Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 6

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 6

அத்தியாயம் – 06

 

ஈஸ்வரோடு எப்படியாவது பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழ, அதற்கு நாகன்யா கண்டுபிடித்த வழி தான் ஓவியம் வரைந்து பழகுவது. நாகன்யா சிறு வயதிலிருந்தே தனக்கு எதுவும் வேண்டும் என்று கேட்டதில்லை. அவள் முதன்முதலாக ஒரு விடயம் தனக்காகக் கேட்டதே இது தான். அப்படியிருக்க நாகேஸ்வரன் என்ன மறுக்கவா போகிறார்? இதோ ஈஸ்வரின் சம்மதத்தையும் பெற்று விட்டார். 

 

ஈஸ்வர் சம்மதிப்பானா? இல்லையா? என பெரும் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தவளுக்குத் தந்தையின் பதில் அமிர்தமாய் வந்து சேர்ந்தது. அவனைச் சந்திக்கப் போகும் விடியலுக்காய் ஆவலுடன் காத்திருந்தாள். 

 

அடுத்த நாள் நாகன்யா வழக்கம்போல ஆலயம் சென்று திரும்பியதும் காலை பத்து மணி போல ஈஸ்வர் அவர்களுடைய வீட்டுக்கு வந்தான். இந்த முறை தேவியே அவனை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவன் வந்த அரவம் உணர்ந்த நாகன்யாவும் விரைந்து வந்து அவனை வரவேற்றாள். 

 

“வாங்கோ ஈஸ்வர்.. என்ன குடிக்கிறீங்கள்? காலையில சாப்பிட்டீங்களா?  இப்போது ஏதாவது சாப்பிடுறீங்களா?”

 

“வணக்கம் நாகம்மா.. நான் சாப்பிட்டு விட்டேன். இப்போது ஒரு தேநீர் கிடைத்தால் நன்றாக இருக்கும்..”

 

முறுவலோடு கூறியவனின் வதனத்தையே ஒரு நொடி அசந்துபோய் பார்த்தவள், உடனேயே சமையலறைக்கு விரைந்தாள். தேநீரோடு சுடச்சுட வடையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவன் எதிரே அமர்ந்தாள். அதுவரை அவனோடு அளவளாவிக் கொண்டிருந்த நாகேஸ்வரன் வெளியே செல்லப் புறப்பட, தேவியும் சமையலறைக்குச் சென்றார். 

 

தனித்து விடப்பட்ட இருவருக்குமே பேச்செழவில்லை. நாகன்யா அவனையே மௌனமாகப் பார்த்திருக்க, ஈஸ்வரும் மெதுவாக தேநீரை அருந்த ஆரம்பித்தான். அவள் விழிகளை நோக்கும் தைரியம் அற்றவன் போல அந்தக் கூடத்தைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டவாறிருந்தான்.

 

எதையாவது பேச வேண்டும் என்று எண்ணியவளாய் முதலில் நாகன்யா தான் தொண்டையைச் செறிமினாள். அதைக் கேட்ட ஈஸ்வரும் அவனது விழிகளை அவள் விழிகளோடு கலக்க விட்டான். 

 

“எனக்குப் படம் வரையச் சொல்லித் தரச் சம்மதித்ததற்கு முதலில் நன்றிகள் ஈஸ்வர்.”

 

“எதுக்கு இந்தப் பெரிய வார்த்தை எல்லாம். இது எனக்குக் கிடைச்ச பெரிய பாக்கியம் நாகம்மா.. அதுக்கு நான் தான் நன்றி சொல்ல வேணும்..”

 

“இப்போ நீங்க எனக்குக் குரு. என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாமே..”

 

தயக்கத்தோடு அவளை ஏறிட்டவன், 

 

“உங்கள் உத்தரவு நாகம்மா..”

 

எனவும், 

 

“எனது பெயர் நாகன்யா..”

 

என்று கூறிவிட்டு முத்துப்பற்கள் தெரியச் சிரித்தாள் அந்த நாககன்னி. 

 

காந்தமாய் கவர்ந்த அவள் நீலக் கண்களை விட்டு பார்வையை வேறெங்கும் திருப்ப முடியாதவனாய் அப்படியே உறைந்துபோய் பார்த்திருந்தான் ஈஸ்வர். அவள் விழிகளை நேரடியாக நோக்கினால் வசியத்துக்குக் கட்டுப்பட்டது போல ஆகிவிடும், அவள் விழிகளுக்கு மந்திரசக்தி இருக்கிறது என்று பல கதைகள் அந்தக் கிராமங்கள் எங்கும் பரவிக் கிடந்தன. அது உண்மைதான் போலும் என அவள் விழி வீச்சுக்குக் கட்டுப்பட்டவனது மனது எண்ணியது. 

