Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7

நாகன்யா – 07

 

நாகர் கோவில். ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த சுடுகாடு. பேருக்கேற்பவே மயான அமைதியோடு இருந்தது. நேரம் நடுநிசியை நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று போலவே இன்றும் அந்த நால்வர் கூடியிருந்தனர். மை பூசியிருந்த உடல்களும் முகங்களும் ஆள் அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்தன. 

 

நால்வரும் ஆவேசமாக ஏதேதோ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே அவர்கள் தலையை சிலுப்பி உடலை சிலிர்த்துக் கொண்ட காட்சி காண்போரைக் கிலி கொள்ள வைக்கும் என்பதில் ஐயமில்லை. 

 

மயானம் முழுவதும் இருள் போர்வை போர்த்தியிருக்க மந்திரவாதிகள் முன்னால் மட்டும் நெருப்பு திபுதிபு என்று எரிந்து கொண்டிருந்தது. அந்த சிவந்த கங்குகளின் ஒளி பட்டு அந்த நால்வரின் முகங்களும் மிக விகாரமாகத் தெரிந்தது. 

 

மந்திரம் ஓதுவதை நிறுத்திய தலைவன் பேச ஆரம்பித்தான். 

 

“நாக பஞ்சமிக்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கின்றன. அந்த நாககன்னி இங்கு வருவாளா? யாருக்காவது அந்த நம்பிக்கை இருக்கிறதா?”

 

“எங்களால் தூரத்திலிருந்து கூட அவளை நெருங்க முடியவில்லை தலைவா.. அவளை தனியாக எங்குமே காண முடியவில்லை. இதில் நீங்கள் இட்ட பலவிதமான சட்டதிட்டங்கள். இவற்றை எல்லாம் கடைப்பிடித்து எங்களால் அவளை இங்கு அழைத்து வருவது சாத்தியமல்ல. மன்னிக்கவும் தலைவா..”

 

ஒருவன் இவ்வாறு கூறவும் தலைவனின் மை பூசிய முகமோ இன்னமும் கோரமாகியது.

 

“ஏன்டா இதைச் சொல்லவா உனக்கு இத்தனை வருடங்கள் இவ்வளவு மந்திர வித்தைகளையும் ஊன் உறக்கம் பாராது கற்பித்தேன். இன்னமும் இரு வாரங்கள் இருக்கும் நிலையில் முயன்று பாராமல் இப்போதே முடியாது என்று சொல்லும் நீ என் சீடனாக இருக்கவே தகுதியற்றவன்..”

 

கர்ச்சித்த தலைவன் தனது அருகிலிருந்த வாளை எடுத்து ஒரே வெட்டில் அந்தச் சீடனின் தலையைத் துண்டித்து தூக்கியெறிந்தான். மற்றைய இருவரும் நொடிப் பொழுதில் நண்பனுக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து வருந்தவும் முடியாமல் சிலையாய் அமர்ந்திருந்தனர். 

 

“உலகிலேயே அதிசக்தி வாய்ந்த பூத வித்தையான காஷ்மோராவால் கூட அந்த நாககன்னியை நெருங்க முடியவில்லை.  அவ்வாறிருக்க நாம் எப்படி குருவே அவளை வர வைப்பது?”

 

இன்னொருவன் தலையை இழக்கத் துணிந்தே அந்தக் கேள்வியைக் கேட்டான். தலைவன் வாளை உயர்த்திய சமயத்தில் மற்றையவன்,

 

“என்னால் முடியும்.. அவளை எப்படியும் இங்கே அழைத்து வந்து பலி கொடுத்து கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை அடைந்தே தீருவேன்..”

 

ஆக்ரோசமாகக் கூறியவன் தலைவன் கையிலிருந்த வாளை மின்னல் வேகத்தில் பறித்தவன் இப்போது தலைவனின் தலையையே துண்டித்து எறிந்தான். மற்றைய சீடனோ வாய் பிளந்து பார்த்திருந்தான். 

