Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 12’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 12’

திருமண இரவு. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அலங்கரிக்கப் பட்டக் கட்டிலில் அமர்ந்திருந்தான் சுமன். அவனுக்கு மனம் முழுவதும் குழப்பம். 

ராட்சஷனின் உயிர் மலை மேல் இருக்கும் விளக்கில் என்று கதைகளில் சொல்வது போல சுமனின் குடும்பத்தின் உயிர் அங்கிதாவின் கைகளில். தன் தங்கையின் மேல் அவன் கொண்ட பாசம் அளவிட முடியாதது. தன் மனதில் இருந்த ஸ்வப்னாவை மறுத்துவிட்டு கீதா காட்டிய வைஷாலியைக் கை பிடிக்கும் அளவுக்கு கண்மூடித்தனமான அன்பு. 

அங்கிதா சிறு வயதிலிருந்தே குடும்பத்தின் ஆண்களுக்கு சமமாகத் தொழிலில்  ஈடுபடுவாள். முடிவுகளை அவளே எடுத்து செயலாற்றுவாள். அவன் வீட்டினர் பின் பற்றுவார்கள் அவ்வளவுதான். கீதாவின் முடிவை  எதிர்த்தால், வீட்டையே நரகமாக்கி விடுவாள் அதுவும் ஒரு காரணம். 

அவள் விரும்பிய ரித்தீஷையே மனம் முடித்து வைத்தனர். அவளின் முக்கியமான பொழுதுபோக்கு பைக். அந்தக் கால புல்லட்டிலிருந்து நவீன பைக் வரை சேகரிப்பது அவளது பொழுதுபோக்கு. தலைதெறிக்கும் வேகத்தில் பைக்கை ஓட்டியபடியே கடற்கரை சாலையில் செல்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆபத்தான விளையாட்டு என்று அனைவரும் கண்டித்தாலும் காதில் வாங்க மாட்டாள். 

அனைவரும் பயந்தது நடந்தே விட்டது. திருமணமான இரண்டு வருடங்களில் ஒரு நாள் மோசமான பைக் விபத்தில் படுகாயமுற்றாள். அந்த விபத்தில் அவள் உயிரைக் காப்பாற்ற முடிந்தாலும் கர்ப்பப்பை மற்றும் ஓவரி சேதமடைந்திருந்ததால் அறுவை சிகிச்சையால் அவற்றை நீக்க வேண்டியதாயிற்று. வெந்த புண்ணில் பாய்ந்த வேலாக, ரித்தீஷ் வீட்டில் குழந்தை பிறக்காது என்பதையே காரணமாகக் காட்டி வேறு திருமணம் செய்ய, நிரந்தரமாக தாய் வீட்டுக்கே வந்துவிட்டாள். 

“எதுக்காக எல்லாரும் மூஞ்சைத் தூக்கிட்டு உக்காந்திருக்கிங்க? நான் என்ன செத்தா போயிட்டேன்? எல்லாரும் வழக்கம் போல வேலை பாருங்க” மூலைக்கு ஒருருவராய் அமர்ந்து வருத்தத்தில் ஆழ்ந்திருந்த பிறந்த வீட்டினரைப் பார்த்துக் கத்தினாள் 

“உன் வாழ்க்கை…” வாயை மூடிக் கொண்டு கேவினார் பார்க்கவி. 

“இந்த மாதிரி ஒரு விபத்து ரித்தீஷ்க்கு நடந்திருந்தா நான் அவனை விட்டுட்டு போயிருப்பேனா? நிச்சயம் மாட்டேன். அந்தக் கோழையை லவ் பண்ணதை நினைச்சு வருத்தப் படுறேன். 

இப்ப என் வாழ்க்கைக்கு என்னாச்சு? சுமன் இல்லை. அவன் குழந்தையை என் குழந்தையா நெனச்சு வளர்த்துட்டு போறேன். சுமன் உன் குழந்தையை நான்தான் வளர்ப்பேன். உனக்கு ஓகேதானே”

“ச்சீ அசடு…” என்று தங்கையின் தலையில் கொட்டினான். 

மகளின் நிலையை சகியாமல் சுமனின் தந்தையும் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஒவ்வொரு சோகத்திலும் அங்கிதா தைரியமாய் நின்றாள். 

வெளியே சொல்லாவிட்டாலும் ரித்தீஷின் மீது வைத்த பாசம் பொய்த்துப் போனதை அங்கிதாவால் தாங்கவே முடியவில்லை. சுமனுக்கும் தனக்கும் எதுவும் வேற்றுமை வந்து தமயனின் உறவை இழந்துவிட்டால் என்ற பயம் அவளைப் பிடித்தாட்டியது. அதற்குத் தடையாக வந்த அனைத்தையும் இரக்கமில்லாமல் நொறுக்கினாள். அதில் நொறுங்கிய ஒன்றுதான் சுமன் – ஸ்வப்னா காதல். 

