“ஒரு குட்டிப்பையன் ஒரு கப் குடிக்க யாராவது ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்குவாங்களா? பேசாம அவருக்குக் காப்பிக்கு பதில் சாயந்தரம் இதைக் கலந்து தாம்மா. அப்படியே வச்சிருந்தா கட்டி விழுந்திடும்” தாயிடம் சலித்துக் கொண்டாள் வைஷாலி. சிவா அங்குதான் அமர்ந்திருந்தான்.
“ஐயோ காப்பி டீ தவிர வேற எதைக் குடிச்சாலும் அதைத் தந்தவங்க மேல வாந்தி எடுத்துடுவேன். அப்படி ஒரு சாபம் எனக்கு. பேசாம இதை நீ, உங்க அம்மா, பாட்டி மூணு பேரும் குடிச்சுடுங்க” தீபிகாவிடம் பதில் சொன்னான் சிவா.
“உங்களுக்குப் பிடிக்கலைன்னா தூக்கிப் போட்டுடுங்க” என்று இரக்கமில்லாமல் சொன்னவளிடம்
“முன்னூத்தி அருவத்தி ஆறு ரூபாய் வைஷாலி. கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணம். குப்பைல போட சொல்றிங்களே” பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டான்
“வேற என்ன செய்ய சொல்றிங்க. அதை வச்சுப் பூஜை பண்ணலாமா” நேராகவே கேட்டாள்.
“அதெல்லாம் வேண்டாம் பாப்பாவுக்கு அன்னைக்கு வாங்கித் தந்தேன். சமத்தா குடிச்சா. தீபிகாவுக்கு குடுங்க. நீங்களும் வீக்காதான் இருக்கிங்க. மனசு வச்சா நீங்களும் சேர்ந்து குடிச்சு காலி பண்ணலாம் ப்ளீஸ்” என்று பாவமாய்
“சாலி…. அந்தத் தம்பி இவ்வளவு கெஞ்சுதுல்ல, உனக்கென்ன இவ்வளவு பிடிவாதம். நான் பாப்பாவுக்கும் சாலிக்கும் தரேன் தம்பி” என்று சங்கரி இடையில் குறுக்கிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.
சந்தியாவும் ரங்கராஜும், வைஷாலியைப் பார்த்து சென்றதோடு நில்லாமல், சந்தியா அடிக்கடி வைஷாலியுடன் உரையாடினாள். தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்த வைஷாலியும் அதன்பின் சரளமாய் பேச ஆரம்பித்து விட்டாள். இருவருக்கும் கதைப் புத்தகங்கள் பிடித்தமான விஷயமாய் இருந்ததால் ஜெயகாந்தன், பாலகுமாரன், ராஜநாராயணன் என்று அவர்கள் படித்த நாவல்களின் கதாசரியர்களின் உதவியுடன் நெருக்கமானார்கள்.
தினமும் சந்தியா வைஷாலிக்குப் புத்தகங்கள் தருவதும், வைஷாலி சந்தியாவுக்குப் புத்தகங்கள் தருவதுமாய் சிவாவும் ரங்காவும் கொரியர்பாய் ஆக்கப்பட்டார்கள்.
“வைஷாலி எனக்கு பார்சல் டெலிவரி பீஸ் தனியா தந்துடுங்க” என்று சீரியஸாய் சிவா சொல்ல, வைஷாலி முறுவலித்தாள்.
“அட கேட்டதுமே எடுத்துத் தந்துட்டிங்க” என்று அவன் சொல்லிச் சென்றதும்தான் அவளது புன்னகையை கட்டணமாகக் கேட்டிருக்கிறான் என்று வைஷாலிக்குப் புரிந்தது.
அவளின் புன்னகை அவனுக்கு முக்கியம் என்பது உரைத்தபோது திகைப்பாகவும் இருந்தது. இவன் எண்ணம் நல்லதோ கெட்டதோ தெரியவில்லை ஆனால் இதைத் தொடர விடக்கூடாது என்று உறுதியாக இருந்தாள் மறுநாளே அது தளரப் போவது தெரியாமல்.
மறுநாள் காலை சிவா அலுவலகத்துக்குத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்தபோது பான்பராக் மென்றபடி ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதன் வரவேற்பறையின் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான். வழக்கமாய் சிறு விசாரிப்புடன் காப்பி தரும் சங்கரி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் காலை உணவையும் காப்பியையும் உணவு மேஜையில் வைத்தார். அதன் அருகிலேயே மதிய உணவும் அவன் எடுத்துச் செல்லத் தயாராக.