 

மறுபடியும் சுதாரித்த நாகன்யா,

 

“எனக்கு நிறைய நாளாகவே நாகம்மன் கோவிலை வரைய வேண்டும் என்று ஆசை. ஆனால் சித்திரம் வரைவதற்குரிய அடிப்படை ஒன்றுமே தெரியாது. நீங்கள் தத்ரூபமாக வரைந்ததைப் பார்த்ததும் மறுபடியும் என்னுடைய ஓவிய ஆசை என்னுள் கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. நீங்கள் தான் என் கனவு நனவாக உதவ வேண்டும் ஈஸ்வர்.”

 

“என்னுடைய பாக்கியம் இது..”

 

கூறியவன் தனது துணிப்பையிலிருந்து ஓவியம் வரையத் தேவையான பொருட்களை எடுத்து மேசை மீது பரப்பினான். வெள்ளைத்தாளில் பென்சிலால் எப்படி அடிப்படைக் கோடுகள் வரைவது என்பதை விளக்கத் தொடங்கினான். 

 

இரண்டு மணிநேரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. இருவருமே கருமமே கண்ணாய் ஓவியப் பயிற்சியிலேயே லயித்திருந்தனர். தேவி வந்து அழைக்கவும்தான் தலையை நிமிர்த்தி நடப்புக்கு வந்தார்கள். 

 

“மதியம் ஆகி விட்டது. இரண்டு பேரும் உணவுண்ண வாருங்கோ..”

 

“இல்லம்மா.. நான் கோவிலிலேயே போய் சாப்பிடுகிறேன்..”

 

“இங்கே வந்து விட்டு வெறும் வயிற்றோடு போக விட்டு விட முடியாது தம்பி. இலையைப் போடுகிறேன். வாங்கோ.”

 

தன் கடைமை முடிந்தது போல கூறிவிட்டு தேவி சென்று விட்டார். ஈஸ்வர் என்ன செய்வது என்ற குழப்பத்தோடு நாகன்யாவை நோக்க அவளும் புன்முறுவலுடன்,

 

“வாங்கோ ஈஸ்வர்..”

 

கூறிவிட்டு வரவேற்பறை தாண்டி அடுத்திருந்த உணவுக்கூடத்துக்கு அழைத்துச் சென்றாள். கொல்லைப் புறம் அவனை அவளே அழைத்துச் சென்று கையலம்ப சொம்பில் தண்ணீர் மொண்டு கொடுக்கவும் ஈஸ்வர் பதறிப் போனான். 

 

“என்ன நாகம்மா.. இதெல்லாம் நீங்கள் செய்வதா? இந்தப் பாவம் எனக்கு வேண்டாம்..”

 

“குருவுக்கு சீடப்பிள்ளை செய்வது கடைமை குருவே..”

 

என்று புன்னகையோடு கூறியவள் சாப்பாட்டுக் கூடத்துக்கு அவனை அழைத்துச் சென்று அமர வைத்தாள். நாகேஸ்வரனும் வந்திருக்க தேவி நிலத்தில் மூவருக்கும் தலை வாழையிலை போட்டுப் பரிமாற ஆரம்பித்தார். வடை பாயாசத்தோடு அமிர்தமாய் இருந்த உணவை ரசித்து உண்டவன், தேவிக்கு ஒரு பத்து முறையாவது நன்றி சொல்லியிருப்பான். 

 

“அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன் அம்மா.. என்றைக்குமே இப்படி யாரும் பார்த்துப் பார்த்துப் பரிமாறியது இல்லை. இவ்வளவு அன்பான உணவை என் வாழ்நாளில் இன்றுதான் உண்கிறேன். நன்றி சொல்ல வார்த்தைகளே வரவில்லை..”

 

என்று கண்கலங்கியவாறே கூறியவன் சால்வைத் துண்டால் கண்களை துடைக்கவும் மற்ற மூவருக்குமே மனம் கனிந்து விட்டது. அவன் மீது முதலில் பெரிதாக நல்ல அபிப்பிராயம் கொண்டிராத தேவி கூட இப்போது அப்படியே உருகி விட்டார். 

 

“இனிமேல் உங்களுக்கு நாங்கள் இருக்கிறம் தம்பி.  இனியொரு தடவை உங்க வாயில இருந்து அநாதை என்ற சொல் வரக் கூடாது. சொல்லிப்போட்டன்..”

 

தேவி உரிமையோடு கடிந்து கொள்ள மற்ற இருவருமே அதை ஆமோதித்தனர். ஈஸ்வரும் அவர்களின் அன்பில் திக்குமுக்காடிப் போனவன் உண்டு முடித்ததும் நாகேஸ்வரனோடு சிறிது நேரம் நாட்டு நடப்புகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டுச் சென்றான். 

