Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’

டக் தடக்’ என்று தாளலயத்தோடு அந்த ரயில் நிலையத்தில் நுழைந்த மும்பை புறநகர் ரயில்களை சற்று திகிலோடு பார்த்தபடி டிக்கெட் வாங்கும்  வரிசையில் நின்றிருந்தான் சிவபாலன். திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு நிற்பதைப் போன்ற நீண்ட வரிசை. இதில் எப்படி டிக்கெட் வாங்கி என்று மலைத்தவனுக்கு ஆறுதல் கூறும் முகமாக சற்று வேகமாகவே நகர்ந்தது. 

பத்துமணிக்கு அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்தால் போதும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தும் ஆறுமணிக்கே எழுந்து, முகசவரம் செய்து, குளித்து எட்டு மணிக்கே ரயில் நிலையத்துக்கு வந்துவிட்ட தனது முன்ஜாக்கிரதையை மெச்சிக் கொண்டான். 

அலுவலகம் இருக்கும் அந்தேரியை சீக்கிரம் அடைந்து விட்டால் அந்தப் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு காலை சாப்பாட்டை அங்கேயே ஏதாவது ஒரு உணவகத்தில் முடித்துவிடலாம் என்ற அவனது திட்டத்துக்கு பெரிய வேட்டு விழுந்துவிடும் போல் தெரிந்தது.

இரும்பு யானைகளை வரிசையாய் அடுக்கியது போன்ற ரயில் பெட்டிகளையும், அதிலிருந்து ஏறும்புக் கூட்டமாய் சுறுசுறுப்போடு இறங்கி ஓடிய மனிதர்களையும் வேடிக்கை பார்த்தான். 

படிக்கும் காலத்தில் பஸ்ஸில் புட்போர்டுல் தொங்கியபடி பயணித்திருக்கிறான். ஆனால் இங்கு ரயிலிலே புட்போர்ட் பயணம்  ஒரு ஆச்சிரியம் என்றால், மற்றொரு ஆச்சிரியம் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக பெண்களும் ஓடும் வண்டியிலிருந்து இறங்கவும் ஏறவும் செய்தது. சிவபாலன் பஸ்ஸில் இதே காரியத்தை செய்தததற்கு தகப்பனிடம் அடி வாங்கி பின் நிறுத்தினான். இந்த ஊரில் ஓடி வந்து ஏறுபவர்களை, இடமிருக்கும் பட்சத்தில் வண்டியின் உள் நிற்கும் கும்பல் கை கொடுத்து ஏற்றி விட்டது. 

மும்பையில் விடிந்த தனது முதல் காலையே இனிமேல் வாழ்வு வித்தியாசமாய் இருக்கப் போவதை சொன்னதாய் பட்டது சிவாவுக்கு. 

ஜீன்ஸ் டீஷர்ட் மீசையில்லா முகம் என்றிருந்த மக்கள் கடலில்  சிவபாலன் மட்டும் நீலநிற முழுக்கை சட்டை, கருநீல கால்சராய்  என அலுவலக உடையில், ஐந்தே முக்காலடி உயரம், சதுர முகம், திருத்தப்பட்ட அடர்த்தியான மீசை, நெற்றியில் குலசாமியின் திருநீறு தனியாகத் தெரிந்தான். அவனது புதுநிறத்துக்கு அது அழகாகவும் பொருந்தியது. 

முப்பது  நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு பயணச்சீட்டை வாங்கி முடித்தவனுக்கு அடுத்த கட்ட சோதனை ஆரம்பம். ஓடிக் கொண்டே குரங்கைப் போல வண்டியில் தாவி ஏற வேண்டும். மூன்று ரயில்களில் அந்த முயற்சி தோல்வி அடைந்த பின் நான்காவது இரயிலில் சகபயணிகள் கை கொடுத்துத் தூக்கிவிட்டனர். சிலர் கை தட்டி உற்சாகப் படுத்த, மூச்சு வாங்க நின்றான். முகம் முழுக்க புன்னகையுடன் ஏறிட்ட அந்த டர்பன் கட்டிய சிங் வெற்றி என்று தனது கட்டை விரலை உயர்த்த தாங்க்ஸ் என்று சிறிய புன்னகை சிந்தினான். அப்பா இந்த சிவாதான் புன்னகைக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறான். இவன் அடிக்கடி புன்னகைக்கலாம்.