“அத்த, உன் மாப்பிள்ள வந்து இம்மா நேரமாச்சு, எனக்கு பச்சை தண்ணி கூடக் கண்ணுல காட்டல. இவனுக்கு ஓடி ஓடி வந்து சாப்பாடு போடுற. சோனா சொல்ற மாதிரி உனக்கு மரியாதையே தெரியல” குற்றம் சாட்டினான்.
மாப்பிள்ளையா? இவனா வைஷாலியின் கணவன்? திகிலுடன் அவனைப் பார்த்தான் சிவா. அவன் உடுத்தியிருந்த உடையும், அமர்ந்திருந்த தோரணையும் நல்ல அபிப்பிராயத்தைத் தரவில்லை. தட்டில் இன்னொரு தோசை வைக்க வந்த சங்கரியிடம் “போதும்மா” என்று தடுத்தான்.
“நீங்க தமிழ்ன்னு செந்தில் சொன்னான். எனக்குத்தான் மறந்தே போச்சு சார்” என்றான் வந்திருந்தவன்.
ருசியறியாமல் சிவா விழுங்கினான்.
“சாரிப்பா. நானு அத்தைகிட்டயும், சாலிட்டையும் இப்படித்தான் கேலி பேசுவேன்” என்று அசட்டுத்தனமாய் சிரித்தான் வந்தவன்.
அதற்கும் சிவா மறுமொழி அளிக்கவில்லை.
“வா..” என்று தூக்கக்கலக்கத்தில் சிவாவிடம் நடந்து வந்த தீபிகாவைப் பிடிக்கப் போனான்.
“பாப்பா அப்பாட்ட வா” என்று அவன் சொன்னதும் பொறுக்க முடியாமல் சமையல் அறையில் பதுங்கியிருந்த வைஷாலி வெளியே வந்தாள்.
“யார் பிள்ளைக்கு யார் அப்பா? மரியாதை கெட்டுடும்” முகம் சிவக்கக் கத்தினாள்.
“கோவப்படாதே சாலி. நம்ம கல்யாணத்துக்கப்பறம் நான்தானே இவளுக்கு அப்பா”
“இந்த மாதிரி நெனப்பெல்லாம் வச்சுட்டு இந்த வீட்டு வாசல்படியை மிதிக்காதே”
“இங்கபாருடா வேடிக்கையை. என் தங்கச்சி வீட்டுக்கு நான் வரதை யார் தடுக்குறது. நீயும் உன் பொண்ணுமே இங்க பாரம்னு சோனா சொல்லிடு இருக்கா”
“யாருடா பாரம்? எங்க வீட்டு சொத்தையெல்லாம் உறிஞ்சிட்டு எங்கம்மாவை வீட்டோட வேலைக்காரியாக்கிருக்கா உன் தங்கச்சி. என் கல்யாணத்துக்குன்னு ஒரு பைசா கூட செலவழிக்காதவங்க, இப்ப தீபிகா அப்பாட்ட ஜீவனாம்சம் வாங்கிட்டு இந்த வீட்டில் தங்க வச்சிருக்காங்க. இந்த வீட்டில் நான் சாப்பிடுற ஒவ்வொரு வேளைக்கும் உழைச்சுக் காசு தரேன்” பேச ஆரம்பித்தவளைத் தடுத்து உள்ளே இழுத்துச் சென்றார் சங்கரி.
“தம்பி இவனை வெளியே கூட்டிட்டு போங்களேன்” என்று சிவபாலனிடம் வேண்டிச் சென்றார்.
“அத்தை யாரையோ விட்டு என்னை விரட்ட சொல்லாதே. அது உன் மாப்பிள்ளைக்கு மரியாதை இல்லை. கிளம்புறதுக்கு முன்ன ஒண்ணு சொல்லிக்கிறேன். இப்படியெல்லாம் உன் பொண்ணு ஒண்ணும் முதுகொடிய சம்பாரிக்க வேணாம். என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லு. அவளை சந்தோஷமா வச்சுக்குறேன்” என்று சொல்லிக் கிளம்பினான்.
