Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),ஓகே என் கள்வனின் மடியில்,தமிழ் மதுரா,தொடர்கள் தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’

சிலநாட்களில் உறவினர்கள் அனைவரும் சென்றுவிட, கர்ப்பகாலத்திலும் விடுப்பு எடுக்காமல் தன்னை தினமும் பார்க்க வரும் கல்பனாவை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் காதம்பரி. அண்ணனோ தனது சோகத்தை ஆற்றிக் கொள்ள காதலியின் வீட்டில் தங்கிவிட்டான்.

 

வேலைகாரி வேறு “பாப்பா ரெண்டு வீடு தள்ளி இருக்குற அப்பார்ட்மென்ட்டில் அம்மாவும் பொண்ணும் இருந்தாங்கல்ல அவங்களைக் கொலை செய்துட்டு நகை எல்லாம் திருடிட்டு போய்ட்டாங்க. அண்ணனை ராத்திரி நேரத்தில் உனக்குத் துணைக்காவது வீட்டுக்கு வர சொல்லும்மா….. நான் என் வீட்டைப் பாக்கணும். இல்லைன்னா இங்கேயே தங்குவேன்”

 

ஒரு வேலைக்காரிக்கு இருக்கும் அனுதாபம் கூட உடன் பிறந்தவனுக்கு இல்லாமல் போனது அவள் செய்த துரதிர்ஷ்டம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது.

 

“நீ வீட்டுக்குப் போ… நான் அண்ணனைக் கூப்பிடுறேன்”

.

இரண்டு நாளாக அண்ணன் வராதது மனதில் தைக்க, நடுக்கத்தோடு அண்ணனின் கைபேசியை அழைத்தாள். அழைப்பு எல்லாம் பாதியில் கட் செய்யப்பட்டது. இரவானதும் வேலைகாரர்கள் சென்றுவிட, தன்னந்தனிமையில் அந்த வீட்டில் நடுங்கியபடி உறங்காமல் அமர்ந்திருந்தாள்

 

மறுநாள் அண்ணனின் காதலி, அந்த ஷில்பாவின் லேண்ட்லைன் நம்பரை அவன் நண்பனிடம் வாங்கி அழைத்தாள்.

 

எடுத்த எடுப்பில் “யாரது” என்றது மறுமுனை அதட்டல் குரலில். .

 

“நான் காதம்பரி பேசுறேன்”

 

“நீயா… நேத்துதானே போனைக் கட் பண்ணேன். இந்த நம்பர யார் கொடுத்தா… எதுக்காக அடிக்கடி கூப்பிட்டுக் கழுத்தறுக்குற”

 

“அண்ணனை வீட்டுக்கு வர… ”

 

“உனக்கு அறிவில்லை… அவரே கவலையை இப்பத்தான் மறந்துட்டு இருக்கார். வீட்டுக்கு வந்தால் அம்மா அப்பா நினைப்பு மறுபடியும் வந்துடும்”

 

“யாருகூட பேசிட்டு இருக்க… “ என்று அவளது அண்ணனின் குரல் கேட்க

 

“தேவையில்லாத நபரிடமிருந்து தேவையில்லாத நேரத்தில் அழைப்பு. அதை நீங்க பொருட்படுத்த வேண்டியதில்லை” என்றவாறு கட் செய்தாள். அந்த வரிகள்  தனக்காக சொல்லப்பட்டதே என்பதை காதம்பரி கண்டுகொண்டாள்.

 

வாழ்க்கையில் செல்லப் பெண்ணாக அதுவரை ரோஜா படுக்கையில் சயனித்திருந்தவளை ரோஜாக்களின் முற்கள் கீற ஆரம்பித்தது.

 

வீட்டில் இருக்க முடியாது மறுபடியும் விடுதியில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்தாள். பெற்றோர் இறந்த ரணம் ஆறுவதற்குள் தனக்குத் திருமணம் என்று வந்தான் அண்ணன்.

