Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’

செந்தில் வேண்டா வெறுப்பாய் சிம்லாவுக்கு விமான டிக்கெட்டுகள் வாங்கித் தந்தான். சுமனுக்கு மறுக்கவும் முடியவில்லை. அவனுக்கும் இளம் மனைவியுடன் தனியே நேரம் செலவிட ஆசை. சுமன் கட்டிக்கொண்டிருக்கும் சில கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருந்தது. புதிதாய் சில ப்ராஜெக்ட்ஸ் கிடைத்தது. வேலை பளுவால் வீட்டு நினைவே வருவதில்லை. இரவு நேரங்களில் அவள் பேச்சைக் கேட்க அவன் தயாராய் இல்லை. 

மச்சினன் வற்புறுத்தல் என்று தேனிலவுக்குக் கிளம்பினான். இந்த சிம்லா பயணம் தங்கள் ரசனைகளை பகிர்ந்து கொள்ள உதவும் என்று நினைத்தான். அவர்களது பயணத்துக்கு சில தினங்கள் முன்பே கீதா வெளியூர் பயணம் சென்றுவிட்டாள். சுமன் அவளது வேலைகளையும் சேர்த்துப் பார்த்ததால் களைத்துப் போனான். சிம்லாவில் கணவனுடன் சந்தோஷமாய் கழிக்க நினைத்த வைஷாலிக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது “வெல்கம் டூ சிம்லா” என்றபடி வரவேற்றாள் அங்கிதா. 

“கீதா… இங்க எப்படி நீ”

“நம்மை மாதிரி பிசினெஸ் ஆட்கள் நேரத்தை ஊர் சுத்தி வீணடிக்க முடியுமா சுமன். அதனால இங்க தங்கப் போற பதினஞ்சு நாளும் ஒரு சின்ன ப்ராஜெக்ட் செஞ்சுத் தர ஒத்துகிட்டிருக்கேன். ஒரு ரிஸார்ட்டை புதுப்பிச்சுத் தரணும். ஆட்கள், பொருள் எல்லாம் ரெடி. இன்னைக்கே நம்ம ரெண்டு பேரும் வேலையை ஆரம்பிச்சுடலாம்” தீர்மானமாய் சொல்லியபடி கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினாள்.

வைஷாலியின் ஏமாற்றம் தாங்கிய முகத்தைப் பார்த்தபடி சொன்னான் சுமன் “சாலிட்ட ஊர் சுத்திக் காட்டுறேன்னு சொல்லிருக்கேன் கீதா. நீ ஸ்டார்ட் பண்ணு. நான் ரெண்டு நாள் கழிச்சு ஜாயின் பண்ணிக்கிறேன்”

“ஊர் சுத்திக் காட்ட இங்க நல்ல ட்ராவல்ஸ் எல்லாம் இருக்கு. அதில் ஒண்ணை ஏற்பாடு செய்து அவளை அனுப்பிடலாம். உனக்கு பத்து நிமிஷம் டைம் தரேன் ரிப்ரெஷ் பண்ணிட்டு வா” என்றபடி அறை சாவியைத் தந்தாள்.

“கீதா, செந்தில் எங்களுக்கு வேற விடுதியில் அறை ஏற்பாடு செய்திருக்காரே”

“அங்க போய் பார்த்தேன். சீப்பான ஒரு ஹோட்டல். அவனை மாதிரி ஆளுங்களுக்கு அது சரிப்படும். அந்தக் குடும்பத்தில் பொண்ணெடுத்தா, நம்மளும் அவங்களை மாதிரி சீப் ஆகணும்னு அவசியமில்லை” என்று நாக்கு எனும் சாட்டையால் வைஷாலியை விளாசினாள். 

