ஹோட்டல் அறைக்குத் திரும்பினார்கள். இருவரும் ஒரே காரில் திரும்பியதைக் கண்டு வெறித்த அமரின் காதுகளில் மட்டும் விழுமாறு மெதுவாய் சொன்னான் வம்சி.
“Early bird gets the worm. But late mouse gets the cheese… வர்றட்டா… தாங்க்ஸ் போர் யுவர் ஹெல்ப் அமர்” என்றான். அவன் சென்ற திசையில் விஷம் கக்கும் பார்வையை சிந்தினான் அமர்.
செல்லை எடுத்தவன் யாருக்கோ டயல் செய்தான் “இப்ப உடனே நீ வர்ற… “
…..
“கேட் யார் கூட சுத்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் என்னைத்தான் கல்யாணம் செய்துக்கணும். அதுவும் இவனை வேண்டாம்னு ஒத்துகிட்டு என்னைக் கல்யாணம் செய்துக்கணும். அதுக்கு உன் உதவி தேவை… அவ ஊருக்குக் கிளம்புறதுக்குள்ள வா”
…..
“எதுவும் இல்லைன்னா… அவ இவனை விட்டு விலகினா கூட எனக்குப் போதும்”
தனது அறையில் ஊருக்குக் கிளம்பத் தயாராகப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் காதம்பரி. அவளிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்க என்று சாக்கிட்டு வந்திருந்தான் அமர்நாத். சைன் வாங்கியதும்
“கேட்… உங்ககிட்ட பெர்சனலா ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்”
“பெர்சனலா பேசும் அளவுக்கு நமக்குள்ள ஒண்ணும் இல்லை அமர்”
“இருக்கு கேட். வம்சியைப் பத்தி ஒரு விஷயத்தை சொல்லணும்”
காதம்பரி பதில் சொல்லத் சற்றுத் தடுமாறினாள். அதை சாதகமாக எடுத்துக் கொண்ட அமர் தொடர்ந்தான்.
“வம்சிகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு”
சீற்றத்துடன் அவனை ஏறிட்டாள்.
“மாடலிங்ல கொடி கட்டிப் பரந்த லில்லி, நடிகை ரிஷிதா, தொழிலதிபர் ஷர்மின்னு அவன் பழகின பெண்கள் லிஸ்ட் அதிகம். ஆனால் எதுவும் நிலைக்கல. அதுக்கு முழு காரணம் வம்சிதான்”
“என்ன வம்சி பழகிட்டு கழட்டி விட்டுட்டுட்டார்னு சொல்லப் போற”
“இல்லை, அவங்க இவனை விட்டுத் தப்பிச்சா போதும்னு ஓடிட்டாங்க”
நம்பமுடியாமல் பார்த்தாள்.
“உங்களுக்கு ஆச்சிரியமா இருக்கலாம். ஆனால் அந்த லில்லி நம்ம ஆட் ஒண்ணில் நடிச்சிருக்கா. அவனுக்கு யாரையாவது பிடிச்சுட்டா அவங்களை அடிமை மாதிரி மாத்திருவான். அவங்களுக்கு கேரியர்ன்னு ஒண்ணு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர முடியாதே.
அந்த ஷர்மி சாப்ட்வேர் தொழிலில் வெற்றிகரமா இருந்தா. அவளோட ஒரே தப்பு அழகா இருந்தது. அவளை ஏதோ பிஸினெஸ் மீட்டிங்கில் பார்த்துட்டு பிடிச்சுகிட்டான். இவன் டார்ச்சரால அவளால பிசினஸை கவனிக்க முடியல. நஷ்டத்துக்கு மேல நஷ்டம். கடைசியில் விட்டா போதும்டா சாமின்னு இவனை விட்டு விலகி அவளோட கம்பனியை அடிமாட்டு விலைக்கு வித்துட்டு ஓடிப் போயிட்டா”
“இதெல்லாம் நான் நம்புவேன்னு நினைக்கிறியா அமர்”
“இன்னொரு விஷயம், ஷர்மியோட நிறுவனத்தை சல்லிசா வாங்கினது வம்சியோட கசின் கிருபாகர்”
இந்த செய்தியில் சற்று அதிர்ந்தாள் காதம்பரி.
