Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4

அத்தியாயம் – 04

 

பேய்கள் உலாப் போகும் நடுநிசி நேரம். நாகர்கோவில் ஊருக்கு வெளியேயிருந்த அந்த மயானமே கரும் போர்வை போர்த்தி அந்த நள்ளிரவு நேரத்திற்கு மேலும் அச்சம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நாய்களும் நரிகளும் போட்டி போட்டபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தன. 

 

எரிந்து கொண்டிருந்த சடலங்களிலிருந்து சதையும் இரத்தமும் விறகுகளும் சேர்ந்து ஏற்படுத்திய மணம் கூட அந்தச் சூழலுக்கு ஓர் அசூயை தோற்றுவித்தது. மயானத்தைச் சுற்றிப் புளியமரங்கள் கிளை பரப்பித் தலை விரித்தாடிக்கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆலமரங்கள் நீள நீள விழுதுகள் தொங்க நிலவொளி கூட உள்ளே புகாதவாறு குடை பரப்பியிருந்தன. அதிசயமாய் மயானத்தின் நடுவே ஒரு வேப்ப மரம். அதன் கீழே சில மனித உருவங்கள். 

 

எரிந்துகொண்டிருந்த சிதையொன்றிலிருருந்து சடலம் ஒன்று திடீரென எழுந்து உட்கார்ந்தது. சாதாரண மனிதன் ஒருவன் இந்தக் காட்சியைக் கண்டிருந்தால் நிச்சயம் இதயத் துடிப்பு நின்றிருக்கும். கைகள் சரியாகக் கட்டப்படாமல் எரியூட்டப்படும் சடலங்கள் சதை உருகி முடிய இப்படி எழுந்து அமர்வதும், வெட்டியான் ஒரு நீண்ட கழியால் அதை தள்ளிப் படுக்க வைப்பதும் சாதாரண ஒன்று தான். ஆனால் இந்த விடயங்கள் ஏதும் அறியாத அப்பாவி ஒருத்தன் காண நேர்ந்தால் பேயோ, பிசாசோ என்று குலைப்பன் காய்ச்சல் எடுப்பதில் ஐயமில்லை. 

 

ஆனால் வேப்ப மரத்தடியில் கூடியிருந்தவர்களோ இதையெல்லாம் கொஞ்சம் கூடக் கணக்கிலெடுத்ததாகத் தெரியவில்லை. மயானத்திலேயே பாதி நேரம் வாசம் செய்வதாலோ அல்லது நள்ளிரவிலே தான் தங்கள் வேலைகளைச் செய்வதாலோ வெகுசாதாரணமாக அச்சம் என்பதையே அறியாதவர்களாய் தீவிர மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள். 

 

கறுத்தக் கோழி ஒன்றை வெட்டி அதன் சூடான இரத்தத்தால் ஒருவன் கட்டங்கள், வட்டங்கள் நிறைந்த ஒருவிதமான கோலம் ஒன்றை வரைந்தான். இன்னொருவன் அந்த கோலத்தின் நடு மையத்தில் குச்சிகளையிட்டு தீ முட்டினான். தீயைச் சுற்றி அங்கிருந்த நான்கு பேரும் திசைக்கொன்றாய் அமர்ந்து கொண்டனர். 

 

அதில் தலைவன் போன்றிருந்த வயதானவன் ஒருவன் இன்னொரு கறுத்தக் கோழியை வெட்டி அதன் இரத்தத்தை கொளுந்து விட்டெரிய ஆரம்பித்த தீயில் விட்டான். அதைத் தொடர்ந்து அவன் முன்னாலிருந்த பல பொருட்களை தீயிலிட்டவாறே பல்வேறு மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். மற்றைய மூவரும் கூட அவனோடு சேர்ந்து கண்களை மூடி இருகரங்களையும் கூப்பி மந்திரங்களை உச்சரித்தவாறிருந்தனர். அந்தத் தீயொளி நால்வர் முகத்திலும் பட்டுக் காண்பவரை கிலி பிடிக்க வைத்திடும் உணர்வைத் தோற்றுவித்தது. 