கண்களில் நீருடன் நின்றிருந்த மனைவியை சமாதானமாய் அணைத்தவன், “சாலி, கீதா பலாப்பழம் மாதிரி, வெளிய கரடு முரடாய் பேசினாலும் ரொம்ப நல்லவ. யாருக்காக இப்படி ஓடி ஓடி சம்பாரிக்கிறா… நமக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும்தானே… இவ பேசுறதை பொருட்படுத்தாதே. எனக்காக… ப்ளீஸ்” என்ற சுமனிடம் வேறு வழியின்றி தலையாட்டினாள். இருவரின் தனிமைக்கு இடையூறாய் படாரென்று கதவு திறந்தது. அங்கீதா உள்ளே வந்தாள். 

“சுமன் உன்னை ரிப்ரெஷ் செய்துட்டுக் கிளம்ப சொன்னேனே. ஒரு நிமிஷம் டைம் கிடைச்சாக்கூட ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுடுவியா. விடலைப் பையனை மாதிரி இவ முந்தானை பின்னாடியே சுத்தாம, ஒரு தொழிலதிபன்னு நினைச்சுப் பழகு. தானவே கம்பீரம் வரும். இன்னும் ரெண்டு நிமிஷத்தில் கிளம்புறோம்” என்றவாறு அவர்கள் அறையிலிருந்த கதவைத் திறந்து உள்ளே இருந்த மற்றொரு அறைக்குச் சென்றாள். சுமன் குளியலறைக்கு சென்றான். 

சொன்னதைப் போல இரண்டு நிமிடங்களில் வேறு உடை மாற்றி மெலிதான ஒப்பனையோடு வந்தாள் கீதா . 

“வைஷாலி இந்த சிங்கிள் ரூம்லதான் நான் தங்கிருக்கேன். உன் ரூம் வழியா உள்ள போகணும். நீ சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் சுமனை இழுத்துட்டு பெட்ரூம்ல நுழைஞ்சுடாதே” என்றாள் இளக்காரமான குரலில். அதற்குள் சுமன் வந்துவிட்டான். 

“என்ன கீதா?”

“வைஷாலி ஊர் சுத்திப் பாக்க பத்து நாள் டூர் பாக்கேஜ் வாங்கிருக்கேன். திருப்தியா போய் பாத்துட்டு வா சாலி. பாவம் இதெல்லாம் நீ எங்க பாத்திருக்கப் போற” என்றாள் நக்கலாக. பின் அண்ணன் தங்கை இருவரும் கிளம்பிவிட்டனர். 

வைஷாலிக்கு இப்போது தனது நிலை நன்றாகப் புரிந்தது. சுமனுக்கும் அவளுக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய தடை அங்கீதாதான். அவள் சுமனையும் வைஷாலியையும் மனதால் நெருங்கவே விடமாட்டாள். 

தேன் நிலவுக்கு வந்த கணவன் தங்கையின் பேச்சைக் கேட்டுத் தொழிலை கவனிக்கச் செல்வதும், அண்ணன் அண்ணி தங்கும் படுக்கை அறையின் கதவை, அவர்கள் உள்ளிருக்கும்போதே, அனுமதி பெறாமல் சுவாதீனமாய் திறந்து உள்ளே நுழையும் தங்கையையும், அதையும் பொருட்படுத்தாத அண்ணனையும் கண்டு விக்கித்துப் போனாள். 

தொடர்ந்த பத்து நாட்களிலும் தேனிலவில் தன்னந்தனியாய் சிம்லாவின் தாராதேவி ஆலயம், க்ரைஸ்ட் சர்ச், புகழ் பெற்ற பொம்மை ரயில் பயணம் என்று சக பயணிகளுடன் சென்றாள். எதுவுமே அவளுக்கு ருசிக்கவில்லை. அவள் வாழ்க்கை எங்கு போகுமென்றும் புரியவில்லை. இரவு கண்களில் நீர் வற்றும் மட்டும் அழுதுத் தீர்த்தாள். ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது. 

