Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9

நாகன்யா – 09

 

அன்று காலையும் வழக்கம்போலவே விடிந்தது. பறவைகளின் கீச்கீச்சும் சேவல்களின் கொக்கரிப்பும் ஆலய காண்டாமணி ஓசையின் கணீரென்ற நாதமும் தினம் தினம் நாகன்யா ரசிக்கும் விடயங்கள். மரங்களின் மறைவிலிருந்து மெதுவாய் எழும் சூரியக் கதிர்கள் அந்தக் காலை வேளையை பொன்னிறமாக்குவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பாள். 

 

ஆனால் இன்றோ இந்த விடியல் காலையின் அழகு அவளை சற்றும் அசைப்பதாக இல்லை. படுக்கையை விட்டு எழாமல் முகட்டை வெறித்துக் கொண்டிருந்தாள். சிவந்திருந்த அவள் கண்களை பார்த்தால் அவள் இரவு முழுவதுமே தூங்காமல் இருந்தது போலத்தான் தோன்றியது. அவளை இன்னமும் காணாது அவளது அறைக்கு வந்து பார்த்த தேவி எதுவும் பேசாது வெளியே சென்றார். காத்திருந்த கணவரிடம்,

 

“அவ இன்னும் படுக்கையிலேதான் இருக்கிறா. ராத்திரி முழுக்க ஒரு பொட்டுக் கண் மூடலப் போல. நீங்க கோவிலுக்குப் போய்ட்டு வாங்கோ. நானும் அவ கூட வீட்டிலேயே இருக்கிறேன்.”

 

நாகேஸ்வரனும் தலையாட்டி விட்டு கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருக்கும் முக்கியமான வேலை ஒன்றிருந்ததே. நாகன்யா கோவிலுக்கு வராததும் நல்லதுக்கே என்று முடிவெடுத்தவராய் பூசை முடிந்ததும் கிராமப் பொறுப்பிலிருந்த பெரியவர்களையும் இளைய தலைமுறையினர் சிலரையும் சேர்த்து கோவில் மண்டபத்திலேயே ஒரு கூட்டத்தைக் கூட்டினார். 

 

“அனைவருக்கும் வணக்கம். நான் நீண்ட நாட்களாகவே உங்கள் எல்லோரிடமும் கலந்தாலோசிக்க நினைத்த ஒரு விடயம். நாகம்மாவுக்கும் வயசு ஏறிக் கொண்டே போகின்றது. அவருக்குத் திருமணம் முடிக்கலாம் என்று யோசிக்கிறேன். அது சம்பந்தமான உங்கள் கருத்துக்களை எதுவானாலும் தயங்காமல் கூறுங்கள். அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்..”

 

“நாகம்மா எங்க ஊரு தெய்வம்.. தெய்வத்துக்கே எப்பிடித் திருமணம் செய்து வைக்க முடியும் தலைவரே.. எனக்கென்றால் இது சரிப்பட்டு வரும் போலத் தெரியேல்ல..”

 

“அதுதானே தலைவரே.. நீங்களா இப்படிப் பேசுவது..?”

 

இரண்டு வயதானவர்கள் எடுத்ததுமே எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். நாகேஸ்வரனுக்கு மனதில் சிறு சுணக்கம் ஏற்பட்டது. எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மற்றவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தார். அங்கு எழுந்து நின்ற ஒரு இளைஞன்,

 

“அந்த சக்தியே சிவனை திருமணம் முடிக்கவில்லையா என்ன? அப்படியிருக்க எங்கள் நாகம்மா திருமணம் செய்வதில் என்ன தவறு?”

 

“தம்பி.. நீங்க சின்னப் பிள்ளைகள்.. உங்களுக்கு முன்பு இந்த ஊர் எப்படி இருந்தது என்று தெரியாது. பூமி வரண்டு எங்கும் பசியும் பட்டினியும் களவும் தான். இப்போது இருபது வருசமாக எங்க ஊரைப் போல செழித்த ஊர் இந்த நாட்டிலேயே இல்லாத அளவுக்கு மாறியிருக்குது என்றால் அதுக்கு என்ன காரணம்? நாகம்மா இங்கு வந்த வேளை. 

 

அவ சொன்ன ஒவ்வொரு வாக்கும் தெய்வ வாக்காகப் பலிச்சது. ஐந்து வயசில குறி சொல்ல ஆரம்பிச்சா. இப்போது வரை அவ சொன்ன ஒரு விசயம் கூட பிழைச்சதில்லை. அவ சொற்படி நடந்ததால தான் இன்றைக்கு நம்ம ஊர் இந்த நாட்டுக்கே உதாரணமாக விளங்குது. யாரிடமும் எதையும் கையேந்தாமல் அரசாங்கத்தை நம்பியிராமல் சுதந்திரமாக எந்தவிதப் பயமுமின்றி நாம் வாழ்கிறோம் என்றால் அதுக்கு ஒரேயொரு காரணம் நாகம்மா மட்டும்தான்..”

 

“அது எங்களுக்கும் தெரியும் பெரியவரே.. நாகம்மா கதையைக் கேட்டு வளராத எந்தக் குழந்தை இந்த ஊரில இருக்குது சொல்லுங்கோ பார்ப்போம்.. ஆனால் நாகம்மாட தெய்வ சக்தியோடு ஒரு சந்ததி உருவாக வேண்டாமா? திருமணம் முடித்தால் கூட நாகம்மா எப்போதும் போல வாக்குச் சொல்லலாமே. அதற்கு என்ன பிரச்சனை இருக்கிறது?”

 

இன்னொரு இளைஞன் கூறவும் இப்போது ஒரு பெரியவர் எழுந்தார். 

 

“தம்பி சொல்வதும் வாஸ்தவமாகத்தான்  உள்ளது. திருமணம் முடித்து நாகம்மா எங்கள் ஊரிலேயே வாழ்ந்தால் வாக்குச் சொல்லலாமே. வழக்கம் போலவே எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் சரி தானே..”

 

இந்த யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட அடுத்து மாப்பிள்ளை யார் என்ற பிரச்சனை கிளம்பியது. 

 

“நாகம்மாவுக்குப் பொருத்தமானவனாக ஒரு மாப்பிள்ளையை எங்கேயென்று போய் தேடுவது ஐயா?”

 

என்ன சொல்லப் போகின்றார்களோ என்ற யோசனையோடு மெதுவாக வாய் திறந்தார் நாகேஸ்வரன்.

 

“நம்ம கணக்கர் வீட்டில் தங்கியிருக்கும் ஈஸ்வரைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?”

 

கொஞ்சம் தயங்கியவாறே தான் கேட்டார் அந்தத் தந்தை.

 

“எங்கட நாகம்மன் கோவிலைப் பற்றி கதை எழுதப் போகிறேன் என்று வந்து தங்கியிருக்கும் தம்பியையா சொல்லுறீங்க?”

 

“நன்றாகப் படம் எல்லாம் வரையுமே அந்தத் தம்பியா..”

 

“யாருக்கு என்ன உதவி என்றாலும் ஓடி ஓடிச் செய்யும் அந்தப் பிள்ளை..”

 

“ஆமாம்.. நானும் கவனித்திருக்கிறேன்.. நல்ல பிள்ளை போலத்தான் இருக்கிறது..”

 

பலரும் பலவிதமாகக் கூறவும் ஒரு பெரியவர் யோசனையோடு இழுத்தார்.

 

“ஐயா..! நாங்கள் சாதி, மத, இன வேறுபாடு பார்ப்பதில்லைதான். இருந்தாலும் அந்தத் தம்பிட குடும்பம் எப்படிப்பட்டது என்றெல்லாம் தெரிய வேண்டாமா?”

 

அனைவரையும் பேச விட்டு செவிமடுத்திருந்த நாகேஸ்வரன் இப்போது பேச ஆரம்பித்தார். 

 

“நான் விசாரித்துப் பார்த்த வரைக்கும் அந்தத் தம்பி ஒரு அநாதை. அநாதை ஆச்சிரமம் ஒன்றில்தான் வளர்ந்திருக்கிறார். ஊர் ஊராகச் சென்று கோவில்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவற்றைப் பற்றி எழுதுவதைத்தான் தொழிலாக வைத்திருக்கிறார். ஆன்மிக சம்பந்தமான ஆர்வம் உடையவர். சொந்தபந்தம் யாருமில்லாதவர் என்பதால் நாகம்மாவோடு இந்த ஊரிலேயே தங்கச் சம்மதிப்பார் என்று நம்புகிறேன்..”

 

“கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் ஐயா.. எங்கள் ஊரிலேயே எத்தனையோ படித்த அறிவாளியான இளைஞர்கள் இருக்கிறார்கள் தானே. அவர்களில் ஒருவனை தேர்ந்தெடுத்தால் என்ன?”

 

“நானும் முதலில் அப்படி நினைத்தேன் தான். ஆனால் எம் பிள்ளைகள் நாகம்மாவை சிறு வயதிலிருந்தே தெய்வமாக வணங்கிப் பழக்கப்பட்டு விட்டவர்கள். அவர்களுக்கு அவளை மனைவியாக ஏற்பது கடினமான விடயம். அதை விட ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போது மற்றவர்கள் தாங்கள் எதில் குறைந்தவர்கள் என்று எண்ணி ஊருக்குள்ளே தேவையற்ற மனக்கிலேசங்கள் உண்டாகும். 