 

அவன் சென்றதும் மாலைப் பூசைக்கான நேரம் வரும் வரை நாகன்யா வெள்ளைத் தாளோடுதான் போராடிக் கொண்டிருந்தாள். அன்னையும் தந்தையும் கூட அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். என்றும் இல்லாதவறு ஏதேதோ பாடல்களை வாய் முணுமுணுக்க வேற்று ஆளாகத் தெரிந்த மகளை கவனிக்கத் தவறவுமில்லை.

 

தங்கள் அறைக்குச் சென்று வழக்கம் போல சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணிப் படுக்கையில் சாய்ந்த நாகேஸ்வரன் அருகிலே தரையில் அமர்ந்து நாகன்யாவின் பட்டு ரவிக்கையில் பூவேலை செய்து கொண்டிருந்த மனைவியை மெதுவாய் அழைத்தார். 

 

“தேவி..!”

 

“சொல்லுங்கோ..”

 

“நாகம்மாவுக்கும் வயசு கூடிக்கொண்டே போகுது. இவ்வளவு காலமும் அவளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பாது சாதாரண பொண்ணாக வளர்க்காததை எண்ணியே என்ர மனசு குற்றவுணர்வில தவிக்குது. இனிமேலும் அந்தப் பிழையை நாங்க விடக்கூடாது.”

 

“அதையே தாங்க நானும் யோசிச்சுக் கொண்டே இருக்கிறன். அவ ஒத்த வயசுப் பொண்ணுங்க எல்லாம் மூணு நாலு புள்ளையே பெத்திட்டாங்க. வாழ வேண்டிய வயசில எவ்வளவு காலத்துக்குத்தான் நாகம்மாவை இப்படியே கோவிலும் குறிசொல்லுறதுமாய் வைச்சிருக்கிறது..”

 

“அதையே தான் தேவி நானும் நினைச்சிட்டே இருக்கிறன்.. எனக்கென்னமோ எல்லாம் அறிஞ்ச அந்த ஈஸ்வரனே இந்த ஈஸ்வரை அனுப்பிருப்பாரோன்னு மனசு சொல்லுது.”

 

“அதேதாங்க.. ரெண்டு நாளாக நம்ம பொண்ணு முகத்திலயும் மாற்றம் தெரியுது. இதுவரை நாள் இல்லாத போல அவ்வளவு உற்சாகமும் சந்தோசமாகவும் இருக்கிறா..”

 

“எதற்கும் அவசரப்பட வேணாம் தேவி.. கொஞ்ச நாட்கள் அவதானிச்சிட்டு முடிவெடுப்பம். நானும் அந்தப் பையனைப் பற்றிய விபரங்களை விசாரிக்கிறன்..”

 

கூறிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டவருக்கோ உறக்கம் தான் வரமாட்டேன் என்றது. எதிர்காலம் இவ்வளவு நாட்கள் இல்லாது போன்று ஏனோ பயமுறுத்தியது. 

 

தாய், தந்தையின் மனப்போக்கு எதையும் அறியாத நாகன்யாவோ சித்திரமும் கையுமாக இருந்தாள். முதற் கட்டமாக தன்னுடைய முயற்சியில் ஒரு நாகசர்ப்பத்தை வரைந்திருந்தாள். அழகாக வந்திருந்த ஓவியத்தை மகிழ்ச்சியோடு பார்த்தவள் அடுத்த நாள் ஈஸ்வரிடம் அதைக் காட்டும் நோக்கில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு ஆலயத்துக்குச் செல்லத் தயாரானாள். 

 

நாகன்யா வீட்டை விட்டுச் சென்ற ஈஸ்வரோ கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். வலது தோளில் கனத்த துணிப்பையை கழட்டி அருகிலிருந்த ஒரு மரத்தில் கொழுவினான். களவைப் பற்றி கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத ஊராயிற்றே. அதனால் திருட்டுப் பயமின்றித் தனது பையை வைத்து விட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் பாதங்கள் கொஞ்சம் ஓய்வு தா எனக் கெஞ்ச நடையை நிறுத்திச் சுற்றுச்சூழலை ஆராய்ந்தான். 

 

ஆற்றங்கரை ஓரமாக வந்திருந்தான். கரையெங்கும் பெரிய பெரிய மரங்கள் கிளை பரப்பியிருந்தன. தாழ்வாய் கிளை பரப்பியிருந்த ஒரு நாவல் மரக் கிளையில் ஏறி சாய்ந்து அமர்ந்தான். அவன் உடல் மட்டும் தான் இங்கிருந்தது. மனதோ இன்னமும் நாகன்யா வீட்டையேதான் சுற்றி வந்து கொண்டிருந்தது. 