ஹிந்தியில் ஏதோ சொன்னவரைப் பார்த்துப் புரியாமல் விழித்தான் சிவா. மதராஸி என்று கேள்வி கேட்ட சிங் அவன் தலையசைத்ததும் தன்னைக் காட்டி “மும்பைகர்” (மும்பைகர் – மும்பைவாசிகளைக் குறிப்பிடும் வார்த்தை) என்றார் பெருமையாக. 

ஒவ்வொரு நிறுத்தத்தில் வண்டி நிற்கும்போதும் உள்ளே ஏறிய, வெளியே சென்ற கூட்டத்தின் நடுவே நசுங்கியவன் அந்தேரியில் இறங்கியபோது தலை கலைந்து, உடை கசங்கி, வியர்த்து வழிந்து பரிதாபமாய் நின்றான். 

அவன் வேலை பார்க்கப் போவது தனியார் வங்கியில். ட்ரெஸ் கோட் அங்கு மிகவும் முக்கியம் முதல் நாளே இப்படிப்பட்ட நிலையிலா செல்ல வேண்டும் என்று எரிச்சல் தோன்றினாலும் மேலே சிந்திக்க நேரமில்லை. ரயில் நிலையத்தின் வெளியே நின்ற டாக்ஸ்சியில் ஏறி அலுவலகத்துக்கு சென்றான். ஓய்வரைக்கு சென்று முகம் கழுவி, சட்டையை கைகளாலேயே நீவி சுருக்கத்தை சரிபடுத்த முயன்றான். முடியவில்லை என்றதும் வேறுவழியின்றி அப்படியே மேனேஜரிடம் ரிபோர்ட் செய்ய சென்றான். 

“வாங்க மிஸ்டர். சிவபாலன் உக்காருங்க” என்று சொன்ன தண்டபாணி ஓய்வு பெறும் வயதை நெருங்கியவராய்த் தோற்றமளித்தார். 

சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டார். காப்பியை கப்பில் நிரப்பி பியூன் தர, அவனை குடிக்குபடி உபசரித்தார். சிவபாலன் அனாவசிய மறுப்பு எதுவும் காட்டாமல் உடனே எடுத்துப் பருகியது தண்டபாணிக்குப் பிடித்தது. 

சிறிது நேரத்துக்குப் பின் “என்ன சிவா இதுதான் முதல் மும்பை அனுபவமா” என்று தமிழுக்குத் தாவினார். 

“ஆமாம் சார். அதனால்தான் ட்ரெயினில் எப்படி பயணம் செய்றதுன்னு தெரியல”

“சென்னைல மின்சார இரயிலில் பயணம் செய்த அனுபவமில்லையோ”

“நான் சென்னை இல்லை சார். எந்த ஊரா இருந்தாலும் உங்களை மாதிரி டிரஸ் மடிப்பு கலையாம ஏறி எறங்குற வித்தை கத்துக்க முடியுமான்னு தெரியல” கசங்கிய தனது சட்டையைப் பார்த்தவாறு சொன்னான். 

“ஹா… ஹா… இப்பயே அந்த ரகசியத்தை சொல்லித்தரேன். நம்ம அலுவகத்தில் எல்லாருக்கும் சீருடைதான்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இங்க வேலை செய்றவங்களுக்கு லாக்கர் ரூம் இருக்கு. அதில் அலுவலக உடைகளை வச்சுப்போம். ஆபிஸ் வந்ததும் உடுத்திட்டு வந்த உடையை லாக்கரில் மடிச்சு வச்சுட்டு, சீருடையைப் போட்டுப்போம். வாரக்கடைசியில் பியூன் உதவியோட பக்கத்தில் இருக்குற லாண்டரில அழுக்கு சீருடைகளை சலவை செய்து கப்போர்ட்டில் பூட்டி சாவியை பாதுகாப்பா வச்சுட்டா போதும்…. அலுவலகத்தில் மடிப்பு கலையாத சட்டையோட உலா வரலாம்” 