“ஒரு நிமிஷம்” என்றவன் மொபைலில் யாரையோ அழைத்தான் “லில்லி உள்ள வா”
சில வினாடிகளில் கதவைத் திறந்து கொண்டு அந்த லில்லி வந்தாள். உரிமையாகக் காதம்பரியின் எதிரில் இருக்கையில் அமர்ந்தாள்.
“லில்லி அவனைப் பத்தி உனக்குத் தெரிஞ்சதை சொல்லு. இன்டர்நேஷனல் மாடலா இருக்க வேண்டிய உன்னை எப்படி செல்லாக்காசா ஆக்கினான்னு எடுத்து சொல்லு. ஷர்மியோட சாப்ட்வேர் கம்பனியை எப்படித் தந்திரமா அவகிட்டேருந்து பிடுங்கினான்னு சொல்லு அப்பயாவது அந்த வம்சியைப் பத்தித் தெரியட்டும்”
“உஷ்…. அமர்… நான் கேட்டுக்கு ஒரு சின்ன கதை மட்டும்தான் சொல்லப் போறேன். அவங்க புத்திசாலி இந்தக் கதையை வச்சே அவங்க நிலமையை புரிஞ்சுக்குவாங்க
“கேட்… தனிமைல வசிக்கும் ஒரு பொண்ணு செல்லமா ஒரு பிராணியை வளர்த்துட்டு இருந்தாளாம். அந்தப் பிராணின்னா அவளுக்கு உயிர். அதுக்கு உணவு கொடுக்குறது, பராமரிக்கிறதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் அதன் மேல அன்பைக் கொட்டுவாளாம். அதுவும் அவள் கையில் உணவு சாப்பிடுமாம். அவ தூங்கும்போது படுக்கைக்கு பக்கத்தில் படுத்துக்குமாம்.
ஓ.. .சாரி…. அந்தப் பிராணி என்னன்னு சொல்லலையே… அது ஒரு மலைப்பாம்பு. இப்படிப் போன அவர்கள் வாழ்க்கையில் சிலநாட்களாக அந்தப் பாம்பு இரையை உண்ணாம விலக்குச்சாம். அவ தூங்கும்போது அவ மேலேயே ஏறிப் படுத்துக்குமாம். அந்த பொண்ணுக்கு தன்னோட செல்லப்பிராணிக்கு உடம்பு சரியில்லைன்னு ஒரே கவலை.
வெட்னரி டாக்டரை அழைச்சு பார்க்க சொன்னாளாம். அந்தப் பாம்பை நல்லா பரிசோதிச்சுப் பார்த்துட்டு மருத்துவர் சொன்ன ஒரே வார்த்தை. ‘இந்தப் பாம்பைக் கொன்னுடுங்க’. இதைக் கேட்டு அவ அதிர்ந்து போய்ட்டாளாம். ‘உங்கப் செல்லப்பாம்புக்கு உங்களை விழுங்க ஆசை வந்துடுச்சு. அதனால்தான் தினமும் உங்க மேல படுத்து உங்களோட நீளத்தையும் பருமனையும் அளந்துட்டு இருக்கு. உங்களை சாப்பிடத் தயாராக அன்றாடம் உண்ணும் இரையை விலக்கிட்டு தன் வயிற்றைக் காலியாக்கி இடம் பண்ணுது.
நீங்க என்னதான் பாசம் காட்டி வளர்த்தாலும் அது ஐந்தறிவுள்ள ஒரு காட்டு விலங்கு. இன்னைக்கு இல்லைன்னாலும் இன்னொரு நாள் உங்க உயிருக்கு இதால ஆபத்து’ன்னு எச்சரிச்சாராம்”
சொல்லிவிட்டு நிறுத்தினாள் லில்லி.
“அந்தப் பொண்ணு என்ன செய்யப்போறா….. பாசம் வச்சுட்டதால மலைப்பாம்புக்கு இரையாகப் போறாளா இல்லை புத்திசாலித்தனமா அதுகிட்டேருந்து தப்பிக்கப் போறாளா?”