கல்லூரிக் காலத்திலிருந்தே ஸ்வப்னா சுமனை விரும்பினாள். அவனது கம்பனி ஒன்றில் அவளும் பங்குதாரராக மாறும் அளவுக்குத் தொழிலில் திறமையாயிருந்தாள். அவளை சுமனுக்கும் பிடித்தது. அவள் விருப்பத்தை சொன்ன போது மறுக்காமல் கீதாவுக்கு சரி என்றால் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று தயங்காமல் சொன்னான். ஸ்வப்னா மாதிரி பெண்ணை மறுக்க யாருக்கும் மனம் வராது என்று நினைத்தான். ஆனால் அவன் தங்கைக்கு மனம் வந்தது. 

“கீதா ஸ்வப்னாவை பத்து வருஷமா எனக்குப் பழக்கம். அவளை எனக்குப் பிடிச்சிருக்கு. நீ அவளை மறுக்குறதுக்கு சரியான காரணத்தை சொல்லு ஏத்துக்குறேன்” என்று சற்று இறுகிய முகத்துடன் தங்கையிடம் சொல்லிச் சென்றவனுக்கு சிறிது நேரத்தில் அங்கிதா மருத்துவமனையும் சேர்க்கப் பட்டிருக்கிறாள் என்ற செய்திதான் கிடைத்தது. 

“ஸ்வப்னா இப்பயே நம்மை பிரிக்க நினைக்கிறாளே. உங்களுக்குக் கல்யாணமாச்சுன்னா நான் நிரந்தரமா உன்னை விட்டுப் பிரிஞ்சுடுவேன். என்னால அது முடியாதுன்னா. அதுதான் செத்துப் போகலாம்ன்னு…” என்று அழுத தங்கையிடம்

“நீ யாரைக் காட்டுறியோ  அவதான் என் பொண்டாட்டி” என்று உடைந்த குரலில் சத்தியம் செய்தான். 

அங்கிதா கைகாட்டியது வைஷாலியை. பெண் கூட பார்க்க செல்லாமல் திருமணம் செய்து கொண்டான். இப்போது அவளுக்காகக் காத்திருக்கிறான். 

வைஷாலியுடன் தன்னால் குடும்பம் நடத்த முடியுமா என்ற பெரிய சந்தேகத்துக்கு விடை காண முயன்றபடி அமர்ந்திருவனை கதவு திறக்கும் ஓசை திரும்பிப் பார்க்கச் செய்தது. 

அரைத்த மஞ்சள் நிறத்தில் பச்சை கரை இருபுறமும் கொண்ட புடவை. வெள்ளி நிலவாய் ஜொலித்த முகத்தில் கருமீன் கண்கள். மேக்அப்பால் வந்த அழகாய் இருக்கும் என்று அலட்சியமாய் நினைத்திருந்தவனுக்கு அழகுப் பதுமையாய் நின்ற வைஷாலியைக் கண்டதும் ஓரிரு நிமிடங்கள் உலகே மறந்துவிட்டது. 

“வா வைஷாலி” நின்று கொண்டே இருந்தவளை அழைத்து தன்னருகே  அமரவைத்தான். அந்த நொடியில் வைஷாலி தனக்கேற்ற மனைவிதான் என்று முடிவு செய்தான். 

“என்னைப் பிடிச்சிருக்கா” அவன் கண்களைப் பார்த்த வண்ணம் வினவினாள். அவள் தூண்டில் கண்களில் மீனாய் சிக்கிக் கொண்டான் சுமன்.  

“ஏன் கேக்குற?”

“கல்யாணத்துக்கு முன்ன ஒரு போன் கூட பண்ணலையே. அதுதான் பிடிக்கலையோன்னு நினைச்சேன்” அவளது குரலில் தெரிந்த ஏமாற்றம் அவன் செய்த தவறை சுட்டிக் காட்டியது. 

“வேலை பிஸி. அதுதான்” 

என்னதான் வேலை பிஸி என்றாலும் திருமணம் செய்யப் போகும் பெண்ணைப் பார்க்கும் ஆவல் கூடவா இல்லாமல் இருக்கும் என்று வாய் வரை வந்த கேள்வியை விழுங்கிக் கொண்டாள். 

அதற்குமேல் அவள் பேசவும் அவன் அனுமதிக்கவில்லை. 

துரையிலிருந்த சொத்துக்களை விற்றுவிட்டு மும்பையில் செந்திலின் வீட்டில் குடிபுகுந்தார் சங்கரி. பழக்கமில்லாத ஊர் மிரட்சியைத் தந்தாலும், பேரக் குழந்தைகளின் அருகில் இருந்ததும் வைஷாலி  அடிக்கடி வந்து சென்றதும் அவரது குறையை ஓரளவு ஈடு செய்தது. 

“மாமியார் வீடு எப்படி இருக்கு சாலி. உன்னை எல்லாரும் நல்லா கவனிச்சுக்கிறாங்கள்ள?நீ சந்தோஷமா இருக்கியா”

“தெரியலைம்மா”

நெஞ்சம் உறுத்த “என்னடி சொல்ற?மாப்பிள்ளை உன்மேல அன்பாத்தானே இருக்கார்” என்றார் சங்கரி. 

“அதைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியலைம்மா”

தனியாக மகளை அழைத்து சென்று விளக்கம் கேட்டார்.

