Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 9’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 9’

சாலி, இந்தா மும்பைக்கரின்  காலை உணவு போஹா டோன்ட்டடொய்ங்” என்று எலுமிச்சை பிழியப்பட்ட அவல் உப்புமாவை நீட்டினாள் சந்தியா. 

சங்கரியை மருத்துவமனையில் சேர்த்திருப்பது தெரிந்ததும் கிளம்பி வந்துவிட்டாள். இரண்டு நாட்களாக வைஷாலியுடன் தங்கி இருக்கிறாள். அவள் புண்ணியத்தால் வைஷாலியின் வயிற்றில் வேளாவேளைக்கு உணவு இறங்குகிறது. 

சங்கரியை சாதாரண அறைக்கு மாற்றிவிட்டார்கள். வைஷாலி அவருடன் மருத்துவமனையில் தங்க, தீபிகாவை சிவா வீட்டுக்கு அழைத்து செல்வதும், மருத்துவமனைக்குத் தூக்கி வருவதுமாய் இருந்தான். வைஷாலியுடன் இருக்கும் தீபிகா, சிவாவைப் பார்த்தவுடன் காச்சு மூச்சென்று கத்தியபடி அவன் காலைக் கட்டிக் கொள்கிறாள். 

விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு சங்கரியைப் பார்க்க வந்த தேவா, முன்னரே தகவல் சொல்லாததற்குக் கடிந்தான். பின்னர் அடிக்கடி வந்து பார்த்தான். சங்கரி சற்று எழுந்து அமரும் அளவுக்குத் தேறினார். மறுநாள் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். 

“சாலி, நான் நல்லா இருக்கேன். நீதான் தூக்கம் இல்லாம வாடிபோயிருக்க. இன்னைக்கு வீட்டுக்குப் போய் தூங்கு” கண்டிப்பாய் சொன்னார் சங்கரி. 

“ஆமாம் சாலி யாருமே தூங்காம இருக்கிங்க. இன்னைக்கு வீட்டுக்கு போய் தூங்குங்க. நான் அத்தைக்குத் துணைக்கு இருக்கேன்” என்று தேவா அங்கே தங்கிவிட வைஷாலி சிவாவுடன் வீட்டுக்குக் கிளம்பினாள். முன்னரே வீட்டில் சந்தியா தங்கியிருந்தாள். ரங்கா மட்டும் அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலையில் வைஷாலி வீட்டுக்கு வந்துவிடுவான். அவர்கள் உடனிருந்தது வைஷாலிக்கு யானை பலம் மனதில் தந்தது.

தீபிகா, வீட்டில் சந்தியாவுடன் இருந்தாள். வைஷாலியும் சிவாவும் மட்டும் வீட்டுக்குக் கிளம்பினர். லிப்ட்டுக்கு பெரிய வரிசை நின்றது. காத்திருக்கப் பொறுமையில்லாது படியிலேயே இறங்கிவிடலாம் என்று தீர்மானித்தார்கள். நான்காவது மாடியிலிருந்து இறங்க ஆரம்பித்தனர். 

முதல் மாடியில் மகப்பேறு  பிரிவு. அதைக் கடந்துதான் படிகளுக்கு செல்லவேண்டும். பிரசவ வலியில் துடிக்கும் பெண்களும் அவர்களுக்கு இணையாக மனத்தால் துடிக்கும் ஆண்களும் நிறைந்திருந்தனர். பெறும் குரலெடுத்து கத்திய பெண்ணை சமாதனம் செய்தவாறு அங்கு கலக்கத்துடன் ஒரு தமிழ்குரல் கேட்டது.

“கொஞ்சம் பொறுத்துக்கோம்மா சரியாயிடும். ப்ளீஸ்”. அவன் மனைவியோ அவ்வளவு வலியிலும் அவனது விரல்களை இறுக்கப் பிடித்துக் கொண்டாள். 

“நம்ம ஊர் போலிருக்கு” என்ற சிவா, வைஷாலியிடமிருந்து பதில் வராது போகவே திரும்பிப் பார்த்தான். கண்கள் முழுவதும் வலியுடன் அங்கு மனைவியை சமாதனம் செய்த ஆணையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். 

“வைஷாலி” மெதுவாய் அவளை அழைக்க, அவனிடம் மரத்த குரலில் சொன்னாள் “அதுதான் தீபிகாவோட அப்பா”

 

வ்வொரு நாளும்  கோடிக்கணக்கான நபர்கள் விரும்பி சாப்பிடும் மும்பை புகழ் பாவ் பாஜி தயாராவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வைஷாலி. சங்கரி குணமானது சந்தோஷத்தைத் தந்தாலும், சுமனைப் பார்த்த அதிர்ச்சியில் அறையில் அடைந்துவிடுவதைத் தடுக்கும் பொருட்டு, இன்று வெளியேதான் இரவு உணவு என்று கட்டாயப் படுத்தி அவளை வெளியே அழைத்து வந்திருந்தனர்.,

 குடைமிளகாய், தக்காளி, இஞ்சிபூண்டு, வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி அனைத்தையும் வேகவைத்து, மசித்து, எலுமிச்சை சாறு, உப்பு, வெந்தய இலைகள், மசாலாதூள், மிளகாய்த்தூள், ஒரு கரண்டி வெண்ணை சேர்த்து கலந்து தயாரான பாஜியும், வெண்ணெயால் வாட்டப்பட்ட பாவும் தயாராவதைப் பார்ப்பதே வித்யாசமாய் இருந்தது. 