“நீயும் கிளம்பிட்டயா. வா சார் ரெண்டு பேரும் போலாம். உன்ன ஸ்டேஷன்ல இறக்கி விட்டுடுறேன்” என்ற அவனின் அழைப்பை மறுக்க முடியாமல் அவனுடன் கிளம்பினான் சிவா.
பேசாமல் தன்னுடன் நடந்து வந்த சிவாவிடம் “ஐ அம் தேவானந்த். நீங்க தேவான்னு கூப்பிடலாம். உங்க நேம்”
“சிவபாலன்” இறுக்கமான குரலில் சொன்னான்.
“ சிவா சாருக்கு பொம்பளைங்கட்ட சத்தம் போட்டது என் மேல கோவம் போலிருக்கு. இந்த தேவா ஒண்ணும் பொறுக்கி இல்ல சார். உழைச்சு சம்பாரிக்கிறேன். டப்பாவாலா….. மாசம் பன்னடாயிரம் சம்பளம். அதைத் தவிர ராத்திரி நேரத்தில் ஜுஹு பீச்ல பாவ்பாஜி கடை என் பிரெண்ட்டோட பார்ட்னரா ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் மூணே வருஷத்தில் மரைன் டிரைவ்லயும் ஒரு கடை போட்டுருவோம்.
சாலி என்னைக் கல்யாணம் பண்ணிட்டா இப்படி முதுகொடிய வேலை பாக்க வேண்டாம் சார். தீபிகாவை நல்லா படிக்க வைக்கிறேன்”
“வைஷாலி கஷ்டப்படுராங்கன்னு உங்களுக்கே தெரியுது. உங்க தங்கை கிட்ட சொல்லி அவங்களுக்கு நல்லது செய்ய சொல்லலாமே தேவா”
“சோனா செய்யுறது தப்புதான். ஆனா அவகிட்ட எதுவும் சொல்ல முடியாது. அது பயங்கர அடங்காப்பிடாரி. அவ புருசன் செந்திலும் ஆடம்பரக்காரனா இருக்கான். மாசம் முப்பதாயிரம் சம்பாரிக்கிற ஒண்டிக்கட்டை நானே பாதியை சேர்த்து வைக்கிறேன். செந்திலும் சோனாவும் சம்பாரிக்கிற காசை செலவழிச்சுட்டு வீட்டுல ரூமைக் கண்டவனுக்கும் வாடகைக்கு விட்டு காசு பாக்குறாங்க”
சிவபாலன் கோவமாய் முறைத்தான். தான் சொன்ன வார்த்தைகளுக்காக நாக்கைக் கடித்துக் கொண்ட தேவா
“மன்னிச்சுக்கோ சார். உன்ன சொல்லல. நீ ரொம்ப நல்லவன்னு கேள்விப்பட்டேன். இதுக்கு முன்ன ரெண்டு மாசம் ஒருத்தன் இருந்தான். வயசானவந்தான். ஆனா சாலி கையைப் பிடிச்சு இழுத்துட்டான். சாலி அடிச்சுட்டா. நானும் அடி வெளுத்துட்டேன். அப்பறம்தான் நம்மளே ஏன் இவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. இவ செஞ்ச காரியத்துக்கு சுமன் இனிமே இவளைத் திரும்பிக் கூட பாக்க மாட்டான்”
“நீங்க சுமன் கிட்ட வைஷாலி நிலைமையை எடுத்து சொல்லி அவங்களை சேர்த்து வைக்கலாமே. நானும் என்னாலான ஹெல்ப் செய்றேன்”
“அட சுமன் வேற கல்யாணம் பண்ணிட்டான் சார். அவன் ரெண்டாவது பொண்டாட்டிக்குக் குழந்தை கூடப் பிறக்கப் போகுது. சாலி மாசமா இருந்தப்ப அவன்கிட்ட சமாதனம் பேச நான்தான் போனேன். அவன் இனிமே ரெண்டு பேருக்கும் உறவில்லை. அவளை வேணும்னா கர்ப்பத்தைக் கலைக்க சொல்லுன்னு இரக்கமில்லாம சொல்லிட்டான்.
தீபிகா பொறந்ததும் இன்னொரு தடவை அவங்க வீட்டில் சொல்லப் போனேன். வைஷாலியோட மாமியார் வீட்டு உள்ளேயே விடல. வாசலோட நிக்க வச்சு விவரம் கேட்டு அனுப்பிட்டா. இன்னி வரை இவங்களை திரும்பிக் கூடப் பார்க்கல.
