ளையின் உயிரை எடுத்து விடவா? அதைப் பற்றிக் கேட்கத்தான் உங்களை வரச் சொன்னேன்.”

 

“அவள் திருமணம் முடிந்தாலும் கன்னியாக இருந்தால் சரி. திருமணத் தேதி சரியாகத் தெரிந்ததும் மாப்பிள்ளையை கொல்லுவது பற்றி உனக்குச் செய்தி அனுப்புகிறேன்..”

 

மயானத்திற்கு இனிச் செல்ல முடியாது என்றால் பலி பூசையையும் இங்கேதான் வைத்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் சந்தேகம் வராதவாறு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து பூசைக்குரிய ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பி..”

 

உத்தரவிட்டு விட்டு ஒருவன் அந்த இடத்தை விட்டுச் செல்லவும் மற்றவன் தீப்பந்தத்தை அணைத்து விட்டு அங்கிருந்த பாரிய மரம் ஒன்றில் ஏறியமர்ந்து தூங்க ஆரம்பித்தான்.

 

அடுத்த நாள் காலை மப்பும் மந்தாரமுமாய் சோம்பலாய் விடிந்தது. நாகன்யா எழுந்து கூடத்துக்கு வந்ததுமே யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என நாகேஸ்வரனும் தேவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

 

இறுதியில் தேவிதான் தொடங்கினார். 

 

“நாகம்மா.. உன்னட்ட ஒரு முக்கியமான விடயம் பேச வேண்டும்..”

 

“என்னம்மா சொல்லுங்கோ..”

 

“எங்களுக்கும் வயதாகிட்டே போகுது. எங்களுக்குப் பிறகு நீ எப்படித் தனியாக இருக்க முடியும்? உனக்கும் தான் வயசாகிட்டு போகுது.. அதுதான் உனக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று நானும் அப்பாவும் முடிவெடுத்திருக்கிறோம்..”

 

“வேணாம்மா.. எனக்கு இப்ப அது மாதிரியான பந்தங்களில் எல்லாம் மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லை..”

 

“மாப்பிள்ளை யார் என்று தெரிந்தால் இப்படிப் பேசமாட்டாய் நாகம்மா..”

 

இப்போது நாகேஸ்வரன் பெருமையோடு வாய் திறந்தார். தந்தையின் கூற்றில் இவளும் ஆச்சரியமாக அவரை நோக்கினாள்.

 

“சரி.. அதையும் யார் என்று சொல்லிடுங்கோப்பா..”

 

சலிப்புடன் கூறினாள் நாகன்யா.

 

“ஈஸ்வர்”

 

தாய், தந்தை இருவரும் ஒருமித்த குரலில் கூற நாகன்யா முகத்தில் மின்னல் தெறித்தது.

 

“என்ன ஈஸ்வரா? உண்மையாகவா சொல்லுறீங்க..? அவர் இதுக்குச் சம்மதிச்சாரா? அவரோட இதைப் பற்றிப் பேசினீங்களாப்பா? ஊர் மக்கள் ஒத்துப்பாங்களா?”

 

திருமணமே வேண்டாம் என்றவள் இப்போது மூச்சு விடாமல் பல கேள்வி கேட்டாள்.  

 

“ஊர் மக்களோடு பேசி சம்மதம் வாங்கி அதற்கப்புறமாய் ஈஸ்வரோடு பேசி அவனின் சம்மதமும் வாங்கியாயிற்று. இப்போது உன் சம்மதம் கிடைத்தால் போதும் கல்யாணத் தேதியைக் குறித்து விடலாம்..”

 

“ஈஸ்வருக்கு என்னைப் பற்றிய உண்மைகள் எல்லாம் தெரியுமாப்பா? தெரிந்தும் என்னை மணக்கச் சம்மதித்தாரா?”

 

“நான் எல்லாம் சொல்லி விட்டேனம்மா. உனக்குச் சம்மதமானால் தனக்கும் சம்மதம் தானாம்..”

 

நாகன்யாவின் வதனத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை மலர்ந்தது.

 

எனக்கு சம்மதம்தாம்பா.”

 

அவள் சம்மதம் என்றதுமே தேவி பாயசம் செய்வதற்கு சமையலறையை நோக்கி விரைந்தார். தேவி அகன்றதும் நாகன்யா நாகேஸ்வரனிடம் தனியாகச் சொன்ன விஷயத்தைக் கேட்டு அவர் மூச்சுப் பேச்சற்று நின்றார். 