“மும்பைக்கு வந்துட்டு பாவ் பாஜி சாப்பிடலைன்னா இந்த ஜென்மமே வேஸ்ட்” என்றவாறு ஆளுக்கு ஒரு ப்ளேட் வாங்கி வந்தான் ரங்கா.

“எல்லா ஊர்லையும்தான் இது கிடைக்குது. இங்க என்ன ஸ்பெஷல்?” கணவனை மடக்கினாள் சந்தியா.

“இது உருவானதே இங்கதான்னு மும்பைகர் ஒருத்தன் சொன்னான். எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியல இருந்தாலும் சொல்லுறேன் கேட்டுக்கோ.  

மும்பையில் அந்தக் காலத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு இடைவேளை நேரம் ரொம்ப கம்மியாம். அந்த நேரத்தில் சாப்பாட்டை முழுதுமா சாப்பிடக் கூட அவங்களுக்கு நேரமிருக்காதாம். சாதமோ சப்பாத்தியோ சாப்பிட நேரமாகும். நிறைய சாப்பிடவும் முடியாது. அப்பத்தான் அங்க இருக்குற ஒரு கடைக்காரருக்கு ஐடியா தோணுச்சாம். நாலைஞ்சு வகை காய்கறிகளை கூழா அரைச்ச வேகமா சாப்பிடலாம். பிரட் மாவில் செஞ்ச பாவ் வயிற்றை நிறைச்சாலும் ஹெவியா இருக்காது. இப்படித்தான் பாவ் பாஜி உண்டாச்சு. உலகம் புல்லா பேமஸ் ஆச்சு” பிரசங்கத்தை முடித்தான் ரங்கராஜ். 

விளையாடியபடியே குழந்தைகள் இருவரும் உண்டு முடித்திருந்தனர். ஒரு வாய் உணவை விழுங்கியபின் வைஷாலி  நினைவு வந்தவளாக சிவாவை பார்க்க,

 “நான் பாவ்தான் சாப்பிடுவேன். பாஜி கொஞ்சமா ஊறுகாய் மாதிரி தொட்டுக்குறேன்” என்று பதிலளித்தான். 

“முடியலைன்னா வச்சுடுங்க. நான் வீட்டுக்குப் போனதும் உப்புமா செஞ்சுதரேன்”

“அதை அப்பறம் பாக்கலாம். சூடா இருக்கும்போதே நீ சாப்பிடு” என்றான். 

இரண்டு மூன்று வாய் உணவு போன பின், சாப்பிட முடியாமல் கைகளால் தட்டில் கோலம் போட்டாள் வைஷாலி.

“சாலி, நடந்தது நடந்துடுச்சு. சுமன் வேற கல்யாணம் பண்ணிட்டார். நீ ஏன் உன் வாழ்க்கையை வீணாக்கிக்கிற… பேசாம எங்க சிவாவைக் கல்யாணம் பண்ணிக்கோயேன்” படாரென தேங்காய் உடைப்பதைப் போல் உடைத்தாள் சந்தியா. அனைவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டுத் திகைப்புடன் பார்த்தனர். 

“ என் மனசால சொல்றேன் வைஷாலி. இப்ப சாப்பாடு வாங்கும்போது கூட சிவாவுக்கு ஒத்துக்காதது என் நினைவில் வரல. ஆன நீ பார்வையாலேயே சிவாட்ட கேள்வி கேட்டதும் அவர் அதைப் புரிஞ்சுட்டு பதில் சொன்னதும்…. ச்சே… சான்சே இல்லை. இந்த அளவுக்குப் புரிதல் இருக்கும் நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?”

சிவாவை நோக்கினாள் வைஷாலி. அவன் பார்வை ஆவலுடன் அதே கேள்வியை அவளிடம் கேட்டது.

“நீங்கள்லாம் என் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கிங்க. இதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆன இதுக்கெல்லாம் எனக்குத் தகுதியில்லை. ஊரார் பார்வையில் நான் ஒரு கொலைகாரி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 21என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 21

அத்தியாயம் – 21 அனைவரிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு ஒருவழியாக விமானத்தில் ஏறினர் சித்தாரா அரவிந்த் மற்றும் ஸ்ராவணி. தனக்கு மட்டும் தனியாக தள்ளி சீட்  இருக்க, முஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த சித்தாராவை சமாதானப் படுத்தினான். ‘இந்தக் கல்யாணம்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 13’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 13’

ஒரு சுகமானதொரு கனவு. அதைக் கனவு என்பதை விட, கனவாய் உறைந்துவிட்ட நினைவுகளின் பிம்பம் என்று சொல்லலாம். அந்த நினைவுகளுக்குள் மூழ்கியிருக்கும் காதம்பரியுடன் நாமும் இணைந்து கொள்வோம்.   சற்று பூசினாற்போல் தேகம், பாலில் குங்குமப்பூவை லேசாகக் கலந்தால் இருக்குமே அதைப்