 

நாகம்மா உருவாக்கிய இந்த ஒற்றுமை அவளாலேயே குலையக் கூடாது. அதனால்தான் வேற்றாள் ஒருவர் நாகம்மாவை மணம் முடிப்பது நன்று என நினைத்தேன். அதை விட முக்கியமான விடயம் நாகம்மாவுக்கும் ஈஸ்வருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருக்கிறது. 

 

ஈஸ்வர் அவளை தெய்வமாகப் பார்க்காமல் ஒரு பெண்ணாகத்தான் பார்க்கிறான். பெயர் பொருத்தம் கூட, எனக்கு அந்த ஆண்டவனே பார்த்து அனுப்பியது போலத்தான் உள்ளது. அதனால்தான் ஈஸ்வரை மணம் முடிப்பது நன்று என்ற எண்ணம் எனக்கு. என் மனதில் உள்ளவற்றை சொல்லி விட்டேன். இனிமேல் முடிவு உங்கள் கைகளில்தான். ஊர் மக்கள் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் நான் அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுவேன்..”

 

நீளமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் நாகேஸ்வரன். சிறிது நேரம் மண்டபத்துக்குள் ஒருவரோடு ஒருவர் பேசும் சலசலப்பு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

 

இங்கே வீட்டிலே ஒருவாறு படுக்கையை விட்டெழுந்த நாகன்யா காலைக் கடன்களை முடித்து விட்டுக் கூடத்தில் சென்று அமர்ந்தாள். 

 

“நாகம்மா.. வந்து சாப்பிடும்மா.. இரவும் நீ சாப்பிடல்ல. இப்பிடிப் பட்டினி கிடந்து என்ன தான் செய்யப் போகிறாய்?”

 

“எனக்குப் பசிக்கேல்லம்மா.. தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீங்கம்மா..”

 

சோகமாகக் கூறியவளை என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்திருந்தார் தேவி. அப்போது வெளியே யாரோ அழைக்கும் சத்தம் கேட்கப் போய் பார்த்தவரின் முகம் மலர்ந்தது. வந்திருந்தது ஈஸ்வர்தான். நாகன்யா சாப்பாடு, தண்ணீர் வாயில் படாமல் இருப்பதை மெல்லிய குரலில் கூறி வருத்தப்பட்டார் அந்த அன்னை. 

 

“நான் பார்த்துக் கொள்கிறேன்”

 

என்று கூறியவன் நாகன்யா அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றான். 

 

“வணக்கம் நாகன்யா.. என்ன செய்கிறீங்க..? சித்திர வகுப்பை ஆரம்பிப்போமா?”

 

எதுவுமே நடவாதது போல இயல்பாகக் கேட்டவன், வெள்ளை தாள்களை எடுத்து மேசையில் பரவினான். அவளுக்கும் இப்படி ஒரு மாற்றம் தேவையாக இருக்கவே அவளும் வரைவதில் ஈடுபட்டாள். அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக முன்பு தான் வரைந்திருந்த நாகராஜன் படத்தை ஈஸ்வரிடம் காட்டியவள் விசும்பி அழ ஆரம்பித்தாள். இப்போது அவளை தேற்றும் வழி வகை தெரியாது விழித்தான் ஈஸ்வர். திடீரென ஏதோ யோசனை வரப்பெற்றவனாக வெளியே புறப்பட்டுச் சென்றான். 

 

அவன் விரைந்து சென்று நின்ற இடம் மண்பானை, சட்டி செய்யும் இடம். அங்கு பணிபுரிவோரிடம் களிமண்ணைப் பெற்றுக் கொண்டவன் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்து நாகராஜனை மனக் கண்ணில் கொண்டுவந்து அப்படியே தத்ரூபமாகச் சிலையாக வடிக்க ஆரம்பித்தான். குயவுத் தொழில் செய்வோரே அவன் சிற்ப வித்தையைக் கண்டு வியந்து போய் பார்த்து நின்றார்கள். நாகராஜனே உயிரோடு எழும்பி நிற்பது போல ஒரு அழகிய சிலையை வடித்தவன் அதைக் காய வைத்து சூளையில் சுட்டெடுத்து நாகன்யாவிடம் எடுத்துச் சென்றான். அவன் அங்கு சென்ற போது மாலை ஆகியிருந்தது. 

 

தான் வரைந்த நாகராஜன் படத்தை மடியில் வைத்தவாறு சோர்ந்து போய் அமர்ந்து இருந்தவளின் மடியில் இந்த சிலையைக் கொண்டு சென்று வைத்தான் ஈஸ்வர். கண்ணீர் மல்க அதை அப்படியே அணைத்துக் கொண்டாள் நாகன்யா.

 

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறது என்றே தெரியேல்ல ஈஸ்வர்.. அப்படியே ராஜாவைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மிக்க நன்றி ஈஸ்வர்..”

