Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’

சுமனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த வைஷாலிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அன்று யாரும் வீட்டுக்கு வரவில்லை . விடியும் தருவாயில் வீட்டுக்கு வந்த சுமனின் அம்மா வைஷாலியின் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார். 

“பாவி, பாவி தங்கமாட்டம் இருந்தாளே…. உன் வார்த்தையாலே அவளைக் கொன்னுட்டியே” என்று கத்தியவரை யாரும் தடுக்கவில்லை. அனைவரும் வைஷாலியை விரோதி போல் பார்த்தனர். 

வீட்டிலிருந்து கிளம்பிய கீதா விபத்தில் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாள் என்ற செய்தியைக் கேட்டு கடவுளே நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன். என் என்னை இப்படி சோதிக்கிற என்று கேள்வி கேட்பதைத்தவிர வைஷாலியால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. 

“இந்தக் கொலகாரிதான் தகாத பேச்சால என் தங்கையைக் கொன்னுட்டா… அவ என் கண்ணு முன்னாடியே நிற்கக் கூடாது வெளிய அனுப்புங்க” என்று சுமனே சொல்லியபோது மற்றவர்கள் அமைதியாகவே இருந்தனர். 

ண்களிலிருந்து ஆறு போல் பெருக்கெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்த வழியின்றி விம்மினாள் வைஷாலி. கடற்கரையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவர்கள் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள். நண்பர்களின் வற்புறுத்துதலால் சொல்ல ஆரம்பித்தவள் நிறுத்தியபோது அனைவரும் பேச முடியாது திகைத்தனர். 

 “பாருங்க என் மேல உங்களுக்கே வெறுப்பா இருக்குல்ல, ஆனா நான் சத்தியமா அந்த அர்த்தத்தில் சொல்லல. கோவத்தில் என்னை அறியாம வாயிலிருந்து வந்த வார்த்தைகள் தப்பா திரிச்சு சொல்லப் பட்டது” குனிந்து விம்மினாள். 

“நீ கோவத்தில் என்ன பேசுறேன்னே புரியாம பேசின மாதிரி சுமனும் வார்த்தைகளைக் கொட்டிருக்கலாம் இல்லையா? பிரச்சனைகள் ஆறினவுடன் அவரோட பேசிப் பாத்தியா?” என்ற சந்தியாவின் கேள்விக்கு 

“பலமுறை. ஆனா சுமன் திருப்பித் திருப்பி சொன்னது என் தங்கையைக் கொலை பண்ண கொலைகாரி இவ. இனிமே இவ கூட வாழ முடியாதுன்னு ஒரே பிடியா நின்னுட்டார்”

“தீபிகாவுக்கு என்ன வழி சொன்னார். நீ அவரை சந்திச்சியா”

“முதல்லேயே இரக்கமில்லாம அழிக்க சொல்லிட்டார்…. “

“உன் மேல கோவம் சரி அவர் குழந்தை மேல கூடவா சுமனுக்குப் பாசமில்லாம் போச்சு” என்ற ரங்காவின் கேள்விக்கு சந்தியா 

“காதலோட பெத்தால் தானே பிள்ளை அருமை தெரியும். இருட்டில் மட்டும் மனைவியைத் தேடினவனுக்கு குழந்தை மேல எப்படி பாசம்  இருக்கும்” என்று பதிலளித்தாள். 

“சுமனோட செல்வாக்கால எங்க விவாகரத்து உடனே கிடைச்சது. அந்த சமயங்களில் என்னை நிறை மாத கர்ப்பத்தோட சில சமயம் பாத்திருக்கார். அப்ப அவர் கண்களில் குற்றம் சாட்டும் பார்வைதான் இருந்தது. என் தரப்பு வாதத்தைக் கடைசி வரை அவர் புரிஞ்சுக்கவே இல்லை”

வைஷாலி வீட்டில் சோபாவுக்கு அருகிலிருந்த சுவரில் சாய்ந்து கால்களை மடக்கி முட்டியின் மேல் கைகளை வைத்தபடி சோகச் சித்திரமாய் அமர்ந்திருந்தாள். இவளா தப்பு செய்திருப்பாள். இந்தப் பெண்ணா உறவைக் கொச்சைப் படுத்தினாள். முதன் முறையாக அவளருகே சற்று தாராளமாய் இடம்விட்டு அமர்ந்தான் சிவா. 

“பணம் எவ்வளவு வேணும்னாலும் தரேன்னு சொல்லி அனுப்பினார். சில ஆயிரங்கள் மட்டும் சொற்பமா ஜீவனாம்சம் தரப்பட்டது. அதையும் இதுவரை நான் தொட்டது கூட இல்லை. நான் தங்குறதுக்கு வாடகையா என் அண்ணனும் அண்ணியும் எடுத்துக்குறாங்க போல. 