 

“அண்ணா நீ கல்யாணம் முடிஞ்சதும் நம்ம வீட்டிலேயே இரேன். எனக்குத் தனியா இருக்க ரொம்ப பயம்மா இருக்கு. அன்னைக்குக் கூட நம்ம வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இருந்தாங்கல்ல அந்தக்காவையும் அவங்க அம்மாவையும் அவங்க டிரைவரே கொன்னுட்டு வீட்டில் இருக்கும் நகை பணத்தைக் கொள்ளையடிச்சுட்டு போய்ட்டான்.

 

நம்ம வீட்டுக்கு நீ வந்துட்டின்னா நான் பாட்டுக்கு ஒரு ரூமில் இருந்துப்பேன். உன்னையோ அண்ணியையோ தொல்லையே பண்ண மாட்டேன். உங்க விஷயத்தில் தலையிடவே மாட்டேன்.”

 

அண்ணனிடமிருந்து சம்மதம் கிடைக்காததைக் கண்டு ஆதங்கப்பட்டாள்.

 

“இன்னும் ரெண்டு மாசத்தில் படிப்பு முடிஞ்சுடும். ஹாஸ்டல்லருந்து எங்க போகன்னே தெரியல. நீ என் கூடப் பிறந்தவன் தானே. உன்னை விட்டா எனக்கு யாரிருக்கா… எனக்குப் பாதுகாப்பு தரவேண்டியது உன் கடமையில்லையா… ப்ளீஸ் உங்க வீட்டிலேயே நானும் தங்கிக்கிறேனே“ கெஞ்சிய தங்கையை சமாதனம் செய்ய என்ன செய்யலாம் என்றவாறு பார்த்தான். ஏனென்றால் அவனது வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றியோ இல்லை சொத்துக்களை விலை பேசி வருவதைப் பற்றியோ அவளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அந்த நிமிடம் வரை அவன் எண்ணவில்லை.

 

“கல்யாணம் முடியட்டும் அப்பறம் பேசி முடிவெடுக்கலாம்” என்றான்.

 

ஆனால் திருமணத்துக்கு வந்தவளிடம்  ஒரு நடுத்தர வயது  நபரை அறிமுகப்படுத்தினான்.

 

“இவர் நரேஷ் ஷர்மா. ஷில்பாவுக்கு சொந்தக்காரர். இவரை கவனிச்சுக்கோ”

 

நரேஷ் ஷர்மா கன்னாபின்னாவெனக் கேள்வி கேட்டான். அவளுக்கு எத்தனை பாய் பிரெண்ட் இருக்கிறார்கள். அவள் அவுட்டிங் போவாளா… இதெல்லாம் இவனுக்கெதற்கு. அண்ணியின் சொந்தக்காரன். இவனை முறைத்துக் கொண்டால் அவளுக்கு அண்ணனுடனான உறவு மேலும் சீர் கெடலாம் அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோ பதில் சொன்னாள்.

 

திருமணத்தில் பெண் வீட்டு ராஜ்ஜியம்தான். நியாயமாக மாப்பிள்ளையின் சகோதரிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கூட காதம்பரிக்குக் கொடுக்கவில்லை. இதை ஓரளவு எதிர்பார்த்திருந்த காதம்பரியும் அமைதியாக ஓர் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். அன்பை மதிக்கத் தெரியாத இடத்தில் எதற்கு அவள் பிரியம் செலுத்த வேண்டும். சுயநலமான அந்த ஆண்மகன் மேல் அவளது குடும்பம் வைத்த அன்பு விழலுக்கு இறைத்த நீர் போல பயனின்றி போயிற்று.

 

திருமணம் முடிந்து தேனிலவு சென்று வந்தான் தமையன். தனது தேர்வுகளை முடித்தவள் சகோதரனைத் தனியாக சந்தித்துப் பேச நேரம் எதிர்பார்த்திருந்தாள். அந்த நாளும் வந்தது.

 

“வீட்டை விற்க போறியா… ப்ரோக்கர் சில பார்டீசை கூட்டிட்டு வந்தான்”

 

“ஆமாம் விக்கப் போறோம்” அண்ணி முந்திக் கொண்டு பதில் சொன்னாள்.

