Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 4’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 4’

ன்னைக்கும் ராத்திரி அவ வலில அழுதா ரங்கா. என்னால தாங்கவே முடியல” ரங்காவிடம் பகிர்ந்துகொண்டான் சிவா. 

ஒரே வயதினர் என்பதால் நெருங்கியிருந்தனர். அதைத் தவிர இந்த ஆறு மாதங்களில் மாதங்களில் மனம் விட்டு பேசியதாலும், ரங்காவின் மனைவி சந்தியாவுக்கு குடல்வால் அறுவை சிகிச்சையின்போது யாரும் அருகில் இல்லாத நிலையில் சிவா உதவியதாலும், ஒருவரின் துன்பத்தில் மற்றவர் பங்கு கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பு இறுகியிருந்தது. 

சிவபாலன் முதன் முறையாக அவன் வாழ்க்கையைப் பற்றி ரங்காவிடமும் சந்தியாவிடமும் பகிர்ந்திருந்தான். அவன் மனதிலிருந்த பாரத்தின் சுமைகளை குறைக்க ரங்காவும் உதவியிருந்தான்.

“அவ மேல அப்படி என்ன ஸ்பெஷல் அக்கறை. முன்னாடியே தெரியும்னு சொன்ன? லவ் பண்ணியா என்ன?”

“அதை லவ்ன்னு சொல்ல முடியாது. ஆனா அவளை எனக்கு ரொம்பப்  பிடிச்சது.” 

ரங்காவிடம் சொல்லாத தன் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டினான். சிவாவின் கண்முன்னே அப்போதுதான் நடந்த நிகழ்வு போல் அந்தக் காட்சி விரிந்தது. 

“இது நர்த்தனாவை நான் சந்திக்கிறதுக்கு சில மாதங்கள் முன்னே நடந்தது.  அஞ்சு வருஷம் முன்னாடி கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப என் அத்தை மகன் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். கல்யாணம் மாதிரி சுப சம்பவங்களில் பொண்ணு பசங்களை வச்சிருக்கவங்க தகுந்த வரனைப் பார்த்து திருமணம் முடிவாறது சகஜம்தானே.அங்கதான் வைஷாலியைப் பார்த்தேன்” நினைவில் ஆழ்ந்தான். 

மயநல்லூரிலிருந்து  மதுரை-திண்டுக்கல் சாலையில் விரைந்தது அந்த ஸ்பெளன்டர் பைக். அதன் சாரதியாய் சிவபாலன் ஆரோகணித்திருக்க, பின்சீட்டில் சிவபாலனின் அண்ணன் தனபாலன் அமர்ந்திருந்தான். 

சமயநல்லூரில் அங்காளப்பரமேஸ்வரி பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் ராஜரத்தினத்தின் ரத்தினங்கள் இருவரும். மூத்தவன் தனபாலனுக்கு எட்டு வயதாகும்போது சிவபாலனைப் பெற்றுத்தந்துவிட்டு அவனது அன்னை பரமேஸ்வரி மண்ணுலகை விட்டு விடை பெற்றிருந்தார். ராஜரத்தினத்தின் தாயார் நல்ல திடத்தோடு இருந்ததால், அப்பத்தாவின் கவனிப்பில் வளர்ந்தனர் இரு பாலர்களும். 

டிகிரி முடித்த கையோடு தந்தைக்கு உதவ தனபாலன் வந்துவிட, சிவபாலன் நன்கு படித்தான். படிக்கும்போதே வங்கயில் தேர்வாகி நல்ல வேலையிலும் அமர்ந்தது அவர்கள் அனைவருக்கும் பெருமை. தனபாலனுக்கும் அவர்கள் உறவினர் பெண் கயல்விழிக்கும் திருமணம் நடந்தது. தனபாலனுக்குத் திருமணம் முடிந்து இரு பிள்ளைச் செல்வங்கள் பிறந்துவிட, தற்சமயம் செங்கல்பட்டில் வேலை பார்க்கும் சிவபாலனின் ஜாதகக் கட்டைக் கையில் எடுத்திருந்தார் ராஜரத்தினம். 