 

“ஏனம்மா எல்லாம் தெரிந்தும் இந்த விசப் பரீட்சை தேவைதானா?”

 

“ஏனென்றால் நான் ஈஸ்வரைக் காதலிக்கிறேன்பா..”

 

கூறிவிட்டு வெட்கத்தோடு தன்னறைக்கு ஓடினாள் நாகன்யா. நாகேஸ்வரன் செய்வதறியாது பெருமூச்சொன்றை வெளியேற்றினார். ஆனாலும் மகள் மீது கொண்ட நம்பிக்கையில் பெரியவர்களை பார்த்துத் திருமண நாள் குறிக்க நாகேஸ்வரன் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார், 

 

ஊர் பெரியவர்கள், ஜோதிடர்கள் அனைவராலும் ஏகோபித்த மனதாக நாகபஞ்சமி அன்று திருமணம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஊர் கணக்கர், தானே மாப்பிள்ளை வீடாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்வதாக முன் வந்தார். நாகேஸ்வரன் நன்றி கூறி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்னும் சில தினங்களே இருந்தமையால் ஊரே ஒன்று கூடித் திருமண வேலையில் ஈடுபட்டார்கள்.

 

நாகம்மன் கோவிலின் முன் மண்டபம் வாழை மரம் கட்டப்பட்டு மாவிலை, தோரணங்களாலும் சாமந்தி, செவ்வந்திப் பூச்சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டது. மின் விளக்குகளும் ஆங்காங்கே கட்டப்பட்டு அந்த மண்டபமே தேவலோக இந்திரசபையாக ஜொலித்தது. 

 

அன்னதான மண்டபத்தில் விருந்துக்குத் தேவையான காய்கறிகள் வந்து குவிந்தன. அதனை சுத்தம் செய்து வெட்டுவதில் ஒரு குழு மும்முரமாக முனைந்திருந்தது. 

 

இப்படித் திருமண வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கக் காட்டுக்குள்ளே வேறொரு வேலை நடந்து கொண்டிருந்தது. அதை அறியாத கிராம மக்கள் எல்லோரும் வரப்போகும் ஆபத்தை அறியாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள். 

 

திருமணத்திற்கு முதல் நாள் இரவு. ஈஸ்வர் நாகன்யா வீட்டுக்குச் சென்றிருந்தான். நாகேஸ்வரனும் தேவியும் திருமண ஒழுங்குகளை இறுதித் தடவையாக மேற்பார்வையிட கோவில் மண்டபத்துக்குச் சென்றிருந்தார்கள். 

 

“ஐயா.. ஐயா..”

 

ஈஸ்வரின் குரல் கேட்டு நாணச் சிரிப்போடு நாகன்யா தான் வந்து கதவு திறந்தாள். 

 

“வாங்கோ.. அம்மாவும் அப்பாவும் கோவிலுக்குப் போய்ட்டினம். வரத் தாமதமாகும் என்று சொன்னவை..”

 

“ஏன் நான் உன்னைப் பார்க்க வரக் கூடாதா?”

 

கேட்டபடியே அவளை நெருங்கினான். பட்டாம் பூச்சியாய் விழிகள் படபடக்க பின்னடைந்தவள்,

 

“விளையாடமல் போங்கோ ஈஸ்வர்.. அம்மாவை வந்திடப் போகினம்..”

 

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் நாகன்யா.. உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்..”

 

“என்ன கேளுங்கோ..”

 

“உண்மையாக உனக்கு என்னை பிடிச்சிருக்கா? அல்லது அம்மா அப்பாட விருப்பத்துக்காக இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தாயா?”

 

“மனப்பூர்வமாகத் தான் சம்மதித்தேன்.. ஏன் ஈஸ்வர் இப்ப வந்து இப்படிக் கேட்கிறீங்கள்? உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பம் இல்லையா?”

 

அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை திடீரென மாறியது.

 

“உண்மையாகவே நீ என்னை விரும்புகிறாய் என்றால் அதை நிரூபி நாகன்யா..”

 

“ஏன் ஈஸ்வர் இப்படியெல்லாம் பேசுறீங்க? நான் என்ன செய்தால் என்னை நம்புவீங்கள்?”

 

“என்னை எதுவும் கேளாமல் என்னோடு புறப்பட்டு வா..”