காதம்பரி அவர்கள் அறையை விட்டு வெளியே சென்றும் வெகுநேரம் கல்லாய் சமைந்திருந்தாள்.
மாலை விமானத்தில் ஏறி மும்பையை அடையும் வரை குழப்பமாகவே இருந்தது காதம்பரியின் மனது. இவன் இத்துடன் விட்டு விடுவானா இல்லை தன்னை விடாமல் துரத்துவானா என்பது தெரியாமல் தடுமாறினாள்.
ஆனால் அவளது கேள்விக்கு விரைவில் பதில் கிடைத்தது.
விமான நிலையத்தில் டிரைவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டுக் காரைத் தானே ஒட்டிக் கொண்டு வந்தான் வம்சி. இறங்கும் போது அவளுக்கு முத்தமிட்டு
“வீட்டுக்கு கூப்பிட மாட்டியா”
“வீடு கன்னாபின்னான்னு போட்டிருப்பேன் வம்சி”
“கிளீன் பண்ண உதவட்டுமா”
“வேண்டாம்… நானே கிளீன் பண்ணிட்டு உங்களைக் கூப்பிடுறேன்”
பெருமூச்சு விட்டான். “அந்த தினம் வெகு விரைவில் வரட்டும்….. நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு ஆபிஸ்ல உன்னை சந்திக்கிறேன் செர்ரி”
“நாளைக்கு வீக்எண்டு வம்சி”
“அப்படியா… அப்ப தாஜ்க்கு ஈவ்னிங் வந்துடு. வரும்போது வைட் கலர் சுடிதார் போட்டுட்டு வா”
“என்கிட்டே வைட் சுடிதார் இல்லை வம்சி” கடுப்பாய் சொன்னாள்.
தாஜூக்கு வா எனக் கட்டளையிட்டதே அவளுக்குப் பிடிக்கவில்லை. இதில் என்ன நிற உடை அணிய வேண்டும் என்றும் சொன்னால். அவள் மனதிலிருந்த காதம்பரி ஸ்ட்ரைக் செய்தாள்.
“சரி… “ என்றவாறு கிளம்பினான் வம்சி.
‘அப்பாடா ஒரு வழியா விட்டான்’ என்றபடி வீட்டுக்கு சென்றாள். பெங்களுர் நாட்கள் அவள் மனதை அலைக்கழிக்க ஒரு வழியாக உறங்கினாள்.
மறுநாள் கல்பனாவை வரச்சொல்லி கம்பனி நிலவரத்தையும் அவசர வேலைகளையும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்த சமயம் காதம்பரிக்கு ஒரு பார்சல் வந்தது.
கல்பனாவோ “கேட் உனக்குப் பார்சல் வந்திருக்கு. உங்க அண்ணன் அனுப்பிருக்க சான்ஸ் இல்லை. வேற யாரா இருக்கும்” என்றபடி காதம்பரியின் முகத்திலிருந்து எதையோ படிக்க முயன்றாள்.
“இங்க பாரேன். டு மை ஸ்வீட் செர்ரி, வித் கிஸ்ஸஸ்ன்னு போட்டிருக்கு…. யாருடி இது எனக்குத் தெரியாம உனக்கு முத்தம் தரவன்”
பல்லைக் கடித்த காதம்பரி “அது ஒரு இடியாப்பச் சிக்கல். நானே எப்படி சால்வ் பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன். அதை விடு கல்பனா, நம்ம வேலையைப் பார்ப்போம்” என்று அவளை இழுத்து சென்றாள்.
கல்பனா கிளம்பியதும் பார்சலைப் பிரித்தாள். அதில் அழகான வெள்ளை நிற சுடிதார் ஒன்று இருந்தது. தான் இல்லை என்று சொன்னதால் வாங்கி அனுப்பி இருக்கிறான் என்பது புரிந்தது. ஒரு சிறு குறிப்பு வேறு ‘இன்று மாலை என்னை சந்திக்க வரும்போது நீ அணிந்து கொள்ள வேண்டிய உடை’ என்று எழுதி இருந்தது அவளை மேலும் எரிச்சலடைய செய்தது.