 

உச்சியில் அள்ளி முடிந்த கொண்டை, புருவம் எங்கும் அப்பிய கருநிற மை, இரத்தத்தால் இட்ட செஞ்சாந்து நெற்றியின் மத்தியில், திறந்த மார்பில் கோடு கோடாகப் பூசியிருந்த கறுப்பு நிற மை, என்று அவர்கள் தோற்றமே அவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை என்பதை உணர்த்தியது.

 

திடீரென அந்த அக்கினியிலிருந்து கரும் புகை ஒன்று பெரிதாய் கிளம்பியது. அதனைக் கண்ட தலைவன் ஆனந்தவசப்பட்டவனாய் இரு கைகளையும் மேலுயர்த்தி அந்தப் புகையைப் பார்த்து ஏதோ வேண்ட ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அந்தப் புகை கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் மறைந்து காணாமல் போயிற்று. வாய்க்குள்ளே மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தவன் போலிருந்த தலைவன் குரலைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தான். 

 

அதேநேரம் வீட்டிலே பஞ்சு மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த நாகன்யாவுக்கு யாரோ தொண்டையை இரு கைகளாலும் பிடித்து அமுக்குவது போலிருந்தது. தொண்டை வறண்டு தாகம் எடுக்கத் துயில் கலைந்தவள், அருகிலிருந்த மண் பானையிலிருந்து கொஞ்சம் நீர் வார்த்துக் குடித்தாள். 

 

நாகம்மன் கோவில் தீர்த்தக் கேணியிலிருந்து எடுத்த நீரில் துளசியிலை போட்டு வைத்திருந்தார் தேவி. நாகன்யா மட்டுமல்ல அந்த ஊர் மக்களே இவ்வாறு தான் நீர் அருந்துவார்கள். அந்தத் துளசிநீர் அவர்களை நோய் நொடியிலிருந்தும் கெட்ட சக்திகளிலிருந்தும் காத்து வந்தது. 

 

துளசி நீரை அருந்திய நாகன்யாவுக்கு இப்போது தொண்டையில் ஏற்பட்ட அமுக்கம் விலகுவது போலிருந்தது. இரு கரங்களாலும் மெதுவாய் தொண்டையை நீவி விட்டுக் கொண்டாள். கட்டிலிலேயே பத்மாசனமிட்டு அமர்ந்தவள் மடிகளில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தாள். 

 

அங்கு மயானத்திலோ அந்த நால்வர் குழுவின் தலைவன் போன்றிருந்த வயதானவன் கர்ண கடூரமான குரலில் பேச ஆரம்பித்தான். 

 

“இன்று உலகிலேயே அனைத்து ஆவி, பூதம், பேய், பிசாசு, மோகினி, யட்சிணி அனைத்தையும் அடக்கி ஆளும் ஒரேயொரு மந்திரவாதியாக நான் மட்டும் தான் விளங்குகிறேன். செல்வந்தனை ஏழையாக்குவதோ, ஏழையைக் கோடிஸ்வரனாக்குவதோ, இங்கிருந்து கொண்டே உலகத்தின் மறுகோடியிலிருப்பவனின் உயிரை எடுப்பதோ எல்லாமே எனக்கு சர்வசாதாரணம்.

 

இத்தனை வருடங்களாய் நான் அனைத்துப் பூத தேவதைகளையும் பூசித்து வேண்டிக் கொண்டிருப்பது ஒரேயொரு காரணத்துக்காகத்தான். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை அடைந்து கொள்வதற்காகத்தான். அது மட்டும் சித்திவரப் பெற்றுவிட்டால் நான் என்றைக்குமே சிரஞ்சீவி. அதன்பிறகு இந்த உலகையே ஆட்டி வைக்கலாம். 

 

இப்போது என் பூசையின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டோம். பூத தேவதைகளைக் குளிர்விக்கும் முகமாக தெய்வாம்சமுள்ள ஒரு கன்னிப் பெண்ணைப் பலி கொடுக்க வேண்டும். இந்த ஊரில் அத்தகைய ஒரு பெண் இருப்பதை அறிந்து தான் பலநூறு மைல்கள் பிரயாணம் செய்து இங்கே வந்திருக்கிறோம். 