“சாரி சாலி, நாங்க நினைத்ததைவிட வேலை கடுமையாயிடுச்சு” என்று மனைவியிடம் மன்னிப்புக் கேட்டான் சுமன். 

“பரவால்ல. இந்தாங்க” லாக்கெட் பஸார் எனப்படும் மரசாமான்கள் விற்கும் கடைகள் நிரம்பிய பஸாரில் வாங்கிய வேலைப்பாடு மிகுந்த மரப் பொம்மையைப் பரிசாகத் தந்தாள் வைஷாலி. ஒரு அழகான ராதா கிருஷ்ணா பொம்மை. 

“பியுட்டிபுல்” என்று வியந்தான் சுமன். 

“இருந்தாலும் உன்னை விட இது அழகு கம்மிதான்” என்ற அவனது வார்த்தைகளிலேயே உள்ளம் குளிர்ந்தாள். இந்த அன்பு தன்னை அவனிடம் கட்டாயம் சேர்க்கும் என்று நம்பினாள். 

ஊருக்குத் திரும்பி வந்தனர். நாட்கள் ஒரு மாற்றமுமின்றி வழக்கம்போல் சென்றது. பலநாட்கள் சுமனை வேலை என்று சொல்லி வீட்டிற்குக் கூட வரவிடாமல் துரத்தும் கீதா சில நாட்கள் எட்டு மணிக்கே வீடு திரும்பும்படி பார்த்துக் கொள்வாள். எப்போதும் சிந்தனையோடு திரியும் கீதா மனதில் ஏதோ இருக்கிறது அது என்னவாயிருக்கும் என்றவாறு சமைத்த பதார்த்தங்களை உணவு மேஜையில் அடுக்கினாள். சற்று சோர்வாய் உள்ளே நுழைந்தான் சுமன். 

“சாலி வாங்கித் தந்த பொம்மையை ஆபீஸ்ரூம் டேபிளில் வச்சிருந்தேன். இன்னைக்குக் காலைல பாத்தா உடைஞ்சிருக்கு” என்று வருத்தத்தோடு சொன்னான். 

“இதுக்குப் போயி யாராவது கவலைப்படுவாங்களா? அது பெரிய தங்க பொம்மை… இந்தா அதே இடத்தில் நானும் பொம்மை வாங்கினேன். இதை வச்சுக்கோ” என்று தன் அறையில் வைத்திருந்த யானை பொம்மையை எடுத்துத் தந்தாள். 

உணர்ச்சியை வெளிக்காட்டாமல் வேலைகளை செய்து முடித்தாள் வைஷாலி. கீதாவுக்குக் குறுகுறுவென்று இருந்தது. 

“என்ன ஷாலி? பொம்மை தவறி உடைஞ்சது வருத்தமா இருக்கா?”

“இல்லை அது தவறி உடைஞ்சிருக்காது. நீதான் உடைச்சிருப்ப” என்றாள் கண்கள் முழுவதும் வெறுப்போடு. 

மெலிதான ஆச்சிரியம் கீதாவின் முகத்தில் “நான் நினைச்சதை விட நீ புத்திசாலிதான். போ இதை இன்னைக்கே சுமன் கிட்ட தலையணை மந்திரமாய் ஓதிடு”

“அதுக்கு எந்தப் பலனும் இல்லைன்னு எனக்குத் தெரியும்” என்றாள் விரக்தியுடன். 

“குட்… உண்மையை புரிஞ்சு நடந்துக்கோ… இந்த வீட்டில் நான்தான் எல்லாம். என்னை மீறி யாரும் நடக்கக் கூடாது” என்று ஆணவமாய் சொல்லிச் சென்றவளை எதுவும் செய்ய இயலாத கையாலகதவளாய் பார்த்தாள். 

