Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 16’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 16’

சிவாவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட அந்த புதன்கிழமை வந்தது. 

தனபாலன் புதிதாய் ஒரு கடை போடுவதற்கு பணம் பற்றாமல் அலைந்தான். தன் மச்சினனின் உதவியுடன் மனைவியின் நகைகளை அடமானம் வைத்துப் பணம் வாங்கும் எண்ணத்துடன் செங்கல்பட்டுக்கு வந்திருந்தான். கடன் தருபவர் சென்னையில் இருந்தார். 

நர்த்தனாவுடன் ரத்னாவும் இருந்ததால் குடும்ப விஷயங்களை பேசாமல் தவிர்த்தனர் தனபாலன் தம்பதியினர். சிவபாலன் நகை விஷயத்துக்கு முக்கியத்துவம் தராதவன். அதனால் “தனா ஆளைவிடு, உன் மஞ்சள் பையை எடுத்துட்டு நடையைக் கட்டு. இதை போஸ்ட்மேன் மாதிரி எடுத்துட்டு வரதும் போறதுமா ஒரே எரிச்சல் பிடிச்ச வேலை” என்பதோடு நிறுத்திக் கொண்டான். 

சிவாவுடன் அலுவலகம் சென்று நகைகளை எடுத்துக் கிளம்பியவர்கள், மாலையே மூர்க்கமாய்த் திரும்பி வந்தார்கள். தங்க நகைகளுக்குப்  பதில் பித்தளை நகைகளைத் தந்து ஏமாற்றி விட்டதாகப் புகார் கூறினார். 

“நானே நல்ல வேலைல இருக்கேன். எதுக்கு ஏமாத்தி சம்பாதிக்கணும் சொல்லு?” கோவத்தை அடக்கியபடி கேட்டான். 

“உன் பொண்டாட்டி மாதிரி ஆடம்பரக்காரி கால்ல கொட்ட வேண்டாம். அதுக்குத்தான். கல்யாணத்துக்கு முன்னமே அவளுக்கு யாருக்கும் தெரியாம பொண்ணு வீட்டுல சீதனமா தரவேண்டிய நகையை தானே போட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டவனாச்சே… கல்யாணத்துக்கு முன்னாடி அந்த மேனா மினிக்கிக்காக அப்பனை ஏமாத்தின நீ, இப்ப நகையைத் திருடி அண்ணனை ஏமாத்திட்ட” என்றாள் அண்ணி இரக்கமில்லாமல். 

 “தனா ஒரு குடும்பப் பொண்ணைப் பத்தி அவதூறா சொல்ல வேண்டாம்னு அண்ணிட்ட சொல்லு” என்றான் அண்ணனிடம். 

“அவளுக்கு டான்ஸ் ஆடுறதுக்கும், டிவில நடிக்கிறதுக்கும் காசு எங்கிருந்து வரும்…. இப்படித்தான் திருடித் திருடி சம்பாரிக்கிரங்களா?” என்றாள் அண்ணி மேலும் 

கண்டிக்காமல் சும்மா நின்ற அண்ணனின் சட்டையைப் பிடித்தான். “தனா, எனக்குக் கோவம் வருதுடா… அண்ணியை பேசாம இருக்க சொல்லுடா”

அலுவலகத்தின் வாசலில் நடந்த களேபரத்தைத் தடுத்தார்கள் மற்றவர்கள். சிவபாலனை விளக்கி இழுத்து சென்ற ஹெட் கிளார்க் வேலாயுதம்.

“சிவா சார், ரெண்டு மாசம் முன்னாடி  நீங்க ஊரில் இல்லாத சமயம் உங்க வைப்பும் மாமியாரும் வந்திருந்தாங்க. உங்க வைப் லாக்கர்லேருந்து என்னமோ எடுத்துட்டு போன மாதிரிதான் இருந்தது. நீங்க அவங்ககிட்ட விசாரிங்க” என்றார். 

“விடுங்க சார், உங்க மனைவி இப்ப இப்ப டிவில நடிக்கிராங்கள்ள அந்தப் பொறாமைல இவங்க இப்படி பேசுறாங்க” என்றார்  கிளார்க் விமலா. 

“சிவா மனைவி டிவி நடிகையா” என்றார் வேலாயுதம். 