 

அவளைச் சாதாரணமாக எல்லாம் பலியிட்டுவிட முடியாது. அவள் நாகம்மன் அருள்பெற்ற பெண் என்பதால் நாகபஞ்சமி அன்றைக்கு அவளது சக்தி பன்மடங்காகக் காணப்படும். நாகபஞ்சமியன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு அவளை இங்கு மனித இரத்தத்தால் வரையப்படும் தந்த்ர கோலத்தில் அமர வைக்க வேண்டும். 

 

மிகமுக்கியமான விடயம், அவளைக் கடத்தியோ, வற்புறுத்தியோ, பலவந்தமாகக் கூட்டி வரக்கூடாது. அவளது உடலில் இரத்தக் காயமோ, தழும்புகளோ, கண்டல் காயங்களோ இருக்கக் கூடாது. அவளை வர வைப்பதற்கு எந்தவிதமான வசியமோ, மந்திர சக்திகளோ உபயோகிக்கக் கூடாது. அவளாய் மனமுவந்து இங்கே வந்து அமர வேண்டும். அதுவும் அவள் தனியாகத்தான் வர வேண்டும். 

 

நாகபஞ்சமிக்கு இன்னமும் சில வாரங்களே இருக்கின்றன. என்னுடைய மூன்று சீடர்களில் யார் அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு அவளை இங்கே அழைத்து வருகிறானோ அவன் வென்றவனாவான். வென்றவனுக்கு நான் எனக்குத் தெரிந்த அனைத்து மந்திர வித்தைகளையும் கற்றுத் தருவேன். எனக்கு அடுத்து அவனே இந்த உலகின் சிறந்த மந்திரவாதியாக விளங்குவான்.”

 

மயானத்தின் அந்த நிசப்தத்தில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் போன்ற அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது அவன் குரல். சீடர்கள் மூவரும் மௌனமாய் அவன் சொல்வதைச் சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மூவருக்குமே தலைவருக்கு அடுத்த பதவியை அடைந்திடும் ஆவேசம் கண்களில் தெரிந்தது. 

 

ஆனால் தலைவன் சொன்ன சட்டதிட்டங்களுக்கமைய நாகன்யாவைப் பலி போடுவது சாத்தியப்படுமா என்பதில் சற்றே பிரயாசை அடைந்தார்கள். 

 

நாகன்யா பெற்றோர்களின்றி எங்குமே தனியாகச் சென்றதில்லை. கோவிலைத் தவிர அவள் வெளியே செல்வதாகவும் தெரியவில்லை. கோவிலிலோ அவளைச் சுற்றி எப்போதுமே திருவிழாப் போலக் கூட்டம் வேறு. அந்தப் பாம்பு வேறு ஏதோ பூனைக்குட்டி போல அவள் மடியில் படுத்துக் கொண்டிருக்கும். இந்த லட்சணத்தில் அவளைத் தனியாகச் சந்தித்துப் பேசுவது கூட முடியாத காரியம். பின்னர் எவ்வாறு அவளைத் தானாகவே மயானத்துக்கு வரவழைப்பது?

 

எண்ணிப் பார்த்தவர்களுக்கு இது நடைபெற முடியாத விடயம் என்றே தோன்றத் தொடங்கியது. வசியம் செய்யலாம் என்றால் அவர்களுக்கு அவளை வரவழைப்பது சின்னப் பிரச்சினை. இல்லை மந்திரசக்தியைப் பிரயோகிக்க முடிந்தாலாவது எப்படியும் பூதகணங்களின் உதவியோடு வரவழைத்து விடுவார்கள். 

 

ஆனால் தலைவன் சொன்ன கட்டுப்பாடுகளைக் கேட்டுத் தலைசுற்றிப் போய் அமர்ந்திருந்தார்கள் மூவரும். தலைவனோ எதைப் பற்றியும் யோசிக்காது தனது கடைமை முடிந்து விட்டது போல அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான். அந்த இருளுக்குள் எங்கு சென்று மாயமானானோ தெரியவில்லை. 