 

“இருவரது உடல்களையும் இருந்த அடையாளம் தெரியாமல் எரித்து விடு. தலைகளை மட்டும் வடக்கு மூலையில் புதைத்து விடு..”

 

கர்ணகொடூரக் குரலில் உத்தரவிட்டவன், வேட்டியிலிருந்த மண்ணைத் தட்டியவாறே எழுந்து நாகன்யா வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் வாய் ஏதோ மந்திரங்களை உச்சரிக்க, கண்கள் இரண்டும் தீக்கங்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்தன. 

 

நண்பன் சொன்னதற்கு இணங்க முன்பே பிணம் எரித்திருந்த ஒரு இடத்தில் இரு சடலங்களையும் கொண்டு சென்று போட்டவன், விறகுகளை அடுக்கி எரியூட்டினான். தலையையும் புதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு எங்கோ சென்று மறைந்தான். 

 

தூக்கத்திலிருந்த நாகன்யாவுக்கு விழிப்புத் தட்டியது. தாகம் எடுக்கவே அருகிலிருந்த மண்பானையிலிருந்து நீரை மொண்டு குடித்தவளுக்கு அதன் பின்னர் தூக்கம் வர மாட்டேன் என்றது. யன்னல் திரைச்சீலையை ஒதுக்கி வெளியே பார்வையை செலுத்தினாள். இரவுக்கே உரிய கருமையில் ஊரே நிசப்தமாக உறங்கிக் கொண்டிருந்தன. தூரத்தே சில நாய்களின் ஒலி. காற்றுக்கு மரங்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன. 

 

பொதுவாக பெண்கள் பார்க்கப் பயப்படும் இரவுநேரக் காட்சியை நாகன்யா இயல்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வை என்னவோ வெளியே இருந்தாலும் கூட மனதில் ஏகப்பட்ட சிந்தனைகள். வழக்கமாக அவள் மனதில் உதிக்கும் அந்த எண்ணம் இன்று வலுவாய் எழுந்தது.

 

‘நான் உண்மையிலேயே தெய்வப் பெண்தானா? இன்னமும் எத்தனை நாட்களுக்கு இந்த ஏமாற்று வேலை? அநாதையாய் பிறந்தது என் தவறா? வளர்ப்பவர்களின் நன்றிக் கடனுக்காக இருபத்தைந்து வருடங்களாக நடித்தாகியாயிற்று. இனிமேலாவது இந்த வாழ்க்கையில் இருந்து மீட்சி கிடைக்குமா? ஈஸ்வரிடம் உண்மைகளை சொல்லி விடுவோமா?’

 

கழுத்தில் போட்டிருந்த நாகம்மன் உருவம் பொறித்த அந்த சிறிய பதக்கத்தை வருடியவாறே சிந்தனையில் ஈடுபட்டாள். என்னதான் சாமி, பூசை, யோகா என்று மனதை ஈடுபடுத்தினாலும் கூட அவளொட்டப் பெண்கள் மூன்று, நான்கு பிள்ளைகளோடு குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வருவதைக் காணும் போது இவள் மனம் ஏங்கித் தவிக்கத்தான் செய்தது. 

 

அந்தப் பெண்கள் எல்லாம் இவள் அழகையும் அருளையும் பார்த்து வியக்க, இவளோ அவர்களின் வாழ்க்கையை பார்த்து ஏங்கினாள். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதான் போலும். ஈஸ்வரைக் கண்ட நொடியிலிருந்து அவள் மனதின் ஏக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

 

நினைவு தெரிந்த நாளிலிருந்தே ஊரின் நன்மைக்காக தியாகம் செய்யப் பிறந்தவள் தான் என்ற எண்ணம் திணிக்கப்பட்டிருந்தது. இருபத்தைந்து வருடங்கள் அது போலவே கடந்தும் விட்டாள். ஆனால் இப்போதெல்லாம் இந்த ஒரே மாதிரியான வாழ்க்கையில் சலிப்புத் தட்டி விட்டது. தெய்வத்தின் பெயரால் தான் செய்யும் ஏமாற்றுக்கும் மற்றையவர்களுக்கும் பெரிதாக என்ன வேற்றுமை என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது. 