 

“நன்றி சொல்லுற வழியை நான் சொல்லவா? காலையில இருந்து பச்சைத் தண்ணீர் கூட நான் குடிக்கல. பசி உயிர் போகுது.. கொஞ்சம் உணவு கிடைக்குமா?”

 

வயிற்றைத் தடவியவாறே கேட்க, துடித்துப் போனாள் அந்த நாக தேவதை. 

 

“அச்சோ..என்ன ஈஸ்வர் இது? காலையில வந்த போதே சாப்பிட்டிருக்கலாமே. எல்லாம் என்ர பிழைதான். ஒரு வார்த்தை கேட்கலையே நான். அம்மா.. அம்மா.. இங்க வாங்கோ.. ஈஸ்வருக்கு சாப்பாடு எடுத்து வையுங்கோம்மா..”

 

“என்னால தனியாக சாப்பிட முடியாது நாகன்யா. நீங்களும் வாங்கோ. சேர்ந்தே சாப்பிடுவோம். நீங்கள் சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன்..”

 

சிறு பிள்ளையின் பிடிவாதத்தோடு கூற நாகன்யாவும் உணவுண்ண அமர்ந்தாள். நாகேஸ்வரனும் கூட்டம் முடித்து வந்திருக்க தேவி நிம்மதிப் பெருமூச்சோடு அனைவருக்கும் உணவு பரிமாறினார். 

 

உண்டு முடித்ததும் கூடத்தில் வந்தமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டான் ஈஸ்வர். காற்றாட நடந்து விட்டு வருவதாகக் கூறி நாகேஸ்வரனும் அவன் பின்னே புறப்பட்டார். வீட்டுக்கு வெளியே வந்ததும் சாதாரணமாகப் பேசிக் கொண்டு ஆற்றங்கரையை அடைந்தவர்கள், விடி விளக்கெரிந்த ஒரு வெளிச்சமான இடத்தில் மணற் தரையில் அமர்ந்து கொண்டார்கள். 

 

“என்ன விடயம் ஐயா? என்னிடம் ஏதோ பேச வேண்டும் போல..”

 

உடனே புரிந்து கொண்ட அவன் புத்திசாலித் தனத்தை மெச்சிக் கொண்டே தான் பேச வந்த விடயத்தைப் போட்டுடைத்தார் நாகேஸ்வரன். 

 

“நாகம்மாவுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன் தம்பி. நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?”

 

மனதில் ஏற்பட்ட கவலையைக் காட்டிக் கொள்ளாமல்,

 

“இதிலே சிறியவன் நான் சொல்ல என்ன இருக்கிறது ஐயா? நாகன்யாவுக்கும் வயசாகிட்டே போகிறது தானே. அவவும் ஒரு குடும்ப வாழ்க்கையை வாழத்தானே வேணும். நல்ல முடிவுதான் ஐயா..”

 

“மாப்பிள்ளை யார் என்று கேட்கவில்லையே..?

 

“இந்த ஊரே கொண்டாடும் பெண்ணவள். அப்பா நீங்கள், மிகப் பொருத்தமானவனாகத்தான் தேர்ந்தெடுத்து இருப்பீர்கள். ஆனாலும் நாகன்யாவிடம் ஒரு வார்த்தை அவள் சம்மதத்தையும் கேட்டால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது ஐயா. அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.”

 

“நாகம்மாவின் சம்மதத்தைக் கேட்க முதல் மாப்பிள்ளையின் சம்மதத்தை அறிய எண்ணுகிறேன் ஈஸ்வர். என் பெண் நாகன்யாவைத் திருமண செய்ய உங்களுக்கு சம்மதமா?”

 

நாகேஸ்வரன் நேரடியாக கேட்கவும் திகைத்துப் போய் அவரைப் பார்த்திருந்தான் ஈஸ்வர். 

 

சம்மதம் தருவானா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1

என்னுரை    வணக்கம் அன்பு நெஞ்சங்களே!    “நாகன்யா” எனும் குறுநாவலோடு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.   எனக்கெல்லாம் ஒரு விசித்திரப் பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு பெயரோ, வரியோ பிடித்து விட்டால் அதைத் தலைப்பாக வைத்து அதற்குப் பொருத்தமாகக்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11

நாகன்யா – 11   வீட்டை அடைந்த நாகேஸ்வரனை தவிப்புடன் வரவேற்றார் தேவி.    “ஈஸ்வர் தம்பி என்ன சொல்லிச்சுங்க?”   “அவன் யார் எவன்னே தெரியாதவன்னு நேற்று அந்தக் கத்துக் கத்தினாய்.. இப்ப என்னடா என்றால் தூங்காம காத்திருந்து விசாரிக்கிறாய்..

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12   நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று