 

சீடர்களில் ஒருவன் மட்டும் நம்பிக்கையுள்ளவன் போன்று எழுந்து கிராமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினான். மற்றவர்கள் இருவரும் ஆச்சரியமாக அவனைப் பார்த்து விட்டு அங்கேயே ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டார்கள். 

 

கிராமத்தை அடைந்த சீடனோ முதலில் சென்றது நாகன்யாவின் வீட்டிற்குத்தான். ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, அவனும் பூனையைப் போல மெதுவாய் காலடி எடுத்து வைத்துப் பதுங்கியவாறே சென்று நாகன்யாவின் வீட்டினருகேயிருந்த பெரியதொரு அரசமரத்தில் சரசரவென ஏறினான். ஒரு கிளை வீட்டு வளாகத்துக்குள்ளும் சென்றது. அந்தக் கிளையின் மூலம் வீட்டுக் கூரையில் குதித்தான். 

 

பழக்கப்பட்ட திருடன் போல சத்தமின்றிக் குதித்தவன், நாய்கள் இரண்டு இவனை நோக்கிக் குரைத்துக் கொண்டு வருவதைக் கண்டு விட்டான். நிமிர்ந்து நாய்கள் இரண்டையும் உறுத்து விழித்தான். அவன் கண்கள் இரண்டும் சிவப்புக் கோளங்களாக அந்த இருளிலிலும் நெருப்புக் கங்குகளாகப் பளபளத்தன. அவனின் அந்தப் பார்வை வீச்சைத் தாங்க முடியாத நாய்கள் இரண்டும் அடுத்த நொடியே சுருண்டு விழுந்தன.

 

கூரையில் ஒரு பாம்பைப் போன்று ஊர்ந்தவன் மழைநீர் வடிய வைத்திருந்த குழாயைப் பிடித்தவாறு கீழே இறங்கினான். வீட்டின் பின்புறமாகச் சென்றவன் ஒரு நொடி கண்களை மூடித் தியானிக்கவும் நாகன்யா எங்கேயிருக்கிறாள் என்று தெரிந்தது. உடனே அந்தப் பக்கமாகச் சென்று அங்கிருந்த யன்னலை மெதுவாய் திறந்தான். அது இறுக மூடியிருக்க, தன்னுடைய மேற்சட்டைப் பையிலிருந்து ஒரு சாற்றை எடுத்து யன்னல் கெண்டியில் பூச அது உருகத் தொடங்கியது. பின்னர் இலகுவாகக் கெண்டியை நெம்பி யன்னல் கதவைத் திறந்தான். 

 

கீலமாய் திறந்த யன்னல் இடுக்கினூடே அறைக்குள் பார்வையைச் செலுத்தியவனுக்கு ஒரு நொடி இதயம் நின்று துடித்தது. காரணம், பத்மாசனத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த நாகன்யாவைப் பார்த்த பொழுது அவள் அந்த அம்பாளே தானோ என்ற ஐயம் அந்த மந்திரங்கள் சித்திவரப்பெற்றவனுக்கே எழாமல் இல்லை. 

 

ஆனால் அதையும் தாண்டி எப்படி அவளை பலியிடுவது என்றே சிந்தித்தவன், அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் அவளையே பார்த்திருந்தானோ தெரியவில்லை, எங்கோ சேவல் கூவிய சத்தம் கேட்கவும் வந்தவழியே திரும்பிச் சென்றான். 

 

நிஷ்டை கலைந்த நாகன்யாவும் மந்தகாசப் புன்னகையோடு நீராடச் சென்றாள். அவள் மனதில் இனம் புரியாத ஒரு பரவசம். இன்று ஆலயத்தில் அவனைக் காண முடியுமா? அருள்வாக்குச் சொல்லும் நாளென்றால் கூட நாள் முழுவதும் கோவிலிலேயே இருக்கலாம். இன்று பூசை முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும். பின்னர் இரவுப் பூசைக்குத்தான் போக முடியும். ஆலயத்தைச் சுற்றிப் பார்க்க வருவானோ? இல்லை கிராமத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருப்பானோ? 