 

‘நாகம்மா.. நீதான் எனக்கு ஒரு வழியைக் காட்டு’

 

பாவம்! அவளும் யாரிடம் தான் தன் மனக்குறையைக் கொட்டுவது? அந்த இறைவியிடமே வழி கேட்டு விட்டு மறுபடியும் படுக்கையில் வீழ்ந்தாள். இப்போது மூடிய கண்களுக்குள் ஈஸ்வர் மந்தகாசப் புன்னகையோடு வந்து நின்றான். இவளும் மென்னகையோடு தூங்கிப் போனாள்.

 

நாகன்யா வீட்டை நெருங்கிய மந்திரவாதி அன்று போலவே இன்றும் நாய்களை தன் பார்வையாலேயே மயக்கி விட்டு நாகன்யாவின் அறையை கூரை வழியே அடைந்தான். ஓடோன்றை இலேசாய் விலத்தியவன், அவள் தூங்குவதையே பார்த்திருந்தான். 

 

‘நீ எந்தப் பாவமும் செய்யாத பெண் என்று நான் அறிவேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையின் இலட்சியமே இந்த உலகத்தை ஆள்வது தான். அதற்காகத்தான் இத்தனை வருடங்கள் எத்தனையோ விதமான கடினப் பயிற்சிகளை மேற்கொண்டு இன்று இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். உன்னுடைய உயிர் ஒன்றுதான் என் குறிக்கோளை நிறைவேற்றும். பாவம், பரிதாபம் பார்த்தால் என் இலட்சியத்தை அடைவது எப்படி? என்னை மன்னித்து விடு..’

 

மனதில் எண்ணமிட்டவன் அப்படியே கூரையில் படுத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த நாகன்யாவையே பார்த்திருந்தான். இதை எதையும் உணராது  நாகன்யாவோ கனவிலே ஈஸ்வரனோடு பேசிக் கொண்டிருந்தாள். 

 

வழக்கம் போலவே காலையும் விடிந்தது. காலைப் பூசை முடித்து விட்டு அப்போதுதான் நாகேஸ்வரன் வீட்டுக்கு வந்திருந்தார். கூடத்திலே சுடுகாட்டு வெட்டியான் அமர்ந்திருந்தான். நாகர்கோவிலைப் பொறுத்தவரை சாதி வேறுபாடு எல்லாம் இல்லை. ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் அவன் குழந்தைகளே கொள்கையை உடையவர்கள் அந்த ஊர் மக்கள். 

 

வேறொரு இடமாக இருந்திருந்தால் வெட்டியான் வீட்டுக்கென்ன,  ஊருக்குள்ளே கூடக் காலடி எடுத்து வைக்க முடியாது. ஆனால் இங்கு அனைத்து மக்களின் மனதிலும் வெட்டியான் வேலையும் விவசாயம், ஆசிரியப் பணி போல ஒரு தொழில்தான். அதைச் செய்பவனை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? 

 

ஒரு வீட்டில் இறப்பு நடந்தால் மயானத்துக்கு போய் விட்டு வந்து நாங்கள் மஞ்சள் தெளித்து நீராடுவது இல்லையா? அதேபோல வெட்டியானும் சுத்தபத்தமாக இருந்தால் சரி எனும் வாதம் ஒரு முறை நாகன்யாவால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட பின்னர் அதுவே தெய்வ வாக்காகக் கொள்ளப்பட்டு இன்று வரை பின்பற்றப்படுகிறது. வெட்டியானும் ஆலயம் சென்று வழிபட்டு எல்லோரையும் போல குடும்பத்தோடு சாதாரண ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறான். 