 

எந்த விதப் பின்புலமுமற்ற அநாதையான தான் எங்கே? எல்லோராலும் கொண்டாடப்படும் நாகன்யா எங்கே? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல நிறைவேறாது, கிடைக்காது என்று தெரிந்த ஒன்றுக்கே ஆசைப்படும் தனது மனதை எண்ணி அவனுக்கே கோபம் வந்தது. ஆனால் ஆசைக்கேது அளவு? 

 

என்ன தான் முயன்றாலும் அவள் உருவமே கண்ணெதிரில் தெரிந்தது. கண்களைத் திறந்தாலோ மூடினாலோ எங்கும் அவள் வதனமே சிரித்துக் கொண்டிருந்தது. ஈஸ்வருக்கோ பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது.

 

அருகிலிருந்த ஒரு சிறு குச்சியை உடைத்துப் பற்களால் கடித்துக் கூராக்கினான். இப்போது அந்தக் குச்சியையே பென்சிலாக்கி எதிரேயிருந்த அகன்ற கிளையில் நாகன்யாவின் வதனத்தை வரைய ஆரம்பித்தான். வரைய வரைய மனதுக்கு அமைதி கிட்ட ஆரம்பித்தது. இந்த உணர்வுகளின் பிடியிலிருந்து மீட்சி அடையும் வழி கண்டவனாக வரைந்து முடித்ததும் நிம்மதிப் பெருமூச்சோடு அந்த மரக்கிளையிலேயே தூங்கிப் போய் விட்டான். 

 

சாயங்கால பூசைக்காக ஆலயம் சென்ற நாகன்யாவின் விழிகளோ தெய்வத்தை வணங்கியதும் சுற்றுப் புறமெங்கும் ஈஸ்வரைத்தான் தேடியது. அவன் தான் வரவில்லையே. அவனைக் காணாது ஏமாற்றமாய் முகம் கூம்பிய மகளை நன்றாகவே அவதானித்தனர் நாகேஸ்வனும் தேவியும். கர்ப்பக் கிரக பூசை முடிந்ததும் வேறு எதிலும் கலந்து கொள்ளாமல் புற்றுக்கு அருகே சென்று அமர்ந்தாள் நாகன்யா.

 

இவளின் வருகைக்காகவே காத்திருந்தது போலவே அந்த நாகராஜனும் சரசரவென ஊர்ந்து வந்து இவள் மடியில் அடக்கமானார். சோகமாய் அதன் தலையை தடவிக் கொடுத்தவள்,

 

“என்னைப் போலவே அவருக்கும் என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும் என்று எண்ணினேன் நாகராஜா.. ஆனால் அவர் இங்கு வரவே இல்லை. நான்தான் என் நிலையை மறந்து அதிகம் எதிர்பார்க்கிறேனா ராஜா? 

 

ஆனால் என்ன செய்ய? தவறு என்று தெரிந்தாலும் என்றும் இல்லாதது போல என் மனம் அவரைக் காண ஏங்கித் தவிக்கிறதே.. வெளியே யாரிடமும் சொல்லவும் முடியாமல் உள்ளுக்குள்ளே ரகசியமாக வைத்திருக்கவும் முடியாமல் என் நிலை எனக்கே புதிதாக இருக்கிறது. அதுதான் இப்போது உன்னிடம் புலம்புகிறேன் நாகராஜா.. இந்த உணர்வு சுகமாயும் இருக்கிறது.. அதேநேரம் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல வேதனையாகவும் இருக்கிறது.. நான் என்னதான் செய்ய?”

 

புலம்பிக் கொண்டிருந்தவள் தாய், தந்தை வருவதைப் பார்த்ததும் சர்ப்பத்தைப் புற்றினுள் விட்டு விட்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானாள். விழிகளோ அவன் வந்தானா? எனும் தேடுதலிலேயே மீளவும் இறங்கியிருந்தன. 

 

இருமனங்களும் இந்த தடைகள் தாண்டி இணையுமா?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12   நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8

நாகன்யா – 08   நாகேஸ்வரன் மனது அமைதியற்றுத் தவித்தது. வீட்டுக்குச் சென்றவர் நேராகக் கிணற்றடிக்குச் சென்று தலைக்குத் தண்ணீர் வார்த்தார். கைபாட்டுக்கு கப்பியில் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினாலும் சிந்தனை முழுவதிலும் இறந்தவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் தான்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5

அத்தியாயம் – 05   அதிகாலை நான்கு மணிக்கே துயிலெழுந்த ஈஸ்வர் காலைக் கடன்களை கழித்து விட்டு கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து அந்தக் குளிர் நீரிலேயே நீராடினான். நீராடி விட்டு ஈரம் போகத் துண்டால் துடைத்தவன் ஒரு பருத்தி வேட்டியை