சிலநாட்கள் சோர்வாய் தெரிந்த வைஷாலி கற்பமுற்றிருப்பதை மருத்துவர் உறுதி செய்ய, குடும்பம் குதுகலமாய் மாறியதையும், அனைவரின் கவனமும் வைஷாலி மேல் திரும்பியதையும் கண்டு கீதாவின் பொறாமை மீண்டும் தலை தூக்கியது. 

“உனக்கு என்ன வேணும் சாலி” கனிவுடன் கேட்டான் சுமன். 

“என் கூட நீங்க தினமும் ஒரு மணி நேரமாவது பேசணும். கல்யாணமாகி ஐஞ்சு மாசமாச்சு, இன்னமும் உங்களைப் பத்தி ஒண்ணுமே எனக்குத் தெரியல. எதுவும் தெரியாமையே குழந்தை பெத்துக்கப் போறேன். நாளைக்கு நம்ம பிள்ளை அப்பாவைப் பத்திக் கேட்டா கூட எதுவும் சொல்லத் தெரியாது” என்றாள் ஆதங்கத்துடன் 

“வேணும்னேவா செய்யுறேன். என் வேலை அப்படி”

“உங்க தங்கச்சி கேட்டா எப்படியாவது நேரம் ஒதுக்குறிங்கள்ள.. அதே மாதிரி எனக்கும் நேரம் தாங்க”

அவளை விட்டு விலகியவன் “உனக்கு வேணும்னு கேளு. என் தங்கை மேல பொறாமைப் படாதே. அவளே நீ மாசமா இருக்குறதில் எவ்வளவு சந்தோஷமா இருக்கா தெரியுமா. அவளால குழந்தை பெத்துக்க முடியாது. நம்ம குழந்தையை அவ வாரிசா நெனச்சு கனவு காணுறா. 

கீதா உனக்குப் பொறாமை ஜாஸ்தின்னு சொன்னப்ப நான் பொருட்படுத்தல, ஆனா இப்ப அது நிஜம்னு நினைக்கிறேன். உன்கிட்ட இப்படி ஒரு மோசமான பக்கம் இருக்கும்னு எதிர்பார்க்கல” தான் சொல்லவந்ததை புரிந்து கொள்ளாமல் எழுந்து சென்ற சுமனை சமாதனப் படுத்தத் தெரியாது தவித்தாள். 

வீட்டில் வைஷாலியும் கீதாவும் மட்டுமே. சுமன் அலுவலகம் சென்றிருக்க, பார்கவி தோழி வீட்டுக்கு  சென்றிருந்தார்.  

“என்ன சுமன் கிட்ட என்னைப் பத்தி பேசின போலிருக்கு” கிண்டலாய் கேட்டாள். 

‘சீ என்ன பிறவி இவ, நாங்க பேசுறதை ஒட்டு வேற கேட்டிருக்கா’ அருவருப்பில்  பதில் சொல்லவில்லை வைஷாலி. 

“நீ என்ன சொன்னாலும் உன் பப்பு வேகாது”

“ஒரு மனைவிக்கு அவர் காதலைத் தரலை, ஆன அவர் குழந்தையோட அம்மாவுக்கு உரிய மரியாதையைக் கண்டிப்பா தருவார்” உறுதியாய் சொன்னாள்.

வைஷாலி சென்று நெடுநேரத்துக்கு அவள் சொன்னதையே எண்ணமிட்டபடி அமர்ந்திருந்தாள் கீதா. பின்னர் அவளது அறைக்கு வந்தவள் 

“சாலி, இந்த அம்மா கிம்மா இந்த செண்டிமெண்ட் எல்லாம் விட்டுரு. குழந்தை பிறந்ததும் அதை நான்தான் வளப்பேன். நீ வெறும் வேலைக்காரியா அதுக்கு சாப்பாடு மட்டும் வேளா வேளைக்குத் தா”

“அப்ப நான் இந்த வீட்டிள் வேலைக்காரிதானா?”