 

காலையிலேயே வெட்டியானை கண்டதும் நாகேஸ்வரன் முகம் சுருங்கியது. ஏதாவது அவசர அவசியமின்றி வேலை நேரத்தில் இங்கு வந்து காத்திருக்க மாட்டானே என்ற எண்ணம் எழ அவனை சிறிது காத்திருக்குமாறு பணித்து விட்டு, அங்கிருந்த மற்றவர்களை வேகமாகக் கவனித்து அனுப்பினார்.

 

“என்ன விசயம் நாகா..? காலையிலேயே வந்து இருக்கிறாய்..”

 

அங்கும் இங்கும் பார்த்தவன், அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி விட்டு,

 

“நேற்று மாலை ஐந்து மணி வரை நான் சுடுகாட்டில தான் ஐயா இருந்தேன். ஒரு வாரமாக எந்தப் பிணமும் வந்திருக்கவில்லை. வழக்கம் போல கூட்டிச் சுத்தம் செய்து, மரங்களுக்குத் தண்ணீர் விட்டு விட்டு ஐந்து மணிக்கே வீட்டுக் போய் விட்டேன்.”

 

நாகர்கோவில் சுடுகாடு உண்மையில் ஒரு பூஞ்சோலையாகத்தான் காட்சி அளிக்கும். நடுவிலே பிணம் எரிப்பதற்காகவும் ஒரு பக்கம் பெரியதொரு கட்டிடம் விறகுகள் வைக்கவும், மழை நேரம் ஒதுங்கவும், கிரியைகள் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டிருந்தது. சுடுகாட்டைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலி ஓரமாக நான்கு புறமும் பூமரங்கள் வைக்க நாகன்யா கட்டளை இட்டிருந்தாள். 

 

மயானம் என்பது இறுதியாக நாம் மீளா உறக்கத்திற்குச் செல்லும் இடம். அங்கு போவோருக்கு தாமும் ஒரு நாள் அங்கு வருவோம் என்ற உணர்வு ஒவ்வொரு முறையும் போகும் போதும் ஏற்படும். அங்கு போகும் போது தங்கள் மரணங்களை எண்ணி பயந்து விடக் கூடாது என்பதற்காக மயானத்தை ஒரு பூஞ்சோலையாக்கி அந்த ஊர் மக்களுக்கு மரணத்தைப் பற்றிய பயத்தை நீங்கி வாழும் காலம் வரை நல்லபடியாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருந்தாள் அந்த நாககன்னி.

 

“சரி.. அப்புறம் என்னதான் நடந்தது? எதற்கு இப்படிப் பயந்து போய் இருக்கிறாய் நாகா? நீ தெளிவாக எல்லாவற்றையும் சொல்லு..”

 

“ஐயா.. அது வந்து ஒரு இடத்தில் பிணம் எரித்ததற்கான அடையாளம் இருக்கிறது. ஆனால் எந்தவிதமான உடல் எச்சங்களும் அங்கில்லை. சொல்லப் போனால் பிணம் எரித்ததற்கான அடையாளம் கூட இல்லை..”

 

“நீ என்ன சொல்கிறாய் என்று தெளிவாக உணர்ந்துதான் சொல்லிறாயா? அடையாளம் இருந்தது என்கிறாய். அப்புறம் இல்லை என்கிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை நாகா..”

 

“அங்கு நிலம் எரித்ததற்கான தடயங்கள் இல்லை ஐயா.. ஆனால் மண்ணின் சூட்டை வைத்து என்னால் நிச்சயமாக சொல்ல முடியும் ஐயா.. அங்கே இரவு பிணம் எரிக்கப்பட்டிருக்கிறது.. நாற்பது வருடங்களாக இந்தத் தொழில் செய்பவன் ஐயா நான். என்னால் நிச்சயமாகக் கூற முடியும்.”

 

அவன் கூறியதைக் கேட்டு நாகேஸ்வரன் யோசனையோடு தாடையைத் தடவினார். 