“ஒரு மாசமா வாரநாள் மத்தியானம் அவங்க நடிக்கும் டிராமா போடுறாங்க. லீவ்ல வீட்டில் இருந்தப்ப பார்த்தேன்” எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சியும் பார்க்கும் விமலா. 

“நிஜம்மா சொல்றிங்களா மேடம்” என்று சிவா கேட்க 

“சார் உங்களுக்கு அதுவே தெரியாதா…” என்றார் விமலா அதிர்ச்சியாக. 

“இப்படியா ஒருத்தி இருப்பா… இதைக் கூட வீட்டுக்காரன் கிட்ட சொல்லாம” என்று ஒரு சாரரும் 

“இந்த ஆளு சரியான கேணையனா இருப்பான் போலிருக்கு” என்று மற்றொரு சாரரும் பேச, சிவாவின் கோவம் பலமடங்கு எகிறியது.

அலுவலகத்தில் சிவாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. லாக்கருக்கு வந்தவர்கள் லிஸ்டை சோதனை செய்ததில் நர்த்தனா வந்து சென்றிருப்பது தெரிந்தது. அதே வேகத்துடன் வீட்டுக்குக் கிளம்பினான்.

“நர்த்தனா லாக்கர்ல நகையை மாத்தினியா?” என்ற கேள்விக்கு 

“என்ன லாக்கர் என்ன நகை? ஒண்ணுமே புரியலயே” என்றாள். 

“பொய் சொல்லாதடி, நீ வந்தது காமிராவில் பதிவாயிருக்கு. நீ லாக்கர் போயிருக்க… தங்க நகைக்கு பதிலா கவரிங் நகையை மாத்திருக்க”

“நான் போயிருந்தது நிஜம்தான். ஆனா போலி நகையை மாத்திருப்பென்னு நம்புறிங்களா”

“நடிகை நர்த்தனா நல்லாவே நடிக்கிற… ஏற்கனவே நான் கொடுத்த நகைகளை வித்து நடன நிகழ்ச்சி நடத்தின. அதை என்கிட்டே சொல்லல. என் அனுமதியும் கேட்கல. இப்ப டிவி டிராமால நடிக்கிற விஷயத்தையும் சொல்லல. இவ்வளவு விஷயத்தை செய்யத் துணிஞ்ச நீ நகையை ஏன் மாத்திருக்க மாட்ட” கோவம் தாங்காமல் கண்ணாடியை ஓங்கிக் குத்தினான். அது சுக்கல் நூறாய் உடைந்தது. 

“என் அண்ணா அண்ணி என் மேல வச்சிருந்த நம்பிக்கையை பாழக்கிட்டியே… இவ்வளவு நாளா நான் வாங்கின நல்ல பெயரை ஒரே நிமிஷத்தில் அழிச்சுட்டியே… ஊர்ல எல்லாரும் என்னைக் காறித் துப்புர மாதிரி பண்ணிட்டியே” என்று கொதித்தவன், ஆத்திரம் தாங்காமல் நர்த்தனாவை ஓங்கி ஒரு அறை அறைந்தான். தடுமாறி கீழி விழுந்த நர்த்தனாவின் கைகளில் ஒன்றிரண்டு இடங்களில் கண்ணாடி சில்லுகள் குத்தி ரத்தம் வந்தது. 

“ஐயோ என் மகளை நகை கேட்டு அடிச்சுக் கொல்லுறானே” என்று ஓங்கிக் குரல் கொடுத்தார் ரத்னா. 

வீட்டினுள் இருந்த சிவா மட்டுமின்றி வாசலில் நின்றிருந்த தனபாலனின் குடும்பமும் அதிர்ந்தது. என்னவோ ஏதோ என்று வீட்டினுள் நுழைந்தவர்கள் பின் அக்கம் பக்கத்தாரும் உள்ளே நுழைந்தனர். 

“நகை கேட்டு அடிச்சிங்களா” என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்க,

“வரதட்சணை கேட்டுக் கொல்லுறானே” என்ற ரத்தினாவின் குற்றச்சாட்டும், நர்த்தனா நடிகை என்ற துருப்புச் சீட்டும் அங்கே வேலை செய்தது. 

எங்கிருந்து வந்தார்களோ எப்படி வந்தார்களோ தெரியாது ப்ரெஸ் என்று அடையாள அட்டை தாங்கியபடி கேமிராவை தூக்கிக் கொண்ட ஒரு கூட்டமும், நர்த்தனா நடிக்கும் சீரியலின் இயக்குனர் சிங்காரமும் சிவாவின் வீட்டுக்கு வந்து சேர, செய்தி சானல்களின் கீழே ப்ளாஷ் நியூஸ் என ‘டிவி நடிகை நர்த்தனா வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி. நகை கேட்டு கணவர் கொலை செய்ய முயற்சி’ ஓடியது. 

இது நர்த்தனாவுக்கு மிகப்பெரும் விளம்பரமாக அமைந்தது. “மேடம்…. ஊர் முழுசும் இப்ப இதுதான் பேச்சு. நம்ம நாடகத்துக்கு ப்ரைம் ஸ்லாட் கொடுத்துட்டாங்க. கதையை மாத்தி உங்களை கதாநாயகியாக்கிடலாம்னு இருக்கேன். வரதட்சணை கொடுமைன்னு  நீங்க  சொன்னதையே கடைசி வரை மெயின்டைன் பண்ணுங்க. ஊர்ல இருக்கவங்க இரக்கம் உங்க பக்கம் எப்போதும் இருக்குற மாதிரி பாத்துக்கோங்க” 

சிங்காரம் கலைத்துறையில் முன்னேற ஒரு வழி சொல்லிக் கொடுத்தான். நர்த்தனா அதை கெட்டியாய் பற்றிக் கொண்டாள். 

பெருமூச்சு விட்டான் சிவா “நர்த்தனா கணவனை ஏமாத்தினதோ, முட்டாளடிச்சு என் முதுகில் ஏறி முன்னேறினதோ யாருக்கும் தெரியல. ஒரு பெண் என்பதாலும். பெண்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் உண்மையாவே இருக்கும்னு உலகம் நம்பினதாலும் நான் கெட்டவனாயிட்டேன். நான் செஞ்ச ஒரே தப்பு கோவத்தில் அறிவிழந்து கை நீட்டிட்டேன். அந்த ஒரு தப்புக்கு நான் தந்த விலை என் வாழ்க்கை, என் மானம்”

“உங்க வீட்டாளுங்க”

“எங்க வீட்டில் உண்மையை தெரிஞ்சுட்டாங்க. இருந்தாலும் அவங்க சொன்ன பழி உண்மைதானே. அலுவலகத்தில் எல்லாரோட பார்வையும் என்னை ஊசியா குத்துச்சு. கூனிக் குறுகினேன். தப்பு செய்த நர்த்தனா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம வளைய வரா, நானோ தப்பே செய்யாம ஊரார் மத்தில தலை குனிஞ்சேன். 

விவாகரத்து கிடைச்சதும் வேலையை ராஜினமா செய்தேன். எனக்கு உரிமையான எல்லாத்தையும் வித்து என் அண்ணன்கிட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். இதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிருச்சு. 

 

மனசு கஷ்டமா இருந்தாலும், உயிர் உடம்பில் இருக்குற வரை பசி இருக்குதே. அடுத்த வேளை சாப்பிடணுமே… வேற வேலை தேடினேன்… என் தகுதியைப் பார்த்து இந்த வங்கில வேலை கிடைச்சது. மும்பைக்கு வந்தேன். உங்க வீட்டில் தங்கினேன். 

தீபிகாவால் என் கவலையை மறந்து சிரிக்க ஆரம்பிச்சேன். அவ புன்னகையும் அன்பும் எனக்கு வாழுறதுக்கு வாழ்க்கை இன்னும் மிச்சம்  இருக்குன்னு உணர்த்துச்சு.  உனக்காவது அம்மாவும், தீபிகாவும் இருக்காங்க. என் மேல கல்மிஷமில்லாத பிரியம் வச்சிருக்குறது தீபிகா மட்டும்தான் ஷாலு. 

தீபிகா மேல இருக்கும் பிரியம், உன் மேல இருக்கும் பாசம் எல்லாம் இப்ப அடுத்த கட்டத்துக்கு வந்துருச்சு. உங்க ரெண்டு பேருக்கும் என் மனசில் இருக்கும் இடம் என் வாழ்க்கையிலும் இருக்கணும்னு விரும்புறேன். எனக்கு நவி மும்பை பிரான்ச்சில் வேலை மாற்றல் கிடைச்சிருக்கு. அங்கேயே வீடும் அலாட் ஆயிருக்கு. புது வீட்டில் நம்ம குடும்பம் புது வாழ்க்கையைத் தொடங்கணும்னு ஆசைப்படுறேன்”