இதைத்தவிர சுமன் சொத்தில் தீபிகாவுக்கு பங்கு வாங்குன்னு என்னைக் கட்டாயப் படுத்தினாங்க. எனக்குத்தான் அவரோட பணத்தில் வாழ இஷ்டமில்லை. நான் மறுத்துட்டேன். இதனால் பல வகைல எனக்குக் குடைசல் தந்தாங்க. ஆனா தீபிகாவுக்குப் பால்பவுடர் வாங்கித் தர வேண்டிய நிலை வந்தது பாருங்களேன் அப்பதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். 

இப்பவும் சுமன்ட்ட கணிசமான பணம் வாங்கித் தந்தா எனக்கு வீட்டில் தரப்படும் கவனிப்பே வேற மாதிரி இருக்கும். எனக்குத்தான் விருப்பமில்லை, நான் செஞ்சது தப்பா” சிவாவிடம் கேள்வி கேட்டாள். 

அவளது கைகளை மெலிதாகப் பற்றிக் கொண்டான். “தப்பே இல்லை ஷாலு”

“சுமனோட ரெண்டாவது மனைவி அவரை முன்னமே லவ் பண்ண ஸ்வப்னா. அவளோட பிரசவத்துக்கு இப்படி துடிக்கிறாரே சிவா , தீபிகாவை அரசாங்க ஆஸ்பத்திரில பெத்தேன். எனக்கும் அம்மாவுக்கும் யாருமே உதவிக்கு இல்லை. சுமன் வீட்டுக்குத் தகவல் தெரிவிச்சும் யாரும் வந்து கூடப் பாக்கல. 

நான் அப்படி என்ன பெரிய குற்றம் பண்ணேன் சிவா? தப்பெல்லாம் பண்ண கீதா செத்து போனதாலயே  நல்லவளாயிட்டா….. போனவ சும்மா போனதுமில்லாம என்னை உயிரோட கொன்னுட்டு போய்ட்டா. நான்தான் தப்பு செஞ்சேன்னா தீபிகா என்ன தப்பு பண்ணா?”

“நீ தப்பே பண்ணல கண்ணம்மா… இவ்வளவு அழகான ஒரு குடும்பத்தை உதறின சுமன்தான் பெரிய தப்பு பண்ணிருக்கான்

உணர்ச்சி வசப்பட்டு சில சமயம் நம்ம நடந்துக்குற முறை நமக்கு எதிராவே திரும்பி வாழ்க்கை முழுசும் துரத்தும். இந்த அனுபவம் எனக்கும் இருக்கு. நீ செஞ்ச மாதிரியே நானும் உணர்ச்சி வசப்பட்டு செஞ்ச தப்பு என்னை ஓட ஓடத் துரத்தி இப்ப மும்பைல நிறுத்திருக்கு” என்றான். 

“சிவா… “ கேள்வியாய் பார்த்தாள் வைஷாலி. 

“நானும் ஒரு டைவெர்சி. என் மனைவி பெயர் நர்த்தனா. நீயும் உன் அம்மாவும் விரும்பிப் பார்க்கும் ‘வெள்ளிச் சலங்கைகள்’ டிவி சீரியல் நாயகி” என்று சொன்னதும் 

“அவங்களா… அவங்க கணவன் ஒரு சைக்கோ, கொடுமைக் காரன்னு ஒரு பேட்டியில்..” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள். 

“நர்த்தனா குறிப்பிட்ட கொடுமைக்காரன், சைக்கோ எல்லாம் நான்தான்.. “ விரக்தியுடன் சொன்னான். 

“நர்த்தனாவுக்கு எங்க ஊருக்குப் பக்கத்திலிருந்த கிராமத்தில் வீடு. வறுமையான குடும்பம். ஆனால் இவளுக்கு டான்ஸ்ல ஆர்வம் அதிகம். அவ அப்பாவுக்கு சரியான வேலை இல்லை. அவளும், அவ அம்மாவும நடனம் கத்துத் தந்து குடும்பத்தை நடத்திட்டு இருந்தாங்க. ஜாதகம் அற்புதமா பொருந்தியதால் எங்க கல்யாணம் முடிவாச்சு. பொண்ணு பாத்து ஒரே மாதத்தில் கல்யாணம் நிச்சயமாச்சு. திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும்போது  என்னைப் பாக்க செங்கல்பட்டில் இருக்கும் ஆபிஸ்க்கு நர்த்தனா வந்தா”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 9’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 9’

அத்தியாயம் – 9 ரஞ்சன் அகிலாண்டத்தை வற்புறுத்தினான்.   “சொல்லு” என்றார் அகிலாண்டம்   “என்னத்த சொல்ல. எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல பொண்ணு. அழகானவ. அம்மா அப்பா கிடையாது. பெரியப்பாதான் கார்டியன். அவளோட வீட்டையும் நிலத்தையும் கவனிச்சுக்கிறார் போல.