“தினமும் காலைல டிபன் பண்றேன். நான் சமைக்கிறது எதுவும் அவர் சாப்பிடுறதில்லை”

“ஏண்டி”

“அவருக்கு இட்லி, தோசை எதுவும் பிடிக்காதாம். பூரி செஞ்சா எண்ணை பதார்த்தம்ன்னு சொல்லிடுறாங்க. ஆனா வெண்ணையை உருக்கி பிரட் டோஸ்ட் தராங்க. அது மட்டும் எண்ணை இல்லையா?”

“யாரும்மா”

“கீதா”

“கழுதை, வயசில் பெரியவங்கல பேர் சொல்லலாமா”

“அவங்கதாம்மா பட்டிக்காடு மாதிரி அண்ணின்னு கூப்பிடாதேன்னு சொல்லிட்டாங்க” பரிதாபமாய் சொன்னாள் வைஷாலி. 

“மத்தியானம் சாப்பாடு என்ன செய்றார்?”

“வெளிய சாப்பிடுறார். ராத்திரி சப்பாத்தி குருமா ஏதாவது. அதுவும் கீதாண்ணிதான் செஞ்சுத் தராங்க. நான் சமைச்சதை அவர் பாதிநாள் டேஸ்ட் கூட பண்றதில்லை”.

“காலைல அவர் கிளம்புறவரை கீதாவும் அவரும் பிசினெஸ் விஷயம் பேசுறாங்கம்மா. அப்பறம் போயிட்டு வரேன்னு கூட சொல்லாம அவங்க கூடவே கிளம்பி ஆபிஸ் போய்டுறார். சாயந்தரம் வந்ததும் ஆபிஸ்ல நடந்தது பத்தி பேசுறாங்க. நான் ஆசையா ஏதாவது பலகாரம் செஞ்சு தந்தா அதை சுமனுக்குத் தராதே. ஆயில் அதிகம், உப்பு ஜாஸ்தின்னு ஏதாவது குறை சொல்றாங்கம்மா. எனக்கு வெறுப்பா இருக்கு” 

“வெளிய போயிட்டு வர்றிங்களா”

“ம்ம்” சுரத்தில்லாமல் சொன்னாள். 

“அதை ஏண்டி டல்லா சொல்ற?” 

“எங்க போனாலும் குடும்பத்தோடதான் போறோம். அவர் பிரெண்ட் ஒருத்தர் ப்ரிவியு ஷோ பாக்க ரெண்டு சினிமா டிக்கெட் தந்தார். அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு கீதா அவர்கூட கிளம்பி போய்ட்டா. நான் மாமியார் கூட வீட்டில் இருந்தேன்மா” சிறுபெண் தன் ஆதங்கத்தைக் கொட்டினாள். 

சங்கரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. புதிதாய் மணமானவர்களுக்குத் தனிமை தருவது ஒருவருக்கொருவர் பேசிப் புரிந்துக் கொள்ளத்தானே. இதெல்லாம் தெரியாதவர்களா இவர்கள். இப்போது சுமனைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டியதிருந்தது. 

“மத்தபடி மாப்பிள்ளை உங்கிட்ட அன்பாத்தானே இருக்கார்”

தலையாட்டினாள் வைஷாலி. அவளுக்கு எது அன்பு என்றே புரியவில்லை. இரவுக்கு மட்டும் மனைவியைத் தேடுவதா அன்பு. 

“அப்பறம் என்னடி உனக்குக் கவலை? கொண்டவன் துணையிருந்தா பொம்பளைங்க என்ன வேணும்னாலும் செய்யலாம். அவர்கிட்ட பேசும்போது ஹனிமூன் போயிட்டு வரலாம்னு சொல்லு. உங்கண்ணன் கிட்ட சொல்லி டிக்கெட் வாங்கித் தர சொல்றேன்”

அசுவரசியமாய் தலையாட்டினாள் வைஷாலி. தனக்கும் சுமனுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத மாயச் சுவர் ஒன்று இருப்பதை உணர்ந்தாள். அதைத் தகர்க்கும் வழிதான் தெரியவில்லை. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 3 (youtube link)உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 3 (youtube link)

அந்த பார்க்கில் ஈஸ்வர் வேகமாய் ஓடி மூச்சிரைக்க இரைக்க பாலைப் போட, தனது சின்னஞ்சிறு கைகளால் கிரிக்கெட் பேட்டைப் பிடித்திருந்த அந்த சின்னஞ்சிறுவன் தனது பேட்டினால் ரப்பர் பந்தினை அடிக்க அது பறந்து சென்று வெகு தூரத்தில் விழுந்தது. “அப்பா சிக்ஸர்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 15’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 15’

இரண்டாயிரத்து எழுநூறு டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் அமிழ்த்தப்பட்ட, மற்றும் அதே சமயத்தில் நாலாயிரம் திடகாத்திரமான மனிதர்கள் ஏறி நிற்கும் போது ஒரு பொருளின் மேல் ஏற்படும் அழுத்தம், இவை இரண்டும் ஒரே சமயத்தில் அதுவும் பல்லாயிரம் ஆண்டுகள் நிகழும் பொழுது அந்தப்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

இரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு