Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 3’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 3’

செந்தில் வீட்டுக்கு சிவபாலன் குடியேறினான். காலை ஏழுமணிக்கு அலுவலகம் கிளம்புபவன் இரவு எட்டுமணிக்குத்தான் திரும்புவான். இந்த சில நாட்களில் சிவா  கவனித்தவரை, அந்த வீட்டின் ராணி செந்திலின் மனைவி சோனாதான். மும்பையில் பிறந்து வளர்ந்தவள். மும்பையிலிருக்கும் ஒரு பெரிய கடையில் விற்பனைப் பெண்ணாகப் பணி புரிகிறாள். 

செந்தில் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிகிறான். தம்பதியினர் காலை பத்து மணிக்கு வெளியே சென்றால் சாப்பாடெல்லாம் முடித்துவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். அவர்கள் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பிவிட்டு, உணவு தந்து, பாடம் சொல்லித்தருவது எல்லாம் செந்திலின் தாய் சங்கரியும் அவன் தங்கை வைஷாலியும்தான்.

 வைஷாலியும், சங்கரியும் காலை ஐந்து மணிக்கே எழுந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள். செந்திலின் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி விட்டு, அவளும் குளித்து வேலைக்குக் கிளம்புவாள். 

விடியற்காலையில், ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டு விழித்து அழும் குழந்தை தீபிகா அம்மாவைத் தேடி அழுவாள். ஆனால் அழும் குழந்தையை நின்று நிதானமாய் சமாதனப் படுத்தக் கூட நேரமின்றி ஏக்கப் பார்வையுடன் 

“தீபா என் கண்ணுல்ல, அம்மாவைப் படுத்தாதடா. அம்மாவுக்கும் உன் கூடத் தூங்க ஆசைதான். வேலை இருக்கும்மா” என்று சமாதனம் செய்தபடி வேலை பார்ப்பாள் வைஷாலி. 

காலை வேலை அவசரத்தில் அவர்களால் வைஷாலியின் குழந்தை தீபிகா எழும் நேரத்தில் பாலாற்றிக் கூடத் தரமுடியாது. குழந்தையின் அழுகுரல் கேட்டால் தூக்கம் கெட்டுவிட்டதாக சோனா கத்தித் தீர்ப்பாள். 

சிலநாட்கள் இந்த நாடகத்தைப் பொறுத்த சிவா, அழும் தீபிகாவை தனது அறைக்குத் தூக்கிச் சென்றான். முதலில் முரண்டு பிடித்தாலும் பால் பாட்டிலில் புகட்டும் வரை சிவாவிடம் இருந்து பழகியவள் பின்பு அவனது கைகளிலேயே உறங்க ஆரம்பித்தாள். சிவாவும் அவர்கள் பாலாற்றித் தந்தவுடன் தோளில் தட்டிக் கொடுத்துத் தூங்க வைப்பான். கண்ணுக்குத் தெரியாத பாச இழை அங்கே உருவாயிற்று.

தூங்கும் பாப்பாவை அவனது படுக்கையில் படுக்க வைத்து சுற்றிலும் தலையணையை அணைவாகத் தந்தபடியே அந்த மலரினும் மெல்லிய கன்னத்தில் தன்னை அறியாமல் முத்தமிட்டுவிட்டுக் குளிக்கக் கிளம்பினான். ஹாலில் அண்ணன் மகளுக்குத் தலைசீவியபடியே ஓரக் கண்ணால் பார்த்திருந்த வைஷாலிக்கு கைகள் ஒரு கணம் நின்று பின் வேலையைத் தொடர்ந்தது. 

“அம்மா, சத்தம் குழந்தைக்குத் தொந்தரவா இருக்கும் போலிருக்கு. காலைல இந்த ரூமில் தூங்க வச்சுடுங்க” என்று சொல்லியபடியே வேலைக்குக் கிளம்பியவனை அவனறியாது நன்றியோடு நோக்கின வைஷாலியின் கண்கள். 

அவன் கிளம்பி அரைமணியிலேயே வைஷாலியும் வேலைக்குக் கிளம்பிவிடுவாள். வழியில் அண்ணன் குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றிவிட்டு வேலைக்கு செல்வாள் போல என்று நினைத்துக் கொண்டான். 

இவ்வளவு சீக்கிரம் கிளம்புபவள் மாலை ஏழுமணிக்குத்தான் வீடு திரும்புவது நினைவுக்கு வந்தது. கைக்குழந்தை அம்மாவைத் தேடும் இந்த நேரத்தில் இப்படி மாங்கு மாங்கென்று உழைக்கும் அவசியம் இவளுக்கு ஏன் வந்தது என்று வழக்கம் போல் கேள்வி தோன்றியது. 

இந்த ஒரு மாதத்தில் வைஷாலியின் கணவனை அவன் ஒரு முறை கூடப் பார்க்கவில்லை. ஒரு வேளை வெளிநாட்டில் வேலை பார்ப்பவனோ? என்று அன்றும் வழக்கம்போல் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.  

சங்கரி, சிவாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் சமையலில் ஒரு குறையும் வைக்கவில்லை. அவனுக்குத்தான் வயதான காலத்தில் அவர் சிரமப்படுவது பொறுக்கவில்லை. 

“எனக்காக சிரமப் படாதிங்கம்மா. காலைல பிரட் சாப்பிட்டுக்குவேன்” அக்கறையோடு சொன்னவனை ஆச்சிரியத்தோடு பார்த்தார் சங்கரி. 

அங்கு தங்குபவர்கள் அவரை ஒரு வேலைக்காரி போல் பார்ப்பதுதான் வழக்கம். காலை எழுந்து ஓயாமல் அழுத வைஷாலியின் குழந்தை தீபிகாவை அவனது ரூமில் வைத்து விளையாட்டுக் காட்டியவனிடம் காலை சாப்பாட்டுத் தட்டை நீட்டினான். 

“பரவால்ல தம்பி உங்களுக்குன்னு தனியா எதுவும் செய்யல. தினமும் சமைக்கிறதுதான். இந்தாங்க மதிய சாப்பாடு” 

டப்பர்வேரில் அடைத்துத் தந்த உணவைப் பெற்றுக் கொண்டான். காலை உணவையும் ஒரு டப்பாவில் அடைத்தபடியே கிளம்பினான். 

“சாப்பிட்டுட்டுக் கிளம்பலாமே. உடம்பு சரியில்லாத பிள்ளை சாப்பாட்டைக் கொறிக்கிறிங்களே. வீட்டுல அம்மா சமையல் மாதிரி ருசி வரலையோ” இறுக்கமாய் பூட்டியிருந்த சங்கரியின் மனதை தன் அன்பெனும் ஆயுதத்தால் தகர்த்ததை அறியாமல் பேசினான். 

“என் அம்மா சமையலை சாப்பிடும் பாக்கியம் எனக்கில்லைம்மா. நான் பொறந்ததுமே அவங்க இறந்துட்டாங்க”

இரக்கத்தில் சங்கரியின் கண்கள் கனிந்தன. 

“எங்க அப்பத்தா சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கைப்பக்குவம் அவங்களுது மாதிரியே இருக்கு. ஆனா எனக்குத்தான் நிறைய சாப்பிட முடியல. வயிறு வலிக்குது”

அன்றிலிருந்து அவனுக்கென தனியாய் அகத்திக் கீரை பொறியல், மணத்தக்காளிக் கீரைக் கூட்டு என்று சமையல் செய்து சாப்பிட வைத்தார். 

“இதெல்லாம் எப்படி கிடைச்சதும்மா”

“இங்க ஒரு தமிழ் கடையில் சொல்லி வாங்கினேன். வயத்து புண்ணுக்கு இதெல்லாம் மருந்து. கஷ்டப்பட்டு சாப்பிடுங்க” என்று தாயினும் சாலப் பரிந்து உண்ண வைத்தார். 

ற்று காய்ச்சல் அடிப்பது போல் தெரிந்ததால் இரண்டு நாட்கள் விடுமுறையுடன் வீட்டில் அடைந்திருந்தான் சிவா. 

மாலை அவன் வீட்டிலிருப்பது தெரியாமல் சுவாமிப் படத்தின் முன் விளக்கேற்றி வணங்கினாள் வைஷாலி. 

பூவார் சென்னி மன்னா புயங்கப்பெருமான் சிறியோமை 

ஓவாதுள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் …..