“சிவா, ஊருக்குப் போறப்ப மறக்காம நகைப்பையை கொண்டு போய் உன் பேங்க் லாக்கர்ல வச்சுரு”. சிவாவின் வங்கியில் ஒரு லாக்கர் வாங்கி அவன் பொறுப்பிலேயே நகைகள் எடுத்து வருவது அந்தக் குடும்பத்தின் வழக்கம்.

“பேசாம மதுரைல ஒரு லாக்கர் வாங்கித் தொலைச்சா என்ன? ஒவ்வொரு தரமும் நகையை எடுத்துட்டு போயிட்டு வரதுக்குக் கடுப்பா இருக்கு”

“டேய் வீட்டுல ரெண்டு பேருக்கும் கொள்ளை வேலை இருக்கு. இதில் பாங்குக்கு போனா அரை நாள் வீணாகும். ஏண்டா காலைல பாங்க் போறப்ப வைக்கப் போற, ஊருக்கு வரப்ப எடுத்துட்டு வரப்போற. இதுக்கு என்னமோ இப்படி சலிச்சுக்குற”

“என்னமோ போ, ஆமா தனா…. எனக்குப் பொண்ணு பாக்குறேன்னு குடும்பமே போயி வீடு வீடா போய் சாப்பிட்டுட்டு வர்றிங்கலாமே”

“யாருடா எப்படி ஒரு புரளியை கிளப்பிவிட்டது”

“ஏண்டா உன் மகன் போதாது. மதுரைல பொண்ணு வீட்டுக்காரன்கிட்ட  என்ன பஜ்ஜியும் சட்னியும் வச்சிருக்கிங்க இட்டிலி கொண்டாங்கன்னு கேட்டானாமே. எனக்கு செய்தி வந்தது. இப்படி ஊரு ஊரா போய் என் பேரைக் கெடுக்கனும்னு எத்தனை நாளாடா திட்டம் போட்டிங்க”

கேலியும் சிரிப்புமாய் சகோதரர்கள் இருவரும் மண்டபத்தை அடைந்தனர். பைக்கை பார்க்கிங்கில் நிறுத்தி வந்தார்கள். 

மண்டப வாசலில் திருமணத்திற்கு வந்தர்களுக்கு சந்தனம் குங்குமம் தந்த பெண்களின் சிரிப்பு  வெள்ளிச் சலங்கையை இசைத்ததைப் போல் கலீர் கலீரென ஒலிக்க, இளவட்டங்களின் கண்கள் முழுவதும் அந்தப் பக்கமே வட்டமிட்டது. சந்தோஷம் அங்கு கொட்டிக் கிடந்தது. 

“நான்தான் சொன்னேன்ல அந்த உராங்குட்டான் உன்னைத்தாண்டி பாக்குது” சொல்லிவிட்டு களுக்கென சிரித்தாள் ஒரு பெண். 

“சும்மா இருடி” மெல்லிய குரலில் அதட்டினாள் மற்றொருவள்.

சிவாவின் பார்வை அங்கு திரும்ப முதன் முறையாக ஒரு பெண்ணால் மிகவும் வசீகரிக்கப்பட்டான். அவளுக்கு மிக அமைதியான முகம், செதுக்கிய மூக்கு முனையில் அழகாய் கிளி மூக்கினைப் போல் வளைந்திருந்தது. அதுவே அந்தப் பளிங்கு முகத்துக்கு  மேலும் அழகு சேர்த்தது. பவள நிறத்தில் இதழ்கள். இரண்டு கரிய வானவில்லை அவள் புருவத்தில் கண்டான். 

இவ்வளவு லக்ஷணமான பெண்கள் எல்லாம் உலகில் இருக்கிறார்களா என்று வியந்து இமைக்க மறந்து பார்த்தான். எல்லாவற்றையும் விட சிவபாலனை மிகவும் கவர்ந்தது அவளது கண்கள். வானத்தின் நீலத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தார் போன்ற நீலநயனம். அதில் உலகில் உள்ள சந்தோஷத்தை எல்லாம் கொட்டிக் குவித்து வைத்ததைப் போல ஒரு மலர்ச்சி. அவளின்  குதூகலம் வைரமாய் கண்களில் ஜொலித்தது. 

‘கோகினூர் வைரங்களைக் கொள்ளையடித்த பரங்கித்தலையன் கண்ணில் நீ படல போலிருக்கே’ என்றெண்ணி சிரித்துக் கொண்டான். 