“அதுல இன்னமும் உனக்கு சந்தேகமா? என் அண்ணனோட பிள்ளையை சுமக்கும் வாடகைத் தாய் மாதிரி. எங்க குடும்பத்தில் உன் இடம் ஒரு வேலைக்காரி மட்டுமே.”

“நீ சொன்னதை அப்படியே உன் அண்ணன்ட்ட சொல்வேன்”

“சொல்லு அவன் நம்ப மாட்டான். புவர் சாலி, அவனுக்கு நான்தான் முக்கியம். என் சந்தோஷம்தான் அவனுக்கு வேணும். அதுக்காகத்தான் அவன் காதலிச்ச ஸ்வப்னாவைக் கூட மறந்துட்டு உன்னைக் கல்யாணம் செய்துட்டான். எல்லாமே என் திருப்திக்காக என் வாழ்க்கைக்காக, என் சந்தோஷத்துக்காக” ஆணவமாய் சொன்னாள். 

“உன் வாழ்க்கை உன் சந்தோஷம்தான் முக்கியம்னா அப்பறம் ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டார். உன்னோடே இருந்திருக்க வேண்டியதுதானே” ஆத்திரத்தால் வைஷாலியின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தது. கீதாவின் முகத்தில் புன்னகை. 

சுமனை செல்லில் அழைத்தவள் குரலில் அழுகையைக் கொண்டு வந்தாள். “சுமன், இந்த வார்த்தையைக் கேட்டு இன்னமும் நான் உயிரோட இருக்கணுமான்னு இருக்கு. உன் பொண்டாட்டி ‘நீ முக்கியம்னா ஏன் உங்கண்ணன் என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டார், உன்னோடே இருந்திருக்கலாமே’ன்னு சொல்லிட்டா. இவ்வளவு கேவலமான எண்ணங்கள் கொண்ட பெண்ணை உனக்குக் கல்யாணம் செய்து வைச்சது என் தப்புத்தான். என்னை மன்னிச்சுடு. இனிமே இவ கூட நீ வாழ வேண்டாம் உனக்குப் பிடிச்சவளா பார்த்துக் கல்யாணம் செய்துக்கோ. இது என் கடைசி ஆசை” என்றபடி கட் செய்தாள். 

விக்கித்துப் போய் “ஐயோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லல” என்று கத்திய வைஷாலியின் குரலை சுமன் பொருட்படுத்தினால் தானே. 

“இனிமே நீ என் காலில் விழுந்து கதறினால்தான் சுமன் உன்னை வீட்டில் சேத்துப்பான். அதுவும் நான் சம்மதிச்சால்” என்றபடி மோட்டார் பைக்கில் ஏறிய கீதா, வைஷாலியை பார்த்து சீட்டியடித்தபடி கிளம்பினாள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 6’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 6’

சோனா வெகுவாய் ஆசைப்பட்ட சிங்கப்பூர் பயணம் ஒரு வழியாக சாத்தியமாயிற்று. வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது சோனாவின் நெடுநாளைய கனவு. சிங்கபூர், மலேசியா அழைத்து செல்லும் இன்பச் சுற்றுலா மையத்தில் இருவது சதவிகித தள்ளுபடியோடு இந்த வாய்ப்புக் கிடைத்ததும் கண்டிப்பாய் செல்ல

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’

அத்தியாயம் – 5 கோடை ரோடு ரயில் சந்திப்பில் டீ காபி…. என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு, தமிழ் பத்திரிக்கைகளை மட்டும் வாங்கிக் கொண்டான் ப்ரித்வி.   பயணிகள் கவனத்திற்கு…… யாத்திரிகா க்ருபயா ஜாயங்கே….  

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’

சுமனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த வைஷாலிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அன்று யாரும் வீட்டுக்கு வரவில்லை . விடியும் தருவாயில் வீட்டுக்கு வந்த சுமனின் அம்மா வைஷாலியின் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார்.  “பாவி, பாவி தங்கமாட்டம் இருந்தாளே….