 

“அப்ப நீ இங்க வர மாட்ட”

 

“என்னது இது அறிவுகெட்டத்தனமா பேசிட்டு… வீட்டை வித்துட்டு ஆஸ்திரேலியாவில்  பிஸினெஸ் ஆரம்பிக்க ஏற்பாடு செய்திட்டு இருக்கோம்” இதுவும் அன்பு அண்ணியே.

 

“சரி, உனக்கு ஏற்பாடு செய்துட்ட… நான் உன்னைத் தடுக்க மாட்டேன்…. ஆனால் அம்மா அப்பா இருந்த இடத்தில் எனக்கு இப்ப நீதான் இருக்க”

 

“அதுக்காக எங்க மடில இரும்புக்குண்டாட்டம் உன்னை சுமக்க சொல்றியா” ச்சே இவள் அடங்கவே மாட்டாளா.

 

“அண்ணா இப்ப வரைக்கும் உன்கிட்டத்தான் நான் பேசிட்டு இருக்கேன். ஆனால் பதில் சொல்றது அண்ணி. உன் வாயில் ஒரு பதிலும் வரல”

“அவர் சொன்னா என்ன நான் சொன்னா என்ன ரெண்டும் ஒண்ணுதான். எங்க வீட்டில் நான்தான் பேசுவேன்”

 

“சரி உனக்குத் தெரிஞ்ச மொழியிலேயே பேசுறேன் சொத்தில் என்னோட பங்கை உரிமையோடு எடுத்துக்கத் தெரிஞ்ச உனக்கு எனக்கு பாதுகாப்பு செய்து தர வேண்டிய கடமையும் இருக்கு”

 

உதட்டைப் பிதுக்கிய அண்ணி “அதுதான் அப்பயே  சொன்னேன். என் அண்ணன் பிரியப்பட்டு கேக்குறான் கல்யாணம் செய்து தந்துடலாம்னு. நீங்கதான் வயசு வித்யாசம் அது இதுன்னு சொன்னிங்க

 

விஷமமாய் காதம்பரியைப் பார்த்து சிரித்தாள்.

 

“சரி காதம்பரி… அண்ணன் அண்ணியா எங்க கடமையை செய்றோம். என் அண்ணன் நரேஷுக்கும் உனக்கும் அடுத்த முஹுர்த்தத்தில் கல்யாணம் செய்துட்டே போறோம். இதில் உனக்கு பாதுகாப்பு மட்டுமில்ல ஆதரவில்லாத உனக்கு வாழ்க்கையும் கிடைச்சுடும்” என்ற அண்ணியின் பேச்சை மறுக்காமல் நிற்கும் அண்ணனைக் கண்டு திகைத்தாள் காதம்பரி.

 

கனவினிலே வாழ்ந்துவிட்டேன் இதுவரை

கண்களிலே தூவி விட்டாய் மண்துகளை

“அண்ணி சொல்றது சரிதான். உனக்கும் ஒரு பிடிப்பு வேணும். உன் மேல அன்பு செலுத்தவும், அக்கறையா பாத்துக்கவும் ஒரு உறவு அவசியம்” என்று மனைவியின் முடிவுக்கு சப்பைக் கட்டு கட்டினான் அண்ணன்.

 

இந்த உறவுகள் என்ன ஒரு நடைவண்டியா பிடித்து நடக்க, இல்லை இல்லவே இல்லை…. அன்பு அக்கறை எல்லாம் ஒரு நபரை உயிருடன் இருக்கும்போதே சாகடிக்கும் விஷம். இனி யாரையும் நம்பவும் மாட்டேன். யாரிடமும் அன்பு செலுத்தவும் மாட்டேன்.

 

 

அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று தனது இல்லத்துக்கு வந்தாள்.