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி வரவேற்புப் பெண்களிடம் குங்குமம் சந்தனம் பன்னீர் கல்கண்டு எல்லாவற்றையும் பெற்றுவிட்டு கடைசியாய் அந்த தேவதையை நெருங்கினான். அவன் தன்னிடம் கை நீட்டியதைப் பார்த்துத் திகைத்துவிட்டு ‘களுக்’கென்று சிரித்தாள் அவள். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போதுதான் அவள் பெண்களுக்கு மல்லிகைப்பூ சரத்தை வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அசட்டுச் சிரிப்புடன் அவ்விடத்திலிருந்து நகர்ந்தான். 

“வைஷாலி இந்தா பூ” என்று பெரியவர் ஒருவர் சொல்ல, பையோடு மல்லிகைப்பூப் பந்தைப் பெற்று தோழிகளுடன் சேர்ந்து தோராயமாய் ஒரு முழம் அளவுக்குக் கத்தரிக்க ஆரம்பித்தாள். 

“என்னடா சிவா பார்வை அந்த இடத்தை விட்டு நகரவே  மாட்டிங்குது. அந்தப் பெண்ணைப் பிடிச்சுருக்கா. முடிச்சுடலாமா” அவன் காதில் தனபாலன்  காதருகே முணுமுணுக்கவும் நினைவுக்கு வந்தான். 

“உங்க இஷ்டம்பா” பதில் சொன்னான் சிவா. 

“ஏன் உனக்கு இஷ்டமே இல்லையா. விட்டா மாப்பிள்ளை கைல இருக்குற தாலியைப் பிடுங்கி இவ கழுத்துல கட்டிடுவ போல இருக்கு. ஆமா, யாரு வீட்டுப் பொண்ணுடா இது?”

“தெரியல. பேர் வைஷாலின்னு மட்டும் தெரியும்”

“சரி விசாரிச்சுட்டு வரேன்” என்று எழுந்தான் தனபாலன் . 

“பொம்பளப் புள்ளைங்க கைல அடிபடப் போற” எச்சரித்தான் சிவா. 

“எனக்குத் தெரியாதாடா எப்படி நடந்துக்கணும்னு. தங்கச்சின்னு ஒரு பிட்டைப் போட்டு விஷயத்தை வாங்கிட்டு வரேன்”

“டேய் வைஷாலியை அப்படிக் கூப்பிட்டுடாதே” பலமாய் எச்சரித்து அனுப்பினான். 

அரைமணியில் முகம் தொங்க திரும்பி வந்த தனபாலன், “சிவா மறந்துடுடா. அந்தப் பொண்ணு நம்ம இனமில்லை. கல்யாணப் பொண்ணோட தங்கச்சி கிளாஸ்மேட்டாம்” 

“காலேஜ் படிக்குற பொண்ணா” என்றான் ஏமாற்றத்தை மறைக்கும் குரலுடன். 

“ரெண்டாவது வருஷம் படிக்குது. நம்மவங்களா இருந்தா பிரச்சனையில்லை. டிகிரி முடிக்கிற வரைக்கும் காத்திருக்கலாம்” முகவாயைத் தடவிக் கொண்டே சற்றுநேரம் யோசித்தான் தனபாலன்.

“இதுவே காதல் கல்யாணம்னா சங்கதியே வேற. நம்ம கேஸ்ல அப்பாவே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார். நம்ம இனத்தில் பொண்ணா இல்லைன்னு கேள்வி கேப்பார். வைஷாலி வீட்டில் பொண்ணு கேட்டாலும் வேற ஜாதின்னு அவ அப்பா அம்மா பொண்ணு தரமாட்டாங்க. இவ்வளவு சிக்கல் இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்த பொண்ணுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்குறதை விட நமக்கு ஏத்தாப்பில ஒரு பொண்ணைக் கட்டிகிடுறதுதான் புத்திசாலித்தனம்” 

“வேற வழியே இல்லையா” தொய்வாய் ஒலித்தது சிவாவின் குரல். 

“அவளை மறக்குறதுதான் ஒரே வழி. இந்த வயசில் அழகான பொண்ணைக் கண்டா தடுமாருறது சகஜம்தான். நடக்காதுன்னு தெரிஞ்சா அப்படியே தொடைச்சுப் போட்டுடணும். ‘கிட்டாதாயின் வெட்டென மற’. மனசில் சுமந்துட்டு திரியாதே” கண்டிப்பாய் சொன்னான் தனபாலன்.