நான் சொல்ல வரது என்னன்னா, இவளைப் புடிக்கலைன்னு விலகிட்டு வேற பொண்ணோட போனவனை நினைச்சு ஏன் கவலைப்படணும்? தனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுட்டு சந்தோஷமா இருக்கலாம்ல.
வேற யாராவதுன்னா தீபிகாவோட பொறுப்பை ஏத்துக்க யோசிப்பான். என்னைக் கல்யாணம் பண்ணிட்டா சாலி பாதுகாப்பா இருக்கலாம், சோனா அத்தையை சரியா கவனிக்கலைன்னா என் தங்கச்சியை ஒரு வழி பண்ணலாம். இதெல்லாம் அவளுக்கும் என் அத்தைக்கும் எடுத்து சொல்லுங்க சார்” தனக்கு மார்கெட் செய்ய ஒரு ஆளை ஏற்பாடு செய்துவிட்டுக் கிளம்பினான் தேவா.
அன்று முழுவதும் அலுவலகத்தில் இருப்புக் கொள்ளாமல் தவித்தான் சிவா. அவனது இறுக்கமான முகத்தையும், கவனச் சிதறலையும் கண்ட ரங்கா விசாரித்தான். அவனிடம் காலை நடந்ததைக் கொட்டியதும் சற்று தளர்வாக உணர்ந்தான் சிவா.
“தேவா வைஷாலியை கல்யாணம் செய்துக்க விரும்புறது தெரிஞ்சதும் ஏன் உனக்கு வருத்தம்?”
“தேவா நல்லவனாவே இருக்கலாம். ஆனா வைஷாலிக்கு அவனா? என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியல”
“அப்ப வைஷாலிக்கு வேற யாரு பொருத்தமா இருப்பாங்கன்னு நினைக்கிற? சிவபாலனா?” புருவத்தைக் கேள்வியாக உயர்த்தினான்.
திகைத்தான் சிவா “ரங்கா. அவ மேல எனக்கு இருக்குறது வெறும் அபிமானம். அன்பு, பிரியம் ”
“இதெல்லாம் காதலா மாறுவது தப்பில்லையே. லுக் சிவா நீ அவளை விரும்ப ஆரம்பிச்சு எத்தனையோ நாளாச்சு. உண்மையை தைரியமா பேஸ் பண்ணு. அதுக்கான நேரமும் வந்தாச்சு”
கேள்வியாக நண்பனைப் பார்த்தான் சிவா.
“உனக்கு நவி மும்பைல எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே பிளாட் அலாட் ஆயிருச்சு. அங்க ஆரம்பிச்சிருக்கும் புது பிரான்சில் உனக்கும் எனக்கும் மாறுதல் கிடைச்சிருக்கு. இன்னைக்குக் காலைல தண்டபாணி சார் என்கிட்டே சொன்னார். அபிசியலா ரெண்டு நாளில் உத்தரவு நம்ம கையில் கிடைக்கும். சீக்கிரமே அந்த கிளையில் சேர வேண்டியிருக்கும்”
ரங்கா சொல்லி முடித்து ஐந்து நிமிடங்கள் கழித்துத்தான் சிவாவுக்கு உரைத்தது. புது வீட்டுக்கு சென்றால் இனிமேல் தீபிகாவின் சிணுங்கல் அழுகையைக் கேட்க முடியாது. மிகவும் நெருக்கமாகி விட்டதால் விடியற்காலைகளில் தீபிகாவே எழுந்து வந்து சிவாவின் பக்கத்தில் படுத்து அவன் மேல் கால் போட்டு உறங்குகிறாள். அந்த இன்பம் இனிமேல் இல்லை. காபியுடன் அவ்வப்போது இலவச இணைப்பாய் கிடைக்கும் வைஷாலியின் புன்னகை மறுக்கப்படும். சங்கரியின் அன்னையின் வாஞ்சை இனிமேல் அடியோடு இழப்பான். கனவில் அரசனாக வாழ்ந்த பிச்சைக்காரன், விழிப்புத் தட்டியதும் நிதர்சனத்தை எதிர் கொள்ளத்தானே வேண்டும்.