அனைவரிடமும் அறிமுகம் முடிந்ததும் வேலையைத் தொடங்கினான் சிவா. தமிழ் ஆட்கள் நிறைய பேர் அந்த வங்கியில் பணி புரிந்தனர். அவர்களில் ரங்கராஜன் சிவாவின் வயதினனாய் இருந்தான். அத்துடன் சிவபாலனின் கல்லூரித் தோழன் ஒருவன் ரங்கராஜனின் ஒன்று விட்ட மைத்துனன் என்று உரையாடலின்போது தெரிந்து கொண்டான். அது கூடுதல் நெருக்கம் தந்தது. 

அடுத்த சில நாட்கள் கழித்து தண்டபாணி சொன்னதை ரங்கராஜிடம் மதிய உணவு வேளையில் சொல்லி 

“கசங்காத உடைக்கு இவ்வளவு சுலபமான தீர்வா?” என வியந்தான் சிவா. 

“இதெல்லாம் உனக்காக இல்லைப்பா… நம்ம வங்கியோட பிசினெஸ்க்காக. பாரதத்தின் பைனான்ஸ் காப்பிடல்ல இருக்கோம். மில்லியன் ட்ரில்லியன்ன்னு பணம் புழங்கும் இடம். வாடிக்கையாளர்களை நம்ம பக்கம் இழுக்க நம்மளும் பெரிய அலுவலகம், டிப்டாப் உடை, நுனி நாக்கு ஆங்கிலம், விடுமுறை நாட்களிலும் சேவை, காலை எட்டு மணியிலிருந்து ராத்திரி எட்டு  மணிவரை அலுவலக நேரம்ன்னு ஓடிட்டு இருக்கோம். இதெல்லாம் இங்க தேவையாச்சே” என்று சொல்லி சிரித்தான்.

மாலை வீட்டுக்கு கிளம்பியவனிடம் “எங்க தங்கிருக்க சிவா?” என்று அக்கறையோடு விசாரித்தான்.

 

“இப்போதைக்கு ஒரு ரூமில் வார வாடகைக்குத் தங்கிருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு இந்தப் பக்கமே ரூம் பாக்கலாம்னு இருக்கேன்” என்று விடைபெற்று ரயில் நிலையத்தை நோக்கி வேகமாய் நடை போட்டான். 

 

சிவபாலன் மும்பை வந்து இரண்டு மாதங்களாகப் போகிறது. இப்போது இந்த அதிவேக நகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கு சிவாவும் பழகிவிட்டான். காலை மக்கள் கும்பலைத் தவிர்க்க வேலைக்கு ஏழுமணிக்கு சென்று விரைவில்  திரும்புவது இல்லாவிட்டால்  அலுவலக நேரம் சென்றபின் சென்று இரவு ஒன்பது மணிக்குத் திரும்புவது என்று தனது வேலை முறையை மாற்றிக் கொண்டான். சில சிரமங்கள் இருந்தாலும் புது மனிதர்களைப் பார்ப்பது அவனது மனதுக்கு ஒரு மாற்றமாகத் தெரிந்தது. 

அவன் பணிபுரியும் தனியார் வங்கி தென்னகத்தை தலைமையிடமாய் கொண்டது. மும்பையில் அரபிக்கடலாய் பெருக்கெடுத்த பணத்தில் நீந்தும் எண்ணத்துடன் சில கிளைகள் ஆரம்பித்திருந்தது. அரசாங்க வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்குத் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அவர்கள் அறிவைத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். இளைஞர்களும், அனுபவம் மிக்கவர்களும் அரசாங்க வங்கியிலிருந்து பணத்துக்காகவும் பதவிக்காகவும் இவர்கள் வங்கியில் சேர ஆரம்பித்திருந்தனர். சிலருக்கு மும்பையில் இரு வருடங்கள் கட்டாயம் பணி புரியவேண்டும் என்று அன்புக் கட்டளையிடப்பட்டது. அவர்களில் சிவபாலனும் அடக்கம். 