 

எல்லா சொத்துக்களையும் தமையன் விற்க முயற்சி எடுப்பது அவளது காதில் விழுந்தது. எல்லாவற்றையும் விற்றுத் தீர்க்கட்டும். ஆனால் கேட் அட்வர்டைசிங் ஏஜென்ஸி என் தந்தையின் கனவு. என் தந்தை அதில் வாழ்கிறார். அதை விற்க விடமாட்டேன். நானே எடுத்து நடத்துவேன். தனக்கென ஒரு தொழில் அதுவும் தன் தந்தையின் தொழிலைத் தானே  எடுத்துக் கொண்டாள். ஆனால் வெறும் கையால் முழம் போட முடியாதே. அதற்கு ஒரு வழி செய்யலாம். ஆனால் இந்த வீட்டை விலை பேசி அட்வான்ஸ் வாங்கிவிட்டார்கள். சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும். அதற்கு முன் சில தினங்கள் தொல்லையின்றி தாங்கள் வாழ்ந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்தாள்.

 

‘இங்கதான் அப்பா உக்காந்து பேப்பர் படிப்பார்’

 

‘இந்த டிரெஸ்ஸிங் டேபிளில்தான் அம்மா தலை சீவுவாங்க’

 

‘இங்கதான் குடும்பத்தோட உக்காந்து சாப்பிடுவோம்’ மனதுக்குள் அனைத்தையும் அசைபோட்டாள்.

 

இந்த வீட்டை விட்டுக் கிளம்பும்போது கையோடு உறவுகளையும் சேர்த்துத் தலைமுழுகி விடுவேன்.

 

நிறுவனத்தை நடத்தப் பணம் வேண்டுமே… என்ன செய்வது…

 

சில நாட்கள் யோசனை செய்தாள். கடைசி நாளில் தந்தை சொன்னதை நினைவு படுத்திக் கொண்டாள். ஜானையும் கல்பனாவையும் சந்தித்தாள். அவர்களிடம் சில  விவரங்கள் கேட்டுக் கொண்டாள். தனது நகைகளையும், அன்னையின் பெரும்பாலான நகைகளையும் விற்று பணத்தைப் புரட்டினாள். ஜானிடமும் கல்பனாவிடமும் பணத்தை இரண்டு வருட சம்பளமாகக் கொடுத்து தன்னுடன் இரண்டு வருடம் இருந்து தொழிலைக் கற்றுக் கொடுக்க முடியுமா என்று கேட்டாள். அவர்கள் முன் பணத்தை மறுத்துவிட்டு அவளுடன் சேர்ந்து நிறுவனத்தில் பணிபுரிய சம்மதித்தனர். அதுவே அவளுக்கு யானை பலத்தைத் தந்தது. இருவருக்கும் அதிக சம்பளத்துடன் ஒரு போஸ்ட் க்ரியேட் செய்து தானே வீட்டில் அமர்ந்து டைப் செய்தாள். கூகுள் உதவியோடும் சிலருக்குப் பணம் தந்தும் கடிதம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து முடிவு செய்தாள்.

 

எப்படியும் இவள் நிறுவனத்துக்கு வரப்போகிறாள் என்று தெரிந்ததும் பெரிய தலைகள் ஓடிவிடும். கல்பனாவுக்கும் ஜானுக்கும் இந்தப் போஸ்ட்டைத் தரவேண்டியதுதான். இருவரின் தகுதிக்கும் இத்தனை பெரிய பதவி இத்தனை சிறிய வயதில் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே இன்னும் ஐந்து வருடங்களாவது தன்னுடன் இருப்பார்கள். ஆனால் இரண்டு வருடத்தில் விளம்பரத்துறையின் நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்துவிடுவேன்  என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.

 

பின்னர் அண்ணனையும் அண்ணியையும் தன்னை சந்திக்க வர சொல்லி வக்கீல் மூலமாகத் தகவல் அனுப்பினாள். அலறி அடித்துக் கொண்டு இருவரும் லாயர் ஆபிசுக்கு வந்தனர்.