 

கூறிவிட்டு ஈஸ்வர் செல்ல இவளும் கதவைப் பூட்டி விட்டு அவனை பின் தொடர்ந்தாள். அவளின் முகத்தில் எந்தவிதப் பதட்டமும் இல்லை. மிக நிதானமாக அவனுக்குப் பின்னே நடந்து சென்றாள். ஈஸ்வரும் அவளோடு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

 

ஈஸ்வர் நேராக அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான். நாகன்யாவும் அடர்ந்த மரங்களுக்கிடையே கீற்றாய் தெரிந்த நிலவு வெளிச்சத்தில் அவனைப் பின் தொடர்ந்தாள். 

 

நடுக்காட்டில் புற்கள், புதர்கள் எல்லாம் அகற்றப்பட்டு சதுரமாய் ஒரு இடம் நன்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அதன் மையத்தில் இரத்தத்தாலும் கரிய மையாலும் போடப்பட்டிருந்த கோலம் ஒன்றின் முன்னே அக்கினி குண்டம் ஒன்று வளர்க்கப்பட்டிருந்தது. 

 

அதன் முன்னால் ஒருவன் அமர்ந்திருந்து  மந்திரங்களை ஓதியவாறு அந்த அக்கினி குண்டத்தில் எதையோ போட்டுக் கொண்டிருந்தான். இன்னொருவன் அருகில் அறுத்த கோழியிலிருந்து இரத்தத்தை அக்கினியில் ஊற்றிக் கொண்டிருந்தான். இவர்களை நெருங்கியதும் தான் ஈஸ்வர் வாய் திறந்தான்.

 

“இந்தக் கோலத்தின் நடுவில இரு நாகன்யா..”

 

ஈஸ்வர் முடிக்கும் முன்னரே இதற்காகவே வந்தது போல அந்த இரத்த மைக் கோலத்தில்  அமர்ந்திருந்தாள் நாகன்யா. பத்மாசனமிட்டு ஒரு மோகனப் புன்னகையோடு கண்கள் மூடி அவள் அமர்ந்திருந்தது ஈஸ்வருக்கே ஆச்சர்யமாக இருந்தது. 

 

தொடர்ந்து ஏதேதோ மந்திரங்களை கூறியவாறு இருந்த தலைவன் மந்திரவாதி அவனருகே இருந்த நீண்ட வாளை எடுத்து நாகன்யாவின் கழுத்தை நோக்கிக் குறி பார்த்த நொடி திடீரென ஈஸ்வர் குறுக்கே பாய்ந்தான். 

 

அதேநேரம் எங்கிருந்தோ பாய்ந்து வந்த குறுவாள் ஒன்று மந்திரவாதியின் கழுத்தில் இறங்க அவன் சரிந்து விழுந்தான். மற்றைய மந்திரவாதியின் பாதத்தில் சர்ப்பம் ஒன்று ஒரே போடாகப் போட அவன் வாயில் நுரை தள்ளியவாறே கீழே விழுந்து அடுத்த நொடியே உயிரை விட்டான்.

 

“ஈஸ்வர்..”

 

என்று அலறியவாறே அவனை மடியில் தாங்கிக் கொண்டாள் நாகன்யா. நெஞ்சிலே கொஞ்சம் ஆழமாகவே தான் வாள் கீறியிருந்தது. அப்போது நாகேஸ்வரனும் வேறு சிலரும் அங்கே வந்தார்கள். ஈஸ்வரின் நிலைகண்டு உடனே அவனைத் தூக்கிக் கொண்டு நாகேஸ்வரன் வீட்டிற்கு விரைந்தனர். 

 

தப்புவானா ஈஸ்வர்? அவன் யார் என்ற உண்மை தெரிந்தும் அவனை ஏற்றுக் கொள்வாளா நாகன்யா?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1

என்னுரை    வணக்கம் அன்பு நெஞ்சங்களே!    “நாகன்யா” எனும் குறுநாவலோடு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.   எனக்கெல்லாம் ஒரு விசித்திரப் பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு பெயரோ, வரியோ பிடித்து விட்டால் அதைத் தலைப்பாக வைத்து அதற்குப் பொருத்தமாகக்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5

அத்தியாயம் – 05   அதிகாலை நான்கு மணிக்கே துயிலெழுந்த ஈஸ்வர் காலைக் கடன்களை கழித்து விட்டு கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து அந்தக் குளிர் நீரிலேயே நீராடினான். நீராடி விட்டு ஈரம் போகத் துண்டால் துடைத்தவன் ஒரு பருத்தி வேட்டியை

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12   நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று