இந்த ரெண்டு மாதங்களில் ஏதாவது சந்தேகமா கூப்பிடு சிவபாலனை என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு வேலையில் பேர் பெற்றுவிட்டான். கோவப்பட்டு வார்த்தையால் வறுத்தெடுக்கும் வாடிக்கையாளரைக் கூட அவனது பொறுமையான பேச்சு சாந்தப் படுத்திவிடும். அப்படி ஒரு இக்கட்டான பிரச்சனையில் துர்வாசராய் ரங்கராஜை சுட்டெரித்த ஒரு வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி சாந்த மூர்த்தியாக்கி அனுப்பியிருந்தான் சிவா.

“ஓ மை காட். என்ன மாதிரி ஒரு ஆள் பாரேன். அவரோட கவனக் குறைவை நம்ம மேல சுமத்துறார். எனக்கு வந்த கோவத்துக்கு கன்னாப்பின்னான்னு திட்டிருப்பேன். எப்படி சிவா இவ்வளவு பொறுமையா ஹாண்டல் பண்ணுற. கொஞ்சம் கூட கோவமே படாம”

“கோவம் வரலைன்னு யார் சொன்னது? பயங்கர எரிச்சல். ஆனால் கோவம் அதிகமாகும்போது கட்டுப்படுத்தலைன்னா வார்த்தைகள் தடிக்கும். சில நேரம் அதுவே நம்மைப் பிரச்சனையில் மாட்டி விடும். அதனால ஆத்திரத்தை மூடி வச்சுட்டு அவருக்கு பிரச்சனையை விளக்க முயற்சி பண்ணேன். வெற்றியும் அடைஞ்சேன்”

“என்னப்பா முப்பத்தியோரு வயசில் கிழவன் மாதிரி தத்துவம் பேசுற”

“கிழவனை தத்துவம் பேச வைக்கிறது அவரோட வாழ்க்கை அனுபவங்கள் தான். அந்த வகையில் நானும் ஒரு கிழவன்தான்னு வச்சுக்கோயேன்” ஏதோ ஒன்று தடுக்க வாயை மூடிக் கொண்டான். 

ரங்கராஜுக்கும் சிவபாலனுக்கும் வா போ என்று அழைக்கும் அளவுக்கு தோழமை இருந்தாலும் அதெல்லாம் அலுவலக அளவில்தான். இயல்பாகவே பெண்களைப் போலன்றி ஆண்கள் குடும்பத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. நெருக்கமும் நம்பிக்கையும் அதிகமானவர்களிடம் மட்டுமே தங்களைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். தானும் சிவாவும் அந்த அளவுக்கு நெருங்கவில்லை என்று உணர்ந்தான் ரங்கா. இனி இந்த நட்பை நெருக்கமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவன் மனதில் தோன்றியது. 

“நான் நாகப்பட்டினம். கூடப் பிறந்த அக்கா கல்யாணமாகி காரைக்காலில் இருக்காங்க. நான் பேங்கிங் மேனேஜ்மென்ட்ல மாஸ்டர்ஸ் பண்ணேன். கையோட வேறொரு தனியார் வங்கில வேலை கிடைச்சது. நாலு வருஷம் அங்க வேலை பார்த்தேன். அப்பறம் இங்க நல்ல போஸ்ட் கிடைக்கவும் அந்த வேலையை ராஜினமா பண்ணிட்டு இங்க சேர்ந்துட்டேன். மும்பைல சமைச்சுப் போட ஆள் வேணும்னு வற்புற்த்திக்  கையோட கல்யாணமும் பண்ணிட்டாங்க. 

ஒரு வருஷம் மும்பைல சரியான வீடு கிடைக்காம என் மனைவி சந்தியாவோட   திண்டாடினேன். அப்பறம் நவி மும்பைல ஆபிஸ் லீஸ்டு பிளாட் கிடைச்சு செட்டில் ஆனேன். ஒரே வருஷத்தில் தமிழ்நாட்டுக்குக் கூட்டிட்டு  போய்டனும்னு கண்டிஷன் போட்டு மும்பை வந்த என் தர்மபத்தினி இனிமே மும்பையை விட்டு நகரமாட்டேன்னு உக்காந்துட்டா. இப்ப எங்க குழந்தையும் ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டான். இவ்வளவுதான் என் வரலாறு. உன்னைப் பத்தித் தெரிஞ்சக்கலாமா சிவா” தன்னைப் பற்றிப் பேசி உரையாடலை மீண்டும் சகஜமாக்க முயன்றான் ரங்கா. 