மனம் முழுவதும் குழப்பத்துடன் நேரம் கழித்து வீட்டுக்கு நுழைந்தவன் சங்கரியின் முகம் வாடியிருப்பதையும், வேர்த்திருப்பதையும் கவனிக்கவில்லை. உணவை மறுத்து அறைக்குச் சென்றான். தூக்கம் வராமல் புரண்டு ஒரு வழியாகக் கண்ணயர்ந்தவனை பலமாகக் கதவு தட்டும் ஓசை எழுப்பிவிட்டது.
அவசரமாய் வெளியே வந்தவனை பதட்டம் நிறைந்த முகத்துடன் எதிர்கொண்டாள் வைஷாலி.
“சிவா, அம்மாவுக்கு வேர்த்து வேர்த்து கொட்டுது. மூச்சு தினறுறாங்க. பயம்மா இருக்கு”
வேகமாய் சங்கரியை நெருங்கியவன், அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதை கண்டறிந்து துரிதமாக நடவடிக்கையில் இறங்கினான். ஆம்புலன்ஸை அழைக்க நேரமில்லாததால் அவனுக்கு முன்பே அறிமுகமான டாக்ஸி டிரைவரை அழைத்தான். அவரும் ஐந்தே நிமிடங்களில் அங்கு வந்தார். மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு வண்டியை விட சொன்னான்.
“எந்த ஹாஸ்பிட்டல்” என்று கேட்ட ஓட்டுனருக்கு
“இங்க இருக்குறதில் பெஸ்ட்டுக்கு” என்றான் சிவா. கண்கள் கலங்க தாயின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் வைஷாலி.
“அம்மா நீ நல்லாயிடும்மா. உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா. என்னை விட்டு போய்டாதம்மா” மெல்லிய குரலில் சொன்னாள்.
“ஷாலு, அம்மா சரியாயிடுவாங்க. இந்த சமயத்தில் அவங்களுக்குத் தைரியம் தரதை விட்டுட்டு கண் கலங்காதே” என்று அதட்டினான். அவனது அதட்டலுக்கு பலன் இருந்தது.
மருத்துவமனையில் சங்கரியை எமெர்ஜென்சி வார்டில் அட்டென்ட் செய்தார்கள். ஐசியுவில் உடனடியாக சேர்த்தார்கள். சிவா அலைந்துத் திரிந்து எல்லா நடைமுறைகளையும் முடித்துவிட்டு வைஷாலி உட்க்கார்ந்திருந்த இடத்தை அடைந்தபோது காலை மூன்றரை மணி.
அமைதியான அந்த அறையில் சோகச் சித்திரமாய் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த வைஷாலியும், அவளது மார்பில் சாய்த்து உறங்கும் தீபிகாவையும் பார்க்கும்போது இவர்கள் இருவரையும் கண்ணுக்குள் வைத்து இமைபோல் பாதுகாக்க வேண்டும் என்ற வெறி தோன்றியது.
அவனைப் பார்த்ததும் “பணம்… ” மெல்லிய குரலில் ஏதோ சொல்ல முயன்றாள் வைஷாலி.
“பணத்தைப் பத்திப் பேசினா அறைஞ்சுடுவேன்” சிவா கோவமாய் பேசியதும் மிரட்சியோடு அவனைப் பார்த்தாள் வைஷாலி.
‘சிவா இவ்வளவு கஷ்டப்பட்டும் புத்தி வராதா. உன் கோவம் கொஞ்சம்கூடக் குறையலையே’ தன்னைத் திட்டியவண்ணம் வைஷாலியின் அருகிலிருந்த சேரில் அமர்ந்தான்.
“செந்தில் அண்ணா எங்க இருக்கான்னே தெரியல. ஊர் சுத்தப் போனவன் ஒரு போன் கூட பண்ணல. எங்கம்மா நல்லாயிருவாங்கள்ள….. எனக்கும் தீபிகாவுக்கும் அவங்களை விட்டா யாருமே இல்லை… ”
வைஷாலியின் குரல் தடுமாற, கண்களில் நீர் வழிந்தோடியது.
தன் வலக்கையினால் அவளது கண்ணீரைத் துடைத்தவன், இடக்கையை அவளது வலக்கையின் மேல் வைத்து ஆறுதல் தரும் வண்ணம் கோர்த்துக் கொண்டான்.
“பைத்தியம்… நான் இல்லையா… உங்க மூணு பேரையும் நான் பாத்துக்க மாட்டேனா”.