 

“வேப்பமரத்துக்குக் கீழேயும் ஏதோ பூசைகள் செய்த அடையாளங்கள் அந்த மண்ணில் கலந்திருக்கிறது ஐயா. அதனால் சந்தேகப்பட்டு சுடுகாடு முழுவதும் ஒரு இண்டு விடாமல் அலசி ஆராய்ந்தேன். வடக்குப் பக்கமாக மண் தோண்டிப் புதைத்த அடையாளம். என்னதான் மேலே பழைய மண்ணை போட்டு மூடியிருந்தாலும் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது ஐயா. உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தேன். பத்தடி ஆழத்தில் இரு தலைகள் புதைக்கப்பட்டிருக்கிறது ஐயா. என் மகனைக் கூப்பிட்டு காவலுக்கு அங்கே வைத்து விட்டு உங்களிடம் விடயத்தைச் சொல்ல ஓடி வந்தேன் ஐயா.”

 

வெட்டியானும் ஒருவாறு அனைத்தையும் கூறி முடிக்க நாகேஸ்வரன் முகத்தில் இப்போது பலத்த யோசனை படர்ந்தது. எல்லாம் சில நொடிகளே. தோளில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு உடனே வெட்டியானோடு சேர்ந்து சுடுகாட்டுக்குச் சென்றார்.

 

“எனக்கென்னமோ யாரோ மந்திரவாதிகள் வந்திருப்பார்களோ என்ற எண்ணம் தான் ஐயா.. நாகம்மாவுக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது..”

 

நாகேஸ்வரனுக்கும் அதே சிந்தனை தான் என்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது மயானத்தை அடைந்தவர் அனைத்தையும் ஆராய்ந்தார். 

 

“இந்தத் தலைகளையும் எரித்து விடு நாகா.. இந்த விடயம் எங்களுக்குள்ளேயே இருக்கட்டும். ஊருக்குள் தெரிந்தால் வீணான குழப்பங்கள் தான் மிச்சம்..”

 

“சரி ஐயா. நாங்கள் யாருக்கும் எதுவும் சொல்ல மாட்டோம் ஐயா..”

 

“நான் வேணுமானால் இனி இரவு இங்கு காவல் இருக்கவா ஐயா?”

 

நாகாவின் மகன் துணிச்சலாகக் கேட்டான் நாகேஸ்வரனை. 

 

“நான் யோசித்துச் சொல்கிறேன். இப்போதைக்கு வேண்டாம். எல்லாம் வழமை போலவே நடக்கட்டும்.”

 

கூறியவர் வீட்டை நோக்கி நடந்தார். ஆனால் மனதிலோ நிம்மதி பறி போயிருந்தது. நாகன்யாவுக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் அந்தத் தந்தையை கொஞ்சம் கொஞ்சமாகப் பீடிக்க ஆரம்பித்தது.

 

தப்புவாளா இந்த நாகதேவதை?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8

நாகன்யா – 08   நாகேஸ்வரன் மனது அமைதியற்றுத் தவித்தது. வீட்டுக்குச் சென்றவர் நேராகக் கிணற்றடிக்குச் சென்று தலைக்குத் தண்ணீர் வார்த்தார். கைபாட்டுக்கு கப்பியில் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினாலும் சிந்தனை முழுவதிலும் இறந்தவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் தான்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4

அத்தியாயம் – 04   பேய்கள் உலாப் போகும் நடுநிசி நேரம். நாகர்கோவில் ஊருக்கு வெளியேயிருந்த அந்த மயானமே கரும் போர்வை போர்த்தி அந்த நள்ளிரவு நேரத்திற்கு மேலும் அச்சம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நாய்களும் நரிகளும் போட்டி போட்டபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தன. 

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 3யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 3

அத்தியாயம் – 03   ஒரு ஐம்பது பேராவது அருள் வாக்குக் கேட்க நின்றிருந்தார்கள். ஏனைய பக்தர்கள் கூட நாகம்மனை வணங்கி விட்டு நாகன்யா அருள்வாக்குச் சொல்லும் அழகைக் காணக் குழுமியிருந்தார்கள். அவள் புகழ் அறிந்து வாராவாரம் அயலூரிலிருந்தெல்லாம் மக்கள் வந்து