 சொன்னதோடு மட்டுமின்றி அதன் பின் சிவபாலனை  ஒரு நிமிடம் கூட தங்க விடாமல் முக்கியமான வேலை என்று அனைவரிடமும் சாக்கு சொல்லி கையோடு இழுத்துச் சென்று ஊருக்கு பஸ் ஏற்றிவிட்டான். 

தேவதைகள் சாமானியர்களுக்குக் கிட்டுவதில்லை என்று மனதைத் தேற்றிய வண்ணம் மண்டபத்தை விட்டுக் கிளம்பிச் செல்லும் முன் கடைசியாக ஒரு முறை வைஷாலியைக் கண்களும் மனமும் நிறைய நிரப்பிக் கொண்டான் சிவபாலன். யாரிடமோ பேசிச் சிரித்த அவளது முகம் அவன் மனதில் அப்படியே தங்கியது. 

 

னதினுள் அமிழ்ந்திருந்த நினைவுகளிலிருந்து வெளிவந்தான் சிவபாலன் 

“ரங்கா அன்னைக்கு வைஷாலியைப் பார்த்ததுதான். இப்ப கைக்குழந்தையோட திரும்பப் பாக்குறேன். சில சமயம் அவள் நினைவு வரும். அப்பல்லாம் நல்ல வேளை என்னை மாதிரி ஒரு அதிர்ஷ்டக் கட்டைட்ட இருந்து தப்பிச்சுட்டா. அன்பான கணவன், அழகான குழந்தைன்னு சந்தோஷமா வாழட்டும்னு நினைச்சுப்பேன். 

ஆனா அண்ணன் வீட்டில் வேலைக்காரியா, முதுகொடிய வேலை பாத்து, குழந்தையைக் கொஞ்ச கூட நேரம் இல்லாம, கணவனோட வாழாம….. பச்…. அவளுக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்குற மாதிரியே தெரியலைடா. அவளோட சிரிப்பை எங்க தொலைச்சா… யாருகிட்டயாவது ஏமாந்துட்டாளா… இப்படியெல்லாம் நினைச்சு நினைச்சு என் தலையே வெடிக்கிற மாதிரி இருக்குடா”

நிலத்தின் அடியில் ஓடும் நீரோட்டம் போல, சிவாவின் மனதின் அடியில் அவனே அறியாமல் வைஷாலியின் மேல் அன்பு என்ற நீரோட்டம் இன்னமும் வற்றாத நதியாய் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டான் ரங்கா. அதை சிவபாலனே உணராதது நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டான். வைஷாலியை மட்டுமில்லாமல் சிவாவையும் சேர்த்து மீட்டெடுக்க வழி கிடைத்ததைக் கண்டறிந்த சந்தோஷத்தில் பெரிய புன்னகை அரும்பியது ரங்காவின் முகத்தில்.

“கட்டாயம் அவ தொலைச்ச சிரிப்பைக் கண்டுபிடிப்போம்டா” என்றான் ரங்கா. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 12’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 12’

திருமண இரவு. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அலங்கரிக்கப் பட்டக் கட்டிலில் அமர்ந்திருந்தான் சுமன். அவனுக்கு மனம் முழுவதும் குழப்பம்.  ராட்சஷனின் உயிர் மலை மேல் இருக்கும் விளக்கில் என்று கதைகளில் சொல்வது போல சுமனின் குடும்பத்தின் உயிர் அங்கிதாவின் கைகளில்.

சிலிகான் மனது – Audio novelசிலிகான் மனது – Audio novel

Follow my anchor channel: https://anchor.fm/tamilmadhura/episodes/Silicon-Manathu—Tamil-short-story-eb9d8r Thanks to Writer Hasha Sri for the beautiful narration தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி .

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’

பெங்களூரில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. உஷ்ணம் சற்றும் குறையாமல் காதம்பரி இருக்க, சோனாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, பிரியாவிடை பெற்று வந்தான் வம்சி. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போலாயிற்று காதம்பரிக்கு. ‘சவாலா விடுற சவால்… அதுவும் காதம்பரிகிட்ட… காலேஜில் எத்தனை பசங்க