என்ற திருவாசகம்.

‘இது உலக வாழ்க்கை வேண்டாம், இன்பங்கள் வேண்டாம் என்று இறைவனை வேண்டுபவர்கள் பாடுவதாயிற்றே, இவ்வளவு சிறிய வயதில் இவளுக்கு ஏன் வாழ்க்கையில் வெறுப்பு’ என்றெண்ணி தலைவலித்தது. 

தீபிகாவுடன் விளையாடினால் மாற்றம் இருக்கும். ஆனால் குழந்தைக்கு காய்ச்சல் வரகூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு அவளை விட்டுத் தள்ளியே இருந்தான். ஒரு மாத்திரையைப் போட்டு சிறிது நேரம் உறங்கினான். 

மதியம் தூங்கியவனுக்கு இரவில் தூக்கம் வரவில்லை. குளிருவது போல் தோன்றியதால் மின்விசிறியை நிறுத்தியிருந்தான். அந்த அமைத்தியான இரவில் மெலிதாய் ஒரு முனகல் கேட்டது. வலியினால் யாரோ அனத்துவது போல். 

“அம்மா தோள்பட்டை, கழுத்தெல்லாம் வலிக்குதும்மா” என்று மெதுவாய் வைஷாலி தாயிடம் சொல்வது கேட்டது. 

அங்கிருந்த நாட்களில் மற்றொன்றை அறிந்தான். இரண்டு படுக்கையறை வீட்டில் ஒன்றை இவனுக்கு வாடகைக்குத் தந்த செந்தில் அவன் குடும்பத்திற்காக மற்றொன்றை எடுத்துக் கொண்டான். வைஷாலியும் அவள் தாயும் ஹாலில் பாய் விரித்துப் படுத்துக் கொள்ள, தீபிகாவும் அங்கே ஒரு சிறு குழந்தைகள் தூங்கும் சின்ன மெத்தை ஒன்றில் படுத்துத் தூங்கினாள். 

“தினமும் ராத்திரி உன்னோட இது ஒரு தொல்லைடி. நில்லு சுடுதண்ணி ஒத்தடம் தரேன்” என்றவாறு எழுந்துபோனார் சங்கரி. 

“சலிச்சுக்காதம்மா, வேணும்னேவா சொல்றேன். தினமும் பத்துமணிநேரம் குனிஞ்சுட்டே துணி வெட்டணும், தைக்கணும்னு இருந்தா வலிக்காதா? கழுத்தே கழண்டு விழற மாதிரி வலிக்குதும்மா”

வைஷாலி  பக்கத்தில் இருக்கும் ரெடிமேட் துணி தைக்கும் இடத்தில் வேலை பார்க்கிறாள் போலிருக்கிறது என்று ஊகித்தான். ஆனால் ஏன்?

“அன்னைக்கு தலையைக் குனிஞ்சு, வாயை மூடிட்டு, எல்லாரையும் அனுசரிச்சு இருந்தேன்னா இன்னைக்கு இப்படி கஷ்டப்பட அவசியம் இல்லாம இருந்திருக்கும்” குத்தலாய் ஒலித்தது சங்கரியின் குரல்.

சற்று நேரம் மயான அமைதி. 

“திரும்புடி தோள்ல ஒத்தடம் தரேன்”

“போதும்மா…” தீனமாய் சொன்னாள் வைஷாலி.

“வலிக்குதுன்னு சொன்ன”

“இந்த வலியை தாங்கிக்குவேன். உன் வார்த்தை குத்துற வலியை என்னால தாங்க முடியல” 

“ஒரு பொம்பளைப் புள்ளையப் பெத்தோம் கட்டித்தந்தோம்ன்னு நிம்மதியா இருக்க எனக்குக் கொடுப்பினை இருக்கா. ஷ் அப்பாடா… இவ படுத்துற பாடு.. முடியலடா சாமி…  உனக்கு என்னதான்டி வேணும்”

“துளியோண்டு நிம்மதி, இத்துனூண்டு தூக்கம்” என்று ஏக்கத்தோடு ஒலித்தது வைஷாலியின் குரல். 

நான் உறங்கும் நாள் வேண்டும் 

சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்

என் கண்ணில் நீர் வேண்டும் 

சுகமாக அழ வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post