அவன் கதையைக் கேட்டு அதிர்ந்து அமர்ந்திருந்தவள், “சிவா…. உங்க எண்ணம் எப்படி சரிவரும். நான் ஒரு தாய்” 

‘நீ முதலில் ஒரு பெண். உனக்கு உலகத்தில் சந்தோஷமா வாழ எல்லா உரிமையும் இருக்கு. உனக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும், உன் குழந்தைக்கு தகப்பன் என்ற உறவையும் தர விரும்புறேன் ஷாலு”

“நான் விவாகரத்தானவ சிவா, நீங்க வேற யாராவது ஒரு பொண்ணா பாத்து…”

“விவாகரத்து வாங்கின எனக்கு மறுகல்யாணம் செய்துக்க உரிமை இருக்கும்போது நீ ஏன் உனக்குன்னு வாழ்க்கையை அமைச்சுக்கக் கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில்தான் வித்யாசம். மனசும் அதில் இருக்கும் உணர்வுகளும் ஒரே மாதிரிதானே இருக்கு.

இதுவரைக்கும் என் மனசில் உள்ள ஆசையை நான் மறைச்சதில்லை. உன் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்குறது உனக்குப் புரியாம இருக்காது. இப்ப வாய்விட்டும்  சொல்லிட்டேன்”

வைஷாலியின் முகத்தில் தயக்கம் மறையாததைக் கண்டவன் 

“நம்ம என்ன தப்பு செஞ்சோம் ஷாலு… நம்மைக் கல்யாணம் செய்துகிட்டவங்க கிட்ட நியாயமா நமக்குத் தரவேண்டிய அன்பையும், உரிமையையும் கேட்டோம். அவங்களோ, அதை மறுத்ததோட மட்டுமில்லாம இந்த சமுதாயத்தில் நம்மை ஒரு குற்றவாளியாக்கிட்டு போய்ட்டாங்க. 

அவங்க சொல்றதாலயோ இல்லை இந்த சமுதாயத்தில் நம்மை தப்பு செஞ்சவங்களா கருதுதறதாலயோ  நம்ம குற்றவாளி ஆயிடுவோமா? நமக்கு உயிரோட இருக்கும்போதே நரகத்தை காட்டினவங்களுக்கே ஒரு வாழ்க்கை அமையும்னா… தப்பே செய்யாத நாமும், உன் வயத்தில் பிறந்ததுக்காக தீபாவும் ஏன் கஷ்டப்படணும். 

நம்ம மூணு பேரும் சேர்ந்து ஒரு குடும்பமா வாழ்ந்தா என்ன? உன்னையும் தீபாவையும் என் கண்ணாட்டம் பாத்துக்குறேன். என் மனைவி மகளா என் பக்கத்திலேயே நீங்க இருங்க. நீ என்ன சொல்றம்மா…. உன் கூடவே, உன் நிழலா நான் வரட்டுமா?”

வைஷாலியின் முகத்தில் யோசனை தோன்றியது. 

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் 

வந்த தூரம் கொஞ்ச தூரம் 

சொந்தமில்லை எந்த ஊரும் 

தேவையில்லை ஆரவாரம் 

தோளிலுள்ள பாரம் போதும் 

நெஞ்சிலென்ன வேறு பாரம் 

நேற்று மீண்டும் வருவதில்லை 

நாளை எங்கே  தெரியவில்லை 

இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது 

வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்துப் பார்க்கச் சொன்னது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

இரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’

அத்தியாயம் – 5 கோடை ரோடு ரயில் சந்திப்பில் டீ காபி…. என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு, தமிழ் பத்திரிக்கைகளை மட்டும் வாங்கிக் கொண்டான் ப்ரித்வி.   பயணிகள் கவனத்திற்கு…… யாத்திரிகா க்ருபயா ஜாயங்கே….  

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtubeஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtube

வணக்கம் தோழமைகளே!   நம்ம எழுத்தாளர்  ஆர்த்தி ரவி அவர்கள் ‘இனி எந்தன் உயிரும் உனதே’ கதையின் பன்னிரெண்டாம் அத்தியாயம் படித்துவிட்டு இந்தக் கதையில் வருவது போல ஒன்றை எண்ணிக் கொண்டு  ஒரு மண்டலம் பயிற்சி செய்தால் பலிக்குமா என்று  கேள்வி