 

“எப்ப வேணும்னாலும் வீட்டுக்கு வந்திருக்கலாமே… இதென்ன வக்கீல் மூலமா தகவல் தரது. நம்ம குடும்பத்துப் பழக்கமா இது”

 

“ஆமாம் சொத்தைத்  தெரியாம விக்கிறதுதானே நம்ம குடும்பத்துப்  பழக்கம்…. என்ன பாக்குற… நம்ம ஷாப்பிங் காம்ப்ப்ளெக்ஸ வித்துட்டியாமே”

 

இருவரும் அமைதியாக அமர்ந்தனர்.

“ஒரு கிழவனுக்குக்  கல்யாணம் செய்துத் தந்து என்னைத் துரத்திவிட்டுடலாம்னு கனவு காணாதே. அப்பாவின் சொத்தில் எனக்கும் சரிபாதி பங்கிருக்கு. இப்ப நீயும் நானும் டீல் பேசலாமா…”

 

“அந்தேரில இருக்கும் ரெண்டு அப்பார்ட்மென்ட்ஸ், கேட் அட்வர்டைசிங் ஏஜென்சி இதெல்லாம் எனக்கு வேணும். மத்ததை நீயே எடுத்துக்கோ”

 

‘நல்லாருக்கே கதை அந்த ரெண்டு பிளாட்டும் எவ்வளவு விலை தெரியுமா… “ முந்திக் கொண்டு பதில் சொன்னாள் அண்ணனின் மனைவி.

 

“ரெண்டு பிளாட் விலையும் தெரியும். நீங்க வித்த ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் விலையும் தெரியும். உனக்கு அண்ணின்னு ரொம்ப மரியாதை தந்துட்டு இருந்தேன் நீயே கெடுத்துக்காதே. யாரு வீட்டு சொத்தை யாரு கணக்கு போடுறது. இது என் அம்மாவும் அப்பாவும் வியர்வை சிந்தி சம்பாரிச்சது. அவங்க பொண்ணுக்கு நியாயமா கிடைக்க வேண்டியதைத் தடுக்க இப்ப வந்த உனக்கு உரிமையில்லை. நீ வாயை மூடல என் சம்மந்தமில்லாம சொத்தை வித்ததா உங்க ரெண்டு பேரு மேலையும் கேஸ் போடுவேன். அரைக்கிழவன் ஒருத்தனுக்குக் கல்யாணம் செய்துவைக்க நீதானே ப்ளான் போட்ட, உன்னை ரெண்டு நாளாவது உள்ள தூக்கி போடணும்னு என் மனசுக்குள்ள வெறியோட இருக்கேன். என் கண்ணு முன்னால நிக்காம ஓடிப் போயிடு”

 

“என்ன காதம்பரி அண்ணின்னு மரியாதை இல்லாம”

 

“அண்ணனுக்கே மரியாதை இல்லை. இதில் அண்ணியாம்”

 

“நீயா இப்படி பேசுற”

 

“பத்து வயசு வரைக்கும் அண்ணன் தம்பி. பத்து வயசுக்கு மேல பங்காளின்னு நீதானே என் மண்டையில் அடிச்சு சொல்லிக்கொடுத்த…. சரி நாளைக்குக் காலைல பத்து மணிக்கு ரெஜிஸ்ட்ரேஷன். நீ வரலைன்னா என் வக்கீல் நோட்டிஸ் வரும். அப்பறம் ஒரு ஐம்பது லக்ஷம் டெபாசிட் பண்ணிடு. இது உன் பொண்டாட்டி இன்னைக்கு பேசினதுக்கு பைன். இனி அவ வாயைத் திறந்தா இன்னும் பைன் ஜாஸ்தி ஆயிட்டே இருக்கும். குறுக்கு வழி எதையும் ட்ரை பண்ண வேண்டாம்னு உன் பொண்டாட்டிட்ட சொல்லி வை. என் மேல ஒரு கீறல் விழுந்தாக் கூட நீங்க ரெண்டு பேரும்தான் காரணம்னு போலிஸ் உயர் அதிகாரிகளுக்கு லெட்டர் எழுதிருக்கேன். ஆஸ்த்ரேலியாவில் ஆனந்தமா கழிக்க வேண்டிய நேரத்தை ஜெயிலில் கழிக்க விரும்ப மாட்டிங்கன்னு நினைக்கிறேன்”

 

அதிர்ச்சியுடன் பார்த்திருந்தவர்களைக் கடந்து தனது டூ வீலரைக் கிளப்பினாள்.