“என் சொந்த ஊர் மதுரை பக்கம் சமயநல்லூர். ப்ரோபேஷினரி ஆபிசர் தேர்வில் பாசாகி அரசாங்க வங்கில சில வருடம் வேலை செய்தேன். இப்ப இங்க செய்றேன்” என்று சுருக்கமாக பேசினான் சிவா.

அகில இந்திய அளவில் நடக்கும் ப்ரோபேஷினரி ஆபிசராய் நேரடியாய்த் தேர்வு பெற்றிருக்கிறான் என்றால் இயல்பிலேயே வெகு புத்திசாலியாய் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான் ரங்கா. குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் புரிந்துக் கொண்டான். சிவாவின் ஒதுக்கமே அவனுக்கு இருக்கும் ஒட்டாத தன்மையை பறைசாற்றியது. 

“ஹோட்டல்ல தங்கிருக்கேன்னு வேற இடம் பார்க்கணும்னு சொன்னியே அப்பார்ட்மென்ட் பார்க்குறியா”

“இல்ல ரூம்தான் பார்த்துட்டு இருக்கேன். ரெண்டு வருஷம் முடிஞ்சதும் சவுத் பக்கம் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடியே போய்டுவேன்.” 

“இப்படித்தான் நானும் சொல்லிட்டு இருந்தேன். சிவா பேசாம சிங்கிள் பெட்ரூம் லீஸ்ட் பிளாட்டுக்கு ரெஜிஸ்டர் செய். உன் கிரேடுக்குக் கண்டிப்பா கிடைக்கும். என்ன ஆறு மாசத்திலிருந்து ஒரு வருஷம் வரை ஆகும்”

விருப்பமில்லாப் பார்வை பார்த்தான் சிவா.

“அட அந்த ஒரு வருஷமாவது பேமிலியைக் கூட்டிட்டு வாப்பா. வந்து மும்பை நகரை சுத்திக் காட்டு. உன் மனைவியும் சந்தோஷப்படுவாங்க”

“உன் ஐடியா வேஸ்ட். நான் சிங்கிள்” வெறுமையான பார்வையுடன் சொன்னான். 

இவன் ஏன் இப்படி புரியாத புதிராக இருக்கிறான் என்ற எண்ணத்துடன் “சரிப்பா உங்கம்மா உங்கப்பா அண்ணன் அக்கா சரி ஒண்ணு விட்ட ஆயா இப்படி யாராவது ஒருத்தருக்காவது ஊரை சுத்திக் காமி. உனக்கு இஷ்டமில்லையா எங்க வீட்டுக்கு லீவ் லீவுக்கு வர சொந்தக்காரங்களை உங்க வீட்டுக்கு பேக் பண்ணிடுறேன்”

 “இப்பதானே தெரியுது நீ எதுக்காக எனக்கு வீடு பாக்குறேன்னு” மெலிதாய் புன்னகைத்தான்.

“அப்பாடா சிரிச்சுட்ட. அப்ப கையோட பதிஞ்சுடுறேன்” என்று சொல்லிவிட்டு அலுவலகத்தில் வீடு ஒன்றிற்கு பதிந்துவிட்டுக்  காத்திருப்பு எண்ணை பெற்றுக் கொண்டார்கள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 14உள்ளம் குழையுதடி கிளியே – 14

அத்தியாயம் – 14 ஹிமாவுக்கு முதன் முறையாக அந்த வீட்டில் இருப்பது அசௌகரியமாக இருந்தது. அதற்குக் காரணம் சின்னசாமி என்பதை சொல்லவும் வேண்டுமா. வந்ததிலிருந்து அவளை ஆராய்ச்சியுடனேயே தொடர்ந்தது அவரது பார்வை. அவள் வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக கேட்ட முதல் கேள்வி