 

வழக்கம்போல கைகள் தன்பாட்டில் காரியத்தைச் செய்தாலும் கூட நினைவுகள் மட்டும் அவன் மீதே இருந்தன. என்றும் இல்லாத அதிசயமாகப் புடைவைகள் இருக்கும் அலமாரியைத் திறந்து பிடித்தவாறு எந்தப் புடைவையைக் கட்டுவது என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

 

இறுதியில் மஞ்சளில் கையகலப் பச்சைக்கரை போட்ட ஒரு பட்டை உடுத்திக் கொண்டவள், அதற்குத் தோதாய் தங்கத்தில் பச்சைக் கல் வைத்த நகைகளை அணிந்து கொண்டாள். இடுப்புக்கும் கீழே அலையெனப் புரண்ட கூந்தலைத் தளரத் தளர ஒற்றைப் பின்னலிட்டவள், தேவி கட்டி வைத்திருந்த மல்லிகைச் சரத்தை அடர்த்தியாய் வைத்துக் கொண்டாள். 

 

நாகன்யாவை நாக கன்னியாக எண்ண வைப்பதே அவள் கண்கள்தான். சாதாரணமாக எல்லோருக்கும் இருப்பது போலல்லாது நீல நிறத்தில் ஜொலிக்கும் அவள் கருமணிகள் அவளை உண்மையாகவே பாம்புப்பெண்ணாக எண்ண வைத்தன. 

 

அந்தக் கண்களை மேலும் பெரிதாகவும் நீளமாகவும் காட்டுமாறு புருவம் தீட்டி, மையிட்டுக் கொண்டவள், நெற்றியில் ஒரு சர்ப்பம் படம் விரித்தாடுவது போன்று ஒரு பொட்டையும் செஞ்சாந்தால் வைத்துக் கொண்டாள். சிவப்பு சாயத்தில் வெல்வெட்டாய் தொட்டுப் பார்க்கும் ஆவலைத் தூண்டியவாறு பட்டுப் போல பளபளத்தன அவள் இதழ்கள். 

 

அவளைத் தெய்வமாக மட்டும் எண்ணவில்லை எனில் அந்தவூர் இளைஞர்கள் எல்லோரும் அவள் அழகில் தலைசுற்றிப் போய் மயங்கிக் கிடப்பது என்னவோ நிஜம்தான். கோவிலுக்குச் செல்லத் தயாராக வெளியே வந்தவளைக் கண்டவுடன் அவள் தலையைச் சுற்றி நெட்டி முறித்தார் தேவி.

 

“என் கண்ணே பட்டிடும் போலிருக்கு நாகம்மா.. இன்றைக்கு அவ்வளவு அழகாக இருக்கிறாய்.”

 

“இன்றைக்கல்ல.. என்றைக்குமே என் பெண்தான் இந்த உலகத்திலேயே பேரழகி..”

 

நாகேஸ்வரனும் மனைவிக்கு சளைக்காது பதில் கூறினார். பெற்றவர்கள் கூறியதைக் கேட்டவளுக்கோ, அவனைக் காண்பேனா? அவன் கண்களில் இந்த அழகு படுமா? என்ற பேராவல் எழுந்தது.

 

அவன் வருவானா? யார் அவன்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 6யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 6

அத்தியாயம் – 06   ஈஸ்வரோடு எப்படியாவது பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழ, அதற்கு நாகன்யா கண்டுபிடித்த வழி தான் ஓவியம் வரைந்து பழகுவது. நாகன்யா சிறு வயதிலிருந்தே தனக்கு எதுவும் வேண்டும் என்று கேட்டதில்லை. அவள்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12   நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5

அத்தியாயம் – 05   அதிகாலை நான்கு மணிக்கே துயிலெழுந்த ஈஸ்வர் காலைக் கடன்களை கழித்து விட்டு கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து அந்தக் குளிர் நீரிலேயே நீராடினான். நீராடி விட்டு ஈரம் போகத் துண்டால் துடைத்தவன் ஒரு பருத்தி வேட்டியை