 

லாயர் அலுவலகத்திலிருந்து வெளியே சென்றவளுக்கு தாய் தந்தை இறுதி நாளில் தன்னை அழைத்து சென்ற டீஷாப்புக்கு செல்ல வேண்டும் போலிருந்தது. அங்கு சென்று ஒரு மூலையிலிருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவள் ஆர்டர் செய்த டீ வந்தது. பாதி கப் டீயை சாசரில் ஊற்றித் தனக்கென எடுத்துக் கொண்டாள்.

 

ரெண்டு பேரும் ஜோடியாத்தான் போகணுமா… ஒருத்தராவது எனக்குத் துணையா இருந்திருக்கக் கூடாதா…. அப்பாவை விட்டு இருக்க முடியாம அவர் கூடவே போயிட்டியே. என்னை அனாதையா விட்டுட்டுப் போறோம்னு உங்க மனசில் படவே இல்லையா…

 

கடைசி நாள் அவர்கள் மூவருக்குள் நடந்த சம்பாஷனை அவள் மனதில் நிழலாடியது.

 

‘தன்னோட ராஜாகூட இருக்கும்போது எந்த ஒரு பெண்ணும் தன்னை ராணியா உணருவாள்’

 

‘என் காதம்பரியைக் கல்யாணம் பண்ணிக்க நிஜ ராஜாவே வரப் போறான் பாரு’

 

நானும் ஒரு நாள் என் ராஜா கூட நகர்வலம் போவேன். அவன் என்னைக் கண்ணுக்குக் கண்ணா பார்த்துப்பான். என் அம்மா அப்பா மாதிரி நாங்களும் காதலோட வாழ்வோம்.

 

கப்பிலிருந்த டீ ஆறி ஏடு படிந்தது. டேபிள் சுத்தம் செய்பவன் அவளது கப்பில் டீ இருப்பதைக் கண்டு அடுத்த மேஜைக்கு செல்ல. “இந்தாப்பா இந்த கப்பைக் கழுவப் போட்டுடு” என்றாள்.

 

கப்பில் டீ ஊற்றித் தர எந்த ராஜாவும் அவளுக்கு வேண்டாம். யாரையும் அவள் நம்பப் போவதில்லை. இனி அவளது நினைவுகளில் அவளது பெற்றோரோடும் நிஜத்தில் அவளது கம்பனியோடும் மட்டுமே வாழப் போகிறாள்.

 

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள் தளும்புதே

கன்னங்களில் கண்ணீர் வந்து கனவினை அழித்ததே

கற்பனைகள் காற்றோடு போனதே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 26ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 26

26 – மனதை மாற்றிவிட்டாய் அந்த நேரம் சேகரும், மதியும் வந்து கோவிலுக்கு செல்லவேண்டுமென அழைக்க அனைவரும் கிளம்பினர். அனு தனக்கு டியூஷன் இருக்கு எனவும், ஆதி ஆபீஸ் செல்லவேண்டும், அர்ஜுனை அழைத்துக்கொண்டு போக சொல்ல மற்ற அனைவரும் கிளம்பினர். அர்ஜுனின்

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09

அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13

13 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   மறுநாள் பிரியா அக்சராவிடம் வந்த வாசு “என்ன சிஸ்டர் இன்னைக்கு என்ன ஸ்பஷல்?” அக்சரா பதில்கூற வாயெடுக்க அவளை அடக்கிய ப்ரியா “ஏன் உங்க வீட்டில சமைக்க மாட்டிங்களா? ஏதோ ஒரு தடவை